Thursday, April 18, 2019

உங்கள் தெரிவை எங்கே மேற்கொள்ளப் போகிறீர்கள்?


திருமண வாழ்வை எதிர் நோக்கியிருப்பவர்களுக்கு
(சகோதரிகளுக்கானது)
திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடைதேட வேண்டிய கேள்விகளுள் நான்காவது “எங்கே?” என்ற கேள்வி. இதற்கான பதில் எவ்வாறு அமைவது பொருத்தமானது என்பது தொடர்பில் கடந்த அமர்வில் சகோதரர்களை மைய்யப்படுத்தி சில ஆலோசணைகளைப் பரிமாறி இருந்தேன். இன்ஷா அல்லாஹ் இன்றைய அமர்வில் சகோதரிகளை மைய்யப்படுத்தி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

திருமண வாழ்வில் நுழையவிருப்பவர்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேடும் பயணத்தில் எப்போது? ஏன்? யார்? போன்ற கேள்விகளுடன் எங்கே? என்ற கேள்வியையும் முக்கியமாகக் கேட்க வேண்டியிருக்கிறது. கடந்த அமர்வில் சகோதர்களை நோக்கி இந்தக் கேள்விக்கான நியாயங்களையும் அதற்கான விடைகளையும் ஆலோசித்த பொழுது, உறவுகள்,  அறிமுக வட்டம்,  ஓரே பணியில் இருப்போர்,  ஒரே இயக்கத்தின் உள்ளே தெரிவு இடம் பெறுதல்,  சொந்த ஊரில் தெரிவு செய்தல் போன்ற ஐந்து கோணங்களில் இதற்கான விடைகள் ஆலோசிக்கப்பட்டன. உண்மையில் சகோதரிகளைப் பொறுத்தவரையிலும் இந்த ஐந்து பரப்புக்களை விட்டும் வெளியில் அவர்களது தெரிவு அமைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானது. எனவே அங்கே சொல்லப்பட்ட ஆலோசணைகள் எல்லாம் சகோதரிகளுக்கும் பொருந்தும். அவர்கள் விடயத்தில் தீர்மானம் எடுப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மேற்சொல்லப்பட்ட பரப்புக்களில் நின்று பொருத்தமான துணையைத் தெரிவு செய்யும் வேலையைச் செய்யலாம்.
 
இருந்த போதிலும் சகோதரிகள் விடயத்தில் சகோதரர்களைப் போலன்றி திருமண விடயத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஏலவே கூறப்பட்டது போல் திருமண விடயத்தில் தீர்மானம் எடுப்பது பல சமயங்களில் அவர்களது கைகளில் இல்லை. அதுபோல்,  பெண்கள் நேரடியாக தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடும் நடைமுறையும் எமது வழக்கில் இல்லை. அந்தவகையில் இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு,  எங்கே என்ற வினாவுக்கான விடையைத் தேடும் விடயத்தில் சகோதரிகள் தொடர்பான குறிப்பான நான்கு விடங்கள் பற்றி சற்று ஆலோசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது விடயம்,  ஒரு பெண் சுயதேர்வில் ஈடுபடலாமா?  என்ற விடயம். அதாவது,  தனது வாழ்க்கைத் துணை பற்றிய முடிவை தானே எடுப்பதையும் தனது துணையைத் தானே தேடும் முயற்சியில் ஈடுபடுவதையுமே இந்தக் கேள்வி குறிக்கிறது. இங்கு இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று ஒரு பெண் தனது துணையை தானே தெரிவு செய்து கொள்ளும் உரிமை தொடர்பானது. இரண்டு,  ஒரு பெண் தனக்குரிய துணையைத் தேடும் பணியை நேரடியாகத் தானே மேற்கொள்ளும் சமூக நிலை தொடர்பானது. இதில் முதலாவது சட்டம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் இரண்டாவது சமூகக் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இவை குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதுதான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணை பற்றிய முடிவை சுயமாக எடுப்பது தொடர்பான சட்ட நிலைப்பாட்டில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கிறது. உண்மையில் அந்த சட்டக் கருத்து வேறுபாட்டை விவாதிப்பது இந்த இடத்தில் நோக்கமல்ல. இது அதற்குரிய இடமும் அல்ல. மாற்றமாக இஸ்லாம் வலியுறுத்தும் பொது உண்மையை விளங்கிக் கொள்ள முற்படுவதே முக்கிய நோக்கம். அந்தவகையில் வாழ்க்கைத் துணை குறித்த ஒரு பெண்ணின் சுய முடிவு பற்றிய இமாம்களின் வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கின்ற பொழுது,  சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இஸ்லாம் இதனை உரிமை சார்ந்த ஒன்றாகப் பார்த்தலை விடவும் பொறுப்புடமை சார்ந்த ஒன்றாகவே அதிகம் பார்க்கிறது. ஏனெனில் பொறுப்புடமை உரிமையை விடவும் கனதி கூடியது. அந்தவகையில் ஒரு பெண்ணுக்கான துணைத்தெரிவு என்பது ஒரு பொறுப்பான பணி. அது சில விடலைத்தனமான மனவெழுச்சிகளால் மாத்திரம் நடைபெறுவதாக அமைந்து விடக் கூடாது. அதுபோல் எந்த விதமான நிர்ப்பந்தங்களும் இன்றி பூரண மனவிருப்பத்துடன் நடைபெறுவதாகக் காணப்படல் வேண்டும். அதுபோல் பகைமைகள் மற்றும் மனமுறிவுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் சுமூகமாக நடைபெறக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தப் பெறுமானங்கள் பேணப்படும் வகையில்தான் இஸ்லாம் துணைத் தெரிவை விளங்கப்படுத்தியிருப்பதை இமாம்களது வாதங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்தவகையில் தனது துணையைத் தெரிவு செய்யும் அடிப்படை உரிமை பெண்ணுக்கு இருக்கிறது,  ஆனால் அது பெற்றோரின் அல்லது பாதுகாவலர்களின் பொறுப்புடமையை இல்லாமல் செய்து விட மாட்டாது. அதுபோல்,  பெண்ணின் மன விருப்பத்திற்கு மாற்றமாக பெண்ணை நிர்ப்பந்திக்கும் உரிமையும் பெற்றோருக்குக் கிடையாது. மிகச் சரியான தீர்வை நோக்கி தனது பிள்ளையை வழிநடாத்தும் தார்மீகப் பொறுப்பு பெற்றோர்க்கு இருக்கிறது.
அடுத்து,  ஒரு பெண் தனது துணையைத் தேடும் பணியைத் தானே சுயமாக மேற்கொள்ளலாமா? என்பது. மேலே பேசியது துணை குறித்த தீர்மானம் பற்றியது. இங்கு பேசுவது துணையைத் தேடும் வேலை பற்றியது. உண்மையில் இதுவும் ஷரீஅத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. நபியவர்களிடத்தில் ஸஹாபிப் பெண்கள் நேரடியாகவே வந்து திருமண முன்மொழிவை முன்வைத்தமையைக் காண்கிறோம். ஆனால் இதனை சட்டப் பார்வை ஊடாக அணுகுவதை விடவும் சமூகக் கலாச்சாரப் பின்னணியில் இருந்து பார்ப்பதே பொறுத்தமானது. அந்தவகையில் இலங்கை சூழலைப் பொறுத்தவரையில் விதிவிலக்கான சில சூழ்நிலைகள் தவிர்த்து,  ஒரு பெண் நேரடியாக தனக்கான துணையைத் தேடும் பணியைச் செய்வதில்லை. ஆனால் இரகசியமாக காதல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. அல்லது ஒரு ஆண் மீது பெண்ணுக்கு நியாயமான ஒரு விருப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன்போது அந்தப் பெண் ஆணிடத்தில் நேரடியாக தனது திருமண விருப்பத்தை வெளியிடும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

இவை போன்ற சூழ்நிலைகளில் சகோதரிகளுக்கான எனது சில ஆலோசணைகள், ஒரு பெண் தனது துணைத் தெரிவில் சுயதீர்மானம் மேற்கொள்வதில் தவறில்லை,  ஆனால் நீங்கள் மிகுந்த நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய இடம் இது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உளவியல் அறிஞர் கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் சொல்லும் ஒரு எச்சரிக்கை இருக்கிறது,  அதாவது,  தன்னிடத்தில் நேரடியாக வந்து விருப்பத்தைச் சொல்லும் பெண்ணுடன் காதல் தொடர்பை வைத்துக் கொள்ள ஆண்கள் தயங்க மாட்டார்கள்,  ஆனால் அவளை மனைவியாக ஆக்கிக் கொள்வதற்கு ஒன்றிற்குப் பல தடவை யோசிப்பார்கள் என்கிறார்.

இந்த இடத்தில்தான் ஒரு பெண் தனது கண்ணியத்தை இழந்து விடாதிருக்க வேண்டும். நீங்கள் நேரடியாகச் சென்று விருப்பம் தெரிவிப்பது மட்டுமல்ல உங்கள் பார்வைகள் பேச்சுக்கள் சைகைகள் எதுவும் நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்ற செய்தியை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது கண்ணியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஷரீஅத்தில் ஆகுமா? இல்லையா? என்பதை விடவும். கண்ணியமான ஒரு சமூக சூழலில் இதனைக் கைக்கொள்வதில் பிரச்சினையில்லாதிருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் அபாயங்கள் நிறையவே கலந்திருக்கிறது. எனவே தான் அக்ரம் ரிழா அவர்கள் அந்த எச்சரிக்கையைச் சொல்லியிருக்கிறார்கள். அல்குர்ஆன் பெண்ணைப் பார்த்து ஆண்களுடன் சிணுங்கிப் பேச வேண்டாம் என்ற தடையுத்தரவிற்குச் சொல்லும் நியாயத்திலும் இந்த உண்மையைக் கண்டு கொள்ளலாம். அல்குர்ஆன் கூறுகிறது,  “நீங்கள் சிணுங்கிப் பேசாதீர்கள் ஏனெனில் அது உள்ளத்தில் நோயுள்ள ஆணிடத்தில் ஆசையை வளர்த்து விடும்,  மாற்றமாக நேர்மையான வார்த்தை பேசுங்கள்” (அஹ்ஸாப் - 32) என்கின்றது. இந்த வசனம் ஒரு உளவியல் உண்மையைச் சொல்கிறது. அதாவது பெண் தரப்பிலிருந்து பச்சைக் கொடி சமிக்ஞை வராமல் ஒரு ஆணுக்கு தவறு செய்யும் தைரியம் வரமாட்டாது. எனவே பெண்களே உங்களது கண்ணியத்தை நீங்களே இழந்து கொள்ளாதீர்கள் என்பதைத்தான் அல்குர்ஆன் கூறுகிறது. அந்த எச்சரிக்கைதான் இந்த இடத்திலும் சொல்லப்படுகிறது.

அப்படியானால் என்ன செய்வது என்ற ஒரு கேள்வி தோன்றலாம்,  அதாவது நேரடியாக ஒரு ஆணிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிப்பது தவறில்லை எனின் அதற்கான வழி என்ன? இங்கு தான் கதீஜா றழி அவர்களின் சிறந்த முன்மாதிரியிருக்கிறது. தான் நேரடியாக நபியவர்களிடம் செல்லாமல் தனது நெருக்கமான உதவியாளர் மூலமாக நபியவர்களது விருப்பத்தை அறிந்து கொள்ள முற்பட்டார்கள். அதாவது உங்கள் விருப்பத்தை உங்களை நன்கு புரிந்து கொண்ட,  உங்களை நேசிக்கின்ற ஒருவர் மூலம் தெரிவிப்பது உங்கள் கண்ணியத்தைக் காக்க உதவும். இதற்கு மிகவும் பொருத்தமானவர் உண்மையில் உங்கள் தாய்தான். தாயுடன் உங்கள் திருமண வாழ்வு குறித்து மனம் விட்டுப் பேசுங்கள். தாய்மார்களும் தமது வளர்ந்த மகளுடன் தோழமையுடன் உறவாடக் கற்றுக் கொள்ள வேண்டும். மகளது விருப்பு வெறுப்புக்களைப் புரிந்து வழிகாட்ட வேண்டும். தாய் இல்லாத போது,  சகோதரி இல்லாத போது நெருங்கிய உறவு என்று நெருக்கமான,  உங்களை நேசிக்கின்ற,  உங்களைப் புரிந்து கொண்ட,  உங்கள் விடயத்தில் பேசுவதற்கு உரிமையுள்ளவர்கள் ஊடாகக் கையாள முற்படுங்கள். சமவயது நண்பர்கள் ஊடாகக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருங்கள. ஆர்வ மிகுதியில் அவர்கள் தவறிழைத்து விட வாய்ப்பிருக்கிறது. ஏன் உங்களையே ஏமாற்றிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு விடயத்தில் எப்பொழுதும் கவனமாக இருங்கள்,  நீங்கள் தனித்து நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை,  ஆனால் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் தெரியாமல் இரகசியமாக எதனையும் செய்ய வேண்டாம். ஷெய்த்தான் எங்களை வழிகெடுப்பதற்கான முக்கிய வாயில்களில் இதுவும் ஒன்று. பெற்றோருடன்,  குடும்பத்துடன் ஆலோசியுங்கள், அவர்களது ஆசீர்வாதமும் உடன்பாடும் துணைத் தெரிவில் பரகத்தைக் கொண்டு வரும்.

இரண்டாவது விடயம்,  ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் திருமண வாய்ப்புக்கள் அதிகமாக வருகின்ற பொழுது,  தீர்மானம் எடுப்பது இலகுவானது. ஏற்கனவே கூறப்பட்டது போல்,  உறவுகள், அறிமுக வட்டம்,  ஒரே பணியிடம்,  ஒரே இயக்கம்,  ஒரே ஊர் என்ற பல்வேறு வித்தியாசப்பட்ட இடங்களில் இருந்து வருகிறது எனின்,  முன்னைய அமர்வில் கூறப்பட்டது போல் முற்படுத்தல் என்பது தமது நலன் பொறுத்தப்பாடு போன்ற காரணிகளை வைத்தே அமைவது நல்லது.

அடுத்து,  சில பெண்களுக்கு திருமண வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே வரமுடியும். வருகின்ற வாய்ப்புக்களும் முடிவுகள் இன்றி காணப்படும். அல்லது இல்லை என்ற முடிவு தெளிவாகக் கிடைத்திருக்கும். ஒரு புறம் வயது ஏறிக் கொண்டிருக்கும்,  ஆனால் திருமண வாய்ப்பு மட்டும் எப்போது வரும் என்ற எந்த நிச்சயமும் இல்லாமல் இருக்கும். இந்த நிலையில் இருக்கும் நன்கு படித்த பல சகோதரிகளை நான் அறிவேன். முடிவு தெரியாமல் இந்தக் காலம் நீடிக்கின்ற பொழுது,  பலர் கவலை,  விரக்தி,  மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்குள் விழுந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக தனது உறவுகளில் அல்லது அறிமுக வட்டத்தில் அல்லது பணியிடத்தில் தன்னை விடவும் வயதில் குறைந்தவர்களுக்குத் திருமணம் நடக்கின்ற பொழுது,  இந்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கிறது. இவர்களுக்கு தெரிவு எங்கே என்பதை விடவும் வாய்ப்பே வருவதில்லை என்பதுதான் பிரச்சினை. இவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசணைகள் சில இருக்கின்றன.

1.            அல்லாஹ்வில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். வாழ்க்கைத் துணை என்பது அவனது ரிஸ்க்,  அது கடலின் அடியாழத்தில் இருந்தாலும் உங்களுக்குரிய ரிஸ்க்கை அவன் கொண்டுவந்து தருவான் என்று நம்புங்கள். அல்குர்ஆன் கூறுகிறது “உங்களது ரிஸ்கும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவைகளும் வானத்தில் இருக்கிறது” (தாரியாத் - 23). அதாவது அவை அனைத்தும் அல்லாஹ்வின் கையில் இருக்கிறது. எனவே அவனில் நம்பிக்கை வையுங்கள் என்பதையே இந்த வசனம் கூறுகிறது.

2.            உங்களை விடவும் வயது குறைந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் நடக்கிறது எனக்கு நடக்கவில்லையே என்று ஏங்காதீர்கள்,  திருப்தி கொள்ளுங்கள். உங்களை விடவும் இக்கட்டான நிலையில் இருப்பவர்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நாற்பது வயது கடந்த பின்னரும் திருமணம் நடக்காதவர்கள்,  ஏன்? திருமணமே நடக்காது என்று சொல்லுமளவுக்கு உடல் ஊணமுற்றவர்கள்,  இவர்களை நினைத்துப்பாருங்கள்,  நீங்கள் எவ்வளவு பெரிய அருளில் இருப்பதாய் உணர்வீர்கள். நபியவர்கள் கூறினார்கள் “உங்களை விடவும் தாழ்ந்தவர்களைப் பாருங்கள் உங்களை விடவும் உயர்ந்தவர்களைப் பார்க்காதீர்கள்,  அதுதான் நீங்கள் அல்லாஹ்வின் அருளை குறைத்து மதிப்பிடாமல் இருக்க மிகவும் பொருத்தமான வழி” என்றார்கள், (முஸ்லிம்).

3.            உலகில் தாமதம் என்பதன் பொருள் என்ன தெரியுமா? மனிதப் பலவீனங்களின் காரணமாக ஒரு விடயம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்காமல் காலம் பிந்தி நடைபெறுவதுதான் தாமதம். மனித சக்திக்கு அப்பால்பட்டு,  நாம் எதிர்பார்ப்பதை விடவும் பிந்தி ஒரு விடயம் நடைபெறுமாக இருந்தால் அதற்குப் பெயர் தாமதமல்ல,  மாற்றமாக இன்னும் காலம் கனியவில்லை என்பதுவே அதன் பொருள். உங்களது வாழ்வில் திருமணம் தாமதமாவது என்பது உண்மையில் தாமதமல்ல,  ஏனெனில் அது உங்களது சக்திக்கு உற்பட்ட விடயமல்ல,  உங்களது பலவீனத்தால் நடைபெறும் ஒன்றும் அல்ல. எனவே தாமதமாகிறது என்று கவலைப்படாதீர்கள்,  யாரையும் குறை சொல்லாதீர்கள். அல்குர்ஆன் கூறுகிறது “நாம் ஒவ்வொரு விடயத்தையும் ஒரு அளவுடன்தான் படைத்திருக்கிறோம்” (அல்கமர் - 49). இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு கலாநிதி யூசுப் அல்கர்ளாவி அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ் இந்த உலகில் ஒவ்வொரு செயலும் நடைபெறுவதற்கு ஒரு காலத்தை வைத்திருக்கின்றான். அதற்குரிய காலத்தில்தான் அது நடைபெறும். காலம் முந்தியோ அல்லது பிந்தியோ நடைபெறமாட்டாது. ஏனெனில் உரிய காலத்தில் நடைபெறுவதில்தான் அதன் நலன் தங்கியிருக்கிறது என்கிறார்;. உங்களது திருமணமும் இவ்வாறுதான்.

4.            தன்னம்பிக்கை கொள்ளுங்கள்,  உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு அழகு இருக்கிறது. ஈர்ப்பு இருக்கிறது. பன்முகத் தன்மை என்பது அல்லாஹ்வின் படைப்பில் உள்ள ஒரு அற்புதம். ஒரு நல்ல மனைவியாக இருப்பதற்கு உங்களுக்கு உள்ள அடிப்படைத் தகுதியை குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்களையே நீங்கள் தாழ்வாக நினைத்து,  வருகின்ற சம்பந்தம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து விடாதீர்கள். உங்களது நலனையும் பொறுத்தப்பாட்டையும் பார்த்தே முடிவு செய்யுங்கள். தலையை நிமிர்த்தி தைரியமாக மார்க்கம் இல்லாதவர் எனக்குத் தேவையில்லை என்று மறுத்து விடுங்கள்.

5.            திருமண வாய்ப்புக்கள் கைகூடாத போது,  உங்கள் குடும்பத்தினரையும் குடும்ப சூழலையும் குறை கூறாதீர்கள். அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் என்று திருப்தி கொள்ளுங்கள். குடும்பத்தைக் குறை கூறுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. நல்லெண்ணம் வையுங்கள். பலவீனங்களைச் சகித்துக் கொள்ளுங்கள்.

6.            உங்களையே நீங்கள் ஒரு முறை சுயவிசாரணை செய்து பாருங்கள். உங்களது திருமணத்தின் தாமதத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் காரணமாக இருக்கிறேனா?  இந்த சுயவிசாரணையும் முக்கியம். ஒரு தவறு நடப்பதற்கு எப்பொழுதும் புறக்காரணிகள் மாத்திரம் காரணமாக இருக்க மாட்டாது. உங்களுக்குள்ளேயே உங்களால் மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்படாத மௌனமான காரணங்கள் எத்தனையோ காணப்பட முடியும். உதாரணத்திற்கு சிலவற்றை அடையாளம் காட்டுகிறேன்.

•              வாழ்க்கைத் துணை பற்றிய உங்களது நிபந்தனைகள் கடுமையானவையா? அல்லது இலகுவில் அடைந்து கொள்ள முடியுமான வகையில் பிராக்டிகலாக அமைந்துள்ளனவா? ஏனெனில் சில சமயம் எமது நிபந்தனைகளே எம்மை விட்டும் நிறையப் பேரைத் தூரமாக்கி விடும்.

•              ஆண்கள் பற்றியும் திருமணம் பற்றியும் தாய்மை பற்றியும் கொண்டிருக்கும் அல்லது வெளியிடும் முதிர்ச்சியுறாத கருத்துக்கள் பிறர் உங்களை நெருங்குவதைத் தடுக்கும். சில சமங்களில் எமது முறையற்ற வாசிப்புகள் இவைபோன்ற மனநிலைகளைக் கட்டமைத்து விடுகிறது. இப்படிப் பேசுவதை சில சமயம் பெருமையாகக் கூட நினைப்பதுண்டு. ஆனால் உள்ளத்தில் உள்ள உண்மையல்ல அது,  நாங்களாக எங்களுக்குக் கட்டமைத்துக் கொள்ளும் போலித் தோற்றம் அது. அதிலிருந்து வெளியே வரவேண்டும். என்றைக்கும் உண்மையும் இயல்பான நடத்தையுமே நலனைக் கொண்டு வரும்.

•              உங்களுக்குள் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். வலிந்த கர்வமும் வேண்டாம் வலிந்த நளினமும் வேண்டாம்,  வலிந்த சகஜமும் வேண்டாம் வலிந்த நாணமும் வேண்டாம். உங்களை உண்மையாக வெளிப்படுத்தப் பழகுங்கள். அப்பொழுதுதான் பிறர் உங்களை மிகச்சரியான தராசில் நிறுத்துப் பார்க்க முடியும்.

•              மார்க்கப்பற்று இருப்பதில் தவறில்லை,  ஆனால் அது அளவு மீறிச் சென்று ஆண் ஒதுக்குதலையும் மத ஒதுக்குதலையும் செய்யாதிருக்க வேண்டும். இஸ்லாம் தீவிரத்தை என்றைக்கும் வரவேற்பதில்லை. அதுபோல் பெண்ணுக்குரிய உரிமையைப் பேசுவதில் தவறில்லை. ஆனால் எல்லை மீறிப் போய் அது ஆண்வெறுப்பாய் வெளிப்படக் கூடாது. இவை போன்ற தீவிரங்களும் எங்களுக்கான துணையை எங்களை விட்டும் தூரமாக்குவதற்கான காரணிகளாக மாற முடியும். நடுநிலையே என்றும் நலனானது.

மூன்றாவது விடயம்,  சில சகோதரிகளைப் பார்த்திருக்கிறேன்,  குறித்ததொரு கலாசாலையில் கற்றவர்களைத் தான் முடிப்பேன் என்று உறுதியாக இருப்பார்கள். அது என்ன மந்திரமோ மாயமோ தெரியாது. சிலர் அதில் உண்மையிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சிலரது வெற்றியைப் பார்க்கும் பொழுது,  இப்படி ஒரு நிபந்தனையை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் தோன்றுகிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால்,  குறித்ததொரு கலாசாலையில் கற்றவரை மாத்திரம்தான் கணவராக ஏற்றுக் கொள்வேன் ஏனையவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றவகையான ஒரு பிடிவாதமாக அது மாறும் எனின்,  நிச்சயமாக அது தெரிவு விழுமியங்களுக்கு முரணாணதாகும். 

ஒரு தடவை என்னிடம் ஒரு தாயார் வந்தார். நல்ல மார்க்கமும் பணிவும் கல்வியும் உள்ள ஒரு பெண்மணி. இலங்கையின் பிரபலமான ஒரு இஸ்லாமியக் கலாசாலையைக் குறிப்பிட்டு அதில் கற்ற ஒருவரை தனது மகளுக்கு கணவராகப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். காரணத்தை நான் கேட்காமலேயே சொன்னார். எனது மகளும் மார்க்கம் படித்திருக்கிறார்,  நல்ல ஒழுக்கமும் மார்க்க ஈடுபாடும் இருக்கிறது,  எனவே மார்க்கம் உள்ள ஒருவர் கிடைத்தால் குடும்பம் நன்றாக இருக்குமல்லவா? என்றார். பின்னர் ஒரு தடவை ஆறுதலாக அந்தத் தாயிடம் சொன்னேன்,  மார்க்கம் என்பதை குறித்த கலாசாலையில் மட்டும் தேடாதீர்கள். அதில் கற்றவர்களில் நல்ல மார்க்க ஈடுபாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள்,  மார்க்க ஈடுபாடு குறைந்தவர்களும் இருக்கிறார்கள். வேறு துறைகளில் கற்ற அதே நேரம் மார்க்க ஈடுபாடு கொண்ட நல்ல இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்றேன். இங்கு முக்கியம் என்னவெனின் மார்க்கம் என்பதுதான் நிலையான காரணியாக இருக்க வேண்டும். அதனை சில கலாசாலைகளுடன் மட்டுப்படுத்தி,  மாப்பிள்ளை தேடும் கலாச்சாரம் அவ்வளவு பொறுத்தமானதாக இல்லை. ஏனெனில் குறித்ததொரு கலாசாலையில் கற்றவர்தான் தேவை என்று போய் எதிர்மறையான விளைவை வாழ்க்கையில் கண்டமைக்கான உதாரணங்களும் இருக்கின்றன. இறுதியில் அவப்பெயர் அந்த நபருக்கல்ல,  கலாசாலைக்கு. எனவே மாறும் நிபந்தனைகளையும் மாறா நிபந்தனைகளையும் தெளிவாக வேறுபடுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான் எனது உபதேசம்.

நான்காவது விடயம்,  இன்றைய நாட்களில் துணை தேடும் முறைமைகளில் முக்கியமான ஒன்று பெண் தேவை அல்லது மாப்பிள்ளை தேவை என்ற வகையிலான விளம்பரங்கள். இது இன்று தனியான வலைத்தளங்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வளர்ச்சியடைந்துள்ளன. இத்தகைய விளம்பரங்களில் அதிகமாக “அழகிய” “வசதியான” போன்ற அடைமொழிகள் ஆரம்ப நாட்களில் அதிகம் காணப்பட்டாலும் தற்போது “மார்க்கப்பற்றுள்ள” “தஃவா ஈடுபாடுள்ள” போன்ற அடைமொழிகளும் பெரிதும் இடங்களைப் பிடித்துக் கொண்டுள்ளன. இதுவொரு நல்ல முன்னேற்றம்தான். இதன் பொருள் அழகிய மற்றும் வசதியான போன்ற அடைமொழிகள் பிழையானவை என்பதல்ல. அவற்றுடன் மாத்திரம் சுறுங்கி விடக் கூடாது என்பதுதான்.

இந்த வழிமுறையில் சில நன்மைகள் இருக்கின்றன. அதாவது,  இடம்,  துறை போன்ற பல்வேறு விடயங்களில் எங்களுக்குப் பொருத்தமான துணையை அடையாளம் காண்பதற்கான விரிந்த வாய்ப்பு ஒன்று கிடைக்கிறது. ஒப்பீட்டு ரீதியில் இந்த நலன் சகோதரிகளை விடவும் சகோதரர்களுக்கு பயன் கூடியது. அதுபோல் திருமண வாய்ப்புக்கள் குறைந்த சகோதரிகளைப் பொறுத்தவரையிலும் இந்த வழிமுறை ஊடாக வாய்ப்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். குறிப்பிட்ட ஒரு வட்டத்தினுள் மாத்திரம் சூழன்று சலித்துப் போகாமல் விரிந்து தேடுதலை மேற்கொள்வது வாய்ப்புக்களை எங்களுக்கு முன்னே அதிகமாகக் கொண்டுவரும்.

இந்த முறைமையில் நன்மைகள் இருப்பது போலவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில இடங்களும் இருக்கின்றன. முதலாவது பொருத்தப்பாட்டுக் காரணிகள் முக்கியமாகப் பார்க்கப்படல் வேண்டும். ஏனெனில் வருகின்ற வாய்ப்பு அறிமுகமற்ற புதிய ஒரு தொடர்பாக இருக்கின்ற பொழுது,  இலகுவாக பொருத்தப்பாடுகளை அளந்து பார்த்துக் கொள்ள முடியாது. மாத்திரமன்றி இரு தரப்பையும் அறிந்து கொண்ட ஒரு நடுவர் காணப்படாத ஒரு நிலையும் இங்கு ஏற்படும். இதனாலும் பொறுத்தப்பாடுகளைப் பார்த்துக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். இரண்டாவது,  ஏமாற்றுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அந்தவகையில் முடிந்த வரையில் தீரவிசாரித்தல் என்பது முக்கியமானது. மூன்றாவது,  எப்பொழுதும் முறைமைகளில் மாத்திரம் நம்பிக்கை வைக்க வேண்டாம். பத்திரிகையில் போட்டு விட்டோம் என்பது மாத்திரம் உங்களுக்கு நல்ல துணையைக் கொண்டு வந்து தர மாட்டாது. நீங்கள் எந்தளவுக்கு அல்லாஹ்வுடன் நெருக்கமாக இருக்கிறீர்களோ அந்தளவுக்குத்தான் உங்களுக்கு பொருத்தமான துணை அமைவார் என்பதை என்றும் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஸாலிஹானவராக இருந்தால் நிச்சயமாக உங்களது துணையும் ஸாலிஹானவராக அமைவார். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.

அல்லாஹ் எம்மைப் பொருந்திக் கொள்ளட்டும்.

Tuesday, March 19, 2019

தஃவாவில் - கட்டிவளர்த்தலும் கட்டுடைத்தலும் (2)


ஒரு சமநிலைப் பார்வை 


கட்டிவளர்த்தல் அணுகுமுறையும் ஷாதிபியும் பன்னாவும்

இஸ்லாத்தின் கட்டிவளர்த்தல் அணுகுமுறை குறித்துப் பேசியவர்களுள் இமாம் ஷாதிபிக்கும் இமாம் ஹஸனுல் பன்னாவுக்கும் முதன்மையான ஒரு இடம் இருக்கிறது. இவர்கள் இருவரதும் கட்டிவளர்த்தல் சிந்தனை குறித்து கண்டிப்பாக எமது பார்வைகள் சற்றுத் திரும்ப வேண்டும். இந்த இடத்தில் இந்த இருவரையும் மாத்திரம் தெரிவு செய்தமைக்கு ஒரு காரணம் மாத்திரமே இருக்கிறது. அதாவது,  என்னுடைய எளிமையான வாசிப்பில் எனக்குக் கிடைத்தது இந்த இரு ஜாம்பவான்கள் மாத்திரமே. இதன் பொருள் இவர்களுக்கு வெளியில் இதனை எவரும் பேசவில்லை என்பதுவல்ல,  நிச்சயமாகப் பேசியிருப்பார்கள். ஏனெனில் இது இஸ்லாம் பேசும் பிரதானமான ஒரு அணுகுமுறை. இவர்களுக்கு அப்பால் யாரெல்லாம் இதனைப் பேசியிருக்கிறார்கள் என்பது தனியானதொரு ஆய்வுக்கான தலைப்பு என்று நினைக்கிறேன்.


மாத்திரமன்றி இவர்கள் இருவரதும் கட்டிவளர்த்தல் பார்வை தொடர்பாகவும் கூட இந்தக் கட்டுரையில் சில பொதுவான அடிப்படைகளை மாத்திரமே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இவர்களது கட்டிவளர்த்தல் சிந்தனையும் கூட தனித்த ஆய்வை வேண்டி நிற்கும் ஒரு பரந்த பரப்பு என்பது மேலோட்டமான வாசிப்பில் புரிந்து கொண்ட உண்மை.
இந்த இருவருக்கும் மத்தியில் நான் ஒரு ஒற்றுமையைக் காண்கிறேன். இருவரும் சமூகத்தின் தேக்க நிலை ஒன்றிலிருந்து அதனை மீட்டுக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டவர்கள். இமாம் ஷாதிபி எதிர்கொண்ட சூழலை ஒரு சிந்தனைத் தேக்க நிலையாக அடையாளப்படுத்தலாம். அதிலிருந்து சிந்தனையை எழுச்சி பெறச்செய்வதற்கான ஒரு முயற்சியாகவே அதனை மேற்கொண்டார். இமாம் பன்னா அவர்கள் எதிர் கொண்ட சூழலை செயற்பாட்டுத் தேக்க நிலையாக அடையாளப்படுத்தலாம். அதிலிருந்து மக்களை தட்டியெழுப்பும் பணியைத்தான் அவர் செய்ததாகக் கொள்ளலாம். அந்தவகையில் கட்டிவளர்த்தல் சிந்தனையொன்றின் முக்கியத்துவம் என்ன என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அது ஒரு சமூக எழுச்சித்திட்டம். அது ஒரு ஆக்க சிந்தனை. இவர்கள் இருவரும் ஒரு தேக்க சூழ்நிலையை எதிர் கொண்ட பின்புலத்தில் தான் இதனைக் கையாண்டார்கள் என்பது, இதனை அது போன்தொரு சூழலுக்குரியதாக மாத்திரம் நிச்சயமாகச் சுருக்கிவிடாது. ஏனெனில் முன்னைய பத்தியில் கூறியது போல் கட்டிவளர்த்தல் என்பது ஒரு மக்ஸத். அத்துடன் இந்த சிந்தனை ஒரு சூழல் தேவை சார்ந்தது அல்ல. எல்லாக் காலத்திலும் எழுந்து கொண்டே இருக்க வேண்டும். வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் போதனை.

இமாம் ஹஸனுல் பன்னாவின் சிந்தனைகளை அடுத்து பத்திக்கு விட்டு விட்டு,  இந்தப் பத்தியில் இமாம் ஷாதிபியின் கட்டிவளர்த்தல் சிந்தனைகளில் மாத்திரம் சற்றுக் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன். ஷாதிபியின் சிந்தனைகளை கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

1.            அமல் பற்றிய சிந்தனை.
2.            இல்ம் பற்றிய சிந்தனை.
3.            மகாஸித் பற்றிய சிந்தனை.
4.            மஸாலிஹ் பற்றிய சிந்தனை.
5.            குல்லிய்யா பற்றிய சிந்தனை.

இந்த ஒவ்வொன்று குறித்தும் விரிவாக நோக்க முடியுமாக இருந்தாலும் மிகவும் சுருக்கமாக சில கருத்துக்களை மாத்திரம் பரிமாறிக் கொள்கிறேன்.

1.            அமல் பற்றிய சிந்தனை : இமாம் ஷாதிபி அவர்கள் தனது முவாபகாத் எனும் நூலின் முதல் பகுதியில் பதினாறு முன்னுரைகளைப் பேசுகிறார். அதில் ஐந்தாவது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார். “செயலைக் கொண்டுவராத எந்தவொரு விவகாரத்திலும் ஆழ்ந்து செல்வது,  ஷரீஅத்தில் வரவேற்கத்தக்கதல்ல. இங்கு செயல் என்பதன் மூலம் நான் நாடுவது,  உள்ளத்தின் செயற்பாடுகளையும் உறுப்புகளின் செயற்பாடுகளையுமாகும். ஏனெனில் அவை ஷரீஅத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரம் இஸ்திக்ராஃ எனும் ஷரீஆ பற்றிய முழுவாசிப்பிலிருந்து பெற்றுக் கொள்ளும் முடிவாகும்….”(1). என்று ஆரம்பித்து இந்தக் கருத்துக்கான ஆதாரங்களை அடுத்து முன்வைக்கின்றார். அவற்றில் பொரும்பாலானவை இந்த ஆக்கத்தின் முதல் பத்தியில் பேசப்பட்டவையாகும்.  தொடர்ந்து. இமாம் மாலிக் அவர்களும் செயலைக் கொண்டுவராத விவகாரங்ளைப் பேசுவதை விரும்பவில்லை,  அதனை மக்ரூஹ் ஆகக்கருதினார் என்று குறிப்பிடுகிறார்.

இறுதியில் செயலைக் கொண்டுவராத ஒரு விவகாரத்தில் ஏன் ஈடுபடக் கூடாது என்பதற்கான இரண்டு நியாயங்களை முன்வைக்கிறார். முதலாவது,  இது ஷரீஅத் கடமைகளில் மிக முக்கியமானவற்றை விட்டும் எங்களை திசை திருப்பிவிடும். ஏனெனில் செயலைக் கொண்டுவராத ஒன்றில் நிச்சயம் உலகிலும் மறுமையிலும் பயனில்லை என்கிறார்.

இரண்டாவது,  எமது உலக,  மறுமை வாழ்வை சீர்படுத்தக் கூடியவற்றை ஷரீஅத் முழுமையான வடிவில் தெளிவு படுத்தித்தான் இருக்கிறது. இதற்கு அப்பால் இருப்பவை நிச்சயம் நலனைக் கொண்டு வராதவை. இதனை நாம் எமது நடை முறை அனுபவத்தில் காணலாம்,  ஒரு செயற்பாட்டு விளைவைக் கொண்டுவராத கலைகளில் ஈடுபடும் அதிகமானோரைப் பார்க்கின்ற பொழுது,  அவர்கள் திசை மாறியிருப்பதையும் சரியான பாதையை விட்டும் சறுக்கியிருப்பதையும் கண்டு கொள்ளலாம்,  அவர்கள்

மத்தியில் முரண்பாடுகளும் சர்ச்கைளும் கிளம்பி அவை பிரிவினையையும் வெறியையும் உருவாக்கி விட்டிருக்கிறது. இறுதியில் பல குழுக்களாக மாறிவிட்டிருப்பார்கள்,  இது நடைபெற்றால் அவர்கள் சுன்னாவை விட்டும் வெளிச்சென்று விட்டார்கள் என்றுதான் பொருள். பிரிவினைக்கான அடிப்படைக் காரணம்,  தேவையான அறிவை விட்டுவிட்டு தேவையில்லாத அறிவில் ஈடுபடுகின்றமைதான்,  இதுதான் அறிஞனுக்கும் சரி மாணவனுக்கும் சரி ஏற்பட முடியுமான பித்னா என்கிறார்.

இமாம் ஷாதிபியுடைய இந்த வார்த்தைகள் மிகத் தெளிவானவை,  இதில் ஒரு நேர்ப்பார்வையை விதைக்கிறார். நாம் எதில் ஈடுபட வேண்டும்? எங்களுக்கு எது முக்கியம்? ஒன்றைக் கட்டிவளர்த்தலே முக்கியம். சிதைத்து விடுவதல்ல என்பதையே இங்கு வலியுறுத்துகிறார்.

இங்கு இமாம் ஷாதிபியின் கட்டிவளர்த்தல் சிந்தனையை இரண்டு இடங்களில் முக்கியமாக ஹைலைட்டாகக் காணலாம். ஒன்று பிரயோசனமான ஒன்றில்தான் எமது ஈடுபாடு குவிய வேண்டும் என்று சொன்ன இடத்தில்,  அதாவது,  உலக மறுமைப் பயனைத் தரக்கூடிய ஒன்றின் மீதான ஈடுபாட்டைத்தான் ஷரீஅத் எம்மிடத்தில் எதிர்பார்க்கிறது. இரண்டு பயனற்ற விடயங்கள் எமது இலக்கை விட்டும் எம்மை திசை திருப்பி விடும் என்பதுடன் பிரிவினை மற்றும் வெறி போன்ற தவறுகளுக்குள்ளும் எம்மைத் தள்ளிவிடும் என்று சொன்ன இடத்தில். இது தவிர்க்கப்பட வேண்டியது,  ஏனெனில் சிதைத்தல் செயற்பாடு இங்குதான் வெளிப்படுகிறது.

2.            இல்ம் பற்றிய சிந்தனை : இமாம் ஷாதிபி இல்ம் என்னும் அறிவு பற்றிய சிந்தனையை,  முவாபகாத்தின்  பதினாறு முன்னுரைகளில் ஏழாம்,  எட்டாம் மற்றும் ஒன்பதாம் முன்னுரைகளில் பேசுகிறார்(2).  அந்த ஒவ்வொரு முன்னுரை குறித்தும் சுருக்கமான ஒரு பார்வையை அடுத்து நோக்குவோம்.

முதலாவது,  ஏழாவது முன்னுரையில் அல்லாஹ் அங்கீகரித்த அறிவு என்பது,  அல்லாஹ்வை வணங்குவதற்கான அறிவாக இருத்தல் வேண்டும்,  அதுதான் அறிவின் முதல் நோக்கம். அறிவுக்கு வேறு நோக்கம் இருப்பின் அது முதல் நோக்கத்தின் அடியாகவே தோன்ற முடியும். இங்கு வணங்குதல் என்பதன் பொருள்,  அறிவு செயலை நோக்கி வழிநடாத்துவதாக இருக்க வேண்டும் என்றே இமாம் ஷாதிபி விளங்கப்படுத்துகிறார்.

அந்தவகையில் அறிவு என்பது ஒரு வழிமுறை,  ஷரீஅத்தின் பார்வையில் அறிவு தன்னிலையில் ஒரு இலக்கல்ல,  அது செயல் எனும் இலக்கை நோக்கி வழிநடாத்தும் வழிமுறை என்கிறார்.

அறிவின் சிறப்பு மறுக்கப்படவில்லை,  ஆனால் அறிவுக்கு ஒரு அடிப்படை மக்ஸதும் துணை மக்ஸதுகளும் உண்டு, அடிப்படை மக்ஸத் ஏலவே குறிப்பிடப்பட்ட செயல் சார்ந்தது. துணை மக்ஸத்களாக சிலவற்றை அடையாளம் காட்டிச் செல்கிறார். உதாரணமாக,  அறிவு ஒரு கௌரவம்,  அழகு,  செல்வம், அதற்கு நிகரில்லை,  இதனால்தான் அறிஞனின் வார்த்தைக்கு ஒரு மதிப்பு வருகிறது,  அது செயற்படுத்தப்படுகிறது. அதுபோல் அறிவு என்பது ஒரு சுவை,  ஈடில்லாத ஒரு சுவைத் தேடல். அதுபோல் அறிவு என்பது ஒரு அதிகாரம்,  அதிகார எண்ணம் என்பது மனிதனின் உள்ளேயே புதைந்திருக்கும் ஒரு இயல்பு. இவை துணை மக்ஸதுகள்.

ஆனால் இந்த துணை மக்ஸதுகள் அடிப்படை மக்ஸதுக்கு பணி செய்வதாக அமைய வேண்டும் என்பது நிபந்தனை. துணை மக்ஸதுகள் அடிப்படை மக்ஸதுக்கு பணி செய்தால் அவை ஏற்கப்படும். இல்லாத போது மறுக்கப்படும் என்கிறார். துணை மக்ஸதுகள் அடிப்படை மக்ஸதுக்கு பணி செய்யாத போதுதான் அதனை இஸ்லாம் முகஸ்துதி என்றது,  பெருமை என்றது,  உலக இலாபத் தேடல் என்றது.

இமாம் ஷாதிபியின் இந்த வார்த்தைகளில் கட்டிவளர்த்தல் சிந்தனை வெகுவாக வெளிப்படுகிறது. அறிவின் அடிப்படை இலக்கு செயல் என்கிறார். துணை இலக்குகளான கௌரவம்,  சுவை,  அதிகாரம் போன்றவையும் அடிப்படை இலக்கினை வளர்த்து விடும் அமைப்பில் அல்லது பலப்படுத்தும் அமைப்பில் அல்லது துணை செய்யும் அமைப்பில் காண்படுகின்ற பொழுதுதான் அவற்றிற்கு ஷரீஅத் அங்கீகாரம் கிடைக்கிறது என்கிறார். அந்தவகையில் விளைவற்ற புதிதாக ஒன்றைத் தோற்றுவிக்காத எதனையும் அவர் செயற்பாடாகக் கருதவில்லை என்பது புலனாகிறது. அறிவு தேடலின் மூலம் கூட ஒன்று கட்டப்பட வேண்டுமேயன்றி சிதைத்துவிடக் கூடாது என்பதில்தான் அவரது கவனம் குவிந்திருக்கிறது.

இரண்டாவது,  எட்டாவது முன்னுரையில் செயலை நோக்கி வழிநடாத்தும் அறிவு எவ்வாறு காணப்பட வேண்டும் என்ற ஒரு வரையறை குறித்துப் பேசுகிறார். அதாவது அறிவு என்பது ஒரு மனிதனது மனோ இச்சையைக் கட்டுப்படுத்தக் கூடியதாகக் காணப்படல் வேண்டும். அதுதான் முழுமையான அறிவு,  உண்மையான அறிவு,  என்கிறார். இதனை மூன்று படித்தரங்களில் விளங்கப்படுத்துகிறார். முதலில் தகலீத் உடைய நிலை, இரண்டாவது,  தக்லீதை விடவும் சற்று உயர்ந்த நிலை,  மூன்றாவது, அறிவின் முழுமை நிலை,  இதுதான் மனோ இச்சையைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலை. “அல்லாஹ்வை அதிகம் பயப்படக் கூடியவர்கள் அறிஞர்களே” (பாதிர் - 28) என்ற அல்குர்ஆன் வசனம் இந்தக் கருத்தையே தருகிறது என்கிறார். இதே கருத்தைத்தான் கீழ்வரும் கூற்றுக்களும் உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார்.

இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் “அறிவு என்பது அதிகம் ஹதீஸ்களைத் தெரிந்து வைத்திருப்பது அல்ல,  மாறாக அல்லாஹ்வை பயந்து கொள்வது” என்றார்கள். இமாம் மாலிக் கூறுகிறார்கள் “அறிவு என்பது அல்லாஹ் தான் விரும்பியவரை நேர்வழியில் நடாத்துவதற்கான ஒரு ஒளி,  அது சட்ட விவகாரங்களை அதிகம் தெரிந்து வைத்திருப்பது அல்ல,  ஆனால் அதற்கு வெளிப்படையான சில அடையாளங்கள் இருக்கின்றன,  இந்த உலகில் இருப்புக் கொள்ளாதிருத்தலும் நிரந்தர உலகினை எதிர்பார்த்திருத்தலும்” என்றார்கள்.

இங்கு இமாம் ஷாதிபி,  அறிவு செயற்பாட்டை நோக்கி வழிநடாத்தும் போது,  இடையில் உள்ளத்திற்கு உள்ள பங்கு என்ன என்பதனை விளக்குகிறார். அந்தவகையில் அறிவு என்பதே ஒருவன் உணர்ந்து செயற்படுதல் என்றும் அறிஞன் என்பவன் உணர்ந்து செயற்படுபவன் என்றும் சொல்வதைப் புரிந்து கொள்ளலாம். இந்த இடத்திலும் அறிவு ஒர் ஆக்கமாகவே முன்வைக்கப்படுகிறது.

மூன்றாவது,  ஒன்பதாவது முன்னுரையில்,  அறிவை மூன்று படித்தரங்களில் கட்டமைக்கிறார். முதலாவது,  மைய அறிவு,  இதுதான் அடிப்படைகளையும் திட்டவட்டமானவற்றையும் மகாஸிதுகளையும் குறித்து நிற்கிறது. இதன் மீதுதான் ஏனைய அனைத்தும் கட்டப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமானது,  நிலையானது,  ஆளக்கூடியது,  பயனுறுதி கொண்டது. இரண்டாவது,  அறிவின் உப்பு என்கிறார். அதாவது,  ஒன்றுக்கு சுவை சேர்க்கும் உப்பு போன்ற பகுதி,  இது அடிப்படையானது அல்ல. இதன் மீது எதுவும் கட்டப்பட மாட்டாது. இது செயற்பாட்டு விளைவைக் கொண்டு வரமாட்டாது. ஆனால் இதனை சுவைக்காகப் பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறார். உதாரணமாக காரணம் கண்டறிய முடியாத வணக்க வழிபாடுகளுக்கு மகாஸிதுகளை வரையறை செய்தல்,  கனவு விளக்கம்,  செயற்பாட்டைக் கொண்டுவராத கருத்து வேறுபாடுகள் போன்றன. மூன்றாவது,  மைய அறிவும் அல்லாத,  உப்பும் அல்லாத ஒன்று, இது பல சமயங்களில் அடிப்படைகளையும் தகர்க்கும் வகையில் அமைந்திருக்கும். அல்குர்ஆனுக்கு வழங்கப்பட்ட பாதினிய விளக்கங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இமாம் ஷாதிபியின் அறிவு பற்றிய இந்த சிந்தனைகளை மொத்தமாகத் தொகுத்து நோக்குகின்ற பொழுது,  அறிவிற்கு இலக்கை வரையறை செய்து,  அதனை அடிப்படை என்றும் துணை என்றும் வகைப்படுத்துகிறார். அடுத்து,  இலக்கை அடையும் வகையில்,  அறிவுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான தொடர்பை தெளிவு படுத்துகிறார். அடுத்து,  அறிவின் படித்தரங்களை விளங்கப்படுத்துகிறார். இங்கு ஒன்றின் மீது மற்றொன்று எழுவதையும் ஒன்றில் மற்றையது பிணைக்கப்படுவதையும் பார்க்கின்ற பொழுது,  இமாம் ஷாதிபி அவர்கள் எப்படி ஒரு விடயம் முறையாகக் கட்டப்பட வேண்டும் என்பதை கற்றுத்தருவதைக் காணலாம். இது இமாம் ஷாதிபியின் கட்டிவளர்த்தல் சிந்தனையின் முக்கிய ஒரு பண்பு.

3.            மகாஸித் பற்றிய சிந்தனை : இமாம் ஷாதிபியை தனித்துவமாக எடுத்துக் காட்டியது உண்மையில் அவரது மகாஸித் சிந்தனைதான். அதனை அவர் முன்வைத்துள்ள பாங்கு அவரது கட்டிவளர்த்தல் சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எனினும் இங்கு இரண்டு விடயங்கள் குறித்து மாத்திரம் அவதானத்தைச் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது,  மகாஸித் சிந்தiனையை இமாம் ஷாதிபி உருவாக்கிய பின்புலம் எது என்பது. அதாவது,  இமாம் ஷாதிபி அவர்கள் முவாபகாத்தின் முன்னுரைகளில் முதலாவது(3) மற்றும் நான்காவது(4) முன்னுரைகளில் உஸுலுல் பிக்ஹ் குறித்து இரண்டு முக்கிய உண்மைகளை விளங்கப்படுத்துகிறார்கள். அவையிரண்டும் அன்றைய கால சூழலில் இருந்த முக்கிய இரண்டு பிரச்சினைகளை அடையாளப்படுத்துகின்றன. முதலாவது முன்னுரையில் உஸுலுல் பிக்ஹ் என்பது திட்டவட்டமான ஒரு அடிப்படையாகவே கொள்ளப்படும். அதாவது கத்ஈயானது. அது பலகருத்துக்களுக்கு இடம்பாடானதாகவோ அல்லது மாற்றங்களுக்கு உற்பட முடியுமானதாகவோ கருதப்பட மாட்டாது. அதாவது லன்னியாகக் கருதப்பட மாட்டாது,  என்கிறார். இந்தக் கருத்து உண்மையில் இமாம் ஷாதிபிக்கு முன்னர் உஸுலுல் பிக்ஹ் பற்றிப் பேசியவர்களுக்கு மாற்றமான ஒரு சிந்தனையாகும். அதாவது,  முன்னர் பேசியவர்கள் உஸுலுல் பிக்ஹை மாற்றத்திற்கு உற்பட முடியுமான லன்னியான ஒரு பரப்பாகவே அடையாளப்படுத்தினர். உஸுலுல் பிக்ஹ் லன்னியாக இருப்பது உண்மையில் அதனை அடிப்படையாகக் கொள்வதில் ஒரு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கருத்து வேறுபாட்டுக்கும் மாறுதல்களுக்கும் உற்பட முடியுமான ஒன்றை பல கருத்துக்களுக்கு இடம்பாடான ஒன்றை எவ்வாறு ஒரு அடிப்படையாகக் கருதுவது?  இதனால் பிக்ஹில் கருத்து வேறுபாடுகளைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட உஸுலுல் பிக்ஹே பல புதிய கருத்து வேறுபாடுகளுக்குக் காரணமாக மாறுகின்றது. அதாவது சட்டக் கருத்து வேறுபாடுகள் மிக விரிவானதாக மாறுவதற்கு உஸுலுல் பிக்ஹில் பல விவகாரங்களில் ஒருமித்த நிலைப்பாடு இல்லாமையும் ஒரு முக்கிய காரணம். இந்த சூழ்நிலையிலிருந்து வெளிவரும் நோக்கிலேயே இமாம் ஷாதிபி அவர்கள் மகாஸிதுஷ் ஷரீஆ என்ற சிந்தனையை அறிமுகப்படுத்துகிறார்.

நான்காவது முன்னுரையில்,  இதுவரையில் உஸுலுல் பிக்ஹ் என்ற பரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ள விவகாரங்களில் சில பகுதிகள் உஸுலுல் பிக்ஹ் என்ற தலைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது,  உஸுலுல் பிக்ஹ் என்பது ஒரு அடிப்படை. அதன் மீது ஒரு கிளைச் சட்டம் கட்டப்பட வேண்டும் அல்லது ஒரு ஒழுக்கச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது அவற்றிற்குத் துணை செய்யக் கூடியவையாகவேனும் இருக்க வேண்டும். இவற்றில் எந்தப் பணியையும் செய்யாத உஸுலுல் பிக்ஹுடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தில் எந்தப் பயனுமில்லை. அப்படியான ஒன்று உஸுலுல் பிக்ஹின் ஒரு பரப்பாக இருப்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் உஸுல் என்பதன் பொருள் அதிலிருந்து ஒரு விளைவு அல்லது பயன் உருவாக வேண்டும் என்பதாகும்,  என்கிறார். அத்துடன் சட்டரீதியான ஒரு விளைவுக்குத் துணை செய்யக்கூடிய அனைத்தையும் உஸுலுல் பிக்ஹ் என்று சொல்வதுமில்லை,  ஏனெனில் அறபு இலக்கண அடிப்படைகளும் சட்டரீதியான விளைவுகளுக்குத் துணை செய்யும்,  ஆனால் அவை உஸுலுல் பிக்ஹில் அடங்குவதில்லை,  என்கிறார்.

கலாநிதி முஃதஸ் அல்கதீப் அவர்கள் கூறுவது போல்(5) இமாம் ஷாதிபி அவர்கள் கிளைச் சட்டங்களைப் பெறுவதற்கான அடிப்படைகளாகக் கருதப்படும் உஸுலுல் பிக்ஹ் எனும் கலை குறித்து ஒரு விமர்சனத்தை முன்வைப்பதன் மூலம்,  அதன் பிரயோகத்தில் இருக்கின்ற ஒரு பிரச்சினையையே ஹைலைட் பண்ணுகிறார். அந்தவகையில் உஸுலுல் பிக்ஹ் அதனுடன் சம்பந்தப்படாத விடயங்கள் களையப்பட்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்,  அதற்கான ஒரு முன்மொழிவாகத்தான் மகாஸிதை இமாம் ஷாதிபி கொண்டு வருகிறார்.

உஸுலுல் பிக்ஹ் தொடர்பான மேற்கூறப்பட்ட விமர்சனங்களின் அடியாக இமாம் ஷாதிபி அவர்கள் மகாஸித் என்ற சிந்தனையைக் கட்டமைக்கிறார். அதாவது உஸுலுல் பிக்ஹ் எனும் கலையின் பிரயோகத்தில் தோன்றும் இடைவெளியை நிரப்பும் வகையிலேயே இங்கு மகாஸித் முன்மொழியப்படுகிறது. அதன் மூலம் உஸுலுல் பிக்ஹின் பிரயோகத்தை மேலும் பயனுறுதி வாய்ந்ததாக மாற்றுவதே அவரது பணியாக அமைந்தது. மாற்றமாக உஸுலுல் பிக்ஹிற்கு விமர்சனங்கள் சொல்லிவிட்டு அப்படியே கடந்து செல்லவில்லை அல்லது உஸுலுல் பிக்ஹே அவசியமில்லை என்று சொல்லவில்லை. ஒன்றன் மீது மற்றொன்றைக் கட்டியெழுப்பினார். இதுதான் இமாம் ஷாதிபியின் கட்டிவளர்த்தல் அணுகுமுறை.

இரண்டாவது,  மகாஸிதினுடைய பணி அல்லது பிரயோகம் சம்பந்தப்பட்ட விடயம். அதாவது மகாஸித் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? அதனை வெறுமனே இஸ்லாத்தின் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் விளங்கப்படுத்துவதற்கான ஒன்றாக மாத்திரம் நாம் பயன்படுத்துவதா? அல்லது அதனை புதிய இஜ்திஹாதுகளுக்கான ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதா? உண்மையில் இவற்றில் இமாம் ஷாதிபியின் நோக்கம் என்ன என்பதைப் பார்க்கும் போது,  இரண்டாவதுதான் அவரது பிரதான நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஏலவே குறிப்பிடப்பட்டது போன்று மகாஸித் என்ற சிந்தனையைப் பேசிய பின்புலமே உணர்த்தும் உண்மை என்னவெனின் இஜ்திஹாத் என்ற பொறிமுறையை மேலும் பயனுறுதி வாய்ந்ததாக மாற்றும் நோக்கிலேயே மகாஸித் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதனை மிகவும் தெளிவாக இமாம் ஷாதிபி அவர்கள் முவாபகாத்தின் ஐந்தாவது பகுதியான இஜ்திஹாத் என்ற பாடத்தில்

குறிப்பிடுகிறார். இஜ்திஹாத் செய்வதற்கான தகைமைகளைப் பற்றிப் பேசும் பொழுது,  இரண்டு பிரதான தகைமைகளைக் குறிப்பிடுகிறார். முதலாவது,  மகாஸிதுஷ் ஷரீஆவை அதன் முழுவடிவில் விளங்கியிருத்தல் இரண்டாவது,  மகாஸிதுஷ் ஷரீஆவை விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் சட்டங்களைப் பெறும் ஆற்றல் பெற்றிருத்தல் என்கிறார்(6). இந்த இரண்டு தகைமைகளும் மகாஸிதை அடிப்படையாகக் கொண்டவை. அந்தவகையில் புதிய இஜ்திஹாதுக்கான பிரதான ஊடகமாகத்

தொழிற்படுவதே மகாஸிதின் பிரதான நோக்கம் அல்லது பணி என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதுவும் மகாஸிதை ஒன்றைக் கட்டிவளர்க்கும் அணுகுமுறையாக அடையாளப்படுத்துகிறது. இமாம் ஷாதிபி அவர்கள் மகாஸிதை கட்டும்,  வளர்க்கும் மற்றும் இணைக்கும் ஒரு ஆக்க சிந்தனையாகவே முன்வைத்திருக்கிறார்கள்,  மாற்றமாக சிதைக்கும் சிந்தனையாக முன்வைக்கவில்லை.
          
4.            மஸாலிஹ் பற்றிய சிந்தனை : உண்மையில் மகாஸித் சிந்தனையின் ஒரு கூறாகவே மஸாலிஹ் சிந்தனை முன்வைக்கப்படுகிறது. அதாவது,  அல்லாஹ்தஆலா ஷரீஆவை இறக்கியமைக்கான பிரதான மக்ஸதாக இமாம் ஷாதிபி அவர்கள் உலகிலும் மறுமையிலும் நலன்களை (மஸாலிஹ்) நிலை நாட்டுதல் என்று குறிப்பிடுகிறார்(7). இமாம் ஷாதிபியின் நலன் பற்றிய சிந்தனையின் சிறப்பம்சம் என்னவெனின்,  அதனை ஷரீஆவை அமுல்படுத்துவதற்கான முழுமையான ஒரு கட்டமைப்பாக விளங்கப்படுத்துகிறார். அந்தவகையில் ஒன்று மற்றொன்றை தாங்கி நிற்பதாகவும்,  ஒன்று மற்றொன்றை முழுமைப்படுத்துவதாகவும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதனைக் கீழ்வருமாறு விளங்கப்படுத்தலாம்(8). முதலில் உலக மறுமை நலன்களை நிலைநாட்டுதல் ஷரீஆவின் பிரதான மக்ஸத் என்பதை ஒரு பிரதான உண்மையாகக் குறிப்பிடுகிறார். இதன் பொருள் என்ன? அதாவது,  அல்லாஹ்தஆலா முழு ஷரீஆவையும் மனித நலனை நிறைவேற்றக் கூடியதாகவே இறக்கியுள்ளான். ஷரீஆவின் ஒவ்வொரு சட்டத்தின் மூலமும் ஏதேனும் ஒரு மனிதநலன் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த நலன்கள் சமதரத்திலானவை அல்ல. அந்தவகையில்தான்

அடுத்ததாக நலன்களின் பிரதான மூன்று வகைப்பாடுகளை அடையாளப்படுத்துகிறார். முதலாவது அத்தியவசிய நிலை,  உலகில் மனிதவாழ்வின் நிலைத்த தன்மைக்கு எவை இன்றியமையாதவையோ,  அவைதான் அத்தியவசிய நிலையில் வைத்து நோக்கப்படுகின்றன. அவற்றை இமாம் ஷாதிபி தெளிவாக வரையறுத்துக் கூறுகிறார். அவை,  மார்க்கம்,  உயிர்,  அறிவு,  பரம்பரை,  செல்வம் ஆகிய ஐந்தும் அத்தியவசிய நலன்களாகும். இவற்றை வளர்ப்பதற்கான அல்லது பாதுகாப்பதற்கான அனைத்து சட்டங்களும் அத்தியவசிய நிலைச் சட்டங்களாகும். உதாரணமாக மனிதக் கொலை தடுக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். இரண்டாவது தேவை நிலை,  உலகில் மனித வாழ்வு சிரமங்கள் சங்கடங்கள் இன்றி நிலைபெறுவதற்கான அனைத்தும் தேவைநிலையில் வைத்து நோக்கப்படுகின்றன. அந்தவகையில் மனிதனது சிரமங்களைப் போக்கும் வகையிலான சட்டங்கள் அனைத்தும் தேவைநிலைச் சட்டங்களாகும். இதற்கு உதாரணமாக மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளைக் குறிப்பிடலாம். மூன்றாவது ஆடம்பர நிலை,  இது மனித வாழ்வை அழகாகவும் மதிக்கத்தக்கதாகவும் ஆக்குவதற்கான காரணிகளைக் குறிக்கின்றது. வாழ்வை அழகு படுத்துவதற்கான சட்டங்கள் அனைத்தும் ஆடம்பர நிலைச் சட்டங்களாகும். இதற்கு உதாரணமாக சுத்தம் பற்றிய சட்டங்களைக் குறிப்பிடலாம்.

அடுத்து,  இந்த மூன்று வகைகளைத் தொடர்ந்து,  இந்த ஒவ்வொரு வகையையும் பூரணப்படுத்துவற்குரிய காரணிகளை அடையாளப்படுத்துகிறார். அதாவது,  குறித்த இந்த வகைப்பாட்டுத் தரங்களில் நேரடியாக உள்ளடங்காவிட்டாலும் அந்த ஒவ்வொரு வகையையும் முழுமைப்படுத்தக் கூடிய சில சட்டங்களும் காணப்படுகின்றன. உதாரணமாக கிஸாஸ் என்னும் பழிக்குப் பழிச் சட்டம் அத்தியவசிய நிலைச் சட்டங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த சட்டத்தினுள் காணப்படும் முக்கிய வரையறைகளில் ஒன்று என்னவெனின்,  பழிக்குப் பழிச் சட்டத்தை அமுல்படுத்தும் போது,  சமதன்மை மீறப்படக் கூடாது என்பதாகும். அதாவது,  எந்தளவு சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறதோ அதே அளவு சேதம்தான் அதற்கான தண்டணையின் போதும் அடுத்த தரப்பிற்கு விளைவிக்கப்படல் வேண்டும் என்பது. இந்தச் சட்டம் அத்தியவசிய நிலைச்சட்டம் அல்ல,  ஆனால் அத்தியவசிய நிலைச் சட்டத்தை முழுமைப்படுத்தக் கூடிய ஒரு சட்டம் என்று இமாம் ஷாதிபி கருதுகிறார். இதே போன்று தேவைநிலைச் சட்டங்களுக்கும் ஆடம்பர நிலைச் சட்டங்களுக்கும் முழுமைப்படுத்தக் கூடிய சட்டங்கள் காணப்படுகின்றன.

அடுத்து,  முழுமைப்படுத்தக் கூடிய சட்டங்களுக்கான ஒரு நிபந்தனையைக் குறிப்பிடுகிறார். அந்த முழுமைப்படுத்தக் கூடிய சட்டம் அடிப்படைச் சட்டத்தை செல்லுபடியற்றதாக மாற்றும் வகையில் அமைந்து விடக் கூடாது என்கிறார். அப்பொழுது மட்டும்தான் அது முழுமைப்படுத்தும் சட்டம் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறது. உதாரணமாக தொழுகையை நிறைவேற்றுதல் என்பது அத்திவசிய நிலைச் சட்டம்,  அவ்ரத்தை மறைத்தல் என்பது அதனை முழுமைப்படுத்தும் சட்டங்களில் ஒன்று,  எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழுகையின் போது,  அவ்ரத்தை மறைப்பதை கட்டாயமாக்குதல் பொதுமைப்படுத்தப்படக் கூடாது. ஏனெனில் அவ்வாறு பொதுமைப்படுத்தினால்,  அவ்ரத்தை மறைப்பதற்கான ஒரு ஆடை கிடைக்காமல் போகும் நிர்ப்பந்தமான ஒரு நிலையில் அவ்ரத்துக்காக தொழுகையைக் கைவிடும் நிலை ஏற்பட முடியும். இங்கு முழுமைப்படுத்தும் சட்டத்திற்காக அடிப்படைச் சட்டம் ரத்துச் செய்யப்படும் நிலை வருகிறது.

அடுத்து,  அத்தியவசிய நிலை,  தேவை நிலை,  மற்றும் ஆடம்பர நிலை இவற்றிற்கிடையிலான தொடர்பைப் பற்றிப் பேசுகிறார். இதனை ஐந்து அடிப்படைகளில் விளங்கப்படுத்துகிறார். முதலாவது,  இவற்றில் அத்தியவசிய நிலைதான் அடிப்படையானது,  ஏனைய இரண்டும் அதனை முழுமைப்படுத்தக் கூடியது,  அதுபோல்,  தேவை நிலையை ஆடம்பர நிலை முழுமைப்படுத்தும் என்கிறார். அதாவது அத்தியவசிய நிலைச் சட்டம் அடிப்படையானது என்ற வகையில் அதனை சிரமமின்றி நிறைவேற்றும் பணியை தேவைநிலைச் சட்டம் செய்கிறது. அதுபோல் அதனை அழகாகவும் முன்மாதிரியாகவும் மாற்றுகின்ற பணியை ஆடம்பர நிலைச் சட்டம் செய்கிறது என்கிறார். இரண்டாவது,  அடிப்படை நிலைச் சட்டம் இல்லாது போனால் தேவைநிலைச் சட்டங்களும் ஆடம்பர நிலைச் சட்டங்களும் தானாகவே இல்லாமல் போகும். உதாரணமாக வியாபாரம் இல்லாது போனால் வியாபாரத்தின் நிபந்தனைகளான முடிவு தெரியாமல் இருக்கக் கூடாது,  பண்டங்கள் தெளிவாக இருக்க வேண்டும் போன்ற தேவைநிலைச் சட்டங்கள் தானாகவே இல்லாது போய்விடும் என்கிறார். மூன்றாவது,  தேவைநிலைச் சட்டங்களும் ஆடம்பரநிலைச் சட்டங்களும் இல்லாது போனால் அத்தியவசிய நிலைச் சட்டம் முழுமையாக இல்லாமல் போய்விட மாட்டாது. உதாரணமாக தொழுகையின் ஓதல்கள்,  தக்பீர் கூறுதல் போன்றவை இல்லாது போவதால் தொழுகை முழுமையாக செல்லுபடியற்றதாக மாற மாட்டாது. என்கிறார். நான்காவது,  தேவைநிலைச் சட்டங்களும் ஆடம்பர நிலைச் சட்டங்களும் முழுமையாக இல்லாது போனால் அது அத்தியவசிய நிலைச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார். அதாவது,  ஒருவன் குறைந்த நிலையில் உள்ள ஒன்றை விட்டுவிடுவது,  அதனை விடவும் கூடிய நிலையில் உள்ள ஒன்றை விடுவதற்கான தைரியத்தை அவனில் ஏற்படுத்தும். உதாரணமாக ஒருவன் தொழுகையில் ஒதலை விடுகின்றவன்,  நின்ற நிலையில் தொழுவதையும் விடுவதற்குத் துணிவான்,  அது தொழுகையையும் விடுவதற்கான தூண்டுதலை வழங்கலாம். அதுபோல் தேவைநிலைச் சட்டங்களும் ஆடம்பர நிலைச் சட்டங்களும் ஒரு மனிதனை அத்தியவசிய நிலைச் சட்டத்திற்குத் தயார்படுத்தும் வேலையையும் செய்கிறது. உதாரணமாக வுளுச் செய்வது, தொழுகைக்கான மானசீகத் தயார்படுத்தலை மனிதனில் ஏற்படுத்துகிறது, என்கிறார். ஐந்தாவது,  எனவே அத்தியவசிய நிலைச் சட்டங்களைப் பாதுகாப்பதற்காக தேவைநிலைச் சட்டங்களையும் ஆடம்பர நிலைச் சட்டங்களையும் பாதுகாப்பது அவசியமாகிறது,  என்கிறார். இறுதியாக, இந்தக் கருத்தை நிறைவு செய்யும் போது,  எனவேதான் எல்லா சமூகங்களிலும் மதங்களிலும் இந்த அத்தியவசிய நிலையைக் காப்பதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சட்டவகைகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கலாம்,  ஆனால் எல்லாவற்றிலும் இவற்றிற்கான சட்டங்கள் உள்ளன,  ஏனெனில் அத்தியவசிய நிலைதான் வாழ்க்கையின் அத்திவாரம்,  என்கிறார்.

உண்மையில் இமாம் ஷாதிபியின் நலன் பற்றிய சிந்தனையின் சில பகுதிகள் மாத்திரம்தான் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எல்லாப் பகுதிகளும் முழுமையாகப் பேசப்படவில்லை. இருந்த போதிலும் இந்தப் பகுதிகளை மாத்திரம் நோக்குகின்ற பொழுதிலும்,  இமாம் ஷாதிபி அவர்கள் தனது சிந்தனையை எவ்வளவு அழகாக முழுவாழ்விலும் பிரதிபளிக்கும் வகையில் கட்டமைத்துத் தருகிறார் என்பதை அறியலாம். இந்த முழுமைப் பார்வைதான் அவரது கட்டிவளர்க்கும் அணுகுமுறையைப் பிரதிபளிக்கிறது. எந்த இடத்திலும் அவர் சிதைவணுகுமுறையைப் பிரயோகித்ததைக் காணமுடியாது.

5.            குல்லிய்யா பற்றிய சிந்தனை :  ஒரு தடவை கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்களிடம் குல்லியாவுக்கும் மகாஸிதுக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்று கேட்டேன். அதற்கு கலாநிதி அவர்கள் எளிமையான ஒரு பதிலைத் தந்தார். குல்லிய்யா என்பது பல கிளையம்சங்களை உள்ளடக்கிய பொது உண்மை ஒன்று,  மகாஸித் என்பது நாம் அடைந்து கொள்ள வேண்டிய ஒன்று அல்லது அல்லாஹ்தஆலாவால் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட ஒன்று. குல்லிய்யா ஒன்று சமகாலத்தில் மகாஸிதாகவும் இருக்க முடியும். அதேவேளை மகாஸிதில் பொதுவானதும் உண்டு, கிளையானதும் உண்டு. உதாரணமாக “ஒருவரது பாவத்தை பிறிதொருவர் சுமக்க மாட்டார்” என்பது ஒரு குல்லிய்யா,  மகாஸித் அல்ல. அதாவது இதனை அடைந்து கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்ளப்படவில்லை,  ஆனால் இவை பொது விதிகள் அவசியமான இடங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுபோல்,  “நீதியை நிலை நாட்டுதல்”,  “வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்” போன்றன சமகாலத்தில் குல்லியாக்களாகவும் மகாஸித்களாகவும் காணப்படுகின்றன. ஏனெனில் இவை பல கிளையம்சங்களை உள்ளடக்கிய பொது விதிகளாக உள்ள அதேவேளை இவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் இருக்கின்றோம்,  என்றார்(9).

இமாம் ஷாதிபி தனது எழுத்துக்களில் அடிக்கடி பயன்படுத்திய சொற்களில் ஒன்றாக குல்லிய்யா என்ற சொல் காணப்படுகின்றது. அவரது குல்லிய்யா பற்றிய சிந்தனையை விளங்கப்படுத்த வந்த கலாநிதி அஹ்மத் அர்ரஸ்ஸாகி அவர்கள்,  இமாம் ஷாதிபியிடத்தில் குல்லிய்யா என்பது முன்னர் கூறப்பட்டது போல் பல கிளையம்சங்களை உள்ளடக்கிய ஒரு பொது விதி என்பது போல் அந்த விதி திட்டவட்டமாக நிறுவப்பட்டதொன்றாகவும் காணப்படும்,  அத்துடன் அது மனித நலனை மைய்யப்படுத்திய விதியாகவும் இருக்கும் என்கிறார்(10).

அந்தவகையில் இமாம் ஷாதிபியின் சிந்தனை எப்பொழுதும் ஒரு மொத்தப் பார்வையில் இருந்தே அமைவதைக் காணலாம். ஒவ்வொரு தனிச்சட்டங்களையும் அந்த மொத்தப் பார்வையில் இருந்து கொண்டே அலசுவார். இதற்கான சிறந்த உதாரணமாக அவரது முபாஹ் பற்றிய கருத்தை நோக்க முடியும். அதாவது முபாஹ் என்பதன் அடிப்படைப் பொருள்,  அது ஆகுமானது என்பதாகும். அதனை செய்வதனாலும் அல்லது விடுவதனாலும் நன்மையோ அல்லது தீமையோ விளைவதில்லை. முபாஹ் என்பதற்குரிய இந்த அடிப்படைக் கருத்தை,  குறித்த ஒரு செயலை,  குறித்த ஒரு தனிமனிதன்,  குறித்த ஒரு சந்தர்ப்பத்தில் செய்கின்ற போது மாத்திரமே வழங்க முடியும்,  என்று இமாம் ஷாதிபி கருதுகிறார். ஏனெனில் ஒரு செயல் ஒரு தனிமனிதனால் தொடர் தேர்ச்சையாக செய்யப்படுகின்ற பொழுதும்,  ஒரு செயல் பலரால் செய்யப்படுகின்ற பொழுதும் அது தனிச் செயலாகக் கருதப்பட மாட்டாது, மாற்றமாக அது பொதுச் செயல் ஒன்றாகவே கருதப்படும். ஒரு பொதுச் செயலுக்கு தனிச் செயலின் அதே சட்டம் வழங்கப்பட முடியாது என்பது இமாம் ஷாதிபியின் நிலைப்பாடாகும். உதாரணமாக,  சாப்பிடுதல் என்பது முபாஹான செயற்பாடாகும். இதனை ஒரு தனிமனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் தவிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவன் அதனை தொடர்தேர்ச்சியாகத் தவிர்ந்து கொள்வதும்,  ஒரு சமூகமே இணைந்து தவிர்ந்து கொள்வதும் நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. அது ஹராமாகவே கருதப்படும். ஏனெனில் அது இஸ்லாத்தின் பொதுக் கோட்பாட்டுடன் முரண்படுகிறது என்கிறார்(11).

இமாம் ஷாதிபியின் குல்லியா பற்றிய மேற்போந்த சிந்தனையைப் பார்க்கின்ற பொழுதும்,  இமாமவர்களின் கட்டிவளர்த்தல் அணுகுமுறை அதனுள்ளே இழையோடியிருப்பதைக் காணலாம். பல விடயங்களை இணைத்து மொத்தமாகப் பார்க்கின்ற பார்வையிலும்,  கிளைகளில் அதனைப் பிரயோகிக்கின்ற பொழுது,  மொத்தப் பார்வையில் இருந்து நழுவிச் செல்லாது அதனை வடிவமைக்கும் பாங்கும்,  கட்டிவளர்த்தல் என்ற பொசிடிவ் அணுகுமுறையையே பிரதிபளிக்கின்றன.

இறுதியாக இமாம் ஷாதிபியைப் பற்றி கலாநிதி பரீத் அல் அன்ஸாரி அவர்கள் கூறிய ஒரு கருத்துடன் நிறைவு செய்கிறேன். “இமாம் ஷாதிபியின் அறிவு முதுசங்களை ஆராய்கின்ற ஒருவர்,  முதல் பார்வையிலேயே இமாம் ஷாதிபியை நுணுக்கமான கோட்பாட்டுணர்வு கொண்ட ஒருவராகவே கண்டு கொள்வார். அவர் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்ட ஆழமானதொரு கோட்பாட்டுச் சட்டகத்தின் ஊடாகவே சிந்திக்கிறார். அவரது ஆய்வும் எழுத்தும் விமர்சனமும் புத்தாக்கமும் அனைத்தும் இந்தப் பின்புலத்தில் நின்றே அமைகிறது” என்கிறார்(12).

அடிக்குறிப்புக்கள்
(1). நுஃமான் ஜுகைம்,  தய்ஸீருல் முவாபகாத் லில் இமாம் அஷ்ஷாதிபி, லெபனான்,  தார் இப்னு ஹஸ்ம் லிந்நஷர் வத் தௌஸீஃ,  2009,  பக். 22-24.
(2). மேற்படி,  பக். 26-32.
(3). மேற்படி,  பக். 16-17.
(4). மேற்படி,  பக். 21-22.
(5). முஃதஸ் அல் கதீப்,  அல்வழீபா அல்மகாஸிதிய்யா மஷ்ரூஇய்யதுஹா வகாயாதுஹா,  2007,  வலைத்தளத்தில் காணப்படுகிறது : https://www.academia.edu/29903837/The_Role_of_Maqasid_legitimacy_and_goals_الوظيفة_المقاصدية_مشروعيتها_وغاياتها.  
(6). நுஃமான் ஜுகைம்,  தய்ஸீருல் முவாபகாத் லில் இமாம் அஷ்ஷாதிபி,  ப.610.
(7). மேற்படி,  ப.143.
(8). மேற்படி,  பக்.143-154.
(9). கலாநிதி அவர்களுடன் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட உரையாடல் மூலம் பெறப்பட்ட தகவல்,  2017.
(10). அஹ்மத் அர்ரஸ்ஸாகி,  அல் குல்லிய்யாத் அத்தஷ்ரீஇய்யா வமகாஸிது இஃமாலிஹா இன்தல் இமாமிஷ் ஷாதிபி மின் கிலாலில் முவாபகாத் வல் இஃதிஸாம்,  லண்டன்,  முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி மர்கஸுதிராஸாதி மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  2016,  பக். 37-41.
(11). நுஃமான் ஜுகைம்,  தய்ஸீருல் முவாபகாத் லில் இமாம் அஷ்ஷாதிபி,  பக்.45-49.
(12). பரீத் அல் அன்ஸாரி,  அல் முஸ்தலஹுல் உஸுலி இன்தஷ் ஷாதிபி, எகிப்து,  தாருஸ்ஸலாம்,  2010,  ப.173.