Friday, July 15, 2016

மகாஸிதியப் பெண்மணி - ஜமீலா திலூத்


மொரோக்கோவின் மகாஸிதியப் பாரம்பரியத்தில் ஆண்களின் பங்களிப்பைப் போன்றே அதனுடன் போட்டி போடுகின்ற வகையில் பெண்களின் பங்களிப்பும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நான் கலந்து கொண்ட மகாஸிதுல் குர்ஆன் 2 என்ற கருத்தரங்கில் சுமார் பாதிக்கு மேல் பெண்கள் கலந்து கொண்டமையும், அவர்களது தரமான பின்னூட்டல்களும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவர்களில் சகோதரி ஜமீலா திலூத் முன்னணியில் இருக்கும் குறிப்பிடத்தக்க மகாஸித் ஆய்வாளர்களில் ஒருவர், மொரோக்கோவின் கஸப் லங்கா எனப்படும் தாருல்பைழாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர், ஆரம்பத்தில் பொருளியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டாலும், அடுத்து தனது துறையை மாற்றி இஸ்லாமியத் துறையில் கற்கையை மேற்கொண்டிருக்கிறார்.




ஒரு தடவை, ஆய்வரங்கு ஒன்றில் தனது ஆய்வனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சமயத்தில், இமாம் ”ஷாதிபியின் பார்வையில் சட்டமியற்றப்படாமல் விடப்பட்ட பகுதி” என்ற தனது ஆய்வுக்கட்டுரை குறித்துப் பேசும் போது, தான் எப்பொழுதும் உடன்வைத்திருக்கின்ற ஒரு நூலாக இமாம் ஷாதிபியின் முவாபகாத் என்ற நூல் இருந்திருக்கிறது. மாத்திரமன்றி அதனை நான் பல தடவை பூரணமாக வாசித்து முடித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் மீண்டும் புதிதாய் வாசிக்கின்ற உணர்வே என்னில் மேலிட்டிருக்கிறது, ஒவ்வொரு தடவையும் கடந்த வாசிப்பில் கிடைக்காத ஒரு புதிய விடயம் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மகாஸித் துறையில் ஈடுபடுகின்ற எல்லோரும் இமாம் ஷாதிபியின் முவாபகாத்தை ஒரு தடவையேனும் வாசிப்பதே மிகவும் அரிதான ஒன்று, அப்படி இருக்கையில் பல தடவைகள் வாசித்திருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான், அந்த சபை அதற்காக அவருக்கு எழுந்து நின்று கைதட்டியது.

சகோதரி ஜமீலா திலூத்தை வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு முக்கிய விடயம் என்னவெனில் அவரது பல்துறை ஈடுபாடாகும். அவரே அது பற்றிக் குறிப்பிடும் பொழுது, உஸுலுல் பிக்ஹ், மகாஸிதுஷ் ஷரீஆ, இஸ்லாமியக் குடும்பவியல், அரசியல்தத்துவம், மானுடசமூகவியல் விவகாரங்கள், நவீன இஸ்லாமிய சிந்தனை என பல பரப்புக்களில் தனது ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாத்திரமன்றி இந்த எல்லா பரப்புக்களிலும் தனது புலமைத்துவப் பங்களிப்பை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் (2016) துருக்கியில் நடைபெற்ற குடும்பம் பற்றிய சர்வதேச இஸ்லாமிய சாசனத்திற்கான மாநாட்டிலும், ”பரம்பரையைப் பாதுகாத்தல் எனும் மக்ஸதும் அதன் சமூக உளவியல் தாக்கங்களும்” என்ற ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருந்தார். குடும்பவியல் துறையில் இவரது முன்னோடியான பங்களிப்பாக ” குடும்பம் பற்றிய அல்குர்ஆனின் சிந்தனை” எனும் நூலைக் குறிப்பிடலாம். இவரது கலாநிதிக் கற்கைக்கான ஆய்வு ” மத ஒப்பீட்டாய்வும் நாகரீக உரையாடலும்” என்ற தலைப்பில் அமையப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்தில் இந்த ஆய்வை நிறைவுசெய்து கலாநிதிக் கற்கையை நிறைவு செய்யவுள்ளார். கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்களால் வழிநடாத்தப்படும் மொரோக்கோவில் அமைந்துள்ள மர்கஸுல் மகாஸித் நிறுவனத்திலும் ஒரு அங்கத்தவராகத் தொழிற்படுகிறார்.

இவரது ஆய்வுகளில் எனக்கு சற்று வித்தியாசமாய்த் தோன்றிய இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று குடும்பவியல், பெண்கள் பற்றிய அவரது ஆய்வுகள், என்னுடைய வாசிப்பில் இந்த இரு தலைப்புக்களிலும் ஆண்களால் எழுதப்பட்ட ஆக்கங்களையே அதிகம் வாசித்திருக்கிறேன், ஆனால் இவை பற்றி ஒரு பெண் எழுதினால் அந்தப் பார்வைக் கோணம் எவ்வாறு இருக்கும், அதிலும் மகாஸித் பின்புலத்தில் நின்று எழுதினால் எவ்வாறு இருக்கும் என்பது உண்மையில் ஒரு புது அனுபவம். ஆண்களை நோக்கிய செய்திகள் அங்கு நிறையவே இருப்பதை அவதானித்தேன்.

இரண்டாவது மகாஸித், உஸுல் பிக்ஹ் பற்றிய அவரது ஆய்வுகள், அவரது ஆய்வுத் தலைப்புக்களில் அதிக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டவை இவைதான். இந்தப் பரப்பில் அவர் முன்வைக்கும் ஒரு கருத்து அவதானத்திற்குரியது. அதாவது, மகாஸித் தனித்த கலையா? உஸுல் பிக்ஹின் ஒரு பகுதியா? என்பதில் இந்த விவாதத்தைத் தாண்டி இவற்றின் விளைவு என்ன என்ற அடிப்படையில் எமது சிந்தனை அமைவதே பொருத்தம் என்கிறார். மகாஸித் தனித்த கலை என்று நாம் வைத்துக் கொண்டாலும் அது ஒரு கோட்பாட்டு உண்மை மாத்திரம்தான், சட்டவாக்கத்திலோ, சிந்தனையாக்கத்திலோ அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டாது. உஸுல் பிக்ஹுடன் இணைத்துப் பயன்படுத்துகின்ற போதே அது மிகச் சரியான விளைவைத் தரமுடியும், மாத்திரமன்றி சிந்தனைப் பிறழ்வுகளிலிருந்தும் பாதுகாக்கும், ஏனெனில் மகாஸிதின் தனித்த பிரயோகம் வரையறையற்றது, அங்கு நிறையவே அபாயங்கள் இருக்கின்றன, என்கிறார்.


எதிர்கால புலமைத்துவ செயற்தளத்தில் சகோதரி ஜமீலா திலூத்திற்கு ஒரு தனியிடம் இருக்கப் போகிறது, அதற்கு நிகழ்காலம் சாட்சி. இந்த ஒரு ஜமீலா மாத்திரமன்றி இவர் போன்ற ஆயிரம் ஜமீலாக்கள் தோற்றம் பெறுவதற்கான புற ஏற்பாடு அந்த நாடுகளில் காணப்படுகின்றன, எங்களிடத்திலும் திறமையான ஜமீலாக்கள் இருக்கிறார்கள், நாம் செய்ய வேண்டியது அவர்களுக்கான புற அக ஏற்பாடுகளைச் தயார் செய்து கொடுப்பதுதான்.

Monday, June 6, 2016

நோன்பு உங்கள் மீது கடமையாகிறது - ஒரு மகாஸிதியப் பார்வை


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ   -- البقرة 183

டியூனிஸிய இஸ்லாமிய அறிஞரான கலாநிதி நூருத்தீன் காதிமி அவர்கள் கூறுவது போல்,  இந்த அல்குர்ஆன் வசனம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது ஈமானியப் பகுதி,  இரண்டாவது சட்டப்பகுதி, மூன்றாவது மகாஸிதியப் பகுதி. “ஈமான் கொண்டவர்களே” என்ற அழைப்புடன் ஆரம்பிக்கும் வசனம் இரண்டாவதாக நோன்பு உங்களுக்குக் கடமையாகிறது என்ற சட்டத்தை முன்வைக்கிறது,  மூன்றாவதாக நோன்பு ஏன் கடமையாகிறது என்பதற்கான நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறது.

ஈமான் கொண்டவர்களே,  என்ற அழைப்பின் தத்துவம் என்ன? அது வெறுமனே ஒரு விழிப்புக் குறி மாத்திரமா?  எங்கள் கவனங்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி மாத்திரமா?  நிச்சயமாக இல்லை. அதனைத் தாண்டிய ஒரு தத்துவம் அதன் பின்னால் மறைந்திருக்கிறது. அதுதான்,  “ஒரு நம்பிக்கைப் பின்புலத்திலிருந்தே ஒரு செயல் தோற்றம் பெறுகிறது” என்ற தத்துவம். இங்கு குறித்ததொரு நம்பிக்கையுடன் இருப்பவர்களைப் பார்த்துதான் அல்குர்ஆன் இந்த சட்டத்தைப் பேசுகிறது. ஏனெனில் ஒரு சட்டம் அல்லது செயல் ஒரு மனிதனிடத்தில் அவன் ஆழ்ந்து நம்புகின்ற ஒரு கருத்தியலின் அடிப்படையிலேயே தோற்றம் பெற முடியும்.

இங்கு மனிதன் ஆழ்ந்து நம்புகின்ற விடயம் என்ன? அல்லது எதனை மனிதன் ஈமான் கொண்டிருக்கிறான்?  அதற்கும் நோன்பு என்ற சட்டத்திற்குமிடையிலான் தொடர்பு என்ன?

மிகவும் எளிமையாகச் சொன்னால் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பின்னால் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை,  இந்த உலக வாழ்வுக்குப் பின்னால் அதன் விளைவைக் காண்பதற்கான மறுமை வாழ்வு ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை,  அந்தப் படைப்பாளன் உலகில் தான் தெரிவு செய்யும் தூதுவர்கள் மூலம் வேதங்களை அனுப்பி மனித சமூகத்தை வழிநடாத்துகிறான் என்ற நம்பிக்கை. இதுதான் இஸ்லாம் பேசும் அடிப்படையான ஈமானியத் தத்துவம். 

இந்த நம்பிக்கை உலகில் மனித வாழ்வுக்கான மிகச் சரியான பெறுமானத்தைக் கொடுக்கிறது. உண்மையில் இது ஒரு நம்பிக்கை என்பதை விடவும் இதுதான் உலகின் நிஜம்,  உண்மை. இந்த உண்மையைத்தான் அல்குர்ஆன் உரத்துச் சொல்கிறது. இந்த உண்மைக்கு ஏற்ப வாழ்வு அமைவதே மனிதவாழ்வின் மிகப் பெரிய நலன். மனிதனின் நிம்மதி சந்தோசம் சுபிட்சம் அனைத்தும் இந்த உண்மைக்கு ஏற்ற வாழ்விலேயே தங்கியிருக்கிறது. இதுதான் மனிதனுக்கு நன்மையானது.
எனவே நம்பிக்கை என்பது அல்லாஹ்வும் மறுமையும் தூதுத்துவமும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளுதல் மாத்திரமல்ல,  மாற்றமாக அவை இருப்பது எனக்காக,  எனது நன்மைக்காக என்ற மனநிலையும் இணைந்ததுவே நம்பிக்கையாகும்.

இப்பொழுது அந்த நம்பிக்கையின் செயல் வடிவமாகவே நோன்பு என்ற சட்டம் அல்லது செயல் இங்கு சொல்லப்படுகிறது. நோன்பு என்ற செயலின் சட்ட நிலைப்பாடு அது வாஜிப் என்பதாகும். அதாவது ஒவ்வொரு தனிநபர் மீதும் அது கடமையாகிறது. 

இந்தக் கருத்தை அல்குர்ஆன் முன்வைக்கும் விதம் சற்று வித்தியாசமானது,  சிந்தனையைத் தூண்டக் கூடியது. “நோன்பு உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்படுகிறது”. இந்த வசனம் நோன்பு என்பது மனிதவரலாற்றில் எல்லா சமூகங்களுக்குமான பொதுக்கட்டளையாகக் காணப்பட்டிருக்கிறது என்ற கருத்தைத் தருகிறது. அதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன? நோன்பு என்ற செயல் மனிதவாழ்வில் அவனுக்குரிய நலனை நிலைநிறுத்துவதற்கான ஒரு அடிப்படையான மனித நடத்தை,  இந்த நடத்தை மனிதவாழ்வில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்,  அது இல்லாமல் போகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது. ஏனெனில் இந்த நடத்தைதான் மனிதவாழ்வுக்கு என்றும் நன்மையானது. அதனால்தான் அல்லாஹ்தஆலா அது உங்களுக்குக் கடமை என்று மாத்திரம் சொல்லாது,  உங்களுக்கு முன்புவாழ்ந்த எல்லா சமூகத்தவர்களிடமும் காணப்பட்ட ஒரு பொது நடத்தை என்ற நியாயத்தையும் இணைத்துச் சொல்கிறான்.

இதனை மற்றொரு வகையில் கூறினால் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் கூறுவது போல்,  நோன்பு என்ற நடத்தையும் ஒரு வகையில் மகாஸித்களில் ஒன்றுதான். ஏனெனில் மனிதவாழ்வில் அழியாது நிலைத்து இருக்க வேண்டிய ஒரு பண்பாகவே நோன்பு இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து நோன்பின் நோக்கம் என்ன? என்பதை அல்குர்ஆன் கூறுகிறது.  “நீங்கள் தக்வா உடையவர்களாக மாறலாம்” . நோன்பின் தனிமனித சமூக விளைவுதான் தக்வா. தக்வாவின் பொருள் என்ன? நாம் பொதுவாகவே தக்வா எனும் போது தவிர்ந்து கொள்ளுதல், ஒதுங்கியிருத்தல் போன்ற எதிர்மறைப் பொருள் ஒன்றையே அதற்கு வழங்குவோம். 

ஆனால் கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் கூறுவது போல்,  தக்வா என்பது “தாதிய்யா” எனும் சுயமாய் செயற்படுதல் என்பதே அதன் உள்ளார்ந்த பொருளாகும். நோன்பு ஒரு மனிதனில் பயிற்றுவிக்க விரும்புகின்ற அடிப்படையான பண்பு,  அவன் எந்த சூழலிலும் எந்த இடத்திலும் எந்த நிகழ்வுக்கு முன்னாலும் கட்டளைக்கு மாத்திரம் செயற்படுபவனாக இருக்க மாட்டான். உள்ளார்ந்த தூண்டுதலின் அடிப்படையில் அவனாகவே முன்வந்து செயற்படுவான். அதுபோல் ஒரு நன்மையான விடயத்தை செய்வதாக இருப்பினும் தீய விடயம் ஒன்றினை தவிர்ந்து கொள்வதாக இருப்பினும் அவனது சுயதூண்டுதல்,  சுயகட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே பெரிதும் தொழிற்படுகின்றவனாக இருப்பான். இதனைத்தான் நாம் தக்வா என்போம். 

ஒரு மனிதனில் இந்தப் பண்பை பயிற்றுவிக்கும் பணியை நோன்பு செய்கிறது. நோன்பின் புறசெயற்பாடுகள் எவ்வாறு காணப்பட்டாலும் அவை அனைத்தின் மூலமும் பிரதானமாக உள்ளத்தைப் பயிற்றுவிக்கின்ற ஒரு பணியே முக்கியமாக நடைபெறுகிறது. அதன் மூலம் மனிதனின் சுயசெயற்பாட்டுக்கான தயார்நிலை அவனில் வளர்க்கப்படுகிறது.

இந்த வசனத்தில் “நீங்கள் தக்வா உடையவர்களாக மாறலாம்” என்று பன்மை வடிவத்தையே அல்குர்ஆன் பிரயோகித்திருக்கிறது. அதன் மூலம் தக்வா என்பது அல்லது சுயசெயற்பாடு என்பது,  சமூகப் பொதுப்பண்பாகக் காணப்படல் வேண்டும். இது வெறுமனே ஒரு தனிமனித அடைவல்ல,  மாற்றமாக ஒரு சமூக அடைவு. எனவே சமூக வடிவில் அதனை சாத்தியப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களும் பொறிமுறைகளும் காணப்படல் வேண்டும். நோன்பு அதிலும் குறிப்பாக ரமழான் மாத வாஜிபான நோன்பு,  ஒரு சமூகக் கடமை.

உண்மையில் சுயசெயற்பாடு என்ற உன்னதமான சமூகப்பண்பு,  சமூகத்திற்கு ஒரு பொறுப்புணர்வை வழங்குகிறது. உண்மையில் பொறுப்புணர்வு என்பதும் கூட,  யாரும் முடுக்கிவிடும் வரை எதிர்பார்த்திராமல் அல்லது கோரிக்கைகளோ,  விமர்சனங்களோ,  எதிர்குரல்களோ எழுவதற்கு முன்னர்,  சுயமாய் செயலாற்றுதலையே குறிக்கிறது. சமூகத்தில் நன்மைகளை விதைப்பதாக இருக்கலாம்,  தீமைகளை அகற்றுவதாக இருக்கலாம்,  ஏன் ஒரு அரசின் பொறுப்பை விசாரிப்பதாகவும் இருக்கலாம்,  இந்த அனைத்திற்கும் அவசியமானது சமூகப் பொறுப்புணர்வு. இதனை தக்வா வழங்குகிறது.

மொத்தத்தில் இஸ்லாத்தின் மூலம் மனித நலன் நிலைநாட்டப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு வசனம் மட்டுமே போதுமான சாட்சி.

இறுதியாக இந்த மூன்று  பரப்புக்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது மற்றொரு விடயம் தெளிவாகிறது. அதாவது,  ஒரு செயலின் வெற்றிகரமான அமுலாக்கம் தங்கிநிற்கும் காரணிகள் என்ன? என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது. ஒன்று,  சாதகமான மனப்பாங்கு பொசிடிவ்வான பார்வை,  இரண்டு,  செயலின் முக்கியத்துவம் அவசியம் குறித்த அறிவு, மூன்று,  செயலின் நோக்கங்கள் பயன்கள் குறித்த தெளிவு. இதனைத்தான் ஈமான், முன்னைய சமூகங்களில் நோன்பு கடமையாக இருந்தமை,  தக்வா போன்ற அம்சங்கள் ஊடாக அல்லாஹ்  விளங்கப்படுத்துகிறான்.


இவ்வருட ரமழானில் நோன்பை விளைவை உணர்ந்து நோற்பதற்கு அல்லாஹ்தஆலா எம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.

Monday, April 4, 2016

திருமணத்தில் தெரிவும் பொறுத்தப்பாடும்

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடை தேட வேண்டிய கேள்விகளுள் ‘யார்’ என்ற கேள்வி குறித்தே கடந்த பத்திகளில் கலந்துரையாடி வருகின்றோம். இன்று அந்தக் கேள்வியின் மற்றொரு பதிலான பொறுத்தப்பாடு என்ற காரணி குறித்து சற்று உரையாடலாம் என்றிருக்கிறோம்.

குடும்பவியல் அறிஞர் அக்ரம் ரிழா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு தடவை என்னிடம் வந்த ஒருவர், ‘தான் திருமணம் செய்யும் போது,  என்னை விடவும் தரத்தில் குறைந்த ஒரு பெண்ணையையே தெரிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவளை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்’ என்றார். அவரது வார்த்தைகள் எனக்கு சிரிப்பை வரவழைத்தன.

 பொறுத்தப்பாட்டுப் பண்புகளில் ஆண் மேலே இருக்க வேண்டுமா? பெண் மேலே இருக்க வேண்டுமா? என்ற விவாதத்தைத் தாண்டி,  திருமணம் என்பதை ஒரு ஆணும் பெண்ணும் இணைதல் என்ற எல்லையுடன் மாத்திரமே அவர் பார்க்கிறார். அவரைப் பார்த்து நான் திருமணத்தில் நீங்கள் ஒரு பெண்ணை மாத்திரம் தெரிவு செய்யவில்லை,  மாற்றமாக அவளது வேர்களையும் சேர்த்தே தெரிவு செய்கிறீர்கள்’ என்றேன்,  அதற்கவர் ‘வேர்களைத் தெரிவு செய்தல் என்றால்…?’ என வினவ,  ‘வேர்கள் என்பது அவளது குடும்பம்,  உறவுகள்’ என்றேன். 

நபியவர்களது ஒரு ஹதீஸை நான் அவருக்கு விளங்கப்படுத்தினேன். ஒரு நீண்ட ஹதீஸின் தொடரில் நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்,  “யார் தனது பார்வையைத் தாழ்த்தவும்,  கற்பைப் பாதுகாக்கவும்,  குடும்பத்தினரை இணைந்து நடக்கவும் திருமணம் செய்கிறாரோ அல்லாஹ் அவரது வாழ்வில் பரகத்தை ஏற்படுத்துவான்” என்றார்கள்.

இங்கு குடும்பத்தினரை இணைந்து நடத்தலை திருமணத்தின் நோக்கங்களில் ஒன்றாக நபியவர்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் திருமணம் என்பது தனித்து ஒரு ஆணும் பெண்ணும் இணைவது மாத்திரமல்ல மாற்றமாக இரண்டு குடும்பங்கள் இணைகின்ற ஒரு விடயம். எனவே நீங்கள் ஒரு பெண்ணைத் தெரிவு செய்கிறீர் எனின்,  அதன் பொருள் உங்கள் பிள்ளைகளுக்கான தாயைத்  தெரிவு செய்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கான பாட்டன்,  பாட்டி,  மாமா,  சாச்சி போன்ற உறவுகளை எல்லாம் தெரிவு செய்கிறீர்கள் என்றுதான் பொருள். எனவே,  அங்கு மார்க்கம்,  கல்வி,  சமூக அந்தஸ்த்து,  பொருளாதார மட்டம்,  உயர் பண்பாடுகள், கலாச்சாரப் பண்புகள் போன்ற பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்ற பொழுதே குடும்ப வாழ்வு சிறக்கிறது என்று அவருக்கு விளக்கமளித்தேன்” என்றார்கள்.

கலாநிதி அக்ரம் ரிழா அவர்களுடைய வார்த்தைகளில் பொறுத்தப்பாடு எனும் விடயம் தனித்து ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல,  அது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதும் கூட என்பதை வலியுறுத்துகிறார்கள். பல சமயங்களில் காதல் திருமண முன்மொழிவுகளின் போது,  குடும்பங்களின் உடன்பாடின்மை இந்தப் புள்ளியில்தான் காணப்படுகிறது. ‘எமது குடும்பத்திற்கு இது ஒத்துவராது’ என்பார்கள். சம்பந்தப்பட்ட ஆணோ பெண்ணோ இந்த “ஒத்துவராது’ என்பதன் பொருள் தெரியாமல்,  திமிரிக் கொண்டு செல்ல முற்படுவார்கள். எல்லாக் கட்டுப்பாடுகளையும் வழக்காறுகளையும் உடைத்தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். இங்குதான் பொறுத்தப்பாட்டுப் பெறுமானங்களைப் புரியாத அவர்களது சிறுபிள்ளைத்தனம் வெளிப்படுகிறது அல்லது பொருத்தம் என்பதை தனித்து விருப்பம் அல்லது உள்ளங்கள் ஒத்துப்போதல் என்பதுடன் மாத்திரம் சுருக்கி ஒரு வித சினிமாத்தனமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். விருப்பத்தைத் தாண்டி,  சமூகப்பொறுத்தப்பாட்டுப் பண்புகள் மிகவும் முக்கியமானவை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

அந்தவகையில் தெரிவின்போது மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய பொறுத்தப்பாட்டுப் பண்புகள் குறித்து சற்று கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் பண்புகளை அடையாளப்படுத்துவதற்கு முதலில் ஒரு விடயத்தை நாம் விளங்கியிருத்தல் அவசியமாகிறது.

அதாவது,  திருமண வாழ்வில் மிகவும் முக்கியமான விடயம் புரிந்துணர்வு என்ற அம்சமாகும். பொறுத்தப்பாடு கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் இவற்றைத் தாண்டி குடும்ப வாழ்வில் சந்தோசம் நிலைக்கக் காரணமாக இருப்பது புரிந்துணர்வுதான். எனவே பொறுத்தப்பாட்டுப் பண்புகளின் அவசியம் குறித்துப் பேசுகின்ற பொழுது,  அவற்றின் மூலம் மாத்திரமே குடும்ப வாழ்வின் ஸ்திரத்தன்மை பேணப்படுகிறது என்பதல்ல,  எவ்வளவு பொறுத்தம் இருந்தாலும் அல்லது கொஞ்சம் பொறுத்தமின்மைகள் இருந்தாலும் புரிந்துணர்வு என்ற காரணி மிகவும் முக்கியமானது. அதன் மூலமே குடும்ப வாழ்வின் சந்தோசமும்,  ஸ்திரத்தன்மையும் பேணப்படுகிறது.

அடுத்து,  ஆண்,  பெண் என்ற எல்லையிலும் சரி,  குடும்பம் என்ற எல்லையிலும் சரி பேண வேண்டிய சில பொறுத்தப்பாட்டு பண்புகள் குறித்து நோக்குவோம்.

1.       மார்க்க ரீதியான பொறுத்தப்பாடு

இதன்மூலம் இரண்டு விடயங்கள் நாடப்படுகின்றன. முதலாவது ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது போல்,  ஆணும் சரி,  பெண்ணும் சரி,  தனது துணையைத் தெரிவு செய்யும் போது,  மார்க்கம் (தீன்) என்ற காரணி முக்கியமானது. அதாவது அவர்களது வாழ்வில் மார்க்கம் எந்தளவு கடைபிடிக்கப்படுகிறது அதனை நம்பிக்கையாகவும்,  நடைமுறையாகவும் எந்தளவு ஏற்று செயற்படுகிறார்கள் என்பது. இந்தப் பொறுத்தப்பாடு தெரிவில் முக்கியமானது. இல்லாதபோது வாழ்வே சீரழிந்து செல்வதற்குக் காரணமாகலாம் என்பது ஹதீஸ்கள் வலியுறுத்தும் உண்மையாகும்.

இரண்டாவது விடயம்,  இன்று நடைமுறையில் காண்கின்ற இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதிலும்,  தஃவா செய்வதிலும் இருக்கின்ற பல்வேறு சிந்தனைப் பாரம்பரிய வேறுபாடுகள். தெரிவின்போது இந்த வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்படுவதும் ஒருவிதத்தில் முக்கியமானது. இதன் மூலம் வித்தியாசமான சிந்தனைப் பாரம்பரியங்கள் திருமண பந்தத்தில் இணையக் கூடாது என்றோ அந்த வாழ்வு வெற்றியளிக்காது என்றோ சொல்ல வரவில்லை. சிந்தனை வேறுபாட்டை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு,  மதிப்பளித்து,  சுதந்திரமளித்து செயற்படக் கற்றுக் கொண்டால் இந்த வேறுபாட்டிற்கு மத்தியிலும் சந்தோசம் இருக்கும். ஆனால் யதார்த்த வாழ்வின் அனுபவத்தில் காணும்  உண்மை என்னவெனின்,  கணவன் எவ்வழி மனைவியும் அவ்வழி செல்வதே பொறுத்தமானது என்பதாகும். எனவே முடிந்தவரை இந்த யதார்த்தம் பேணப்படுவது குடும்ப வாழ்வின் சந்தோசத்தை உத்தரவாதப்படுத்தும்.

2.       கல்வி ரீதியான பொறுத்தப்பாடு

அல்லாஹ்தஆலா கூறுகிறான் “நபியே நீங்கள் கூறுங்கள் அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (ஸுமர் 9). இந்த வசனம் அறிவு,  கல்வி வேறுபாடு என்பது இந்த உலக யதார்த்தங்களில் ஒன்று என்பதைக் கூறுகிறது. அந்தவகையில் தெரிவின்போது கல்வி ரீதியான பொறுத்தப்பாடு கருத்தில் கொள்ளப்படுவது நியாயமானது.

 கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் இதுபற்றிக் கூறும்போது,  ஆண் பெண் இருவரும் கல்விச் சான்றிதழில் சமானமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் ஆண் தரத்தில் குறைந்திருப்பது வரவேற்கத்தக்கதல்ல என்கிறார். இந்தக் கருத்தில் உள்ள சமூக யதார்த்தம் மறுக்கப்படுவதற்குரியது அல்ல என்றிருந்த போதிலும்,  இன்று மற்றொரு யதார்த்தமும் மெல்ல அதிகரித்துச் செல்வதைக் காணலாம். அதாவது நன்கு படித்த பெண்கள் சாதாரண கல்வித்தரம் கொண்ட ஆண்களை திருமணம் செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி வளர்ச்சியும் ஆண்களின் கல்வி வீழ்ச்சியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் புதிய சூழ்நிலை திருமண வாழ்வில் எத்தகைய தாக்கங்களை உண்டு பண்ணக் கூடியது என்பது ஆய்வை வேண்டி நிற்கும் ஒரு விடயமாகும். ஆனாலும் புரிந்துணர்வின் ஊடாக பல விடயங்களைத் தாண்டிச் செல்ல முடியும் என்ற உண்மையும் இங்கு மறுக்கப்படுவதற்கில்லை.

3.       சமூக அந்தஸ்துப் பொறுத்தப்பாடு

இது, குறித்த ஆணையும் பெண்ணையும் விடவும் இரு குடும்பங்களுடனும் சம்பந்தப்பட்டதாகும். இங்கு சமூக அந்தஸ்து என்பது,  பெற்றோர்களது சமூக மதிப்பு,  சமூக உறவுகள்,  சமூகப் பங்களிப்பு போன்ற பல விடயங்களைக் குறித்து நிற்கின்றது. இந்த விடயம் தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படுதல் என்பது இஸ்லாமியப் போதனைகளுடன் முரண்படுகின்ற ஒரு விடயமல்ல. 

உமர் (ரழி) அவர்களது பிரபல்யமான ஒரு கூற்று இதனை உறுதிப்படுத்துகிறது. “சமூக அந்தஸ்துள்ள பெண்களை அதற்குத் தகுதியாளர்கள் அல்லாதார் திருமணம் செய்வதை நான் தடை செய்கின்றேன்” என்றார்கள். இந்த நுண்ணிய உணர்வின் காரணமாகத்தான் கைபர் யுத்தத்தில் ஸபிய்யா (றழி) அவர்கள் கைதியாகப் பிடிபட்ட போது, அவர் யூதத் தலைவனின் மனைவி,  மற்றொரு யூதத் தலைவனின் மகள். இத்தகைய அந்தஸ்து கொண்ட பெண் நபியவர்களுக்கு மனைவியாக அமைவதே பொறுத்தம் என உமர் (றழி) அவர்கள் ஆலோசனை வழங்கியது மாத்திரமன்றி,  மதீனாவுக்குத் திரும்பிச் செல்லுமுன் இடை நடுவில் திருமணத்தை நடாத்தவும் செய்தார்கள்.

சமூக அந்தஸ்த்து என்பது சம்பந்தப்பட்ட ஆண்,  பெண் என்ற மட்டத்திலும் பார்க்கப்பட முடியும் என்பதை புரைரா என்ற அடிமைப் பெண்,  தான் சுதந்திரம் அடைந்ததும்,  மகீத் என்ற தனது அடிமைக் கணவனை விட்டுப் பிரிந்தமையையும்,  மகீத்துக்காக நபியவர்கள் பரிந்து பேசிய போதும் புரைரா உடன்படாமையையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். இங்கு நபியவர்கள் புரைராவை நிர்ப்பந்திக்கவில்லை அவளது நியாயத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

4.       வயதுப் பொறுத்தப்பாடு

வயதுப் பொறுத்தப்பாடு குறித்தும் இஸ்லாத்தில் குறிப்பான வரையறைகள் எதுவும் சொல்லப்படவில்லை. இஸ்லாமிய வரையறைகளைப் பார்க்கின்ற பொழுது,  பெண்ணை விட ஆண் வயது அதிகமாக இருத்தலும் சரி, குறைவாக இருத்தலும் சரி,  ஏன் சம வயதினராக இருத்தலும் சரி. இவற்றில் எதுவும் இஸ்லாத்தில் மறுக்கப்படவில்லை. நபியவர்களது வாழ்வு இதற்குச் சான்று. ஏலவே குறிப்பிடப்பட்டது போல் புரிந்துணர்வு எனும் காரணி மிகச் சரியாக செயற்படும் போது, 

 மேற்குறிப்பிடப்பட்டவற்றில் எந்த நிலையிலும் குடும்ப வாழ்வு வெற்றி காண முடியும்.

நான் அறிந்த அறபுலக இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர் தனது ஐம்பதாவது வயதைத் தாண்டிய நிலையில் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக முடித்தார். அவரிடம் இதன் இரகசியம் என்ன என்று நான் கேட்டேன். அதற்கவர் தான் இளைஞராக இருந்த போதே இது பற்றிய ஒரு திட்டத்துடன் காணப்பட்டதாகவும்,  முதல் மனைவியாக தன்னை விட வயதில் கூடிய ஒருவரை திருமணம் செய்ததாகவும் தற்போது அவள் வாழ்வை அனுபவித்து முடிந்து விட்டாள். அதனால் அவளே முன்வந்து எனக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தாள் என்றார். இங்கு அவர் தன்னை விட வயதில் கூடிய,  வயதில் குறைந்த இருவருடனும் வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்தியிருப்பதை காணலாம்.

உளவியலாளர்களின் அபிப்பிராயப்படி,  பெண்ணை விடவும் ஆண் வயதில் அதிகமாக இருத்தலும்,  அதிலும் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை இடைவெளி இருப்பதுவும் சிறந்தது எனக் கருதுவர். குடும்ப வாழ்வில் சிறந்த புரிந்துணர்விற்கும் பிரச்சினைகள் குறைந்த வாழ்விற்கும் இந்த இடைவெளி மிகவும் பொறுத்தமானது என்பர். இக்கருத்தை வலுப்படுத்துவது போல் உமர் (றழி) அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் காணப்படுகிறது.

ஒரு இளம் பெண்ணை வயோதிபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அந்த வாழ்விலிருந்து விடுதலை பெறும் நோக்கில் அந்தப் பெண் தனது கணவனைக் கொலை செய்து விட்டாள். வழக்கை விசாரித்த உமர் (றழி) அவர்கள் மக்களைப் பார்த்து,  “மக்களே,  அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆணும் தன் வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்யட்டும். ஒவ்வொரு பெண்ணும் தன் வயதுக்கு ஏற்ற ஆணை திருமணம் செய்யட்டும்” என்றார்கள். வயதுப் பொறுத்தப்பாடு தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதையே உமரவர்களின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.

5.       பொருளாதார நிலைப் பொறுத்தப்பாடு

பொருளாதாரம் மனித வாழ்வின் அஸ்திவாரம் என்பது அல்குர்ஆனின் பார்வை,  அதேபோல் “ஒவ்வொருவரும் தனது வசதிக்க ஏற்ப தனது மனைவிக்கு செலவு செய்யட்டும்” ( தலாக் 07   ) என்றும் அல்குர்ஆன் கூறுகிறது.

அந்தவகையில் பொருளாதாரக் காரணிகள் குடும்ப வாழ்வில் பெரிதும் தாக்கம் செலுத்தக் கூடியவை. எனவே தெரிவின்போது ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற பொருளாதார மட்டத்தில் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்தல் மிகவும் சிறந்தது. பல சமயங்களில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மிகவும் வசதியான வீடுகளில் வாழ்க்கைப்படும் போது,  மிகுந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அந்த வீட்டின் பல உபகரணங்களை அப்பெண் வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்திராத நிலையும் இருக்க முடியும். அதேபோல் வசதி குறைந்த ஒரு ஆண் வசதி கூடிய பெண் தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்ற நிலையையும் நிறையவே அவதானிக்க முடிகிறது. இந்த யதார்த்தங்கள் தெரிவின் போது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதே இங்கு எதிர்பார்ப்பு.

6.       பழக்கவழக்கங்கள் சம்பந்தப்பட்ட பொறுத்தப்பாடு

பழக்க வழக்கங்களின் வேறுபாடும் சில சமயங்களில் குடும்ப வாழ்வின் நிம்மதியைக் குழைத்துவிட முடியும். ஏனைய காரணிகளுடன் ஒப்பிடும்போது இந்தக் காரணி மிகவும் வலிமை குறைந்தது என்றிருப்பினும்,  இதற்கும் ஒரு பெறுமானம் இருப்பதை மறுக்க முடியாது.

 உதாரணமாக நகர்ப்புற பழக்க வழக்கங்களும் கிராமிய பழக்க வழக்கங்களும் சில சமயங்களில் பொறுந்தி வராத நிலையும் காணப்படுகின்றது. கொழும்பு மேட்டுக் குடி நண்பர் ஒருவர் ஒரு கிராமியப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஒரு வருடத்திலேயே அவருக்கு வாழ்க்கை கசந்து விட்டது. காரணம் கேட்டபோது,  அதிகாலையிலேயே மாங்காய்ப் பிஞ்சு போன்ற கிராமத்துக் காய்களை சாப்பிடுமாறு நிர்ப்பந்திக்கிறாள். அவளுக்கு எப்போது எதனை சாப்பிட வேண்டும்,  எப்போது தூங்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை” என்று வருத்தப்பட்டார். 

அப்போது எனது மனதில் ஒரு விடயம் தோன்றியது. “பீட்சா,  பேர்கர் கலாச்சாரத்திற்கும் பலாக்கொட்டை,  கஜுகொட்டை கலாச்சாரத்திற்கும் இடையிலான வேறுபாடு கூட தெரிவின்போது பார்க்கப்பட வேண்டியிருக்கிறது போலிருக்கிறது”.

இன்றைய இளைஞர் யுவதிகளில் இது போன்ற வேறுபாடுகளை புதிய அனுபவமாகப் பார்க்கின்றவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. எனினும் இந்தப் பகுதியையும் தெரிவின்போது முற்று முழுதாக நாம் மறந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். 

பல சமயங்களில் எமது தஃவா கலாச்சாரத்திற்குள்ளே,  மார்க்கம்,  தஃவா என்ற பண்புகள் அதீதமாகப் பார்க்கப்பட்டு ஏனைய காரணிகள் கருத்தில் கொள்ளப்படாமல் போகின்ற நிலை அவ்வப்போது ஏற்படுகின்றது. மார்க்கமும் தஃவாவும் உயர் பெறுமானங்கள் என்றிருப்பினும் தெரிவில் சமூக யதார்த்தங்களையும் மறந்து விடவும் கூடாது. ஸைத் பின் ஹாரிஸாவினதும் ஸைனபினதும் (றழியல்லாஹு அன்ஹுமா) வாழ்வு இடைநடுவில் கலைந்து விடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என அறிஞர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.

இறுதியாக ஒரு விடயம் எமது கவனத்திற்குரியது. பொறுத்தப்பாடு என்று சொல்லும்போது,  இரு தரப்பினரும் எல்லா விடயங்களிலும் சமமானவர்களாகக் காணப்படல் வேண்டும் என்பது பொருளல்ல. பல சமயங்களில் சமானப் பண்பு சாத்தியமானதாகவும் அமைய மாட்டாது. முடிந்தவரை பொறுந்தி வரக்கூடிய வகையில் தேடலும் தெரிவும் காணப்படல் வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து,  மற்றொரு முக்கிய விடயம் இருக்கிறது. அதாவது பொறுத்தப்பாடு என்று சொல்லும்போது,  இயல்பு,  உணர்வுகள், விருப்பங்கள் போன்ற விடயங்களும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். இவற்றில் ஒருமைப்பாடு இருப்பதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு அமைவதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதாகும். மாத்திரமன்றி இவை வேறுபட்டு அமைவது,  குடும்ப வாழ்வில் எதிர்மறைவான தாக்கத்தை ஏற்படுத்துமா? என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் வேறுபட்ட இயல்பும் உணர்வும் விருப்பமும் அல்லாஹ்வின் படைப்பியல் விதி. அந்தவகையில் மனிதனிடம் எதிர்பார்க்கப்படுவது அந்த வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு,  விட்டுக் கொடுத்து ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதேயாகும். அல்குர்ஆன் கூறுகிறது “நாம் உங்களை ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். உங்களை சமூகங்களாகவும்,  கோத்திரங்களாகவும் பிரித்தமைத்தது நீங்கள் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே” (ஹுஜராத் - 13)


அல்லாஹ்வே போதுமானவன்.

Monday, March 21, 2016

இர்ஷாதுல் முஜ்தமஃ

எண்ணக்கருவும் மூலோபாயங்களும்

அறிமுகம்

இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது இஸ்லாமிய தஃவா பாரம்பரியத்தில் மூன்றாவது செயற்பரப்பைக் குறிக்கும் சொல்லாகும். தனிமனிதன்,  குடும்பம், சமூகம்,  நாடு, மனித குலம் என விரிந்து செல்லும் தஃவா பரப்புக்களில் சமூகம் என்ற பரப்பு முஜ்தமஃ என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு நடைபெற வேண்டிய பணி என்ன என்பதை இரத்தினச் சுருக்கமாக விளங்கப்படுத்தும் சொல்லே இர்ஷாத் என்பதாகும்.

இங்கு இர்ஷாத் என்பதன் மொழி ரீதியான கருத்தைப் பார்க்கும்போது அதனுள்ளே ஒரு அற்புதமான கருத்து மறைந்திருக்கிறது. அறபுமொழியில் ‘ருஷ்த்’ என்ற சொல் நல்லது என்ற கருத்தைக் குறிப்பது போலவே ஒருவித முதிர்ச்சி நிலையையும் குறிக்கிறது. மனிதன் சொத்துக்களை நிர்வகிக்கும் தகுதி நிலையை அல்குர்ஆன் ருஷ்த் என்றுதான் அழைத்தது. இதனால்தான் நல்லாட்சி என்ற கருத்தைக் குறிக்க ‘ஹுக்ம் ரஷீத்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நல்லாட்சியின் பொருள் பரப்பு வாசகர்கள் நன்கறிந்த ஒரு விடயம் என்பதால் ‘ருஷ்த்’ என்ற சொல்லின் மூலக் கருத்தை அவர்கள் இலகுவில் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். அந்தவகையில் இர்ஷாத் என்பதன் மூலம் நல்லதை நோக்கி வழிநடாத்துதல் அல்லது சமூக முதிர்வு நிலையை நோக்கி வழிநடாத்துதல் என்று பொருள் கொள்ளலாம்.

இங்கு ‘வழிநடாத்துதல்’ அல்லது ‘வழிகாட்டுதல்’ என்ற பதப் பிரயோகங்களில் ஒரு வித மேலாதிக்கம் அல்லது திணிப்பு தொணிப்பதாக சில சமயங்களில் சிலர் நினைக்கின்றனர். அவர்களது இந்தப் புரிதலுக்கு ஒரு காரணமிருக்கிறது. அதாவது ‘வழிகாட்டுதல்’ என்று சொல்லும் போது அது குறித்த ஒரு மனிதக் குழுமத்தின் பணி அல்லது குறித்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பணி என்று அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள். எனவே,  பிறருடைய சிறப்பியல்புகளைக் கருத்தில் கொள்ளாத ஒரு மேலாதிக்கம் அங்கு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் உண்மையில் வழிகாட்டுதல் என்பது அல்லாஹ்வின் பணி அல்லது அல்குர்ஆனுடைய பணி. அதனை மேற்கொள்ளும் முயற்சியையே ஒரு மனிதக் குழுமமோ அல்லது இஸ்லாமிய இயக்கமோ செய்கிறது. இந்த அடிப்படையில் புரிந்து கொள்கிற போது அங்கு மேலாதிக்கம் என்ற கருத்துக்கு இடமில்லை. அல்குர்ஆனின் அடிப்படைப் பணியே வழிகாட்டுதலாகும். அந்தவகையில் சமூகம் என்ற பரப்பின் மீதான அல்குர்ஆனின் பணி எத்தகையது என்பதே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் மூலம் விளங்கப்படுத்தப்படுகிறது.

பரிபாஷைக் கருத்து

மேற்கூறப்பட்ட மொழிப் பின்புல விளக்கத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது,  இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் பரிபாஷைக் கருத்தை இவ்வாறு விளக்கலாம். அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் இலக்குகளை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்காக அர்த்தபூர்வமான முயற்சியில் ஈடுபடுவதாகும். இது ஒரு மக்கள் குழுமத்தின் மீது செயற்படுத்தப்படும்.

இந்த வரைவிலக்கணம் இர்ஷாதுல் முஜ்தமஃ குறித்து சில அடிப்படைகளைக் கூறுகிறது. இர்ஷாதுல் முஜ்தமஃ எனும் செயற்பாட்டுக்கு இலக்குகள் இருக்கின்றன. அவற்றை அடைந்து கொள்வதற்கான மூலோபாயங்கள் இருக்கின்றன. நெறிப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் இருக்கின்றன. இதற்கு ஒரு இலக்குக் குழுவினர் காணப்படுகின்றனர். இதனை செயற்படுத்துவோர் இருக்கின்றனர்.

இலக்குகள்

‘இர்ஷாதுல் முஜ்தமஃ’ இன் பரிபாஷைக் கருத்தில் ‘அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் இலக்குகள்’ என்ற ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “…தீனை நிலைநாட்டுங்கள். அதிலே பிரிவிணையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதைத்தான் இப்றாகீம்,  மூஸா,  ஈஸா (அலை) போன்றோருக்கு சொல்லப்பட்டதும், உங்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதுமாகும்…” (ஷுரா – 74)  இங்கு பொதுவாக நபிமார்கள் மூலம் மனித சமூகத்திடம் அல்லாஹ்தஆலா தீனை நிலைநாட்டுமாறும் அதில் கருத்தொற்றுமையுடன் காணப்படுமாறும் கேட்டுக் கொள்கிறான். 

இமாம் இப்னுல் கையிம் கூறுவது போல் தீன் நிலைநாட்டப்படுதல் என்பது உலகில் மனித நலன் காக்கப்படுகிறது என்று பொருளாகும்.
அந்த வகையில் குறித்த ஒரு மனிதக் குழுமத்தின் மீது அல்லது குறித்ததொரு நிலப் பிரதேசத்தில் தீன் நிலை நாட்டப்படுகிறது எனின்,  அதன் அடிப்படைப் பொருள் அங்கு மனித நலன்கள் மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றப்படுகின்றது அல்லது அங்கு சுபீட்சமான மனித வாழ்வுக்கு ஏற்ற சிறந்த சூழல் காணப்படுகின்றது என்பதாகும்.

இந்தக் கருத்தைப் பிரதிபளிக்கும் வகையிலேயே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் இலக்குகள் குறித்த இமாம் ஹஸனுல் பன்னாவின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன. இமாமவர்கள் கூறுகிறார் : அவர்கள் பரஸ்பர அன்பு கொண்ட சகோதரர்கள், அங்கு சமத்துவம் சிறந்து பேணப்படும். அவர்கள் குடும்பங்களில் சந்தோசம் வீற்றிருக்கும், உயர் பண்பும் ஆரோக்கியமும் கொண்ட சூழல் அது. பௌதீக உழைப்பும் அபிவிருத்தியும் அங்கு முனைப்புடன் காணப்படும். அந்த சமூகத்தில் நீதி நிலை நாட்டப்படும். மக்கள் தமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பர். அங்கு பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியும் மேலோங்கியிருக்கும். சத்தியத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் துணிவு கொண்ட மக்கள் அவர்கள் (ஜரீததுல் இஃவான் முஸ்லிமூன் - துல்கஃதா - ஹி 1352) என்பதாக இமாமவர்கள் இந்தக் கருத்தை விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் இமாமவர்களின் நேரடி வார்த்தைகளன்றி அவர் விரிவாகப் பேசிய விடயங்களின் சுருக்க வடிவமாகும்.

இதனை இன்னும் எளிமையாகக் கூறினால் சகோதரத்துவம்,  சமத்துவம்,  சந்தோசம்,  பண்பாடு,  ஆரோக்கியம்,  அபிவிருத்தி,  நீதி,  பொறுப்புணர்வு,  ஒத்துழைப்பு,  தஃவா போன்ற விழுமியங்களை அடைந்து கொள்வதே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் இலக்குகளாகும்.

இங்கு மனித நலனை நிறைவேற்றக்கூடிய அனைத்து விழுமியங்களும் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பொருள் கொள்ளப்பட மாட்டாது. மாற்றமாக முதிர்வு நிலைச் சமூகம் ஒன்றைப் பற்றிய காட்சி வடிவம் ஒன்றை எடுத்துக் காட்டும் வகையிலேயே சில விழுமியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கு பிரதானமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனின்,  மனித நலன் நிறைவேற்றப்படுதல் என்பதுவே,  தீனை நிலை நாட்டுதல் என்பதாகும் அல்லது தீன் நிலை நாட்டப்படுவதால் மிகச் சரியாக மனித நலன் நிறைவேற்றப்படுகிறது. அந்தவகையில் எவையெல்லாம் மனித நலனாகக் காணப்படுகின்றதோ அந்த ஒவ்வொரு விடயமும் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற எண்ணக்கருவின் இலக்குகளாகக் காணப்படும்.

இந்தோனேஸிய அறிஞரான உஸ்தாத் அனீஸ் மத்தா அவர்கள் இது குறித்து முன்வைத்த ஒரு கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்வது பொறுத்தம் என்று நினைக்கிறேன். பொதுவாக அல்லாஹ்வை நோக்கி மக்கள் அழைக்கப்படுதல் அடிப்படையானது. ஆனால் அதனை ஏற்பதில் அவர்களுக்கு தெரிவுச் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும் பொதுவாக சமூகத் தளத்தில் மக்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக,  மார்க்கத்துடன் நெருக்கமானவர்களாக வாழும் சூழல் காணப்படல் வேண்டும். இதற்காக உழைக்கும்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. 

அதில் முதலாவதும் முக்கியமானதும் சுதந்திர சூழல். ஒவ்வொரு மனிதனும் தான் சுதந்திரமாக தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் சூழல் காணப்படல் வேண்டும். ஒரு மனிதனிடத்தில் ஈமான் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்பது போல் குப்ரும் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது. குறித்த ஒரு அரசியல் போக்கு நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்பது போல் குறித்த ஒரு அரசியல் போக்குக்கு எதிரான அடக்கு முறையும் காணப்படக் கூடாது.

இரண்டாவது பகுத்தறிவுச் சூழல். இஸ்லாம் தனது நம்பிக்கைகளையும் சரி ஏனைய போதனைகளையும் சரி ஏற்றுக் கொள்வதற்கான அல்லது சரி காண்பதற்கான நிபந்தனையாக பகுத்தறிவையே முன்வைக்கிறது. எந்தவொரு விடயத்தையும் கண்மூடித்தனமாக சரி காண வேண்டும் என இஸ்லாம் என்றைக்கும் போதித்தது கிடையாது. அந்தவகையில் பகுத்தறிவுச் சூழல் எந்தளவுக்கு அதிகரிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு இஸ்லாத்தின் போதனைகளை நோக்கி மக்கள் வருவார்கள்.

மூன்றாவது வளமான பொருளாதாரச் சூழல். இதன் பொருள் மக்கள் பசியும் பயமும் இன்றி இருத்தலைக் குறிக்கின்றது. அல்குர்ஆன் இந்தக் கருத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றது. “அவர்கள் இந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு உணவளித்தான். அவன்தான் அவர்களது அச்ச சூழலிலிருந்து பாதுகாப்பளித்தான்” (குறைஷ்) இங்கு பசியும் பயமும் நீக்கப்பட்ட வளம் நிறைந்த ஒரு பொருளாதார சூழலிலேயே வணக்கம் சாத்தியப்படுவதாக அல்லாஹ்தஆலா கூறுகிறான்.
இந்த மூன்று அம்சங்களும் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டின் முக்கிய இலக்குகள் என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையில் தீன் எனும் மனித நலனை நோக்கிய பயணத்தில் சமூக மட்டத்தில் அடையப் பெற வேண்டிய முக்கிய இலக்குகளாக இவை காணப்படுகின்றன.

மூலோபாயங்கள்

இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி எவ்வாறு மேற்கொள்ளப்படல் வேண்டும்? அதற்கான பிரதான மூலோபாயங்கள் என்ன? என்பது தொடர்பில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் பேசும்போது பிரதானமாக நான்கு வகையான மூலோபாயங்களை முன்வைக்கின்றார்கள்.

முதலாவது நல்லவற்றை ஏவுதல் என்ற பரப்பு. அதனை இமாமவர்கள் பயனள்ளவை பரப்பப்படுதல்,  உயர்ந்த விடயங்கள் தூண்டுதல் அளிக்கப்படல்,  எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் ஏவப்படல், என்று குறிப்பிட்டுள்ளார்கள். அல்குர்ஆன் முன்வைக்கும் அல்-அம்ரு பில் மஃரூப் என்ற கருத்தே இங்கு பேசப்பட்டுள்ளது.

இரண்டாவது தீமை தடுக்கப்படுதல் என்ற பரப்பு. இது குறித்து இமாமவர்கள் விளக்கும்போது எல்லோரும் வெறுக்கக்கூடிய விடயங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. அவற்றுக்கெதிரான ஒரு வேலைத்திட்டம்,  போராட்டம் எப்பொழுதும் காணப்படல் வேண்டும். அத்துடன் தாழ்ந்த விடயங்கள் அற்பமானவை அகற்றப்படல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்றாவது இஸ்லாமிய விழுமியங்களை நோக்கி பொதுக்கருத்து ஈர்க்கப்படுதல். இங்கு பொதுக் கருத்து என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பினரதும் கூட்டு நலனை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒரு பொதுநிலைப்பாட்டைக் குறிக்கும். இது பிரச்சினைகள்,  தேவைகள் என பல விடயங்கள் சம்பந்தப்பட்டதாகக் காணப்பட முடியும். இந்த பொது நிலைப்பாடுகள் இஸ்லாமிய சிந்தனைக்கும் விழுமியங்களும் முரணாக அமையாது அவற்றினடிப்படையில் அல்லது குறைந்தபட்சம் அவற்றிற்கு நெருக்கமானவையாக அமைவதற்காக எடுக்கப்படும் முயற்சியையே இது குறிக்கிறது.

நான்காவது செயல் வடிவங்கள் உருவாக்கப்படுதல். அதாவது இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டில் அடைய நினைக்கும் இலக்குகள் வெறுமனே கோட்பாட்டு வடிவமாக மாத்திரம் முன்வைக்கப்படுவதில் எந்த நேரடி மாற்றமும் சமூகத்தில் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாற்றமாக அவற்றை சமூகத் தளத்தில் நிகழ்த்திக் காட்டுவதற்கான செயல்வடிவங்கள் உருவாக்கப்படுகின்ற பொழுதே நாம் எதிர்பார்க்கும் உண்மையான விளைவுகளைக் காண முடியும். நாம் அழைக்கும் அனைத்துப் பயனுள்ள நன்மையான விடயங்களுக்கும் மாதிரிகள் அவசியம். அதுபோல் நாம் அகற்ற நினைக்கும் அனைத்து தீமைகளுக்கும் மாற்றீடுகள் தேவை. இது மனித முன்மாதிரிகளாகவும் காணப்படலாம். முறைமைகளாகவும் இருக்கலாம். நிறுவனங்களாகவும் அமையலாம்.

இந்த இடத்தில் மற்றொரு முக்கிய விடயத்தையும் தொட்டுக் காட்டிச் செல்வது பொறுத்தம் என நினைக்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு சமூக சூழலில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அங்கு அவர்களது சிந்தனையில் நிகழ வேண்டிய ஒரு மூலோபாய மாற்றம் இருக்கிறது. அது இரண்டு பரப்புக்களில் நிகழ வேண்டியிருக்கிறது.

ஒன்று சிறுபான்மை என்பது ஒரு பலவீனமல்ல. மிகப் பெரும்பாலும் நாம் சிறுபான்மை என்பதை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே வரையறை செய்கிறோம். இதனால்தான் நாம் சிறிய தொகையினர். எம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் பலவீனமானவர்கள் என்று எம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்கிறோம். இங்கு ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மை,  பெரும்பான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது மாத்திரமல்ல அது அரசியல், கல்வி,  பொருளாதாரம்,  தொடர்புகள் போன்ற பல காரணிகளை உள்ளடக்கிய ஒரு விடயம். அந்தவகையில் எண்ணிக்கையில் குறைவு என்பது பலவீனத்தின் அடையாளமல்ல. குறைந்த எண்ணிக்கையுடன் ஏனைய காரணிகளின் பலம் ஒரு சமூகத்தின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்குப் போதுமானதாகும். 

அல்குர்ஆன் கூறுகிறது “பூமியில் பலவீனர்களாய் ஆக்கப்பட்டவர்களுக்கு நாம் அருள்பாலிக்க விரும்புகிறோம். அவர்களை தலைவர்களாகவும்,  வாரிசுகளாகவும் நாம் மாற்றுவோம்” (கஸஸ் - 05)
இந்த வசனம்,  குறைந்த எண்ணிக்கை ஒரு பலவீனமல்ல என்ற நம்பிக்கையைத் தருகிறது. 

ஆனால் இங்கு ஒரு முக்கிய நிபந்தனை இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையினர் அல்லது சிறுபான்மையினர் பொது இலக்கும் ஒருமைப்பாடும் அற்ற சிதறிய சமூகமாகக் காணப்படுவார்கள் எனின்,  நிச்சயமாக அவர்கள் பலவீனமானவர்கள்தான். இக்கருத்தையே மேற்கூறப்பட்ட வசனத்திற்கு முன்னைய வசனத்தில் பிர்அவ்ன் பனூ இஸ்ரவேலர்களை பொது இலக்கற்ற பல குழுக்களாகப் பிரித்துவிட்டான். அதனாலேயே அவர்கள் பலவீனமடைந்தார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது.

எனவே,  சிறுபான்மைச் சூழல் ஒன்றில் இர்ஷாதுல் முஜ்தமஃ பணி வெற்றி பெற வேண்டும் எனின் அங்கு பொது இலக்கும் ஒருமைப்பாடும் முக்கியமானவை. அதுதான் அவர்களை எண்ணிக்கையைத் தாண்டி பலம் பெறச் செய்யும் காரணியாகும்.

இரண்டாவது,  நாம் செயற்படும் எல்லை குறித்த பார்வை,  குறித்த ஒரு நிலப் பிரதேசத்தில் செயற்படுகின்ற பொழுது அந்த முழு நில எல்லையும் நாம் செயற்படுவதற்கான தளம் என்ற பார்வை முக்கியமானது. அதாவது எமது தாயகத்தில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது இலங்கை வாழ் அனைத்து மக்களுக்குமான ஒரு செயற்திட்டமாகும். அது முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைத்த ஒரு வேலைத்திட்டமல்ல. 

இங்கு முதன்மைப்படுத்தல்கள்,  திட்டப் பரப்புக்கள் என்பன காலத்திற்கும் தேவைக்கும் இயலுமைக்கும் ஏற்ப மாற்றமுற முடியும். அது படிப்படியாக வளர்ச்சி காண வேண்டிய ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் எமது தஃவாப் பார்வை முழு நிலப் பிரதேசத்தையும் ஒருமித்து நோக்குவதாகக் காணப்படல் வேண்டும்.

அணுகுமுறைகள்

எந்தவொரு பணியும் மிகச் சிறந்த அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பது அல்குர்ஆனினதும் சுன்னாவினதும் வழிகாட்டல். ஒரு செயற்திட்டத்தை நெறிப்படுத்தி,  அதனை முன்னோக்கித் தள்ளும் உந்து சக்தியாகத் தொழிற்படக் கூடியவை மிகச் சிறந்த அணுகுமுறைகளாகும். அந்தவகையில் இர்ஷாதுல் முஜ்தமஃ எனும் பாரியதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்போது,  அதனை அழகுபடுத்தும். அதன் வெற்றியை உத்தரவாதப்படுத்தும் அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

முதலாவது பங்கு கொள்ளல் அணுகுமுறை,  தஃவாவில் தவறாகப் புரியப்பட்ட அல்லது தவறாக வியாக்கியானப்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்று என்னவெனில்,  இஸ்லாமிய தஃவாவின் இலக்கு பிரத்தியேகமான ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதாகும் என்ற விளக்கம். அதாவது அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்புக்குப் புறம்பான அல்லது அதனை மறுதலித்துவிட்டு புதிய ஒரு சமூகக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய இஸ்லாமிய இயக்கங்களின் பிரதான அழைப்பு என்ற ஒரு தவறான விமர்சனம் முன்வைக்கப்படுவதைக் காண்கிறோம். உண்மையில் இது எந்த அடிப்படையும் அற்ற ஒரு விமர்சனம். நடுநிலை இஸ்லாமிய சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த இஸ்லாமிய இயக்கங்களும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

மாற்றமாக அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்பினுள்ளே முழுமையான பங்கு கொள்ளலின் அடிப்படையிலேயே எதிர்பார்க்கப்படும் இலக்குகள் அடையப் பெற வேண்டும் என்பதே அவற்றின் நிலைப்பாடாகும். இதனை உணர்த்தும் வகையிலேயே சமூக மாற்ற செயற்பாட்டுக்கு இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பரிபாஷைப் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இர்ஷாத் என்பது வழிநடாத்துதல் என்று பொருள் கொள்ளப்படுமேயன்றி,  ஒன்றை அழித்துவிட்டு புதிய ஒன்றை உருவாக்குதல் என்று பொருள் கொள்ளப்பட மாட்டாது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் சமூகத்துடன் என்றும் திறந்த அணுகுமுறையையே கடைபிடித்துள்ளார்கள். மூடிய அணுகுமுறையைக் கடைபிடிக்கவில்லை.

மற்றோர் புறத்தில் நாம் வாழும் சமூகக் கட்டமைப்பு தீமைகள் நிறைந்தது. அதனுடன் இரண்டறக் கலந்து விடுவது ஈமானைப் பாதித்து விடக்கூடியது என்ற நியாயத்தின் அடிப்படையிலும் சமூகத்த விட்டு ஒதுங்கிய ஒரு அணுகுமுறையை நோக்கி சிலர் செல்ல முற்படுகின்றனர். உண்மையில் இதுவும் சமூகம் குறித்த நுணுக்கமான ஒரு மதிப்பீடு அல்ல. நாம் செயற்பட வேண்டிய அடிப்படைத்தளமே அந்த சமூகம்தான் என்ற வகையில் ஒதுங்கிச் செல்வதற்கான நியாயங்களை நாம் காண முடியாது.
எனவே,  இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்பில் பங்கு கொண்டு மாற்றத்தை நோக்கிச் செல்லும் ஒரு பயணத்தையே குறித்து நிற்கின்றது.

இரண்டாவது,  கட்டம் கட்டமான செயற்பாட்டு அணுகுமுறை,  எந்தவொரு மாற்றமும் உடனடியாக நடந்து விடுவதில்லை. அல்குர்ஆன் கூறியது போல் “ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இல்லாதிருக்கும் எனின் அவர்களுக்குத் தண்டனை வந்திருக்கும்” (  ஹஜ் 47  ) எனவே ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இருக்கிறது,  இது ஒரு பிரபஞ்ச விதி. இந்த விதிமுறைகளை மீறி ஒரே பாய்ச்சலில் சமூக இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது. பாய்ச்சலில் காணும் அடைவுகள் நீண்ட காலம் நிலைத்திருப்பதுமில்லை. இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது ஒரு சமூக செயற்பாடு. நீண்ட இலக்குகளுடன் பயணிக்கும் ஒரு செயற்பாடு. எனவே,  அங்கு கண்டிப்பாக இந்த கட்டம் கட்டமான அணுகுமுறை இன்றியமையாததாகும்.

இங்கு ஒரு விடயத்தை நாம் முக்கியமாக மனம் கொள்ள வேண்டும். ஒரே பாய்ச்சலில் இலக்கை அடைய நினைப்பது எந்தளவு தவறானதோ அதேபோல் அமுலில் உள்ள சமூக ஒழுங்கினுள் நுழைந்து அடிப்படை இலக்குகளை மறந்து போவதும் தவறானதாகும். இந்த இரண்டு நிலைகளும் சமநிலை தவறிய நிலைகள் என்பது போல் இலக்குகளை நோக்கி நகராத ஒரு பயணமாகவும் இவை காணப்படுகின்றன.

யார் மீது கடமை?

கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் குறிப்பிடுவது போல், அல்லாஹ்தஆலா கூட்டுக் கடமைகளை சமூகத்தின் மீதே பொறுப்பாக அமைத்திருக்கிறான். அரசு என்பது சமூகத்திலிருந்து தோன்றுகின்ற,  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு அலகு. அந்தவகையில் ஒரு சமூகத்தில் நிகழ வேண்டிய அனைத்து மாற்றங்களுக்கும் அரசை மாத்திரம் பொறுப்பாக்கி விட்டு,  சமூகம் மௌனமாக இருந்து விட முடியாது. அரசும் தனது அதிகாரத்தை சமூகத்திடமிருந்தே பெற்றுக் கொள்கிறது. எனவே,  சமூகத்திற்கே அடிப்படைப் பொறுப்பு காணப்படுகின்றது.

அந்தவகையில்,  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒவ்வொரு அமைப்பினதும் நிறுவனத்தினதும் தவிர்க்க முடியாத கடமையாக இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி மாறுகின்றது. சமூகத்தின் இயங்கு சக்தியாகத் தொழிற்படுகின்ற இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பு இங்கு இரட்டிப்பாக மாறுகின்றது. யார் தொழிற்பட்டாலும் தொழிற்படாவிட்டாலும்,  யார் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் இஸ்லாமிய இயக்கம் இந்தப் பணியிலிருந்து பின்வாங்க முடியாது. இது ஒரு அடிப்படைக் கடமை. இது சமூக மட்டத்தில் கூட்டு வடிவில் தோன்றுகின்ற கடமை.

இந்நிலைக்கப்பால் இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கடமை. ஒரு இயக்கத்தையோ நிறுவனத்தையோ சார்ந்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமனித வடிவில் ஒவவொரு முஸ்லிம் மீதும் கடமையான ஒரு பணி இது. இயக்கங்களை அல்லது நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் சில சமயங்களில் இயக்கம் செய்யட்டும் நிறுவனம் செய்யட்டும் என்று சும்மா இருந்து விடுகின்றனர். குறித்த சூழலில் தனக்கு இருக்கும் தனிமனிதக் கடமையை உணரத் தவறி விடுகின்றனர். இது ஆரோக்கியமான நிலையன்று. இஸ்லாமிய தஃவா என்பது ஈமானின் விளைவாகத் தோன்றுகின்ற கடமை. அதற்கு ஒரு கூட்டு வடிவம் காணப்படாத போதும் தனிமனிதனாக எந்த நிலையிலும் தன் மீது ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.


அந்தவகையில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி கூட்டு வடிவில் சமூகத்தின் மீதும்,  தனித்த வடிவில் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானது. இப்பணியை சிறந்த முறையில் மேற்கொள்பவர்களாக அல்லாஹ் எம்மை ஆக்குவானாக.