Tuesday, September 12, 2017

மகாஸித் தேடல்கள் (2)

ஹஜ்ஜின் மகாஸிதுகள்

ஹஜ்ஜின் மகாஸிதுகள் என்ற இந்தக் கட்டுரை வெளிவரும் பொழுது சில சமயம் இவ்வருட ஹஜ் நிறைவு பெற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏலவே ஹஜ்ஜாஜிகள் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள்,  எனவே கட்டுரை,  காலம் கடந்து விட்டதாக அமைந்து விடப்போகிறது என்ற ஒரு எண்ணம்,  இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது மனதில் வந்தது. ஆனாலும் மற்றொரு புறத்திலிருந்து ஒரு தைரியம் பலமாய் எட்டிப்பார்த்தது. காரணம் நான் எழுதுவது மகாஸிதைப் பற்றி,  அது காலம் கடந்ததல்ல,  என்றும் நிலையானது. ஷரீஆவின் மூலம் இந்த உலகில் நிரந்தரமாக நிலைபெற வேண்டும் என்று அல்லாஹ்தஆலா எதனை எதிர்பார்க்கின்றானோ அதனையே நாம் மகாஸித் என்போம். எனவே ஹஜ்ஜின் மகாஸிதுகள் ஹஜ் காலத்திற்கு மாத்திரம் உரியவை அல்ல. இந்த உலகில் என்றும் நிலைத்திருக்க வேண்டியவை. ஆகவே காலம் கடந்தேனும் எழுதப்படுவது யாவருக்கும் பயனளிக்கும்.

 மாத்திரமன்றி இது ஒரு அறிவூட்டல் நடவடிக்கை,  அறிவூட்டல் குறித்த சந்தர்ப்பத்துடன் இணையும் பொழுது விளைவு அதிகம் தான்,  ஆனாலும் சந்தர்ப்பம் மட்டும்தான் அறிவூட்டலுக்கான பொழுது அல்ல.

இனி ஹஜ்ஜின் மகாஸிதுகளுக்குச் செல்வோம்,  ஹஜ்ஜின் மகாஸிதுகள் பல கோணங்களில் பல எண்ணிக்கையில் அணுகப்பட்டுள்ளன. ஓரளவுக்கு அவற்றின் சாரம்சமாய் நான் மூன்று மகாஸிதுகளை மாத்திரம் இங்கு பரிமாறலாம் என்றிருக்கிறேன்.

முதலாவது,  மக்களை ஒன்றுதிரட்டுதல் :  அதாவது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படல் வேண்டும் என்பது ஹஜ்ஜின் ஒரு மக்ஸத். அல் குர்ஆன் இதனை இவ்வாறு கூறுகிறது ஹஜ்ஜுக்கு வருமாறு மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுங்கள்,  அவர்கள் கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்,  மிகத் தொலைவான ஒவ்வொரு பாதை வழியாகவும்  ஒவ்வொரு நலிந்த ஒட்டகங்கள் மீதும் வருவார்கள் (ஹஜ் – 28). ஹஜ்ஜுக்கான பகிரங்கமான அழைப்பு ஏன் விடுக்கப்படுகிறது எனின் மூலை முடுக்குகளில் இருந்தும் கூட மக்கள் அதற்கு வரவேண்டும்,  உலகின் எந்தப்பாகத்திலுள்ளவர்களும் வருவார்கள் என்பதையே தொலைவான ஒவ்வொரு பாதை வழியாகவும் என்ற வார்த்தை குறித்து நிற்கிறது. பெரும் திரளான மக்கள் ஒன்று கூட்டப்பட வேண்டும் என்பதையே இந்த வசனம் உணர்த்துகிறது.

மக்கள் ஒன்றுதிரட்டப்படுதல் என்பது பொதுவாக இஸ்லாத்தின் எல்லா வணக்கவழிபாடுகளிலும் அவதானிக்கத்தக்க ஒரு உண்மையாகும். கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள்,  இஸ்லாம் ஜந்து அடிப்படைகள் மீது கட்டப்பட்டிருக்கிறது என்ற ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது, கலிமா,  தொழுகை,  நோன்பு,  ஸகாத்,  ஹஜ் என்ற ஒவ்வொரு கடமையும் கட்டாயமாக நடைபெறவேண்டியவை,  கூட்டுவடிவில் நடைபெறவேண்டியவை,  திட்டமிட்ட ஒழுங்கில் நடைபெறவேண்டியவை என்கிறார்(1). எனவே பொதுவாக வணக்கவழிபாடுகள் கூட்டான வடிவில் ஒரு ஒழுங்குமுறையில் நடைபெறுவதை இஸ்லாம் வழியுறுத்துகிறது. இவற்றில் ஹஜ்ஜைப் பொறுத்தவரை ஏனைய எல்லா வணக்கவழிபாடுகளை விடவும் கூட்டு வடிவம் மிகவும் முக்கியம் பெறுகிறது. இங்கு கூட்டுவடிவம் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு ஊரையோ மாத்திரம் உள்ளடக்காமல் முழு உலகையும் உள்ளடக்கிய வகையில் அமைகிறது.

உண்மையில் உலக முஸ்லிம்களின் இந்த ஒன்று கூடல் என்ன செய்தியைச் சொல்கிறது?  இஸ்லாம் முழு மனித சமூகத்தையும் ஒன்று திரட்டும் சக்தி வாய்ந்தது என்ற செய்தியை உலகிற்கு உரத்துச் சொல்கிறது. அதுவும் புறக்காரணிகளால் இந்த ஒன்றுகூடல் நிகழவில்லை. ஆட்சியாளர்களோ தலைவர்களோ போட்ட கட்டளைகளால் அது நடைபெறவில்லை,  மாற்றமாக ஹஜ்ஜுக்கு வரும் ஒவ்வொரு தனிமனிதனும் தனது உள்ளார்ந்த தூண்டுதலின் அடிப்படையிலேயே வருகின்றான். நாளுக்கு நாள் அந்தத் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. எண்ணிக்கை வரையறைகள் இட்டு கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமளவுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே இந்தப் பெரும் மக்கள் கூட்டம் ஒன்று திரண்டு கொண்டிருக்கிறது.

 அல்லாஹ்தஆலா கூறுகிறான் அல்லாஹ்வின் இந்தக் கிரியைகளை யார் மகத்துவப் படுத்துகிறாரோ அது அவர்களது உள்ளங்களின் தக்வாவின் காரணமாகவே நிகழ்கிறது (ஹஜ் – 32). தக்வா என்பது சுயதூண்டல். எனவே இஸ்லாம் எந்தவிதப் புறக்காரணிகளும் இன்றி மக்களை இயல்பாக ஒன்று திரள வைக்கக் கூடியது.

இந்த வசனத்தில் கிரியைகள் என்ற கருத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட அறபுச் சொல் ஷஆயிர் என்பதாகும். இதன் பொருள் பற்றி கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் கூறும் பொழுது,  இது அடையாளம் என்ற கருத்தைக் குறிக்கும்(2) எனவே ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஒரு அடையாளம்,  அதன் ஒரு வெளிப்பாடு. இந்த உலகில் இஸ்லாம் வாழ்கிறது,  அது அழியவில்லை என்பதை உலக மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு அது என்கிறார்.

இரண்டாவது,  பௌதீகப் பயன்களைப் பெற்றுக் கொள்ளுதல் : அல்குர்ஆன் ஹஜ்ஜுக்காக பகிரங்க அழைப்பு விடுங்கள் பெரும் திரளானவர்கள் வருவார்கள் என்று கூறிவிட்டு நோக்கத்தை இவ்வாறு சொல்கிறது தமக்கான பௌதீகப் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவுபடுத்தவதற்காகவும் (ஹஜ் – 28) என்கிறது. பௌதீகப் பயன்கள் என்ற கருத்தைச் சொல்ல மனாபிஃ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது,  இது அடிப்படையில் எல்லாவகையான பயன்களையும் குறிக்கப் பயன்படுகிறது. நேரடியான மறைமுகமான பௌதீக ஆன்மீக எல்லாப் பயன்களும் இங்கு உள்ளடங்கும்,  ஆனாலும் ஆன்மீகப் பயன்கள் அதே வசனத்தில் அல்லாஹ்வை நினைவு படுத்தல் என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப் பட்டிருப்பதால் இந்த இடத்தில் மனாபிஃ என்பது பௌதீகப் பயன்களையே குறிப்பாக அடையாளப்படுத்துவதாகக் கொள்ள முடிகிறது.

ஹஜ் ஒரு வணக்கம்,  உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வணக்கம்,  எனவே அந்த வணக்கத்தின் போது வெறுமனே ஆன்மீக விளைவுகள் மாத்திரமன்றி,  ஒன்று திரள்வதன் பௌதீக விளைவுகளை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் அல்லாஹ்தஆலா ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். உண்மையில் அதனை ஒரு வாய்ப்பு என்பதை விடவும் கட்டாயம் அடைந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்காகவே அல்குர்ஆன் அடையாளப்படுத்தியிருக்கிறது. பௌதீகப் பயன்களை அடைந்து கொள்ளல் என்பது ஹஜ்ஜின் ஒரு மக்ஸத்

 அந்தவகையில் ஹஜ்ஜுக்கான திட்டமிடல் வெறுமனே ஹஜ் என்ற கிரியையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடாக மாத்திரம் அமையக் கூடாது,  முழு மனித சமூகத்திற்கும் பயனளிக்கக் கூடிய,  சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களுக்கான ஒரு களமாக ஹஜ்ஜை மாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடே மிகவும் பொறுத்தமானது. இங்கு உதாரணத்திற்காக இரண்டு விடயங்களை மாத்திரம் அடையாளப்படுத்துகிறேன்.

1.            பொருளாதார நலன்கள்: கலாநிதி யூசுப் அல்கர்ளாவி அவர்கள் பொருளாதார நலன்களை தனியானதொரு மக்ஸதாகவே விளங்கப்படுத்தியுள்ளார்(3). இப்னு அப்பாஸ் ரழியவர்கள் குறிப்பிடுகிறார்கள்,  ஜாஹிலிய்யாக் காலத்தில் உக்காஸ்,  மஜன்னா,  துல் மஜாஸ் போன்ற சந்தைகள் காணப்பட்டன. ஹஜ் காலப்பகுதியில் வியாபாரம் செய்வதை மக்கள் பாவமாகக் கருதி சங்கடப்பட்டார்கள். நபியவர்களிடம் இது பற்றி வினவிய போது கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் இறங்கியது உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பேறுகளை (செல்வம்) நீங்கள் எதிர்பார்ப்பதில் எந்தக் குற்றமும் இல்லை (அல்பகரா – 198),  என்றார்கள் (புஹாரி). எனவே ஹஜ் காலப்பகுதி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய ஒரு காலம். முஸ்லிம்கள் ஒன்று திரண்டு செல்வவிருத்தியில் ஈடுபடுவதற்கான ஒரு சந்தர்ப்பம். உலகப் பொருளாதாரத்தின் திசையையும் போக்கையும் தீர்மானிப்பதற்கான சக்தியாக முஸ்லிம் உம்மாவை மாற்றுவதற்கான ஒரு நிகழ்வு.

2.            உலக சமாதானத்தைத் தீர்மானிப்பதற்கான காலம்: அஷ்ஹுருல் ஹுரும் எனும் துல் கஃதா,  துல் ஹஜ்,  முஹர்ரம்,  ரஜப் என்ற நான்கு மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தில் ஹஜ் கடமையை அல்லாஹ் வைத்திருக்கிறான்,  இந்த மாதங்களில் யுத்தம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது, பொதுவாக இந்தக் காலப்பகுதியில் நோன்பு நோற்றல் சிறப்புக்குரியது. மக்கா மதீனா பிரதேசங்களை ஹரம் எனும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக இஸ்லாம் கருதுகிறது,  ஹஜ் காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் மரங்கள் வெட்டப்படக் கூடாது,  மிருகங்கள் வேட்டையாடப்படக் கூடாது. அடுத்து ஹஜ் கடமையின் பொதுத் தோற்றத்தைப் பார்த்தாலும் அங்கு முஸ்லிம்களில் பெரும் திரளானவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது,  ஷெய்த்தானை தன்னை விட்டு,  அப்பால் விரட்டுவதற்கான ஏற்பாடு இருக்கிறது,  மனித மனங்களை வலிந்து கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு இருக்கிறது.


இந்த அனைத்து ஏற்பாடுகளையும் அல்லாஹ் ஏன் வைத்திருக்கிறான்? என்ற ஒரு கேள்வி கேட்டுப்பார்தால்,  சாதாரணமாகவே புரிந்து கொள்ள முடியுமான உண்மைதான், உலக சமாதானத்தை முஸ்லிம்கள் முன்னெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. முதலில் தமக்கு மத்தியிலான முரண்பாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளவும்,  உடன்பாடுகளை எட்டவும் முடியும். நான்கு மாதங்கள் யுத்தம் செய்யத் தடுக்கப்பட்டமை என்பது நிர்ப்பந்தமாக சமாதான மேசைக்கு அழைத்து வருவதற்கான ஒரு ஏற்பாடு,  ஏனெனில் சமாதான வாழ்வுதான் அடிப்படை,  யுத்த வாழ்வு அல்ல. நபியவர்கள் ஹஜ்ஜிலே ஆற்றிய இறுதியுரை வெறுமனே ஒரு வணக்கம் மட்டுமல்ல,  மாற்றமாக அது ஒரு மாநாட்டுரை,  அதன் உள்ளடக்கம் உலக சமாதானத்துக்கான ஒரு அழைப்பு,  மனித உரிமைகள் காக்கப்படுவதற்கான ஒரு அழைப்பு.


குலபாஉர் ராஷிதூன்கள் தமது ஆட்சிக் காலத்தில் தமது கவர்னர்களது பணியினை மதிப்பீடு செய்வதற்கான காலமாக இதனைப் பயனபடுத்தினார்கள்,  மக்களது குறைகளைக் கேட்பதற்கான காலமாக இதனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


கலீபா உஸ்மான் றழியவர்கள் எல்லாப் பிரதேசங்களுக்கும் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தைப் பாருங்கள். ஹஜ் காலப்பகுதியில் எனது ஒவ்வொரு கவர்னரும் தனது அறிக்கையை என்னிடத்தில் எடுத்து வரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்,  நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் நான் மக்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறேன்,  எனக்கோ அல்லது எனது கவர்னர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்த முறைப்பாட்டுக்கும் தீர்வு வழங்கப்படும்,  என்னிடத்திலோ எனது கவர்னர்களிடத்திலோ மக்களுக்குச் சேரவேண்டிய ஒரு உரிமை இருந்தால் அது உடனடியாக மக்களுக்கு வழங்கப்படும்,  சில மனிதர்கள் ஏசப்படுகிறார்கள் அடிக்கப்படுகிறார்கள் என்று மதீனாவாசிகள் என்னிடத்தில் ஒரு முறைப்பாட்டை வைத்திருக்கிறார்கள்,  இவை போன்ற முறைப்பாடுகள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்கள் ஹஜ் காலப்பகுதியில் உரிய ஆவணங்களுடன் வந்து,  என்னிடமிருந்தோ அல்லது தமது கவர்னர்களிடமிருந்தோ தமது உரிமைகளைப்  பெற்றுக் கொள்ளட்டும் அல்லது அவற்றை தானம் செய்து விடட்டும்,  அல்லாஹ் தானம் செய்பவர்களை விரும்புகிறான் (4).

மேற்சொல்லப்பட்ட இரு உதாரணங்களிலும் முக்கியமாக வலியுறுத்தப்படும் உண்மை என்னவெனின்,  முஸ்லிம் உம்மத் தனது சர்வதேசப்பணியை செய்வதற்கு கிலாபத் போன்றதொரு அரசியல் உடன்பாடு எட்டப்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை,  ஹஜ் கடமையின் போதே சிறந்த திட்டமிடலின் மூலம் தமது சர்வதேசப் பங்களிப்பை வழங்க முடியும். இஸ்லாம் என்பது உலகிற்கு ஒரு அருள் என்பதை செயல்வடிவில் கொண்டுவர முடியும்.

மூன்றாவது,  ஹஜ் ஒரு செறிவான ஆன்மீகப் பயிற்சி நெறி: அல்குர்ஆனில் உள்ள ஹஜ் பற்றிய வசனங்களை பொதுவில் பார்க்கின்ற பொழுது,  “திக்ர் எனும் அல்லாஹ்வை நினைவு கூர்தல் பற்றி அடிக்கடி பேசியிருப்பதை அவதானிக்கலாம். உதாரணமான நீங்கள் அறபாவிலிருந்து திரும்பி வந்தால் அல்லாஹ்வை நினைவுபடுத்துங்கள்;… அல்லாஹ் உங்களுக்கு காட்டித் தந்தது போல் நினைவு படுத்துங்கள்;… உங்கள் கிரியைகளை முடித்துவிட்டால் உங்கள் பெற்றோரை நினைவுபடுத்துவது போல் அல்லது அதனை விடவும் கடுமையாக அல்லாஹ்வை நினைபடுத்துங்கள் (பகரா – 198, 199, 200). அதே போன்று மற்றோர் இடத்தில் ஹஜ்ஜின் நோக்கமாகவே திக்ரைக் குறிப்பிடுகிறது,  “தமக்கான பௌதீகப் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவுபடுத்தவதற்காகவும் (ஹஜ் – 28).

அதே போன்று பாவங்கள்,  வீண்தர்க்கங்களில் ஈடுபடக் கூடாது என்றும் தக்வாவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் கூறுகிறது ஹஜ் சில குறிப்பிட்ட மாதங்களுக்குரியது,  அந்த மாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் மனைவியுடன் உறவு கொள்ள வேண்டாம்,  பாவம் செய்ய வேண்டாம்,  வீண்தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம்,  நீங்கள் செய்யும் நற்கருமங்களை அல்லாஹ் நன்கறிவான்,  ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்,  மிகச் சிறந்த தயார்நிலை தக்வாவாகும் (பகரா – 197). இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் நபியவர்கள் கூறினார்கள் யார் மனைவியுடன் உறவு கொள்ளாது,  பாவங்களில் ஈடுபாடாது,  ஹஜ்ஜை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பெற்றெடுக்கப்பட்ட குழந்தை போன்று பாவங்கள் அற்றவராக மாறுவார் என்றார்கள்,  (புஹாரி).

மேற்குறித்த அல்குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களைப் பார்க்கின்ற பொழுது,  ஹஜ் என்பது குறிப்பிட்ட காலம் ஓரிடத்தில் மனிதர்களை ஒன்றிணைத்து வழங்கப்படுகின்ற செறிவானதொரு ஆன்மீகப் பயிற்சி நெறி என்பது புலனாகின்றது. இத்தகைய செறிவானதொரு பயிற்சி நெறிக்கு மனிதன் உற்பட வேண்டும் என்பது ஹஜ்ஜின் ஒரு மக்ஸத். அதாவது பல்வேறு வித்தியாசப்பட்ட செயற்பாடுகளுடன்,  மனித நடத்தைகளையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி,  அல்லாஹ்வுடன் அவனை சங்கமிக்க வைக்கின்ற ஒரு வேலை நடை பெறவேண்டும். இதனை கலாநிதி ரைஸுனி அவர்கள் தௌரா தர்பவிய்யா தர்பியா பயிற்சி நெறி என்றார்கள்(5). கலாநிதி கர்ளாவி அவர்கள் ஷுஹ்னா ரூஹிய்யா ஆன்மீக சார்ஜ் பண்ணுதல் என்றார்கள் (6).

இக்கருத்தை இன்னும் தெளிவு படுத்தும் வகையில்,  கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் கூறுகிறார்கள்,  ஹஜ் என்பது ஏனைய எல்லா இபாதத்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான இபாதத்தாகும்,  அதில் அவனது உடம்புக்கும் உள்ளத்திற்கும் அறிவுக்கும் செல்வத்திற்கும் நேரத்திற்கும் எல்லாவற்றிற்குமான பயிற்சி நடைபெறுகின்றது,  ஹஜ்ஜில் சிரமம், போராட்டம், பிரார்த்தனை, திக்ர், சிந்தனை, பொறுமை, தியாகம்,  செலவழித்தல் என அனைத்தும் உள்ளடங்கியிருக்கிறது என்கிறார்(7).


(1). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  கட்டுரை,  அல் அமலுல் இஸ்லாமி பைனஸ் ஸியக் அத்தன்லீமிய்யா வல் முபாதராத் அல் அபவிய்யா,  அல் இஸ்லாஹ் வெப்தளம்,  13 மே 2017.
(2). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  மகாஸிதுல் இபாதாத் விரிவுரைத் தொடர்,  10 வது அமர்வு,  அல்மகாரிபிய்யா தொலைக்காட்சிச் சேவை,  2016.
(3). கலாநிதி யூசுப் அல்கர்ளாவி,  அல் இபாதா பில் இஸ்லாம்,  மக்தபது வஹ்பா,  கெய்ரோ,  24ம் பதிப்பு,  1995,  பக்கம் 304.
(4). கலாநிதி யூசுப் அல்கர்ளாவி,  அல் இபாதா பில் இஸ்லாம்,  மக்தபது வஹ்பா,  கெய்ரோ,  24ம் பதிப்பு,  1995,  பக்கம் 309.
(5). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  மகாஸிதுல் இபாதாத் விரிவுரைத் தொடர்,  10 வது அமர்வு,  அல்மகாரிபிய்யா தொலைக்காட்சிச் சேவை,  2016.
(6). கலாநிதி யூசுப் அல்கர்ளாவி,  அல் இபாதா பில் இஸ்லாம்,  மக்தபது வஹ்பா,  கெய்ரோ,  24ம் பதிப்பு,  1995,  பக்கம் 302.
(7). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  மகாஸிதுல் ஹஜ் வல் உம்ரா, கட்டுரை,  ஷபகா அல் பிக்ஹிய்யா இணையத்தளம்,  2008.

Friday, September 8, 2017

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

தெரிவு அடிப்படைகள்

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடை தேட வேண்டிய கேள்விகளுள் யார்? என்ற கேள்விக்கான பதில்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த அமர்வில் பொருத்தப்பாட்டுக் காரணிகள் குறித்துக் கலந்துரையாடினோம். இந்த அமர்வில் தெரிவு அடிப்படைகள் குறித்து சற்று அவதானத்தைச் செலுத்தலாம் இன்ஷா அல்லாஹ்.

இங்கு ஆறு வகையான அடிப்படைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. சந்தோசமான,  நிம்மதியான ஒரு குடும்ப வாழ்வு,  திருமணம் என்றதொரு முறைமையை ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்தமையின் நோக்கங்களை அடைந்து கொள்ளக்கூடிய ஒரு குடும்ப வாழ்வு,  இதுதான் எல்லோரினதும் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்ளும் வகையில் துணைத் தெரிவின் போது,  பொதுவாகப் பேண வேண்டிய ஒழுக்கங்கள் என்ன என்பது குறித்தே இங்கு பேசப்படுகிறது.

1.            மார்க்கம் எனும் அடிப்படை :-

இது மிகவும் தெளிவான,  எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் அடிப்படை. ஆனாலும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. அதாவது மார்க்கம் என்பதன் மூலம் பெரிதும் நாடப்படுவது,  புறத்தோற்றமோ புற நடத்தைகளோ அல்ல. மாற்றமாக அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளக்கூடிய,  நீதியாக நடந்து கொள்ளக்கூடிய உளநிலை ஒன்றையே இது முக்கியமாகக் குறித்து நிற்கிறது. குடும்ப வாழ்வின் வெற்றி புறத் தோற்றங்களிலன்றி இந்த உளநிலையிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. மார்க்கம் உள்ள பெண்ணையே தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்தைச் சொல்கின்ற பிரபல்யமான ஹதீஸும் கூட உண்மையில் மார்க்கம் என்பதன் மூலம் இந்த உளநிலையையே விளங்கப்படுத்துகிறது. நபியவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நான்கு காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறாள். அவளது அழகு,  செல்வம்,  கௌரவம்,  மார்க்கம். இவற்றில் மார்க்கம் உள்ள பெண்ணைத் தெரிவு செய்து கொள். இல்லாத போது உனது வாழ்வே அழிந்து விடும்.” (புஹாரி,  முஸ்லிம்) என்றார்கள்.

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள அழகு, செல்வம்,  கௌரவம் போன்றவை அனைத்தும் புறத்தோற்றத்துடன் சம்பந்தப்பட்டவை. அவற்றை அடிப்படையாகக் கொண்டு திருமண வாழ்வு நிர்ணயிக்கப்படுவது பொருத்தமானதல்ல என்கிறது. தீனின் அடிப்படையிலேயே திருமண வாழ்வு நிர்ணயிக்கப்படல் வேண்டும் என்கிறது. அந்தவகையில் இங்கு தீன் என்பது புறத்தோற்றமல்லாத ஒன்றையே குறிக்கிறது. அதுதான் இறையச்சம்,  நீதி போன்ற பண்புகளைப் பிரதிபளிக்கக் கூடிய உளநிலையாகும்.

அடுத்து,  இந்த ஹதீஸில் வந்துள்ள தீன் என்ற சொல்லை பொதுப்படையாக நோக்கினால் அழகு,  செல்வம்,  கௌரவம் அனைத்தும் தீனுக்குள் உள்ளடங்குகின்ற,  தீனுடன் முரண்படாத காரணிகளாகும். ஆனால் இந்தக் காரணிகளைத் தவிர்த்து,  தீனைத் தெரிவு செய்யுமாறு ஹதீஸ் கூறுகிறது. எனவே இங்கு தீன் என்பது பொதுவான ஒரு கருத்தையன்றி,  குறிப்பான ஒரு விடயத்தையே குறித்து நிற்கிறது எனலாம்.

ஹஜ்ஜதுல் வதாஇன் போது,  நபியவர்களின் பெண்கள் பற்றிய உபதேசமும்,  ஆண்களின் உளநிலை மாற்றம் ஒன்று பற்றியே பேசுகிறது. பெண்கள் உங்களிடத்தில் கைதிகள் போன்றவர்கள்,  தங்களைக் காத்துக் கொள்ள அவர்களிடத்தில் எதுவுமில்லை. அல்லாஹ்வின் பாதுகாப்பு உத்தரவாதத்திலேயே நீங்கள் அவர்களை சொந்தமாக்கியிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையை முன்னிலைப்படுத்தியே அவர்களது உறவு உங்களுக்கு ஹலாலாகிறது. பெண்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நல்ல செய்திகளே அவர்களுக்கு வஸியத்தாக அமையட்டும்…” (அஹ்மத்). இந்த ஹதீஸும் ஆண் பெண் உறவு இறையச்சம்,  நீதி போன்ற பெறுமானங்களின் மீது அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இந்தப் பின்புலத்தில்தான் இமாம் ஹஸனுல் பஸரி அவர்களும் தனது மகளை பலர் பெண் கேட்டு வந்த நிலை பற்றி கேள்வி கேட்டவருக்கு அவர்களில் மிகவும் தக்வா உள்ளவனுக்கு உங்களது மகளை திருமணம் செய்து வையுங்கள். ஏனெனில் அவன்தான் அவளை நேசித்தால் கண்ணியப்படுத்துவான். வெறுத்தாலும் கூட அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.

எனவே,  துணைத் தெரிவின்போது தீன் என்ற காரணி தீர்மானம் மேற்கொள்வதற்கான ஒரு அடிப்படையாகக் காணப்படல் வேண்டும் என்பதன் பொருள் இதுதான். அது தனித்து புறத்தோற்றத்தையோ புறச் செயற்பாட்டையோ மாத்திரம் குறிக்கவில்லை. மாற்றமாக அதனையும் தாண்டிய தக்வா மிகுந்த,  நீதியான ஒரு உளநிலையையே மிகவும் முக்கியமாகக் குறித்து நிற்கிறது.

2.            பரம்பரைப் பண்புகள் எனும் அடிப்படை :-

நபியவர்கள் கூறினார்கள்,  “மனிதர்கள் கனிப்பொருட்கள் போன்றவர்கள். ஜாஹிலிய்யத்தில் மேன்மக்களாகக் காணப்பட்டோர்,  இஸ்லாத்திலும் மேன்மக்களாகவே கருதப்படுவர். அவர்கள் இஸ்லாத்தை ஆழ்ந்து அறிகின்றபோது என்றார்கள். (புஹாரி). இந்த ஹதீஸ் மனித வகைகள் குறித்த ஒரு உண்மையைப் பேசுகிறது. மனிதர்களில் உயர் குணங்கள்,  உயர் ஆற்றல்கள் போன்றன பரம்பரைக் காரணிகளால் கடத்தப்படுகின்றன. அந்தவகையில் சில குடும்பங்கள் இயல்பிலேயே உயர் ஆற்றல் கொண்டவையாக இருக்கும். மற்றும் சில உயர் குணங்கள் கொண்டவையாக இருக்கும். 

கனிப்பொருட்களில் எவ்வாறு உள்ளார்ந்த ஆற்றல்,  குண வேறுபாடுகள் காணப்படுகின்றனவோ அவ்வாறே மனிதர்களிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. இது மனிதப் படைப்பில் அல்லாஹ் வைத்திருக்கும் ஒரு இரகசியம். தலைமைத்துவங்கள்,  ஆகர்ஷண ஆளுமைகள் போன்றனவெல்லாம் இந்த இரகசியத்தின் விளைவுகள்.
எனவே,  ஜாஹிலிய்யத்தின்போது ஆகர்ஷண ஆளுமைகளாக வலம் வந்தோர்,  இஸ்லாத்திலும் அதே அந்தஸ்த்தைப் பெறுவர். அவர்கள் இஸ்லாத்தை சரியான வடிவில் அறிந்து செயற்படுத்துகின்ற போது. மனித வகையின் இந்த வேறுபாடு துணைத் தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படுவது இஸ்லாத்தின் பார்வையில் தவறானதல்ல. மாத்திரமன்றி அது வரவேற்கத்தக்கதும் கூட. நபியவர்கள் கூறினார்கள் உங்கள் இந்திரியங்களை எங்கே செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பரம்பரைப் பண்புகள் தொடர்ந்து கடத்தப்படக்கூடியவை என்றார்கள். (இப்னுமாஜா)

இந்த ஹதீஸ் குறித்து நிற்கும் கருத்துப்படி தமது குணவியல்புகள்,  ஆற்றல்களுக்குப் பொருத்தமான துணையைத் தேடுதல் தவறானதல்ல என்பது புரிகிறது. ஏனெனில் ஷெய்க் அஹ்மத் முஹம்மத் ராஷித் அவர்கள் குறிப்பிடுவது போல்,  இன்றைய சமூக வாழ்வமைப்பு சிக்கல் நிறைந்தது. அதனுள் தனித்து இறையச்சம்,  நேர்மைத்தன்மைகள் மாத்திரம் சோடிகளைத் தொடர்ந்தும் இணைத்து வைக்கப் போதுமானவையல்ல. சமூக யதார்த்தங்களும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். தஃவா அமைப்பிற்குள் சில சமயங்களில் இவை கருத்தில் கொள்ளப்படாத தவறு நடைபெறுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

எனவே,  பரம்பரைப் பண்பு வேறுபாடுகள் துணைத் தெரிவில் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பது நாம் மனங்கொள்ள வேண்டிய மற்றொரு அடிப்படையாகும்.

3.            நெருங்கிய உறவுகள் தவிர்க்கப்படுவது சிறந்தது எனும் அடிப்படை :-

நெருங்கிய உறவுகளில் துணைத் தெரிவு நடைபெற வேண்டுமா? அல்லது உறவல்லாதவர்களில் தெரிவு நடைபெற வேண்டுமா? என்பதில் இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் மத்தியிலும் சரி,  உளவியல் அறிஞர்கள் மத்தியிலும் சரி இரு வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.

சட்டத்துறை அறிஞர்களில் ஒரு தரப்பினர்,  நெருங்கிய உறவுகளைத் தவிர்த்து,  உறவல்லாதவர்களில் இருந்து துணைத்தெரிவு நடைபெற வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிகாட்டுதலாகும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக நெருங்கிய உறவுகளில் திருமணம் செ;யயாதீர்கள்,  சந்ததிகள் பலவீனமடையும் என்ற கருத்தில் வந்துள்ள சில ஹதீஸ்களை ஆதாரம் காட்டுகின்றனர். மறுதலையாக மற்ற தரப்பினர் நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். நபியவர்களும் ஸஹாபாக்களும் நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்துள்ள சந்தர்ப்பங்களை இதற்கு ஆதாரமாக முன்வைப்பதுடன்,  முதல் தரப்பினர் ஆதாரமாகக் கொண்ட ஹதீஸ்கள் மிகவும் பலவீனமானவை எனவும் கூறுகின்றனர்.

அதேபோல் உளவியலாளர்கள் மத்தியிலும்,  பரம்பரையியல் ஆய்வுகள் குறித்து இருவேறுபட்ட பார்வைகள் இருக்கின்றன. நெருங்கிய உறவுத் திருமணங்கள்,  சந்ததிகளில் நோய்கள்,  அங்கவீனங்கள்,  மந்த புத்தி நிலைகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற அபிப்பிராயங்கள் நிலவுவது போல்,  மறுதலையாக நெருங்கிய உறவு என்பதால் மாத்திரம் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. வேறு காரணங்களாலேயே ஏற்படுகின்றன என்ற வாதங்களும் இருக்கின்றன.

இந்த வாதப் பிரதிவாதங்களின் சரி பிழைகளைத் தாண்டி இந்த விடயத்தைப் பார்க்கின்ற பொழுது சில உண்மைகள் புலப்படுகின்றன.

முதலாவது,  துணைத் தெரிவு நெருங்கிய உறவில் அமைய வேண்டும் என்பதுவோ அல்லது அமையக் கூடாது என்பதுவோ இரண்டு நிலைகளும் மார்க்கப் பெறுமானம் கொண்டவையல்ல. அதாவது இவற்றில் ஏதேனும் ஒரு நிலைப்பாடுதான் இஸ்லாத்தில் கடமையானது என்றோ அல்லது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றோ நாம் சொல்ல முடியாது. மாற்றமாக இது மனித அறிவாராய்ச்சியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்குரிய ஒரு விடயமாகும். அந்தவகையில் நெருங்கிய உறவில் துணைத்தெரிவு நடந்தாலும் சரி,  உறவல்லாதவர்களில் நடந்தாலும் சரி எதுவும் மார்க்க ரீதியாக நன்மையானதாகவோ அல்லது பாவமானதாகவோ அமைய மாட்டாது.

இரண்டாவது,  நெருங்கிய உறவில் திருமணம் செய்தல்,  தவிர்த்தல் இந்த இரண்டில் எது சிறந்தது? எது மிகவும் பொருத்தமானது? என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கின்ற பொழுது,  நெருங்கிய உறவுகளில் துணைத் தெரிவு நடைபெறுவதை விடவும் உறவல்லாதவர்களில் துணைத் தெரிவு அமைவதே மிகவும் சிறந்தது என்பது புலப்படுகிறது. காரணம் இவ்விடயம் தொடர்பான ஆரம்ப கால இமாம்களின் வாதப்பிரதிவாதங்களை அவதானிக்கின்ற பொழுது,  இந்த விடயத்திற்கு வழங்கப்பட்ட மார்க்கப் பெறுமானத்திற்கு அப்பால் சில நியாயங்களை இமாம்கள் பேசுகின்றனர்.

1)            நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் நடைபெறுவதை விடவும் உறவல்லாதவர்களுடன் திருமணம் நடைபெறுகின்ற பொழுது ஒப்பீட்டு ரீதியில் குடும்ப முரண்பாடுகளும்,  பிரச்சினைகளும் குறைவடைகின்றன என்கின்றனர். இந்தப் பின்புலத்தில்தான் ஒரே நேரத்தில் இரு சகோதரிகளைத் திருமணம் செய்ய முடியாது என்ற சட்டமும்,  ஒரு பெண்ணையும் அவளது மாமியை அல்லது சாச்சியையும் சமகாலத்தில் திருமணம் செய்ய முடியாது என்ற சட்டமும் இஸ்லாத்தில் பின்பற்றப்படுகின்றது. இந்த சட்டத்தின் காரணத்தை இமாம்கள் விவாதிக்கின்ற பொழுது கணவன் விடயத்தில் பெண் மிகுந்த ரோஷ உணர்வு கொண்டவள்,  தனது கணவனை இலகுவில் பிரிதொருவருக்கு விட்டுக் கொடுக்கவோ பங்கு போட்டுக் கொள்ளவோ முன்வர மாட்டாள். அதிலும் குறிப்பாக தான் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய அடுத்த பெண் தனது நெருங்கிய உறவாக இருக்கின்ற பொழுது,  தனது குடும்பம்தானே என்ற அசட்டு தைரியமும் அங்கு இணைந்து விடுகிறது. எனவே பெண்ணின் ரோஷ உணர்வுடன் குடும்பத்தின் பக்க பலமும் இணைகின்ற பொழுது குடும்பப் பிரிவுகள் அதிகரிக்கும் நிலையே ஏற்படுகிறது என்கின்றனர்.

2)            உறவல்லாதவர்களில் துணைத் தெரிவு நடைபெறுகின்ற போது,  குடும்ப உறவு வட்டம் விரிவடைகிறது,  புதிய உறவுகள் கிடைக்கின்றன. இது பல்வேறு நலன்களுக்குக் காரணமாகின்றது என்கின்றனர். நபியவர்களது திருமணங்களை நோக்கினால் வித்தியாசப்பட்ட பல கோத்திரங்களில் அவர்கள் திருமண உறவுகளை வைத்துக் கொண்டார்கள். இதன்மூலம் தனது உறவு வட்டத்தை விசாலப்படுத்தினார்கள். அது அவர்களது தஃவாவுக்கு மிகவும் பக்கபலமாக அமைந்தது.

3)            உறவல்லாதவர்களில் துணைத் தெரிவு நடைபெறுகின்ற போது வழமையான குடும்ப இயல்புகள்,  குணங்கள்,  ஆற்றல்களுடன் புதிய குணங்களும் ஆற்றல்களும் கொண்ட ஒரு பரம்பரை உருவாவதற்கான வாய்ப்பேற்படுகிறது.

அடுத்து இவ்விடயம் குறித்து ஷெய்க் இப்னு உஸைமீன் அவர்களிடம் வினவப்பட்ட ஒரு சமயத்தில் அவரது பதில் இவ்வாறு அமைந்தது. உறவல்லாதவர்களைத் திருமணம் செய்வது சிறந்தது என்பதற்கு இமாம்கள் முன்வைத்துள்ள புதிய ஆற்றல்மிக்கப் பரம்பரை,  குடும்பப் பிளவுகளைத் தவிர்த்தல் போன்ற காரணங்கள் மிகவும் நியாயமானவை. அதேசமயம் நெருங்கிய உறவுக்குள்,  வெளிப் பெண்ணை விடவும் சிறந்த பெண் கிடைப்பாள் எனின் நெருங்கிய உறவை முற்படுத்தலாம். ஆனால் இரண்டும் சமனாக இருக்கின்ற ஒரு நிலை வரும் எனின் உறவல்லாத பெண்ணை முற்படுத்துவதே சிறந்தது என்றார்கள்.

4.            பொறுத்தப்பாடு எனும் அடிப்படை :-

இன்றைய சிக்கல் நிறைந்த சமூக வாழ்வில் பொறுத்தப்பாடு என்பது மிகவும் முக்கியமானது. அது வெறுமனே உள்ளம் சார்ந்த ஒரு விடயம் மாத்திரமல்ல கல்வி,  பொருளாதாரம்,  அந்தஸ்து,  பழக்க வழக்கங்கள் போன்ற பல பக்கங்களைக் கொண்ட ஒரு விடயம் அது. ஷெய்க் அஹ்மத் முஹம்மத் ராஷித் அவர்கள் அடிக்கடி கூறுவது போல்,  தஃவாவுக்குள்ளே,  மார்க்கமும் தஃவா ஈடுபாடும் உள்ள போது,  மற்ற எதனையும் பாராது திருமணங்கள் நடைபெற்ற சம்பவங்கள் இருக்கின்றன. சமூக வாழ்வின் சிக்கலான வடிவங்களைப் புரிந்து கொள்ளாது இரண்டு பேரின் வாழ்வை பெரும் சிரமத்திற்குள் தள்ளி விடுகின்ற நிலைமைதான் இது என்கிறார். படித்தவர்களும் படிக்காதவர்களும் சமமாவார்களா?” (ஸுமர் - 9) என்று அல்லாஹ்தஆலா கேட்பதில் எல்லோருக்கும் படிப்பினை இருக்கின்றது. பொறுத்தப்பாடு குறித்து இங்கு விரிவாகப் பேசவில்லை. கடந்த பத்தியில் இத்தலைப்பு தனியாக ஆராயப்பட்டுள்ளது.

5.            ஆலோசனை பெறுதல் எனும் அடிப்படை :-

இந்த அடிப்படை நேரடியாக யாரைத் தெரிவு செய்வது? என்ற விடயத்தோடு சம்பந்தப்படுவதில்லை. மாற்றமாக தெரிவு முறையுடன் சம்பந்தப்படுகிறது. அதாவது துணைத் தெரிவை மேற்கொள்ளும் போது எனது நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகின்றது. எமது தெரிவு மிகச் சரியான இலக்கை விட்டும் விலகிவிடாதிருக்க இந்த ஆலோசனை தேவைப்படுகிறது. ஆலோசனை செய்தவன் நஷ்டமடைய மாட்டான்,  அல்லாஹ்விடம் உதவி தேடியவன் கைசேதப்பட மாட்டான்.” (தபரானி) என நபியவர்கள் கூறினார்கள். 

இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்த விமர்சனங்கள் இருந்தாலும் ஹதீஸின் உள்ளடக்கசிந்தனை உண்மையானது. ஆலோசனை கேட்டல் என்பது வாழ்வின் குறித்ததொரு பகுதியுடன் மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல. எல்லாப் பரப்புக்களுடனும் தொடர்புபட்டது. மாத்திரமன்றி ஆலோசனை கேட்டல் என்பது எப்பொழுதும் நஷ்டமல்ல என்பதையும் இந்த ஹதீஸ் குறித்து நிற்கிறது.

துணைத்தெரிவு என்று வருகிற போது,  மிகவும் விதிவிலக்கான நிகழ்வுகளன்றி பலரும் பொதுவாக ஆலோசனை செய்கிறார்கள். ஆனால் யாரிடம் ஆலோசனை பெறுகிறோம்? என்பதும் முக்கியமானது. ஆலோசனை பெறுபவர் உண்மையானவராக இருத்தல்,  நேர்மையானவராக இருத்தல் போன்ற விடயங்களை எல்லோரும் சொல்வார்கள். இது சரியானதுதான். ஆனால் அதனை விட முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. நாங்கள் ஆலோசனை பெறப் போவது எங்களது வாழ்வுக்கான துணையைத் தெரிவு செய்கின்ற விடயத்தில். எனவே ஆலோசனை வழங்குபவர் குடும்ப உறவில் சிறந்தவராக இருக்கிறாரா? என்பதைப் பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் துணைத்தெரிவு என்பது,  வெறுமனே கோட்பாட்டுப் படிப்பு சார்ந்த விடயமல்ல. மாற்றமாக வாழ்க்கை அனுபவம். எனவே அதனை சிறந்த முறையில் மேற்கொள்பவரிடம் ஆலோசனை பெறுவதே பொருத்தமானது.

6.            அல்லாஹ்விடம் உதவி தேடுதல் எனும் அடிப்படை :-

மிக முக்கியமான அடிப்படை இதுதான். இதுவும் யார்? என்பதுடன் நேரடியாக சம்பந்தப்படுவதை விடவும் தெரிவு முறையுடன் பெரிதும் சம்பந்தப்பட்டது. எங்களது முயற்சிகள் எந்தளவு காத்திரமானதாக இருந்தாலும் அதன் வெற்றி தங்கியிருப்பது அல்லாஹ்வின் உதவியில் மாத்திரம்தான். நபியவர்கள் கூறினார்கள் மூன்று பேருக்கு உதவி செய்வது அல்லாஹ் மீது கடமை,  அல்லாஹ்வின் பாதையில் போராடுபவன்,  தனது அடிமைத்தலையில் இருந்து விடுதலை பெற முயற்சிப்பவன்,  தனது கற்பைக் காத்துக் கொள்ள திருமணம் செய்ய நினைப்பவன் என்றார்கள். (திர்மிதி). எனவே திருமண வாழ்வு தொடர்பில் அல்லாஹ்விடம் உதவி தேடுபவன் ஒரு போதும் வெறும் கையோடு திரும்ப மாட்டான்.

துணைத்தெரிவின்போது,  மேற்சொன்ன அடிப்படைகள் முக்கியமானவை. இவற்றை முடியுமானவரை கடைபிடிக்கின்ற பொழுது நிச்சயம் உங்கள் வாழ்வு பிரகாசமானதாய் அமையும். அல்லாஹ் எமது வாழ்வை பிரகாசமாக்கட்டும்