Monday, June 30, 2014

ரமழான் மாற்றத்திற்கான காலம்

ரமழான் மாதம் மாற்றத்திற்குரிய ஒரு காலம். அதனால் தான் ரமழான் ஆரம்பிக்கின்ற பொழுது, அந்த மாற்றத்தின் முதல் வடிவம் வானத்தில் நிகழ்கிறது. நபியவர்கள் கூறியுள்ளது போல்,  ரமழான் வருகின்ற போது,  சுவர்க்கத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன. நரகத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்படுகின்றன. ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான். இவை வானளவில் நடைபெறுகின்ற மிகப்பெரிய மாற்றங்கள்.

ரமழானில்,  எமது வாழ்வின் பௌதீக ஒழுங்கிலும் எம்மையறியாமல் மாற்றங்கள் நிகழ்கின்றன. எமது நித்திரை நேரசூசி,  உணவு நேரசூசி, இயற்கை உபாதைகள் நேரசூசி எல்லாமே மாறுகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சூழல்களில் வேலை நேரங்கள் மாறுகின்றன. ஏன் பாதைகளில் வாகன நெரிசல் நேரம் கூட மாறுகின்றது.

இவ்வளவும் மாறுகின்ற பொழுது மனித நடத்தைகளில் மாத்திரம் ஏன் மாற்றம் நிகழக் கூடாது?

நிச்சயம் மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அதனால்தான் அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் இறங்கியிருக்கிறது. அல்குர்ஆன் மாத்திரமன்றி தௌராத்,  இன்ஜீல் கூட ரமழான் மாதத்தில் இறங்கியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன. இந்த வேதங்கள் அனைத்தும் மனிதனது நம்பிக்கை,  சிந்தனை,  நடத்தை என்பனவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இறக்கப்பட்டவை. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் முகமாகவே இவை ரமழானில் இறக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் ரமழான் மாற்றத்திற்குரிய காலம்.

அல்லாஹ்தஆலா நோன்பின் நோக்கத்தைப் பற்றிக் கூறும் பொழுது,  “நீங்கள் தக்வா உடையவர்களாக மாறுவதற்காக” (பகரா) என்கிறான். இந்த தக்வா என்பது ஒரு மனப்பாங்கு மாற்றம்.

இதற்கப்பால் நடத்தை மாற்றத்தைக் குறிக்கும் முகமாகவே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். பொய் சொல்வதையும்,  போலியாக செயற்படுவதையும் யார் விடவில்லையோ அவர் தனது உணவையும் பாணத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லைஎன்றார்கள். (புஹாரி)

மற்றொரு சமயம் இவ்வாறு கூறினார்கள் நோன்பு நோற்றுவிட்டால்,  தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடாதீர்கள். பிறரை முட்டாள் என்று கருதிவிடாதீர்கள். (அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்) உங்களை ஒருவர் ஏசினாலோ அல்லது சண்டையிட வந்தாலோ நான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்று கூறி ஒதுங்கிக் கொள்ளுங்கள்என்றார்கள். (முஸ்லிம்)

ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு நோற்றால், உங்களது செவியும்,  பார்வையும்,  நாவும் பொய்யை விட்டும் பாவங்களை விட்டும் நோன்பிருக்க வேண்டும். பணியாளர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், உங்களது நோன்பு கண்ணியமாகவும் அமைதியாகவும் காணப்படல் வேண்டும். நீங்கள் நோன்பு நோற்ற ஒரு தினமும் நோன்பு நோற்காத ஒரு தினமும் ஒரே மாதிரியாக அமையாது பார்த்துக் கொள்ளுங்கள்என்றார்கள். (இப்னு அபீஷைபா)

பாவங்களை மாத்திரமன்றி அற்பத்தனமான நடத்தைகளையும் களைந்து ஒரு கண்ணியமான மனிதனை நோன்பு தயார்படுத்துகிறது. இத்தகைய ஒரு உயர்ந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய காலம்தான் ரமழான் காலம்.


இன்று முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்கள் வேண்டுமென்றே பரப்பப்படும் ஒரு சூழலில் நாம் அற்பமான செயல்களைக் களைந்து,  எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற மாற்றத்தை இந்த ரமழான் எங்களுக்குச் சொல்கிறது என்பதை இவ்வருட ரமழான் செய்தியாய் உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Thursday, June 19, 2014

அழுத்கமைப் பிரதேச இனவன்முறை

சில அவதானங்கள்

கடந்த 15, 16-06-2014 ம் திகதிகளில் இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள அழுத்கமை,  அதனை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன. இதுபற்றிய கண்டனங்களும் விமர்சனங்களும் குற்றம் சுமத்தல்களும் தொடர்ந்தும் பல தரப்புக்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச மட்டத்திற்கும் செய்திகள் விரைவாகச் சென்றுவிட்டன. இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்களும் ஸ்தலத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்துள்ளார்.

இத்தனைக்கும் மத்தியில் எனது அவதானத்தை சில விடயங்கள் தொட்டுச் சென்றன. அவற்றை இங்கு உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1.            இது இலங்கைக்கு, சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் பெரும் அபகீர்த்தியை உண்டு பண்ணும் ஒரு நிகழ்வாகும். இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாடு. அந்த வகையில் நீதி, சமாதானம், பன்மைத்துவம் போன்ற விழுமியங்கள், நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான காரணிகளாகும். அதிலும் குறிப்பாக முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னர்,  யுத்தக் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள், விசாரணைகள் என பல்வேறு விடயங்கள் உலகளவில் பேசுபொருளாய் இருக்கும் ஒரு சமயத்தில் நாட்டுக்கு மென்மேலும் இழுக்கை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகவே இது காணப்படுகிறது. நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட ஒரு குடிமகன் நிச்சயம் இதுபோன்ற ஒரு காரியத்தில் ஈடுபட மாட்டான் என்பதே நியாயமாய் சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ளும் விடயமாகும்.

2.            இனரீதியான வேறுபாடுகளை விசாலப்படுத்தி பகைமையையும் மோதலையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகின்ற அரசியல் அணுகுமுறை ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு வழி வகுக்குமா? என்பது குறித்து சற்று சீரியஸாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அபிவிருத்தி என்பது பொருளாதாரம்,  பௌதீகம் சார்ந்தது மாத்திரமல்ல மாற்றமாக உயர்ந்த மனப்பான்மைகளும் உயர் நடத்தைகளும் கூட அபிவிருத்தி சார்ந்தவைதான் என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும். மாத்திரமன்றி பொருளாதார பௌதீக அபிவிருத்திப் பயணத்தின் வெற்றிக்கும்,  பன்முகத்தன்மையை ஏற்றல், சமாதானம்,  நீதி போன்ற உயர் மனப்பான்மைகள் அவசியப்படுகின்றன. ஆசியாவின் ஆச்சரியமாய் நாம் எழுந்து நிற்க வேண்டும் எனின்,  இந்த இனமோதல் அணுகுமுறை ஒரு போதும் பயனளிக்காது என்பதே உண்மை.

3.            அழுத்கமை நிகழ்வின் ஆரம்பத்தைப் போய்ப் பார்க்கின்ற பொழுது,  ஒரு பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் என்ற நியாயத்தின் மீது முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு ஒரு சம்பவம் நிகழவில்லை என்பதுவே உறுதியான தகவல். அதனை சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவே உறுதிப்படுத்தியுமுள்ளார். எனவே,  ஒரு பொய்யின் மீது இந்த தாக்குதல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 

பொய்,  ஏமாற்று,  போலித்தன்மை இவை எந்த மதத்திலும் ஆசிர்வதிக்கப்படாதவை. அதிலும் குறிப்பாக இங்கு சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட,  இஸ்லாம் பௌத்தம் ஆகிய இரண்டிலும் மிகவும் வலுவாக இந்தப் பண்புகள் கண்டிக்கப்பட்டிருக்கின்றன. மதங்கள் உயர் போதனைகளை முன்வைத்த போதிலும்,  அவை மக்களது நடத்தைகளில் எந்தளவு வேரூன்றியிருக்கின்றன என்ற கேள்வி இங்கு எழுகின்றது. நல்ல குணங்களும் பண்பாடுகளும் வெறும் ஏட்டளவிலேயே இருக்கின்றன. அவை மனித நடத்தைகளாக மாற்றம் பெறவில்லை. மனதில் எந்தவிதமான குறுகுறுப்புமின்றி ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி ஒரு இரத்தக் களரி உருவாக்கப்பட்டது எனின்,  அந்த மனித மனங்கள் எந்தளவு சீர்கெட்டிருக்கின்றன என்பது புரிகிறது.

4.            அழுத்கமை நிகழ்வில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து மிகவும் வலுவாக ஒரு முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. அதுதான் இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸும் இராணுவமும் நியாயமாக நடக்கவில்லை,  வன்முறையாளர்களுக்கு இடமளிக்கின்ற வகையிலேயே அவர்களது நடவடிக்கைகள் அமைந்தன என்று குறிப்பிட்டிருந்தார்கள். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் அழுத்கமை முதலாவது அல்ல. இதற்கு முன்னர் பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் இதே முறைப்பாட்டை நாம் பார்த்திருக்கிறோம். இலங்கையில் மட்டுமன்றி அயல் நாடுகளில் நடைபெற்ற இதேபோன்ற சம்பவங்களிலும் இதே முறைப்பாட்டை நாம் பார்த்திருக்கிறோம்.

இங்கு ஒரு விடயம் புரிகிறது. ஒரு இனவன்முறையை சாதாரணமாக ஒரு இனக்குழுவால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. அரச தரப்பின் கவனயீனத்தின்போது, அல்லது அரச தரப்பின் ஆதரவின் போது மாத்திரமே ஒரு இன வன்முறையை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும். அந்தவகையில் அழுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையில் முதல் குற்றவாளி அரசாங்கம்தான் என்று கூறினால் அது மிகையான ஒரு கருத்தல்ல என்று நான் நினைக்கிறேன். ஏனெனில்,  நாட்டில் சட்டம்,  ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. நேரடியாக இந்த விடயத்திற்குப் பொறுப்பான பொலிஸும் இராணுவமும் உடனடியாகப் பதில் அளிக்காமையும்,  உரிய முறையில் கடமையைச் செய்யாமையுமே இங்கு சேதங்கள் இந்தளவு அதிகரித்தமைக்குக் காரணமாகும். பிறர் மீது பொறாமை கொள்வோர்,  சேதம் விளைவிக்க நினைப்போர்,  பஸாது செய்வோர் உலகில் நிச்சயம் இருப்பார்கள். மனிதர்களில் சிலர் இவ்வாறு இருக்கிறார்கள் என்பதை அல்குர்ஆனே சுட்டிக் காட்டுகின்றது. ஆனால் அவர்களை தீங்கு செய்யாமல் தடுக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. இந்த தார்மீகப் பொறுப்பில் அரசாங்கம் தவறு விட்டிருக்கிறது. எனவே,  சரிசெய்யப்பட வேண்டிய இடம் எது என்பது புரிகிறது.

5.            ஏற்கனவே மூன்றாவது அம்சத்தில் மனித மனங்கள் சீர்கெட்டு விட்டமை பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்கு மாற்றமான சூழ்நிலை முழுமையாக இல்லை என்றும் நாம் கூற முடியாது. அங்கே தலைவர்கள்,  மதகுருக்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் சீர்பெற்று இருக்க வேண்டிய மனங்கள் சீர்கெட்டுவிட்டன. ஆனால் சாதாரண பொதுமக்கள் மத்தியில் இன்னும் மனிதாபிமானம் வாழ்வதை அழுத்கமை சம்பவத்தின்போது பார்க்க முடியுமாக இருந்தது. பொதுமக்கள் மாத்திரமன்றி பல சகோதர இன தலைவர்களிடத்திலும் இதனைக் காணக் கிடைத்தது. அவர்கள் பகைமையை விரும்பவில்லை. வன்முறையை ஆதரிக்கவில்லை. இந்த நல்ல மனிதப் பண்புகள் இன்னும் வாழ்கின்றன.

இது எங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறது. எப்பொழுதும் இன முரண்பாட்டை விரும்புகின்றவர்கள் ஒரு சிறிய தொகையினர்தான். நாம் அவர்களைத்தான் மிகச் சரியாக இனம்கண்டு தூரமாக்க வேண்டும். அத்தகையவர்கள் தலைவர்களாகவோ ஆள்பவர்களாகவோ வந்து விடக்கூடாது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் ஒற்றுமையை விரும்புகின்றவர்கள். தீமையை விரும்பாதவர்கள். இவர்கள் நாம் வெறுப்பதற்குரியவர்கள் அல்லர். இவர்களுடனான சகவாழ்வை இஸ்லாம் என்றைக்கும் வழியுறுத்துகின்றது.

6.            நடந்து முடிந்த சம்பவத்தை மாத்திரமன்றி,  நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் எதிர்ப்புப் போராட்டத்தைப் பார்க்கின்ற பொழுது எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. இவர்கள் இதன்மூலம் எதனை அடைந்து கொள்ளப் போகிறார்கள்?  நிச்சயமாக இது மனித குலத்திற்குப் பயனளிக்கப் போவதில்லை. நாட்டுக்கும் பயனளிக்கப் போவதில்லை. எந்த இனத்திற்கும் இது பயனளிக்கப் போவதில்லை. அழிவும்,  அவமானமும்,  பின்னடைவும் மாத்திரமே இங்கு எஞ்சிவிடப் போகின்றன. இப்படி இருந்தும் இதனை ஏன் செய்கிறார்கள்?  இதனால் இவர்களுக்கு என்ன இலாபம்?  துல்லியமாய் என்னால் விடைகாண முடியாத கேள்விகள் இவை.

ஆனால் ஒரு விடயம் மட்டும் புரிகிறது. இவற்றிற்குப் பின்னால் இருப்பவர்கள் எதனை அடைந்து கொள்ள நினைக்கிறார்களோ அது நிச்சயமாய் அடையப் பெற மாட்டாது. இங்கு அநியாயத்தின் மூலம் ஒன்றை அடைந்து கொள்ள நினைக்கிறார்கள். அதற்கு அல்லாஹ் இடம்தர மாட்டான். அல்லாஹ்தஆலா சொல்கிறான் அவர்கள் சதி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சதி செய்கிறான். அல்லாஹ் அவர்களை விடவும் சிறந்த சதிகாரன்” (                ஆல இம்ரான் - 54             )

சதிகாரர்கள் தாம் விரிக்கின்ற வலையில் தாமே சிக்கிக் கொள்வார்கள். நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் அந்த இடத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.


அல்லாஹ்வே போதுமானவன்.

Tuesday, June 3, 2014

இஸ்லாத்தில் சிறுவர் உழைப்பு

ஒரு தர்பியாப் பார்வை

சிறுவர் உழைப்பு,  சிறுவர்களை வேலைக்கமர்த்தல் போன்ற தலைப்புக்கள் இன்று பரவலாக சார்பான எதிரான வாதங்களைக் கொண்ட ஒரு விடயமாகும். இந்த வாதப் பிரதிவாதங்களை கூர்ந்து அவதானிக்கின்ற பொழுது இரண்டு விடயங்கள் சற்று கவனயீர்ப்பைப் பெறுகின்றன.
ஒன்று உழைப்பு என்பது வளர்ந்தவர்களுக்கு மாத்திரம் உரியது என்ற ஒரு மனப்பதிவு மேலோங்கியிருப்பது புரிகிறது. 

இரண்டாவது சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது உழைக்கும் உரிமைக்கும் ஏனைய கல்வி உரிமை, விளையாடும் உரிமை, அநியாயம் இழைக்கப்படாமை போன்றவற்றிற்கும் இடையில் சமநிலை பேணப்படாமல் போகலாம் என்ற அச்சநிலை ஒன்று பெரிதும் மேலோங்கி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இவை தொடர்பிலான இஸ்லாமியப் பார்வைகளை சற்று அலசிப் பார்த்த பொழுது,  மேற்கூறப்பட்டது போன்ற தடுமாற்றங்கள் இன்றி மிகவும் தெளிவான,  சமநிலையான நிலைப்பாடுகளை அவதானிக்க முடிந்தது. உண்மையில் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் எந்த விவகாரமாக இருப்பினும் தெளிவான ஒரு நிலைப்பாட்டையே நாம் அங்கு நிச்சயமாகக் காணலாம். ஏனெனில் அது அல்லாஹ்வின் வழிகாட்டல்.

இஸ்லாத்தின் சமநிலைப்படுத்தல்களைப் பேசுவதற்கு முன்னர்,  சிறுவர்,  சிறுவர் உழைப்பு போன்ற சொற்கள் உணர்த்தும் கருத்துக்கள் குறித்து சற்று கவனத்தைச் செலுத்துவது பொறுத்தமானது.

பொதுவாக சிறுவர் என்பதை பிறப்பு முதல் பருவமடையும் வரையில் உள்ள காலமாகவே இமாம்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலான இமாம்கள் பருவமடைதலை பதினைந்து வயது என்கின்றனர்.

இத்துடன்,  இன்னும் இரண்டு வகையான சொற்கள் இஸ்லாத்தின் பிரயோகத்தில் காணப்படுகின்றன. ஒன்று தம்யீஸ் மற்றயது ருஷ்த் என்பன. இவற்றில் தம்யீஸ் என்பது நன்மையையும் தீமையையும் பிரித்தறிய முடியுமான பருவம் என்பர். பெரும்பாலும் இதனை ஏழு வயது என வரையறை செய்துள்ளனர். அந்தவகையில் பிறப்பு முதல் ஏழு வயது வரையான தம்யீஸ் அடையாத பருவத்தையும் ஏழு வயது முதல் பருவ வயதான பதினைந்து வயது வரையான தம்யீஸ் அடைந்த பருவத்தையும் உள்ளடக்கிய பருவமே சிறுவர் எனப்படுகிறது.

ருஷ்த் என்ற சொல்,  ஒரு விடயத்தை சுயமாக மேற்கொள்ளும் ஆற்றலைக் குறிக்கின்றது. இது பருவம் சம்பந்தப்பட்டது என்பதை விடவும் முதிர்ச்சி சம்பந்தப்பட்டதாகும். இந்த முதிர்ச்சி நிலை பருவ வயதிற்கு முன்னர் ஏற்படவும் முடியும். பின்னர் ஏற்படவும் முடியும்.

சிறுவர் தொழில் செய்தல் என்பதன் கருத்து சிறுவர் ஒருவர் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ ஒரு பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுதலாகும். இது கூலி வழங்கப்படுவதாகவும் அமைய முடியும். கூலி வழங்கப்படாமல் அமையவும் முடியும். இது எல்லா விதமான தொழில் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகும். (ஹைபா மஹ்பூழ், சிறுவர் தொழில் செய்தலும், அவர்களது சமூக வளரச்சியில் அதன் பங்கும்)

மேற்கூறப்பட்ட பின்புலங்களுடன், சிறுவர் உழைப்பு தொடர்பிலான சில பார்வைகளை இங்கே பரிமாறிக் கொள்ளலாம்; என்று நினைக்கிறோம்.
நபியவர்களுக்குப் பணியாளனாக தனது சிறிய வயதில் அனஸ் (றழி) அவர்கள் பத்து வருடங்களாக செயற்பட்டிருக்கிறார்கள் என்பது பிரபல்யமான ஓர் உண்மை. இந்த நிகழ்வு எமக்குச் சொல்லும் மிக முக்கிய உண்மை என்னவெனில் சிறுவர்கள் உழைப்பில் ஈடுபடல் என்பது தடை செய்யப்பட்ட ஒரு விடயமல்ல என்பதுடன்,  அது அவர்களது உரிமையுமாகும். நபியவர்களது சிறு பராயத்திலும்,  ஸஹாபாக்களின் சிறுபராயத்திலும் உழைப்பு அவர்களது வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது என்பதைக் காணலாம்.

இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாமிய ஷரீஆ வல்லுனர்கள் ஒரு மனிதன் உரிமைகளையும் கடமைகளையும் பெற்றுக் கொள்ளும் தகைமையை எப்பொழுது அடைந்து கொள்வான் என்பது குறித்துப் பேசும் பொழுது உயிருடனிருத்தல்என்ற விடயத்தையே முக்கிய அடிப்படையாகக் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் கருவில் இருக்கும் சிசுவும் கூட சில உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறது என இஸ்லாமிய சட்டத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

எனவே,  மனிதனுக்குரிய எல்லா உரிமைகளையும் போல்,  உழைக்கும் உரிமையையும் பெற்றுக் கொள்ளும் தகைமை,  உயிருடன் இருக்கின்ற அனைவருக்கும் காணப்படுகின்றது என்பதே இஸ்லாத்தின் பார்வையாகும். ஒருவர் சிறுவர்என்பதால் அந்த உரிமை மறுக்கப்பட்ட ஒரு நிலையை நாம் இஸ்லாத்தில் காண முடியாது.

 இங்கு ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உரிமைகளையும் கடமைகளையும் பெறுவதற்கான அடிப்படைத் தகுதி உயிருடனிருத்தல் என்று குறிப்பிட்டோம்,  இதன் பொருள் உயிருடன் இருக்கும் ஒவ்வொருவரும் உரிமைகளையும் கடமைகளையும் பெறத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்,  என்பது மாத்திரமேயாகும். 

ஆனால் அவற்றை நிறைவேற்றுமாறு அவனிடம் கேட்டுக் கொள்ளப்படுவது எப்போது? அல்லது அந்த உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் அவன் வகை கூறக் கூடியவனாக கருதப்படுவது எப்போது? இதற்கான தகைமையைத்தான் நாம் தம்யீஸ் அடைதல் என்போம். ஏற்கனவே கூறப்பட்டது போல் நன்மை தீமைகளை வேறு பிரித்து அறிந்து கொள்ளக்கூடிய பருவத்தையே நாம் தம்யீஸ் என்போம். இது ஏழு முதல் பதினைந்து வயது வரையான காலமாகும். எனவே ஒருவன் தம்யீஸ் அடைகின்ற பொழுது பொறுப்புக் கூறுவதற்கான அடிப்படைத் தகுதியைப் பெற்றுக் கொள்கிறான்,  ஆனால் இந்த பொறுப்புக் கூறுதல் முழுமையான வடிவத்தைப் பெறுவது பருவ வயதை அடைகின்ற போதாகும்.

இந்த அடிப்படையை வைத்து நோக்கும்போது சிறுவர்களுக்கு உழைக்கும் உரிமை காணப்படுகிறது என்பது மாத்திரமன்றி,  அவன் நேரடியாக ஈடுபட்டு உழைக்க முடியுமான ஒரு பரப்பு காணப்படுகிறது என்பதுடன்,  அவனது உழைப்புக்கு சமூக,  சட்ட ரீதியான அங்கீகாரமும் இருக்கின்றது என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்து மிக முக்கிய மற்றொரு உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுதான் பிள்ளை வளர்ப்பு என்பது. பிறப்பு முதல் பருவ வயதை அடையும் வரையிலான காலப்பகுதியில் ஒரு பிள்ளையை வாழ்வை மேற்கொள்வதற்காகத் தயார்படுத்துவதையே பிள்ளை வளர்ப்பு என்று பொதுவாகக் குறிப்பிடுவர்.

இங்கு வாழ்வு என்பதை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளில் விளங்கப்படுத்துகிறது. ஒன்று இபாதத் எனும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டிருத்தல். இரண்டாவது இமாரத் எனும் பூமியை அபிவிருத்தி செய்தல். மூன்றாவது கிலாபத் எனும் மனித இனத்திற்கு வழிகாட்டுதல். 

இவற்றுள் இரண்டாம் பகுதியான பூமியை அபிவிருத்தி செய்தல் என்ற சிந்தனையின் ஒரு வடிவமாகவே இந்த உழைப்பு என்ற அம்சம் காணப்படுகிறது. அந்தவகையில் ஒரு பிள்ளை வாழ்வைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனின், உழைப்பு என்ற தொழிற்பாட்டிலும் அதற்கு ஒரு அனுபவம் அவசியப்படுகிறது. எனவே,  கற்றுக் கொள்ளுதல் பயிற்சி பெறுதல் என்ற அடிப்படையில் ஒரு பிள்ளை உழைப்பில் ஈடுபடுதலை இஸ்லாம் தடை செய்யவில்லை. மாத்திரமன்றி பருவ வயதிற்கு முன்னரே அவர்களிடம் ஒரு முதிர்ச்சி அவதானிக்கப்படும் எனின்,  அவர்களிடம் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் கூட ஒப்படைக்கலாம் என கீழ்வரும் அல்-குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கூறும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அநாதைகள் பருவ வயதை அடையும்வரை அவர்களைப் பராமரியுங்கள். அவர்களிடம் சுயமாய் செயற்படும் முதிர்ச்சியை அவதானித்தால் அவர்களது சொத்துக்களை அவர்களிடமே ஒப்படைந்து விடுங்கள்” (நிஸா – 06) என்று அல்-குர்ஆன் கூறுகிறது.

இந்தவசனத்தின்படி,  அந்த முதிர்ச்சி பருவ வயதிற்கு முன்னர் ஏற்படவும் முடியும். பின்னர் ஏற்படவும் முடியும்.

மேற்கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படைகளில் நின்று நோக்கும் பொழுது உழைத்தல்,  தொழில் செய்தல், சம்பாதித்தல், செல்வ விருத்தியில் ஈடுபடல் என்ற எந்த விடயமாக இருப்பினும் அது எல்லா மனிதர்களுக்கும் உரிய உரிமை என்பது போல் சிறுவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. அது சுயமான உழைப்பில் ஈடுபட்டாலும் சரி,  பிறிதொருவரால் வேலைக்கமர்த்தப்பட்டாலும் சரி. ஆனால் இந்த உரிமை ஏனைய உரிமைகளை மீறாதிருக்க வேண்டும் என்பது மிக முக்கிய நிபந்தனையாகும். 

அந்தவகையில் இவ்விடயத்தை சமநிலைப்படுத்தும் அமைப்பில் இஸ்லாம் இதற்கு சில வரையறைகளை முன்வைத்துள்ளது.

1.            சிறுவர்கள் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் தொழில் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் காணப்படல் வேண்டும். இந்த நிபந்தனை சிறுவர்களுக்கு மாத்திரமன்றி எல்லோருக்குமான பொதுவிதியாக இருப்பினும் இங்கு குறிப்பாக இந்த நிபந்தனை முன்வைக்கப்படக் காரணம்,  ஹராமான செயற்பாடுகளில் அவர்களை அறியாமல் பிறர் அவர்களை ஈடுபடுத்தி விட வாய்ப்பு அதிகம் என்பதனாலாகும்.

2.            தொழிலில் ஈடுபடும் சிறுவன் தம்யீஸ் அடைந்திருத்தல் வேண்டும். ஏனெனில்,  ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒருவன் ஒரு விடயத்தை நிறைவேற்றுமாறு கேட்கப்படுவதற்கும்,  வகை கூறுவதற்குமான தகைமை தம்யீஸ் அடைதல் என்பதாகும்.

3.            பெற்றோர்களின் அல்லது பாதுகாவலரின் அனுமதியுடனேயே செயற்பட வேண்டும்.

4.            குறித்த தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தெளிவான ஒரு பயனை அந்தச் சிறுவன் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைதல் வேண்டும். அது ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்வதாகவோ,  அல்லது ஒரு வருமானத்தை ஈட்டிக் கொள்வதாகவோ காணப்பட முடியும்.

5.            அவர்கள் ஈடுபடப்போகும் தொழில்வகை,  காலம்,  கூலி என்பன மிகத் தெளிவானவையாகக் காணப்படல் வேண்டும்.

6.            சிறுவர் தொழிலில் ஈடுபடுவதோ அல்லது ஈடுபடுத்தப்படுவதோ எந்தவகையிலும் அவரது கல்வியை மறுதலிப்பதாகவோ அல்லது அதில் குறைபாட்டை ஏற்படுத்துவதாகவோ அமையக் கூடாது.

7.            அவர்களது ஒழுக்கம்,  பண்பாடுகளுக்கு ஊறு விழைவிக்கும் வகையிலும் அந்தத் தொழில் காணப்படக் கூடாது.

8.            சிறுவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று விளையாட்டு. இதற்கான போதிய அவகாசம் வழங்கப்படல் வேண்டும். விளையாட்டு மறுக்கப்படும் வகையில் அந்தத் தொழில் அமையக் கூடாது.

9.            சிறுவர்களது உடல்,  மன, அறிவு வளர்ச்சி நிலைகள் அவதானிக்கப்பட்டு அவற்றிற்கு பொறுந்தி வரக் கூடியவையாக அந்தத் தொழில் காணப்படல் வேண்டும். அவர்களது இயலுமைகளைத் தாண்டியதாக ஒரு போதும் அமைந்துவிடக்கூடாது.


இறுதியாக, சிறுவர்கள் கட்டாயமாக தொழில் செய்ய வேண்டும். அதுதான் அடிப்படை என்று உண்மையில் இஸ்லாம் கூறவில்லை. மாற்றமாக அவர்களது தொழில் செய்யும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்று கூறுவதுடன்,  வாழ்வுக்கான தர்பியத் என்ற வகையில் அது அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே, எமது பிள்ளைகளையும் நாம் உழைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக உருவாக்குவதில் கவனம் செலுத்த முடியும். அல்லாஹ் எம்மை ஏற்றுக் கொள்வானாக.