Wednesday, May 28, 2014

இஸ்ரா, மிஃராஜ் தின செய்தி

இஸ்ரா,  மிஃராஜ் தினங்கள் வருகின்ற பொழுதெல்லாம் கண் முன்னே முதன் முதலில் விரிகின்ற காட்சி எமது மூன்றாவது புனிதத்தளமான மஸ்ஜிதுல் அக்ஸாதான். இன்று யூதர்களின் பிடியில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஹைகல் சுலைமானை இடித்துத் தள்ளிவிட்டு அதன் மீது முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டி விட்டார்கள் என்ற ஒரு வரலாற்றுப் பொய்யின் மீது எழுந்த நியாயங்களை வைத்துக் கொண்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை இடித்துத் தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இமாம் புஹாரி பதிவு செய்துள்ள இந்த ஹதீஸைப் பாருங்கள். அபூதர் அல் கிபாரி (றழி) அவர்கள் நபியவர்களிடம் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே, பூமியில் முதன் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாயல் எது? “அல் மஸ்ஜிதுல் ஹராம்” என்றார்கள். பின்னர் எது? எனக் கேட்டார்கள். “மஸ்ஜிதுல் அக்ஸா” என்றார்கள். இரண்டுக்குமிடையில் எத்தனை வருடங்கள் வித்தியாசம்? என்று கேட்டார்கள். “நாற்பது வருடங்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸின் கருத்துப்படி கஃபதுல்லாஹ் கட்டப்பட்டு,  நாற்பது வருடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டுள்ளது. இதில் கஃபதுல்லாஹ்வை முதன் முதலில் கட்டியவர் யார் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. பொதுவாக இப்றாகீம் (அலை) அவர்கள் அதனைக் கட்டினார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம். ஆனால் முதன் முதலில் அவர்தான் கட்டினாரா? இல்லை. அதுபற்றி மூன்று கருத்துக்கள் உள்ளன. ஒன்று மலக்குகள் கட்டினார்கள். மற்றது ஆதம் (அலை) அவர்கள் கட்டினார்கள். அடுத்தது ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் கட்டினார்.

பின்னர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கஃபா அழிக்கப்பட்டதாகவும் அந்த இடத்தில்தான் இப்றாகீம் (அலை) அவர்கள் அதனை மீளக் கட்டியதாகவும் ஒரு வரலாறு சொல்கிறது.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது கஃபதுல்லாஹ் கட்டப்பட்டு நாற்பது வருடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டது எனின், ஹைகல் சுலைமானின் மீது அது கட்டப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதையே இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.


இதுபோன்று இன்னும் எத்தனையோ பொய்களின் மீது புனிதப் போராட்டம் எனும் பெயரில் யூதர்களின் அராஜகம் பலஸ்தீனத்தின் மீது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அங்கு அநியாயத்திற்கு எதிராக எழுந்து நின்றிருக்கும் மனிதர்களுக்காகவும் எமது பிரார்த்தனைகளில் ஒரு பங்கை ஒதுக்குவோம். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

Friday, May 23, 2014

உழைக்கும் ஆற்றல் கொண்டவன்

காதிருன் அலல் கஸ்ப்

‘காதிருன் அலல் கஸ்ப்’ தனிமனித உருவாக்கப் பண்புகளில் மற்றொரு மிக முக்கியமான பண்பு. வழமை போல் இந்தத் தலைப்பையும் மூன்று முக்கியமான கிளைத் தலைப்புக்களில் அணுகலாம் என்று நினைக்கிறோம்.
1.            ‘கஸ்ப்’ என்பது எதனைக் குறிக்கின்றது?
2.            ‘காதிர்’ என்பது எதனைக் குறிக்கிறது?
3.            தனிமனித உருவாக்கத்தில் காதிர் அலல் கஸ்ப் என்ற பண்பின் முக்கியத்துவம் என்ன?

இன்ஷா அல்லாஹ் இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில்களாகவே இந்த ஆக்கம் அமையப் போகிறது.

‘கஸ்ப்’ என்பது எதனைக் குறிக்கிறது?

முதலில் ‘கஸ்ப்’ என்ற சொல்லுக்குரிய மொழிரீதியான கருத்தைப் பார்க்கும் போது, ‘ஒன்றைப் பெற்றுக் கொள்ளுதல்’ என்ற கருத்தே பொதுவாக வழங்கப்படுவதைக் காணலாம். பெற்றுக் கொள்ளும் விடயம் வேறுபட முடியும். அது அன்பாகவோ,  அறிவாகவோ, ஆற்றலாகவோ, பொருளாகவோ காணப்படலாம். 

இந்த இடத்தில் பொருள் தேடுதல், பொருளைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கஸ்ப் என்ற சொல்லை,  உழைத்தல் அல்லது சம்பாதித்தல் என்று மொழிபெயர்ப்புச் செய்யலாம்.

அடுத்து உழைத்தல் அல்லது சம்பாதித்தல் எனும் போது அங்கு இரண்டு முக்கிய பரிமாணங்கள் காணப்படுகின்றன. முதலாவது ஒருவன் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் உழைத்தல் என்பது. இதனைத்தான் நபியவர்கள் இவ்வாறு வலியுறுத்தினார்கள். “ஒருவன் தானே சம்பாதித்து சாப்பிடும் உணவை விடவும் சிறந்த உணவு இருக்க முடியாது” என்றார்கள் (புகாரி). ஒருவன் பிறரிடத்தில் கையேந்தி நிற்காமல் தனக்காக தானே உழைத்து வாழ்வது மிகவும் சிறப்புக்குரியது என்பது இங்கு பேசப்படுகிறது.

மற்றொரு ஹதீஸை அவதானியுங்கள். “ஒரு தடவை பலமும் சுறுசுறுப்பும் மிக்க ஒரு மனிதனைக் கண்ட போது,  இவன் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்பொழுது நபியவர்கள் இவன் தனது சிறிய பிள்ளைகளுக்காக உழைக்கச் சென்றாலும்,  வயோதிபப் பெற்றோருக்காக உழைக்கச் சென்றாலும்,  தனக்காக உழைக்கச் சென்றாலும் அவன் அல்லாஹ்வின் பாதையிலேயே செயற்படுகிறான். ஆனால் அவன் பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் உழைக்கச் சென்றால் அவன் ஷெய்த்தானின் பாதையில் இருக்கிறான் என்றார்கள்” (தபரானி)

இந்த ஹதீஸ் ஒருவன் தனக்காகவும் குடும்பத்திற்காகவும் உழைத்தலின் சிறப்பை வலியுறுத்துகிறது. இங்கு உழைத்தலை அல்லது சம்பாதித்தலை அல்லாஹ்வின் பாதையில் ஈடுபடுதல் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

இது இரண்டு கருத்துக்களை வலியுறுத்துகிறது. ஒன்று நேரடியாக அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற அல்லது தஃவாவில் ஈடுபடுகின்ற ஒருவன் பெற்றுக் கொள்ளும் நன்மைகளுக்கு சமானமான நன்மைகளை இவனும் பெற்றுக் கொள்வான் என்பது. 

இரண்டாவது , போராட்டம் அல்லது தஃவா என்பது இந்த உலகில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு வழி என்பது போல் உழைத்தல் அல்லது பொருள் சம்பாதித்தல் என்பதும் உலகில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு வழியாகும்.
எனவே,  ஒருவன் தனக்காகவும்,  தனது குடும்பத்தினர்க்காக உழைத்தல் என்பது கஸ்ப் என்ற சொல் குறிக்கும் முதலாவது பொருள்.

அதன் இரண்டாவது பரிமாணம் செல்வ விருத்தியில் ஈடுபடுதல் என்பதாகும். பொதுவாக அபிவிருத்தி என்பது மனித இனத்தின் பிரதான பணிகளுள் ஒன்று என்பது அல்-குர்ஆன் வலியுறுத்தும் ஓர் உண்மை. “அவன் உங்களை பூமியில் இருந்து படைத்து அதனை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறான்” (ஹுத் - 60) என அல்குர்ஆன் கூறுகிறது.

இந்தப் பின்புலத்தில் செல்வ விருத்தி என்பது பொது நலனை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் ஒரு செயற்பாடு என்பதுடன், அது துறைகள், நிலங்கள்,  ஆட்கள் என்ற வரையறைகளைத் தாண்டிய ஒரு செயற்பாடு என்பதையும் புரிந்து கொள்ளலாம். இந்தக் கருத்தை அல்-குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “நீங்கள் விரும்பியவாறு வளைந்து கொடுக்கும் விதத்தில் பூமியை நாம் அமைத்து வைத்துள்ளோம். அதன் எல்லாத் திசைகளிலும் நீங்கள் பரந்து செல்லுங்கள். அல்லாஹ் வைத்துள்ள ரிஸ்க்கை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். அவனிடமே மீண்டு வர வேண்டும்” (முல்க் - 15)

இந்த வசனத்தில் உழைப்புக்குரிய எல்லா வழிகளும் பூமியில் திறக்கப்பட்டுள்ளன என்பதும்,  உழைப்புக்கு நில வரையறை கிடையாது என்பதும்,  துறை வரையறை கிடையாது என்பதும்,  மனித வரையறை கிடையாது என்பதும் மிகத் தெளிவாகப் பேசப் பட்டுள்ளதைக் காணலாம்.
நபியவர்களது இந்த ஹதீஸும் செல்வ விருத்தி எனும் பொதுக் கருத்தை வலியுறுத்துவதைப் பாருங்கள். “ஒரு முஸ்லிம் ஒரு பயிரையோ அல்லது மரத்தையோ நாட்டி,  அதிலிருந்து ஒரு பறவையோ,  மனிதனோ,  மிருகமோ எது சாப்பிட்டாலும்,  அது அவன் ஸதகா செய்த நன்மையைப் பெற்றுத் தரும்” என்றார்கள் (புகாரி).

இதனால்தான் நல்ல ஆரோக்கியமும் வலிமையும் உள்ள ஒருவனுக்கு ஸதகா வழங்கப்படக் கூடாது என ஹதீஸ்கள் கூறுகின்றன. “பணக்காரனுக்கோ, வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவனுக்கோ ஸதகா கொடுப்பது அனுமதிக்கப்பட மாட்டாது” என்றார்கள். (திர்மிதி) மற்றோர் அறிவிப்பில், “உழைக்கும் திறன் உள்ளவனுக்கு ஸதகாவில் பங்கு இல்லை” (அஹ்மத்) என்றார்கள்.

இவர்களுக்கு ஸதகா வழங்கப்படுவது பொறுத்தமற்றது என்பதற்கான மிகப் பிரதானமான காரணம் செல்வ விருத்தி என்பது ஒரு கடமை,  அதிலும் அந்த ஆற்றல் உள்ள ஒருவருக்கு அந்தக் கடமை இன்னும் அழுத்தமடைகிறது. சோம்பலும் முயற்சியின்மையும்,  இஸ்லாம் மனிதர்களில் பயிற்றுவிக்க நினைக்கின்ற ஒரு பண்பல்ல.

இதனாலேயே ஒவ்வாரு நபியும் ஒவ்வொரு துறையில் உழைப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஒரு விவசாயி,  நூஹ் (அலை) அவர்கள் ஒரு தச்சர்,  இத்ரீஸ் (அலை) அவர்கள் ஒரு நெசவுத் தொழிலாளி,  தாவூத் (அலை) அவர்கள் ஒரு கொல்லன்,  மூஸா (அலை) அவர்கள் விலங்கு வேளாண்மையாளர் (ஹாகிம்) நபியவர்களும் கூட விலங்கு வேளாண்மையிலும்,  வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே,  செல்வ விருத்தியில் ஈடுபடுதல் என்பது கஸ்ப் என்ற சொல் குறிக்கும் இரண்டாவது கருத்தாகும்.

‘காதிர்’ என்பது எதனைக் குறிக்கிறது?

‘காதிர்’ என்ற அறபுப்பதம் ஆற்றல் மிக்கவன்,  சக்தியுள்ளவன் என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஆற்றல் அல்லது சக்தி என்பது மூன்று பரிமாணங்களில் விளங்கப்படுத்தப்படுகிறது.
முதலாவது பரிமாணம் நேர்மை,  உண்மை,  ஹராம்-ஹலால் பேணல் போன்ற பெறுமானங்கள் சார்ந்தது. உழைப்பு என்பது இந்தப் பெறுமானங்களை மீறாததாகக் காணப்படல் வேண்டும். ஒருவனது உழைக்கின்ற ஆற்றல் எனும்போது அதில் முதலாவது பரப்பு அவன் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஹராம் - ஹலால் விதிகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

அல்-குர்ஆன் அளவை நிறுவையில் குறைபாடு செய்பவர்களைக் கண்டிக்கிறது. “அளவை நிறுவையில் குறைபாடு செய்வோர்க்கு கேடு உண்டாகட்டும்,  அவர்கள் நிறுத்து வாங்கினால் அதிகமாகப் பெறுவார்கள். கொடுத்தால் குறைவாகவே கொடுப்பார்கள்” (முதப்பிபீன் 1-2)

ஒரு தடவை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். “உண்மையும் நேர்மையும் உள்ள ஒரு வியாபாரி,  மறுமையில் நபிமார்களுடனும் ஷஹீத்களுடனும்,  ஸித்தீகீன்களுடனும் இருப்பான்” என்றார்கள் (திர்மிதி)
நபியவர்கள் கூறினார்கள் “ஹராமான உழைப்பில் வளர்கின்ற உடலுக்கு நரகமே மிகவும் பொறுத்தமான இடமாகும்” என்றார்கள். (புகாரி)

ஹராமான உழைப்பு எந்தவிதமான பயனையும் தர மாட்டாது. நபியவர்கள் கூறினார்கள் “ஒருவன் ஹராமான முறையில் உழைத்து நல்ல வழியில் செலவு செய்தாலும் அது அவனது செல்வத்தில் பரகத்தை ஏற்படுத்த மாட்டாது. அவன் அதிலிருந்து ஸதகா செய்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் விட்டுச் செல்லுகின்ற ஹராமான சொத்து,  அவனை நரகத்திற்கே எடுத்துச் செல்லும். ஒரு தீய செயல் மற்றொரு தீய செயலால் இல்லாது போய் விட மாட்டாது. மாற்றமாக ஒரு நல்ல செயலாலேயே தீய செயல் அழிகிறது. (பைஹகீ)

ஹராமான உழைப்பாளியின் துஆவும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. “நீண்ட தூர பிரயாணத்தின் காரணமாக தலை கலைந்து தூசு படிந்த நிலையில் ஒருவன் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறான். ஆனால் அவனது உணவு ஹராமானது, பாணம் ஹராமானது,  உடை ஹராமானது. அவன் ஹராத்திலேயே வளர்ந்திருக்கிறான். இவனது துஆவுக்கு எப்படி பதில் கிடைக்கும்...?” என நபியவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். (முஸ்லிம்)

எனவே,  உண்மை,  நேர்மை,  ஹலால்-ஹராம் விதிகளைப் பேணி நடத்தல் என்பது உழைக்கும் ஆற்றல் என்பதன் முதலாவது பரப்பு.

அதன் இரண்டாவது பரப்பு அல்லது பரிமாணம் தேர்ச்சி அல்லது நிபுணத்துவம் சார்ந்தது. அதாவது உழைத்தல் என்பது போகிற போக்கில் நடைபெறும் ஒரு விடயமாகவன்றி,  தேர்ச்சியுடனும் நிபுணத்துவத்துடனும் நடைபெறல் வேண்டும். அப்போதுதான் உழைப்பின் நோக்கம் மிகச் சரியாக எட்டப்பட முடியும்,  என்பது போல் குறைந்த முயற்சியில்,  குறைந்த காலத்தில் கூடிய விளைவுகளையும் அடைந்து கொள்ள முடியும்.

அல்-குர்ஆனில் அல்லாஹ்தஆலா தனது பணியை விளங்கப்படுத்தும் பொழுது இவ்வாறு கூறியுள்ளான். “அல்லாஹ்வின் உற்பத்தி,  அவன் அனைத்தையும் நேர்த்தியாக செய்திருக்கிறான்” (நம்ல் - 88) “அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்து படைத்திருக்கின்றான்” (ஸஜ்தா – 7) அல்லாஹ்தஆலா தனது உற்பத்தியின்போது நேர்த்தியையும் அழகையும் கடைபிடித்தமையை பறைசாற்றுவதன் மூலம் மனிதர்கள் தமது உழைப்பின்போது அதே நேர்த்தியையும் அழகையும் கடைபிடிக்க வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

அதுபோல் அல்லாஹ்தஆலாவின் விருப்பமும் இதுதான் என்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். “நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது அதனை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதையே அல்லாஹ்தஆலா விரும்புகிறான்” என்றார்கள் (திர்மிதி)

உமர் (றழி) அவர்களுக்கு ஒரு மனிதனைப்பிடித்து விட்டால்,  அவர் எந்தத் தொழிலில் நிபுணத்துவம் மிக்கவர் என்பதை விசாரிப்பார்கள். அவ்வாறு எதுவும் இல்லை என்று தெரிந்தால் “எனது பார்வையில் அவர் மிகவும் தாழ்ந்து விட்டார்” என்று கூறுவார்கள்.

இன்றைய முகாமைத்துவக் கற்கைகள் வலியுறுத்துகின்ற,  சிறப்புத் தேர்ச்சியும்,  நிபுணத்துவமும்,  விளைவு மையப்பட்ட முகாமையும் போன்ற அனைத்தும்,  ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய அகீதா அவனிடத்தில் எதிர்பார்க்கின்ற பண்புகளாகவே காணப்படுகின்றன. இங்குதான் உழைப்பிலும் அவன் ஒரு முன்னோடியாக தொழிற்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கின்றது.
எனவே, உழைக்கின்ற ஆற்றல் எனும் போது அது நிபுணத்துவத்துடனும் தேர்ச்சியுடனும் நடைபெற வேண்டும் என்பது உழைக்கும் ஆற்றல் என்பதன் இரண்டாவது கருத்தாகும்.

இனி,  உழைக்கும் ஆற்றல் என்பதன் மூன்றாவது பரிமாணத்திற்கு வருவோம். அதுதான் சமநிலை பேணுதல் எனும் பரப்பு. இங்கு சமநிலை என்பதன் பொருள் என்ன?

பொருள் தேடுவதற்கான உழைப்புக்கும் மனிதனது ஏனைய நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பையே இது குறித்து நிற்கின்றது. ஒரு மனிதனது குடும்ப வாழ்வு, ஆன்மீக வாழ்வு,  தஃவா வாழ்வு போன்ற பல்வேறு பகுதிகளுடன் பொருள் தேடும் வாழ்வு எவ்வாறு சம்பந்தப்படுகிறது?

பல சமயங்களில் பொருள் தேடுவதற்காய் குடும்ப வாழ்வு புறக்கணிக்கப்படும் ஒரு நிலை காணப்படுகிறது. பலருடைய குடும்ப வாழ்வு வார இறுதி நாட்களாக மாத்திரம் அல்லது வருடத்தில் சில மாதங்களாக மாத்திரம் காணப்படுவதை அவதானிக்கலாம். அல்லது உழைப்பை மறந்த இபாதத்தையும் இபாதத்தை மறந்த உழைப்பையும் ஒரு புறத்தில் காண்பதுடன்,  மறுபுறத்தில் உழைப்பை மறந்த தஃவாவையும்,  தஃவாவை மறந்த உழைப்பையும் காணலாம்.

இவை போன்ற சமநிலையற்ற நிலைகளைத் தாண்டி ஒவ்வொன்றுக்கும் வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை வழங்குவதே இங்கு சமநிலை எனப்படுகிறது. உழைக்கும் ஆற்றல் எனும் பொழுது அதில் சமநிலை பேணல் என்ற பகுதி மிகவும் முக்கியமானது.

அல்லாஹ்தஆலா அல்குர்ஆனிலே கூறுகிறான். “ஒரு பிரிவினர் பூமியில் பரந்து சென்று,  அல்லாஹ்வின் அருளை தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். மற்றும் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் போராடுகிறார்கள் (முஸ்ஸம்மில் - 20)

இங்கு உழைப்பும் ஜிஹாதும் இணைத்துக் கூறப்படுவதன் மூலம் ஏற்கனவே கூறப்பட்டது போல் உலகில் மார்க்கத்தை நிலை நாட்டுதல் என்பது ஜிஹாதின் மூலம் மாத்திரமன்றி உழைத்தலின் மூலமும் நடைபெறுகிறது என்ற கருத்து தெளிவாகிறது. அத்துடன், சிலர் உழைத்தலில் ஈடுபட மற்றும் சிலர் ஜிஹாதில் ஈடுபடுகிறார்கள். இந்த வழிகாட்டல் சமூகக் கட்டமைப்பில் பேணப்பட வேண்டிய ஒரு முக்கிய சமநிலையைக் கற்றுத் தருகிறது.

அபூபக்ர் (றழி) அவர்கள் ஷாம் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு வியாபாரத்திற்குச் சென்றமை குறித்து உம்மு ஸலமா (றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது நடைபெறுகிறது. நபியவர்களுடன் உடனிருந்து தஃவா வேலைகளில் ஈடுபட வேண்டியதன் அவசியம்,  ஆர்வம் இவை எல்லாம் உள்ள நிலையிலேயே அவரது வியாபரரப் பயணம் நிகழ்ந்திருக்கிறது. அத்துடன் அவரைப் போக வேண்டாம் என நபியவர்களும் தடுக்கவில்லை.

உமர் (றழி) அவர்கள் தனது அயலவர் ஒருவருடன் தொழிலையும், நபியவர்களது மஜ்லிஸ்களில் கலந்து கொள்வதையும் பங்கு போட்டுச் செயற்பட்டமையும் தஃவாவையும் உழைப்பையும் ஸஹாபாக்கள் ஒன்றை ஒன்று மீறாத வகையில் அழகான முறையில் சமநிலைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஒரு சூபித்துவ அறிஞரான ஷெய்க் ஷஃரானி என்பவர் கூறுகிறார், இபாதத்தில் ஈடுபடுபவர்களை விடவும் உற்பத்தியில் ஈடுபடுவோர் சிறந்தவர்கள். ஏனெனில்,  இபாதத்தின் பயனை அவர்கள் மாத்திரமே அடைந்து கொள்வர். ஆனால் உற்பத்தியின் பயன் எல்லா மக்களையும் சென்றடையும். ஒரு நெசவுத் தொழிலாளி தனது ஊசியை தஸ்பீஹ் செய்வதற்கான கருவியாய்ப் பயன்படுத்தட்டும். ஒரு தச்சன் தனது வாளை தஸ்பீஹுக்கான கருவியாய் பயன்படுத்தட்டும் என்றார். (முஷ்கிலதுல் பக்ர் - கர்ளாவி)

இந்தக் கூற்று உழைத்தலின் சிறப்பை வலியுறுத்துவது போல் இபாதத்தையும் உழைப்பையும் எவ்வாறு இணைத்து மேற்கொள்ள முடியும் என்பதையும் விளக்குகிறது.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் எனும் தாபிஈ இடம் ஒருவர் வந்து நீங்கள் எமக்கு பற்றற்ற வாழ்வைப் போதித்து விட்டு நீங்கள் மட்டும் குராஸானிலிருந்து மக்காவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறீர்களே எனக் கேட்டார். அதற்கு அவர்கள் நான் உயிர் வாழவும், மானத்துடன் வாழவும்,  எனது ரப்பை மிகச் சரியாக வணங்கவுமே இதனைச் செய்கிறேன். அல்லாஹ்வுக்குரிய ஒரு கடமையை எப்பொழுதும் நான் விரைந்து மேற்கொள்வேன் என்றார்கள்.

மேலே பேசப்பட்ட எல்லா ஆதாரங்களும் எங்களுக்குச் சொல்லும் பாடம் இதுதான். உழைப்பும்,  தஃவாவும், இபாதத்தும்,  குடும்பமும் இன்னும் உள்ள எந்தப் பணியாக இருப்பினும் இவை ஒன்றை ஒன்று முரண்பட்டவையல்ல. இவை அனைத்தும் மனிதனிடம் எதிர்பார்க்கப்படும் கடமைகளே. இவற்றிற்கு மத்தியில் ஒன்றை ஒன்று மீறாத வகையில் ஒவ்வொன்றிற்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கி செயற்படல் வேண்டும் என்பது உழைக்கும் ஆற்றல் என்பதன் மூன்றாவது பொருளாகும்.

தனிமனித உருவாக்கத்தில் ‘காதிர் அலல் கஸ்ப்’ என்பதன் முக்கியத்துவம் என்ன?

இஸ்லாமிய தஃவாவில் உருவாக்கப்படும் தனிமனிதர்கள்,  சுயமாக உழைத்து செல்வ விருத்தியில் ஈடுபடும் ஆற்றல் கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும் என்பது உருவாக்கப் பரப்பில் முக்கிய ஒரு அம்சமாகும்.

 இந்த முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?

1.            இஸ்லாத்தின் பார்வையில் உழைப்பு என்பது ஒரு கடமை. அதிலும் குறிப்பாக ஒரு ஆணைப் பொறுத்தவரையில் அவன் தனது மனைவி பிள்ளைகளுக்காக செலவு செய்வது அவன் மீது இஸ்லாம் வாஜிபாக்கிய ஒரு விடயமாகும். இதற்கப்பால் சமூக மட்டத்தில் நின்று நோக்கும் போது செல்வ விருத்தியில் ஈடுபடல் ஒரு சமூகக் கடமையாகிறது. சமூகத்தில் பொறுத்தமானவர்கள் இதில் ஈடுபடாத போது முழு சமூகமும் அங்கு குற்றவாளியாக மாறுகிறது. எனவே, உழைப்பு என்பது தனிமனித,  சமூகக் கடமை என்ற வகையில் தனிமனித உருவாக்கத்தில் இந்தப் பண்பு தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகிறது.

2.            ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது போல் பூமியை அபிவிருத்தி செய்தல் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் எதிர்பார்க்கப்படும் பணியாகும். பொருளாதாரம் என்பது அபிவிருத்திக் காரணிகளில் முதன்மையானது. அந்த வகையில் பொருள் தேடுவதற்கான உழைப்பு பூமியை அபிவிருத்தி செய்வதன் வடிவங்களில் ஒன்று. எனவே தனிமனித உருவாக்கத்தில் உழைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக மனிதரக்ள் பயிற்றப்படுவதன் மூலம் அவர்கள் தமது பணியான பூமியை அபிவிருத்தி செய்யும் பணிக்கே தயார் செய்யப்படுகிறார்கள்.

3.            அல்லாஹ்தஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான் “உங்களது வாழ்வின் அத்திவாரமாகக் காணப்படும் செல்வத்தை புத்திகுறைந்தவர்களது கைகளில் ஒப்படைத்து விடாதீர்கள்.” (நிஸா – 05)
இந்த வசனத்தில் மனித வாழ்வு எழுந்து நிற்பதற்குரிய காரணி பொருளாதாரம் அல்லது செல்வம் என்கிறது.

ஒரு தனிமனித வாழ்வின் ஸ்திரப்பாடு அவனது பொருளாதார ஸ்திரப்பாட்டில் தங்கியிருக்கிறது. பொருளாதார ஸ்திரப்பாடு இல்லாது போகின்ற பொழுது அவனது வாழ்வின் ஏனைய அனைத்துப் பகுதிகளும் ஸ்திரமற்று தளர்ந்து போவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது. தஃவாவில் ஒருவனது பின்னடைவுகளும் குடும்ப வாழ்வில் அமைதியின்மைகளும் பொருளாதாரம் பலவீனமடைவதால் ஏற்பட முடியும். நபியவர்கள் இந்தக் கருத்தையே இவ்வாறு கூறினார்கள் “வறுமை என்பது குப்ருக்கே எடுத்துச்செல்ல முடியும்” என்றார்கள்.

உண்மையில் பொருளாதாரப் பிரச்சினை ஒருவனை ஆக்கிரமித்து இருக்கின்ற பொழுது அவனால் வேறு எதனையும் சிந்திக்க இயலாது போகிறது. அவன் ஈடுபடும் எந்த வேலையிலும் அவனால் உரிய விளைவுகளைக் கொண்டு வர முடியாது போகலாம். எனவே, பொருளாதார ஸ்திரப்பாடு மிக முக்கியமானது.

அடுத்து ஒரு தஃவாவைப் பொறுத்தவரையிலும் அதனுடைய ஸ்திரப்பாடு வெற்றி என்பன பொருளாதாரத்தில் பெரிதும் தங்கியிருக்கின்றன. இதனால்தான் அல்லாஹ்தஆலா செல்வத்தையும் உயிரையும் கொடுத்துப் போராடுமாறு பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்துகிறான். அதிலும் குறிப்பாக செல்வத்தை உயிரை விடவும் முதன்மைப்படுத்திப் பேசியிருப்பதையும் அவதானிக்கலாம். ஒரு தஃவாவின் ஓட்டத்திற்கு பொருளாதாரம் மிக முக்கியமானது என்பதையே இது வலியுறுத்துகிறது.

அடுத்து இன்று சர்வதேச சக்திகள் என்று நாம் அடையாளப்படுத்துகின்ற வற்றில் பல்தேசியக் கம்பனிகள் எனும் பெரும் பொருளாதார சக்திகள் பிரதானமாவை. உலகின் போக்கையே மாற்றிவிடும் வலிமை இவற்றிற்கு இருக்கின்றன,  எனின் உலகின் சக்தியாக மாறுதல் என்பதும் பொருளாதாரத்தில் பெரிதும் தங்கியிருக்கிறது என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இஸ்லாம் உலகின் சக்தியாக மாற வேண்டும் எனின்,  அது ஒரு பொருளாதார சக்தியாகவும் காணப்படல் வேண்டும். அல்-குர்ஆன் உங்களால் இயன்றவரை சக்தியை திரட்டி வைத்துக் கொள்ளுங்கள் (அன்பால் - 60) என்று கூறுகிறது. நாம் திரட்ட வேண்டிய சக்திகளுள் பொருளாதாரம் பிரதானமானது.

ஆகவே, தனிமனித ஸ்திரப்பாடும் சரி,  ஒரு தஃவாவின் ஸ்திரப்பாடும் சரி,  உலக சக்தியாக இருத்தல் என்பதும் சரி அனைத்திற்கும் பொருளாதாரம் ஒரு முக்கிய அடிப்படையாக அமைகிறது. அதனைத்தான் அல்குர்ஆன் ‘உங்கள் வாழ்க்கையின் அத்திவாரமாக அமைந்த செல்வம்’ என்கிறது. எனவே,  தனிமனித உருவாக்கத்தில் உழைக்கும் ஆற்றல் என்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

4.            பொருளாதாரம் அல்லது உழைப்பு சமூகப் பாதுகாப்பிற்கு அல்லது சமூக அமைதிக்கு வழி வகுக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் “ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொள்வது வறுமையிலிருந்து பாதுகாக்கும்” என்றார்கள். சமூகத்தின் அமைதியின்மை குழப்பங்களுக்கு வறுமை ஒரு முக்கிய காரணம்,  அந்த வகையில் உழைப்பும் பொருள் தேடுதலும் ஒரு அமைதியான பாதுகாப்பான சமூக சூழலை தோற்றுவிக்க உதவுகின்றன.

இங்கு ஒரு விடயத்தைக் குறித்துக் காட்ட வேண்டும். இன்று பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சி கண்ட நாடுகளில் இந்த அமைதியும் பாதுகாப்பும் இல்லாதிருக்கிறதே என்று எவரும் ஒரு கேள்வியை எழுப்ப முடியும். உண்மைதான். ஆனால் பொருளாதாரத்தால் மாத்திரம் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வந்து விட முடியாது. அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த பொருளாதாரமும் ஒரு காரணி. பொருளாதாரத்தால் மாத்திரம் அமைதியை ஏற்படுத்த நினைப்பது ஒரு சடவாதப் பார்வை. இன்றைய வளர்ந்த நாடுகளின் குழப்பநிலை இங்குதான் இருக்கிறது.

எனவே,  அமைதியும் பாதுகாப்பும் பொருளாதாரத்துடன் இன்னும் பல காரணிகளும் இணைகின்ற பொழுதே முழுமையாக ஏற்பட முடியும். இந்தக் கருத்தையே நபியவர்களின் இந்த வார்த்தைகள் உணரத்துகின்றன. “தனது ரிஸ்க் விரிவாக்கப்பட வேண்டும் என்றும்,  ஆயுள் அதிகரிக்க வேண்டும் என்றும் யார் விரும்புகிறாரோ அவர் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும். உறவுகளை இணைந்து நடக்கட்டும்” என்றார்கள். (புகாரி)


இறுதியாக தனிமனித உருவாக்கத்தில் உழைக்கும் ஆற்றல் என்பது இன்றியமையாத ஒரு பரப்பு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எமது பணியில் இந்தப் பக்கத்தை நாம் ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும். அல்லாஹ்வே போதுமானவன்.

Monday, April 28, 2014

ஷெய்க் நாதிர் அந்நூரி குறித்து சில வரிகள்

ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் 16-04-2014 புதன்கிழமை இரவு காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ்தஆலா அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக. ஆமீன்.

1954ம் ஆண்டு குவைத்தில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இவர், நிர்வாகத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றதுடன் ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளராகவும் காணப்பட்டார். 

பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் உள்ளங்களில் வாழும் இவர் குறித்து சில வார்த்தைகளை இங்கே பதிவு செய்வது உண்மையில் பெருமைப்படத்தக்க ஒரு விடயமாகும். மூன்று அடிப்படைகளில் நின்று இவர் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது. ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் ஒரு உயர்ந்த பண்பாட்டாளர். நபியவர்கள் கூறினார்கள் “உங்களில் மரணித்தவர்கள் குறித்து நல்லவற்றை மாத்திரமே பேசுங்கள்” என்றார்கள். ஒருவர் விரும்பினாலும் ஷெய்க் அவர்கள் குறித்துப் பேசுவதற்குத் தீய விடயங்கள் எதுவுமில்லை எனும் அளவுக்கு மனிதர்களுடனான உறவாடலில் ஒரு உயர்ந்த பண்பாட்டை அவர் கடைபிடித்திருக்கிறார்.

இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் தான் உருவாக்க விரும்பும் மனிதனின் இறுதி அடைவை சாராம்சப்படுத்தும் போது,  ஐந்து பண்புகளைக் குறித்துக் காட்டுவார்கள். எளிமை,  தொழுகை.  குர்ஆன் ஓதுதல். எதனையும் செயற்படுத்தும் தயார்நிலை.  பண்பாடு. இந்த ஐந்து பண்புகளினதும் உண்மையான செயல் வடிவமாகவே ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

எல்லோருடனும் வேறுபாடின்றிப் பழகுகின்ற அவரது பாங்கும், முகம் நிறைந்த புன்னகையும்,  நிதானமான அணுகுமுறையும் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த விடயங்களாகும். அவரது இலங்கை விஜயங்களின்போது, இலங்கை மனிதர்களின் எளிமையான வாழ்க்கையையே அவரும் வாழ்ந்தார்கள். குவைத்தின் உயர்ரக வாழ்வை ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. கீரைக்கறியும், சோறும் சாப்பிட்டமையும், சிறிய அறைக்குள்ளே எல்லோருடனும் கால்மடித்து உட்கார்ந்திருந்தமையும், சகோதரர்களுடன் சேர்ந்து ஓட்டப் போட்டியில் ஈடுபட்டமையும் இன்றுவரை பலரிடத்தில் மறவாத நினைவுகள்.

இரண்டாவது,  ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் ஒரு தன்னிகரற்ற சமூக நல செயற்பாட்டாளர். குவைத்தில் சமூக நல செயற்பாட்டிற்கு இவரது குடும்பம் பெயர் போனது. இவரது பாட்டனார், முஹம்மத் அந்நூரி என்பவர் குவைத்தில் சமூக நல செயற்பாட்டின் முன்னோடியாகக் கருதப்படுபவர். எனவே, ஷெய்க் நாதிர் நூரி அவர்களை சமூக நல செயற்பாட்டுப் பரம்பரை ஒன்றின் அங்கத்தவன் என்றால் அது மிகையாகாது. 

இதனால்தான் இவரது வபாத் செய்தி குறித்து ஒரு அறபு சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில், “குவைத்தின் சமூக நல செயற்பாடு மரணித்துவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். ஏனெனில், இவரது வாழ்வு முழுமையாக பிறருக்கானதாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் இவர் சமூக நலப்பணியில் ஈடுபட்டார் என்று கூறாமல் சமூக நலப் பணியே இவர்தான் என்று அவரது ஒப்பீடு அமைந்திருந்தது.

இவரது சமூக நல செயற்பாட்டின் பரப்பு எந்தளவு விரிவுபட்டிருந்தது எனின், மெக்ஸிகோ முதல் யப்பான் வரையில் உலகின் எல்லாக் கண்டங்களையும் உள்ளடக்கி இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இவரது கவனம் மிகவும் அதிகமாகக் குவிந்து காணப்பட்டிருக்கிறது.

எண்பதுகள் முதலே இலங்கையிலும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் இவர் மூலம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புக்கள்,  தனிமனிதர்களுடன் தொடர்புபட்டு அவர் செயற்பட்டிருக்கிறார்.

உலகில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறார். பசியைக் போக்கியிருக்கிறார். கஷ்டங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார். அல்குர்ஆனின் போதனையான ஹைரைச் செய்யுங்கள் என்பது இவரது வாழ்வின் சுலோகமாகவே இருந்திருக்கிறது, மாத்திரமன்றி இவரது பணியை நில எல்லைகளோ,  இன எல்லைகளோ,  மொழி எல்லைகளோ எதுவுமே கட்டுப்படுத்தவில்லை. ஒரு உலகளாவிய மானுடப் பார்வைக்குச் சொந்தக்காரர் அவர்.

மூன்றாவது, ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் ஒரு தலை சிறந்த தாஇ, இஸ்லாமிய சிந்தனையாளர். அவரது வீட்டில் அவரை சந்திக்கச் சென்றவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்ட ஒரு விடயம் இருக்கிறது. அதுதான் அவரது வீட்டில் அமைந்திருந்த ஒரு மிகப் பெரிய வாசிகசாலை. அது அவரது தனிப்பட்ட வாசிகசாலை. அங்கே அவர் நூல்களை சேமித்து மாத்திரம் வைக்கவில்லை. அனைத்தையும் கற்று முடித்திருந்தார்.

அவர் தரிசித்த நாடுகளும், சந்தித்த மனிதர்களும் அவரை உதவி செய்யும் ஒரு செல்வந்தராக மாத்திரம் காணவில்லை. மாற்றமாக உள்ளத்தைத் தொடும் வகையில் இஸ்லாத்தை முன்வைக்கும் ஒரு தாஇயாகவும், நுணுக்கமான சமூகத் தீர்வுகளை முன்வைக்கும் ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் கண்டார்கள். இந்த எல்லா இடங்களிலும் அவர் மிக முக்கியமாகக் கவனம் செலுத்திய சில விடயங்கள் இருக்கின்றன.

ஒன்று, சமூக நலப் பணியை ஒரு சிறந்த தஃவாவாக அறிமுகப்படுத்தியமை. மனித நலன்களில் அக்கறை செலுத்தாத போது, வெறும் சிந்தனைகளும் தத்துவங்களும் எதனையும் சாதித்து விடப் போவதில்லை என்ற கருத்து அவரால் ஆழ்ந்து விதைக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் சமூக சேவை நிறுவனங்கள் தோற்றம் பெறவே அவர் காரணமாக இருந்திருக்கிறார்.

மற்றது,  உருவாக்கச் சிந்தனையை அறிமுகப்படுத்தியமை,  இஸ்லாமிய தஃவா என்பது வெறுமனே கருத்துக்களையும்,  சிந்தனைகளையும் எத்திவைத்தல் என்பது மாத்திரமல்ல,  மாற்றமாக ஒரு இஸ்லாமிய வாழ்வு உருவாக வேண்டும் எனின்,  அங்கு இஸ்லாத்தை வாழ்வாகக் கொண்ட மனிதர்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற சிந்தனையை வழங்கினார். இதனால் பல இடங்களில் ஒழுங்குபடுத்தப்படாத, இலக்கற்ற சிதறிய தஃவா செய்றபாடுகள், முறைமைப்படுத்தப்பட்டு இலக்கு நோக்கியதாக அமைய இவர் காரணமாயிருந்தார்.

அடுத்து,  இஸ்லாமிய தஃவாவின் நீண்டகால இருப்பை நோக்கிச் செயற்பட வழிகாட்டியமை. அந்தவகையில் எதிர்காலத் தலைமைகளை உருவாக்குதல், பொருளாதார ஸ்திரப்பாடு,  கட்டமைப்பின் உறுதி,  அதன் கீழ்நோக்கிய மேல்நோக்கிய தொடர்புப் பலம் போன்ற பல விடயங்கள் அவரது மிகுந்த கவனத்தைப் பெற்ற விடயங்களாகும்.


தனக்கு அல்லாஹ் அருளிய அறிவு,  செல்வம் எனும் இருபெரும் நிஃமத்துக்களை மிகச் சிறந்த முறையில் மனித நலனுக்காகப் பிரயோகித்த ஒரு மாமனிதர்,  அவர். அவரது மறுமை வாழ்வுக்காக எமது பிரார்த்தனைகளிலும் ஒரு இடத்தை வழங்குவோம்.

Monday, March 17, 2014

நாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்?

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்
திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் பதில் தேட வேண்டிய கேள்விகளுள் இரண்டாவது கேள்வி ஏன்? என்பது. இக்கேள்விக்குப் பதில் தேடுவதற்கான ஒரு முன்னுரையை கடந்த அமர்வில் நோக்கினோம். அங்கு சில கேள்விகள் எழுந்தன. ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான பதில்களைத் திரட்டினால் அவற்றில் சந்தோஷம் சம்பந்தப்பட்டவைகளும் பயம் சம்பந்தப்பட்டவைகளும் இருக்கின்ற பொழுதே,  அது சமநிலை என்று குறிப்பிட்டோம். அதேபோல் சந்தோஷத்தையும் பயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய இடங்களும் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டோம்.

இன்றைய அமர்வில் மேலே எழுந்த வினாக்களுக்கு,  குறிப்பாக இளைஞர்களை மையப்படுத்தி,  விடைகாணும் வகையில் தலைப்பின் இரண்டாவது பகுதிக்குள் நுழைவோம் வாருங்கள்.

நீங்கள் ஏன் திருமணம் செய்யப் போகிறீர்கள்?  என்ற கேள்வியை இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் முன்வைக்கின்ற போது, அவர்களால் அதிகமாக அளிக்கப்படுகின்ற பதில்களுக்கான சில மாதிரிகளைக் கீழே தருகின்றோம்.

முதலில் இளைஞர்களது மாதிரிப் பதில்கள்

1.            எனது பாலியல் ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காக.
2.            என்னைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு பெண் தேவை.
3.            எல்லோரும் திருமணம் செய்கிறார்கள். நானும் செய்யத்தானே வேண்டும்.
4.            இப்போது திருமண வயது வந்துவிட்டது.
5.            ஒரு பெண்ணை விரும்புகிறேன்.
6.            எனது பெற்றோர்கள் திருமணம் செய்யுமாறு வற்புறுத்துகிறார்கள்.
7.            பெற்றோரையும், தம்பிமார்களையும்,  தங்கச்சிமார்களையும் கவனித்துக் கொள்ள ஒருவருமில்லை.
8.            ஆபாச உலகிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக.
9.            அல்லாஹ் கூறியுள்ள அன்பையும் அமைதியையும் அருளையும் அடைந்து கொள்வதற்காக.
10.          திருமணம் நபியவர்களது சுன்னா.
11.          ஒரு இஸ்லாமிய வீட்டை உருவாக்குவது எனது கடமை.
12.          அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்காக.
13.          குடும்பத்தை சுமத்தலும்,  பிள்ளை வளர்ப்பும் உண்மையான ஆண்மையின் வெளிப்பாடுகள்.
14.          நல்ல வசதியான ஒரு இடத்தில் முடித்தால்,  வசதியாக வாழ்ந்து விடலாம்.
15.          வாழ்க்கையில் ஒரு மாற்றத்திற்காக.

இங்கு கூறப்பட்டுள்ளவை சில உதாரணங்கள் மாத்திரமே. இவற்றில் சில சிலரது மனதுக்கு நெருக்கமானவையாக இருக்கலாம். மற்றும் சில தூரமானவையாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் பல்வேறுபட்ட மன உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபளிக்கக்கூடியவையே. இவற்றில் எதனையும் நாம் ஹராம் என்று சொல்ல முடியாது. அனைத்தும் இயல்பான,  அனுமதிக்கப்பட்ட மனித எதிர்பார்ப்புகளாகும். 

ஆனால் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு ஒழுங்குபடுத்தல் அவசியமாகிறது. அடிப்படையானவை எவை? கிளையானவை எவை? முதல்நிலைப்படுத்த வேண்டியவை எவை? இரண்டாம் தரமானவை எவை? என்ற வேறுபடுத்தல் அவசியம். இந்த வேறுபடுத்தல் அல்லது ஒழுங்குபடுத்தல் இல்லாது போகின்ற பொழுதுதான் வாழ்க்கை போக வேண்டிய பயணத்திலிருந்து திசைமாறிச் செல்வதற்கான சூழல் ஏற்படுகின்றது,   அல்லது இடை நடுவே நின்று விடும் நிலை தோன்றுகின்றது.

எனவே இங்கு எதிர்பார்ப்புக்களை ஒழுங்குபடுத்துதல் குறித்து,  அடுத்ததாகக் கொஞ்சம் கவனத்தைச் செலுத்துவது மிகவும் பொறுத்தமானதாக அமையும் என நினைக்கிறோம்.

முதலில்,  நாம் ஏன் திருமணம் செய்கிறோம் என்பது,

 ஒரு எதிர்வினையாக மாத்திரம் அமையக் கூடாது. பெற்றோரின் வற்புறுத்தல்,  தம்பி தங்கைகளைக் கவனிக்க அல்லது பெற்றோரைக் கவனிக்க அல்லது என்னைக் கவனித்துக் கொள்ள ஆள் தேவை,  எல்லோரும் திருமணம் செய்கிறார்கள்,  எனக்கு திருமண வயது வந்துவிட்டது போன்ற வகையான நியாயங்கள் ஒருவித எதிர்வினைப் பண்பைப் பிரதிபளிக்கின்றன. இவை ஒரு போதும் நான் ஏன் திருமணம் செய்கிறேன் என்பதற்கான அடிப்படை நியாயங்களாக இருக்க முடியாதவை. இவற்றின் அடியாக மாத்திரம் ஒரு குடும்பம் எழுவது ஆபத்தானது. அந்தக் குடும்பத்தின் நிலைத்த தன்மைக்கான உத்தரவாதம் அங்கு இல்லாது போகின்றது.

அடுத்து,  நாம் ஏன் திருமணம் செய்யப் போகிறோம் என்பது,

 ஒரு முதிர்ச்சியற்ற மனவெழுச்சியாக அல்லது ஒரு உல்லாசத் தேடலாக மாத்திரம் அமைந்து விடவும் கூடாது. ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்பதும்,  ஒரு மாற்றம் தேவை என்பதும்,  வசதியான வாழ்வு தேவை என்பதும்,  பாலியல் ஆசை என்பதும் இந்த வகை சார்ந்தவைகளாகும். இந்த விடயங்களும் ஒருவன் திருமணம் செய்வதற்கான அடிப்படை நியாயங்களாக இருக்க முடியாதவை. ஒரு குடும்பம் இவற்றின் மீது மாத்திரம் எழுந்து நிற்க முடியாது.

மாற்றமாக,  நாம் ஏன் திருமணம் செய்யப் போகிறோம் என்பது,

 அது ஒரு இபாதத், வணக்கம்,  நன்மை தருகின்ற ஒரு செயற்பாடு என்ற புரிதலின் மீது அமைய வேண்டும். நபியவர்களது சுன்னா என்பதும்,  அல்லாஹ்வின் திருப்தி என்பதும்,  தனது கற்பைக் காத்துக் கொள்ளுதல் என்பதும்,  அன்பையும் அருளையும் அமைதியையும் அடைந்து கொள்ளுதல் என்பதும்,  திருமணத்தை ஒரு வணக்கமாகப் புரிந்து கொண்ட நியாயங்கள்,  நாம் ஏன் திருமணம் செய்கிறோம் என்பதற்கான அடிப்படையான நியாயங்கள். குடும்ப வாழ்வு இவற்றின் மீது எழுந்து நிற்கின்ற பொழுது,  அது தூய்மையானதாக இருக்கும். நிம்மதி நிறைந்ததாக இருக்கும். செழிப்பானதாக இருக்கும்.

அடுத்து,  நாம் ஏன் திருமணம் செய்யப் போகிறோம் என்பது,

 அது ஒரு பொறுப்பு,  கடமை,  மனித இனத்தின் நிலைத்த தன்மைக்கான எனது பணி என்ற புரிதலின் மீது அமைதல் வேண்டும். இஸ்லாமிய வீடு என்பதும்,  குடும்பப் பொறுப்பு,  பிள்ளை வளர்ப்பு என்பதும்,  அன்பும் அருளும்,  அமைதியும் என்பதும்,  ஆபாசத்திலிருந்து காத்துக்கொள்ளுதல் என்பதும் இந்தவகை சார்ந்த நியாயங்களாகும். இவற்றின் மீது எழுகின்ற ஒரு குடும்பம் நீடித்து நிலைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

இஸ்லாம் குடும்ப வாழ்வு குறித்துப் பேசுகின்ற பொழுது அதனை ஒரு இபாதத்தாகவும், ஒரு பொறுப்பாகவும்,  ஒரு சமூகப் பாதுகாப்பாகவும் அடையாளப்படுத்தியிருப்பதைக் காணலாம். இவை குடும்ப வாழ்வு குறித்த மிக முக்கிய பெறுமானங்களாகும். இந்தப் பெறுமானங்களைப் பிரதிபளிக்கக்கூடிய நியாயங்களே அடிப்படையான நியாயங்களாகக் கருதப்படும். 

இதனால்தான் அல்குர்ஆன் திருமண ஒப்பந்தத்தை “ஒரு கனதியான ஒப்பந்தம்” என்று சொல்கின்றது. (நிஸா - 21) இங்கு கனதியான ஒப்பந்தம் என்பதன் பொருள்,  அது குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றிற்கான ஒப்பந்தம்,  அது சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒப்பந்தம்,  அது அல்லாஹ்விடத்தில் வகை கூறுவதற்கான ஒப்பந்தம்.

ஆகவே,  சகோதரர்களே, நீங்கள் ஏன் திருமணம் செய்யப் போகிறீர்கள்? என்பதற்கான நியாயங்களை மீள் ஒழுங்கு செய்யுங்கள். அடிப்படைய நியாயங்கள்,  முதன்மைப்படுத்த வேண்டிய நியாயங்கள் என்பன இஸ்லாம் கூறும் அடிப்படையான குடும்பப் பெறுமானங்களின் மீது எழ வேண்டியவையாகும். அவை உங்கள் முதல் தர நியாயங்களாக அமைகின்ற பொழுது,  கிளை நியாயங்களாகவும் இரண்டாம் தர நியாயங்களாகவும் ஏனையவை அமைவதில் எந்தவிதமான தவறுமில்லை. 

அதாவது எதிர்வினைகள்,  உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்,  மனவெழுச்சிகள்,  உல்லாசத் தேடல்கள் இவையும் நீங்கள் ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்பதற்கான நியாயங்களாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் இவை அடிப்படை நியாயங்களாக அல்லது முதல்தர நியாயங்களாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து,  கொஞ்ச நேரம் கடந்த பந்தியில் பேசிய ஒரு விடயத்திற்கு மீண்டும் வருவோம். ஒருவன் தான் திருணம் செய்யப் போகிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமும் ஏற்படுகிறது. பயமும் ஏற்படுகிறது. சந்தோஷத்தைப் பொறுத்தவரையில் நாம் மேலே பேசிய திருமணம் செய்வதற்கான நியாயங்களை மையப்படுத்திப் பார்க்கின்ற பொழுது,  அன்பு,  காதல்,  இன்பம்,  நன்மை,  அல்லாஹ்வின் திருப்தி போன்றவற்றால் ஏற்பட முடியும். அதேபோல் பயத்தைப் பொறுத்தவரை புதிது,  பொறுப்பு,  கஷ்டம், இயலாமை,  அல்லாஹ்விடம் பதில் சொல்லுதல் போன்ற காரணங்களால் ஏற்பட முடியும்.

இந்த சந்தோஷங்களும் பயங்களும் நியாயமானவையே. இவை சமநிலையற்ற ஒரு மனநிலையைப் பிரதிபளிப்பவை அல்ல. ஆனால் அந்த சந்தோசம் என்பது, பயத்திற்கான காரணங்களின் கனதியைப் புரிந்து கொள்ளாததாகக் காணப்படக் கூடாது. அல்லது பயங்களின் காரணங்களிலிருந்து விரண்டு ஓடுவதாகக் காணப்படக்கூடாது. அதாவது திருமணவாழ்வு என்பது ஓரே இன்பமயம் என்ற பிரம்மையாக அமைந்து விடக் கூடாது. மாற்றமாக பயங்களின் காரணங்களை மிகச்சரியாகப் புரிந்து கொண்டதாகவும்,  அவற்றை எதிர்கொள்ளும் தயார்நிலை கொண்டதாகவும் காணப்படல் வேண்டும்.

அதேபோல் சந்தோசம் என்பது,  தனித்து இன்பத் தேடலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துவிடக்கூடாது. மாற்றமாக நன்மைத் தேடலை அடிப்படையாகக் கொண்டதாகவும் அது அமைய வேண்டும்.

அடுத்து பயம் என்பது,  சந்தோசத்திற்கான காரணங்களை மறுதலிப்பதாக அமைந்து விடக்கூடாது. அல்லது வாழ்வை விட்டு ஒதுங்கி விடுவதாக அமைந்து விடக்கூடாது. மாற்றமாக வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதைப் புரிந்து கொண்டதாகவும்,  பொறுப்பை சுமப்பதில் தான் குடும்ப வாழ்வின் இன்பமே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டதாகவுமே காணப்படல் வேண்டும்.

இது நாம் ஆரம்பத்தில் பேசியது போன்று சந்தோஷத்தையும்,  பயத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்குரிய இடங்களாகும்.

அடுத்து திருமணம் பற்றிய எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒழுங்குபடுத்துவது எவ்வாறு? என்பது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை,  எனவே,  இளைஞர்களே,  திருமணம் பற்றிய உங்கள் எண்ணங்களை,  பார்வைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதை இலகுபடுத்துவதற்காக நீங்கள் மனங்கொள்ள வேண்டிய சில விடயங்களை இங்கே முன்வைக்கிறோம்.

1.            உங்களது எதிர்காலத் திட்டத்தில்,  உங்களது திருமணமும் ஒரு பகுதியாகக் காணப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதாவது உங்களது வாழ்வின் பெரிய இலக்கு நோக்கிய பயணத்தில் திருமணம் என்பது ஒரு கட்டம். அந்தக் கட்டத்தையும் மிகச் சரியாக அடைந்து கொள்ள வேண்டும்.
2.            திருமணம் எனும் நிகழ்ச்சி உங்களது இறுதி இலக்கல்ல. மாற்றமாக திருமணத்தின் விளைவுகளே உங்களது இலக்காக இருக்க வேண்டும். எனவே விளைவுகளை மிகச் சரியாக அடைந்து கொள்வதற்குரிய திருமணமே உங்களுக்குத் தேவை.
3.            உங்களது வாழ்வில் நீங்கள் அடைந்து கொள்ள நினைக்கும் வெற்றித் தொடரின் ஒரு பகுதியாக திருமணம் காணப்படல் வேண்டும். அதாவது,  உங்களது வாழ்வில் ஏனைய எல்லாவற்றிலும் வெற்றி காண்பது போல் திருமண வாழ்வும் வெற்றிகரமாய் அமைய வேண்டும். தொழிலில் வெற்றி பெற்று குடும்ப வாழ்வில் தோற்றவர்களாய்,  தஃவாவில் வெற்றி பெற்று குடும்ப வாழ்வில் தோற்றவர்களாய் நீங்கள் இருக்கக் கூடாது.
4.            அறிந்து கொள்ளுங்;கள். உங்களது வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் கொடுக்கின்ற பரிமாணத்திற்கு ஏற்பவே நீங்கள் அவளிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் முடியும். ஏனெனில்,  குடும்ப வாழ்வு என்பது பரஸ்பரபக் பரிமாற்றமாகும். அதனைத்தான் நபியவர்கள் ஜாபிர் றழி அவர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் “ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே,  நீ அவளுடன் விளையாடலாம்,  அவள் உன்னுடன் விளையாடுவாள்.”

இறுதியாக,
ஒரு இளைஞனைப் பார்த்து நீங்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே மேல் என்று சொல்வோம்,  அவன் யாராக இருக்கும்… என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

இந்தக் கதையைக் கேளுங்கள்
ஒரு தடவை,  ஒரு இளைஞன் மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தான். முளைத்த நாளிலிருந்து இடம் மாறாது ஒரே இடத்தில் நின்றிருக்கும் அந்த மரங்களைப் பார்க்கிறான். அவை சுயமாக எதனையும் செய்யாமல் பிறரில் தங்கியிருக்கின்ற தோற்றமே அவனது மனக்கண் முன்னே பெரிதாக எழுந்து நிற்கின்றது. அவன் தன்னோடு பேசிக் கொள்ள ஆரம்பிக்கிறான்.

திருமண வாழ்வு என்பது ஒரு பெரும் போராட்டம். பெண்களை இந்த மரங்கள் போல் வைத்திருந்தால்தான் அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். எனவே,  

•             அவளை அதிகம் படிக்க வைக்கக் கூடாது. படிப்பு அவளுக்கு சுயமாய் இயங்கும் சக்தியைக் கொடுத்துவிடும்.
•             ஒருபோதும் அவளை தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது. அவளுக்கு தனி வருமானம் இருந்தால் எனது கட்டுப்பாட்டை விட்டு வெளியே சென்று விடுவாள். எனது தேவை அவளுக்கு இல்லாது போய்விடும்.
•             இரண்டாம் திருமணம் செய்வேன் என்ற அச்சுறுத்தல் என்றும் அவளுக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். இரவு பகலாக தூக்கத்திலும் சரி, விழிப்பிலும் சரி அவள் கழுத்து மீதான கத்தியாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு முன்னால் மண்டியிட்டிருப்பாள்.
•             இல்லை,  முடியாது,  கூடாது என்ற வார்த்தைகள்தான் எனது ஆயுதம். அவள் மீது அதிகாரம் செலுத்துவதற்கான வார்த்தைகள்,  அவளை எனது கூண்டில் அடைத்து வைப்பதற்கான வார்த்தைகள்.
•             பிரயாணங்கள்,  இரவுக் கொண்டாட்டங்கள்,  சுதந்திரம்,  பணம்,  தீர்மானம் என அனைத்துமே எனக்குரியவை மட்டும்தான். அவளுக்கு அவற்றில் எதுவும் கிடையாது. எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்காகக் காத்திருப்பது மட்டும்தான்; அவளது வேலை.

தொடர்ந்தும் தனது மனதிற்குள்ளே சொல்லிக் கொள்கிறான். மரங்களையும் பெண்களையும் காரணத்துடன்தான் ஒப்பிட்டிருக்கிறார்கள். பெண்கள் மரங்கள் போல் ஆணுக்கு முன்னால் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆண்கள் விரும்பி அசைத்தாலே ஒழிய அவர்கள் அசையக் கூடாது.

திடீரென தோட்டத்து மதில் மீதிருந்து பெரிய பூனையொன்று பாய்ந்து ஓடியது. அந்த இளைஞன் பதறிப் போய் எழுந்து நின்றான். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தில் நூறு முறை அடித்துக் கொண்டது.

மீண்டும் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் “திருமண வாழ்க்கை ஒரு பெரிய போராட்டம் என்று நான் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை” என்றான்.

இந்தக் கதையில் வரும் இளைஞனுடைய சிந்தனையைப் போன்று பெண்களைப் பற்றியும் திருமணம் பற்றியும் ஒருவனுடைய சிந்தனை காணப்படும் எனின்,  அவனைப் பார்த்துத்தான் சொல்கிறோம் தயவுசெய்து நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இவ்வளவு காலமும் வாழ்ந்தது போல் தனியாக வாழ்வதே நல்லது, என்போம்.


இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வில் சகோதரிகளின் மாதிரிப் பதில்களுடன் சந்திப்போம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.