Monday, September 1, 2014

திருமணத்தின் நோக்கங்கள்

திருமண வாழ்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு


கடந்த அமர்வுகளில் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளைஞர் யுவதிகளின் பக்கம் நின்று கலந்துரையாடினோம். அதில் அவர்களது விருப்பு வெறுப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் எவ்வாறு இருக்கின்றன என்பதும்,  உண்மையில் அவை எவ்வாறு இருப்பது மிகவும் பொறுத்தமானது என்பதும் கலந்துரையாடலில் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

இன்றைய அமர்வில் இஸ்லாமிய ஷரீஆவின் பக்கம்  நின்று பார்க்கின்ற பொழுது திருமண வாழ்வு ஏன்? என்ற கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்து கலந்துரையாடுவது பொருத்தமானது.

அல்லாஹுத்தஆலா இந்த பூமியைப் படைத்து,  அதில் மனிதனைப் படைத்துள்ளான். அவன் விரும்பியிருந்தால் ஆண் இனத்தை மாத்திரமே படைத்திருக்க முடியும் அல்லது பெண் இனத்தை மாத்திரமே படைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆணையும் பெண்ணையும் படைத்து,  அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்ற ஒழுங்கையும் ஏற்படுத்தியிருக்கிறான். இது ஏன்?  இதற்குப் பின்னால் உள்ள தத்துவம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில்தான் திருமண வாழ்விற்கான அல்லது குடும் வாழ்விற்கான நோக்கத்தை எமக்கு மிகச் சரியாக எடுத்துரைக்கின்றது.

இது,  அல்லாஹ்வின் நாட்டத்தை பலவீனமான மனித அறிவினால் கண்டு கொள்வதற்கான முயற்சி என்பதனை விடவும்,  மேற்சொன்னது போன்ற ஒரு வினாவினைத் தொடுப்பதன் மூலம் எமது விருப்பு வெறுப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால்,  அல்குர்ஆனும் சுன்னாவிலும் இவ்விடயம் எவ்வாறு பேசப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இது காணப்படுகிறது.

இஸ்லாமியக் குடும்பவியல் அறிஞரான கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியில்,  இஸ்லாமிய ஷரீஅத் குடும்ப வாழ்வுக்கான மூன்று பிரதான நோக்கங்களை முன்வைப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

1.            ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.
2.            உள,  உடல் அமைதியை ஏற்படுத்தல்.
3.            சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல்.

இங்கு முதலாவது நோக்கம் குடும்பத்தின் தர்பிய்யத் பணியுடன் சம்பந்தப்படுகிறது. இரண்டாவது நோக்கம் அதன் பாதுகாப்புப்  பணியுடன் சம்பந்தப்படுகிறது. மூன்றாவது நோக்கம் அதன் நாகரீகப் பணியுடன் சம்பந்தப்படுகிறது. இந்த மூன்று நோக்கங்களும் சிறந்த முறையில் நிறைவேற்ப்படுகின்ற பொழுது உலகில் ஒரு உன்னதமான மனிதவாழ்வு கட்டியெழுப்பப்படுகிறது.

1.            ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.

ஸாலிஹான சந்ததிகள் என்பது முதலில் மனித இனத்தின் நீண்ட கால இருப்பைக் குறிக்கின்றது. அல்குர்ஆனும் ஹதீஸும் இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகவே திருமணத்தின் விளைவு குறித்துப் பேசும் போது,  ‘துர்ரிய்யா’ என்ற சொல்லைக் கையாண்டிருப்பதைக் காணலாம். இது நேரடியாக பிள்ளை என்ற கருத்தை தாண்டி ஒரு நீண்ட கால பரம்பரையைக் குறிக்கின்றது. எனவே,  திருமணம் என்பது பரம்பரை பரம்பரையாக மனித இனம் நிலைத்திருப்பதற்கான ஒரு பொறிமுறை என்பது இங்கு விளங்கப்படுத்தப்படுகிறது.

அடுத்து,  ஸாலிஹான சந்ததி என்பது மனித இயல்பு சார்ந்த ஒரு தேவை. தாய்மை என்பதும் தந்தையாக இருத்தல் என்பதும் கற்றுத் தேர்ச்சி பெறுவதற்குரிய ஒரு துறைசார் கலையல்ல. மாற்றமாக,  மனிதனின் இயல்பாக அல்லாஹ் அமைத்து வைத்திருக்கின்ற ஓர் உணர்வு அது. இதனால்தான் அல்குர்ஆன் மனைவி பிள்ளைகளக் கண்குளிர்ச்சி என்று அடையாளப்படுத்தியது. (புர்கான்: 74)

ஒரு மனிதனிடத்தில் பிள்ளை வேண்டுமென்ற தேடலும் எதிர்பார்ப்பும் இந்த உணர்வுப் பின்புலத்தில்தான்  உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையிலான பிரத்தியேக உறவின்போது கூட அந்த எதிர்பார்ப்பை வைத்துச் செயற்படவேண்டும் என்று அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது. ‘இப்போது அவர்களுடன் உறவு கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு எழுதி வைத்தவற்றை ஆர்வத்துடன் எதிர்பாருங்கள்.’ (பகரா: 187)

மற்றது ஸாலிஹான சந்ததி என்பது ஒரு தர்பிய்யத்தை அல்லது பயிற்றுவிப்பைக் குறித்து நிற்கின்றது. அல்குர்ஆன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரகத்தை விட்டுப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறுவதன் மூலம் அந்தப் பணியை ஆரம்பித்து வைக்கின்றது. இஸ்லாமிய ஷரீஅத் முன்வைக்கும் பெற்றோர் கடமைகள்,  பிள்ளைகள் கடமைகள், வாரிசுரிமை சட்டங்கள்,  பரம்பரைச் சட்டங்கள் போன்ற அனைத்துமே இந்த உண்மையை எங்களுக்கு எடுத்துச் சொல்கின்றன. 

நபியவர்கள் இந்தப் பணியை மிகவும் எளிமையாக இவ்வாறு கூறினார்கள்:
‘உங்கள் பிள்ளைகளை கண்ணியமாக  நடாத்துங்கள். அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.’ (இப்னு மாஜா)

2.            உள உடல் அமைதியை ஏற்படுத்துதல்

திருமணம் என்பது உலகில் ஆணும் பெண்ணும் அடைந்து கொள்கின்ற மிக பெரிய இன்பமும் சந்தோசமும் திருப்தியுமாகும். இதில் உள்ளம் சம்பந்தப்பட்ட ஒரு பக்கமும் உடல் சம்பந்தப்பட்ட மற்றொரு பக்கமும் இருக்கின்றது. இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
‘நீங்கள் அமைதியடைந்து கொள்வதற்காக உங்களில் இருந்தே உங்களது சோடியை படைத்தமையும் உங்கள் மத்தியில் அன்பையும் அருளையும் ஏற்படுத்தியமையும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்திப்பவர்களுக்கு இந்த அத்தாட்சிகளைப் புரிந்து கொள்ள முடியும்.’ (ரூம்: 21)

ஒரு கிரிக்கட் வீரரிடம் ஒரு பத்திரிகையாளன் கேட்டான். பொதுவாக கிரிக்கட் வீரர்கள் சில காலம் நன்றாக விளையாடுகிறார்கள். இன்னும் சில காலம் நன்றாக விளையாடுவதில்லை. ஆனால்,  நீங்கள் நீண்ட காலமாக நன்றாகவே விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதன் இரகசியம் என்ன? இக்கேள்விக்கு அவ்வீரன் இந்தக் காலத்தில்தான் நான் திருமணம் முடித்தேன் என்றார். இந்த பதிலில் ஓர் அபூர்வமான உண்மை இருக்கிறது. திருமணம் ஒரு மனிதனிடத்தில் அமைதியையும் நிதானத்தையும் ஒரு விடயத்தை மிகச் சரியாக கையாளும் ஆற்றலையும் கொண்டு வந்து சேர்க்கிறது. மன அமைதி ஒருவனது செயலாற்றலை அதிகரிக்கிறது, அவனது உற்பத்தித் திறனை பலமடங்குகளாக மாற்றுகிறது. இதனையே அல்குர்ஆன் ‘ஸகன்’ (அமைதி) என்ற சொல்லினூடாக விளங்கப்படுத்தியிருக்கின்றது.

சமூக வாழ்வில் மேற்கூறப்பட்ட விளைவு கண்டிப்பாக எட்டப்பட வேண்டும் என்பதனாலேயே,  கணவன் மனைவிக்கிடையிலான பிரத்தியேக உறவை நன்மை தரக்கூடிய ஓர் இபாதத் என்று இஸ்லாம் கூறுகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: உங்கள் மனைவியுடன் உறவு கொள்வதும் ஸதகாவாகும் என்றார்கள்,  ஸஹாபாக்களில் ஒருவர் தனது இச்சையை தீர்த்துக் கொள்வதற்கும் நன்மைகள் வழங்கப்படுகின்றனவா என்று கேட்க,  அதே இச்சையை அவன் பாவமான வழியில் தீர்த்துக் கொண்டால் தீமை கிடைக்கும் அல்லவா,  அதேபோல் ஹலாலான வழியில் தீர்த்துக் கொண்டால் நன்மை கிடைக்கும் என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
இது உடல் உள அமைதி என்பதன் முதலாவது கருத்து,  இதுவொரு மனிதனை ஆக்க சக்தியுள்ளவனாக மாற்றுகின்றது.

அடுத்து,  அதன் இரண்டாவது கருத்து,  ஒரு ஒழுக்க பண்பாட்டு வடிவத்தைக் குறிக்கிறது. அதாவது மனிதனை பாவங்கள் குற்றச் செயல்களை விட்டும் காப்பாற்றக்கூடிய ஒரு பாதுகாப்பு அரணாக திருமணம் அமைகிறது. அல்குர்ஆன் திருமணமானவரைக் குறிப்பதற்கு ‘முஃஸின்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இந்த சொல் அடிப்படையில் ‘ஹிஸ்ன்’ எனும் பாதுகாப்பு அரண் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். எனவே,  இங்கு திருமணம் என்பது ஒரு பாதுகாப்பு அரண். திருமணம் முடித்தவர் அந்த அரணிற்குள் பாதுகாப்பாக இருப்பவர் என்ற கருத்து பெறப்படுகிறது.

மனிதனின் பாலியல் உணர்வு மிகவும் சக்திவாய்ந்தது. அது பல குற்றச் செயல்களுக்கும் காரணமாக இருக்கக் கூடியது. இந்த உணர்வு மிகச் சரியாக ஒழுங்குபடுத்தப்படாதபோது மனித வாழ்வே சீர்கெட்டுவிட வாய்ப்பிருக்கின்றது. இக்கருத்தைக் குறிக்கும் விதமாகவே,  நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘யார் திருமணம் செய்கின்றாரோ அவர் தனது மார்க்கத்தில் அரைவாசியை பாதுகாத்துக் கொண்டு விட்டார்.’
இங்கு,  ஒரு இளைஞன் செய்யும் பாவங்களில் அரைவாசிப் பகுதி பாலியல் சம்பந்தப்பட்டவையாக அமைய வாய்ப்பிருக்கிறது,  என்பதை புரிந்து கொள்ளலாம். திருமணத்தின் மூலம் இந்நிலை மாற்றியமைக்கப்படுகிறது. எனவே திருமணம் ஒரு சமூக ஒழுக்கத்தை உருவாக்குகிறது. மனிதனை பாவங்களை விட்டும் காப்பாற்றுகிறது. இது உள உடல் அமைதியின் இரண்டாவது கருத்து.

3.            சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல்.

குடும்பம் என்ற செங்கற்களின் மூலமே சமூகம் கட்டமைக்கப்படுகின்றது. அந்த செங்கல்லின் பிரதான கூறுகளாகவே கணவனும் மனைவியும் பிள்ளைகளும் காணப்படுகின்றனர். ஒரு குடும்பக் கட்டமைப்பு எந்தளவு பலமாகவும் சீராகவும் காணப்படுகின்றதோ அந்தளவுக்கு சமூகக் கட்டமைப்பின் பலமும் சீர்மையும் உறுதி செய்யப்படுகின்றது.

குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் சம்பந்தப்படுத்தி அல்குர்ஆன் வலியுறுத்தும் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. அதுதான்,  சமூக வாழ்வில் தலைமை வழங்குகின்றவர்களின் குடும்ப வாழ்வு அமைதியாக காணப்படல் வேண்டும். அப்போதுதான் அவர்களால் சமூகத்தை சரியான பாதையில் வழிநடாத்த முடியும். அல்குர்ஆன் இபாதுர்ரஹ்மான்களின் கீழ்வரும் துஆவின் மூலம் இக்கருத்தைப் பேசுகிறது. ‘இறைவா எமது மனைவிமார்கள்,  பிள்ளைகள் மூலம் எமக்கு கண்குளிர்ச்சியை ஏற்படுத்துவாயாக. எங்களை முத்தகீன்களது தலைவர்களாக ஆக்கிவிடுவாயாக.’ (புர்கான்: 74)

இங்கு சமூகப் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்னர் குடும்பத்தில் அமைதியையும் சந்தோசத்தையும் ஏற்படுத்துமாறு அவர்கள் கேட்டமையை அவதானிக்கலாம். குடும்பங்களில் சீர்மையை ஏற்படுத்தாமல் சமூக சீர்மையை கற்பனை செய்வது சாத்தியமற்றது என்பது இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது.

நபியவர்கள் பொறுப்புணர்வு சம்பந்தமாக பேசும்போது குடும்பப் பொறுப்பையும் சமூகப் பொறுப்பையும் இணைத்துப் பேசியுள்ளமையை அவதானிக்கலாம். ‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்புக்கள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் ஒரு பொறுப்பாளர். அவர் மக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தனது குடும்பத்திற்கு பொறுப்பாளன். குடும்பம் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண் தனது கணவனின் வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்பானவள். இது பற்றி அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளன் தனது எஜமானின் செல்வத்துக்கு பொறுப்பானவன். அந்தப் பொறுப்புப் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.’ (புஹாரி)

இந்த ஹதீஸ் தனிமனிதப் பொறுப்புணர்ச்சியை பேசுவதுபோல்,  குடும்ப பொறுப்புணர்ச்சியையும் சமூக பொறுப்புணர்ச்சியையும் இணைத்து பேசுகிறது. அத்துடன் இந்த ஒவ்வொன்றும் மற்றையதில் தங்கி நிற்கின்றது என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் சமூகத் தலைமையையும் அடுத்து குடும்பத் தலைமையையும் பற்றி பேசியிருப்பது குடும்பக் கட்டமைப்பின் சீராக்கம்,  சமூகக் கட்டமைப்பின் சீரான உருவாக்கத்துக்கு அவசியம் என்பதை உணர்த்துகின்றது.

இந்த ஹதீஸில் மீண்டும் மீண்டும்  வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயம் இருக்கின்றது. அதுதான் வகைகூறல். அதாவது,  சமூகக் கட்டமைப்பு பொறுப்பற்றதாக எவரும் வகைகூறுவதற்கு இல்லாத ஒரு நிலை காணப்படக்கூடாது. இந்த வகைகூறல் பணி சமூகத்தலைமைகளுடன் மட்டும் சுருங்கியதல்ல. அதன் முக்கிய பகுதி குடும்ப மட்டத்தில் நடைபெறுகிறது. உருவாக்குதல்,  பாதுகாத்தல் என்ற குடும்பப் பணியின் மூலம் குடும்பம்  வகைகூறக் கடமைப்பட்டிருக்கிறது. எனவே,  சமூக வகைகூறலின் முழுமைப் பண்பு குடும்ப வகைக்கூறலில் தங்கியிருக்கிறது என்பது இங்கு புலப்படுகிறது.


இறுதியாக,  மேற்கூறப்பட்ட சிந்தனைகளை சாராம்சப்படுத்தி நோக்கினால்,  திருமணத்தின் அல்லது குடும்ப வாழ்வின் நோக்கம் ஷரீஅத்தின் பார்வையில் மூன்று பிரதான மையக் கருத்துக்களில் அமைகின்றது. அவை,  ஸாலிஹான சந்ததி,  மன அமைதியும் சந்தோசமும்,  சீரான சமூகக் கட்டமைப்பு என்பனவாகும். 

இவை,  மனித வாழ்வுக்குரிய பொது நோக்கத்தின் பிரதிபலிப்புகளாகவே காணப்படுகின்றன. ஓர் உன்னத மனித நாகரிகம் எழுகின்ற கூறுகள் இவை. எனவே,  திருமணம் குறித்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் என்பன இந்த நோக்கங்களுடன் இயைந்து செல்ல வேண்டும். மாற்றமாக,  இந்த நோக்கங்களை சிதறடிக்கின்ற அல்லது மறுதலிக்கின்ற அல்லது கருத்தில் கொள்ளாத வகையில் தனிமனித விருப்பு வெறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் அமைந்துவிடக் கூடாது. அப்பொழுதே ஒரு நல்ல குடும்ப வாழ்வும் சமூக வாழ்வும் தோற்றம் பெற முடியும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

Thursday, August 28, 2014

சகோதரிகள் ஏன் திருமணம் செய்கிறார்கள்?

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

கடந்த அமர்வில் ‘நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்?’ என்ற கேள்விக்கான பதிலை இளைஞர்களை மையப்படுத்தி நோக்கினோம். இன்றைய அமர்வில் அந்தக் கேள்வியை யுவதிகளை நோக்கி முன்வைத்தால் எத்தகைய பதில்கள் வெளிவர முடியும் என்பதையும்,  அவை குறித்த ஒரு சிறிய பகுப்பாய்வையும் நோக்குவது பொறுத்தமானது என நினைக்கிறோம்.

சகோதரிகளின் மாதிரிப் பதில்களுக்குச் செல்வதற்கு முன்னர் இங்கு மூன்று விடயங்களைப் பதிவு செய்வது சற்று பெறுத்தமானது. முதலாவது,  பொதுவாக அனுபவத்தில் கண்ட ஒரு விடயம் என்னவெனில், 

 பெண்களின் இயல்பான கூச்ச சுபாவம்,  சமூக வழக்காறு,  ஆண்களுடன் கருத்துப் பரிமாறுவதில் உள்ள தடைகள் போன்ற பல காரணங்களால்,  நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவர்களது நிஜமான ஆசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பதில்களைத் தருவது மிகவும் குறைவாக இருக்கின்றது. மிகவும் மேலோட்டமான,  பாதுகாப்பான பதில்களையே தெரிவு செய்து முன்வைப்பதைக் காணலாம். இதற்கு மாற்றமான நிலை சகோதரிகள் மத்தியில் இல்லை முழுமையாக என்று சொல்லவும் முடியாது,  பெரும்பாலான நிலையையே இங்கு குறிப்பிடுகிறோம்.

இரண்டாவது,  இன்றைய நாட்களின் இஸ்லாமிய எழுச்சி சூழலின் காரணமாகவோ என்னவோ மேற்சொன்ன கேள்விகளுக்கு சகோதரிகளிடத்திலிருந்து குறிப்பாக இஸ்லாமியச் சாயல் மிகுந்த பதில்களே அதிகமாக வருகின்றன. இது சந்தோஷம் கொள்ளத்தக்க ஒரு நிலைதான் என்றிருந்த போதிலும்,  இங்கு நடைபெற்று இருக்கின்ற ஒரு தவறு என்னவென்றால்,  அவர்களது நிஜமான மனித உணர்வுகள் மார்க்கம் என்ற பெயரால் ஹராமாக்கப்பட்டிருக்கின்றன. 

எனவே,  அவை வெளிப்படுத்தப்படக் கூடாத அசிங்கங்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அன்பு,  காதல்,  அழகு, வசதி,  சொகுசு போன்றன திருமணம் என்ற தலைப்பில் சகோதரிகள் பேசக்கூடாத கெட்ட வார்த்தைகள் அல்லது எதிர்பார்க்கக் கூடாத அம்சங்கள் என்ற மனப்பாங்கு. அதுதான் மார்க்கம் என்ற பெயரில் வளர்க்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயமாகும். இங்கு இவை பற்றிய பத்வாவை வழங்க நினைக்கவில்லை. என்றாலும் இத்தகைய குறுகிய பார்வைகளை விடவும் இஸ்லாம் மிகவும் விசாலமானது என்பதுவே உண்மையாகும்.

எனவே மார்க்கம் பற்றிய சில தவறான புரிதல்களின் காரணமாகவும் சகோதரிகள் தமது உண்மையான பதில்களை பல சமயங்களில் சொல்லாமல் இருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களிடத்தில் குறிப்பாக அந்த விடயங்கள் கேள்விகளாகக் கேட்கப்படும் போது,  சிரிப்பும் வெட்கமும் முகங்களில் தோன்றுவதுடன் மாத்திரமன்றி,  அவை ஆகுமா என்ற ஆச்சரிய வினாவும் சேர்ந்து முகங்களில் தென்படுவதை அவதானிக்கலாம்.

மூன்றாவது,  பொதுவாக சகோதரிகளிடத்தில் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலேயே,  ஒருவித பயம் தொற்றிக் கொள்கின்ற நிலையைத்தான் அதிகம் அவதானிக்க முடிகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எமது சமூக சூழல் பின்னணியில் அமைகின்ற முக்கிய காரணம் எது எனின்,  பெரும்பாலான பெண்களின் எதிர்காலம் அவர்களது கையில் இல்லை என்பதாகும். அவர்களது படிப்பு,  திருமணம்,  தொழில் போன்ற விடயங்களில் அவர்களே சுதந்திரமான தீர்மானம் எடுக்கும் குடும்ப சூழ்நிலைகள் மிகவும் குறைவு. அவர்களுக்காக வேறு யாரோதான் தீர்மானம் எடுக்கிறார்கள். அதில் அவர்களது விருப்பு வெறுப்புக்கள்,  எதிர்பார்ப்புகள் கருத்தில் கொள்ளப்படுவது குறைவு என்ற நிலை காணப்படுகிறது.

இதுபோன்ற ஒரு சூழலில் வாழும் சகோதரிகளிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்கின்ற பொழுது,  ஏன் எதற்கு என்று தர்க்க ரீதியாக சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை. குடும்பத்தினர் பார்த்து ஏதோ செய்து வைப்பார்கள். நான் அதனைப்பற்றி சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மனோநிலையே மிகைத்துக் காணப்படுகிறது. 

திருமணம் குறித்து காதல், இன்பம், சுவை, வசதி என்ற கருத்துக்களையோ அல்லது இபாதத்,  பொறுப்பு,  பாதுகாப்பு என்ற பெறுமானங்களையோ எதனையும் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய ஒரு வீட்டுச் சூழ்நிலையாலும் சில சமயங்களில் பெண் பிள்ளைகள் திருமணத்தால் எதுவும் கிடைக்காது அது ஒரு சடங்கு பூர்வமான வாழ்க்கை என்று நினைத்து காதல் உறவுகளை தேடிச் செல்ல எத்தனிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு.

எனவே, இந்த சுதந்திரமற்ற சூழ்நிலை, அல்லது எதிர்காலம் என்னவென்று தெரியாத மயக்கமான சூழ்நிலை பல சகோதரிகள், நாம் ஏன் திருமணம் செய்கிறோம் என்பதற்குத் தெளிவான பதில்களைத் தருவதற்குத் தடையாக அமைகின்றன.

இந்தப் பின்புலங்களின் காரணமாக, நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இங்கு முன்வைக்கப்படும் சகோதரிகளின் மாதிரி பதில்கள் மிக நுட்பமானவையாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் முடிந்தவரை சரியாக அமைவதற்கான முயற்சி இங்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை.

இனி, பொதுவாக யுவதிகளிடமிருந்து வருகின்ற மாதிரிப் பதில்களை நோக்குவோம்.

1.            கலியாணம் என்பது சந்தோஷமான விடயம். ஆடைகள், நகைகள், சாமான்கள் என எல்லாமே புதிது புதிதாகக் கிடைக்கும்.
2.            வீட்டில் உம்மா, வாப்பா, நானா போன்றவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து, எனக்கு சுதந்திரப் பறவையாகத் திரிவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
3.            எனது வகுப்பு நண்பிகள் அனைவரும் ஒன்றில் திருமணம் முடித்து விட்டனர் அல்லது திருமணம் பேசப்பட்டுள்ளனர். எனக்கு மட்டும்… ஒரே சங்கடமாக இருக்கிறது.
4.            ஒரு பெண் பிள்ளை கட்டாயம் கலியாணம் முடித்துதானே ஆக வேண்டும்.
5.            ஒரு நல்ல மாப்பிள்ளை வந்திருக்காரு, அவரைப் போன்ற ஒருவரை வாழ்க்கையில் தவற விடக் கூடாது.
6.            நாள் ஒருவரை விரும்புகிறேன்
7.            அவர் எனது மாமியின் மகன், சிறிய வயதிலிருந்தே அவர் எனக்கு,  நான் அவருக்கு என்றாகிவிட்டது.
8.            திருமணம் என்பது நபியவர்களது சுன்னா
9.            திருமணம் அல்லாஹ்வின் அருளும் அமைதியுமாகும்.
10.          திருமணம் செய்வதன் மூலம் எனது உலக, மறுமை நோக்கங்களை அடைந்து கொள்ள முடியும்.
11.          திருமணம் ஆபாச உலகில் இருந்து என்னைக் காக்கும் வேலியாகும்.
12.          தாய்மை அடைவதன் மூலம் எனது பெண்மையை முழுமைப்படுத்திக் கொள்வதற்காக.
13.          கணவனுடனான உறவாடல் சுவர்க்கம் செல்வதற்கான வழியாகும்.
14.          திருமணம் இஸ்லாம் எதிர்பார்க்கும் ஸாலிஹான சந்ததியை உருவாக்கும் வழி.
15.          திருமணம் வசதியான வாழ்வுக்கும் வறுமையில் இருந்து தப்பிக் கொள்ளவும் வழியாகும்.
16.          திருமணம் என்பது எனது கனவு நாயகனை அடைந்து கொள்ளும் வழி.

இவை நான் ஏன் திருமணம் செ;யய வேண்டும் என்ற கேள்விக்கு சகோதரிகள் அளிக்கின்ற பதில்களுக்கான சில உதாரணங்கள். கடந்த பத்தியில் குறிப்பிட்டது போல்,  இந்தப் பதில்களில் எவையும் ஹராமானவையல்ல என்றிருந்த போதிலும் இவற்றில் அடிப்படையானவையையும் கிளையானவையையும் கண்டிப்பாக நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். 

இங்கு அடிப்படையான பதில்கள் என்பதன் மூலம் நாம் எதனைக் குறிப்பிடுகிறோம் எனின்,  திருமணம் என்ற ஒரு முறைமையை மனித வாழ்வில் அல்லாஹ்தஆலா ஏன் வைத்திருக்கிறான்? அதன் மூலம் உலகில் பிரதானமாக என்ன மாற்றத்தை விளைவிக்க விரும்புகிறான்? போன்ற விடயங்களை மையப்படுத்தி அமைகின்ற பதில்கள் அனைத்தும் அடிப்படையான பதில்களாகக் கருதப்படும். கடந்த அமர்வில் குறித்துக் காட்டியது போல் திருமணத்தை ஒரு வணக்கமாகவும்,  பொறுப்பாகவும் சமூகப் பாதுகாப்பாகவும் உணர்கின்ற பொழுதே அந்தக் குடும்ப வாழ்வின் நிலைத்த தன்மை உத்தரவாதப்படுத்தப்படுகிறது. எனவே,  திருமண வாழ்விற்குள் நுழையும் ஒருவரது திருமணம் பற்றிய பார்வை மேற்போந்த அடிப்படைகளின் மீது அமைய வேண்டும் என்பதே இங்கு பிரதானமாக வலியுறுத்தப்படுகிறது.

அதேபோல் கிளையான பதில்கள் என்பதன் மூலம் கடந்த அமர்வில் சுட்டிக் காட்டியது போல்,  சில உடனடித் தேவைகளின் எதிர்வினையாக அமைய முடியும் அல்லது சில மனவெழுச்சிகளாக அமைய முடியும். இவை இயல்பான மனித எதிர்பார்ப்புகள்,  விருப்பங்கள் என்ற வகையிலும்,  திருமணம் என்ற செயற்பாட்டின் பொதுவான பயன்கள் என்ற வகையிலும் இவற்றை எவரும் மறுத்துரைக்க மாட்டார்கள். ஆனால் ஒருவரது திருமணம் பற்றிய பார்வை இவற்றை மாத்திரம் மையப்படுத்தியதாகக் அமைந்துவிடக்கூடாது. இவற்றின் மீது மாத்திரம் எழுகின்ற ஒரு குடும்ப வாழ்வு நிலைத்து நிற்பதிரிது. ஏனெனில்,  எதிர்பார்ப்புகளும் மனவெழுச்சிகளும் கிடைக்காமல் போகின்ற பொழுது வாழ்வையே இழந்துவிட்டது போலவும், வாழ்வே அர்த்தமற்றுப் போய்விட்டதாகவும் ஒருவர் நினைத்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனாலும் வாழ்வை ஒரு இபாதத்தாகவும் பொறுப்பாகவும் நோக்குகின்ற பொழுது,  மேற்போந்த எதிர்பார்ப்புகளில் குறைபாடு நிகழ்ந்தாலும் அவற்றை விட்டுக் கொடுத்து வாழ்வது இலகுவாகி விடுகிறது. அடிப்படைகளின் மீதுதான் வாழ்வு எழுந்து நிற்கிறது. அவை விட்டுக் கொடுக்கப்பட முடியாதவை. கிளைகள் வாழ்வை அழகுபடுத்துபவை. விட்டுக் கொடுக்க முடியுமானவை. நாம் அடிப்படைகளின் மீது உறுதியாக உள்ள போது கிளைகளில் ஆசை வைத்தல் ஒரு போதும் தவறாக மாட்டாது.


இறுதியாக, மேலே சகோதரிகளால் வழங்கப்பட்ட பதில்களுள் எட்டாவது முதல் பதினான்கு வரையான பதில்கள் திருமணம் பற்றிய அடிப்படைப் பார்வையை பிரதிபளிக்கும் பதில்களாகும். ஏனையவை அனைத்தும் கிளைகளாகும். சகோதரிகளே,  திருமணம் பற்றிய உங்களது பார்வைகளை சரியான திசைக்கு திருப்புவதற்கான ஒரு வழிகாட்டல் இங்கு இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி உங்கள் பார்வைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள் என்று நினைக்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் எமது அடுத்த அமர்வில் குடும்ப வாழ்வின் நோக்கங்கள் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது பற்றி சற்று கவனம் செலுத்துவோம். அல்லாஹ் எம்மை பொறுந்திக் கொள்வானாக.

Monday, August 11, 2014

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல்

முஸ்லிமுக்கு ஆதரவளித்தலும் நாட்டுக்கு ஆதரவளித்தலும்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியினர் இலங்கையில் கிரிக்கட் போட்டிகளுக்கான ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்,  இலங்கை முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் அல்லது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற ஒரு கருத்து பெரும்பான்மை சமூகத்தவர்களிடம் பரவாலாக காணப்படுகிறது. 

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் இங்கு ஆதரவளித்தல் சம்பந்தமாக ஷரீஅத் ரீதியான ஒரு பார்வையை முன்வைப்பது பொறுத்தம் என நினைக்கிறேன்.

முஸ்லிம்கள் ஒரே உம்மத்தினர் என்ற கோட்பாடும்,  தாய் நாட்டுச் சிந்தனையும் ஒன்றை ஒன்று முரண்பட்ட விடயங்கள் அல்ல என்பது இன்று பல தடவைகள் பல உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களால் தெளிவுபடுத்தப்பட்ட ஒரு விடயமாகும். அந்த வகையில் ஒரு நாட்டைச் சார்ந்திருப்பதும் அதனை நேசிப்பதும் அதற்காக உழைப்பதும் அதன் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதும் இஸ்லாமிய அகீதாவுக்கோ அல்லது ஷரீஅத் சட்டங்களுக்கோ முரணானதல்ல என்பது போல் முஸ்லிம்கள் ஒரே உம்மத்தினர் என்ற கோட்பாட்டுக்கும் முரணானதாக அமைய மாட்டாது. 

கருத்து ரீதியாக இந்த உண்மையை பொதுவாக எவரும் மறுக்க மாட்டார்கள்,  ஆனால் இதன் செயற்பாடு வடிவங்களில், மயக்கங்களும் தெளிவின்மைகளும் தோன்ற முடியும்.

அத்தகைய ஒரு தெளிவற்ற நிலை மேற்சொன்ன விவகாரத்திலும் இருப்பதாக நினைக்கிறேன். இஸ்லாம் முன்வைக்கும் |அல் வலா| எனும் சார்ந்திருத்தல் கோட்பாடு பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது இங்கு சார்ந்திருத்தல் என்பது வெறுமனே பௌதீக ரீதியானதாக மாத்திரமன்றி,  அது உளப்பூர்வமானதாகவும் காணப்படல் வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். எனவே அங்கு பற்று நேசம் ஆதரவு உதவி ஒத்துழைப்பு என்ற எல்லா வகையான உறவுகளும் காணப்படல் வேண்டும் என்பார்கள்.

அந்த வகையில் இந்த வலா என்ற சிந்தனையை அறிஞர்கள் உம்மத் தேசியம் என்ற அடிப்படையில் நின்று சகோதரத்துவ சார்ந்திருத்தல் என்றும் ஒரு முறைமையைச் சார்ந்திருத்தல் என்றும் இரண்டாக வகுத்து நோக்குவார்கள். (வலா என்ற சார்ந்திருத்தல் கோட்பாட்டை பல்வேறு கண்ணோட்டங்களில் பலவேறு பிரிவுகளாக அறிஞர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பதும் இங்கு அதன் ஒரு வகையான பாகுபாடு மாத்திரமே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவும்). 

இதில் முதல்வகை நம்பிக்கை சார்ந்தது முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற அல்குர்ஆன் வசனம் இக்கருத்தையே குறித்து நிற்கின்றது. அந்தவகையில் இது உம்மத்தை நோக்கிய சார்ந்திருத்தலாகும். இரண்டாம் வகை ஒரு முறைமை சார்ந்தது,  அதாவது இது ஒரு தேசத்தை மையப்படுத்தியது. 

தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தமக்கு மத்தியில் உரிமைகளையும் கடமைகளையும் பகிர்ந்து வாழும் ஒரு முறைமையாகும்,  இங்கு இன மொழி நிற நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்வு கட்டமைக்கப்பட மாட்டாது,  மாற்றமாக குறித்த அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களது பொது நலனை அடிப்டையாகக் கொண்டு அங்கு வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய ஒரு வாழ்வொழுங்கையும் இஸ்லாம் மறுதலிக்கவில்லை. நபியவர்களது மதீனா சாசனம் இந்த வாழ்வொழுங்குக்கு சிறந்த உதாரணமாகும்.

இந்த இருவகையான சார்ந்திருப்பையும் இஸ்லாம் பேசியிருக்கின்றது, இரண்டையும் ஏற்றுக் கொண்டுமிருக்கிறது,  எனின் இவற்றிற்கிடையிலான சமநிலைப்படுத்தல் எவ்வாறு அமையலாம்? 

ஒரு தேசத்தில் வாழும் முஸ்லிம் தனது தேசத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிமுடன் பேணும் சார்ந்திருப்பு என்பது ஒரு போதும் தான் வாழும் தேசத்தின் ஏற்றுக் கொண்ட பொது நலன்களுக்கு முரணானதாகவோ அல்லது அவற்றை அவமதிப்பதாகவோ அமையக் கூடாது மாத்திரமன்றி தேசத்தை சார்ந்திருத்தல் என்பதும் வெறுமனே பௌதீக ரீதியானதாக மாத்திரமன்றி உளப்பூர்வமானதாகவும் காணப்படல் வேண்டும். 

அத்துடன் தனது தேசத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிமுடனான சார்ந்திருப்பு நம்பிக்கை சார்ந்தது என்ற வகையில் அந்த நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையிலும் அதனை வளர்க்கும் வகையிலும் அந்த சார்ந்திருப்பு காணப்பட முடியும். அது ஒரு போதும் அநியாயத்திற்கு துணை போவதாகவோ உடன்படிக்கைகளை மீறுவதாகவோ அமையக்; கூடாது.

மேற்கூறிய சிந்தனைகளை ஓரளவுக்கு கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் பேசுவதாக நினைக்கிறேன். அல்குர்ஆன் ஹிஜ்ரத் செய்து இஸ்லாமிய தேசத்திற்கு வந்தவர்களையும் வராதிருந்தவர்களையும் பற்றிப் பேசுகின்ற பொழுது,  | ஈமான் கொண்டு ஹிஜ்ரத் செய்யாமல் இருக்கின்றவர்களுடன் உங்களுக்கு வலா எனும் சார்ந்திருப்புக் கிடையாது,   அவர்களது மார்க்கத்தில் உங்களிடம் உதவி கேட்டால் அதற்கு உதவி வழங்குங்கள்.  ஆனால், நீங்கள் ஏற்கனவே உடன்படிக்கை செய்த ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் அது காணப்படக் கூடாது| (அன்பால் - 72). 

இந்த அல் குர்ஆன் வசனத்தில் சார்ந்திருப்பு இல்லை என்று குறிப்பிடப்பட்டமை தேசம் சம்பந்தப்பட்ட சார்ந்திருத்தலையே குறிக்கின்றது.  மாற்றமாக நம்பிக்கை சார்ந்த சார்ந்திருத்தலைக் குறிக்கவில்லை என்பதை வசனத்தின் ஓட்டத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலே பேசப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையில் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கான ஆதரவு நிலைகள் எவ்வாறு அமைவது பொறுத்தமானது என்பதை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். 

இங்கு கிரிக்கட் எனும் விளையாட்டின் ஷரீஅத் ரீதியான நிலைப்பாடு குறித்து நான் பேசவில்லை, அதில் சார்பான எதிரான வாதங்கள் காணப்பட முடியும். அவற்றைத் தாண்டிச் சென்று கிரிக்கட் விளையாட்டின் போதும் சரி அதுவல்லாத ஏனைய விடயங்களின் போதும் சரி எங்களது நடத்தை எவ்வாறு காணப்பட வேண்டும் என்பது குறித்தே இங்கு பேசப்படுகிறது.

அந்த வகையில் ஒருவர் பாகிஸ்தான் என்ற நாட்டையும் அதன் மக்களையும் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் விரும்புவதும் உதவி செய்வதும் தவறானதல்ல. ஆனால் அது இலங்கைக்கு எதிரானதாகக் கட்டமைக்கப்படுவது தவறானதாகும். 

அதே போல் எமது தாய் நாடு என்ற வகையில் இலங்கையையும் அதன் மக்களையும் விரும்புவதும் உதவி செய்வதும் தவறானதல்ல,  ஆனால் அது இஸ்லாம் தடை செய்த வெறியாகவோ பாகிஸ்தானை அவமதிப்பதாகவோ அமைந்து விடக் கூடாது. 

கிரிக்கட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இது நம்பிக்கை சம்பந்தப்பட்டதல்ல நலன்கள் சம்பந்தப்பட்டது. எனவே இவ்விளையாட்டின் மூலம் நாட்டுக்கு ஒரு நன்மை அமையப் பெறுகிறது என்றிருக்கும் போது நமது நாட்டை ஆதரிப்பதே பொறுத்தமானதாகும். அதேவேளை திறமைகள் எந்தத் தரப்பில் வெளிப்பட்டாலும் அவை மதிக்கப்படவும் பாராட்டப்படவும் வேண்டும்.


இது எனது தனிப்பட்ட ஒரு இஜ்திஹாத் மாத்திரமேயாகும். இதில் யாரும் மாற்றுக் கருத்துக் கொள்ள முடியும். அவற்றையும் வரவேற்றவனாக முடிந்தவரை எமது நடத்தைகளை இந்த வரையறைகளைப் பேணி அமைத்துக் கொள்ள அல்லாஹ்தஆலா தௌபீக் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விடைபெறுகிறேன்.

Tuesday, July 29, 2014

சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பங்கேற்பு , உஸ்தாத் அப்துல் பத்தாஹ் மூரோ அவர்களின் சிந்தனையிலிருந்து என்ற ஆக்கம் தொடர்பான ஒரு பின்னூட்டல்.

முதலில் இந்தக் ஆக்கத்திற்காக சகோதரர் சகி பவுஸைப் பாராட்டியாக வேண்டும்,  அல்லாஹு யுபாரிக் பீஹி,  காரணம் இதன் அறபு மூலங்களைப் பார்வையிட்ட போது அங்கு பேசப்பட்டுள்ள சிந்தனைகளை மிகச் சரியாக உள்வாங்கி சிறந்த மொழிக்கையாள்கையுடன் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜஸாஹுல்லாஹு கைர்.

கட்டுரையில் பிரதானமாக மூன்று சிந்தனைகள் பேசப்பட்டுள்ளன.
1.            அரசியல் உளவியல் தஃவா உளவியலை விட்டும் வித்தியாசமானது, தஃவா உளவியல் பயிற்றுவிப்பு பொறுமை கட்டுப்பாடு நீண்ட இலக்குகள் போன்றவற்றை மையப்படுத்தியது ஆனால் அரசியல் உளவியல் உடனடி நலன்களை அடிப்படையாகக் கொண்டவை,  இந்த வேறுபாடு அரசியல் வேலைத்திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
2.            அரசியலில் உன்னத இலக்குகளை விடவும் நடைமுறைக்குப் பொறுத்தமான தீர்வுகளே முக்கியமானது.
3.            மக்களாதரவை விடவும் அரசை கொண்டு செல்வதற்கான சக்தி முக்கியமானது.

அந்தவகையில் தஃவா வேலைத்திட்டத்தை விட்டும் அரசியல் வேலைத் திட்டம் சுயாதீனமாக அமைய வேண்டும்.

இங்கு பேசப்பட்ட எந்த சிந்தனையும் மறுக்கப்படுவதற்கில்லை,  அரசியலில் இவை முக்கியமானவை, அதிலும் குறிப்பாக மூன்றாவது சிந்தனை அறபு வசந்தத்தின் பின்னர் இஸ்லாமிய இயக்கம் கற்றுக் கொண்ட முக்கிய ஒரு பாடம் என்பதை அவர்களே பல தடவைகள் முன்வைத்திருக்கிறார்கள். இவற்றுடன் சில பின்னூட்டல்களை மாத்திரம் இங்கு முன்வைக்கிறேன்,  இவை ஒரு மெருகூட்டலாகவும் முழுமைப்படுத்தலாகவும் அமையும் என நினைக்கிறேன்.

ஆரம்பமாக,  இங்கு கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளவை புதிய விடயங்கள் அல்ல,  மாற்றமாக கடந்த நாட்களில் சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தின் உள்தளங்களிலும் வெளித்தளங்களிலும் ஒரு வாதப் பொருளாக உள்வாங்கப்பட்டிருக்கும் ஒர் அம்சமாகும். அதிலும் குறிப்பாக அறபு வசந்தத்தின் பின்னர் இவ்விடயம் மிகவும் வலுவடைந்தது மாத்திரமன்றி பொதுத்தளத்திலும் பகிரங்கமான விவாதமாக மாறியுள்ளது.

கட்டுரையில் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது போல் அரசியல் பணி என்பது இஸ்லாமிய இயக்கத்தின் பரந்த வேலைப்பரப்புக்களில் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. இஸ்லாமிய இயக்கத்தின் ஏனைய பணிகளுடன் ஒப்பிடும் போது அரசியல் பணியின் வயது ஒப்பீட்டளவில் குறைவானதாகும். அந்த வகையில் அதன் நகர்வுகள் மூலோபாயங்கள் என்பன இன்னும் முதிர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஒரு நிலையிலேயே அமைந்திருக்கின்றன.

அறபு வசந்தத்தின் பின்னர் சர்வதேச இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுள் ஒருவர் இதுபற்றிக் கூறும் போது,  கடந்த காலங்களில் இஸ்லாமிய இயக்கம் சமூகத்திற்குத் தலைமை வழங்குவதில் நீண்ட அனுபங்களைக் கண்டிருக்கிறது,  ஒரு நாட்டிற்குத் தலைமை வழங்குவதற்கான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும்  வாய்ப்பு இப்பொழுதுதான் அமையப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

எனவே அரசியல் செயற்பாட்டின் இயல்புகள் உளவியல்களில் இன்னும் அனுபவப்பட வேண்டிய பல விடயங்கள் காணப்படமுடியும்,  இவை எல்லாம் வாதத்திற்குரியவை,  இவற்றில் சரி பிழைகளுக்கப்பால் நீண்ட கால திட்டமிட்ட அரசியல் புறக்கணிப்பக்குப் பின்னர் மெதுவாக எழுந்து நிற்கும் முயற்சி இது என்பதும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்,  எனவே ஏற்றங்களுடனும் இறக்கங்களுடனுமே இந்தப் பயணம் தொடரும். இங்கு எந்த விமர்சனமும் அல்லது ஆலோசணையும் மறுக்கப்படுவதற்குரியவை அல்ல,  அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு பயணமாகவே இது காணப்படும். சுறுக்கமாகக் கூறின் அரசியல் வேலைத்திட்டம் புதியது,  இங்கு கூறப்படும் கருத்துக்கள் ஏற்கனவே வாதப் பொருள்களாக உள்வாங்கப்பட்டவை.

அடுத்து,  ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பது ஒரு போதும் மறுக்கப்படுவதற்குரியது அல்ல. அந்த வகையில் அரசியல் செயற்பாட்டின் உளவியலும் இயல்புகளும் நிச்சயம் வேறுபட்டவைதான்,  அதன் காரணமாக தஃவா செயற்பாட்டுடன் தொடர்பற்ற வகையில் இரு தரப்பு தலையீடுகளும் இன்றி அது தனியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தற்கால மூலோபாயமாக அமைவதும் தவறானதல்ல. ஆனால் இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

ஒன்று அரசியல் உருவாக்கம்,  நேரடியான கட்சி அரசியல் செயற்பாட்டின் போது பல சமயங்களில் இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவதில்லை,   அரசியல் செயற்பாடு உடனடியான குறுகிய கால நலன்களை மையப்படுத்தி அமையலாம் ஆனால் ஒரு சமூகத்தின் அரசியல் திட்டம் நீண்ட கால இருப்பை இலக்காக் கொண்டதாகவும் அமைய வேண்டும். இல்லாத போது இன்று எத்தனையோ அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டிருப்பது போல் அதன்  ஆரம்ப நட்சத்திரங்களின் மறைவின் பின்னர், ஆளுமைகளற்ற வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட முடியும்.

எனவே இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் செயற்பாடு சுயாதீனமாய்க் காணப்படலாம்,  ஆனால் அரசியல் உருவாக்கம் இஸ்லாமிய இயக்கத்தின் பொறுப்பில் இருப்பதே பொறுத்தமானது. இவ்விடயம் குறித்து இரு தரப்பினர்க்கும் தெளிவான ஒருங்கிணைப்புப் பொறிமுறை ஒன்றும் அவசியம்.

அரசியல் உருவாக்கத்தை அந்த அரசியல் கட்சியே மேற்கொள்ளலாமே என்ற வாதத்தை ஒருவர் முன்வைக்கலாம்,  ஆனால் அப்போது எதற்காக வேறாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதோ அதே பிரச்சினையில் அந்தக் கட்சி அல்லது அந்த அரசியல் வேலைத்திட்டம் மீண்டும் விழுந்து விடும். மாத்திரமன்றி நடைமுறையில் அது சாத்தியமற்றதும் கூட, அதற்கான முன்னுதாரணங்களும் இருப்பதாய்த் தெரியவில்லை.

இரண்டாவது நேரடி அரசியலில் ஈடுபடும் ஆளுமைகளின் ஆன்மீக உறைவிடம் எவ்வாறிருக்க வேண்டும்? தெளிவாகக் கூறின் அவர்களுடைய தர்பிய்யத்துக்கான உத்தரவாதம் என்ன? ஏனெனில் தர்பிய்யத் என்பது குறிப்பிட்ட கட்டத்துடன் நிறைவுபெறும் ஒர் அம்சமல்ல,  எந்தத் தளத்தில் இயங்குகின்றவர்களும் அடிக்கடி தூசு தட்டப்பட்டு, கழுவி சுத்தப்படுத்தி,  இளைப்பாறி,  மனசை ஆசுவாசப்படுத்திச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் வேண்டும். அதிலும் அரசியல் தளத்தில் இதன் தேவை சற்று வலுவானதாகவே காணப்படுகிறது.

இந்தப் பணியையும் அதே அரசியல் கட்சி மேற்கொள்வது சிரமமானது,  இதற்கான தெளிவான ஒருங்கிணைப்பும் இஸ்லாமிய இயக்கத்துடன் காணப்பட வேண்டும்.

எனவே அரசியலை தஃவாவை விட்டு வேறுபிரித்தல் என்கின்ற பொழுது,  அது வரையறைகளற்ற ஒரு பொது சிந்தனையாக மாத்திரம் புரிந்து கொள்ளப்படக் கூடாது. கட்டமைப்பு,  தீர்மானம்,  செயற்பாடுகளில் சுயாதீனத்தன்மை காணப்பட்டாலும்,  இருப்பு,  ஆன்மா என்ற வகையில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலையே காணப்படுகிறது.

அடுத்து,  இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பரப்புகளில் ஒரு பரப்பில் ஏற்படும் பின்னடைவு முழு இஸ்லாமிய இயக்கத்தினதும் தோல்வியையோ அறிவீனத்தையோ அடையாளப்படுத்த மாட்டாது, அல்லது இஸ்லாமிய இயக்கத்தின் செல்லுபடியற்ற தன்மையையும் வலியுறுத்த மாட்டாது.

இந்த நியாயத்தை ஷெய்க் மூரோவின் கருத்து முன்வைப்பில் தெளிவாக அவதானிக்க முடிகிறது. அவர் மாற்றம் அவசியமான இடங்களை சுட்டிக் காட்டுவதில் கவனமாக இருந்தார். இயக்க செயற்பாட்டை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது அது பொறுத்தமற்றது என்று சொல்வதோ அவரது நோக்கமாக இருக்கவில்லை.

இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை,  ஒன்றைக் கட்டுவதை நோக்கமாக் கொண்டிருக்கிறது உடைப்பதை அல்ல. அந்தவகையில் ஒரிடத்தின் குறைபாடு முழு இயக்க செயற்பாட்டையும் மறுதலிப்பதாக அமைந்து விடக்கூடாது. ஆனால் இன்று சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் பின்னடைவுகளை சிலர் இயக்க செயற்பாட்டின் தோல்வியாகவும் அல்லது அதன் அவசியமற்ற தன்மைக்கான சான்றாகவும் சித்திரிக்க முயல்கின்றனர். ஏலவே குறிப்பிட்டது போல் விமர்சனங்களும் ஆலோசணைகளும் என்றும் ஏற்புடையவைதான்,  ஆனால் இவற்றை சிலர் தமது சந்தைக்கான விற்பனைப் பொருளாக பயன்படுத்த முனைவதுதான் மறுக்கப்பட வேண்டியது.

இறுதியாக,  சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் பின்னடைவு குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போது,  ஒரு விடயம் அடிக்கடி வலுவாகப் பேசப்படுகிறது. அதாவது பின்னடைவுக்குப் புறக்காரணிகளை நோக்கி நாம் விரலை நீட்டுவதை விடவும் அகக் காரணிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பது.

உண்மைதான் பிரச்சினை என்று ஒன்று இருந்தால் இரண்டு தரப்பிலும்  தவறுகள் இருக்கும்,  எனவே எமது தோல்வியை எதிரியின் சதி என்று அவன் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு எமது பலவீனங்களை மறந்து விடக் கூடாது. இஸ்லாமிய வரலாற்றில் உஸ்மானியக் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு புறச்சதி மாத்திரம் காரணமல்ல உள்ளார்ந்த பலவீனமும் ஒரு பிரதான காரணம்தான்.

இங்கு நியாயமாக ஒரு கேள்வி தோன்றுகிறது,  எகிப்தில் முர்ஸியும் டியூனிஷியாவில் நஹ்லாவும் பின்னடைந்தமைக்கு சதியும் பலவீனமும் இரண்டு காரணங்களும் இருக்கின்றன.

ஆனால் இவற்றில் எதனுடைய பங்கு அதிகம்?

விஞ்ஞான பூர்வமாக இந்த விடயத்தை நாம் அணுகியிருக்கிறோமா?

அதன் பெறுபேறுகளில் நின்று விமர்சனங்களும் ஆலோசணைகளும் முன்வைக்கப்படுகின்றனவா?

எகிப்திலும் சரி டியூனிஷியாவிலும் சரி இஸ்லாமிய இயக்கத்தின் அரசியலை உண்மையில் மக்கள் மறுதலித்தார்களா?

மக்களது தேவைகள் நிறைவேற்றப்படாமையினால்தான் அவர்கள் பின்னடைவை எதிர்கொண்டார்களா?

எகிப்திலும் டியூனிஷியாவிலும் முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று இஸ்லாமிய வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் விளைவு எவ்வாறு அமைந்திருக்கும்?


விமர்சனங்களுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது,  நியாயமாக இந்தக் கேள்விகளுக்கும் நாம் விடை தேட வேண்டும். அப்பொழுதுதான் குறைசொல்லல் பழி சொல்லல்களைத் தாண்டி நாம் நியாயமான ஒரு நிலைப்பாட்டிற்கு வரலாம்.