Monday, March 2, 2015

எமது மண்ணில்…

இலங்கை மண்ணின் தஃவாக் களம் முன்னெப்போதும் இல்லாதவாறு புதிய பரிமாணங்களைக் கண்டு வருகிறது. இது ஓர் ஆரோக்கியமான நிலை. சந்தோசம் கொள்ளத்தக்க ஒரு விடயம்.

இன்று இஸ்லாமிய தஃவா என்பது தனிமனிதன்,  குடும்பம்,  இயக்கம் என்ற எல்லைகளைத் தாண்டி சமூகம்,  நாடு என்ற பரிமாணங்களில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தஃவா பற்றிய சிந்திப்புகளும்,  கருத்தாடல்களும் அதிகமாக இந்தப் பரப்புகளை மையப்படுத்தியிருப்பது அவதானத்திற்குரியது. 

சமூக ஒற்றுமை,  சகவாழ்வு,  நாட்டுக்கான பங்களிப்பு போன்ற கருத்தியல்கள் பிரதான தளத்தின் பேசுபொருள்களாக மாற்றம் கண்டு வருகின்றன. இந்நிலை இதற்கு முன்னர் காணப்படவில்லை என்பதை விடவும் ஆரம்பத்தில் சிறிய தொகையினர் ஊடாக மாத்திரம் பேசப்பட்ட இவ்விவகாரங்கள் இன்று எல்லாத் தரப்பினராலும் முன்னெடுக்கப்படுகின்ற ஒன்றாக மாறியிருக்கின்றமையே இன்றைய நாளின் முக்கிய வித்தியாசமாய்க் காணப்படுகின்றது.

சமூக மட்டத்தில் நின்று பார்க்கின்ற பொழுது,  முஸ்லிம் சமூகத்தின் ஒருமைப்பாடு,  அதற்கான ஒரு பொதுத் தலைமையின் அவசியம் போன்றன குறித்து,  இன்று வெகுவாக விவாதிக்கப்படுகின்றது. உண்மையில் இவ்விடயம் கருத்து எல்லையைத் தாண்டி செயல்வடிவத்தை நோக்கியும் வேகமாக நகர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

மற்றொரு புறத்தில் இலங்கை எமது தாயகம் என்ற வகையில் நாம் சமூக எல்லைக்குள் மட்டுப்படாமல் நாடு என்ற வகையில் எமது சிந்திப்புகளும் செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்ற அறைகூவல் எல்லாத் தரப்பிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் ஆரம்பக் கட்டமாகவோ என்னவோ பிற சமூகங்களிடத்தில் இஸ்லாம் பற்றிய சார்பு மனப்பான்மையை வளரத்தல்,  சகவாழ்வு போன்ற எண்ணக்கருக்கள் முக்கிய இடத்தினைப் பிடித்திருக்கின்றன. இவை தொடர்பான நேரடி வேலைத்திட்டங்கள் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கலாம்.

இதன் பிறிதொரு வடிவம் அரசியல் தளத்திலும் இருக்கிறது. முஸ்லிம் அரசியல் எனும் இனத்துவ சிந்திப்பைத் தாண்டி விழுமிய அரசியலை நோக்கி அரசியல் சிந்தனை நகர ஆரம்பித்திருக்கிறது. ஒரு பெரும் ஆர்ப்பரிப்பாக இன்னும் இதனைக் காண முடியாவிட்டாலும் பலமான ஒரு அத்திவார நகர்வு அங்கு தெரிகிறது. இப்பணியும் நாடு என்ற பரிமாணத்தை மையப்படுத்தியிருக்கிறது.

இங்கு ஒரு விடயத்தை முக்கிமாய்க் குறித்துக் காட்டுவது பொறுத்தம். இந்த தஃவா சூழலின் முக்கிய கதாபாத்திரங்களாய் நாம் இளைஞர்களைக் காண்கிறோம். சிந்தனைத் தளத்திலும் சரி செயற்பாட்டுத் தளத்திலும் சரி முன்னணியில் அவர்கள்தான் இருக்கிறார்கள். கருத்து முன்வைப்பாக இருக்கட்டும்,  விமர்சனமாக இருக்கட்டும்,  சாடலாக இருக்கட்டும். இவற்றில் எல்லா வடிவங்களையும் அவர்கள் பிரதிபளிக்கிறார்கள். இவற்றில் அவர்களது அணுகுமுறைகளின் சரி பிழைகளுக்கு அப்பால் இளைஞர்களது தஃவா உணர்வும் ஆர்வமும் வரவேற்கத்தக்கது.

மேற்கூறிய பின்புலங்களில் அவதானத்திற்குரிய சில உண்மைகள் இருப்பதாய்த் தோன்றுகிறது. முதலில் ஒரு விடயத்தில் நாம் எல்லோரும் உடன்படுகின்றோம். அது,  இஸ்லாமிய தஃவா ஒரு நிலையான கடமை. அதில் மாற்றமில்லை. அதற்கு பல்வேறு வடிவங்கள் காணப்படலாம். ஆனால் அது ஒரு கடமை என்பது நிலையானது. இந்தக் கடமையுணர்வில் எல்லா சிந்தனை முகாம்களும் ஒன்றுபடுகிறார்கள். ஆனால் அதன் செயல்வடிவத்தைப் பொறுத்தவரையில் தனிமனித வடிவமா? கூட்டு வடிவமா? கூட்டுவடிவத்திலும் நிறுவனப் பொறிமுறையா? இயக்கப் பொறிமுறையா? என்பது வேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்ற முடியுமான ஒரு பரப்பாகும். இவற்றுள் எந்த நிலைப்பாடும் பாதில் என்ற வரம்புக்குள் நிச்சயமாக உள்ளடங்க மாட்டாது.

ஆனால் நாம் மனம் கொள்ள வேண்டிய விடயம் எது எனின்,  ஒரு செயலை மிகச் சிறந்த முறையில் மேற்கொள்வதனையே அல்லாஹ்தஆலா விரும்புகிறான். நபியவர்கள் கூறினார்கள் “நீங்கள் ஒரு செயலை செய்யும் போது அதனை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதையே அல்லாஹ்தஆலா விரும்புகிறான்” அந்தவகையில் மிகவும் பயனுள்ள வழிமுறை எது? மிகவும் பொறுத்தமான வழிமுறை எது? என்பது குறித்த தேடல் ஒரு முஸ்லிமின் கடமை. ஸாலிஹான அமல்களில் ஒன்று.

எனவே,  விளைவுகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு பார்வையின் அடிப்படையிலேயே வழிமுறைகள் தீர்மானிக்கப்படல் வேண்டும். தனிமனித வடிவில் சிந்தனை முன்வைப்புகள் கருத்தாக்கங்கள் சாத்தியமாக இருப்பினும்,  செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுப்பது,  கூட்டு வடிவிலேயே சாத்தியப்படுகிறது.

இங்கு மற்றொரு விடயத்திலும் எமது உடன்பாடு அவசியப்படுகிறது. அதாவது இருப்பவை எவற்றையும் மறுதலிக்காமல் அவற்றின் இருப்பையும் பயனையும் அங்கீகரித்தல் என்பது. இன்று இஸ்லாமிய தஃவா மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகள்,  வடிவங்கள் அனைத்தும் பயனுள்ளவைதான். அவற்றின் மூலம் மக்கள் பிரயோசனப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

இங்கு எந்த வடிவமும் அவசியமற்றது என்றோ பிழையானது என்றோ நாம் கூற முடியாது. மனித வாழ்வினதும் மனித தேவைகளினதும் பன்முகப்பட்ட வடிவங்களுக்கு பதில் தருவதற்கு பல்வேறு வகைப்பட்ட அணுகுமுறைகளும் வடிவங்களும் அவசியப்படுகின்றன. எனவே,  இந்த அனைத்து வடிவங்களினதும் இருப்பையும் பயனையும் ஏற்றுக் கொள்ளுதல் எமது மனநிலைகளில் நிகழ வேண்டிய முக்கியதொரு மாற்றமாகும்.

அதேவேளை மற்றொரு உண்மையையும் நாம் மறந்து விடக் கூடாது. நடந்து கொண்டிருக்கும் அனைத்து முயற்சிகளும் வடிவங்களும் குறித்ததொரு பொது இலக்கின்றி  சிதறிய பல வடிவங்களில் பயணிக்கும் நிலை அவதானத்திற்குரியது. ஓர் ஆரோக்கியமற்ற நகர்வாக இது தென்படுகிறது. இங்குதான் நாம் மிகவும் முக்கியமான,  கவனமான ஒரு பார்வையைச் செலுத்த வேண்டியிருக்கிறது. 

பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வகைப்பட்ட முயற்சிகளில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அவை அனைத்தின் மூலமும் நாம் என்ன விளைவை அடைந்து கொள்ளப் போகிறோம்? என்ற கேள்விதான் மிகவும் முக்கியமானது. எமது முயற்சிகள் அனைத்தும் நீண்ட காலத்தில் ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றனவா? அவை ஒரு நீண்டகால இலக்கை அடைந்து கொள்ளப் போகின்றனவா? அல்லது தொடர்புகள் அற்ற வெறும் செயற்பாடுகள் மாத்திரம்தானா? முயற்சிகளின் முடிவுடன் அவை காணாமல் போய்விடப் போகின்றனவா?

இந்தக் கோணத்திலமைந்த சிந்திப்பு தஃவாக் களத்தின் இன்றியமையாத தேவை. இங்கு நாம் பல்வேறு முயற்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும்,  தொடர்பாடலையும் மாத்திரம் நாடவில்லை. அதனையும் தாண்டிய ஒரு விடயத்தையே இங்கு குறித்துக் காட்ட விரும்புகிறோம். ஒருங்கிணைப்பு என்பது ஒரு பொறிமுறை மாத்திரம்தான். அது ஒரு அடைவு அல்ல. இந்த ஒருங்கிணைப்பு பொறிமுறை ஊடாக எல்லா முயற்சிகளும் ஒரு நிலையான நீண்டகால இலக்கு நோக்கி வழிநடாத்தப்படுவது அவசியம்.


என்ன செய்யப் போகிறோம்? எவ்வாறு செய்யப் போகிறோம்? என்ற கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. அவை போலவே முக்கியமான கேள்விதான் எதனை அடைந்து கொள்ளப் போகிறோம் என்பது. இந்தக் கேள்விக்கு விடை காணும் பொழுதுதான் ஒற்றுமை,  ஒருங்கிணைப்பு,  இணைந்து செயற்படல் போன்ற பல கருத்தியல்களுக்கு உண்மையான பொருள் புலப்படும். மாத்திரமன்றி செயற்களத்திலும் அவை நிஜமாகும். 

எனவே,  ஒரு பொது அடைவை நோக்கிய சிந்திப்பும்,  அதனை நோக்கிய ஒருங்கிணைப்பும் இலங்கை தஃவாக் களத்தில் நிரப்பப்பட வேண்டிய ஒரு முக்கிய இடைவெளி என நினைக்கிறோம்.

Friday, February 13, 2015

கணவனும் மனைவியும் தஃவாவும்

இஸ்லாமிய தஃவாவில் கணவன்-மனைவி இருவரும் முக்கிய தலைமைப் பொறுப்புக்களில் இருந்து செயலாற்றும் நிலையை தஃவாக் களத்தில் பொதுவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பல சமயங்களில் தலைமைப் பொறுப்புக்களை வகிக்காத போதும் கூட மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக சமகாலத்தில் இருவரும் காணப்படுகிறார்கள். 

தஃவா தனிமனிதர்கள் என்ற நிலையைத் தாண்டி தஃவா குடும்பங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றமை தஃவா களத்தில் சந்தோஷம் கொள்ளத்தக்க ஒரு விடயம் என்றிருந்த போதிலும் இந்நிலை குடும்பக் கட்டமைப்பில் ஏற்படுத்த இயலுமான தாக்கம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமிய தஃவாவின் வளர்ச்சிப் படிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு பரப்பாக இது பரிணமித்திருக்கிறது.

தஃவாவில் நன்கு அனுபவம் வாய்ந்த பலர் குறித்து அவர்களது மனைவிமாரிடத்தில் பல முறைப்பாடுகள் இருக்கின்றன. வீட்டுக்கு நேரம் ஒதுக்குவது,  மனைவியைக் கவனிப்பது,  பிள்ளைகள் விடயத்தில் அக்கறை காட்டுவது என்று பல விடயங்களில் போதாமைகள் இருப்பதாக மனைவிமார்கள் கவலைப்படுகிறார்கள்.

மறுபுறத்தில் கணவன்மாரிடத்திலும் முறைப்பாடுகள் இல்லாமல் இல்லை. மனைவி வீட்டில் இல்லை, அதிகமான நேரங்கள் தொலைபேசியுடன் இருத்தல்,  ஒரே உணவையே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடுதல் என்று அவர்களது பட்டியலும் நீண்டு செல்கின்றது.

இது போன்றதொரு நிலை இஸ்லாமிய தஃவாவில் ஆரோக்கியமானதல்ல. ஏனெனில்,  குடும்ப வாழ்வு ஆரோக்கியமாய்க் கட்டியெழுப்பப்படுதல் என்பது கூட இஸ்லாமிய தஃவாவின் இலக்குகளில் ஒன்றுதான். சமூக தஃவாவுக்காக குடும்ப வாழ்வு விலையாக அமைந்து விடக்கூடாது.
இந்தப் பின்புலத்தில் தஃவாக் குடும்பங்கள் அதிலும் குறிப்பாக கணவனும் மனைவியும் கருத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை இங்கு தொட்டுச் செல்ல விரும்புகிறேன்.

மனைவிமார்களே! முதலில் உங்களது மனதோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன். நீங்கள் அல்-குர்ஆனில் சூரதுத் தஹ்ரீமைப் படித்திருப்பீர்கள். அதன் முதல் வசனம் நபியவர்களை நோக்கி கண்டனத் தொனியில் பேசுகிறது. உங்கள் மனைவிமாரின் திருப்திக்காக நீங்கள் ஏன் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒரு விடயத்தை ஹராமாக்கிக் கொள்கிறீர்கள்? என்று கேட்கிறது. 

இது ஏன் தெரியுமா? நபியவர்கள் தனது அடிமைப் பெண் ஒருவருடன் ஹப்ஸா (றழி) அவர்களது வீட்டில் உறவு வைத்துக் கொண்டார்கள். இதனைக் கேள்வியுற்ற ஹப்ஸா கடுமையாக கோபப்பட்டார். தன்னைத் தலாக் சொல்லுமாறும் சொல்ல முற்பட்டார். இந்த விடயத்தை இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு நபியவர்கள் கூறியிருந்த போதும் அது அவர்களது மனைவிமார் மத்தியில் பரப்பப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தால் நபியவர்களது குடும்ப வாழ்வில் அமைதியற்ற ஒரு நிலை தோன்றியது. இந்நிலையில் அல்-குர்ஆன் குறித்த மனைவிமாரை வன்மையாகக் கண்டித்தது. நபியவர்களுடன் நீங்கள் நல்ல முறையில் நடந்து கொள்ளாவிட்டால் நாம் அவர்களுக்கு சிறந்த வேறு பெண்களை திருமணம் செய்து கொடுப்போம் என்று அல்குர்ஆன் கூறியது.

நபியவர்களின் மனைவிமாரை நோக்கிய அல்குர்ஆனின் அந்த கடுமையான கண்டனத்திற்கான காரணம் என்ன? இங்குதான் மனைவிமார் மனம் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. சமூகத்திற்கு தலைமை வழங்குபவர்களுடைய குடும்ப வாழ்வு அமைதியானதாய்க் காணப்படல் வேண்டும். இந்த உலகில் நபியவர்கள் மேற்கொள்வது பாரியதொரு சமூகப் பணி. அந்தப் பணியை அவர்கள் சிறந்த முறையில் மேற்கொள்ள அவர்களது குடும்ப வாழ்வு அமைதி நிறைந்ததாய் இருக்க வேண்டும். இல்லாத போது சமூக வழிகாட்டலில் தவறிழைக்க வாய்ப்பிருக்கிறது.

நபியவர்களின் இந்தப் பாத்திரத்தைத்தான் இன்று அதிகமான தாஇக்கள் வகிக்கிறார்கள். தாஇக்கள் மாத்திரமன்றி ஒவ்வொரு ஆண்மகனினதும் நிலை இதுதான். ஏதோ ஒரு வகையில் அவன் ஒரு சமூகப் பொறுப்பை மேற்கொள்கின்றவனாகவே காணப்படுகிறான்.

மனைவிமார்களே! தஃவா ஒரு கடமை. உங்கள் கணவன்மார் அதனை மிகச் சரியாக மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?   தஃவாவில் அவர்களது தீர்மானங்கள் மிகச் சரியாக அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?   உங்கள் கணவரை சாதனையாளராகப் பார்க்க ஆசைப்படுகிறீர்களா?   வீடு அவர்களுக்கு அமைதியளிக்கும் இடமாக இருக்கட்டும். அல்குர்ஆன் குறிப்பிடுவது போல் மனைவியும் பிள்ளைகளும் கண் குளிர்ச்சியை வழங்கட்டும்.

மனைவிமார்களே! ஒரு விடயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் படைப்பியல்பில் வீட்டைப் பற்றிய ஆணுடைய பார்வை என்ன தெரியுமா?   வீடு என்பது அவன்,  ஓய்வெடுப்பதற்குரிய இடம் என்பதுவே ஆணுடைய மனோநிலை. வீடு ஒரு கடமை என்ற மனநிலை பெண்களுக்கு உரியது. அதனால் வீட்டுக்கு வந்தவுடனேயே எல்லாக் கடமைகளையும் இயந்திரம் போல் ஆண்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். வீட்டுக்கு வந்தவுடனேயே அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டாம். அவர்கள் ஆசுவாசுமாய் அமர சந்தர்ப்பம் அளியுங்கள். அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளியுங்கள்.

ஆண்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று கூறவில்லை. ஆனால் அது கட்டளையாகவோ நச்சரிப்பாகவோ அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நபியவர்கள் மனைவிமார் பற்றி கூறிய ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். “இவ்வுலகில் ஒரு மனிதருக்குக் கிடைக்கும் மிகவும் பிரயோசமான சொத்து ஸாலிஹான மனைவியாகும். ஸாலிஹான மனைவி என்பவள்,  அவளைக் காண்கின்ற போதே சந்தோஷம் ஏற்படும். கணவன் இல்லாத சமயங்களில் தனது கற்பையும் கணவனது செல்வத்தையும் பாதுகாப்பாள்”.

இங்கு மனைவியின் நளினம்,  கரிசனை,  ஒழுக்கம்,  முகாமைத்துவத்திறன் போன்ற விடயங்கள் ஸாலிஹான மனைவி என்பதற்கான அடையாளங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. மொழி ரீதியாக ‘ஸாலிஹ்’ என்பதன் கருத்து பொறுத்தமானது,  உகந்தது என்பதாகும். எனவே,  குடும்ப வாழ்வுக்குப் பொறுத்தமான மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையே மேற்சொன்ன ஹதீஸில் நபியவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இங்கு மிக முக்கிய விடயம் என்னவெனில்,  கணவன் தனது சமூகப் பணியின் களைப்புகள்,  கவலைகள் அனைத்தையும் தனது மனைவியைப் பார்த்தவுடனே மறந்து போய்விட வேண்டும். அத்தகைய ஓர் ஆறுதலாய் அவள் காணப்பட வேண்டும். அவளது நளினம்,  கரிசனை,  புன்னகை,  ஆதரவு இவை ஒரு கணவனை அமைதிப்படுத்தக் கூடியவை. சந்தோஷப்படுத்தக் கூடியவை.

மனைவிமார்களே! வீட்டுக்கு வரும் கணவனின் மனஅமைதிக்கு உத்தரவாதமளிக்கும் நான்கு விடயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். என்றைக்கும் இவற்றை மறந்து விடாதீர்கள்.

1.            கணவனுக்கு பசி ஏற்படுகின்ற போது உணவு தயாராக இருக்க வேண்டும். உணவின் சுவையும் பன்முகப்பட்ட தன்மையும் கூட இங்கு முக்கியமானதுதான். ஏதோ ஒன்றை வைத்து சமாளித்துக் கொள்ளும் அணுகுமுறையை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2.            கணவனுக்கு தூக்கம் வருகின்ற போது அவனது படுக்கை தயாராக இருக்க வேண்டும். அது ஒழுங்கீனமாகவோ அல்லது வேறு பொருட்கள் வைக்கப்பட்டோ இருந்து விடக் கூடாது.

3.            கணவன் வீட்டுக்கு வரும் வேலையில் வீடு ஒழுங்கின்றி அலங்கோலமாகக் காட்சி தரக்கூடாது. பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களும் புத்தகங்களும் வாசலில் சிதறியிருந்து விடக்கூடாது. கதிரைகளிலும் மேசைகளிலும் ஆடைகளும்,  பத்திரிகைகளும் ஆங்காங்கு போடப்பட்டிருக்கக் கூடாது. இவற்றை கணவனது வருகைக்கு முன்னர் முடிந்தளவு சீர்செய்து விடுங்கள். அழகும் நேர்த்தியும் சுத்தமும் எப்பொழுதும் மனதுக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் தரக்கூடியது.

4.            கணவனது உடலுறவுத் தேவை மறுதலிக்கப்படக் கூடாது. பல சமயங்களில் கணவன் சூசகமாகவே இத்தேவையை உணர்த்துவான். கணவனது சமிக்ஞையை புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உங்களிடம் வேண்டும். புரிந்து கொண்டாலும் புரியாதது போல் ஒரு போதும் நடிக்காதீர்கள். மலக்குமார்களின் சாபத்துக்குரிய ஒரு செயல் அது.

கணவன்மார்களே! உங்களுடனும் சில வார்த்தைகள் பேச வேண்டும். உங்களைப் போலவே உங்கள் மனைவிக்கும் தஃவாக் கடமைகள் இருக்கின்றன. சில சமயங்களில் தஃவாக் கடமைகளுடன் தொழில் செய்கின்ற மனைவியாய் இருக்கும் பொழுது கணவன் புறத்திலிருந்து பல விட்டுக் கொடுப்புகள் அவசியப்படுகின்றன.

கணவன்மார்களே! உங்களுக்கு ஆறு உபதேசங்களைச் சொல்கிறேன். இவற்றைக் கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவீர்கள்:

1.            குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குங்கள். ஸுறதுல் ஹுஜராத்தில் நபியவர்கள் வீட்டில் இருக்கும் போது,  வெளியில் இருந்து சப்தமிட்டு அவரை அழைக்கக் கூடாது என்றும்,  அவர் வெளியில் வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என்றும் அல்-குர்ஆன் கூறுகிறது. அவ்வாறு செய்யும் நாட்டுப்புற அறபிகளை கண்டிக்கவும் செய்கிறது.

 இது ஏன்? ஒரு கோணத்தில் இது தலைமையுடனான கௌரவம். மற்றோர் கோணத்தில் தலைமை தனது குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும் என்பதையும் குறித்து நிற்கிறது. எனவே,  நபியவர்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்தப் பண்பாடு எமது தாஇக்களிடமும் அவசியப்படுகிறது. மாத்திரமன்றி அவர் அவ்வாறு நேரம் ஒதுக்குவதற்கான வாய்ப்பை அங்கத்தவர்கள் வழங்கவும் வேண்டும்.

2.            தஃவா சார் ஒரு கடமைக்காக வெளிச் செல்லும் போது மனைவியிடம் தெளிவாகச் சொல்லி விட்டுச் செல்லுங்கள். எங்கே செல்கிறீர்கள்?   எதற்காகச் செல்கிறீர்கள்?   நான் அங்கே செல்வதால் மனைவிக்கு என்ன நன்மை இருக்கிறது?   போன்ற விடயங்களை தெளிவாகப் பேசுங்கள். எந்தத் தகவலும் சொல்லாமல் போகாதீர்கள். இதுதான் நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும்.

மூஸா (அலை) அவர்கள் தனது மனைவியை அழைத்துக் கொண்டு வரும் வழியில் இடையில் ஒரு வெளிச்சத்தைக் கண்டபோது, மனைவியைப் பார்த்து இங்கே இருங்கள். நான் அங்கே போகிறேன். சிலவேளை தீப்பந்தம் ஒன்று கிடைக்கலாம் அல்லது எங்கு செல்ல வேண்டும் என்று ஏதாவது வழி கிடைக்கலாம் என்று சொல்லி விட்டுத்தான் சென்றார்கள். தஃவாக் கடமைகளை மனைவியிடம் மறைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.

3.            மனைவியின் வீட்டுக் கடமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். பல சமயங்களில் கணவன்மாருக்கு வீட்டில் மனைவிக்கு என்னவகையான பணிகள் இருக்கின்றன என்பது தெரியாது. ஒரு நாளில் வீட்டில் மனைவியுடனிருந்து வீட்டில் மனைவி செய்யும் வேலைகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள். மலைத்துப் போவீர்கள்.

 இவற்றிற்கு அப்பால்தான் அவர்கள் தமது தொழில்சார் கடமைகளையும்,  தஃவாசார் கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். மனைவியின் சுமையைப் புரிந்து கொள்ளுங்கள். இயல்பாய் அவள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும்.

4.            வீட்டுக் கடமைகளில் மனைவிக்கு உதவி செய்யுங்கள். நபியவர்களின் முன்மாதிரிகளில் இது முக்கியமான ஒன்று. மாத்திரமல்ல,  உங்கள் இருவருக்குமிடையிலான புரிந்துணர்வு,  நெருக்கம்,  அன்பு,  அந்நியோன்னியம் போன்ற அனைத்திற்கும் இது காரணமாக அமையும். அவ்வப்போதேனும் ஒரு வேலை சமையலை நீங்கள் செய்து பாருங்கள். அப்போது உங்கள் மனைவியின் முகத்தில் தோன்றும் பூரிப்பைக் காணக் கண் கோடி தேவைப்படும்.

5.            முடிந்தவரை உங்கள் தேவைகளை நீங்களே செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நபியவர்கள் தன்னுடைய வேலையைத் தானே செய்து கொள்வார்கள். தனது ஆடைகள்,  பாதணி போன்றவற்றை தானே திருத்திக் கொள்வார்கள். கணவன்மார்களே,  உங்களாலும் இது முடியும். முடிந்தவரை மனைவியின் மீதான பாரத்தை இறக்கி வைக்க முயலுங்கள்.

6.            உங்களுக்குரிய சில உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருங்கள். “அவர்களுக்கு உங்கள் மீதுள்ள கடமைகள் போல் உங்கள் மீதும் அவர்களுக்கான கடமைகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு ஒரு அந்தஸ்து இருக்கிறது” (பகரா 228)  

இந்த வசனத்தில் ஆண்களுக்கான அந்தஸ்து என்ன என்று விளக்கும் போது சில தப்ஸீர் ஆசிரியர்கள் கூறுவார்கள் கணவன் தனக்குரிய உரிமைகளில் ஒன்றையோ பலதையோ விட்டுக் கொடுத்தலே அவனுக்குரிய சிறப்பாகும் என்றார்கள்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் எனது மனைவியிடம் எனக்குக் கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளையும் நான் எடுத்துக் கொள்ள நினைப்பதில்லை என்றார்கள்.

இறுதியாக மனைவிமார்களே,  அறிந்து கொள்ளுங்கள். உங்களது சுவர்க்கமும் நரகமும் உங்கள் கணவன்தான். கணவன்மார்களே,  அறிந்து கொள்ளுங்கள் உங்களில் சிறந்த மனிதர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவர்தான்.


அல்லாஹ் எங்களை அங்கீகரிப்பானாக!.

Tuesday, February 3, 2015

இலங்கையின் 67வது சுதந்திர தின செய்தி

  கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் எகிப்திய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி ஒரு கருத்தை இவ்வாறு கூறுகிறார்கள் : சிவில் தேசம் என்ற எண்ணக்கருவில் இரண்டு கோட்பாடுகள் மிகவும் முக்கியமானவை,  ஒன்று : இராணுவத்தின் மேலாண்மை இல்லாத அல்லது இராணுவப் பண்பில்லாத மக்களாட்சியாய் அது காணப்படல் வேண்டும்.  இது இராணுவத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல,  மாற்றமாக இராணுவம் தனக்குரிய பணியை மேற்கொள்ளும் வகையில் அதற்குரிய இடத்தில் காணப்படவேண்டும். 

இரண்டாவது : சட்டத்தின் ஆட்சி,  இது மக்களது சுதந்திரம் உரிமைகள் போன்றன உத்தரவாதப்படுத்தப்படும் நிலையும்,  இன மத மொழி வேறுபாடுகளைத் தாண்டிய சமத்துவமும் நீதியும் நிலைநாட்டப்படும் நிலையுமாகும்,  என்றார்கள்.

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் இஸ்லாம் வலியுறுத்துகின்ற உண்மைகள்  என்பதில் எவரும் இரு கருத்து கொள்ள மாட்டார்கள்.  அதிகாரம் என்பதையோ அல்லது தலைமை என்பதையோ இஸ்லாம்,  குறித்த ஒரு பிரிவினர்க்கான சொத்தாக அமைக்கவில்லை,  அல்லது நுபுவ்வத் போல் இறை அதிகாரம் உள்ள ஒருவரால் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதற்குரிய ஒன்றாகவும் போதிக்கவில்லை,  மாற்றமாக மக்கள் மத்தியில் சுதந்திரமாக விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெற வேண்டிய ஒரு பரிமாற்றமாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது. 

அந்தவகையில் மக்கள்,  தலைமைக்கு கட்டுப்படுவதை வலியுறுத்திய அதே அளவுக்கு தலைமை,  மக்கள் விருப்பத்தை வென்றிருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதுடன், அடிமைப்படுத்தலையும் கொடுங்கோன்மையையும் வன்மையாக மறுத்துரைத்தது. நபியவர்கள் மூன்று பேருடைய தொழுகை அவர்களது செவிப்புல எல்லையைத் தாண்ட மாட்டாது என்றார்கள் அதில் ஒருவர் மக்கள் வெறுக்கின்ற நிலையிலும் அந்த மக்களுக்கு தலைமை வழங்க நினைக்கின்றவன்,  என்றார்கள். ( திர்மிதி)

அத்துடன் தலைமைக்குரிய சிறப்புரிமைகளை இஸ்லாம் மறுத்துரைக்கவில்லை.  ஆனால் அது பிறர் உரிமைகளை மறுப்பதாகவும் பிறர் சுதந்திரங்களைப் பறிப்பதாகவும் அமைந்துவிடக் கூடாது. பாத்திமாதான் திருடியிருந்தாலும் அவரது கை வெட்டப்படும் என்று நபியவர்கள் கூறியமை சட்டம் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்குரியது,  மாற்றமாக தலைமைகளையும் அவர்களது நடவடிக்கைகளையும்,  அவை அநீதியாக அமையும் போதும்,  நியாயப்படுத்திப்  பாதுகாப்பதற்குரியதல்ல என்ற செய்தியையே எமக்குச் சொல்கின்றது.

எமது தாயக இலங்கையும் கிட்டிய இறந்த காலத்தில் மேலே பேசப்பட்டவற்றை ஒத்த ஒரு நிலையையே முக்கிய சவாலாக எதிர்கொண்டது. இராணுவச் சாயல் கொண்ட ஏதேச்சதிகாரமும், மக்கள் உரிமைகளும் சுதந்திரமும் சமத்துவமும் மறுக்கப்பட்ட,  சட்டங்கள் செல்லுபடியற்ற ஒரு நிலையும் எல்லோராலும் உணரப்பட்டன. அல்லாஹ்வின் அருளினால் அந்நிலைகள் மாற்றம் காணத்தொடங்கியுள்ளன, அல்ஹம்துலில்லாஹ்.

பொதுவாக நியாயத்தை விரும்பும் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் மேற்குறித்த சூழ்நிலைகள் மாறவேண்டிச் செயற்படுவார்கள். கடந்த நாட்களில் எமது நாட்டில் நிகழ்ந்ததும் இதுதான். 

ஆனால் இங்கு முஸ்லிம்கள் மனம் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நீதி சுதந்திரம் சமத்துவம் போன்றன வெறுமனே அவர்களது வாழ்வியல் பெறுமானம் அல்லது அரசியல் பெறுமானம் என்பது மாத்திரமல்ல,  மாற்றமாக இது அவர்களது  தீன். அவர்களது அகீதாவின் மீது எழும் ஒரு நடத்தைக் கோலம். இவற்றுக்காக உழைப்பது அவர்களது மார்க்க ரீதியான கடமை.  தாம் வாழும் பூமி எதுவாக இருப்பினும் இந்த நடத்தைக்  கோலமும் இதற்கான உழைப்பும் என்றும் மாற்றமடையாது. 

எனவே அவர்கள் மீது உள்ள வகை கூறல் தாம் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதனால் மாத்திரமன்றி அவர்களது அகீதாவின்; அடிப்படையிலும் வலுப்படுத்தப்படுகிறது,  எனவே முஸ்லிம்களது பொறுப்பு சற்றுக் கனதியானது.


எனவே முஸ்லிம்கள் இந்தப் பாரத்தை உணர்ந்து,  எல்லாத் தளங்களிலும் நல்லாட்சி ஏற்படுவதற்காய் உழைக்க முன்வரவேண்டும் என்பதை இலங்கையின் 67வது சுதந்திர தின செய்தியாய் உங்கள் முன்வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

Sunday, December 28, 2014

நபியவர்களது வாழ்வை மூலாதாரமாகப் புரிந்து கொள்ளுதல்

நபியவர்களது வாழ்வைக் குறிக்கும் சுன்னா என்ற சொற்பிரயோகம் இமாம்களது பரிபாஷையில் மூன்று கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றன.

1.            சுன்னா என்பது மன்தூப் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. மன்தூப் என்பது ஷரீஅத் சட்ட முடிவு ஒன்றின் தராதரத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். அதாவது வாஜிப் என்றால் கட்டாயமானது என்று பொருள்படும். மன்தூப் என்றால் கட்டாயமானதல்ல. ஆனால் செய்தால் நன்மைகள் கிடைக்கும். செய்யாத போதும் குற்றிமில்லை. இது சுன்னா என்பதன் முதல் கருத்தாகும். இக்கருத்தில் புகஹாக்கள் எனப்படும் சட்டத்துறை அறிஞர்களே அதிகம் பயன்படுத்தினர்.

2.            சுன்னா என்பது சட்ட மூலாதாரம் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு செயற்பாட்டினதும் சட்டபூர்வத் தன்மையை உரசிப் பார்ப்பதற்குரிய ஒன்று என்பது மூலாதாரம் என்பதன் பொருளாகும். அல்குர்ஆன் முதலாவது சட்ட மூலாதாரம். சுன்னா இரண்டாவது சட்ட மூலாதாரம். சுன்னா என்ற பிரயோகத்தை இந்த இரண்டாவது கருத்தில் உஸுலிய்யூன் எனப்படும் சட்ட அடிப்படை சார் அறிஞர்களே அதிகம் பயன்படுத்தினர். இந்த இரண்டாவது கருத்தையே இன்றைய கட்டுரையில் நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

3.            சுன்னா என்பது ஷரீஆ என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பித்அத் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விடயம் ஷரீஅத்தில் அல்லது இஸ்லாத்தில் உள்ளது என்று கூறுவதற்கு சுன்னா என்றும் இஸ்லாத்தில் இல்லாதது என்று கூறுவதற்கு பித்அத் என்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரயோகம் அதிகமாக ‘வுஃஆல்’ எனப்படும் உபதேசகர்கள், பொதுப் பேச்சாளர்களிடத்தில் காணப்பட்டது.

சுன்னா என்ற பதம் கையாளப்பட்ட மூன்று வேறுபட்ட பரிமாணங்களையே மேலே பேசப்பட்ட விடயங்கள் குறித்து நிற்கின்றன. சுன்னா பற்றிய இந்த வேறுபட்ட பரிமாணங்களைப் புரிந்து கொள்ளுதல் பல சமயங்களில் சமூகத்தில் மாறுபட்ட அபிப்பிராயங்களை சீரணித்துச் செல்வதற்கு உதவியாக அமைய முடியும்.

அத்துடன் இங்கு நபியவர்களது வாழ்வு என்ற கருத்து இரண்டாவது பரிமாணத்திலேயே பிரதிபளிக்கின்றது. முதலாவது பரிமாணம் குறித்த ஒரு சட்டத்தரத்தை மாத்திரம் பேசுகிறது. மூன்றாவது பரிமாணம் நபியவர்களது வாழ்வை மாத்திரமன்றி அல்குர்ஆனையும் உள்ளடக்கியிருக்கிறது.

இனி இந்த இரண்டாம் பரிமாணம் குறித்த விளக்கத்திற்கு வருவோம். நபியவர்களது வாழ்வு ஒரு சட்ட மூலாதாரம் என்பதில் பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அவரது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் சட்ட மூலாதாரமாகக் கொள்ளுதல் என்பதைப் பொறுத்தவரையில் வேறுபட்ட பார்வைகள் இருக்கின்றன.

இதில் இரண்டு விடயங்கள் குறித்து சற்று பார்வையைச் செலுத்துவது பொறுத்தம் என்று நினைக்கிறேன்.

1.            நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சட்டமாக அமையுமா? மாட்டாதா?

2.            நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நேரடியாக அந்த அம்சமே சட்டமாக அமையுமா? அல்லது அதன் நோக்கங்கள் காரணங்கள் போன்றனவும் சட்டமாக அமையுமா?

இதில் முதலாவது பகுதியை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு நபியவர்களது வாழ்வு என்பதன் மூலம் நாடப்படும் கருத்தையும் சற்று விளங்கிக் கொள்வது அவசியமாகும். 
அதனை மிக எளிமையாகக் கூறினால், நபியவர்களது வாழ்வு எனும் போது அவர்களது வார்த்தைகள், செயற்பாடுகள், அவர்கள் வழங்கிய அங்கீகாரங்கள் போன்றன மிகப் பிரதானமாக உள்ளடங்குகின்றன. நபியவர்களது வாழ்வில் ஸஹாபாக்களது நடவடிக்கைகள் உள்ளடங்குவதில்லை.

இன்று நாம் வாழும் சமூக வாழ்க்கைக்கான மூலாதாரமாக நபியவர்கள் எனும் தனிமனிதனின் வாழ்வை மாத்திரமே நாம் எடுத்துக் கொள்கிறோம். மாற்றமாக, ஸஹாபாக்களின் நடவடிக்கைகளையும் சேர்த்து நாம் சுன்னா என்ற கருத்தில் மூலாதாரமாகக் கருதுவதில்லை. ஸஹாபாக்களது வாழ்வு மூலாதாரமாகக் கருதப்படுமா? என்பது ஒரு தனியான விவாதம் அதனைப் பற்றி இங்கு நான்  பேசவில்லை, மாற்றமாக மூலாதாரம் என்ற கருத்தில் நபியவர்களது சுன்னாவில் ஸஹாபாக்களது நடவடிக்கைகள் உள்ளடங்க மாட்டாது என்பதையே குறித்துக் காட்ட விரும்புகிறேன்.

அந்தவகையில் ஒரு தனிமனிதனின் வாழ்வை சமூக வாழ்வொன்றில் நாம் எவ்வாறு பிரயோகிக்கப் போகின்றோம்? என்பதுவே இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு விடை காணும் முயற்சியை ஆரம்ப கால இமாம்கள் முதல் நவீன கால ஆய்வாளர்கள் வரையில் பலர் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் வகித்த சமூகப் பாத்திரங்கள் குறித்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இமாம் கராபி அவர்கள் தனது கிதாபுல் புரூக் எனும் நூலில் நபியவர்கள் ‘முபல்லிக்’ எனும் அல்லாஹ்விடமிருந்து வஹியை அறிவிப்பவர் என்ற பாத்திரத்தை மாத்திரம் வகிக்கவில்லை. மாற்றமாக அவர்கள் ‘இமாம்’ எனும் தேசத்தின் தலைவர் ‘காழி’ எனும் நீதிபதி,  ‘முப்தி’ எனும் பத்வா வழங்குனர் போன்ற பல்வேறு பாத்திரங்களை சமகாலத்தில் வகித்திருக்கிறார்கள். 

ஒரு சமூக வாழ்வில் காணப்பட முடியுமான எல்லா வகைப் பாத்திரங்களும் நபியவர்களுக்கு இருந்திருக்கிறது. மாத்திரமன்றி,  அந்த ஒவ்வொரு பாத்திரத்தினதும் உயர்ந்த தரத்தையே நபியவர்களது வாழ்வு பிரதிபளித்துமிருக்கின்றது என்று விளங்கப்படுத்தியிருக்கிறார்.
நபியவர்களது மேற்சொன்ன பாத்திரப் பரப்புகளில் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியை அறிவிப்பவர் என்ற வகையில் பேசிய வார்த்தைகள்,  மேற்கொண்ட நடவடிக்கைகள்,  வழங்கிய அங்கீகாரங்கள் என்பன எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது சட்டங்களாகக் காணப்படும். இவை பொதுவாக அல்குர்ஆனுக்கு நபியவர்கள் வழங்கிய விளக்கங்கள்,  நம்பிக்கைகள்,  வணக்க வழிபாடுகள்,  ஒழுக்கப் பண்பாடுகள்,  ஹலால்-ஹராம் தொடர்பானவை போன்ற பரப்புக்களை உள்ளடக்கியிருக்கும்.

இவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைபிடிப்பது கடமையாகும். மறுமை வரையில் அமுலில் இருக்கக்கூடிய பொது சட்டங்களாக இவை கருதப்படும். இவற்றை எவரேனும் தவிர்ந்து கொள்வதாக இருப்பின் இவை பற்றி வந்துள்ள ஹதீஸ்களின் நம்பகத்தன்மையில் ஒரு மாறுபடட கருத்து இருக்கின்ற போது மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும்.

அதுபோல் நபியவர்கள் ஆட்சித் தலைவர் என்ற வகையிலோ அல்லது நீதிபதி என்ற வகையிலோ பேசிய அல்லது செயற்பட்ட அல்லது அங்கீகாரம் வழங்கிய விடயங்களைப் பொறுத்தவரையில் அவை எல்லா மனிதர்களுக்குமான பொது சட்டங்களாகக் கருதப்பட மாட்டாது. மாற்றமாக அத்தகைய ஒரு சட்டத்தை ஒரு ஆட்சித் தலைவரோ அல்லது ஒரு நீதிபதியோ மாத்திரமே முன்வைக்க முடியும். உதாரணமாக ஒரு தடவை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் “ஒரு தரிசு நிலத்தை எவர் பண்படுத்துகிறாரோ அந்த நிலம் அவருக்கே சொந்தமானதாகும்” (அபூதாவூத்).

நபியவர்களின் இந்த வார்தைகளை அவர் வஹி அறிவிப்பவர் என்ற அடிப்படையில் நின்று நோக்கினால் எந்தவொரு மனிதனும் பிறர்க்கு சொந்தமில்லாத ஒரு பொது நிலத்தைப் பயன்படுத்த முடியும். அப்போது அதன் உரிமையாளராக அவர் கருதப்படுவார். அரசாங்கமோ அல்லது வேறு எவரும் இதனைத் தடை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு செயற்பட முடியும் என்ற கருத்தையே பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த விளக்கம் நிச்சயமாக ஒரு சமூக ஒழுங்குக்குப் பொறுத்தமானதல்ல. அதனால் இமாம் அபூஹனீபா அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் போது,  நபியவர்கள் இக்கருத்தை பொதுச் சட்டமாக முன்வைக்கவில்லை. மாற்றமாக அவர் ஒரு ஆட்சித் தலைவர் என்ற அடிப்படையிலே இதனை முன்வைத்திருக்கிறார். எனவே,  இது போன்ற ஒரு முடிவை ஆட்சித் தலைவர் ஒருவர் மாத்திரமே பெற முடியும். அந்தவகையில் ஒரு தரிசு நிலம் எவ்வாறு கையாளப்பட வேண்டும்? என்பது பற்றிய சட்டத்தை அந்தந்த சூழலுக்கு ஏற்ப ஒரு அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே,  மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடியாக நாம் விளங்கிக் கொள்வது என்னவெனின்,  நபியவர்களது வாழ்வின் சில பகுதிகள் எல்லா மனிதர்களுக்குமான பொதுச் சட்டங்களாக அமையும், அதேவேளை மற்றும் சில பகுதிகள் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கான அல்லது சில சமூக அலகுகளுக்கான சட்டங்களாக மாத்திரம் அமைகின்றன. 

அந்தவகையில் நபியவர்களது வாழ்வை நாம் ஒரு சட்ட மூலாதாரமாக நோக்கும்போது,  அவர்களது வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் எல்லோருக்கும் உரியவை என்ற பொது நோக்கிலன்றி, நபியவர்கள் என்ற தனிமனிதன் வகித்த பல்வேறு சமூகப் பாத்திரங்களுக்கு ஏற்ப அந்தந்த பாத்திரப் பரப்புகளிலேயே எமது சமூக வாழ்வில் அவை மூலாதாரமாக மாறுகின்றன என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும். 

உண்மையில் இந்தப் பகுதி மிகவும் விரிவான ஓர் ஆய்வுப் பரப்பாகும்,  அதன் ஒரு சில துளிகளை தொட்டுக்காட்டுவது மாத்திரமே எனது முயற்சியாகும்.

இனி இரண்டாவது பகுதிக்கு வருவோம். நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் அந்த நேரடி நிகழ்வுகளே,  எமக்கு சட்டங்களாக அமையுமா? அல்லது அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் எமக்கு சட்டங்களாக மாறுமா? என்ற இந்த விடயத்தைப் பொறுத்தவரை முதலாவது பேசிய கருத்துடனும் நெருங்கிய சம்பந்தம் உள்ள ஒரு பகுதியாகும்.

கீழ்வரும் ஹதீஸின் மூலம் இக்கருத்தை சற்று விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

“நபியவர்கள் மதீனா வந்த பொழுது ஸஹாபாக்கள் பேரீத்தம் மரத்தில் மகரந்தச் சேர்க்கை செய்வதைப் பார்த்து அதனைத் தடை செய்தார்கள். அவ்வருடம் விளைச்சல் குறைந்தபோது மகரந்தச் சேர்க்கை தடை செய்யப்பட்டமையே காரணம் எனக் குறிப்பிட்டார்கள். அதற்கு நபியவர்கள் அது உங்களுக்குப் பயனளிக்கும் எனின் செய்யுங்கள் அவ்வாறு செய்வது நல்லதில்லை என்று நான் கருதினேன். அவ்வளவுதான்,  எனது எண்ணம் தவறாக இருக்கலாம். ஆனால் நான் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதனைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வைப் பற்றி நான் ஒரு போதும் பொய்யுரைக்க மாட்டேன். ஆனால் எனது சொந்தக் கருத்தைக் கூறியிருந்தால் (அதனைப் பின்பற்றுவது அவசியமில்லை) ஏனெனில்,  நானும் ஒரு மனிதன்தான்,  உங்களது உலக விவகாரங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்” (முஸ்லிம்)

இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற மிக முக்கிய விடயம் என்னவெனில் நபியவர்களது வாழ்வில் எமக்கு சட்டமாக அமைகின்ற ஒரு பகுதியும் இருக்கிறது. சட்டமாக அமையாத ஒரு பகுதியும் இருக்கிறது. நபியவர்களே அதனை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் பற்றியும் அவனிடமிருந்தும் நான் சொல்பவையே உங்களுக்கு ஷரீஅத்தாக அமையும். அவ்வாறன்றி நான் ஒரு மனிதன் என்ற நிலையில் முன்வைக்கும்,  எனது சொந்த அபிப்பிராயங்கள் உங்களுக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது என்கிறார்கள்.

மேற்சொன்ன வார்த்தைகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? உண்மையிலேயே நபியவர்களது வாழ்வில் எமக்கு ஷரீஅத்தாக அல்லது சுன்னாவாக அல்லது மூலாதாரமாக அமையாத ஒரு பகுதி இருக்கிறதா?

உண்மையில் ஏற்கனவே குறித்துக் காட்டியது போன்று, நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி அறிவிப்பவர் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள்,  செயற்பாடுகள், அங்கீகாரங்கள் அனைத்துமே நேரடியாக எமக்கு ஷரீஅத்தாக மாறுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நபியவர்கள் தொழுது காட்டியமையும்,  ஹஜ் செய்து காட்டியமையும்,  சாப்பிடும் போது பிஸ்மில் சொன்னமையும் வலது கையால் சாப்பிட்டமையும் அனைத்துமே நேரடியாக அதே செயல்கள் எமக்கு ஷரீஅத்தாக மாறுகின்றன.

ஆனால் நபியவர்கள் ஒரு மனிதர் என்ற வகையில் அவர்களிடமிருந்து புறப்படுகின்ற செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் நேரடியாக அந்த ஒவ்வொரு செயலும் எமக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. மாற்றமாக அந்த செயலை எந்த நோக்கத்திற்காக செய்தாரோ அந்த நோக்கமே எமக்கு ஷரீஅத்தாக மாறுகிறது. 

உதாரணமாக ஏற்கனவே கூறப்பட்ட பேரீத்தம் மரத்தின் மகரந்தச் சேர்க்கைத் தடை விவகாரத்தினை ஸஹாபாக்கள் கூட ஆரம்பத்தில் வஹியின் அடிப்படையிலான கட்டளையாக ஏற்று கைவிட்டார்கள். பின்னர் அதனை நபியவர்கள் அனுமதித்தார்கள். இந்த இடத்தில் மகரந்தச் சேர்க்கை செய்வதும் சரி அல்லது அதனைக் கைவிடுவதும் சரி. இரண்டுமே நேரடியாக எங்களுக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. ஆனால் விவசாய அபிவிருத்திக்காக அல்லது விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள முடியும் அல்லது கையாள வேண்டும் என்பது இங்கு ஷரீஅத்தாக மாறுகிறது. அதாவது புதிய தொழிநுட்பக் கையாள்கை என்பது இஸ்லாமியப் பாரம்பரியத்தில் வலியுறுத்தப்படும் ஒரு அம்சம் என்பதற்கான ஆதாரமாக இந்தச் சம்பவம் காணப்படுகிறது. இங்கு நேரடியாக குறித்த செயல் எமக்கு சட்டமாக அமையவில்லை. மாற்றமாக அந்த செயலின் நோக்கம் சட்டமாக அமைந்தது.

ஷெய்க் மஹ்மூத் ஷல்தூத் அவர்கள்,  நபியவர்கள் ஒரு மனிதர் என்ற ரீதியில் தொழிற்பட்ட நிலைகளை முக்கிய மூன்று பரப்புக்களில் குறிப்பிடுகிறார்கள்.

1.            நபியவர்கள் மனிதத் தேவைகளின் அடிப்படையில் தொழிற்பட்டமை உதாரணமாக சாப்பிடுதல்,  உறங்குதல் போன்றன. இதில் நபியவர்களது விருப்பு வெறுப்புக்களும் உள்ளடங்குகின்றன. உதாரணமாக,  நபியவர்கள் ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியை விரும்பிச் சாப்பிட்டார்கள்.

2.            சமூக வழக்காறு என்ற அடிப்படையில் நபியவர்கள் தொழிற்பட்டமை. உதாரணமாக,  அவர்களது ஆடைமுறைகள்,  அவர்களது மருத்துவம்,  விவசாய முறைகள் போன்றன.

3.            நபியவர்கள் மனித அனுபவத்தின் அடிப்படையில் தொழிற்பட்டமை. உதாரணமாக,  நபியவர்களது யுத்த தந்திரங்கள் போன்றன.

இந்த மூன்று பரப்புக்களையும் பொறுத்தவரையில் இவற்றின் நேரடி செயற்பாடுகள் எமக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. மாற்றமாக அவற்றின் நோக்கங்களே எமக்கு ஷரீஅத்தாக அமையும். 

ஆனாலும் இந்தப் பரப்புகளுக்குள்ளேயும் சில சமயங்களில் சில நேரடி செயற்பாடுகளும் ஷரீஅத்தாக அமைகின்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவை குறிப்பாக வஹியின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற செய்திகளாகவே காணப்படும். அவ்வாறான செயற்பாடுகளை நபியவர்கள் தெளிவான கட்டளையாகவே குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார்கள். உதாரணமாக,  சாப்பிடும் போது பிஸ்மில் கூறுவது,  வலது கையால் சாப்பிடுவது,  உறங்கும் போது துஆ ஓதுவது போன்றன.

இறுதியாக,  இமாம் முகம்மத் தாஹிர் இப்னு ஆஷுர் அவர்கள் நபியவர்களது சுன்னாவை மிகச் சரியாக புரிந்து கொள்வதற்கு நபியவர்களது நடவடிக்கைகள் என்ன வகையான நோக்கங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது என்று வலியுறுத்துவதுடன்,  நபியவர்களது சுன்னா எழுகின்ற பன்னிரண்டு வகையான நோக்கங்களை விரிவாக விளக்குகிறார்கள். 

அந்த ஒவ்வொரு நோக்கத்தையும் விரிவாகப் பேசுவதற்குரிய இடம் இதுவல்ல என்றிருந்தாலும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை என்னவெனில்,  நபியவர்களது வாழ்வு என்பது இன்றைய எமது வளர்ச்சியடைந்த சமூக வாழ்வின் எல்லாப் பாகங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கையாகும். எமது சமூக வாழ்வு துறை வாரியாக வகைப்படுத்தப்பட்டு,  ஒவ்வொரு துறையும் சுயாதீனமாய்த் தொழிற்படுவது போன்ற ஒரு நிலைமையை நபியவர்கள் வாழ்வில் காண்பதரிது. அதனால் அவரது வாழ்வை எமது சமூக வாழ்வில் பிரயோகிக்கும் போது ஒரு விரிந்த பகுப்பாய்வுப் பார்வை எமக்கு அவசியப்படுகிறது. அப்பொழுதுதான் இன்றைய நாளில் சுன்னாவை மிகச் சரியாக அமுல்படுத்தியவர்களாக நாம் மாறுவோம்.


அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.