Monday, November 25, 2013

முஸக்கபுல் பிக்ர் - சிந்தனைத் தேர்ச்சி -

தனிமனித உருவாக்கப் பண்புகளில் மிக முக்கியமான மற்றொரு பண்பான ‘முஸக்கபுல் பிக்ர்’ என்ற பண்பு குறித்து இன்ஷா அல்லாஹ் இன்றைய அமர்வில் சில சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளப் போகிறோம். ‘முஸக்கபுல் பிக்ர்’ என்ற சொற்றொடரை நேரடியாக அறிவுத் தேர்ச்சி அல்லது சிந்தனைச் தேர்ச்சி உடையவன் என்று மொழிபெயர்ப்புச் செய்யலாம்.
இந்தத் தலைப்பை கீழ்வரும் நான்கு உபதலைப்புகளில் ஆராய்வது பொறுத்தம் என நினைக்கிறேன்.
1.         முஸக்கப் என்பதன் பொருள்
2.         பிக்ர் என்பதன் பொருள்
3.         முஸக்கபுல் பிக்ர் என்பதன் பொருள்
4.         தனிமனித உருவாக்கத்தில் முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பின் முக்கியத்துவம்
முஸக்கப் என்பதன் பொருள்
ஆரம்பமாக முஸக்கப் என்ற அறபுப் பதத்தின் மொழிரீதியான கருத்தைக் கொஞ்சம் தேடிப் பார்த்த பொழுது ஒரு அருமையான செய்தியை அறிந்து கொள்ளக் கிடைத்தது. பொதுவாக முஸக்கப் என்ற சொல்,  ஈட்டி என்ற கருத்தைக் குறிக்கும் ‘ரும்ஹ்’ என்ற சொல்லுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிந்தது. ‘அர்ரும்ஹ் அல் முஸக்கப்’ என்றால் மிகவும் கூர்மையாகவும் உறுதிமிக்கதாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு ஈட்டி என்ற கருத்தைக் குறிக்கிறது. அதனை எறிந்தால் இலக்கு தவறமாட்டாது. இலக்கைத் தாக்கும் போது அதன் முனை பழுதடைய மாட்டாது அல்லது உடைந்து விடமாட்டாது. அல்லது வளைந்து நலிந்து விட மாட்டாது. இது போன்றதொரு ஈட்டியைத்தான் அர்ரும்ஹ் அல் முஸக்கப் என்பார்கள்.
ஈட்டி பற்றிய இந்த விளக்கம் சில விடயங்களைச் சொல்கின்றன. இங்கு குறித்த பொருள் மிகவும் கூர்மையாகவும் உறுதிமிக்கதாகவும் சமநிலைத்தன்மையுடனும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இலகுவாக இலக்குத் தவறாமல் எறிய முடிகிறது. அத்துடன் இலக்கின் மீது அது பாதிப்பை ஏற்படுத்துகிறதேயன்றி அது பாதிப்படைவதில்லை. அதன் தனித்தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த அடிப்படைக் கருத்து ‘முஸக்கப்’ என்ற சொல்லின் பரிபாஷைக் கருத்திலும் தெளிவாகப் பிரதிபளிப்பதைக் காணலாம்.
‘முஸக்கப்’ என்ற சொல்லின் பரிபாஷைப் பொருள் இரண்டு பக்கங்களை முக்கியமாக வலியுறுத்துகின்றது. ஒன்று எல்லா விடயங்கள் பற்றியும் குறிப்பிடத்தக்களவு அறிந்து வைத்திருத்தல்,  மற்றது ஏதேனும் ஒரு விடயம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருத்தல்.
இந்த இரண்டு நிலைகளிலும் வலியுறுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான விடயம் இருக்கின்றது. அதுதான் ‘முஸக்கப்’ அல்லது ஸகாபா’ என்பது ஒரு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கல்விச் சான்றிதழைக் குறித்து நிற்க மாட்டாது. மற்றொரு வகையில் கூறினால் பல்கலைக்கழக சான்றிதழ் பெற்றவர்கள் எல்லாம் முஸக்கபாகக் காணப்பட மாட்டார்கள். சான்றிதழ் பெற்றவர்களுள் முஸக்கப்களும் இருப்பார்கள். முஸக்கப் அல்லாதோரும் இருப்பார்கள். ஏனெனில், முஸக்கப் என்பவன் தன்னைச் சூழக் காணப்படக்கூடிய, நடக்கக்கூடியவற்றை எப்பொழுதும் அறிந்து கொள்ள முற்படுகின்றவன். தனது பார்வையையும் அறிவையும் எப்பொழுதும் விசாலப்படுத்திக் கொள்ள முற்படுபவன். இதற்காக ஒரு சுயதூண்டுதல் அவனிடத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு பல்கலைக்கழகத்தில் கற்றாலும் சரி கற்காவிட்டாலும் சரி.
அடுத்து, மேற்குறிப்பிட்ட இரு நிலைகளிலும் “முஸக்கப்’ அல்லது ‘ஸகாபா’ என்ற சொல் குறிக்கும் மறறோர் முக்கியமான கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பலர் ஏராளமான தகவல்களைத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அது ஒரு குறித்த விடயத்தில் மாத்திரமோ அல்லது எல்லா விடயங்கள் குறித்தும் பல விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மிகப் பெரும்பாலும் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவிலன்றி ஒரு சிதறிய வடிவத்திலேயே காணப்படுவதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு மனிதனையும் நாம் முஸக்கப் என்று சொல்வதில்லை.
மாற்றமாக முஸக்கப் என்பவன்,  தன்னிடம் உள்ள தகவல்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி இணைத்து வைத்திருப்பான். அவை தர்க்க ரீதியான ஒழுங்கில் அவனது சிந்தனையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். இப்பொழுதுதான் அவன் புதிய சிந்தனைகளை உருவாக்குவான். அவனிடம் உள்ள தகவல்கள் மிகச் சிறந்த வடிவில் பயன்படுத்தப்படும்.
முஸக்கப் என்பவன் ஒரு நிருபர் போன்று தகவல்கள் எதுவாக இருப்பினும் அவற்றை சேகரித்துப் பரிமாறுபவன் அல்ல. மாற்றமாக தகவல்களை பகுப்பாய்வு செய்பவன். புதிய சிந்தனைகளை உருவாக்குபவன். கனவுகளைத் தோற்றுவிப்பவன்.

‘பிக்ர்’ என்பதன் பொருள்
‘பிக்ர்’ என்ற சொல் பொதுவாக இஃவானிய ஆவணங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாகும். அந்த சொல் குறித்த விளக்கத்தைத் தேடியபொழுது அது ஒரு விரிந்த கருத்தைக் குறித்து நிற்பதைக் கண்டு கொள்ள முடிந்தது.
‘பிக்ர்’ அல்லது ‘பிக்ரா’ என்ற பிரயோகம் நேரடியான மொழிக் கருத்தில் சிந்தனை என்ற கருத்தைக் குறிக்கிறது. இஸ்லாமிய தஃவா பரிபாஷையில் இது சமூக மாற்ற சிந்தனையைக் குறித்து நிற்பதைக் காணலாம். இஸ்லாம் குறிப்பிடும் சமூக மாற்ற சிந்தனை என்பது மனிதப் படைப்பின் நோக்கத்தை விளங்கப்படுத்துதலாகும். அல்குர்ஆன் கூறுகிறது “உங்களை எதவித நோக்கமும் இன்றி நாம் படைத்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” (முஃமினூன் - 115) அல்குர்ஆனுடைய இந்தக் கேள்வி மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தைக் கற்பிக்கிறது. அந்த அர்த்தத்துடன்தான் ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு அனுப்பப்படுகிறார்கள். கலீபா என்ற பதவிப் பெயருடன் அனுப்பப்படுகிறார்கள். இங்குதான் அல்லாஹ்தஆலா பூமியில் ஒரு மனித நாகரீகத்தைத் தோற்றுவிக்கின்றான். அந்த நாகரீகம் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையில் இருந்து எழுகிறது. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்பது அந்த நாகரீகத்தின் உயிர்த்தன்மையாய்க் காணப்படுகிறது. இந்தப் பணி அங்கு ஒரு சமூகப் பொறுப்பாக மேற்கொள்ளப்படுகிறது. அல்குர்ஆன் கூறுகிறது “முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு ஒருவர் பொறுப்பானவர்கள். அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள். தீமையைத் தடுக்கிறார்கள்.”
ஈமானின் அடியாக எழும் அந்தப் புதிய நாகரீகத்தைத் தோற்றுவிக்கும் பொறுப்புதான் இஸ்லாமிய சமூக மாற்ற சிந்தனை எனப்படுகிறது. மனிதப் படைப்பின் மூலம் அல்லாஹ்தஆலா உலகில் இதனைத்தான் எதிர்பார்க்கின்றான். ஒவ்வொரு நபிமார்களும் இந்தப் பணியை மேற்கொள்வதற்காகவே அனுப்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஒரு முஸ்லிம் என்றும் ஒரு கொள்கைவாதியாக, இலட்சியவாதியாக அடையாளப்படுத்தப்படுகிறான். மறுமையை நோக்கிய அவனுடைய பயணத்தில்,  இந்த உலகில் அவன் சாதிக்க வேண்டிய ஒரு பணி இருக்கிறது. மறுமை வரையில் அவனுடைய இந்தப் பணி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில்,  ஷெய்த்தானின் போராட்டம் மறுமை வரையில் காணப்படப் போகிறது. நபியவர்களும் “மறுமை வரையில் ஜிஹாத் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்” என்றார்கள். இது ஒரு முஸ்லிமின் அடிப்படையான பணி. இந்தப் பணியைப் புரிந்து கொள்தலையே ‘பிக்ர்’ என்ற சொல் குறித்து நிற்கிறது.

முஸக்கபுல் பிக்ர் என்பதன் பொருள்
முஸக்கபுல் பிக்ர் என்பது மேற்சொன்ன இரு விடயங்களையும் இணைத்து ஒரு விரிந்த பொருளைத் தருகிறது.
அதாவது இஸ்லாமிய சமூக மாற்றச் சிந்தனை குறித்து அல்லது இஸ்லாமிய மனித நாகரீக உருவாக்கம் குறித்து மிகவும் தெளிந்த,  ஆழமான புரிதலுடனும் நிபுணத்துவத்துடனும் காணப்படுகின்ற ஒருவனையே நாம் முஸக்கபுல் பிக்ர் என்கிறோம்.
இவ்வாறு சொல்லும் போது. எல்லா மனிதர்களையும் இவ்வாறு தெளிவும் ஆழமும் நிபுணத்துவமும் கொண்டவர்களாக மாற்றலாமா? என்ற கேள்வி பலரிடத்தில் ஏற்பட முடியும். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது இலகுவானது. எனினும் அதற்கு முன்னர் சில அடிப்படையான விடயங்களை விளங்கிக் கொண்டு அந்தக் கேள்விக்கு வருவது பொறுத்தமானதாக இருக்கும். சில சமயம் அந்த அடிப்படைகளைப் புரிந்து கொள்கிறபோது,  அந்தக் கேள்வி அவசியமற்றதாகக் கூட மாறிவிடமுடியும்.
முஸக்கப் என்ற சொல்லை விளங்கும்போது அங்கு சில விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
1.         கூர்மையான தெளிவான ஆழமான சிந்தனை கொண்டவன்
2.         பிறரில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் கொண்ட ஆனால் பிறரால் தாக்கமடையாத தனித்துவமான சிந்தனை கொண்டவன்
3.         உள்ளாந்த தூண்டுதலின் அடிப்படையில் தொடர்தேர்ச்சையான சிந்தனைத் தேடலை உடையவன்
4.         சிதறிய வடிவிலன்றி ஒழுங்குபடுத்தப்பட்டவகையில் தகவல்களை சேகரித்து வைத்திருப்பவன்
5.         புதிய சிந்தனைகளை உருவாக்குபவன்
6.         பொதுவாக எல்லா விடயங்கள் பற்றியும் பரிச்சயம் உடையவன்
7.         குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் உடையவன்
அதுபோல் ‘பிக்ர்’ என்ற விடயத்தை விளங்கும் போது, அகீதாவின் அடிப்படையில் எழுந்த ஒரு புதிய மனித நாகரீகத்தைத் தோற்றுவிப்பதற்காகச் செயற்படல். அந்த செயற்பாடு ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கடமை. மறுமை வரையில் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டிய ஒரு பணி. உலகின் முழு மனித வாழ்வையும் உள்ளடக்கிய ஒரு பணி. அதன் வடிவங்களும் வகைகளும் நிச்சயமாக பன்முகத்தன்மை வாய்ந்தவை. எனவே பன்முகத்தன்மை வாய்ந்த ஆற்றல்களும் திறமைகளும் அங்கு அவசியப்படுகின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் அவனது ஆற்றலைப் பிரயோகித்து பங்களிப்புச் செய்ய வேண்டிய அவசியம் இங்கு இருக்கிறது.
இப்போது மேற்கூறப்பட்ட இரண்டு அடிப்படைகளில் நின்று முஸக்கபுல் பிக்ர் என்பவனை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். முஸக்கபுல் பிக்ர் என்பவன் உலகில் தனது பணியை ஆழமாகவும் தெளிவாகவும் புரிந்து கொண்டவன். அந்த சிந்தனையில் மிகுந்த உறுதியுடன் காணப்படுபவன். இவன் பிறரையும் சூழலையும் மாற்றுகின்றவனேயன்றி,  பிறராலும் சூழலாலும் தான் மாறிக்கொள்பவனல்ல. இவன் உலகில் தனது பணியை ஒரு கடமையாகவும் இலட்சியமாகவும் கொண்டவன். அவனுடைய இலக்கு அவனுக்கு மிகவும் தெளிவானதாக இருக்கும். சிறப்புத் தேர்ச்சியுடன் தனது இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பான்.
இப்பொழுது ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம். எல்லா மனிதர்களையும் தெளிவும் நிபுணத்துவமும் கொண்டவர்களாக மாற்ற வேண்டுமா?
இந்தக் கேள்வி ஏன் தோன்றுகிறது எனின்,  தெளிவு,  நிபுணத்துவம் போன்ற சொற்களின் கருத்தை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
இங்கு தெளிவு என்பது உலகில் ஒரு முஸ்லிம் தனது பணியைப் புரிந்திருக்க வேண்டும். அதன் பருமனையும் பாரத்தையும் விளங்கியிருக்க வேண்டும். அதற்காக,  தான் செயற்படுவது கடமை என்பதை அறிந்திருக்க வேண்டும். நான் எங்கே போகிறேன்? என்ன செய்யப் போகிறேன் என்பது கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளாகும். இதுவே சிந்தனைத் தெளிவு எனப்படுகிறது. ஆனால் இதன் ஆழ அகலங்களைப் புரிந்து கொள்வதில் எல்லா மனிதர்களும் நிச்சயமாக சமப்பட மாட்டார்கள். ஆனால் மேற்சொன்ன அடிப்படைத் தெளிவு அனைவரிடமும் காணப்பட வேண்டியது.
அடுத்து நிபுணத்துவ தேர்ச்சியையும் எல்லா மனிதர்களும் அடைய வேண்டும் என்று நிச்சயமாக இஸ்லாம் எதிர்பார்க்கவில்லை. மாற்றமாக ஒவ்வொரு மனிதனும் தன்னிடமுள்ள திறமைகளையும் ஆற்றல்களையும் முழுமையாக இந்தப் பணிக்காகப் பிரயோகிக்க வேண்டும் என்பதே இஸ்லாம் அவனிடம் எதிர்பார்க்கும் விடயமாகும். ஒவ்வொரு மனிதனையும் அல்லாஹ்தஆலா ஏதோ ஒரு ஆற்றலுடன்தான் படைத்திருக்கிறான். அதன்மூலம் அவன் இந்த மனித நாகரீக வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே அவனிடம் எதிர்பார்க்கப்படும் விடயமாகும். இதனைத்தான் அல்குர்ஆன் ‘இமாரதுல் அர்ழ்’ பூமியை வளப்படுத்தல் என்ற சொல்லின் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறது.
எனவே,  முஸக்கபுல் பிக்ர் எனும் போது ஒரு மனிதனது மூளையில் புதிதாகப் பல விடயங்களைப் புகுத்துதல் அல்ல. மாற்றமாக அவனது படைப்பியல்பின் அடிப்படையில் அவனிடத்தில் காணப்படுகின்ற திறமைகள் ஆற்றல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதுடன்,  அவற்றை ஒருமுகப்படுத்தி பயன்மிக்கதாய் மாற்றுகின்ற ஒரு பணியே இங்கு நடைபெறுகிறது.

தனிமனித உருவாக்கத்தில் முஸக்கபுல் பிக்ரின் முக்கியத்துவம்
1.         மேலே பேசப்பட்ட சிந்தனைத் தெளிவு எனும் விடயம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானதாகும். எனவே,  இங்கு ஒவ்வொரு தனிமனிதனும் தனது கடமையை மிகச் சரியாக நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்படுகிறான். அந்த வகையில் முஸக்கபுல் பிக்ர் என்பது தனிமனித உருவாக்கத்தில் ஒரு முக்கிய பண்பாகவும் கட்டாயமான ஒரு வேலைத்திட்டமாகவும் மாறுகிறது.
2.         இஸ்லாமிய சமூக மாற்றம் என்பது தனிமனிதனாக மாத்திரம் மேற்கொள்ளப்படும் ஒரு பணியல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. ஒருமுகப்படுத்தப்பட்ட கூட்டு முயற்சி. எனவே,  அங்கு சிந்தனை ஒருமைப்பாடு,  இலக்கு ஒருமைப்பாடு என்பன மிகவும் அவசியமான விடயங்களாகும். ஒரு கூட்டு முயற்சி திசை மாறுவதும்,   சிதைவுற்று இலக்கை எட்டாமல் போவதும் பல சமயங்களில் சிந்தனை ஒருமைப்பாடின்மையாலும் இலக்கு ஒருமைப்பாடின்மையாலும் ஏற்படுகின்றது. முஸக்கபுல் பிக்ர் எனும் பண்பு இதுபோன்ற அபாயங்களிலிருந்து,  இஸ்லாமிய சமூக மாற்றப் பணியைக் காக்கின்றது. மாத்திரமன்றி,   தெளிவான இலக்கு நோக்கிய பயணத்திற்கும் இந்த ஒருமைப்பாடு காரணமாகின்றது. எனவே, முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பின் மீதான உருவாக்கம் இங்கு அத்தியவசியமான ஒரு விடயமாக மாறுகிறது.
3.         இஸ்லாமிய சமூக மாற்றம் என்பது பல்வகை ஆற்றல்கள் திறமைகளை வேண்டி நிற்கும் ஒரு பணி என்ற வகையில்,  மனிதர்களின் ஆற்றல்களும் திறமைகளும் இனங்காணப்படல் வேண்டும். அவை வளர்க்கப்படல் வேண்டும். உரிய இடத்தில் உரிய முறையில் அவை பிரயோகிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் சமூக மாற்றப்பணி முழுமையான விளைவை தரக்கூடியதாகக் காணப்படும். முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பின் மூலம் ஒரு தனிமனிதனிடத்தில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மாற்றமாக இதனையே நாம் அடையாளப்படுத்துகிறோம். அவனது ஆற்றல்கள் இனங்காணப்படுகின்றன,  வளர்க்கப்படுகின்றன. பிரயோகிப்பதற்கான களம் அமைத்துத் தரப்படுகின்றன. ஆகவே, தனிமனித உருவாக்கத்தில் முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பு எந்தளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக!

Friday, November 22, 2013

அல்குர்ஆனுடனான உறவாடல் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும்.

அல்-குர்ஆனுடன் உறவாடுங்கள், அதன் சிந்தனைகளுடன் கலந்து வாழுங்கள். நீங்கள் ஆச்சரியங்களைக் காண்பீர்கள். பல புதிய சிந்தனைகளும் கருத்துக்களும் ஊற்றெடுப்பதை அவதானிப்பீர்கள். உங்கள் சிந்தனையிலும் கற்பனையிலும் அவை பிரவாகித்து எழுவதைக் காண்பீர்கள். 
இமாம் இப்னு தைமியா அவர்கள் சிறையில் இருக்கும் போது அல்குர்ஆனைத் தவிர ஏனைய அனைத்தும் அவருக்குத் தடை செய்யப்பட்டபோது,  அவர் கண்ட அனுபவம் இதுதான். இதனால்தான் தனது முன்னைய காலங்களை அல்-குர்ஆனுடன் கழிக்காமல் அறிவு நூல்களுடன் கழித்தமைக்காக மிகவும் கவலையடைந்தார்.
அவரது மாணவரான இமாம் இப்னுல் கையிம் அவர்கள் கூறுகிறார்கள்: அல்-குர்ஆனை ஆழ்ந்து நோக்குதல் என்பது,  அதன் கருத்துக்களை நோக்கி அவனது உள்ளம் ஆழ்ந்து செல்வதுடன் அதனை  விளங்கிக் கொள்வதற்காக தனது சிந்தனைகளை ஒன்றுதிரட்டவும் வேண்டும். இதுதான் ஆழ்ந்து நோக்குதல் என்பதன் பொருளாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டமையின் நோக்கமும் இதுவாகும். மாற்றமாக வெறுமனே ஓதுதல் மாத்திரம் நோக்கமாக இருக்கவில்லை.
 அல்லாஹ்தஆலா கூறுகிறான் “உமக்கு இறக்கப்பட்ட நூல் மிகவும் பரகத் பொறுந்தியது. அதனது வசனங்கள் ஆழ்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவைகளாகும். அறிவுடையவர்கள் அதனை அறிந்து கொள்வார்கள்.” - ஸாத் – 29-
இமாம் ஹஸனுல் பஸரீ (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் “அல்குர்ஆன் ஆய்வுக்காகவும் செயற்படுத்துவதற்காகவுமே இறங்கியுள்ளது. எனவே,  அதனை ஓதுவதை செயலாக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் தொடர்ந்தும் கூறுகிறார்கள் “ஒரு மனிதனுக்கு உலகிலும் மறுமையிலும் மிகவும் பயனுள்ள விடயமாகவும் மறுமையில் அவனுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் அல்குர்ஆனுடனான உறவாடல் காணப்படுகின்றது. அதற்கு நிகரான ஒரு விடயத்தைக் காண்பதரிது. அல்-குர்ஆன் பேசும் சிந்தனைகளில் அவன் ஆழ்ந்து கவனத்தைச் செலுத்துகின்ற போது,  நன்மையினதும் தீமையினதும் பிரதான பிரிகோட்டை அவன் துல்லியமாகக் கண்டு கொள்வான். மாத்திரமல்ல நன்மை – தீமை இரண்டிற்குமான காரணங்கள்,  நோக்கங்கள்,  வழிகள்,  விளைவுகள்,  நன்மையையும் தீமையையும் பின்பற்றுபவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? போன்ற பல விடயங்கள் அவனுக்குத் தெளிவாகின்றன. அல்-குர்ஆன் அவனது உள்ளத்தில் ஈமானை உறுதிப்படுத்துகின்றது. இம்மை-மறுமை, சுவர்க்கம் - நரகம் போன்றவற்றின் காட்சிகளை அவனது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. முன்னைய சமூகங்களை அவனுக்கு இனம்காட்டிக் கொடுக்கின்றது. அவர்களது வாழ்வில் என்ன நடைபெற்றது என்பதையும், அவற்றில் படிப்பினை பெற வேண்டிய இடங்களையும், அவர்களில் அல்லாஹ்வின் நீதி எந்த வடிவில் செயல் வடிவம் பெற்றது என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றது. மாத்திரமன்றி அல்லாஹ்தஆலா யார்? அவனது பண்புகள் என்ன? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனுக்கு விருப்புக்குரிய விடயங்களும் வெறுப்புக்குரிய விடயங்களும் எவை? அவனை அடைந்து கொள்வதற்கான வழிகள் எவை? அவனை அடைந்து கொள்பவர்களது நிலை என்ன? போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் அல்குர்ஆன் அவனுக்குப் பதில் சொல்கின்றது. அத்துடன் மனித மனம் அதன் பண்புகள்,  அதனை உயிர்ப்பிக்கக் கூடியவைகள்,  பாழ்ப்படுத்தக் கூடியவைகள்,  சுவர்க்க வாசிகளின் நிலை,  நரக வாசிகளின் நிலை,  அவர்களது அடையாளங்கள்,  ஏனைய படைப்பினங்கள் பற்றிய செய்திகள் என மனிதனுக்கு அனைத்தையும் அல்குர்ஆன் சொல்லிக் கொடுக்கின்றது.
சுருங்கக் கூறினால் மனிதனுடைய இரட்சகன்,  அவனை அடைந்து கொள்ளும் வழி, அவனிடம் மீண்டு வருவோர் பெற்றுக் கொள்ளக் கூடிய கண்ணியங்கள் ஆகிய மூன்று விடயங்களையும், மறுபுறத்தில் ஷெய்த்தான் எதனை நோக்கி அழைக்கிறான் என்பதும் அவனை அடைந்து கொள்ளும் வழி என்ன என்பதும் அவனுக்கு செவிசாய்ப்பவர்கள் என்னவகையான வேதனைகளையும் அவமானங்களையும் பெறுவார்கள் என்பதும் அல்குர்ஆனில் பேசப்படும் பிரதான உண்மைகளாகும். இந்த ஆறு அம்சங்களையும் ஒரு அடியான் அறிந்து கொள்வது அவசியமாகும். அல்குர்ஆன் அவனுக்கு இதனைக் கற்றுக் கொடுக்கின்றது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் அது அவனுக்கு வேறு பிரித்துக் காட்டுகிறது. அவனது உள்ளத்தில் அது ஒரு சக்தியாக மாறுகிறது. உள்ளம் விசாலமடைகிறது. ஏனைய மனிதர்களை விடவும் இங்கு அவன் வித்தியாசப்படுகிறான் - தஹ்தீப் மதாரிஜ் ஸாலிகீன் - பக்கம் 243, 244-
இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் கூறுகிறார்கள்: அல்-குர்ஆனை விளங்குவதற்குரிய மிக எளிய மூலம் மனிதனுடைய உள்ளமாகும். ஒரு முஃமினுடைய உள்ளம் அல்-குர்ஆனுக்கான மிகச் சிறந்த தப்ஸீர் என்பதில் சந்தேகமில்லை என்றார்கள்.
ஒருவன் அல்குர்ஆனிலிருந்து நேர்வழி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்,  உள்ளச்சத்துடன்,  தனது சிந்தனைகளைச் சிதற விடாமல்,  அல்குர்ஆனின் கருத்துக்களை விளங்கிக் கொள்ளும் வகையில் தனது சிந்தனையை ஒன்றுகுவித்து ஓதுவதுடன்,  நபியவர்களது வரலாறு குறித்த ஒரு பரிச்சயத்தையும் பெற்றிருப்பான் எனின்,  அல்குர்ஆன் பேசும் கருத்துக்களை அவன் இலகுவான வடிவில் புரிந்து கொள்வான். அதன் பின்னர் தப்ஸீர் நூல்களை வாசிக்கின்றபோது,  பொருள் புரியாத சொற்கள்,  வசனங்களுக்கான கருத்தைப் புரிந்து கொள்வான். சில மேலதிக விளக்கங்களையும் பெற்றுக் கொள்வான். இது ஏற்கனவே உள்ளத்தில் பாய்ச்சப்பட்ட வெளிச்சத்திற்கு மேலும் பிரகாசத்தை வழங்குவதாகக் காணப்படும்.
இமாம் ஹஸனுல் பன்னாவுக்கு முன்னர் இதே உண்மையை இமாம் இப்னுல் கையிம் அவர்களும் பேசியிருக்கிறார்கள். அவர் சொல்கிறார் "அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் தலையாய அம்சம் எதுவெனில்,  அல்குர்ஆனுடன் ஒன்றித்த உறவாடலும் சிந்தனையுமாகும். அந்த உறவாடல் உள்ளத்தை இயங்க வைத்து விடுகின்றது. அங்கு பல சிந்தனைகள் துளிர்விடத் தொடங்குகின்றன. இந்த நிலைதான் அவனில் செயல்களை உருவாக்கி விடுகின்றது. உள்ளத்திலிருந்து தோன்றும் இந்த செயல்கள்தான் அவனது பாதையை சீரமைக்க வல்லது. அவனிடத்தில் அமைதியையும் நிதானத்தையும் தோற்றுவிக்க வல்லது.” என்கிறார்.
அவர் தொடர்ந்தும் கூறும்போது, எந்த ஒரு விடயத்தையும் மேலோட்டமாகப் பார்க்கும் போது நாம் புரிந்து கொள்பவை கொஞ்சம்தான். ஆனால் நாம் நிதானித்து ஆழ்ந்து பார்க்கும்போது கண்டு கொள்பவை மிக அதிகம். சிலர் நினைப்பார்கள் பெரும் தப்ஸீர் ஆசிரியர்களின் விளக்கங்கள் எமது கைகளில் இருக்கின்றன தானே,  இதற்கு மேல் வேறென்ன தேவை? என்று கேட்கலாம். உண்மைதான் அவர்களது விளக்கங்கள் பெறுமதி வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அல்குர்ஆன் கூற வந்த அனைத்து சிந்தனைகளும் அவர்களது விளக்கங்களுக்குள்ளே மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அல்குர்ஆன் எல்லாக் காலத்திற்குமுரிய வழிகாட்டி. அது எத்தனையோ உண்மைகளை உள்ளே வைத்திருக்கிறது. அதனை வெளியே கொண்டுவர வேண்டியது ஒரு பெரிய கடமை. அந்தக் கடமையை எல்லோரும் மேற்கொள்ளலாம். அல்குர்ஆன் எல்லோருடனும் உறவாடக் கூடியது. அவர்களது தரத்துக்கேற்ப அவர்களுடன் உறவாடும். சிந்தனைகளை அவர்களுக்கு வழங்கும். அவற்றை நாம் மறுக்காதிருக்க வேண்டும். அல்குர்ஆனுடன் தொடர்ந்தும் உறவாடுவோம். அதன் சிந்தனைகளில் வாழ்வோம்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

Monday, November 18, 2013

இஸ்லாமியத் தீர்வுத் திட்டம்

இஸ்லாம் முழு மனித இனத்திற்கும் வழிகாட்ட வந்த மார்க்கம். அதன் போதனைகள் கால, இட,  சூழல் போன்ற அனைத்துப் பரிமாண வேறுபாடுகளையும் உள்ளீர்க்கும் தன்மை கொண்டதாகும். இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாத்தின் தீர்வுத்திட்டம், முழுமைத்தன்மை வாய்ந்ததாகவும், சர்வதேசப் பண்பைக் கொண்டதாகவும், சமநிலைத்தன்மை வாய்ந்ததாகவும் காணப்படுகிறது.
அதேவேளை இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் கால, இட,  சூழல் பரிமாணங்களின் வேறுபாட்டையும் அதன் தனித்தன்மைகளையும் கருத்தில் கொண்டதாகவே காணப்படுகிறது. ஆனால் காலத்தின் வேறுபாடு அல்லது தனித்தன்மை,  இட வேறுபாடு அல்லது இடத்தின் தனித்தன்மை,  சூழல் வேறுபாடு அல்லது சூழலின் தனித்தன்மை என்பன ஒருபோதும் குறித்த தீர்வுத் திட்டத்தின் முழுமைத்தன்மையையும்,  சர்வதேசத் தன்மையையும்,  சமநிலைத் தன்மையையும் நிராகரிப்பதாகவோ, வலுவிலக்கச் செய்வதாகவோ காணப்பட மாட்டாது. அவ்வாறு நிராகரிக்கப்படுவதோ அல்லது வலுவிலக்கச் செய்வதோ கால,  இட,  சூழலின் வேறுபாட்டையும் தனித்தன்மையையும் கருத்திற் கொள்ளல் என்பதை விடவும் அது தீர்வுத் திட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகவோ அல்லது மறுப்பதாகவோ மாறிவிட வாய்ப்புண்டு. இஸ்லாம் எனும் தீர்வுத் திட்டத்தில் இந்த முரண்பாடு தோன்றுவது நிச்சயமாக சாத்தியமற்றது.
இதன் மறுதலையும் இதே போன்றதுதான். இஸ்லாம் முழு மனித இனத்திற்குமான தீர்வு. எல்லா நிலப்பிரதேசங்களுக்குமான தீர்வு. அது சர்வதேசமானது. முழுமையானது என்று பேசுகின்றபோது,  அங்கு ஒருபோதும் கால, இட,  சூழல் பரிமாணங்களின் தனித்தன்மைகள் மறுக்கப்பட மாட்டாது. அவ்வாறு மறுக்கப்படும் எனின், அது தீர்வுத் திட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு செயலாக அமைந்துவிடும். இந்த முரண்பாடும் நிச்சயமாக இஸ்லாமிய தீர்வுத் திட்டத்தில் இல்லை.
குறித்ததொரு சூழலுக்கான தீர்வு அல்லது குறித்ததொரு இடத்திற்கான தீர்வு அல்லது குறித்ததொரு காலத்திற்கான தீர்வு என இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தைக் கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் இருக்கிறது. குறித்த இடம்,  காலம்,  சூழல் என்பவற்றிற்கான தீர்வு அந்த இடத்தையும் காலத்தையும் சூழலையும் மாத்திரம் மையப்படுத்தி எழமாட்டாது. மாற்றமாக ஏனைய இடங்களின் பாதிப்பும் ஏனைய காலங்களின் பாதிப்பும்,  ஏனைய சூழல்களின் பாதிப்பும் நிச்சயமாக அங்கு காணப்படும். இஸ்லாத்தின் தீர்வுத் திட்டம் உலகின் பல பாகங்களிலும் அமுல்படுத்தப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்போது அந்த அனைத்து முயற்சிகள் ஊடாகவம் எட்டப்பட்ட விளைவுகள்,  கட்டமாயமாக நாம் தீர்வைத் தேடும் வேறோர் இடத்தின் அடைவுகளை இலகுபடுத்திக் கொடுக்கும்.
மற்றொர் வகையில் கூறினால் குறித்த இடத்தில் இஸ்லாத்தின் அமுலாக்க வெற்றி என்பது அங்குள்ளவர்களால் மேற்கொள்ளப்பட்;ட முயற்சியால் மாத்திரம் அடையப் பெற்ற ஒன்றாகக் காணப்பட மாட்டாது. மாற்றமாக ஏனைய இடங்களில் பலர் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாகவுமே அந்த வெற்றி அடையப் பெறும்.
எமது இடத்திற்கும்,  காலத்திற்கும், சூழலுக்குமான தீர்வை நாம்தான் தேட வேண்டும். ஆனால் அது ஏனைய இடங்கள்,  காலங்கள், சூழல்களை புறம் தள்ளியதாக ஒருபோதும் அமைந்து விடக்கூடாது. ஏனெனில்,  இஸ்லாமிய தீர்வு என்பது ஒரு வலையமைப்பைப் போன்றது. பிறவற்றோடு சம்பந்தமில்லாமல் ஓரிடத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமான ஒரு தீர்வுத் திட்டமல்ல. காலத்தாலும் சரி,  இடத்தாலும் சரி, சூழலாலும் சரி,  இஸ்லாமியத் தீர்வுத்திட்டம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமுள்ளது. ஒன்று மற்றையதில் பாதிப்பு செலுத்தக்கூடியது.
பல சமயங்களில் எமக்கு இறக்குமதித் தீர்வுகள் அவசியமில்லை என்று சொல்கிற போதும்,  எமக்கு நாமே தீர்வு தேட வேண்டும் என்று சொல்கிற போதும்,  மேற்சொன்ன அடிப்படை யதார்த்தங்கள் மறக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

எமது சிந்தனைகள் சமநிலைப்பட வேண்டும். இஸ்லாத்தையும் அதன் தீர்வையும் பரந்த கண் கொண்டு பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். “முஸக்கபுல் பிக்ர்” என்ற எண்ணக்கருவின் பரிமாணங்களில் இதுவும் ஒன்றுதான்.

Tuesday, November 5, 2013

முஹர்ரம் செய்தி

இஸ்லாமிய புதுவருடத்தின் ஆரம்பம் முஹர்ரம் மாதம், ஆஷுரா எனப்படும் அதன் பத்தாவது நாள் குறித்து ஒரு ஹதீஸில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது,  யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாள் நோன்பு நோற்பதை அவதானித்து, அதில் என்ன விஷேடம் எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் இது ஒரு சிறப்புக்குரிய நாள். அல்லாஹ்தஆலா மூஸாவையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களது எதிரியிடமிருந்து காப்பாற்றிய நாள். எனவே, மூஸா  அந்நாளில் நோன்பு நோற்றார்கள். அப்போது நபியவர்கள் உங்களை விடவும் மூஸாவில் எனக்கு உரிமை அதிகம் என்று கூறி, தான் நோன்பு நோற்றதுடன் பிறரையும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். புஹாரி, முஸ்லிம்--
மற்றோர் அறிவிப்பில், இது ஒரு மகத்தான நாள், அல்லாஹ் மூஸாவையும் அவரது சமூகத்தையும் இந்நாளில் காப்பாற்றினான். பிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா இன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். நாமும் நோன்பு நோற்கிறோம் என்றார்கள்.
இந்த ஹதீஸ் பிர்அவ்ன் எனும் முதல்தர அநியாயக்காரன் ஒருவனின் அழிவை ஞாபகப்படுத்துகிறது. மனித வரலாற்றில் மிகப்பெரும் நிகழ்வுகளில் ஒன்று என இதனைக் குறிப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில், மூஸா (அலை) அவர்களது தஃவாவுக்குத் தடையாக இருந்த இந்த பிர்அவ்னை விடவும், மிகப்பெரிய அநியாயகாரன் ஒருவனைப் பற்றி வரலாறு பேசவில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு அநியாயக் காரனின் அழிவையே இந்த ஹதீஸ் நினைவில் கொண்டு வருகிறது..
உலகில் அநியாயம் அழிந்து விடுகிறது. நீதியே வெற்றி பெறுகிறது. அசத்தியம் அழிந்து விடுகிறது. சத்தியமே வெற்றி பெறுகிறது, என்ற பேருண்மையை இந்த ஹதீஸ் சொல்கிறது. ஆனால் இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய உண்மை என்னவெனின், அந்த செயன்முறையை அல்லாஹ்தஆலா எவ்வாறு நிகழ்த்துகிறான் என்பதாகும். அதனை பிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸாவும் அவர்களது சமூகமும் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை அல்குர்ஆன் எவ்வாறு முன்வைத்திருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
ஸுரதுஸ் ஷுஅராவின் 60 முதல் 68 வரையான வசனங்களில் அல்லாஹ்தஆலா இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகின்றான். மூஸா (அலை) அவர்கள் இரவோடு இரவாக தனது சமூகத்தை அழைத்துக் கொண்டு, பலஸ்தீனத்தை நோக்கிப் புறப்படுகிறார்கள். அதிகாலையில் விடயம் கேள்விப்பட்டு,  பிர்அவ்ன் தனது படையுடன் அவர்களைத் துரத்தி வருகிறான். இடையில் கடல் குறுக்கிடுகிறது. மூஸாவின் சமூகத்தினர் சொல்கிறார்கள். நாங்கள் மாட்டிக் கொண்டு விட்டோம். ஆனால்,  மூஸா (அலை) அவர்கள்,  இல்லை என்னுடன் எனது இரட்சகன் இருக்கிறான்,  அவன் ஒரு வழியைக் காட்டுவான் என்கிறார்கள். அப்போது கடலின் மீது தனது தடியினால் அடிக்குமாறு அல்லாஹ்தஆலா கட்டளை இடுகிறான். அங்கே பாதைகள் தோன்றுகின்றன. அவர்கள் கடலைக் கடந்து செல்கிறார்கள். பின்தொடர்ந்து வந்த பிர்அவ்னும் அவனது படையினரும் கடலில் மூழ்கி அழிந்து போகிறார்கள்.
இந்த வசனங்களை அமைதியாக வாசிக்கின்ற பொழுது, அவற்றில் மறைந்துள்ள சில அற்புதமான உண்மைகளைக் காணலாம்.
உலகில் அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்வதும் அநீதி அழிந்து நீதி வெல்வதும் வெறுமனே மனித முயற்சிகளிலும், அவர்களது திறமைகளிலும் மாத்திரம் தங்கி நிற்கக் கூடிய ஒரு விடயமல்ல. மாற்றமாக அல்லாஹ்தஆலாவின் கை அதில் பெரியளவில் ஓங்கியிருப்பதை இந்த வசனங்கள் வலுவாக முன்வைக்கின்றன. இங்கு மூஸாவைக் காப்பாற்றியதும், பிர்அவ்னை அழித்ததும் தானே மேற்கொண்டதாக அல்லாஹ்தஆலா கூறுகின்றான்.
இதனை மற்றொரு வகையில் கூறினால், ஒரு சமூக மாற்றம் என்பது மனிதத் திட்டமிடல்களாலும் அவனது பகுத்தறிவுச் சமன்பாடுகளாலும் மாத்திரம் நிகழ்த்தப்படும் ஒரு பணியல்ல. மாற்றமாக அங்கு அல்லாஹ்தஆலாவின் நேரடி உதவி பெற்றுக் கொள்ளப்படுவதற்குரிய ஒரு பெரிய பரப்பு காணப்படுகிறது. பௌதீகக் காரணிகள் எதுவும் துணை செய்யாத ஒரு சந்தர்ப்பத்தில் யாரும் எதிர்பாராத ஒரு கோணத்தில் அல்லாஹ்தஆலா உதவி செய்வான். இந்த விதிதான் மூஸா (அலை) அவர்களது தஃவாவிலும் நடைபெற்றது. முன்னால் கடல்,  பின்னால் பிர்அவ்னின் படை,  சாதாரண பௌதீகக் காரணிகளின் அடிப்படையில் அவர்கள் உயிர்தப்புவது சாத்தியமற்றது. இந்த இடத்தில்தான் மனிதக் கணிப்பீடுகளைத் தாண்டி அல்லாஹ்வின் உதவி வருகிறது.
மூஸா (அலை) அவர்களது நம்பிக்கையின் ஆழத்தைப் பாருங்கள். பௌதீக ரீதியாக சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிந்த போதும், அவரது சமூகத்தினர் நாம் உயிர்தப்ப முடியாது,  வேறுவழியில்லை,  நன்றாகவே மாட்டிக்கொண்டு விட்டோம் என்று மிகவும் உறுதியாகக் கூறியபோதும். எனது இரட்சகன் எனக்கு ஒரு வழியைக் காட்டுவான் என்ற ஆழமான நம்பிக்கையுடன். தான் எடுத்த தீர்மானத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். இங்கு மூஸா அலை அவர்களின் அல்லாஹ் மீதான நம்பிக்கையும்,  கொள்கை மீதான உறுதியும்,  பிர்அவ்னுடன் சமரஸம் பேச முற்படாமையும் அரசியல் சாணக்கியமின்மை அல்லது அரசியல் முதிர்ச்சியின்மை என்று நாம் ஒரு போதும் சொல்ல மாட்டோம்.
மூஸா அலை அவர்களது பிர்அவ்னுக்கு எதிரான போராட்டம் நிகழ்ந்த அதே எகிப்திய பூமியில் இன்று ஒரு போராட்டம் நடக்கிறது,  பிர்அவ்னின் கொடூரத்துடன் ஒரு தரப்பும்,  மூஸாவின் நம்பிக்கையுடன் மற்றொரு தரப்பும் போராடுகின்றனர்.
ஒரு எகிப்திய சகோதரரிடம் கேட்கப்பட்டது தற்போதைய எகிப்திய சூழலில் தீர்வு எங்கிருந்து வரலாம்? எந்த வடிவில் வரலாம்? இது பற்றி ஏதேனும் எதிர்வு கூற முடியுமா? அவர் இவ்வாறு பதில் தந்தார். பௌதீகக் காரணிகளை விடவும் நாம் அல்லாஹ்வின் மீதுதான் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும் சூழ்நிலை மிகவும் ஆபத்தானது. ஒரு பெரும் தியாகம் செய்யப்பட வேண்டியிருக்கும். ஆனாலும் நாம் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். சத்தியத்திற்கும அசத்தியத்திற்கும் இடையிலான இறுதிக்கட்டப் போர் இது. நிச்சயமாக அல்லாஹ்தஆலா இதில் எங்களுக்கு வெற்றியைத் தருவான். அது எந்தத் திசையில் இருந்து வரும்? எந்த வடிவில் வரும்? அதனை அவன் மட்டுமே அறிவான். நிச்சயமாக அவனது தீர்வு மனிதக் கற்பனைகளுக்கு அப்பால்பட்டது. மூஸாவுக்கு கடல்களைப் பிளந்த கொடுத்தது போல்,  குகைவாசிகளுக்கு முன்னூறு வருட தூக்கத்தைக் கொடுத்தது போல்,  மனிதப் பகுத்தறிவு,  கற்பனை செய்யாத,  எதிர்பார்க்காத புறத்திலிருந்து அவனது உதவி வரும். அல்லாஹ் அவ்வாறுதான் உதவி செய்வான். அவனது தீர்வு இவ்வாறுதான் இருக்கும் என்பதை மனிதப் பகுத்தறிவால் துல்லியமாகக் கணிக்க முடியாது. அல்லாஹ் நிச்சயமாய் ஒரு தீர்வைத் தருவான் என்று நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். எங்களது கடமை என்ன தெரியுமா? எமது கொள்கையில் நாம் உறுதியாக இருப்பதுதான். கொள்கை நிலை மாறவில்லை. தடம் புரளவில்லை என்பதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி என்றார்.

இந்த நம்பிக்கையைத்தான் மூஸா (அலை) அவர்கள் அன்று பிரதிபளித்தார்கள். இந்த கொள்கை உறுதியைத்தான் மூஸாவிடமும் பார்த்தோம். அவரது கொள்கையும் வெற்றி பெற்றது. பிர்அவ்னுக்கு எதிரான போராட்டமும் வெற்றி பெற்றது. நிச்சயமாக இன்றும் கொள்கையும் வெற்றி பெறும். போராட்டமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடனிருப்போம் என்ற சுபசோபனத்தை முஹர்ரம் செய்தியாய் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமடைகின்றேன். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.