Thursday, April 18, 2019

உங்கள் தெரிவை எங்கே மேற்கொள்ளப் போகிறீர்கள்?


திருமண வாழ்வை எதிர் நோக்கியிருப்பவர்களுக்கு
(சகோதரிகளுக்கானது)
திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடைதேட வேண்டிய கேள்விகளுள் நான்காவது எங்கே?” என்ற கேள்வி. இதற்கான பதில் எவ்வாறு அமைவது பொருத்தமானது என்பது தொடர்பில் கடந்த அமர்வில் சகோதரர்களை மைய்யப்படுத்தி சில ஆலோசணைகளைப் பரிமாறி இருந்தேன். இன்ஷா அல்லாஹ் இன்றைய அமர்வில் சகோதரிகளை மைய்யப்படுத்தி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

திருமண வாழ்வில் நுழையவிருப்பவர்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேடும் பயணத்தில் எப்போது? ஏன்? யார்? போன்ற கேள்விகளுடன் எங்கே? என்ற கேள்வியையும் முக்கியமாகக் கேட்க வேண்டியிருக்கிறது. கடந்த அமர்வில் சகோதர்களை நோக்கி இந்தக் கேள்விக்கான நியாயங்களையும் அதற்கான விடைகளையும் ஆலோசித்த பொழுது, உறவுகள்,  அறிமுக வட்டம்,  ஓரே பணியில் இருப்போர்,  ஒரே இயக்கத்தின் உள்ளே தெரிவு இடம் பெறுதல்,  சொந்த ஊரில் தெரிவு செய்தல் போன்ற ஐந்து கோணங்களில் இதற்கான விடைகள் ஆலோசிக்கப்பட்டன. உண்மையில் சகோதரிகளைப் பொறுத்தவரையிலும் இந்த ஐந்து பரப்புக்களை விட்டும் வெளியில் அவர்களது தெரிவு அமைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானது. எனவே அங்கே சொல்லப்பட்ட ஆலோசணைகள் எல்லாம் சகோதரிகளுக்கும் பொருந்தும். அவர்கள் விடயத்தில் தீர்மானம் எடுப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மேற்சொல்லப்பட்ட பரப்புக்களில் நின்று பொருத்தமான துணையைத் தெரிவு செய்யும் வேலையைச் செய்யலாம்.
 
இருந்த போதிலும் சகோதரிகள் விடயத்தில் சகோதரர்களைப் போலன்றி திருமண விடயத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஏலவே கூறப்பட்டது போல் திருமண விடயத்தில் தீர்மானம் எடுப்பது பல சமயங்களில் அவர்களது கைகளில் இல்லை. அதுபோல்,  பெண்கள் நேரடியாக தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடும் நடைமுறையும் எமது வழக்கில் இல்லை. அந்தவகையில் இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு,  எங்கே என்ற வினாவுக்கான விடையைத் தேடும் விடயத்தில் சகோதரிகள் தொடர்பான குறிப்பான நான்கு விடங்கள் பற்றி சற்று ஆலோசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது விடயம்,  ஒரு பெண் சுயதேர்வில் ஈடுபடலாமா?  என்ற விடயம். அதாவது,  தனது வாழ்க்கைத் துணை பற்றிய முடிவை தானே எடுப்பதையும் தனது துணையைத் தானே தேடும் முயற்சியில் ஈடுபடுவதையுமே இந்தக் கேள்வி குறிக்கிறது. இங்கு இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று ஒரு பெண் தனது துணையை தானே தெரிவு செய்து கொள்ளும் உரிமை தொடர்பானது. இரண்டு,  ஒரு பெண் தனக்குரிய துணையைத் தேடும் பணியை நேரடியாகத் தானே மேற்கொள்ளும் சமூக நிலை தொடர்பானது. இதில் முதலாவது சட்டம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் இரண்டாவது சமூகக் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இவை குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதுதான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணை பற்றிய முடிவை சுயமாக எடுப்பது தொடர்பான சட்ட நிலைப்பாட்டில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கிறது. உண்மையில் அந்த சட்டக் கருத்து வேறுபாட்டை விவாதிப்பது இந்த இடத்தில் நோக்கமல்ல. இது அதற்குரிய இடமும் அல்ல. மாற்றமாக இஸ்லாம் வலியுறுத்தும் பொது உண்மையை விளங்கிக் கொள்ள முற்படுவதே முக்கிய நோக்கம். அந்தவகையில் வாழ்க்கைத் துணை குறித்த ஒரு பெண்ணின் சுய முடிவு பற்றிய இமாம்களின் வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கின்ற பொழுது,  சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இஸ்லாம் இதனை உரிமை சார்ந்த ஒன்றாகப் பார்த்தலை விடவும் பொறுப்புடமை சார்ந்த ஒன்றாகவே அதிகம் பார்க்கிறது. ஏனெனில் பொறுப்புடமை உரிமையை விடவும் கனதி கூடியது. அந்தவகையில் ஒரு பெண்ணுக்கான துணைத்தெரிவு என்பது ஒரு பொறுப்பான பணி. அது சில விடலைத்தனமான மனவெழுச்சிகளால் மாத்திரம் நடைபெறுவதாக அமைந்து விடக் கூடாது. அதுபோல் எந்த விதமான நிர்ப்பந்தங்களும் இன்றி பூரண மனவிருப்பத்துடன் நடைபெறுவதாகக் காணப்படல் வேண்டும். அதுபோல் பகைமைகள் மற்றும் மனமுறிவுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் சுமூகமாக நடைபெறக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தப் பெறுமானங்கள் பேணப்படும் வகையில்தான் இஸ்லாம் துணைத் தெரிவை விளங்கப்படுத்தியிருப்பதை இமாம்களது வாதங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்தவகையில் தனது துணையைத் தெரிவு செய்யும் அடிப்படை உரிமை பெண்ணுக்கு இருக்கிறது,  ஆனால் அது பெற்றோரின் அல்லது பாதுகாவலர்களின் பொறுப்புடமையை இல்லாமல் செய்து விட மாட்டாது. அதுபோல்,  பெண்ணின் மன விருப்பத்திற்கு மாற்றமாக பெண்ணை நிர்ப்பந்திக்கும் உரிமையும் பெற்றோருக்குக் கிடையாது. மிகச் சரியான தீர்வை நோக்கி தனது பிள்ளையை வழிநடாத்தும் தார்மீகப் பொறுப்பு பெற்றோர்க்கு இருக்கிறது.
அடுத்து,  ஒரு பெண் தனது துணையைத் தேடும் பணியைத் தானே சுயமாக மேற்கொள்ளலாமா? என்பது. மேலே பேசியது துணை குறித்த தீர்மானம் பற்றியது. இங்கு பேசுவது துணையைத் தேடும் வேலை பற்றியது. உண்மையில் இதுவும் ஷரீஅத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. நபியவர்களிடத்தில் ஸஹாபிப் பெண்கள் நேரடியாகவே வந்து திருமண முன்மொழிவை முன்வைத்தமையைக் காண்கிறோம். ஆனால் இதனை சட்டப் பார்வை ஊடாக அணுகுவதை விடவும் சமூகக் கலாச்சாரப் பின்னணியில் இருந்து பார்ப்பதே பொறுத்தமானது. அந்தவகையில் இலங்கை சூழலைப் பொறுத்தவரையில் விதிவிலக்கான சில சூழ்நிலைகள் தவிர்த்து,  ஒரு பெண் நேரடியாக தனக்கான துணையைத் தேடும் பணியைச் செய்வதில்லை. ஆனால் இரகசியமாக காதல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. அல்லது ஒரு ஆண் மீது பெண்ணுக்கு நியாயமான ஒரு விருப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன்போது அந்தப் பெண் ஆணிடத்தில் நேரடியாக தனது திருமண விருப்பத்தை வெளியிடும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

இவை போன்ற சூழ்நிலைகளில் சகோதரிகளுக்கான எனது சில ஆலோசணைகள், ஒரு பெண் தனது துணைத் தெரிவில் சுயதீர்மானம் மேற்கொள்வதில் தவறில்லை,  ஆனால் நீங்கள் மிகுந்த நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய இடம் இது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உளவியல் அறிஞர் கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் சொல்லும் ஒரு எச்சரிக்கை இருக்கிறது,  அதாவது,  தன்னிடத்தில் நேரடியாக வந்து விருப்பத்தைச் சொல்லும் பெண்ணுடன் காதல் தொடர்பை வைத்துக் கொள்ள ஆண்கள் தயங்க மாட்டார்கள்,  ஆனால் அவளை மனைவியாக ஆக்கிக் கொள்வதற்கு ஒன்றிற்குப் பல தடவை யோசிப்பார்கள் என்கிறார்.

இந்த இடத்தில்தான் ஒரு பெண் தனது கண்ணியத்தை இழந்து விடாதிருக்க வேண்டும். நீங்கள் நேரடியாகச் சென்று விருப்பம் தெரிவிப்பது மட்டுமல்ல உங்கள் பார்வைகள் பேச்சுக்கள் சைகைகள் எதுவும் நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்ற செய்தியை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது கண்ணியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஷரீஅத்தில் ஆகுமா? இல்லையா? என்பதை விடவும். கண்ணியமான ஒரு சமூக சூழலில் இதனைக் கைக்கொள்வதில் பிரச்சினையில்லாதிருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் அபாயங்கள் நிறையவே கலந்திருக்கிறது. எனவே தான் அக்ரம் ரிழா அவர்கள் அந்த எச்சரிக்கையைச் சொல்லியிருக்கிறார்கள். அல்குர்ஆன் பெண்ணைப் பார்த்து ஆண்களுடன் சிணுங்கிப் பேச வேண்டாம் என்ற தடையுத்தரவிற்குச் சொல்லும் நியாயத்திலும் இந்த உண்மையைக் கண்டு கொள்ளலாம். அல்குர்ஆன் கூறுகிறது,  “நீங்கள் சிணுங்கிப் பேசாதீர்கள் ஏனெனில் அது உள்ளத்தில் நோயுள்ள ஆணிடத்தில் ஆசையை வளர்த்து விடும்,  மாற்றமாக நேர்மையான வார்த்தை பேசுங்கள் (அஹ்ஸாப் - 32) என்கின்றது. இந்த வசனம் ஒரு உளவியல் உண்மையைச் சொல்கிறது. அதாவது பெண் தரப்பிலிருந்து பச்சைக் கொடி சமிக்ஞை வராமல் ஒரு ஆணுக்கு தவறு செய்யும் தைரியம் வரமாட்டாது. எனவே பெண்களே உங்களது கண்ணியத்தை நீங்களே இழந்து கொள்ளாதீர்கள் என்பதைத்தான் அல்குர்ஆன் கூறுகிறது. அந்த எச்சரிக்கைதான் இந்த இடத்திலும் சொல்லப்படுகிறது.

அப்படியானால் என்ன செய்வது என்ற ஒரு கேள்வி தோன்றலாம்,  அதாவது நேரடியாக ஒரு ஆணிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிப்பது தவறில்லை எனின் அதற்கான வழி என்ன? இங்கு தான் கதீஜா றழி அவர்களின் சிறந்த முன்மாதிரியிருக்கிறது. தான் நேரடியாக நபியவர்களிடம் செல்லாமல் தனது நெருக்கமான உதவியாளர் மூலமாக நபியவர்களது விருப்பத்தை அறிந்து கொள்ள முற்பட்டார்கள். அதாவது உங்கள் விருப்பத்தை உங்களை நன்கு புரிந்து கொண்ட,  உங்களை நேசிக்கின்ற ஒருவர் மூலம் தெரிவிப்பது உங்கள் கண்ணியத்தைக் காக்க உதவும். இதற்கு மிகவும் பொருத்தமானவர் உண்மையில் உங்கள் தாய்தான். தாயுடன் உங்கள் திருமண வாழ்வு குறித்து மனம் விட்டுப் பேசுங்கள். தாய்மார்களும் தமது வளர்ந்த மகளுடன் தோழமையுடன் உறவாடக் கற்றுக் கொள்ள வேண்டும். மகளது விருப்பு வெறுப்புக்களைப் புரிந்து வழிகாட்ட வேண்டும். தாய் இல்லாத போது,  சகோதரி இல்லாத போது நெருங்கிய உறவு என்று நெருக்கமான,  உங்களை நேசிக்கின்ற,  உங்களைப் புரிந்து கொண்ட,  உங்கள் விடயத்தில் பேசுவதற்கு உரிமையுள்ளவர்கள் ஊடாகக் கையாள முற்படுங்கள். சமவயது நண்பர்கள் ஊடாகக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருங்கள. ஆர்வ மிகுதியில் அவர்கள் தவறிழைத்து விட வாய்ப்பிருக்கிறது. ஏன் உங்களையே ஏமாற்றிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு விடயத்தில் எப்பொழுதும் கவனமாக இருங்கள்,  நீங்கள் தனித்து நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை,  ஆனால் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் தெரியாமல் இரகசியமாக எதனையும் செய்ய வேண்டாம். ஷெய்த்தான் எங்களை வழிகெடுப்பதற்கான முக்கிய வாயில்களில் இதுவும் ஒன்று. பெற்றோருடன்,  குடும்பத்துடன் ஆலோசியுங்கள், அவர்களது ஆசீர்வாதமும் உடன்பாடும் துணைத் தெரிவில் பரகத்தைக் கொண்டு வரும்.

இரண்டாவது விடயம்,  ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் திருமண வாய்ப்புக்கள் அதிகமாக வருகின்ற பொழுது,  தீர்மானம் எடுப்பது இலகுவானது. ஏற்கனவே கூறப்பட்டது போல்,  உறவுகள், அறிமுக வட்டம்,  ஒரே பணியிடம்,  ஒரே இயக்கம்,  ஒரே ஊர் என்ற பல்வேறு வித்தியாசப்பட்ட இடங்களில் இருந்து வருகிறது எனின்,  முன்னைய அமர்வில் கூறப்பட்டது போல் முற்படுத்தல் என்பது தமது நலன் பொறுத்தப்பாடு போன்ற காரணிகளை வைத்தே அமைவது நல்லது.

அடுத்து,  சில பெண்களுக்கு திருமண வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே வரமுடியும். வருகின்ற வாய்ப்புக்களும் முடிவுகள் இன்றி காணப்படும். அல்லது இல்லை என்ற முடிவு தெளிவாகக் கிடைத்திருக்கும். ஒரு புறம் வயது ஏறிக் கொண்டிருக்கும்,  ஆனால் திருமண வாய்ப்பு மட்டும் எப்போது வரும் என்ற எந்த நிச்சயமும் இல்லாமல் இருக்கும். இந்த நிலையில் இருக்கும் நன்கு படித்த பல சகோதரிகளை நான் அறிவேன். முடிவு தெரியாமல் இந்தக் காலம் நீடிக்கின்ற பொழுது,  பலர் கவலை,  விரக்தி,  மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்குள் விழுந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக தனது உறவுகளில் அல்லது அறிமுக வட்டத்தில் அல்லது பணியிடத்தில் தன்னை விடவும் வயதில் குறைந்தவர்களுக்குத் திருமணம் நடக்கின்ற பொழுது,  இந்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கிறது. இவர்களுக்கு தெரிவு எங்கே என்பதை விடவும் வாய்ப்பே வருவதில்லை என்பதுதான் பிரச்சினை. இவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசணைகள் சில இருக்கின்றன.

1.            அல்லாஹ்வில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். வாழ்க்கைத் துணை என்பது அவனது ரிஸ்க்,  அது கடலின் அடியாழத்தில் இருந்தாலும் உங்களுக்குரிய ரிஸ்க்கை அவன் கொண்டுவந்து தருவான் என்று நம்புங்கள். அல்குர்ஆன் கூறுகிறது உங்களது ரிஸ்கும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவைகளும் வானத்தில் இருக்கிறது (தாரியாத் - 23). அதாவது அவை அனைத்தும் அல்லாஹ்வின் கையில் இருக்கிறது. எனவே அவனில் நம்பிக்கை வையுங்கள் என்பதையே இந்த வசனம் கூறுகிறது.

2.            உங்களை விடவும் வயது குறைந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் நடக்கிறது எனக்கு நடக்கவில்லையே என்று ஏங்காதீர்கள்,  திருப்தி கொள்ளுங்கள். உங்களை விடவும் இக்கட்டான நிலையில் இருப்பவர்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நாற்பது வயது கடந்த பின்னரும் திருமணம் நடக்காதவர்கள்,  ஏன்? திருமணமே நடக்காது என்று சொல்லுமளவுக்கு உடல் ஊணமுற்றவர்கள்,  இவர்களை நினைத்துப்பாருங்கள்,  நீங்கள் எவ்வளவு பெரிய அருளில் இருப்பதாய் உணர்வீர்கள். நபியவர்கள் கூறினார்கள் உங்களை விடவும் தாழ்ந்தவர்களைப் பாருங்கள் உங்களை விடவும் உயர்ந்தவர்களைப் பார்க்காதீர்கள்,  அதுதான் நீங்கள் அல்லாஹ்வின் அருளை குறைத்து மதிப்பிடாமல் இருக்க மிகவும் பொருத்தமான வழி என்றார்கள், (முஸ்லிம்).

3.            உலகில் தாமதம் என்பதன் பொருள் என்ன தெரியுமா? மனிதப் பலவீனங்களின் காரணமாக ஒரு விடயம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்காமல் காலம் பிந்தி நடைபெறுவதுதான் தாமதம். மனித சக்திக்கு அப்பால்பட்டு,  நாம் எதிர்பார்ப்பதை விடவும் பிந்தி ஒரு விடயம் நடைபெறுமாக இருந்தால் அதற்குப் பெயர் தாமதமல்ல,  மாற்றமாக இன்னும் காலம் கனியவில்லை என்பதுவே அதன் பொருள். உங்களது வாழ்வில் திருமணம் தாமதமாவது என்பது உண்மையில் தாமதமல்ல,  ஏனெனில் அது உங்களது சக்திக்கு உற்பட்ட விடயமல்ல,  உங்களது பலவீனத்தால் நடைபெறும் ஒன்றும் அல்ல. எனவே தாமதமாகிறது என்று கவலைப்படாதீர்கள்,  யாரையும் குறை சொல்லாதீர்கள். அல்குர்ஆன் கூறுகிறது நாம் ஒவ்வொரு விடயத்தையும் ஒரு அளவுடன்தான் படைத்திருக்கிறோம் (அல்கமர் - 49). இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு கலாநிதி யூசுப் அல்கர்ளாவி அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ் இந்த உலகில் ஒவ்வொரு செயலும் நடைபெறுவதற்கு ஒரு காலத்தை வைத்திருக்கின்றான். அதற்குரிய காலத்தில்தான் அது நடைபெறும். காலம் முந்தியோ அல்லது பிந்தியோ நடைபெறமாட்டாது. ஏனெனில் உரிய காலத்தில் நடைபெறுவதில்தான் அதன் நலன் தங்கியிருக்கிறது என்கிறார்;. உங்களது திருமணமும் இவ்வாறுதான்.

4.            தன்னம்பிக்கை கொள்ளுங்கள்,  உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு அழகு இருக்கிறது. ஈர்ப்பு இருக்கிறது. பன்முகத் தன்மை என்பது அல்லாஹ்வின் படைப்பில் உள்ள ஒரு அற்புதம். ஒரு நல்ல மனைவியாக இருப்பதற்கு உங்களுக்கு உள்ள அடிப்படைத் தகுதியை குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்களையே நீங்கள் தாழ்வாக நினைத்து,  வருகின்ற சம்பந்தம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து விடாதீர்கள். உங்களது நலனையும் பொறுத்தப்பாட்டையும் பார்த்தே முடிவு செய்யுங்கள். தலையை நிமிர்த்தி தைரியமாக மார்க்கம் இல்லாதவர் எனக்குத் தேவையில்லை என்று மறுத்து விடுங்கள்.

5.            திருமண வாய்ப்புக்கள் கைகூடாத போது,  உங்கள் குடும்பத்தினரையும் குடும்ப சூழலையும் குறை கூறாதீர்கள். அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் என்று திருப்தி கொள்ளுங்கள். குடும்பத்தைக் குறை கூறுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. நல்லெண்ணம் வையுங்கள். பலவீனங்களைச் சகித்துக் கொள்ளுங்கள்.

6.            உங்களையே நீங்கள் ஒரு முறை சுயவிசாரணை செய்து பாருங்கள். உங்களது திருமணத்தின் தாமதத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் காரணமாக இருக்கிறேனா?  இந்த சுயவிசாரணையும் முக்கியம். ஒரு தவறு நடப்பதற்கு எப்பொழுதும் புறக்காரணிகள் மாத்திரம் காரணமாக இருக்க மாட்டாது. உங்களுக்குள்ளேயே உங்களால் மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்படாத மௌனமான காரணங்கள் எத்தனையோ காணப்பட முடியும். உதாரணத்திற்கு சிலவற்றை அடையாளம் காட்டுகிறேன்.

              வாழ்க்கைத் துணை பற்றிய உங்களது நிபந்தனைகள் கடுமையானவையா? அல்லது இலகுவில் அடைந்து கொள்ள முடியுமான வகையில் பிராக்டிகலாக அமைந்துள்ளனவா? ஏனெனில் சில சமயம் எமது நிபந்தனைகளே எம்மை விட்டும் நிறையப் பேரைத் தூரமாக்கி விடும்.

              ஆண்கள் பற்றியும் திருமணம் பற்றியும் தாய்மை பற்றியும் கொண்டிருக்கும் அல்லது வெளியிடும் முதிர்ச்சியுறாத கருத்துக்கள் பிறர் உங்களை நெருங்குவதைத் தடுக்கும். சில சமங்களில் எமது முறையற்ற வாசிப்புகள் இவைபோன்ற மனநிலைகளைக் கட்டமைத்து விடுகிறது. இப்படிப் பேசுவதை சில சமயம் பெருமையாகக் கூட நினைப்பதுண்டு. ஆனால் உள்ளத்தில் உள்ள உண்மையல்ல அது,  நாங்களாக எங்களுக்குக் கட்டமைத்துக் கொள்ளும் போலித் தோற்றம் அது. அதிலிருந்து வெளியே வரவேண்டும். என்றைக்கும் உண்மையும் இயல்பான நடத்தையுமே நலனைக் கொண்டு வரும்.

              உங்களுக்குள் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். வலிந்த கர்வமும் வேண்டாம் வலிந்த நளினமும் வேண்டாம்,  வலிந்த சகஜமும் வேண்டாம் வலிந்த நாணமும் வேண்டாம். உங்களை உண்மையாக வெளிப்படுத்தப் பழகுங்கள். அப்பொழுதுதான் பிறர் உங்களை மிகச்சரியான தராசில் நிறுத்துப் பார்க்க முடியும்.

              மார்க்கப்பற்று இருப்பதில் தவறில்லை,  ஆனால் அது அளவு மீறிச் சென்று ஆண் ஒதுக்குதலையும் மத ஒதுக்குதலையும் செய்யாதிருக்க வேண்டும். இஸ்லாம் தீவிரத்தை என்றைக்கும் வரவேற்பதில்லை. அதுபோல் பெண்ணுக்குரிய உரிமையைப் பேசுவதில் தவறில்லை. ஆனால் எல்லை மீறிப் போய் அது ஆண்வெறுப்பாய் வெளிப்படக் கூடாது. இவை போன்ற தீவிரங்களும் எங்களுக்கான துணையை எங்களை விட்டும் தூரமாக்குவதற்கான காரணிகளாக மாற முடியும். நடுநிலையே என்றும் நலனானது.

மூன்றாவது விடயம்,  சில சகோதரிகளைப் பார்த்திருக்கிறேன்,  குறித்ததொரு கலாசாலையில் கற்றவர்களைத் தான் முடிப்பேன் என்று உறுதியாக இருப்பார்கள். அது என்ன மந்திரமோ மாயமோ தெரியாது. சிலர் அதில் உண்மையிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சிலரது வெற்றியைப் பார்க்கும் பொழுது,  இப்படி ஒரு நிபந்தனையை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் தோன்றுகிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால்,  குறித்ததொரு கலாசாலையில் கற்றவரை மாத்திரம்தான் கணவராக ஏற்றுக் கொள்வேன் ஏனையவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றவகையான ஒரு பிடிவாதமாக அது மாறும் எனின்,  நிச்சயமாக அது தெரிவு விழுமியங்களுக்கு முரணாணதாகும். 

ஒரு தடவை என்னிடம் ஒரு தாயார் வந்தார். நல்ல மார்க்கமும் பணிவும் கல்வியும் உள்ள ஒரு பெண்மணி. இலங்கையின் பிரபலமான ஒரு இஸ்லாமியக் கலாசாலையைக் குறிப்பிட்டு அதில் கற்ற ஒருவரை தனது மகளுக்கு கணவராகப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். காரணத்தை நான் கேட்காமலேயே சொன்னார். எனது மகளும் மார்க்கம் படித்திருக்கிறார்,  நல்ல ஒழுக்கமும் மார்க்க ஈடுபாடும் இருக்கிறது,  எனவே மார்க்கம் உள்ள ஒருவர் கிடைத்தால் குடும்பம் நன்றாக இருக்குமல்லவா? என்றார். பின்னர் ஒரு தடவை ஆறுதலாக அந்தத் தாயிடம் சொன்னேன்,  மார்க்கம் என்பதை குறித்த கலாசாலையில் மட்டும் தேடாதீர்கள். அதில் கற்றவர்களில் நல்ல மார்க்க ஈடுபாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள்,  மார்க்க ஈடுபாடு குறைந்தவர்களும் இருக்கிறார்கள். வேறு துறைகளில் கற்ற அதே நேரம் மார்க்க ஈடுபாடு கொண்ட நல்ல இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்றேன். இங்கு முக்கியம் என்னவெனின் மார்க்கம் என்பதுதான் நிலையான காரணியாக இருக்க வேண்டும். அதனை சில கலாசாலைகளுடன் மட்டுப்படுத்தி,  மாப்பிள்ளை தேடும் கலாச்சாரம் அவ்வளவு பொறுத்தமானதாக இல்லை. ஏனெனில் குறித்ததொரு கலாசாலையில் கற்றவர்தான் தேவை என்று போய் எதிர்மறையான விளைவை வாழ்க்கையில் கண்டமைக்கான உதாரணங்களும் இருக்கின்றன. இறுதியில் அவப்பெயர் அந்த நபருக்கல்ல,  கலாசாலைக்கு. எனவே மாறும் நிபந்தனைகளையும் மாறா நிபந்தனைகளையும் தெளிவாக வேறுபடுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான் எனது உபதேசம்.

நான்காவது விடயம்,  இன்றைய நாட்களில் துணை தேடும் முறைமைகளில் முக்கியமான ஒன்று பெண் தேவை அல்லது மாப்பிள்ளை தேவை என்ற வகையிலான விளம்பரங்கள். இது இன்று தனியான வலைத்தளங்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வளர்ச்சியடைந்துள்ளன. இத்தகைய விளம்பரங்களில் அதிகமாக அழகியவசதியான போன்ற அடைமொழிகள் ஆரம்ப நாட்களில் அதிகம் காணப்பட்டாலும் தற்போது மார்க்கப்பற்றுள்ளதஃவா ஈடுபாடுள்ள போன்ற அடைமொழிகளும் பெரிதும் இடங்களைப் பிடித்துக் கொண்டுள்ளன. இதுவொரு நல்ல முன்னேற்றம்தான். இதன் பொருள் அழகிய மற்றும் வசதியான போன்ற அடைமொழிகள் பிழையானவை என்பதல்ல. அவற்றுடன் மாத்திரம் சுறுங்கி விடக் கூடாது என்பதுதான்.

இந்த வழிமுறையில் சில நன்மைகள் இருக்கின்றன. அதாவது,  இடம்,  துறை போன்ற பல்வேறு விடயங்களில் எங்களுக்குப் பொருத்தமான துணையை அடையாளம் காண்பதற்கான விரிந்த வாய்ப்பு ஒன்று கிடைக்கிறது. ஒப்பீட்டு ரீதியில் இந்த நலன் சகோதரிகளை விடவும் சகோதரர்களுக்கு பயன் கூடியது. அதுபோல் திருமண வாய்ப்புக்கள் குறைந்த சகோதரிகளைப் பொறுத்தவரையிலும் இந்த வழிமுறை ஊடாக வாய்ப்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். குறிப்பிட்ட ஒரு வட்டத்தினுள் மாத்திரம் சூழன்று சலித்துப் போகாமல் விரிந்து தேடுதலை மேற்கொள்வது வாய்ப்புக்களை எங்களுக்கு முன்னே அதிகமாகக் கொண்டுவரும்.

இந்த முறைமையில் நன்மைகள் இருப்பது போலவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில இடங்களும் இருக்கின்றன. முதலாவது பொருத்தப்பாட்டுக் காரணிகள் முக்கியமாகப் பார்க்கப்படல் வேண்டும். ஏனெனில் வருகின்ற வாய்ப்பு அறிமுகமற்ற புதிய ஒரு தொடர்பாக இருக்கின்ற பொழுது,  இலகுவாக பொருத்தப்பாடுகளை அளந்து பார்த்துக் கொள்ள முடியாது. மாத்திரமன்றி இரு தரப்பையும் அறிந்து கொண்ட ஒரு நடுவர் காணப்படாத ஒரு நிலையும் இங்கு ஏற்படும். இதனாலும் பொறுத்தப்பாடுகளைப் பார்த்துக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். இரண்டாவது,  ஏமாற்றுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அந்தவகையில் முடிந்த வரையில் தீரவிசாரித்தல் என்பது முக்கியமானது. மூன்றாவது,  எப்பொழுதும் முறைமைகளில் மாத்திரம் நம்பிக்கை வைக்க வேண்டாம். பத்திரிகையில் போட்டு விட்டோம் என்பது மாத்திரம் உங்களுக்கு நல்ல துணையைக் கொண்டு வந்து தர மாட்டாது. நீங்கள் எந்தளவுக்கு அல்லாஹ்வுடன் நெருக்கமாக இருக்கிறீர்களோ அந்தளவுக்குத்தான் உங்களுக்கு பொருத்தமான துணை அமைவார் என்பதை என்றும் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஸாலிஹானவராக இருந்தால் நிச்சயமாக உங்களது துணையும் ஸாலிஹானவராக அமைவார். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.

அல்லாஹ் எம்மைப் பொருந்திக் கொள்ளட்டும்.