Sunday, July 7, 2013

ரமழானும் குடும்பமும்


ரமழான் நன்மைகளுக்குரிய மாதம், பாவமன்னிப்புக்குரிய மாதம், மாற்றத்திற்குரிய மாதம், ரமழானின் இந்த அனைத்துப் பயன்களும் தனிமனித வடிவிலும், குடும்ப வடிவிலும், சமூக வடிவிலும் பெறப்பட முடியுமானவையே. நபியவர்களது வாழ்வில் இந்த எல்லா வடிவங்களுக்கும் வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் இன்றைய அமர்வில் குடும்ப வடிவில் ரமழானின் பயன்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான சில கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

அல்லாஹ்தஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான் “ஈமான் கொண்டவர்களே, மனிதர்களும் கற்களும் எரிபொருட்களாய் இருக்கின்ற நரக நெருப்பிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” - தஹ்ரீம் – 6- என்கிறான். மற்றோர் இடத்தில் “உங்கள் குடும்பத்தினருக்கு தொழுமாறு கட்டளையிடுங்கள். இந்த விடயத்தில் மிகுந்த பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள்” -தாஹா 132- என்கிறான்

ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகிறார்கள் “ரமழானின் இறுதிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் நபியவர்கள் இரவுப் பொழுதை இபாதத்களில் கழிப்பார்கள். தனது குடும்பத்தினரையும் அதற்காக எழுப்பி விடுவார்கள். இபாதத்களில் மிகவும் சீரியஸாக முனைப்போடு ஈடுபடுவார்கள்” –முஸ்லிம்-

மேலே கூறப்பட்ட இரண்டு அல்குர்ஆன் வசனங்களும் ரமழான் காலத்தில் மாத்திரமன்றி, பொதுவாக எல்லாக் காலங்களிலும் குடும்பத்தின் மீதான கவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பில் பேசுகின்றன. ஒருவன் தனக்குத் தானே பொறுப்பானவன். அவனுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பது போல், தனது குடும்பத்திற்கும் அவன் பொறுப்பானவன் என்பதையும், அந்தப் பொறுப்பு மிகுந்த பொறுமையுடன் சுமக்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் இவ்வசனங்கள் வலியுறுத்துகின்றன.

அந்தக் குடும்பப் பொறுப்பை, குறிப்பாக ரமழான் காலத்தில் நபியவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாகவே மேற்கூறப்பட்ட ஹதீஸ் காணப்படுகின்றது.

குடும்பம் ஒரு பொறுப்பு என்பதை வலியுறுத்தும் மற்றொரு ஹதீஸைப் பாருங்கள். - நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் தனது குடும்பத்திற்குப் பொறுப்பானவன். ஒரு பெண் தனது வீட்டிற்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்பானவள். இந்தப் பொறுப்புக்கள் பற்றி அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்- புஹாரி, முஸ்லிம்

மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் ஒரு உண்மையைச் சொல்கின்றன. ரமழானை நாம் தனிமனிதர்களாகப் பயன்படுத்துகின்றோம். சமூகமாகவும் பயன்படுத்துகின்றோம். அதேபோல் அதனைக் குடும்பமாகவும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு குடும்பத்தின் மீதான பொறுப்பும் கடமையுமாகும்.

அடுத்து, குடும்பம் என்பது தனியே கணவன்-மனைவி, பிள்ளைகள் என்ற எல்லையை மாத்திரம் குறித்து நிற்க மாட்டாது. மாற்றமாக பெற்றோர், கணவனின் குடும்பத்தினர், மனைவியின் குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள் என்ற விரிந்த வட்டத்தையே குறித்து நிற்கின்றது. மற்றொரு வகையில் கூறினால், ஒரு குடும்பத்தின் தொடர்புகளும் உறவுகளும் கணவன், மனைவி, பிள்ளைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. மாற்றமாக மேற்கூறப்பட்ட அனைத்து உறவுகளுடனும் அவர்கள் அன்றாடம் தொடர்பு கொள்கிறார்கள். குடும்ப வாழ்க்கை இந்த அனைத்து உறவுகளுடனும் இணைந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரமழான் காலத்தில் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற ஒரு குடும்பம், இந்த அனைத்துத் தொடர்புகளையும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் ரமழானைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒரு குடும்பம் திட்டமிடுகின்ற போது, அங்கு வீட்டின் புறத்தோற்றம், கணவன்-மனைவி, பிள்ளைகள், பிள்ளைகளது நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் போன்ற எல்லாப் பக்கங்களும் அந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவது மிகவும் பொறுத்தமானதாகும். ஏனெனில், இவற்றைத் தவிர்த்து, ஒரு குடும்ப வாழ்க்கை காணப்படுவது சிரமமானது.

அடுத்து, ரமழான் மாதத்தில் செய்யப்பட வேண்டிய அமல்கள் தொடர்பில், நோக்கும்போது பொதுவாக வலியுறுத்தப்படும் விடயம் என்னவெனின், ரமழான் காலத்தில் எல்லாவிதமான செயற்பாடுகளுக்கும் பன்மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன என்பதாகும். இந்தக் கருத்தைத்தான் கீழ்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. ஸல்மானுல் பாரிஸி –றழி- அவர்கள் கூறுகிறார்கள். ஷஃபான் மாதத்தின் இறுதி நாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் இவ்வாறு உரையாற்றினார்கள் – மக்களே, மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பரகத் பொறுந்திய ஒரு மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகின்றது. இதன் பகல் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும். இதில் எவர் ஒரு நற்காரியத்தைச் செய்கிறாரோ, அவர் ஏனைய நாட்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியதைப் போன்றதாகும். இது பொறுமையின் மாதம். பொறுமைக்குரிய கூலி சுவர்க்கமாகும். இது துயர் துடைக்கும் மாதம். இது ஒரு முஃமினுடைய ரிஸ்க் அதிகரிக்கப்படும் மாதம். இதில் ஒருவருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் அந்த செயல் அவருக்கான பாவ மன்னிப்பாகவும், நரக விடுதலையாகவும் காணப்படும். இவருக்கும் நோன்பு நோற்றவரைப் போன்ற கூலி கிடைக்கும். அதேவேளை நோன்பாளியின் கூலியில் எந்தக் குறைபாடும் ஏற்பட மாட்டாது…-இப்னு குஸைமா-

மேற்கூறப்பட்ட ஹதீஸ் வலியுறுத்தும் சில உண்மைகளைப் பாருங்கள். முதலில் ரமழான் மாதம் வருமுன்னரே நபியவர்கள் அதனை வரவேற்கும் மானசீகத் தயார் நிலையை ஸஹாபாக்களில் தோற்றுவித்தார்கள். இரண்டாவது, எந்த நற்செயலுக்கும் சாதாரண நாட்களில் அதனை செய்வதை விடவும் எழுபது மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, ரமழான் காலத்தில் ஒரு மனிதனது ஒவ்வொரு அசைவுக்கும் நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. இது வாழ்வின் எல்லாப் பகுதிகளுடனும் சம்பந்தப்பட்டதாகும்.

மூன்றாவது, இது பிறர் துயர் துடைக்கும் மாதம் என்கிறது. அடுத்த மனிதர்களது தேவைகள், கஷ்டங்களை அறிந்து, அவற்றிற்கு பரிகாரம் தேடுதல் இந்த மாதத்தின் மிக முக்கிய நற்செயல்களில் ஒன்று மாத்திரமன்றி, இந்த மாதத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றுமாகும்.

நான்காவதாக, நோன்பு நோற்றல், இரவில் நின்று வணங்குதல், லைலதுல் கத்ர் இரவைப் பயன்படுத்துதல், பொறுமையைக் கடைபிடித்தல், நோன்பு திறக்க உதவி செய்தல் போன்ற பல நற்செயல்களை உதாரணமாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அத்துடன். இவற்றின் விளைவுகளாக பரகத் ஏற்படுதல், சுவர்க்கம் கிடைத்தல், பாவமன்னிப்புக் கிடைத்தல், நரக விடுதலை கிடைத்தல், கூலி பல மடங்காகக் கிடைத்தல் என பல்வகைப் பயன்கள் விளைவுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ரமழானில் மேற்கொள்ளப்படும் நற்செயல்கள் குறித்து பொதுவாக இமாம்கள் முன்வைக்கும் ஒரு கருத்தை இங்கு சற்று ஞாபகப்படுத்திச் செல்வது பொறுத்தம் என நினைக்கிறேன்.

ரமழானில் நேரடியான இபாதத்களில் ஈடுபடுவது சிறந்ததா? அல்லது பொதுவான சமூக. தஃவா பணிகளில் ஈடுபடுவது சிறந்ததா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் இமாம்கள் அந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றனர். அதாவது ரமழானில் பொதுவாக எல்லாவிதமான நற்செயல்களும் வரவேற்கத்தக்கவையே. நிச்சயமாக அவற்றிற்கு ஏனைய நாட்களை விடவும் பல மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், குடும்ப உறவுகள், கல்விப்பணி, தஃவாப் பணி, அரசியல் பணி, சமூகப் பணிகள் என எந்தவகையான செயலாக இருப்பினும் அவற்றிற்கு ரமழானில் விஷேட நன்மைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றில் மிகச் சிறந்தது எது எனின், நிச்சயமாக நேரடியான வணக்க வழிபாடுகளாகும். நபியவர்களது வாழ்விலும் சரி, பின்னர் ஸஹாபாக்களுடைய வாழ்விலும் சரி, தொடர்ந்த எல்லா ஸாலிஹான மனிதர்களது வாழ்விலும் சரி இந்த உண்மையை அவதானிக்கலாம். சில இமாம்கள் தமது ஹதீஸ் மஜ்லிஸ்களையும் பிக்ஹ் மஜ்லிஸ்களையும் இக்காலத்தில் நிறுத்தி வைத்துவிட்டு இபாதத்களுக்காக நேரம் ஒதுக்கியமையைக் காணலாம்.

அந்தவகையில் ரமழானில் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற வேண்டியதும், அதிக நேரங்கள் ஒதுக்கப்பட வேண்டியதும் நேரடியான இபாதத்களாகும். அதேநேரம் ஏனைய நற்செயல்களையும் வழமைபோல் செய்யலாம். ஏனெனில், நபியவர்களின் வழிகாட்டலில் பல மடங்கு கூலியை எல்லா நற்செயல்களும் பெற்றுத்தரும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறப்பட்ட பின்புலத்துடன் ரமழான் மாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த நினைக்கின்ற ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில், குடும்பம் என்ற விரிந்த பரப்பு அவர்களது கவனத்தில் இருக்க வேண்டும் என்பது போல், ரமழானுக்கான செயற்பாடுகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டியவை எவை என்பதும் அவர்களது கவனத்தில் காணப்பட வேண்டியதாகும்.

அந்தவகையில் ஒரு குடும்பம் ரமழானில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்த சில ஆலோசனைகள் கீழே வழங்கப்படுகின்றன.

1.        ரமழான் வருவதற்கு முன்னரே உங்கள் வீட்டை அதற்காய் தயார்படுத்துங்கள். வீட்டின் புறச்சுத்தம் அகச் சுத்தம் இரண்டிலும் கவனம் செலுத்துங்கள். வீட்டின் உற்புற ஏற்பாட்டை மீள ஒழுங்குபடுத்துவது கூட தவறில்லை. வீட்டில் ஒரு விழாக்கோலம் தென்படுவது, குடும்பத்தினர் மத்தியில் ரமழானின் வருகை பற்றிய சார்பு மனநிலையை ஏற்படுத்த உதவும்.

2.         குடும்பத்தினர் அனைவரையும் இணைத்து ஒரு அவசரக் கூட்டத்தை நடாத்துங்கள். ரமழான் வருகிறது. அதற்காக செய்யப்படவேண்டியவை என்ன என்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள். ஏன்? ஒரு திட்டத்தையே தயாரித்துக்கொள்ளுங்கள். இதுவும் உற்சாகத்திற்கான ஒரு நல்ல வழிதான்.

3.         குடும்பத்தில் ஒருவரைப் பயன்படுத்தியோ அல்லது யாரேனும் ஒரு பொறுத்தமான வளவாளரைப் பயன்படுத்தியோ ரமழானின் சிறப்புக்கள், சட்டங்களைப் பற்றி, குடும்பத்தினர்க்காக ஒரு பயான் நிகழ்ச்சியை நடாத்துங்கள். இந்த நிகழ்வில் உங்கள் அயலவர்கள், உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொள்ளலாம்.

4.         வீட்டின் உற்புறத் தோற்றத்தில் ரமழான் களையை ஏற்படுத்துங்கள். ரமழானை ஞாபகப்படுத்தும் வாசகங்கள், துஆக்கள் போன்றன வீட்டுச் சுவர்களை அழங்கரிக்கலாம். கிராஅத்கள், பாடல்கள் என்பன வீட்டுக் கணனிகளில் ஒலித்துக் கொண்டிருக்கலாம்.

5.         குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும், ஒரு வீட்டு மஜ்லிஸை நாளாந்தம், அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அல்லது குறைந்தபட்சம் வாராந்தம் அமைத்துக் கொள்ளுங்கள். அதிலே எல்லோரும் இணைந்து அல்குர்ஆனை ஓதவும், ரமழானின் சிறப்புக்களையும் சட்டங்களையும் கற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்வில் பிள்ளைகளுக்கான இடம் மிகவும் முக்கியமானது. அவர்களது தரத்திற்கு ஏற்ப, சில பாடங்களை நடாத்தவும், கதைகள் சம்பவங்களைச் சொல்லவும் அவர்கள் பொறுப்பளிக்கப்படல் வேண்டும். வீட்டில் மனைவியோ அல்லது வளர்ந்த ஒரு பிள்ளையோ சபைக்குத் தலைமை தாங்கலாம்.

6.         மேற்சொன்ன அதே ஒழுங்கிலோ அல்லது வேறுவடிவிலோ, வீட்டில் சிறிய பிள்ளைகளுக்கு கதை சொல்லும் நேரம் ஒன்று ஒதுக்கப்படலாம். இதில் அயலவர்களின் பிள்ளைகளும் பங்கு கொள்ளலாம். வீட்டில் வளர்ந்த ஒருவர், அல்லது ஒரு முதியவர், அல்லது பொறுத்தம் எனக் கருதும் எவரும் இதனை நடாத்தி வைக்கலாம். நபிமார்களது வரலாறுகள், ஸஹாபாக்களது கதைகள், வரலாற்று நிகழ்வுகள் என்பன இங்கு இடம்பெறலாம்.

7.         ரமழானில் தொலைக்காட்சியை தவிர்ந்து கொள்வது நல்லதுதான். ஆனால் பார்த்தல் ஊடாக ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும் சந்தர்ப்பத்தையும் இதனால் தடை செய்து விடக்கூடாது. எனவே, தொலைக்காட்சிக்குப் பதிலாக சீ டீ க்கள் மூலமோ வேறுவகையிலோ பயனுள்ள விடயங்களை பிள்ளைகள் பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கப்படல் வேண்டும். வரலாற்றுக் கார்டூன்கள், கல்வி நிகழ்ச்சிகள் போன்றன தற்பொழுது சந்தையில் நிறையவே கிடைக்கின்றன. பார்த்தல் மட்டுமே பிள்ளைகளது வேலையாக அமைந்துவிடாமல் பெற்றோர் கவனமாக இருத்தல் வேண்டும்.

8.         அல்குர்ஆன் ஓதுதல், மனனம், ஹதீஸ், துஆக்கள் மனனம் போன்ற பல விடயங்களில் வீட்டுக்குள்ளே போட்டி நிகழ்ச்சிகளை அறிவிப்புச் செய்யுங்கள். வெற்றியாளர்களுக்கு நல்ல பரிசில்களை வழங்குங்கள். தோல்வி கண்டவர்களையும் கவனிக்க மறந்து விடாதீர்கள்.

9.         உங்கள் சிறிய பிள்ளைகளை நோன்பு கால எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளச் செய்யுங்கள். ஸஹர் நேரம், நோன்பு திறக்கும் நேரம் என்பன அவர்கள் நோன்பு நோற்கவில்லை என்பதற்காக விலகியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அல்ல, அவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

10.        உங்கள் சிறிய பிள்ளைகளை கொஞ்சம் கொஞ்சமாக நோன்பு நோற்கப் பழக்குங்கள். முதலில் காலை 10 மணி வரை, அடுத்து லுஹர் வரை பின்னர் அஸர் வரை இறுதியாக முழு நோன்பையும் நோற்கப் பழக்கலாம். அவர்கள் முழுமையான நோன்பு நோற்ற நாளைக் கொண்டாடுங்கள். குடும்பத்தினர் எல்லோரும் ஒரு சுற்றுலாச் சென்று நோன்பு திறக்கலாம். அல்லது இரவுணவை ஒரு உயர்தர உணவகத்தில் பெறலாம். அல்லது பிள்ளையின் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து வீட்டில் ஒரு இப்தார் செய்யலாம்.

11.        பொதுவாக வீடுகளிலும், பள்ளிவாயல்களிலும் வளர்ந்தவர்களுக்குத்தான் இப்தார் செய்வார்கள். நீங்கள் சிறிய பிள்ளைகளுக்கு மாத்திரம் ஒர் இப்தார் நிகழ்ச்சி செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் அதில் முக்கியம். அயலவர்களின் பிள்ளைகள், உறவினர்களின் பிள்ளைகள் எல்லோரையும் பங்கு கொள்ளச் செய்யுங்கள். நோன்பு நோற்றவர் நோக்காதவர் என்று வேறுபடுத்தாதீர்கள். அழைப்பாளர் பட்டியல் தயாரித்தல், அழைப்பை மேற்கொள்ளல் அனைத்தையும் பிள்ளைகளே மேற்கொள்ளலாம். மாத்திரமல்ல இப்தார் உணவு வகைகள், நிகழ்ச்சிகளைக் கூட அவர்களே தீர்மானித்து செய்ய சந்தர்ப்பமளியுங்கள்.

12.        குடும்பத்தில் ஆண்கள் தொழுகைகளை முடிந்தவரை பள்ளிவாயலிலேயே மேற்கொள்ளுங்கள். பெண்கள் வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுங்கள். தொழுகையின் பின்னர் உரிய துஆக்களை திக்ர்களை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். தொழுகையின் பின்னர் ஒரு சிறிய காதிராவை - உபதேசம் - அமைத்துக் கொள்வது சிறந்தது. சுன்னத்தான தொழுகைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற வைத்தல் சிறந்தது. ஆண்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களும் இந்த கூட்டான இபாதத்தில் பங்கு கொள்ளலாம்.

13.        தராவீஹ் தொழுகையை பள்ளிவாயலில் நிறைவேற்றுவது நல்லது. குடும்பத்தினர் இணைந்து பள்ளிக்குச் சென்று நிறைவேற்றி விட்டு வருவது ஒரு நல்ல மாறுதலாக இருக்கும். இயலாதபோது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றுவது மிகவும் சிறந்தது. இதிலே உறவினர்களும் அயலவர்களும் இணைந்து கொள்வார்கள் எனின், இங்கும் சிறிய உரைகளும் உபதேசங்களும் இடம்பெறலாம்.

14.        ஸஹர் வேளையில் குடும்பத்துடன் குறைந்தபட்சம் இரண்டு ரக்அத்துக்கள் ஏனும் ஜமாஅத்துடன் தொழுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் பங்கு கொள்ளல் இதில் முக்கியமானது. ஆனால் நிர்ப்பந்தித்து வற்புறுத்தி ஈடுபட வைப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

15.        ஸதகா ரமழானில் ஒரு உயர்ந்த வணக்கமாகும். நபியவர்கள் வீசுகின்ற காற்றை விடவும் வேகமாய் ஸதகா செய்துள்ளார்கள். ரமழானின் ஒவ்வொரு தினமும் கழிகின்றபொழுது ஸதகா என்ற இபாதத்தும் அன்றைய நாளில் ஒரு முக்கிய இபாதத்தாக அமைவதில் அவதானமாக இருங்கள். தினமும் குறைந்தது ஒருவரையேனும் உங்களுடன் நோன்பு திறக்க இணைத்துக் கொள்வது பற்றி சிந்திக்கலாம். இதுவே நீங்கள் ஒரே மாதத்தில் அறுபது நோன்புகளை நோற்ற நன்மையைப் பெற்றுத் தரும். நோன்பு கால உணவுகளில் அயலவருக்கான பங்கை மறந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் பொறுப்பளித்தால் உற்சாகத்துடன் அவர்கள் விநியோகித்துவிட்டு வருவார்கள்.

16.        வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு உண்டியலை வைத்து தினமும் இயலுமான ஒரு தொகையை சேமித்து வரலாம். ரமழானின் இறுதியில் ஒரு ஏழைக்குரிய பெருநாள் ஆடையாகவும் அது மாறலாம். அல்லது பெருநாள்தின கொண்டாட்டத்திற்கே அது உதவலாம்.

17.        குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் ஏதாவது ஒரு வீட்டை தரிசிக்கச் செல்லுங்கள். அது அயலவராக அல்லது உறவினராக அல்லது நண்பராக இருக்கலாம். ஒரு தடவையில் ஒரு வீடு மட்டும் என்று அமைத்துக் கொள்வது இந்த நடைமுறையை தொடர்ந்தும் செய்ய உதவும். இது இரவு நேரங்களில் அமைதல் சிறந்தது. ஆனால் பள்ளிவாயல் இபாத்கள் இதனால் பாதிப்புறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

18.        முடிந்தவரை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குடும்பத்துடன் ஒன்றாய் அமைவது சிறந்தது. வீட்டில் எல்லோரும் அமர்ந்து துஆக்களைக் கேட்டு, திக்ர்களில் ஈடுபட்டு நோன்பு திறக்கலாம். கணவன்மார் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். தொழில்,  தஃவா காரணங்கள் குடும்பத்துடனான இந்த அமர்வின் முக்கியத்துவத்தை மறக்கடிக்காதிருக்கட்டும்.

19.        இறுதிப்பத்து என்பது ரமழானின் மிக விஷேடமான காலப்பகுதி. ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு அதில் இருக்கிறது. அதனால்தான் இஃதிகாப் எனும் அமல் விஷேடமாக இந்தக் காலப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பத்து நாட்களையும் குடும்பத்தவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பேற்படுத்துங்கள். ஆண்கள் குறைந்தபட்சம் இரவு வேலைகளில் பள்ளிவாயலில் இஃதிகாப் இருப்பது நல்லது பெண்கள் வீடுகளில் தமது படுக்கையறைகளில் அல்லது அதற்காய் ஒதுக்கப்பட்ட அறைகளில் இஃதிகாப் இருக்கலாம். வீட்டில் பெண்கள் தொடர்ந்து இஃதிகாப் இருப்பதில் சிரமங்கள் இருக்கும். அப்போது விட்டு, விட்டு இருக்கலாம். இஃதிகாபில் பிள்ளைகளையும் இணைத்துக் கொள்ளுங்கள். அந்த அமலின் சிறப்பை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். லைலதுல் கத்ரைப் பற்றிக் கற்றுக் கொடுங்கள். அல்குர்ஆனை கூட்டாக ஓதுங்கள். கூட்டாக இரவுத் தொழுகையில் ஈடுபடுங்கள். திக்ர்களை அதிகம் செய்யுங்கள். லைலதுல் கத்ரினுடைய விஷேட துஆக்களை எழுதி குறித்த அறைச் சுவர்களில் ஒட்டி விடுங்கள்.

20.        ஸகாதுல் பித்ர் ஒரு கடமையான இபாதத் அதனை தவறாது நிறைவேற்றுங்கள். ஒவ்வொருவருக்காகவும் அந்த கடமை நிறைவேற்றப்படுவதை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்தவரை பணமாகக் கொடுத்து வசதி குறைந்த ஒருவருடைய பாரத்தைக் குறைக்க முயலுங்கள்.

21.        ரமழானில் வீட்டில் மனைவியின் பணிகளில் கணவன்மார் பங்கெடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். சமையலறையிலும் சரி ஏனைய வீட்டு வேலைகளிலும்சரி இருவரும் இணைந்து வேலைகளைச் செய்வதற்கான சந்தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சமயங்களில் கண்டிப்பாக நீங்கள் பல விடயங்களையும் பேசிக் கொள்வீர்கள். சமையல் பணிகள், வீட்டு வேலைகளின் நுட்பங்கள் பற்றி மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது வேலை பற்றிய விடயங்களையும் மனைவியிடம் கூறுங்கள். இது ரமழானில் மனைவிக்கு இபாதத்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பது மாத்திரமன்றி கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வையும் அன்பையும் அதிகரிக்கின்ற விடயமாகவும் இருக்கின்றது.

22.        பெருநாள் தினம் ரமழானுக்கான பரிசு. எனவே புதிய ஆடைகள், விதம்விதமான உணவுகளை குடும்பத்தினர்க்குப் பெற்றுக் கொடுப்பதில் கணவன்மார் தாராளமாய் நடந்து கொள்ளலாம். குறிப்பாக பிள்ளைகளின் பெருநாள் தின சந்தோசம் ஆடைகளிலும் உணவு வகைகளிலும்; அதிகம் தங்கியிருக்கிறது. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி பெற்றோருக்காகவும் ஆடைகள் வாங்குவது நல்லது. இயலுமானால் யாரேனும் ஒரு வசதியற்றவர்க்காகவும் வாங்கிக் கொடுங்கள். பெருநாள் தின சமையலை, உறவினர்கள் அயலவர்கள் என பல வீடுகள் இணைந்து மேற்கொள்வது பற்றி சிந்தியுங்கள். நாம் பெருநாள் கொண்டாடினோம் என்பது அப்போதுதான் மறக்காதிருக்கும்.

இவை சில ஆலோசனைகள் மட்டுமே. சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இவை பயனுள்ளதாய் அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விடை பெறுகிறேன்.

Thursday, July 4, 2013

எகிப்தில் கலாநிதி முகம்மத் முர்ஸியின் ஆட்சி கலைக்கப்பட்ட போது…..


இன்று அதிகாலை - 04-07-2013 - ஒரு சகோதரரின் எஸ் எம் எஸ் தகவல்தான் எனக்கு இந்தச் செய்தியை முதலில் தெரியப்படுத்தியது. உடனே உரிய தளங்களுக்குச் சென்று பார்த்தேன். செய்தி உண்மை. பழைய நிலைக்கு மீண்டும் போவதற்கான அடையாளங்கள் தென்பட்டன. கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மனது வலித்தது, தாங்க முடியாத ஒரு பாரத்தை சுமந்திருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. உண்மையாகச் சொன்னால் கண்களில் ஒரு துளி கண்ணீர் கூட எட்டிப்பார்த்து மறைந்தது. காலையில் பிள்ளைகளுடனும் சந்தோஷமாகப் பேச முடியவில்லை, மனைவி பேசிய எத்தனையோ விடயங்களுக்கு ஆம், இல்லை என்ற பதில்களை மட்டும் தான் தர முடிந்தது.

ஏன் இந்தக் கவலை?

            என்னையே மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்துக்கொண்டேன், கலாநிதி முஹம்மத் முர்ஸி ஒரு இஃவான் என்பதனாலா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டபூர்வமான ஒரு மனிதருக்கு அப்பட்டமான ஒரு அநியாயம் நடைபெறுகிறதே என்பதனாலா?

நிச்சயமாக இவற்றினால் அந்தக் கவலை ஏற்பட்டதாகத் தெரியவில்லை, இஃவான்கள் உலகில் நல்ல மனிதர்கள், அது ஒரு சிறந்த இயக்கம், அது உலகில் வெற்றி பெறவும் முடியும், தோல்வியடையவும் முடியும், இந்த வெற்றியும் தோல்வியும் அவர்கள் இஃவான்கள் என்பதனால் ஏற்பட மாட்டாது. எந்த விடயமும் வெற்றி பெறுவதற்கும் தோல்வியடைவதற்குமான காரணங்கள் வேறு இருக்கின்றன. எனவே இஃவான் ஒருவரது ஆட்சி வீழ்த்தப்பட்டது என்பதனால் அந்தக் கவலை வரவில்லை.

நிச்சயமாக, கலாநிதி முஹம்மத் முர்ஸி அவர்களுக்கு நடைபெற்றது ஒரு அநீதிதான்,  இந்த மாற்றம் இயல்பான மக்களின் எதிர்பார்ப்பல்ல. மாற்றமாக சில சக்திகளுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு சதியும் சூழ்ச்சியும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலைமை அவர் பதவி ஏற்ற நாளிலிருந்தே நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது. அதன் உச்சக் கட்ட காட்சிதான் இன்று அரங்கேறியது. இந்த அநீதியும், சதியும், சூழ்ச்சியும் அங்கு நடைபெறாவிட்டால்தான் அது ஆச்சரியத்துக்குரியது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம் இருக்கின்ற காலம் எல்லாம் அசத்தியத்தின் ஆயுதங்களாக அநீதியும் சதியும் சூழ்ச்சியும் இருந்து கொண்டே இருக்கும். இந்த உண்மையை தெரிந்து கொண்டு தான் அவரும் களமிறங்கி இருந்தார். எனவே சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட மனிதருக்கு அநியாயம் இழைக்கப்பட்டு விட்டதே, என்பதும் எனது கவலைக்குப் பிரதானமான காரணமாக இருக்கவில்லை.

மாற்றமாக, நல்ல இஸ்லாமிய மாதிரிகளை முன்வைப்பதற்குக் கிடைத்திருந்த ஒரு சந்தர்ப்பம் கை நழுவிப் போய்விட்டதே என்ற கவலை தான் உண்மையில் என்னை அதிகமாக ஆட்கொண்டிருந்தது. உலகின் தலைமைத்துவம் முஸ்லிம்களின் கைகளில் இருந்து போய்விட்டதன் பின்னர், நிகழ்ந்த மிக முக்கியமான பாதிப்புகளில் ஒன்றாக நான் இதனைக் காண்கின்றேன். அதாவது, கல்வி, கலாச்சாரம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என எல்லாத்துறைகளும் எல்லாக் கலைகளும் இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் வளர்ச்சி காண்பது தடைப்பட்டது. உயர்ந்த மனிதப் பண்புகளைப் பிரதிபளிக்கக்கூடிய இஸ்லாமியப் பண்புகளும் பெறுமானங்களும் அற்றதாகவே அல்லது அவற்றிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமலேயே அந்தக் கலைகளும் துறைகளும் வளர்ச்சி கண்டன.

இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டக் கூடியது என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதன் அரசியல், பொருளாதார, சமூக மாதிரிகள் எதுவும் வழிகாட்டிகளாக முன்வைக்கப்படவில்லை. காரணம் அவை இயல்பாக வளரக்கூடிய சூழல் இருக்கவுமில்லை. அவற்றிற்காக தூண்டுதல் அளித்து செலவு செய்து மேற்கொள்வதற்கான அதிகார பீடங்களும் இருக்கவில்லை. எனவே இஸ்லாமியக் கலைகளும் இஸ்லாமியத் துறைகளும் பெரியளவு வளர்ச்சி காணவில்லை.

கடந்த காலங்களில், இஸ்லாமிய மாதிரிகளை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள், அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஏனைய சமூகவியல் துறைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் முழுமைத்தன்மை குறித்தும் அவற்றின் உண்மையான இஸ்லாமியப் பண்பு குறித்தும் பல விமர்சனங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. சில சமயங்களில் சிதைவுற்ற மாதிரிகள் கூட இஸ்லாமிய பெயர் தாங்கி வெளிவர முற்பட்ட அபாயங்களும் காணப்பட்டன. இன்னமும் அந்த அபாயங்கள் தொடர்கின்றன.

இந்த சூழ்நிலைகள் அனைத்தையும் கடந்து, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தந்த நிகழ்வாகவே கலாநிதி முர்ஸி அவர்களின் வெற்றி காணப்பட்டது. இஸ்லாம் வெறுமனே ஒரு சிந்தனையாக மட்டுமன்றி அதன் எல்லாப் பக்கங்களும் நடைமுறைக் கலைகளாக வளர்ச்சி காண்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அவரது பதவி ஏற்புடன் ஏற்பட்டிருந்தது. இன்றைய கலைகளிலும், துறைகளிலுமுள்ள எதிர்மறைப் பக்கங்களுக்கான சிறந்த மாற்றீடுகள் இனம் காணப்படுவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. ஏன்? மிக முக்கியமாக இஸ்லாமிய அரசியலுக்கான ஒரு சிறந்த மாதிரியை உலகத்துக்கு உரத்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 

இந்த அனைத்தும், இன்னும் பல வருடங்களுக்குத் தள்ளிப் போகப் போகின்றனவோ..? என்ற கவலைதான் மனதில் ஒரு பெரிய பாரமாய் இறங்கியிருந்தது.

உலகில் தனிமனிதர்கள் தோற்கலாம், இயக்கங்கள் தோற்கலாம், அரசாங்கங்கள் தோற்கலாம், ஆனால் இஸ்லாம் தோல்வி காணக்கூடாது. உண்மையில் இஸ்லாம் தோற்காவிட்டாலும் மனித மனங்களில் அது சாத்தியமற்றது என்ற மனநிலை ஏற்பட்டு விடக் கூடாது. அது எல்லாக் காலங்களிலும் எல்லா சூழல்களிலும் நடைமுறை சாத்தியமானது, என்பதும், இஸ்லாம் உலகில் மனித வாழ்வை கண்ணியமான ஒரு வாழ்வாகவே ஒழுங்கமைக்கிறது. என்பதும், அது தான் வெற்றி, அது தான் நிம்மதி, அது தான் சந்தோஷம் என்ற சிந்தனை உலகில் மங்கிப் போய்விடக்கூடாது.

நிச்சயமாக அது தோல்வி காண மாட்டாது, அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றிருக்கிறான்.
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون

Monday, July 1, 2013

ஒரு முஃமினின் உயர்ந்த பண்பாடு


     அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான் உங்களது செல்வம், உயிர் போன்றவற்றில் கண்டிப்பாக சோதனைக்கு உற்படுத்தப்படுவீர்கள். அதுபோல் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும், அதிகமான தீங்கான செய்திகளை நீங்கள் கண்டிப்பாகக் கேட்பீர்கள். அந்த சமயத்தில் பொறுமையாக இருந்து, தக்வாவுடன் நடந்து கொள்வீர்கள் எனின், அதுதான் மிக உயர்ந்த செயற்பாடாகும். - ஆல இம்ரான் - 186

 

    இந்த அல்குர்ஆன் வசனம் செல்வம், உயிர் என்பவற்றின் மீதான சோதனை என்பது அல்லாஹ்வின் ஒரு நியதி என்கிறது. அந்த சோதனையின் வடிவங்களில் ஒன்றாகத்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்கள் காணப்பட முடியும் என்கிறது. அதனை முன்னர் வேதம் வழங்கப்பட்ட யூத, கிறிஸ்தவர்களும் செய்வார்கள். அவர்கள் அல்லாத இணைவைப்பவர்களும் செய்வார்கள் என்கிறது.

 

   இன்று எமது நாட்டில் நாம் இதனைத்தான் நிதர்சனமாகக் காண்கிறோம். முஸ்லிம்களுக்கு எதிரான மிக அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இந்தப் பொய்யின் சக்தி என்னவென்றால் இதன் மூலம் முஸ்லிம்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். முஸ்லிம் அல்லாதவர்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். விளைவு அநியாயமான மோதலும் அழிவுமாகத்தான் அமைந்து விடப் போகிறது.

 

   அந்த அநியாயமான மோதலையும் அழிவையும் இஸ்லாம் ஒரு போதும் விரும்புவதில்லை. அதனால் தான் அல்குர்ஆன் அதே வசனத்தின் இறுதியில் முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய இரண்டு முக்கியமான ஒழுக்கங்களைச் சுட்டிக் காட்டுகின்றது.

 

   முதலாவது பொறுமை. உண்மையில் அப்பட்டமான பொய்யைக் கூறி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால் மனம் தாங்காது, கொதித்தெழத் துடிக்கும் நரம்புகள் முறுக்கேறும். ஆனால் அல்லாஹ்தஆலா இந்த மனோநிலையைக் கட்டுப்படுத்துமாறு கூறுகிறான். அதாவது உணர்ச்சி வசப்படாதீர்கள், கோபத்தால் ஆர்ப்பரிக்காதீர்கள், அமைதியாக இருங்கள், கவனமாக சிந்தியுங்கள் என்பதுதான் அல்லாஹ்தஆலாவின் உபதேசம். மாற்றமாக பொறுமை என்பது, வாலாவிருத்தல் அல்ல, ஒதுங்கிச் செல்லுதல் அல்ல, உணர்ச்சி வசப்பட்டால் வன்முறைதான் நிகழும். அது சூழ்நிலையை வெற்றி கொள்ள உதவாது. அமைதி காப்பதன் மூலமே மிகச் சரியான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க முடியும். அப்போதுதான் சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம். இது முதலாவது ஒழுக்கம்.

 

  இரண்டாவது, தக்வா. இங்கு தக்வா என்ற சொல் குறிக்கும் பொருள் குறித்து கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து மிகவும் பெறுமதி வாய்ந்தது. அதாவது அவர்கள் எம்மை எதிர்ப்பதற்கு கைக்கொள்ளும் அதே பிழையான அணுகுமுறைகளை நாமும் கையாளக் கூடாது என்பது தான் இந்த இடத்தில் தக்வா என்பதன் பொருளாகும் என்றார்கள். இயல்பில் அவர்கள் எம்மை என்ன சொல் கொண்டு ஏசுகிறார்களோ அதே சொல் கொண்டு நாமும் ஏச வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது ஒரு முஸ்லிமின் பண்பாடு அல்ல. அநியாயத்தின் முன்னால் கூட நேர்மை தவறாமல் இருப்பதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாடு, உண்மையும் நேர்மையும்தான் எந்த சூழ்நிலையிலும் அவனில் இருந்து வெளிப்படும். சாதாரண ஒரு சராசரி மனிதனின் சிந்திப்பிற்கும் ஈமானுள்ள ஒரு உயர்ந்த முஃமினின் சிந்திப்பிற்குமிடையிலான அடிப்படை வேறுபாடு இங்குதான் புலப்படுகிறது.

 

  இதனால்தான், இந்த அல்குர்ஆன் வசனம் நிறைவுபெறும் போது, நிச்சயமாய் இந்தப் பண்பாடுதான், மிக உயர்ந்த கண்ணியமான செயலாகும் என்கிறது. இங்கு அல்குர்ஆன் பயன்படுத்தியுள்ள சொல் அஸ்ம் என்பதாகும். இது நபிமார்களிலும் விஷேடமானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகம். அது நிலைமாறாத உறுதிகொண்டவர்களைக் குறித்து நிற்கிறது, அதாவது, நிலைமாறாத உறுதி கொண்டவர்களால் தான் இதுபோன்ற ஒரு சூழ்நிலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

 

  இத்தகைய ஒரு உயர்ந்த பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள். எனவே, இடைக்கிடை வந்து போகும் இந்த சோதனைகளால் அதிர்ந்து போகாதிருப்போம். வீழ்ந்து போகாதிருப்போம். பொறுமையும் உண்மையும், நேர்மையும், உறுதியும் எங்களிடத்தில் என்றும் மாறாதிருக்கட்டும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.