Thursday, August 17, 2017

மகாஸித் தேடல்கள் (1)

முன்னுரை

மகாஸித் இன்று பெரும் கடலாய் வியாபித்திருக்கும் ஒரு கலை. கலாநிதி ரிபாய் (நளீமி) அவர்கள் குறிப்பிடுவது போல் இக்கலை தொடர்பில் இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன.(1) எனவே அந்தக் கடலினுள் மூழ்கி முத்தெடுப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. மகாஸித் கலையைக் கற்கின்ற போதும் கற்பிக்கின்ற போதும், எனக்கு ஒரு விடயம் சற்று உறுத்தலாகவே இருக்கின்றது. அதாவது இக்கலையினுள் இருக்கும் அதிகமான கலைச் சொற்களும் நுணுக்கமான சொல்லாடல்களும் பலரை அதனை விட்டும் தூரமாக்கி விடுகின்றன. அக்கலையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை சற்று குறைத்து விடுகிறது. உண்மையில் இது மகாஸித் கலையின் நோக்கத்திற்கே புறம்பானது.

ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ் அவர்கள் குறிப்பிடுவது போல்,  மகாஸித் எல்லோருக்கும் அவசியமானது. ஏனெனில் அது இஸ்லாத்தை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்.(2) மாத்திரமன்றி உண்மையில் இஸ்லாத்தினை அன்றாட வாழ்வில் உளத்திருப்தியுடன் அமுல்படுத்துவதற்கான தூண்டுதலும் ஆர்வமும் அதன் மகாஸிதை அறிந்து கொள்வதிலேயே தங்கியிருக்கிறது. அந்த வகையில் மகாஸிதின் மிகப் பிரதானமான நோக்கங்களில் ஒன்று அல்லது பயன்பாடு ஷரீஅத்தை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்குத் துணை செய்வதும்,  அதனை அமுல்படுத்துவதற்கான தூண்டுதலை வழங்குவதுமாகும். இந்தப் பணியை இன்று மகாஸித் செய்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது குறிப்பிட்டதொரு புலமைத்துவ வட்டாரத்துடன் மட்டுப்பட்ட ஒன்றாகவே காணப்படுகிறது.

ஒரு தடவை மகாஸித் சம்பந்தமான விரிவுரையொன்றை நிகழ்த்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் பக்கத்தில் அமர்ந்திருந்தார். பேச்சின் இடையில் மகாஸித் துறையில் ஆர்வம் வருவதில்லை என்றார். மகாஸித் கலையின் சிரமமான கலைப் பிரயோகங்கள்தான் அவரது ஆர்வத்தைத் தடுத்திருக்கிறது. எனக்கு ஒரு விடயம் புரியத் தொடங்கியது. மகாஸிதை நாம் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் முன்வைக்கவில்லை. இது அசாத்தியமான ஒன்றல்ல. 

கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் ஷரீஆவின் ஏனைய கலைகளை விடவும் மகாஸிதைப் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானது என்கிறார். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன் கேளுங்கள்.

உண்மையில் மகாஸிதை விளங்கிக் கொள்வதும்,  அதில் பரிச்சயப்படுவதும்,  இஸ்லாத்தின் கலைகள் மத்தியில் இதுவே இலகுவானது அல்லது குறைந்த சிரமத்தைக் கொண்டது. மகாஸித் பிக்ஹை விடவும் அதன் நுணுக்கமான சட்டப் பரப்புகளை விடவும் இலகுவானது. உஸுலுல் பிக்ஹை விடவும் இல்முல் கலாம் எனும் கலையை விடவும் அவற்றின் கலைச் சொற்கள்,  தர்க்கங்களை விடவும் இலகுவானது. ஹதீஸ் திறனாய்வுக் கலையை விடவும் அதன் நிபந்தனைகள்,  காரணங்கள்,  ஒருவரைக் குறை காணல்,  நியாயப்படுத்தல் என்ற அனைத்தையும் விடவும் இலகுவானது மாத்திரமன்றி அறபுமொழிக் கலைகளை விடவும் கூட மிகவுமே இலகுவானது. அதிலும் குறிப்பாக அறபிலக்கணம் அதனை நாங்கள் பள்ளிப் பருவத்தின் ஆரம்பத்திலேயே கற்கின்றோமே.

மாத்திரமன்றி மகாஸிதை அறிந்து கொள்வதும்,  அதனை அல்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் விளங்கிக் கொள்வதும் எப்பொழுதும் அறிஞர்களில்; மாத்திரம் தங்கியிருக்கும் ஒரு விடயமல்ல. மாற்றமாக சில மகாஸித்கள் எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியுமானவை மற்றும் சில மிகக்குறைந்த வடிவிலானதொரு அவதானத்தின் மூலம் மாத்திரமே விளங்கிக் கொள்ள முடியுமானவை. உண்மையில் இது எதனைப் போன்றது எனின்,  அல்லாஹ் எமக்கு அளித்துள்ள பழங்கள்,  விதைகள்,  மரக்கறி வகைகள் போன்ற அருள்களுக்கு நிகரானது. அவற்றில் சில கைக்கெட்டிய தூரத்தில் இருப்பவை நேரடியாகப் பறித்துக் கொள்ள முடியும். இன்னும் சில பூமியின் உள்ளிருந்து அகழ்ந்தெடுக்கப்பட வேண்டியவை. மற்றும் சில உயர்ந்த மரங்களில் கைக்கெட்டாத தொலைவில் இருப்பவை. அவற்றை சிரமப்பட்டுத்தான் அறுவடை செய்ய வேண்டியிருக்கும். மகாஸிதும் இது போன்றதுதான்,  எல்லாமே ஒரேவகையான ஆய்வுச் சிரமம் கொண்டவையல்ல.

ஷரீஆ சட்டங்களும் அவற்றின் மகாஸிதுகளும் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் உரியவை என்று வகைப்படுத்தப்படுத்தப்படக் கூடிய நுண்ணறிவு சார்ந்ததொன்றல்ல. அல்லது மூளைகளைக் கசக்கிப் பிழியும் தர்க்கவியல்,  தத்துவவியல் போன்ற நிபுணத்துவக் கலையும் அல்ல. அல்லது வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இல்முல்கலாம் போன்ற ஒரு கலையுமல்ல. மாற்றமாக இவை எல்லோருக்கும் அவசியமான சட்டங்களும் அவற்றின் நோக்கங்களும் மாத்திரமே.

ஒவ்வொருவரும் தனது தரத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ப அதிலிருந்து பயனடைய முடியும். அதனால்தான் அவை விளங்கிக் கொள்ளக் கூடியவையாகவும் மனித சிந்தனைக்கு நெருக்கமானவையாகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது.(3) அவற்றில் ஆழமான விடயங்கள் கூட எளிமைப்படுத்தப்பட முடியுமானவையாகும்.

இதனடிப்படையில் ஷரீஆ சட்டங்களும் அதன் மகாஸிதுகளும் மூன்று படித்தரங்களில் கற்கவும் கற்பிக்கப்படவும் முடியும். முதலாவது குறித்த துறை சார் அறிஞர்கள் நிபுணர்களது மட்டம். இது அவர்களது தரத்திலான நுணுக்கங்களுடன் கற்கப்படும் உயர் மட்டம். இரண்டாவது கல்வியலாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களது மட்டம். இது ஒரு நடுத்தர மட்டம். மூன்றாவது பொதுமக்களது மட்டம் இது இலகுபடுத்தப்பட்ட குறைந்த மட்டம். ” (4)

கலாநிதி ரைஸுனியின் வார்த்தைகளில் மகாஸிதின் மகாஸித் என்ன என்பது மிகவும் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. மாத்திரமன்றி அது புலமைத்துவ வட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மட்டுப்படுத்துவது அதன் நோக்கங்களுக்கும் புறம்பானது என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

மகாஸித் என்பது எளிமையான கலைதான். ஆனால் சாதாரண பொதுமகனும் பயன் பெறுகின்ற வகையில் அது எளிமையாக முன்வைக்கப்படுகின்றதா? என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. பல சமயங்களில் மகாஸித் குறித்த எதிர்வாதங்களுக்கு,  அது பற்றிய போதிய தெளிவின்மைகளும் காரணமாக அமைகின்றன. அந்தவகையில் ஷரீஆ சட்டங்களுக்கான மகாஸிதுகள் எவை என்பது பற்றி மக்களுக்கு எளிமையான வடிவில் அறிவூட்டப்பட வேண்டிய அவசியம் இருப்பது போலவே மகாஸித் கலை குறித்த அறிவும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைய சூழலில் வெகுவாக உணரப்படும் ஒரு உண்மை இது.

அதற்கான ஒரு சிறு முயற்சியை முன்னெடுத்தால் என்ன என்ற கேள்வி என்னில் அடிக்கடி வந்து போவதுண்டு. அந்தக் கேள்விக்கான ஒரு பதிலாகவே மகாஸித் தேடல்கள் என்ற ஒரு தொடர்பத்தியை எழுதலாம் என்றிருக்கிறேன். இதில் மகாஸித் கலை பற்றிய அறிமுகத்தை முதன்மையாகவும் அவ்வப்போது ஷரீஆவுக்கான மகாஸிதுகளை அடையாளம் காட்டுவதை அடுத்ததாகவும் மேற்கொள்ள நினைக்கிறேன். மகாஸித் கலை அறிமுகத்தையும் கூட,  பாடத்திட்ட வடிவிலன்றி முக்கியமாய்க் கேள்வி எழுகின்ற,  விடை அவசியமான பக்கங்கள் மீது ஒளி பாய்ச்சும் ஒரு செயற்பாடாகவே செய்ய நினைக்கிறேன்.

இங்கு மற்றொரு விடயத்தையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மகாஸித் கலையின் கோட்பாட்டுப் பக்கம்,  நவீன காலத்தில்தான் மிகுந்த ஆய்வுக்குற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இமாம் ஜுவைனி,  கஸ்ஸாலி,  ஷாதிபி போன்றவர்கள் முன்வைத்த மகாஸித் சிந்தனைக் கட்டமைப்பைத் தாண்டி நவீன காலத்தில் பல்வேறு வித்தியாசமான மகாஸித் சிந்தனைக் கட்டமைப்புகள்(5) முன்வைக்கப்படுகின்றன.

 அந்தவகையில் கோட்பாடு என்ற இடத்திலும் வித்தியாசப்பட்ட பார்வைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. மாத்திரமன்றி ஒரு கலை என்ற வகையில் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையிலேயே மகாஸித் இருக்கிறது. அந்த வகையில் இங்கு பேசப்படும் விடயங்கள் முடிந்த முடிவுகள் என்பதை விடவும் பெரும்பாலும் சமநிலைத் தேடல்களாகவே அமையப் போகின்றன. அதனால்தான் தலைப்பையும் மகாஸித் தேடல்கள் என பெயரிட்டிருக்கிறேன்.

இறுதியாக மற்றொரு விடயம்,  இவ்வருடம் ஆரம்பித்து வைத்த மற்றொரு பணி இருக்கிறது. அதுதான் இமாம் ஷாதிபியின் முவாபகாத் சிந்தனைகளை விளங்கிக் கொள்ள எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி. அதனைக் கற்கும் போது தமிழ் நிலைப்பட்ட வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏராளமான விடயங்கள் அங்கிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அதனையும் அவ்வப்போது மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன். கலாநிதி முஃதஸ் அல் கதீப் அவர்களின் பாடக் குறிப்புகளை மையப்படுத்தி அப்பணியைச் செய்வதற்கான ஒரு உடன்பாடும் அவருடன் எட்டப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வே போதுமானவன். முயற்சிகளின் வெற்றி அவன் கையிலேயே இருக்கிறது. அதற்கான தைரியத்தையும்,  உறுதியையும் தேக ஆரோக்கியத்தையும் தருமாறு பிரார்த்தித்து விடை பெறுகிறேன்.


(1)          கலாநிதி S.L.M. ரிபாய் (நளீமி) (Phd of SOAS, Freelance writer in UK),  நேரடிக் கலந்துரையாடல்,  வாட்ஸ்அப் ஊடாக,  2017

(2)          ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ்,  முன்னுரை,  முவாபகாத்திற்கான குறிப்புரை,  பாகம் 01,  பக்கம் 10

(3)          ஷரீஆ மனித அறிவால் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் காணப்படுதல் வேண்டும் என்பது,  இமாம் ஷாதிபி அவர்கள் பேசும் நான்கு வகையான மகாஸிதுகளில் ஒன்று. அந்தவகையில் ஷரீஆ பொதுமகனால் விளங்கி,  செயற்படுத்த முடியுமாக அமைக்கப்பட்டிருத்தல் அதனுடைய ஒரு மக்ஸத் என்பதாகக் குறிப்பிடுகிறார். இக்கருத்தை விளங்கப்படுத்தும் விதமாகவே மேற்குறித்த வசனம் அமைந்திருக்கிறது.

(4)          கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  மகாஸிதுல் மகாஸித்,  பக்கம் 68,  69,  மர்கஸுல் மகாஸித் லித்திராஸாத் வல் புஹுஸ்,  ஷபகா அல் அறபிய்யா லில் அப்ஹாஸ் வந்நஷ்ர்.

(5)          மகாஸித் சிந்தனைக் கட்டமைப்பு என்பதன் மூலம் நான் நாடுவது: மகாஸித் என்றால் என்ன? அவை எவை? அவற்றின் வகைப்பாடுகள் எவை? அதில் உயர்ந்தது எது? தாழ்ந்தது எது? என்ற சிந்தனை ஒழுங்காகும்,  (Maqashid Structure).

Tuesday, August 15, 2017

பெண் - ஒரு சமநிலைப் பார்வை


பெண் பற்றிய சில தவறான மனப் பதிவுகள்



பெண் என்ற தலைப்பு குறித்து பல சமயங்களில் பெண்களுக்கு விரிவுரைகள் நிகழ்த்திய போது நான் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்பதுண்டு. இஸ்லாத்தில் பெண்ணின் முக்கியத்துவம், பெண்ணின் பணி என்று விஷேடமாக ஒரு தலைப்பிட்டு பேச வேண்டியதன் அவசியம் என்ன? இஸ்லாத்தில் ஆணின் முக்கியத்துவம், ஆணின் பணி என்று ஏன் பேசப்படுவதில்லை? இதற்கு பல வேறுபட்ட கோணங்களில் நின்று அவர்களிடத்திலிருந்து பதில்கள் வரும். அந்தப் பதில்களின் நியாயத் தன்மைகள் எவ்வாறு இருந்த போதிலும்,  ஒரு விடயம் மாத்திரம் தெளிவான உண்மை. இந்தக் கேள்வி தோன்றுவதற்கு அல்குர்ஆனோ சுன்னாவோ காரணமல்ல.

 மாற்றமாக மனிதனே ஏற்படுத்திக் கொண்ட சிந்தனைக் சிக்கல்களின் விளைவாகவே இந்தக் கேள்வி தோன்றுகிறது,  கலாநிதி கர்ளாவி அவர்கள் கூறுவது போல் மனித சிந்தனைகளின் எல்லை மீறிய பார்வைகள்,  ஒரு புறத்தில் பெண்ணை ஒரு போகப் பொருளாகவும்,  ஆணின் அடிமையாகவும் சித்தரிக்கின்றது. மற்றொரு புறத்தில் ஆணைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி,  எதற்கெடுத்தாலும் ஆணாதிக்க மரபுதான் காரணம் என்று கூறி ஆண் பெண் வித்தியாசத்தை இல்லாது செய்கின்ற ஒரு பார்வை இருக்கின்றது. அல்குர்ஆன் இந்த இரண்டு நிலைகளையும் தாண்டி,  ஆணை ஆணாகவும்,  பெண்ணைப் பெண்ணாகவும் பார்த்து அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் முன்வைக்கிறது.

இந்தக் கட்டுரையை கீழ்வரும் மூன்று கிளைத் தலைப்புகளில் அணுகலாம் என்று நினைக்கிறேன். இந்த ஒவ்வொரு கிளைத் தலைப்பும் சற்று விரிவாக அலசப்பட வேண்டும் என்பதனால் இன்றைய அமர்வில் முதல் பகுதியை மாத்திரம் பேசலாம் என்றிருக்கிறேன்.

1.            பெண் பற்றிய சில தவறான மனப் பதிவுகள்
2.            ஆணும் பெண்ணும் சமம் என்பதன் பொருள் என்ன?
3.            பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா?


பெண் பற்றிய சில தவறான மனப்பதிவுகள்

இங்கு பேசப்படவுள்ள பெண் பற்றிய தவறான மனப்பதிவுகள்,  வெறுமனே பாரம்பரியமாக நகர்த்தப்பட்ட கதைகள் அல்ல. மாற்றமாக அல்குர்ஆனுக்கான அல்லது சுன்னாவுக்கான விளக்கங்களாக முன்வைக்கப்பட்டவை. எனவேதான் இவை தனித்துப் பேசப்படுவதற்குரிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

1) ஆதம் (அலை) அவர்கள் முதல் தவறைச் செய்வதற்குக் காரணமாக இருந்தவள் பெண். அதனால்தான் உலகம் எனும் இந்த கஷ்ட வாழ்க்கைக்கு முழு மனித சமூகமும் தள்ளப்பட்டது. ஆதம்,  ஹவ்வா இருவரையும் படைத்த அல்லாஹ்தஆலா இருவரையும் சுவர்க்கத்தில் வசிக்கச் செய்தான். ஒரு மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தான். ஷெய்த்தான் முதலில் அந்தக் கனியை சாப்பிட ஆசையூட்டியது ஹவ்வாவைத்தான். பின்னர் ஹவ்வாவின் தூண்டுதலால் ஆதமும் அந்தத் தவறைச் செய்தார். இதனால் அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்டனர். எனவே முழு மனித சமூகமும் அனுபவிக்கும் கஷ்டத்திற்கு ஒரு பெண்ணே மூல காரணமாக இருந்திருக்கிறாள்.

கலாநிதி ராஷித் அல் கன்னூஷி அவர்கள் குறிப்பிடுவது போல் ஆதம்,  ஹவ்வா பற்றிய கதை பொதுவாக எல்லா வேதநூல்களிலும் பேசப்படுகின்றது. அல்குர்ஆனைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் இந்தக் கதை பெண் குறித்த ஒரு எதிர்மறை மனப்பதிவைப் பிரதிபலிக்கும் வகையிலேயே முன்வைக்கப்படுகிறது. அல்குர்ஆனுக்கான ஆரம்பத் தப்ஸீர்களிலும் கூட ஏனைய வேதநூல்களில் பேசப்பட்டது போன்றதொரு எதிர்மறைப் பார்வையே முன்வைக்கப்படுகிறது. 

இந்நிலை இஸ்ராயீலிய்யாத்களின் பாதிப்பினால் ஏற்பட்டது என கலாநிதி ராஷித் அல் கன்னூஷி கருதுகிறார். மாத்திரமன்றி,  ஆதம்,  ஹவ்வா சம்பவத்தில் ஹவ்வாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் இந்த சிந்தனைக் கலாச்சாரம் முழுக்க முழுக்க தௌராத்திய இன்ஜீலிய சிந்தனைகள் இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தில் ஏற்படுத்திய தாக்க விளைவு என்கிறார். மாற்றமாக அல்குர்ஆனை நேரடியாக அணுகி வாசிக்கின்ற போது,  நடந்த தவறுக்கு ஹவ்வா மாத்திரம் காரணம் என்று அல்லாஹ்தஆலா ஒரு போதும் குறிப்பிடவில்லை என்பது புலனாகிறது.

கலாநிதி அபூஸைத் அல்முக்ரிஃ அல் இத்ரீஸி அவர்கள் (மொரோக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்) இதுபற்றிக் கூறும்பொழுது,  நான் இதுபற்றி வந்துள்ள அனைத்து அல்குர்ஆன் வசனங்களையும் ஒன்று திரட்டிப் பார்த்தேன். மொத்தமாக பதினொரு வசனங்கள் இந்தக் கதையைப் பேசுகின்றன. அவற்றில் ஆறு வசனங்கள் இந்தக் குற்றத்தை  ஆதம் செய்தார் என நேரடியாக அவரை மாத்திரம் குறித்துச் சொல்கின்றன. மீதமுள்ள ஐந்து வசனங்களிலும் அந்தக் குற்றத்தை இருவரும் செய்ததாகக் குறிப்பிடுகின்றான். ஹவ்வாவை மாத்திரம் குறிப்பிட்டு ஒரு வசனத்திலும் வரவில்லை. எனவே,  முதல் தவறுக்கு பெண்ணைக் குற்றவாளியாக்குவது எந்த வகையிலும் நியாயமற்றது என்கிறார்.

கலாநிதி அலி முஹியத்தீன் கரதாஇ அவர்கள் சொல்வதுபோல்,  அல்லாஹ்தஆலா இருவரையும் நோக்கி,  இருமை மொழிவடிவில் பேசியுள்ளமை ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த விடயத்தில் வகை சொல்வதற்குரியவர்கள் என்பதையே குறித்து நிற்கிறது. எனவே தனித்து ஹவ்வா மாத்திரம் குற்றம் செய்தாற் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவது தவறானது.

அடுத்து,  இந்த சம்பவத்தில் தவறு என்று சொல்லப்படுவது,  குறிப்பிட்ட மரத்தின் கனியை சாப்பிட வேண்டாம் என்ற கட்டளை மீறப்பட்டமையை மாத்திரமே குறிக்கின்றது. மாற்றமாக ஆதமும் ஹவ்வாவும் பூமிக்கு அனுப்பப் பட்டமைக்கு அந்தத் தவறு காரணமல்ல. ஷஹீத் செய்யத் குத்ப் சொல்வது போல் அல்லாஹ் மனிதனை பூமியில் வாழவே படைத்தான். முதல் மனிதனையும் அவரது மனைவியையும் சுவர்க்கத்தில் வாழச் செய்ததும்,  அங்கு ஒரு  மரத்தின் கனியை சாப்பிட விடாமல் தடுத்ததும்,  ஷெய்த்தானின் தூண்டுதலால் சாப்பிட்டமையும்,  பின்னர் தௌபா செய்தமையும் அனைத்துமே இந்த உலக வாழ்வின் யதார்த்தைப் புரிந்து கொள்வதற்காக பீடிகையாக அமைக்கப்பட்ட ஒரு தர்பியாவேயன்றி உலகத்திற்கு அனுப்பப்பட்டமை ஒரு தண்டனையோ அல்லது பெண்ணால் விளைந்த சாபக்கேடோ அல்ல.

எனவே,  முதல் பெண் குறித்த இந்த எதிர்மறைப் பார்வை,  அல்குர்ஆனின் சிந்தனையல்ல. அல்குர்ஆன் பெண்ணை கண்ணியமான மனிதப் படைப்பாகவே நோக்குகிறது.

2) பெண் சூழ்ச்சி செய்பவள்,  தந்திரங்கள் செய்பவள், சதிகாரி,  என்று தாராளமாக பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆச்சரியமாக இவை அல்குர்ஆனின் சிந்தனையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன. அல்குர்ஆன் கூறுகிறது உங்களது (பெண்களது) சூழ்ச்சி மிகவும் பெரியது (சூரதுல் யூசுப் 28). அல்குர்ஆனில் இந்த வசனம் ஒரு பொது விதியைப் பேசுவது போன்ற வடிவில்தான் அமையப் பெற்றிருக்கிறது. அதனாலோ என்னவோ பலர் இந்த வசனத்தின் மூலம் பொதுவாக பெண்கள் சமூகத்திற்கான ஒரு பொதுப் பண்பே சுட்டிக் காட்டப்படுகிறது என்று புரிந்து கொண்டனர். இதன் காரணமாக பெண்கள் என்றாலே சூழ்ச்சியும்,  தந்திரமும் அவர்களிடம் இயல்பாகவே இருக்கிறது என்ற கருத்து பதிவாகியுள்ளது. 

கஸகஸ்தானைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஒரு தடவை,  அவரது நாட்டில் பெண்களை மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து வைப்பதாகக் கூறினார். நான் காரணம் கேட்டேன். அவர் சொன்னார் அவளை சிறிய வயதில் திருமணம் செய்து கொடுத்தால் அவள் சூழ்ச்சி செய்ய மாட்டாள்,  அவளுக்கு இன்னமும் அது தெரியாது.  எனவே,  கணவனது குடும்பத்தில் தனது குடும்பம் போல் வாழப் பழகிக் கொள்வாள். ஆனால் வளர்ந்ததன் பின்னர் திருமணம் செய்தால் கணவன் குடும்பத்தில் அவள் சூழ்ச்சி செய்வாள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவாள். கணவனைப் பிரித்துக் கொண்டு செல்வாள் என்று காரணம் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஒரு சமூகத்தின் வேறுபட்ட நடத்தை ஒன்றுக்கு இப்படி ஒரு மனப்பதிவு காரணமாக இருக்கிறது.

கலாநிதி ராஷித் அல் கன்னூஷி அவர்கள் இந்த வசனத்திற்கு இரண்டு வகையில் விளக்கமளிக்கின்றார். முதலாவது,  இங்கு சூழ்ச்சி என்ற கருத்தைத் தரும் அரபுப்பதம் கய்த் என்பதாகும். கய்த் என்ற சொல் அல்குர்ஆனில் எதிர்மறையான பொருளில் மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. நேர்மறையான கருத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கய்த் என்ற சொல் மனிதனுடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டிருக்கிறது. ஷெய்த்தானுடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டிருக்கிறது. ஏன்? அல்லாஹ்வுடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டிருக்கிறது. எனவே,  அறபு மொழியில் கய்த் என்ற சொல் எதிர்மறைப் பொருளை மாத்திரம் குறிக்கமாட்டாது.

 பயனுள்ள ஒரு மூலோபாயத்திற்கும் கய்த் என்று பயன்படுத்தப்பட முடியும். எனவே கய்த் என்பது அடைய விரும்பும் நோக்கத்தின் நன்மை தீமையைப் பொறுத்தே நேர்மறைப் பொருளையோ எதிர்மறைப் பொருளையோ பெறுகிறது. அந்தவகையில் இந்த வசனத்தை ஒரு பொது விதி எனக்;கொள்வதாயின்,  ஒரு விடயத்தை அல்லது பிரச்சினையை பெண்கள் திறமையாகக் கையாளக்கூடியவர்கள் என்று பொருள் கொள்வதே பொறுத்தமானது. கலாநிதி தாரிக் சுவைதான் அவர்கள் கூறுகிறார்கள் ஒரு பெண்ணின் புத்தாக்கத் திறன் ஆணை விடவும் இருபத்தி ஐந்து வீதம் அதிகம் என்கிறார். இந்தக் கருத்தும் மேற்சொன்ன உண்மையை வலுப்படுத்துகிறது.

இரண்டாவது,  இந்த வசனத்தின் போக்கில்,  இந்த வார்த்தைகள் நேரடியாக அல்லாஹ் சொல்லுகின்ற ஒரு செய்தியாகவன்றி,  குறித்த நாட்டு அரசன் சொல்கின்ற ஒரு செய்தியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த வார்த்தைகளை ஒரு பொதுவிதியாகக் கருத முடியாது. மாத்திரமன்றி அரசர் ஏன் இவ்வாறு சொன்னார்? எனின்,  யூசுப் (அலை) அவர்களை அரசனின் மனைவி தவறு சொய்ய அழைக்கிறார். மறுத்த யூசுப் (அலை) அவர்கள் தன்னைக் காத்துக் கொண்டு வெளியே வர முற்பட்ட போது,  வாசலில் அரசர் அதனைக் காண்கிறார். அரசனின் மனைவி யூசுப் (அலை) யைக் குற்றம் சாட்ட,  யூசுப் (அலை) அரசனின் மனைவியைக் குற்றம் சாட்டுகிறார். அப்பொழுது மத்தியஸ்தம் வகித்து தீர்ப்பு வழங்கிய அரசவையைச் சேர்ந்த ஒருவர் யூசுப் (அலை) அவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்புச் சொல்கிறார். 

இந்த சமயத்தில் அரசர் சொன்ன வார்த்தைகள் தான் இவை. அதாவது உண்மையில் அங்கு குற்றம் செய்தவர் அரசனின் மனைவி,  இப்பொழுது அரசர்,  ஒரு கணவனது ஸ்தானத்தில் நின்று இது தனது மனைவியின் சதி என்று மாத்திரம் கூறாமல், சதி செய்வதே பெண்களின் பண்பு என்று கூறுகிறார். தனது மனைவி செய்த குற்றத்தின் கனதியைக் குறைக்கும் வகையில் தனிப்பட்ட ஒருவரின் செயலை பொதுமைப்படுத்தினார் அரசர். இது அவர் ஒரு கணவனாக செய்த வேலை. எனவே,  இந்த வசனத்தைப் பொது விதியாகக் கொண்டு எல்லாப் பெண்களும் சதிகாரர்கள் என்று தீர்மானித்துவிட முடியாது.

இந்த விளக்கங்களுக்கு அப்பால்,  அல்குர்ஆன் பொதுவாக நற்பண்புகள்,  தீய பண்புகள் போன்றவற்றை ஆண் பெண் என்ற குறிப்பிட்ட ஒரு சாராருடன் மாத்திரம் சம்பந்தப்படுத்திப் பேசாமல் பொதுவாக மனிதனுடன் சம்பந்தப்படுத்தி பேசுகின்றமையே அல்குர்ஆனின் பொது ஒழுங்காக இருக்கிறது. மனதின் மீதும் அதனை சீர்படுத்தியவன் மீதும் சத்தியமாக,  மனதில் தக்வா உணர்வையும்,  பாவ உணர்வையும் அவன்தான் ஏற்படுத்தினான். மனதைத் தூய்மைப்படுத்தியவன் வெற்றி பெற்றான். பாழ்படுத்தியவன் நஷ்டமடைந்தான்.” (சூறதுஷ் ஷம்ஸ் : 7-9) என்று அல்குர்ஆன் கூறுகிறது. இது போன்ற இன்னும் பல வசனங்கள் நற்பண்பும் சரி தீய பண்பும் சரி பொதுவாக மனிதனுக்குரியவை. இவற்றில் ஏதேனும் ஒரு பக்கம் மாத்திரம் ஒரு தரப்பில் மிகைத்திருக்கிறது என்று பேசவில்லை. அந்த வகையில் இந்தப் பொது உண்மையின் அடிப்படையிலும் பெண்களின் சதி மிகவும் பெரியது என்ற வசனத்திற்கு எதிர்மறையான விளக்கத்தைப் பெற முடியாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

3) பெண் தலைமைத்துவத்திற்குப் பொறுத்தமற்றவள்,  அவளிடம் அந்தத் திறமை கிடையாது,  இஸ்லாம் பெண்ணின் தலைமையை ஏற்கவில்லை என்ற பார்வை பரவலாகக் காணப்படுகிறது.

இஸ்லாமிய சட்ட சிந்தனைக்குள்ளே பெண்ணின் தலைமைத்துவம் தொடர்பில் பலத்த வாதப் பிரதிவாதம் காணப்படுகிறது. அந்த வாதம் ஓரிரு கருத்துக்களுக்குள்ளால் மாத்திரம் மட்டுப்படவுமில்லை. மாற்றமாக அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட கருத்துக்கள் தோன்றிய நிலையை இவ்விவவகாரத்தில் அவதானிக்கலாம். எனினும் அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்ட மூன்று கருத்துக்களை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.

முதலாவது,  பெரிய,  சிறிய எவ்வகை தலைமைத்துவத்தையும் இஸ்லாம் பெண்ணுக்கு அனுமதிக்கவில்லை. தலைமை ஆணுக்குரிய கடமை என்றே இஸ்லாம் சொல்கிறது. இரண்டாவது,  நாட்டின் தலைமையைத் தவிர,  ஏனைய தலைமைகளை ஒரு பெண் வகிப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது. மூன்றாவது நாட்டின் தலைமை உற்பட அனைத்து வகையான தலைமைப் பொறுப்புக்களையும் ஒரு பெண் வகிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை.

இந்த அனைத்துக் கருத்துக்களுக்குரியவர்களும்,  தத்தமது கருத்துக்களை ஆதாரங்களின் அடியாகவே முன்வைத்துள்ளனர். அவற்றின் மீதான ஒரு சட்டப்பகுப்பாய்வை மேற்கொள்வது இந்த இடத்தில் எனது நோக்கமல்ல. மாற்றமாக,  அந்த வாதப்பிரதிவாதங்களின் பொது விளைவைப் பற்றித்தான் பேச விளைகின்றேன். அதாவது அந்த வாதப் பிரதிவாதங்களின் மூலம் எதனைப் புரிந்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது.

முதலில் ஒரு விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதுவே,  அந்த விவகாரத்தின் விசாலத்தன்மையைக் குறித்து நிற்கிறது. எனவே அங்கு எல்லாக் கருத்துக்களினதும் இருப்பு நிலையை மறுதலிக்க முடியாது. அந்தவகையில் சூழலின் பொறுத்தப்பாடு,  தேவை  நிலை என்பவற்றின் அடியாக எந்தக் கருத்தின் அமுலாக்கம் மிகவும் பொருத்தமானதாக அமைகின்றதோ அதனை அமுல்படுத்துவதில் தவறில்லை. இதனைத்தான் நபியவர்கள் எனது உம்மத்தின் கருத்து வேறுபாடு அருள் என்றார்கள். (ஜாமிஉஸ் சகீர்). இந்த நிலையைத்தான் ஷெய்க் இப்னு ஆஷுர் அவர்கள் கருத்து வேறுபாட்டின் மகாஸித், இலகுபடுத்தல் என்றார்கள். அதாவது கருத்து வேறுபாட்டு நிலை ஷரீஅத்தில் இருக்கின்றமை மக்களுக்கு மார்க்கத்தை இலகுபடுத்திக் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்த சட்டக்கருத்து வேறுபாட்டிலிருந்து புரிந்து கொள்வது என்னவெனின், பெண்ணுக்குத் தலைமைத்துவத் தகுதி இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதனை மேற்கொள்வது யார் மீது கடமை என்பது குறித்த சூழல்,  தேவை,  பொருத்தப்பாடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படல் வேண்டும்,  என்பதாகும்.

இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில்தான் அல்குர்ஆன் முன்வைக்கும் விலாயத் பற்றிய சிந்தனையும் இருக்கின்றது. விலாயத் என்பதன் நேரடிப் பொருள் பொறுப்பு வகித்தல்வகை சொல்லுதல் என்பதாகும். அதாவது பிறிதொருவரது நலன்களுக்குத் தான் பொறுப்பாக இருத்தல் என்பது. இஸ்லாம் முன்வைக்கும் தலைமைத்துவ சிந்தனை இந்த அடிப்படையின் மீதே எழுகிறது. இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அரசியல் தலைமைத்துவத்தை விலாயத் என்றே அழைத்தார்கள்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான விலாயத் சிந்தனையை பேசும் பிரபல்யமான அல்குர்ஆன் வசனம் இப்படிச் சொல்கிறது. முஃமினான ஆண்களும் பெண்களும்,  அவர்களில் சிலர் இன்னும் சிலருக்குப் பொருப்பாக இருப்பர். நன்மையை ஏவுவார்கள் தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தைக் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் கட்டுப்படுவார்கள். இவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பான் (சூறதுத் தௌபா – 71)

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவது போல் இவ்வசனம் சமூகப் பொருப்பை வலியுறுத்தும் வசனமாகும். இங்கு விலாயத் எனும் பொருப்பு ஒரு தரப்புடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. ஆண் பெண் இருதரப்புக்கும் உரியது என்றே குறிப்பிடப்படுகிறது. அத்துடன் மிக முக்கியமாக அவர்களில் சிலர் இன்னும் சிலருக்குப் பொருப்பாக இருப்பர் என்ற வசனம் தலைமைத்துவம் என்பது ஆற்றலுடன் சம்பந்தப்பட்டது எனவே,  எல்லோரும் அதற்குத் தகுதிபெற மாட்டார்கள். அந்தத் தகுதி உள்ள ஆணும், அதுபோல் தகுதி உள்ள பெண்ணுமே அதனைச் செய்ய வேண்டும் என்ற கருத்தைக் குறிக்கிறது. அத்துடன் சூழல்,  தேவை,  பொருத்தப்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டே யார் பொறுப்பு வகிக்க முடியும் என்பதும் தீர்மானிக்கப்படலாம் என்பதையும் குறிக்கிறது.

கலாநிதி தாரிக் சுவைதான் அவர்கள் குறிப்பிடுவது போல்,  தலைமைத்துவ ஆற்றல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது ஆனால் தலைமைத்துவ மாதிரியிலும் அணுகுமுறையிலுமே ஆணும் பெண்ணும் வேறுபடுகின்றனர். உதாரணமாக ஆண் அவசரமாக தீர்மானம் மேற்கொள்வான். பெண் சற்று தாமதித்தே தீர்மானிப்பாள். ஆண் தீர்க்கமானவனாக இருப்பான். பெண் பிறர் நிலையை அதிகம் கவனத்தில் கொள்வாள்.

இந்த உண்மையைப் பிரதிபலிக்கும் வகையில் தான் அல்குர்ஆன் ஒரே சூராவில் நாட்டுக்குத் தலைமை வகித்த ஆண் தலைமை ஒன்றையும்,  பெண் தலைமை ஒன்றையும் இணைத்து விளங்கப்படுத்தியுள்ளது. சூறதுன் நம்ல் பேசும் சுலைமான் (அலை) அவர்களது சம்பவமும் பல்கீஸ் ராணியின் சம்பவமும் மிகவும் பிரபல்யமானது. ஒரு நாட்டுக்குத் தலைமை வழங்கும் ஆற்றல் ஆண்-பெண் இருவரிடமும் இருந்திருக்கிறது என்பதை வலியுறுத்துவது போல் இருவரது அணுகுமுறை வேறுபட்டமையையும் இந்த சம்பவம் வலியுறுத்துகிறது. உதாரணமாக சுலைமான் (அலை) அவர்கள் தீர்க்கமானவராக இருந்திருக்கிறார். விரைவில் தீர்மானம் எடுத்திருக்கிறார். ஆனால் பல்கீஸ் ராணி நீங்கள் கருத்து சொல்லும் வரை நான் முடிவு எடுக்க மாட்டேன் என்ற அணுகுமுறையைத்தான் கடைபிடித்திருக்கிறார்.

மேற்சொன்ன அனைத்தும் பெண்ணின் தலைமைத்துவ ஆற்றலை மறுக்கவில்லை. ஆனால் குறித்ததொரு தலைமைப் பொறுப்பு யாருக்கு வழங்கப்படல் வேண்டும் என்பது சூழலின் தன்மை,  தேவையின் வகை,  ஆள் பொருத்தப்பாடு என்பவற்றின் அடிப்படையில் அமைவதே பொறுத்தமானது என்பதையே காட்டுகிறது.

இந்த இடத்தில் தமது தலைமைக்கு ஒரு பெண்ணை நியமிக்கின்ற சமூகம் வெற்றி பெற மாட்டாது என்ற ஹதீஸ் குறித்து சில கருத்துக்களைப் பதிவு செய்வது பொருத்தம் என நினைக்கிறேன். அபூபக்ரா என்ற ஸஹாபி அறிவிக்க,  இமாம் புஹாரி அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு பெண் தலைமைக்கு நியமிக்கப்படக் கூடாது என்ற கருத்துக்கு,   மிகப் பலமான நேரடியான ஆதாரமாக இந்த ஹதீஸ் முன்வைக்கப்படுகிறது. 

உண்மையில் இந்த ஹதீஸ் சொல்லப்பட்ட சந்தர்ப்பம் கூட,  பெண் தலைமைக்கு நியமிக்கப்படக் கூடாது என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. பாரசீக மன்னன் மரணித்த போது,  அவர்கள் மன்னனின் மகளை நாட்டின் தலைமைக்கு நியமித்தனர். இந்த சந்தர்ப்பத்திலேயே நபியவர்கள் இந்த வார்த்தைகளை மொழிந்திருக்கிறார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறியதாக அபூபக்ரா என்ற ஸஹாபி இதனை எப்போது கூறினார் எனின்,  ஜமல் யுத்தத்தின் போது,  ஆயிஷா (றழி) அவர்கள் தரப்பிலிருந்து போராட அழைக்கப்பட்டபோது,  அதனை மறுதலித்து அலி (றழி) தரப்பிலிருந்து போராடச் சென்றமைக்கான நியாயத்தை முன்வைக்கும் போதே இந்த ஹதீஸைக் கூறுகிறார். இந்தப் பின்புலத்தை பொதுவாகவும்,  ஹதீஸை நேரடியாகவும் விளக்கும் போது பெண் தலைமை வகித்தல் கூடாது என்ற கருத்தே பெறப்படுகிறது.

ஆனாலும் இக்கருத்துக்கு மாற்று நிலைப்பாட்டை முன்வைத்தவர்கள் இந்த ஹதீஸுக்கு வேறுபட்ட விளக்கங்களை முன்வைத்தனர்.

முதலில் இந்த ஹதீஸின் பல்வேறு அறிவிப்புகளை ஒன்றுதிரட்டி நோக்கும் போது,  சில அறிவிப்புகளில் தம்லிகுஹும்அவர்களை ஆள்வதற்கு என்ற சொல் பயன்படுத்தப்பட்டமையை மையமாக வைத்து,  இந்த ஹதீஸ் பொதுவாக எல்லா தலைமைகளையும் குறிக்க மாட்டாது. நாட்டின் தலைமையை மாத்திரமே குறிக்கும் என்றனர். இக்கருத்தை குறித்த ஹதீஸ் சொல்லப்பட காரணமாக இருந்த பாரசீக சம்பவமும் உறுதிப்படுத்துகிறது. நவீன காலத்தில் பல அறிஞர்களது நிலைப்பாடாக இதனைக் காணலாம்.

இரண்டாவது,  குறித்த ஹதீஸில் நபியவர்கள்,  பெண் என்பதன் காரணமாக இந்த வார்த்தையைச் சொல்லவில்லை. மாற்றமாக பாரசீகத்தில் தலைமைக்கு நியமிக்கப்பட்ட பெண்,  சிறு வயதுப் பெண்ணாகவும்,  ஆட்சி செய்வதற்குரிய தகைமையில்லாத பெண்ணாகவும் இருந்ததால்தான் நபியவர்கள் இவ்வாறு சொன்னார்கள். ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியான வேறுபலர் இருந்த நிலையிலும் மன்னரின் மகள்,  வாரிசு என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அந்தப் பெண் நியமிக்கப்பட்டாள். எனவே,  தகுதியின்மை காரணமாகவே அந்தப் பெண்ணின் தலைமைத்துவத்தை நபியவர்கள் ஏற்காது அது அந்த சமூகத்தின் தோல்விக்கே காரணமாகும் என்றார்கள் மாற்றமாக பெண் என்பதன் காரணமாகவல்ல,  என்பதையே இந்த ஹதீஸ் குறிக்கிறது என்றனர். ஏனெனில்,  அல்குர்ஆனின் விலாயத் சிந்தனையும்,  பொதுவான இஸ்லாமிய வரலாறும் பெண் என்பதால் எவரும் மறுதலிக்கப்பட வேண்டும் என்பதற்கு சான்றாக இல்லை என்றனர்.

மூன்றாவது,  இந்த ஹதீஸ் குறிப்பாக பாரசீக சம்பவத்தை மாத்திரமே குறிக்க வந்தது. பாரசீகர்கள் தற்போது ஒரு பெண்ணை தலைமையில் நியமித்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள் என்று நபியவர்கள்,  தான் பாரசீகத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தை கிழித்துப் போட்ட சம்பவத்தின் பின்னணியில் நின்று கூறிய ஒரு கருத்து என்று சிலர் கருதுகின்றனர். அதாவது கடிதம் கிழிக்கப்பட்ட நிகழ்வில் அவர்களுடன் கோபம் கொண்டிருந்த நபியவர்கள் அவர்களுக்கு எதிராக கேட்ட ஒரு துஆதான் இது. அந்த துஆ வரலாற்றில் நிறைவேறியது.

நான்காவது,  கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் தனது கருத்தாகவன்றி,  இந்த ஹதீஸுக்கு இப்படி ஒரு விளக்கமும் இருக்கிறது என்று தனது உரையொன்றில் குறப்பிடுகிறார். அதாவது,  இந்த ஹதீஸை அபூபக்ரா என்ற ஸஹாபி முதன்முதலில் கூறியது ஜமல் யுத்த சமயமாகும். எனவே,  அந்த சமயத்தின் அரசியல் நோக்கத்திற்காக இந்த ஹதீஸ் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது,  பெண் தலைமை வகிக்கக் கூடாது என்ற கருத்தில் நபியவர்கள் இதனைப் பயன்படுத்தவில்லை. வேறு ஒரு கருத்தை உணர்த்த இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அதனை முன்வைத்த ஸஹாபி தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அதனைப் பயன்படுத்தியிருக்கலாம். அதனால் இந்த ஹதீஸின் விளக்கம் வேறுவகையில் புரியப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

மேற்சொல்லப்பட்ட நான்கு வகையான விளக்கங்களினதும் சரி பிழைகளுக்கு அப்பால்,  இந்த ஹதீஸின் பிரயோகம் குறித்து இமாம்கள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பது புரிகிறது. எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து மற்றைய நிலைப்பாடுகளை முற்றாக மறுத்தல் சாத்தியமற்றுப் போகிறது.

4) பெண் எப்பொழுதும் உணர்ச்சிபூர்வமானவள்,  அதனால் கஷ்டமான சமயங்களில் திடமாய் செயற்பட அவளால் முடியாது,  பெண் படைப்பியல்பிலேயே பலவீனமானவள்,  என்று சிலர் கருதுவர். தமது இந்தக் கருதுகோளைத் தான் நபியவர்கள் இவ்வாறு கூறியிருப்பதாய் நினைக்கின்றனர். பெண்கள் குறித்து நல்ல செய்தி சொல்லுங்கள்,  அவர்கள் வளைந்த விலா எழும்பினால் படைக்கப்பட்டிருக்கின்றனர். விலா எழும்பின் மேற்பாகமே அதிக வளைவு கொண்டது. அதனை நேராக்க முற்பட்டால் உடைந்துவிடும்…” (புஹாரி,  முஸ்லிம்) இதே கருத்தில் இன்னும் விளக்கமாக வேறு சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் பெண் பலவீனமானவள்,  உணர்ச்சிமிகுந்தவள்,  வாழ்வின் கஷ்ட நிலையில் அவளால் சீராக செயற்பட முடியாது என்ற விளக்கம் பெறப்படுகிறது.

கலாநிதி அலி கரதாஇ அவர்கள்,  இந்த ஹதீஸ் பெண்ணின் பலவீனத்தை சுட்டவில்லை. மாற்றமாக ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான இயல்பு வேறுபாடு ஒன்றைக் குறிக்க வருகிறது என்கிறார். கலாநிதி ஸலாஹ் சுல்தான் அவர்கள் இந்த வேறுபாடு குறித்துப் பேசும் பொழுது,  ஆண் இயல்பில் அதிகம் முன்னோக்கிப் பார்ப்பான்,  இலக்குகளில் கவனம் செலுத்துவான். ஆனால் பெண்; இயல்பில் பரந்து எல்லாப் புறமும் பார்ப்பாள். பக்கத்தில் இருப்பவர்களின் நிலைமைகளில் அதிகம் கவனம் செலுத்துவாள் என்றார்கள்.

உண்மையில் இந்த வேறுபாட்டின் காரணமாக ஆணுடைய பார்வையில் பெண்  பலவீனமாகத் தென்படுகிறாள். உண்மையில் அது பலவீனமல்ல. ஏனெனில் அல்குர்ஆன் இந்த கருதுகோளுக்கு முற்றிலும் முரண்பட்ட பெண்மாதிரிகளை உதாரணமாகத் தந்திருக்கிறது. மூஸா (அலை) அவர்களது தாயார் மற்றும் சகோதரி குறித்து அல்குர்ஆன் சூறதுல் கஸஸில் பேசுகிறது. குழந்தையை ஒரு பெட்டியில் போட்டு ஆற்றில் விட்ட தாயாரின் மனதைரியத்தையும்,  இக்குழந்தையைப் பின்தொடர்ந்து சென்று பிர்அவ்னின் வீட்டாரிடத்தில் தைரியமாக குழந்தையைப் பராமரிக்க ஒருவரைக் காட்டித் தரட்டுமா? என்று சூழ்நிலையை அழகாய்க் கையாண்ட சகோதரியையும் பற்றி அல்குர்ஆன் பேசுகிறது. 

இந்த சம்பவம் பெண்கள் கஷ்டமான நிலைகளில் நிதானமிழந்து விடுபவர்கள் அல்ல,  பெண் என்பதால் மாத்திரம் அவ்வாறு நடைபெறாது என்பதையே காட்டுகிறது. அதுபோல் மர்யம் (அலை),  ஆஸியா (அலை) போன்றவர்களின் உதாரணங்களிலும் இந்த உண்மையைக் காணலாம். ஸஹாபிப் பெண்களில் கதீஜா (றழி),  ஆயிஷா (றழி),  உம்மு அமாரா (றழி) என பலநூறு உதாரணங்களைக் காணலாம். அவை ஒவ்வொன்றும் பெண் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல என்ற உண்மையையே உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பெண்கள் குறித்த ஏராளமான தவறான மனப்பதிவுகளில் சிலவற்றை மாத்திரமே  உதாரணத்திற்காக இங்கு பேசியிருக்கிறேன். இவை பெண்கள் குறித்து எமது பார்வைகளில் நிகழ  வேண்டிய மாற்றங்கள் பற்றிய சில முக்கிய உண்மைகளைத் தொட்டுச் செல்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வில் ஆணும் பெண்ணும் சமம் என்பதன் பொருள் என்ன,  என்பது குறித்துப் பார்க்கலாம். அல்லாஹ்வே போதுமானவன்.