Sunday, February 24, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களுக்காக... (சகோதர, சகோதரிகளுக்கு...)



சகோதரர்களே!

உங்கள் வாழ்வின் பொக்கிஷம் எது என்பதை அறிவீர்களா? அது தங்கமா? வெள்ளியா? அல்லது சொத்துக்களா? நிச்சயமாக இல்லை. இவற்றுக்கப்பால் விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷம் இருக்கிறது.

நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபியவர்கள் உமர் (றழி) அவர்களிடம் கூறுகிறார்கள்: ஒரு மனிதன் பெற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த பொக்கிஷம் எது என்பதைக் கூறட்டுமா? அதுதான் ஸாலிஹான மனைவி. அவளைப் பார்த்தாலேயே சந்தோஷம் ஏற்படும். கட்டளையிட்டால் முழுமையாகக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத சந்தர்ப்பங்களில் அவளைப் பாதுகாப்பாள் (அபூதாவூத்).

ஸாலிஹான மனைவி, அவள்தான் ஓர் ஆணின் பொக்கிஷம். மனைவி ஸாலிஹானவளாக உள்ளபோதுதான் அவள் பொக்கிஷமாய் இருப்பான். பொக்கிஷம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய, பெறுமதிமிக்க ஒரு பொருள். அது அவளது வாழ்வையே மாற்றிவிடக்கூடியது. மனைவியும் அத்தகையவள் தான். பார்வையிலேயே சந்தோஷமளிப்பவள், கட்டுப்படுபவள், உடனில்லாதபோதும் அவளைநெஞ்சினில் பூட்டிப் பாதுகாப்பவள்.

சகோதரர்களே!

பொக்கிஷத்தை இலகுவாகக் கண்டுகொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. கடுமையான உழைப்பு, கவனமான தேடல் மூலமாகத்தான் கண்டுகொள்ள முடியும். இங்குதான் மிகச் சரியான தெரிவு அவசியப்படுகிறது. தெரிவு சரியாக அமைகிறபோதுதான் உனக்கான உள்ளம், உனக்கான சந்தோஷம், உனக்காக வாழ்பவள் கிடைப்பாள். அவள்தான் பொக்கிஷம்.

சகோதரனே!

நீ தேடுவது உனக்கான ஒரு வீட்டையா? இல்லையல்லவா? நீ ஏற்கனவே ஒரு வீட்டில்தான் வாழ்கிறாய். அங்கு உனக்கு உறவுகள் இருக்கின்றன. நீ தேடுவது உனக்கு பணிவிடைகள் செய்வதற்குரிய ஒருவரையா? நிச்சயமாக இல்லை. ஏற்கனவே அதற்காகப் பலர் இருக்கிறார்கள்.

உனது தேடல் இதுவல்ல. நீ தேடுவது ஒரு மனைவியை உனக்கான ஒரு மனைவியை அவள் யார்? அந்தத் தேடல் என்ன?

நீண்ட பயணத்திற்குப்பின் நங்கூரமிட ஒரு கரையைத் தேடுகிறாயா? சுட்டெரிக்கும் பாலைவனத்தில் குளிர்ந்த நீர், நிழல் தரும் மரம், ஓ... ஒரு சோலையைத் தேடுகிறாயா?

உனது சுமைகளை இறக்கிவைக்க ஒரு தோள். உனது கவலைகளை சுமந்துகொள்ள ஓர் இதயம். இதுதான் உனது தேவையல்லவா? இது அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சி.

அவன் கூறுகிறான்: அவனது அத்தாட்சிகளில் ஒன்று, உங்களிலிருந்தே உங்களுக்கான சோடியைப் படைத்தான். நீங்கள் அமைதியடைய வேண்டும் என்பதற்காக உங்கள் இருவருக்கும் மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தினான்... (அர்ரூம் - 21)

நீ தேடுவது அமைதியை!

வாழ்வில் பாதைகள் சிதறும்போது, பாதங்கள் தடுமாறும்போது, எதிர்காலம் ஒளியற்றுப் போகும்போது உள்ளத்திற்கு ஆறுதலும் அமைதியும் தேவை. அதனை உடனிருக்கும் துணைதான் உன்னதமாய் வழங்க முடியும்.

நீ தேடுவது கண்குளிர்ச்சியை!


ரஹ்மானின் அடியார்களது துஆவைப் பாருங்கள். அவர்கள் கூறுவார்கள் எமது இரட்சகனே! எமது மனைவிமார்கள் மூலமும் பிள்ளைகள் மூலமும் எமக்குக் கண்குளிர்ச்சியை அருள்வாயாக. இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாக எம்மை ஆக்குவாயாக. (அல்புர்கான் - 74).

கண்குளிர்ச்சி என்பது ஓய்வு. கண்குளிர்ச்சி என்பது வாழ்வும் நேரமும் ஒழுங்குபடுத்தப்படுதல். கண்குளிர்ச்சி என்பது மகிழ்ச்சி.

மனைவி, பிள்ளைகள், குடும்ப வாழ்க்கை என்பது ஓய்வும் சந்தோஷமும், வாழ்வின் நடவடிக்கைகளும் நேரங்களும் வெற்றியை நோக்கி ஒழுங்குபடுத்தப்படுதலும் ஆகும். இதனால்தான் அந்த ரஹ்மானின் அடியார்கள் தலைவர்களாக மாறுகிறார்கள். சமூகத்திற்குத் தலைமை வழங்குபவனின் குடும்பவாழ்க்கை கண்குளிர்ச்சியாய்க் காணப்படல் வேண்டும்.

நீ தேடுவது உன் வீட்டு எஜமானியை


நபியவர்கள் கூறினார்கள்: பெண் தனது கணவனின் வீட்டில் எஜமானியாவாள், நிர்வாகியாவாள், அவளது நிர்வாகத்திற்கு அவளே பொறுப்பாவாள்” (ஸஹீஹுல் புகாரீ)

அவள் உன் வீட்டு எஜமானி. உனது அனைத்து விடயங்களையும் அவள்தான் நிர்வகிக்கிறாள். உனது நேரங்கள், உனது தேவைகள், உனது நலன்கள், உனது வீடு அனைத்தையும் நிர்வகிப்பவள் அவள்தான். எனவே, உன் வீட்டுப் பொறுப்புகளை சுமக்கத் தகுதியான ஒருத்தியே உனது தேடல்.

நீ தேடுவது ஒரு பாதுகாவலரை

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஸாலிஹான பெண்கள், அல்லாஹ்வுக்கு முழுமையாய் தன்னை அர்ப்பணித்து இபாதத்தில் ஈடுபடுவர். அல்லாஹ் பாதுகாத்த மறைவான விடயங்களை எப்பொழுதும் காப்பவர்களாக இருப்பார்கள்(அந்நிஸா - 34).


நபியவர்கள், ஸாலிஹான மனைவி என்பவள்... நீ இல்லாத சமயத்தில் உனது மானத்தையும் செல்வத்தையும் காப்பவள்என்று தெரிவித்தார்கள். (சுனனுந் நஸாஈ)

ஒரு விடயம் புரிகிறது. பாதுகாத்தல் என்பது சொத்துகளைப் பாதுகாத்தல் மட்டுமல்லாது, ஆணுடைய மானத்தை, கண்ணியத்தை, கௌரவத்தைப் பாதுகாத்தல் என்பவையும் அடங்கும். இத்தகைய ஒரு பாதுகாவலர் அமைகிறபோது உள்ளத்தில் எவ்வளவு நிம்மதி இருக்கும்...?

நீ தேடுவது ஓர் அன்பானவளை

அல்குர்ஆன் கூறுகின்றது: உங்கள் இருவருக்கும் இடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி வைத்தான் (அர்ரூம் - 21)

நபியவர்கள் கூறினார்கள்: மிகவும் அன்பு செலுத்தக்கூடியவளை, அதிக பிள்ளைகளைப் பெறக்கூடிய பெண்ணைத் திருமணம் செய்யுங்கள்...

அன்பானவள் உனது எல்லா நிலைகளிலும் உன்னை அரவணைப்பவள். அவள்தான் உன்னையும் உனது வாழ்வையும் உனது எதிர்காலத்தையும் உனது ஆசைகளையும் கனவுகளையும், உனது சிந்தனைகளையும் நேசிப்பவள். இவற்றுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துபவள். உனது வாழ்வை பொறுப்புள்ளதாய் மாற்றுபவள். அவள்தான் உனது தேடல்.

நீ தேடுவது அன்பாய் அடிபணிபவளை

சொர்க்கத்தில் மனிதனுக்குத் தயார்படுத்தப்பட்டிருக்கும் பெண் பற்றி அல்குர்ஆன் கூறும்போது,

அவர்களை நாம் முன்மாதிரியின்றி படைத்தோம். அவர்கள் கன்னிப் பெண்கள், அவர்கள் கணவனுக்கு அன்போடு கட்டுப்படுபவர்கள். அவர்கள் சமவயதினர்கள் (அல்வாகிஆ – 35 - 37)

அன்போடு கட்டுப்படுபவள்; பயத்தினால் கட்டுப்படுபவளல்ல. வெறுப்போடு கட்டுப்படுபவளல்ல. சம்பிரதாயபூர்வமாகக் கட்டுப்படுபவளல்ல. அவள் கணவனை நேசிப்பவள். அவளை எப்பொழுதும் நெருங்கிநிற்பவள். அவன் கோபப்பட்டால் நீங்கள் திருப்தியுடன் மன்னிக்காதவரை என் கண்கள் தூங்கமாட்டாது என்று சொல்பவள். தனது நெஞ்சிலும் சிந்தனையிலும் அவனை மாத்திரம் சுமப்பவள். இப்பொழுது அவனது கட்டளை வந்தால், அந்தக் கட்டளைக்கு முன்னால் அவள் எப்படி இருப்பாள்? விருப்பத்துடன் கட்டுப்படுவாள். கட்டுப்பாட்டில் அன்பே பிரதிபலிக்கும். இத்தகையவள் மூலம்தான் உனதுவாழ்வின் சந்தோஷம் முழுமையடைகிறது.

சந்தன வியாபாரியா? இரும்பு உலை ஊதுபவனா?

சகோதரிகளே!

உங்கள் வாழ்க்கைப் பயணம் மிகவும் நீண்டது. அதில் உடன் வரக்கூடிய தோழன் யார்? அவனைத் தெரிவு செய்துவிட்டீர்களா? அவன் சந்தன வியாபாரியா? அல்லது இரும்பு உலை ஊதுபவனா?


நபியவர்கள் கூறிய உதாரணம் உங்களுக்கும் பொருந்தும். நல்ல தோழனுக்கும் மோசமான தோழனுக்கும் உரிய உதாரணம் சந்தன வியாபாரிக்கும், இரும்பு உலை ஊதுபவனுக்கும் ஒப்பானதாகும். சந்தன வியாபாரி, சந்தனத்தை உனக்குத் தரலாம் அல்லது உனக்கு விற்பனை செய்யலாம் அல்லது அதன் வாசனையையேனும் நீபெற்றுக்கொள்ளலாம். இரும்பு உலை ஊதுபவன் உனது ஆடையை எரித்துவிடலாம் அல்லது மோசமான வாசனையை நீ பெற்றுக்கொள்ளலாம்” (ஸஹீஹ் முஸ்லிம்)

உங்கள் வாழ்க்கையின் இறுதிவரை வரப்போகும் தோழன் உங்களுக்குப் பயனளிப்பவனாய் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை வாசனையால் நிரப்பிவிடுகின்றவனாய் இருக்க வேண்டும். வாழ்வை எரித்துவிடுகின்றவன் அல்லன். அதனை துர்நாற்றத்தால் நிரப்பிவிடுபவன் அல்லன்.

எனவே, மிகச் சரியான தெரிவு முக்கியமானது. வாழ்க்கையின் மிக முக்கியமான தீர்மானம் இது.

சகோதரியே! உன்னையே நீ கேட்டுப் பார்த்துக்கொள்!


  • எனது வாழ்வின் தோழன் யார்?
  • எனது வாழ்வில் மனம் பரப்பப்போகின்றவன் யார்?
  • எனது அன்புப் பிரவாகத்தில் நனையப்போகும் அந்த மனிதன் யார்?
  • எனது கவலைகளையெல்லாம் இறக்கிவைப்பதற்குரிய அந்த இதயம் எது? 
  • எனது பெண்மையின் இதழ்களை முகர்ந்து பார்க்க நான் யாரை அனுமதிக்கப்போகிறேன்? 
  • எனது வாழ்க்கைப் பாதைகளில், ஒளியேற்றி வழிகாட்டும் அந்த ஆலோசகன் யார்? 
  • எனது வாழ்வின் கொடியைக் கையளிக்கப்போகும் அந்தத் தளபதி யார்? 
  • என்னை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்லும் அந்த நம்பிக்கையாளன் யார்?

அவனை அல்லது அவளைத் தேடிய ஒரு பயணத்தைத்தான் நாங்கள் போக இருக்கிறோம்.

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதர, சகோதரிகளே!

என்னுடன் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள். அவசரப்படாமல் அமைதியாய் பொறுமையா எமது தேடல் அமையட்டும்.

எமது தேடல் ஐந்து கேள்விகளுக்குப் பதில் சொல்வதாய் அமையப்போகிறது.

1. எப்போது? 
2. ஏன்? 
3. யார்?  
4. எங்கே? 
5. எவ்வாறு?


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அமர்வுகளில் இந்தக் கேள்விகளுக்கு விடைகாண்போம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

Friday, February 15, 2013

தனிமனித உருவாக்கத்தின் மூன்று பரப்புகள்


முதல் பரப்பு:-


இஸ்லாமிய சமூக மாற்றம் குறித்துப் பேசுகின்ற பொழுது, தனிமனித உருவாக்கம் அங்கு முக்கியம் பெறுவதை நாம் அறிவோம். இன்றைய வேகமான உலக மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் தனிமனித உருவாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் நாம் அறிவோம்.

அந்தவகையில் உலகை ஆளவல்ல மனித உருவாக்கம் குறித்த சில பார்வைகளை இங்கு முன்வைக்கிறோம். 

தனிமனித உருவாக்கத்தின் முதல் பரப்பு ஒரு சிறந்த முஸ்லிமை உருவாக்குதல் என்பதாகும். இந்த முஸ்லிமை அடையாளப்படுத்தும்போதுதான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பத்துப் பண்புகள் குறித்துப் பேசினார்கள்.

  1. பலமான உடலும்
  2. உறுதிமிக்க பண்பாடுகளும்
  3. ஆழ்ந்தசிந்தனையும்
  4. சுயமாய் உழைக்கும் திறனும்
  5. மாசற்றஅகீதாவும்
  6. குறைபாடுகளற்ற இபாதாவும்
  7. உளப்போராட்டமும்
  8. ஒழுங்குபடுத்தப்பட்டவாழ்க்கையும்
  9. நேரத்தை உச்ச பயன் அளிக்கும் வகையில் பயன்படுத்தலும் பிறர்க்குபயனளித்தலும்


என்ற பத்து வகைப் பண்புகளை ஒரு சிறந்த இஸ்லாமிய ஆளுமைப் பண்புகளாய் இமாம் அவர்கள் குறித்துக் காட்டினார்கள். இவற்றின் மீதான உருவாக்கம், இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தின் முதல் பரப்பாகும்.

இரண்டாம் பரப்பு:-


அடுத்து இஸ்லாமிய சமூக மாற்றத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு போராளியை உருவாக்கல் தனிமனித உருவாக்கத்தின் இரண்டாவது பரப்பாகும். இங்கு இஸ்லாமிய சமூக மாற்றம் என்பது முஸ்லிம் உம்மத்தின் நிரந்தரமான பணியின் அடிப்படையில் எழுகிறது. மனித இனத்திற்கு வழிகாட்டுதலும் அதற்குத தலைமை வழங்குதலும் முஸ்லிம் உம்மத்தின் பணியாகும். அந்த வழிகாட்டும் பணியைத்தான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் “உஸ்தாதிய்யதுல் ஆலம்” என்றார்கள்.

இந்தப் பணியை உலகில் அதிகாரபூர்வமாக மேற்கொள்ளக்கூடிய அலகு எது என்றால், அதையே நாம் இஸ்லாமிய கிலாபத் என்கிறோம். அதை நோக்கிய பயணம்,தனிமனிதனில் இருந்து ஆரம்பித்து, குடும்பம், சமூகம், அரசு, தாயகம் என்ற கட்டங்களைக் கடந்துசெல்கிறது.

இந்தப் பாதை நபியவர்கள் வரைந்த பாதை. இது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு ஜமாஅத்தின் இஜ்திஹாதல்ல. அந்த வகையில் இப்பணிக்கு ஒரு இஸ்லாமியப் பெறுமானம் கிடைக்கிறது.

அந்த இலக்கை நோக்கி இந்தப் பாதையில் தளர்வின்றி,சலனமின்றி ஒரு ஜமாஅத்தாகப் பயணிப்பவர்களையே இங்கு போராளிகள் என்கிறோம். இந்த இலக்கையும் பாதையையும் ஆழ்ந்து விசுவாசித்து, இது தனிமனிதப் பயணமல்ல, ஒரு உம்மத்தின் பயணம், இது தனிமனித ஆயுளில் அடையும் இலக்கல்ல, ஒரு உம்மத்தின் ஆயுளில் அடையும் இலக்கு என்பதைப் புரிந்து, நம்பிக்கையிழக்காமல், பாதை தவறாமல் தனது கடமையை தொடர்தேர்ச்சியாக மேற்கொள்ளக்கூடிய ஒருவனின் உருவாக்கம் தேவை.

இந்தஉருவாக்கப் பரப்பைத்தான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் இன்னும் பத்து அம்சங்களால் அடையாளப்படுத்திக் காட்டினார்கள். அவற்றில் முதலாவது மிகச் சரியானபுரிதல். இது இருபது அடிப்படைகளின் பின்புலத்தில் அமைய வேண்டும். இந்த இருபது அடிப்படைகள்,  இஸ்லாமிய சமூக மாற்றத்தை மேற்கொள்ளும் போது,அந்த உயர் இலக்கை அடைவதற்காக முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பல்வேறு சிந்தனை முகாம்களையும் ஒன்றிணைக்கும் பாலமாகக் காணப்படுகின்றது. இங்கு அனைத்து சிந்தனை முகாம்களும் ஒரே முகாமாக மாற்றப்படுதல் நோக்கமல்ல.

மாறாக, அனைவரும் உடன்பட முடியுமான இடங்களை இனம் கண்டு, அவற்றின் மீதான உடன்பாட்டுடன் அனைவரும் இணைந்து செயற்படுதலே இங்கு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மிகச் சரியான புரிதல் என்பது இஸ்லாமிய சமூக மாற்றப் பணியை மேற்கொள்ளும் எல்லோரையும் இணைத்துச் செல்லும் வகையில், இஸ்லாமிய சிந்தனையின் உடன்பாடான பகுதிகள் பற்றிய தெளிவுடன் காணப்படுதலாகும்.

இரண்டாவது இஃலாஸ். மூன்றாவது செயல், இங்கு செயல் என்பதன் மூலம், ஏற்கனவே நாம் கூறிய சமூக மாற்றக் கட்டங்களின் அடிப்படையில் செயற்படுதலைக் குறிக்கின்றது. அத்துடன் முறைமை குறித்த வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் குறித்த ஒரு முறைமையின் அடிப்படையிலான உறுதியான செயல் முக்கியமானது. பல சமயங்களில் எவ்வாறு செய்வது என்ற வாதங்களில் காலம் கடந்துபோய் விட்டிருக்கும் எதையும் செய்திருக்கமாட்டோம். இந்தத் தவறை செய்யாத மனிதன் தேவை. அதே நேரம் தனது பாதையை திரும்பித் பார்த்து திருத்தங்களுடன் முன்னே செல்பவனாயும் இருத்தல் வேண்டும்.

நான்காவது ஜிஹாத், எனினும் இடையுறாத போராட்டம், ஜிஹாத் என்றவுடனேயே பலருடைய ஞாபகத்தில் முதலில் தோன்றுவது ஆயுதம் ஏந்திய போராட்டம்தான். ஆனால், இங்கு ஜிஹாத் என்பதன் மூலம் ஒரு மாற்றத்தை நோக்கிய தொடர்ந்த உழைப்பு நாடப்படுகிறது. அடுத்து விட்டுக் கொடுப்புகளும் தளர்வுகளும் பேரம் பேசல்களுமின்றிய போராட்டம் நாடப்படுகிறது. அது ஆயுதம் ஏந்தும் எல்லை வரை செல்வதையும் இஸ்லாம் மறுதலிக்கவில்லை. ஐந்தாவது தியாகம். மேற்சொன்ன தொடர்ந்த போராட்டத்திற்கு இது அவசியம்.

ஆறாவது கட்டுப்பாடு, ஏழாவது பாதை தவறாமை, நிலைகுலையாமை, சோதனைகள் எந்த வடிவில் வந்தாலும் இழப்புகள் எத்தனை சந்திக்க நேர்ந்தாலும், காலம் எவ்வளவு நீண்டு சென்றாலும் நம்பிக்கையீனத்தை தோற்றுவிக்கும். விமர்சனங்கள் எத்தனை வந்தாலும் தனது பாதையில் உறுதியாய் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் செயலாற்றல். இதுதான் நிலை குலையாமைஎனப்படுகிறது. 

எட்டாவது, தனது விசுவாசமும், தொடர்புகளும் உறவுகளும், செயற்பாடும், சிந்தனையும் தனது பாதைக்குரியதாய் மாத்திரம் அமைதல், ஒரே நேரத்தில் பல விசுவாசங்களுடன் பல திசைகளில் பயணிப்பதாய் அமைதல் கூடாது. ஒன்பதாவது சகோதரத்துவம். பத்தாவது நம்பிக்கை. அது இந்தப் பாதையின் மீதான நம்பிக்கை,அதன் தலைமை மீதான நம்பிக்கை,உடன் வருபவர்கள் மீதான நம்பிக்கை.

இந்த பத்து அம்சங்களின் மீதான உருவாக்கம், இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தின் இரண்டாவது பரப்பாகும். இங்கு ஒரு விடயத்தை அவதானிக்கலாம். இந்த பத்து அம்சங்களும் தனிமனித உழைப்பைவிடவும், கூட்டு உழைப்பின்போது அவசியமான பண்புகளாகவே காணப்படுகின்றன. ஏனெனில் இஸ்லாமிய சமூகமாற்றம் என்பது ஒரு தனிமனிதப் பயணமல்ல. ஓர் உம்மத்தின் பயணம். 

மூன்றாம் பரப்பு:-


இனி, அதன் மூன்றாம் பரப்புக்கு வருவோம். இது தலைமை வழங்குபவனை, தனது துறையில் நிபுணத்துவத்துடன் முன்னோடியாய் செயல்படுபவனை உருவாக்குதல் என்ற பகுதி

இஸ்லாம் மனிதனிடம் இந்த உலகில் எதிர்பார்க்கும் ஓர் அடிப்படை கடமை காணப்படுகிறது. அதுதான் ‘இமாரதுல் அர்ழ்’ எனும் பூமியை வளப்படுத்தும் பணி. இது மனிதன் என்ற வகையில் முஸ்லிம் - காஃபிர், ஆண் - பெண் என சகல தரப்பினரிடமும் எதிர்பார்க்கப்படுகின்ற பணியாகும்.

இந்த இடத்தில் முஸ்லிமை வேறுபடுத்தும் முக்கிய இடம் எதுவென்றால், அவன் இந்த விடயத்தில் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ வேண்டும். முன்னோடியாய் காணப்படல் வேண்டும்.

அல்லாஹு தஆலா ஒவ்வொரு மனிதனையும் குறைந்தபட்சம் ஒரு விஷேட ஆற்றலுடன் படைத்திருக்கின்றான். அதனை மிகச் சரியாக இனம் கண்டு வளர்த்து உலகின் ‘இமாரதுல் அர்ழ்’ எனும் பணியை நிறைவேற்றும் வகையில் அதனைப் பயன்படுத்த வேண்டும். அந்தத் துறையில் நிபுணத்துவத்துடன் முன்னோடியாகத் திகழ்பவனே முஸ்லிம்.

ஏனெனில், அவன் மனிதகுலத்திற்கான வழிகாட்டி. மனிதகுலத்திற்கு தலைமை வழங்கி சீரான உலக வாழ்க்கைக்கு காரணமாய் இருப்பவன். இது தனிமனித உருவாக்கத்தின் மூன்றாவதும் முக்கியமானதுமான பரப்பு. இங்கு துறைவாரியான நிபுணத்துவ வழிகாட்டிகள் உருவாக்கப்படுகிறார்கள். மனித வாழ்வை அதன் எல்லாத் துறைகளுடனும் வழிநடாத்தும் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு ஜமாஅத்தை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;அல்லது ஒரு நாட்டை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;அல்லது முஸ்லிம் உம்மத்தை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;முழு மனித இனத்தையும் வழிநடாத்துபவர்கள். இப்பொழுதுதான் உலகில் இஸ்லாமிய வாழ்வு நிலைக்கிறது. 

எனவே, இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தில் ஒரு முஸ்லிம் ரப்பானி உருவாகிறான். இஸ்லாமிய சமூகமாற்ற முறைமையில் செயலாற்றும் ஒரு போராளி உருவாகிறான். ஒரு நிபுணத்துவத் தலைவன் உருவாகிறான். இவன் உலகின் எந்த சூழலையும் எதிர்கொள்ளவல்லவன். எந்தப் பொறுப்பையும் சுமக்கவல்லவன். இதுவே ஒரு ஜமாஅத்தாக இருந்தால் அவர்கள் எந்த நாட்டையும் ஆளத் தகுந்தவர்கள். உலகின் தலைமையை நோக்கிச் செல்லத் தகுதியானவர்கள். அதனை சுமக்கவும் தகுதியானவர்கள். அல்லாஹ் எங்களையும் இத்தகைய உருவாக்கத்தில் ஒருவனாய் மாற்ற பிரார்த்தித்து விடைபெறுகிறோம்.

Wednesday, February 6, 2013

சுதந்திரதின சிந்தனை



04.02.2013 இலங்கையின் சுதந்திரதினம், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் இந்த தினத்தைப் பெருமைக்குரிய ஒரு தினமாக நோக்குகிறான், முஸ்லிம்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் அநியாயம் அடக்குமுறை சுரண்டல் இவற்றை ஒருபோதும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

இந்த நிலைக்குற்பட்ட எந்த மனிதனுக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். அங்கு கிடைக்கும் விடுதலை நிச்சயமாக ஒரு மனிதனின் வாழ்வில் மறக்க முடியாத பெருமைக்குரிய நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு அது போன்ற ஒரு சூழ்நிலையில் இருந்து ஒரு நாடு விடுதலை அடைந்திருக்கிறது என்றால் அதன் குடிமக்கள் அனைவருக்கும் அந்த நாள் என்றைக்கும் மறக்க முடியாத பெருமைக்குரிய நாள்தான்.

அந்த வகையில் மேற்கின் அடக்குமுறையிலிருந்து இலங்கை பெற்ற சுதந்திரம் பெருமைக்குரியது. இந்தப் பெருமித உர்வு தவறானதல்லஅதே நேரம் நாம் இந்தப் பெருமித உணர்வின் மூலம் வேறு எவரையும் தரம் தாழ்த்திவிடக் கூடாது. அதுதான் தவறானது.

Picture by: e media

அடுத்து, தான் பிறந்து வளாந்த மண்ணை நேசிப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு எளிமையான உண்மை. இலங்கை நாம் பிறந்து வளர்ந்த பூமி நிச்சயமாக நாம் இதனை நேசிக்கிறோம். இதனுடைய சந்தோசம் கவலை அனைத்திலும் எங்களுக்கும் பங்கிருக்கிறது.

இதற்கு அநியாயம் இழைக்கப்படும்போது நாம் கவலை கொள்கிறோம்; இது சுரண்டப்படும்போது நாம் கவலை கொள்கிறோம். இது விடுதலை பெறும்போது நாம் சந்தோசம் கொள்கிறோம். இது எமது பூமி; நாம் பிறந்த பூமி; எமது உறவுப்பூமி. எமது மண்ணின் சந்தோசம் எங்களுக்கும் சந்தோசமானதுதான். ஆனால், ஒரு விடயம் நாம் சந்தோசம் கொள்வது பிறரை கவலை கொள்ள வைப்பதற்காக அல்ல என்பதை மனம்கொள்ள வேண்டும்.

ஒற்றுமையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு நாட்டு மக்கள் தமது ஒற்றுமையை பறைசாட்டும் ஒரு நிகழ்வு இது. அதில் இந்த நாட்டின் குடிமக்களாய் நாங்கள் இணைந்து ஒற்றுமைக்கு இலக்கணம் கூற வேண்டும். ஆனால், எமது ஒற்றுமை என்பது, எமது முன்னேற்றத்திற்கானதேயன்றி எவருக்கும் எதிரானதல்ல என்பதை மனம்கொள்ள வேண்டும்.

Tuesday, February 5, 2013

தனிமனித உருவாக்கம் – நோக்கங்கள்


- நஃப்ஹத்

பயணம் சஞ்சிகை
(தர்பிய்யா அமர்வுகளுக்கன இதழ்)




தனிமனித உருவாக்கம் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்? அதனூடாக அடைய வேண்டியவை என்ன? என்ற கேள்விகள் இயல்பாக எழக்கூடியவை. இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து இவற்றுக்கான பதில்களைக் காண்போம்:


தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்கள் என்ன என்று நேரடியாகப் பேசுவதற்கு முன்னர், இங்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்திச் செல்வது பொருத்தம் என நினைக்கிறேன்.

முதலாவது, ஆரம்பம் முதலே தனிமனித உருவாக்கம் தொடர்பாக பல கோணங்களில் பேசப்பட்ட எல்லாத் தலைப்புகளுக்குள்ளேயும் இதன் நோக்கங்கள் ஒழிந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், அவற்றைத் தனியாக வெளிக்கொண்டுவரும் ஒரு முயற்சியாகவே இது காணப்படுகிறது.

இரண்டாவது, தனிமனித உருவாக்கத்தின் நோக்கம் என்ன என்று செல்வது, தனிமனித உருவாக்கம் என்றால் என்ன என்று சொல்வதில் அதிகம் தங்கியிருக்கிறது என்ற வகையில் ஆரம்பமாக தனிமனித உருவாக்கம் பற்றிக் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் தொடர்பாக எமது பார்வைகளைச் செலுத்துவது பொருத்தமானது. அந்த வகையில், தர்பிய்யா பற்றி அல்லது தனிமனித உருவாக்கம் பற்றி கூறப்பட்டுள்ள பிரபலமான மூன்று வரைவிலக்கணங்கள் குறித்து இங்கு பேசப்படுகிறது:

முதலாவது வரைவிலக்கணம்


“ஒரு மனித ஆளமையின் அனைத்துப் பக்கங்களும் முழுமையாகவும், சமநிலையிலும் வளர்க்கப்படுதல்” என்பதாகும். இந்த வரைவிலக்கணத்தின்படி தர்பிய்யா என்பதன் மூலம் (தன்மிய்யா) வளர்ச்சி அல்லது அபிவிருத்தி என்ற கருத்து நாடப்பட்டுள்ளது. ஒரு மனித ஆளுமையைப் பொறுத்தவரையில் இந்த வளர்ச்சி என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை வரைவிலக்கணத்தின் அடுத்த பகுதிகள் பேசப்படுகின்றன. அது மனித ஆளுமையின் எல்லாப் பக்கங்களையும் உள்ளடக்கியிருதைல் வேண்டும். அத்துடன் உருவாக்க வடிவத்தில் முழுமையும் சமநிலையும் பேணப்படல் வேண்டும்.

இந்த வரைவிலக்கணத்தின் பிரகாரம்; தனிமனித உருவாக்கச் செயல்முறை மனித ஆளுமை வளர்ச்சியையே நோக்காகக் கொள்கிறது.

இரண்டாவது வரைவிலக்கணம்


இரண்டாவது வரைவிலக்கணம் இவ்வாறு கூறுகிறது: “இது மனித இயல்புடன் உறவாடுவதற்கான மிகச் சிறந்த அணுகுமுறையாகும். அது வார்த்தையினாலும், முன்மாதிரியினாலும் வழிகாட்டலாக அமைகிறது. மனிதனில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.”

இந்த வரைவிலக்கணம் அதிகமாக தனிமனித உருவாக்கச் செயல்முறையைப் பற்றிப் பேசுகிறது. இங்கு இதனுடைய முக்கியத்துவம் வலியுறத்தப்படுகிறது. வழிமுறை அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுதல் செல்லப்படுகிறது. இவற்றின் மூலம் மனிதனில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுத்தப்படுவது நோக்கமாக இருக்கிறது.

‘நல்ல மாற்றம்’ என்ற மொழிபெயர்ப்பை இன்னும் சற்று நுணுக்கமாக நோக்கினால், ‘மனிதனில் மிகச் சிறந்த நோக்கிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தல்’ என்ற வார்த்தைகளே அங்கு நேரடியாகப் பேசப்பட்டுள்ளன. எனவே, இந்த வரைவிலக்கணத்தின்படி, மனிதனில் மாற்றம் ஏற்படுத்தப்படுதல், அதில் மிகச் சிறந்த்து எதுவோ அதனை நோக்கிய மாற்றமாக்க் காணப்படும் என்பது நோக்கமாக அடையாளப்படுத்துகிறது.

மூன்றாவது வரைவிலக்கணம்


மூன்றாவது வரைவிலக்கணம் கூறுகிறது: “இந்தப் பூமியில் இஸ்லாத்திற்கு, அதன் முழுமைத் தன்மையுடனும் நடுநிலைத் தன்மையுடனும் சர்வதேசப் பண்புடனும் அதிகாரத்தை மீள வழங்கி, எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும், அறியாதவர்களின் விளையாட்டுத்தனங்களிலிருந்தும் அதனைப் பாதுகாக்கும் தனது கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு முஸ்லிமை உருவாக்கித் தயார்படுத்தும் பணியை ஷரீஅத்திற்கு முரண்படாத, சாத்தியமான எல்லா வழிமுறைகள், அணுகுமுறைகளையும் பயன்படுத்தி ஒரு ஜமாஅத்தின் மூலமா மேற்கொள்தல்.”

இந்த வரைவிலக்கணத்தில் தனிமனித உருவாக்கத்தின் வழிமுறை எவ்வாறு காணப்படல் வேண்டும் என்பதும், ஒரு முஸ்லிம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும், அந்த முஸ்லிம் ஏன் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும், இந்த செயல்பாடு ஒரு ஜமாஅத் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் பேசப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.

அந்த வகையில், ஒரு முஸ்லிமைத் தயார்படுத்துவது என்று மாத்திரம் குறிப்பிடாமல் அவன் ஏன் தயார்படுத்தப்படுகிறான் என்ற விஷயத்தையும் இணைத்து இங்கு நோக்கம் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

எனவே, இந்த வரைவிலக்கணங்கள் தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்களை அடையாளப்படுத்துவதற்கான மற்றொரு அடிப்படையாகக் காணப்படுகின்றன.

மூன்றாவது, தனிமனித உருவாக்கம் என்பது இஸ்லாமிய தஃவா மூலமாக உலகில் அடைய நினைக்கும் மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகும். இஸ்லாம் உலகில் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறதோ, அந்த இலக்கை அடையத் தகுதியான மனிதன் தேவை அல்லது அதனை நோக்கிப் பயணிக்கத் தகுதியான மனிதன் தேவை. அந்த வகையில், இஸ்லாமிய தஃவாவின் இலக்குகளை இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

1.  முஸ்லிம் தனிமனிதனை உருவாக்குதல்.


2.  முஸ்லிம் வீட்டை உருவாக்குதல்.

3.  சமூகத்திற்கு வழிகாட்டுதல்.

4.  தாய்நாட்டை விடுதலை செய்தல்.

5.  அரசை சீர்செய்தல்.

6.  இஸ்லாமிய கிலாஃபத்தை உருவாக்குதல்.

7.  உலகிற்கு ஆசானாக செயல்படல்.

மேற்கூறப்பட்ட ஏழு கட்டங்களில் நடைபெறு இஸ்லாமிய தஃவாவின் பிரதிபலிப்புகள் கண்டிப்பாக தனிமனித உருவாக்கத்தில் பிரதிபலிக்க வேண்டும். எனவே, தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்களை அடையாளம் காண்பதற்கான மற்றொரு அடிப்படையாக இஸ்லாமிய தஃவாவின் நோக்கங்கள் காணப்படுகிறன்றன.

நான்காவது வரைவிலக்கணம்


நான்காவதாக, மற்றொரு விஷயம் காணப்படுகிறது. அதுதான், அல்லாஹுதஆலா மனிதனைப் பூமியில் படைத்து அவனுக்கு வழங்கியிருக்கும் பணி என்ன என்ற விஷயம். இந்த பணிக்கும் தனிமனித உருவாக்கத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

இது பற்றி இமாம்கள் குறிப்பிடும்போது, பிரதானமாக இரண்டு பணிகளை அடையாளப்படுத்துவார்கள். ஒன்று இபாதத், மற்றொன்று இமாரத்.

இங்கு இபாதத் என்பதன் பொருள், உலகில் மனிதன் என்ற படைப்பு அல்லாஹ்வின் அடிமை என்ற வகையில் அவனது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவனாகக் காணப்படல் வேண்டும்.

இமாரத் என்பது, இந்தப் பூமியை அபிவிரத்தி செய்தல் என்பதாகும். இந்த இரு பணிகளும் உலகில் மனிதப் படைப்புக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட பிரதான பணிகளாகும்.

இந்தப் பணியின் பிரயோகம் என்ன என்பது தனிமனித உருவாக்கத்தில் பிரதிபலிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். அந்த வகையில், தனிமனித உருவாக்கத்தின் நோக்கம் என்ன என்று பேசப்படுகின்றபோது, அதன் மற்றொரு அடிப்படையாக மனிதனின் பணிகள் என்ற விஷயம் காணப்படுகிறது.

எனவே, மேற்சொன்ன அடிப்படைகளில் இருந்து தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்கள் என்ன என்பது அடுத்து வரும் அமர்வுகளில் பேசுவோம், இன்ஷா அல்லாஹ்

நன்றி: பயணம் சஞ்சிகை, தர்பிய்யா அமர்வுகளுக்கான இதழ் – 36

Published by:
Meelparvai Media Centre
49, Sri Mahinda Dharma Mawatha,
Dematagoda, Colombo 09, Sri Lanaka,
Tel / Fax : 0094 112 691258, 0094 77222 7569
https://www.facebook.com/payanam.srilanka

Available in Tamilnadu:
Chennai Media Centre
Post Box No. 508
Park Town, Chennai – 600 003.
Contact No. 9171 84 61 84; 9171 32 48 24
E-mail: chennaimediacentre@gmail.com
https://www.facebook.com/chennaimediacentre

Sunday, February 3, 2013

வெற்றியின் ரகசியம்


இமாம் ஹஸனுல் பன்னா கூறுகிறார்: மனோவலிமை என்பது, பலவீனம் ஊடறுத்துவிட முடியாத பலமான நாட்டசக்தி, ஏமாற்றும் கலப்படங்களும் அற்ற, கொள்கைமீதான நிலையான விசுவாசம், கஞ்சத்தனங்களும் பேராசைகளும் தடையாக அமையாத, கண்ணியமிக்க தியாகம், கொள்கைத் தவறு, கொள்கைப் பிறழ்வு, கொள்கைச் சமரசம், கொள்கை ஏமாற்று என்பவற்றிலிருந்து காக்கும் வகையிலான கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும், அறிவும் ஆகும்.
(‘நாம் எதனைநோக்கிஅழைக்கிறோம்’, ரஸாஇல்)

எழுந்துகொள்ள நினைக்கும் தனிமனிதர்களானாலும் சமூகங்களானாலும் அதன் தொடக்கப் புள்ளி இதுதான். இதன் மீதான உருவாக்கம்தான் சாதனைகளை நோக்கி வழிநடாத்துகிறது. 

பலமான நாட்டசக்தி, கண்ணியமான தியாகங்கள் செய்யும் தயார் நிலை, கொள்கை விசுவாசம், கொள்கைத் தெளிவு, கொள்கை உறுதி, கொள்கைப் பிடிப்பு ஆகியவற்றைக் கொண்ட மனிதர்கள்தான் இன்றைய உலக சூழ்நிலைக்குத் தேவைப்படுகின்றனர். 

இஸ்லாம் உலகின் தலைமைப்பீடத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இந்நிலை நிச்சயமா இஸ்லாத்தின் எதிரிகளுக்கு சந்தோஷத்தை அளிக்காது. இஸ்லாத்தின் ந்த முன்னேற்றத்தைத் தடை செய்வதற்கு எதையும் செய்யத் துணிவார்கள். அந்த எதிர்ப்பின் வடிவங்கள் வெறுமனே நேரடியாக இஸ்லாத்தை வேண்டாம் என்று சொல்வதாய் மாத்திரம் அமையமாட்டாது.

மாற்றமாக, இஸ்லாத்தின் பெயரைவைத்துவிட்டு அதன் உள்ளடக்கத்தை வேறு ஒன்றாய் மாற்றியமைப்பதாய்க் காணப்படலாம். அல்லது இஸ்லாமிய வேலைத்திட்டத்தை சுமந்து செல்லும் மனிதர்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியாய் அமையலாம்.

இத்தகைய சூழ்நிலைகளைத்தான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள், பலவீனம் ஊடறுத்தல், கஞ்சத்தனம், பேராசை, கொள்கை ஏமாற்று, கொள்கைக் கலப்படம், கொள்கைத் தவறு, கொள்கைப் பிறழ்வு, கொள்கைச் சமரசம் போன்ற சொற்களினூடாக அடையாளப்படுத்திக் காட்டினார்கள்.

அன்று காபிர்கள் நபியவர்களிடம் இந்த முயற்சியை செய்தபோது, நபியவர்கள் கொள்கையில் எந்தவிட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை. உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்என்ற உறுதியான நிலைப்பாடுதான் அவர்களது பதிலாக அமைந்தது.

அறபுப் புரட்சியின் பின்னர், இஸ்லாத்தை தலைமைப் பீடத்திற்கு எடுத்துவரும் முயற்சியில் ஈடுபடும் இஸ்லாமிய சக்திகளில் மேற்சொன்ன நிதர்சனத்தையே நாங்கள் காண்கிறோம். அவர்கள் உயர்ந்த நாட்டசக்தி கொண்டவர்கள். எந்த முயற்சியும் அவர்களைப் பலவீனப்படுத்தமாட்டாது.

அவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயாரானவர்கள். கஞ்சத்தனங்களும் பேராசைகளும் அங்கு கிடையாது. அவர்கள் தமது கொள்கையில் ஆழ்ந்த தெளிவுடனும், பிடிப்புடனும், நம்பிக்கையுடனும், நிலைமாறாத விசுவாசத்துடனும் காணப்படுகிறார்கள். அங்கு ஏமாற்றில்லை; கலப்படமில்லை; தவறில்லை; பிறழ்வில்லை; சமரசமில்லை. இதனால்தான் அவர்கள் ஜெயிக்கிறார்கள்.எதிர்கொள்ளும் எல்லா சவால்களின்போதும், மிகப் பலமானவர்களாய்த்தான் மீளவும் எழுந்துகொள்கிறார்கள். காரணம் அவர்கள் உலகில் பரீட்சிக்கப்பட்டு வெற்றி காணப்பட்ட ஒரு தர்பிய்யத் முறைமையின் உற்பத்திகள்.