Tuesday, January 29, 2013

ஈமானிய அமர்வுகள் - இங்கிருந்து தொடங்குவோம்...

ஈமானிய பலவீனத்தால் ஏற்படும் செயல்பாடுகளில் சில...



  • வணக்க வழிபாடுகளை அதற்குரிய முறையில் நிறைவேற்றுவதில் கவனக்குறைவு ஏற்படும்.
  • ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாகவே வரும் நிலை. அல்லது ஜமாஅத் தொழுகைக்கு அறவே கலந்துகொள்ளாத நிலை.
  • சிலவேளை பள்ளிவாசலுக்கு வருவது. அப்படியே வந்தாலும், தொழுகையில் பல சிந்தனைகளுடன் இருப்பது, இமாம் ஸலாம் கொடுக்கும்போதுதான் தான் ஜமாஅத் தொழுகைக்கு வந்ததையே நினைப்பது.
  • ஃபஜ்ர் தொழுகைக்கு உரிய நேரத்தில் எழாமல் தூங்குவது.
  • சூரியன் உதித்தபின் எழுந்தாலும், ஃபஜ்ர் தவறியதற்காக எவ்விதச் சலனமும் கவலையுமின்றி, சாதாரணமாகவே தனது வேலைகளில் ஈடுபடுவது.
  • ஜுமுஆ தொழுகைக்கு இமாம் மிம்பரில் ஏறிய பிறகே செல்வது. அல்லது தொழுகைக்காக தக்பீர் கட்டும் நெருக்கத்தில் அவசர அவசரமாகப் போய்ச்சேர்வது. நேர காலத்துடன் சென்றாலும் ஆற்றுகின்ற உரையில் கவனமின்றி உறங்குவது.
  • சுன்னத்தான அமல்களில் போதிய ஈடுபாடின்றி இருப்பது. அவற்றை விடுவது குற்றமில்லை என்ற அலட்சியமான போக்கு. கியாமுல் லைல், ளுஹா, வித்ர், சுன்னத்தான நோன்புகள் ஆகியவற்றைக் கண்டுகொள்ளாத தன்மை.
  • குர்ஆன் ஓதுவது அல்லது தர்ஜுமா வாசிப்பது அரிதாக இருக்கும். அப்படி ஓதினாலோ, வாசித்தாலோ நாவுகள் மட்டுமே அசையும் நிலை. உள்ளத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத நிலை.
  • ஒவ்வொரு சந்தப்பங்களிலும் ஓத வேண்டிய சுன்னத்தான துஆக்கள் ஓதாத நிலை. அல்லாஹ்விடத்தில் கையேந்தி துஆ கேட்கும் பண்பில்லாத நிலை

ஈமானியப் பலவீனத்தின் விளைவுகளில் சில...

பேணுதல் குறைந்துவிடும்


சொல், செயல், உணவு போன்றவற்றில் ஹராம், ஹலால் பேணமாட்டார். தனது கடமைகளை சரிவர நிறைவேற்றமாட்டார். தொழிலுக்குக்கூட உரிய நேரத்திற்குச் செல்லமாட்டார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் மாட்டார்; நிறைவேற்றாதது குறித்து கவலைப்படவுமாட்டார்.


மார்க்க உணர்வும் பொறுப்புணர்ச்சியும் உள்ளத்தில் குறைந்துவிடும்

மார்க்கத்தில் மாறும் பகுதிகளை மட்டுமல்லாது, நிலையான பகுதி களையும் விடத் தொடங்குவார். பர்ளு, சுன்னத் போன்றவற்றை மறக்கத் தொடங்குவார். நிரந்தர ஹராமான வட்டி போன்ற செயல்கள் சகஜமாகி விடும். குற்றங்களைக் காணும்போது கோபம் ஏற்படாது. நன்மையை ஏவவும் மாட்டார். தீமையைத் தடுக்கவும் முனையமாட்டார்.

பார்வையைத் தாழ்த்துவது இல்லாது போய்விடும்


பெண்களுடன் சகஜமாகப் பேசுவார். அதில் சுவை காண்பார். தொலைக் காட்சியிலும் மோசமான காட்சிகளை சலனமின்றிப் பார்ப்பார்.


கேளிக்கைகள் அதிகரித்துவிடும்.


இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து அரட்டை அடித்தல் அதிகரிக்கும். பேச்சில் ஈமானிய தொனியிருக்காது. பகுத்தறிவுத் தொனியும் சில சமயம் ஆபாசத் தொனியும்தான் மிகைத்திருக்கும். குர்ஆன், ஹதீஸ் பேச்சுகள் அங்கு அறவே வராது. இத்தகைய சபைகளில் அடுத்தவர்களைப் பற்றியே அதிகம் பேசப்படும். பரிகசித்தலும் இழிவுபடுத்தலும் அவமானப்படுத்தலும் புறம், கோள் போன்றவை சர்வசாதாரணமாகக் காணப்படும்.


ஆடம்பர வாழ்வை விரும்பும் போக்கு அதிகரிக்கும்


உணவு, உடை என்பனவற்றில் இந்தப் பண்பு வெளிப்படும். சில நேரம் எளிமையான உடையையும் எளிமையான உணவையும் பரிகாசம் செய்வார். அல்லது அருவருப்பார். அவர் அதிகம் சென்றுவரும் இடங்களும் அல்லது செல்ல விரும்பும் இடங்களும் ஆடம்பர இடங்களாகவே இருக்கும். நட்சத்திர ஹோட்டல்களிலேயே சாப்பிடுவார்.


பெற்றோர்கள், பிள்ளைகளைப் பராமரிப்பது குறைந்துவிடும்


பிள்ளைகள் நினைத்ததுபோல் வளர்வார்கள். இஸ்லாமியப் பண்பாடுகள் போதிக்கப்பட மாட்டாது.  பிள்ளைகளை சில சமயம் தொல்லையாகக் கருதுவார். பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ற கேள்வியே கேட்கத் தோன்றாது.


மன்னிப்பும் தயாள குணமும் குறைந்துவெறுப்பும் குரோதமும் அதிகரிக்கும்:


தனிமனித உறவுகள் வெறுப்பிலும் நம்பிக்கையின்மையிலும் கட்டி யெழுப்பப்பட்டிருக்கும். இருவருக்கிடையே எப்போதும் மோதல் போக்கே காணப்படும். இதனால் முரண்பாடுகள் அதிகரிக்கும். ஒருவர் மற்றவரைப் பற்றி குறை கூறுவதிலும் அவரைப் பற்றித் தவறான அபிப் பிராயத்தை ஏற்படுத்துவதிலுமே காலம் கழிப்பார். எதிர்ப்புணர்வே இங்கு மேலோங்கியிருக்கும். அடிக்க வேண்டும் வெட்ட வேண்டும் என்ற கோஷங்களே இங்கு அதிகமாய் கேட்கும்.


செலவழிக்கும் பண்பு குறைந்துபோதல்:


கஞ்சத்தனம் அதிகரிக்கும். கேட்கின்றவராகத்தான் அதிகமாக இருப்பார். கொடுப்பவராகக் காணமுடியாதிருக்கும். ‘இல்லை’ என்ற வார்த்தைகளே அடிக்கடி உபயோகிக்கும் நிலை. கேட்டு வருவோரைத் துரத்துவதும் ஏசுவதும் அடிக்கடி நடக்கும். இதனால் சமூகநலப் பணிகள் நிறுத்தப்பட்டுவிடும். குற்ற உணர்வு இன்றிப் போகும். சோதனைகளை எதிர்கொள்ளப் பயப்படுவார்.


பண்பாடுகள் சீர்குலைந்து போதல்:


எதிலும் கடுமை அதிகரித்து மென்மை இல்லாமல் போகும். பெற்றோர், உறவினர், அண்டை வீட்டார் ஆகியோரின் உரிமைகள் மீறப்படும். நல்ல வார்த்தை பேசுபவரைக் காண முடியாதிருக்கும். ஆபாசமும் அசிங்கமும் பேச்சில் இடையிடையே வருவது கௌரவமாகக் கருதப்படும். பெண்களின் விதவிதமான ஆடைகளும் வண்ண வண்ண பூச்சுகளும் சகிக்க முடியாதிருக்கும்.


கொடுக்கல், வாங்கல்களில் நேர்மை இல்லாது போய்விடும்:


ஏமாற்று அங்கீகரிக்கப்பட்ட விதியாக இருக்கும். நேர்மையாக நடப்பவர் முட்டாளாக வர்ணிக்கப்படுவார்.

ஈமான் பலவீனப்படும்போது இவற்றையும் இன்னும் பலவற்றையும் காணலாம். தனிமனிதன், சமூகம், அரசு எல்லாவற்றிலும் இதன் பாதிப்புகள் படிந்திருக்கும். தனிமனிதனோ, சமூகமோ, அரசோ வீழ்வதற்கும் இவையே காரணமாக இருக்கும். எனவே, ஈமானிலிருந்து நம் சிந்தனைகளையும் செயல்களையும் தொடங்குவோம்.


‘‘ஈமானிய அமர்வுகள் இங்கிருந்து தொடங்குவோம்” (பாகம் - 1) நூலிலிருந்து...
நூலாசிரியர்,  அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமி