Tuesday, April 23, 2013

இஸ்லாமியச் சமூக மாற்றக் கோட்பாட்டில் “இர்ஷாதுல் முஜ்தமஃ” - சில குறிப்புகள்



இர்ஷாதுல் முஜ்தமஃஎன்ற சொல்லுக்கு சமூகத்தை வழி நடாத்துதல் என்று பொருள் கூறலாம். சமூக மாற்றம் பற்றிய கருத்தியலுக்குள்ளே தவிர்க்க முடியாத ஒரு சொற்பிரயோகம் இது என்றால், அது மிகையாகாது. சமூக மாற்றக் கோட்பாட்டுப் பரப்பில் தனிமனிதன் குடும்பம் என்ற கட்டங்களையடுத்து முன்றாவது இடத்தை இது பெறுகிறது.

குறிப்பு 01


‘இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது, தற்போது செயல்பாட்டில் இருக்கும் சமூகக் கட்டமைப்புகள் ஒழுங்குகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு ஒரு புதிய இஸ்லாமியச் சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல் என்று பொருள் கொள்ளப்படுகிறதா? அல்லது இருக்கின்ற கட்டமைப்புகள் ஒழுங்குகளைப் பயன்படுத்தி, அவற்றினூடாக இஸ்லாமியச் சமூகக் கட்டமைப்பு அடையப்பெற வேண்டும் என்று பொருள் கொள்ளப்படுகிறதா?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கின்ற வகையிலேயே இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள், “இர்ஷாதுல் முஜ்தமஃஎன்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இர்ஷாத் என்ற சொல்லின் கருத்து வழிகாட்டல் என்பதாகும். அது புதிதாய் உருவாக்குதல் என்ற பரப்பைவிடவும் சீர்திருத்தம் என்ற பரப்பையே அதிகம் உணர்த்துகிறது.

இமாமவர்கள் இந்தச் சொல்லுக்கு விளக்கமளிக்கும்போது, இவ்வாறு கூறுகிறார்கள்:

“சமூகத்திற்கு வழிகாட்டுதல், அது சமூகத்தில் நன்மைகளைப் பரப்புதல், தீமைகள் பாவங்களுக்கு எதிராகப் போராடல், நல்ல செயல்களின் பால் தூண்டுதல் வழங்கல், நன்மையை ஏவுதல், நல்ல செயல்களை முன்வந்து முதலில் செய்தல், இஸ்லாமியச் சிந்தனையின்பால் பொதுக் கருத்தை ஈர்த்தல், எப்போதும் பொதுவாழ்க்கையின் வெளிப்பாடுகளை இஸ்லாமியச் சிந்தனை சார்ந்ததாக வைத்திருத்தல் போன்ற அனைத்தும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். அத்துடன் ஒரு பொது அமைப்பு என்ற வகையில், இது ஜமாஅத் மீதும் கடமையாகும்என்றார்கள்.

இந்த வார்த்தைகள் சமூகத்தின் கட்டமைப்பை முழுமையாக மறுதலிக்கச் சொல்லவில்லை. மாற்றமாக, அவற்றில் பயனுள்ளதை அங்கீகரித்துப் பயனற்றதை அகற்றி, அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது, இங்கு வலியுறுத்தப்படும் கருத்தாகும்.
இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. அதாவது, அமுலில் உள்ள கட்டமைப்பைப் பயன்படுத்தி இஸ்லாமிய மாற்றத்தை அடைய வேண்டும் என்று சொல்லும்போது, அதன் மூலம் அமுலில் உள்ள கட்டமைப்பும் இஸ்லாமியக் கட்டமைப்புதான் என்ற அங்கீகாரம் நிச்சயமாக அதற்கு வழங்கப்படுவதில்லை. மாற்றமாக, அதில் இஸ்லாத்தின் போதனைகளுடன் முரண்படாத, பயனுள்ள விடயங்கள் மறுக்கப்படக் கூடாது. அவற்றை ஏற்று, குறைபாடுகள் முழுமைப்படுத்தப்படுவதன் மூலம் இஸ்லாமிய மாற்றம் அடையப்பெற வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

நபியவர்களது தஃவாவில் இரண்டு முக்கிய காலப் பகுதிகளான மக்கா, மதீனா காலங்களை சற்று உன்னிப்பாக அவதானித்துப் பார்த்தால், அந்த இரண்டு காலங்களிலும் அங்கு ஏற்கனவே ஒரு சமூக ஒழுங்கு காணப்பட்டிருக்கிறது என்பதையும், அந்த ஒழுங்குக்கு உள்ளே நின்று நபியவர்கள் எவ்வாறு ஒரு மாற்றத்தை மேற்கொள்ள முயன்றார்கள் என்பதையும் நாம் கண்டுகொள்ளலாம்.

அந்த வகையில், முதலில் மக்காவில் காணப்பட்ட சமூக ஒழுங்கிற்கு உள்ளேயிருந்து கொண்டு, அதில் மாற்றங்களைச் செய்வதற்கு நபியவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். அங்கு கோத்திர அடிப்படையிலான தலைமைத்துவ முறைமை காணப்பட்டமையை நபியவர்கள் மறுக்கவில்லை. மாற்றமாக, அவற்றிற்கிடையிலான பகைமையை மறுத்தார்கள். வெறியுணர்வை மறுத்தார்கள்.

அங்கு காணப்பட்ட பன்னாட்டு வியாபார முறைமையை மறுக்கவில்லை. ஆனால், பொருளாதார ஆதிக்கத்தையும் நீதியற்ற அடக்குமுறையையும் மறுத்தார்கள். அங்கு காணப்பட்ட ‘ஸுகுல் உக்காழ் எனும் கவிமன்றங்களையும் அறிவுமன்றங்களையும் நபியவர்கள் மறுக்கவில்லை. மாற்றமாக, அவற்றிலிருந்த ஆபாசத்தையும் ஒழுக்கச் சீர்கேட்டையுமே மறுத்தார்கள். அங்கு மக்களிடத்தில் காணப்பட்ட வீரத்தையும் விருந்தோம்பலையும் மறுக்கவில்லை. மாற்றமாக, அநியாயமாய் இரத்தம் சிந்துவதையும் ஹராமையும் வீண்விரயத்தையுமே மறுத்தார்கள். அவர்களது இறைநம்பிக்கையை மறுக்கவில்லை. மாற்றமாக, அதிலிருந்த ஷிர்க்கையே மறுத்தார்கள்.

இங்கு நபியவர்கள் ஒரு சமூகச் சூழலில் ஏற்கனவே காணப்படுகின்ற கட்டமைப்புகள் ஊடாக, அவற்றைப் பயன்படுத்தி, மாற்றங்களைச் செய்வதற்கு முயன்றிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், மதீனா சூழலைப் பொறுத்தவரையில் அங்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது. மக்கா சூழலில் நபியவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், மாற்றங்களை ஏற்படுத்தமுடியவில்லை. மதீனா சூழலில் மாற்றம் மிகத் தெளிவாக ஏற்படுத்தப்பட்டது. அங்கு ஒரு சமூகக் கட்டமைப்பை நபியவர்கள் உருவாக்கினார்கள்.

நபியவர்களின் தலைமையில், சஹாபாக்களை இணைத்த ஷூரா சபையுடன், பள்ளிவாசலை மத்தியத் தளமாகக் கொண்ட, ஏனைய சமூகங்களுடன் உடன்படிக்கையுடன் வாழுகின்ற ஓர் ஒழுங்கை ஏற்படுத்தினார்கள். இதுகூட ‘அவ்ஸ் ‘கஸ்ரஜ் கோத்திரங்களை இல்லாமல் செய்து உருவானதல்ல. மாற்றமாக, அவை அப்படியே இருக்க அவற்றிற்கு மேலால் உருவாக்கப்பட்டதாகும். இங்கு அவற்றுக்கிடையே, இருந்த பகைமையும் வெறியுணர்வும் அகற்றப்பட்டன. அதே நேரம் ஈமானும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் உயர் இலட்சியமும் அங்கு விதைக்கப்பட்டன.

மக்கா, மதீனா என்ற இரண்டு அணுகுமுறைகளிலும் ஒரு விடயத்தை நாம் அவதானிக்கலாம். அது, ஏற்கனவே காணப்பட்ட ஒழுங்கில் இருந்த பயனுள்ள விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய வாழ்வொழுங்குக்கு பாதகமாக அமையாதவை மறுக்கப்படவில்லை அல்லது உடனடியாக இல்லாமல் செய்யப்படாமல் கொஞ்சம் கால தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சமூக மாற்றம் என்பது ஏற்கனவே காணப்படுகின்ற சமூக ஒழுங்கை முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டு, முழுமையாக அனைத்தையும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதல்ல. மாற்றமாக ஏற்கனவே உள்ள ஒழுங்கினைப் பயன்படுத்தி, அவற்றினூடாக மேற்கொள்ளப்படுகின்ற மாற்றமாகும் என்பதே நாம் புரிந்துகொள்கின்ற கருத்தாகும். ஆனால், இங்கு இஸ்லாமிய வாழ்வொழுங்குக்கு முரணான, அதற்கு இடையூரான ஒரு விடயம் முழுமையாக மறுக்கப்பட வேண்டும் என்பதும், அதற்கு முறையான மாற்றீடுகள் கொண்டுவரப்படல் வேண்டும் என்பதும் ஒருபோதும் மறுக்கப்படமாட்டாது.


குறிப்பு 02


மேற்சொல்லப்பட்ட சிந்தனையை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள மற்றொரு உண்மையையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில், அமுலில் உள்கட்டமைப்பை அல்லது சமூக ஒழுங்கைப் பயன்படுத்தும்போது அதனை இஸ்லாமியச் சமூக ஒழுங்கு என்று சொல்வதில்லை என்று கூறினோம். காரணம் இஸ்லாமியச் சமூக மாற்றம் என்பது, ஓர் அடித்தளம் இன்றி எழுகின்ற ஒரு மாற்றமல்ல. அல்லது இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு என்பது இஸ்லாத்தைப் பின்பற்றி வாழுகின்ற தனிமனிதர்களையும் குடும்பங்களையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும்.

அந்த வகையில், சமூக மட்டத்தில் புதிதாய் உருவாக்கவும் சரி, சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும் சரி, ஒரு பலமான அடித்தளம் கண்டிப்பாக அவசியமானதாகும். அந்த அடித்தளம்தான் தனிமனிதர்களும் குடும்பங்களுமாகும். இவையிரண்டிலும் நிகழ்த்தப்படுகின்ற மிகச் சரியான உருவாக்கம்தான் ஒரு நிலையான இஸ்லாமியச் சமூக வாழ்வொழுங்கை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான அணுகுமுறையாகும். நபியவர்களது மக்கா கால தஃவாவில் இந்த ஒழுங்கை நாம் அவதானிக்கலாம். நபியவர்கள் மக்காவில் தனது தஃவாவைஆரம்பம் செய்தார்கள். அங்கு அவரது பணியில் நேரடியாக சமூக மட்டத்தில் நடைபெற வேண்டிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. ஏனெனில், அங்கு ஏற்கனவே அமுலில் இருந்த சமூக ஒழுங்கு பலமாகக் காணப்பட்டதுடன், அவர்கள் புறத்திலிருந்து வந்த எதிர்ப்புகளும் கடுமையானவையாகக் காணப்பட்டன. அவற்றை எதிர்கொள்வதற்கோ அல்லது அந்த சமூகஒழுங்கிற்கு முழுமையான ஒரு தீர்வை உடனடியாக வழங்குவதற்குரிய போதிய தயார்நிலையோ அப்போது நபியவர்களிடம் இருக்கவில்லை.

அதனால்தான் உங்களுக்குத் தலைமைத்துவம் தான் தேவை என்றிருந்தால் நாங்கள் தருகிறோம் இந்த தஃவாவை விட்டுவிடுங்கள் என்று குறைஷிகள் பேரம் பேசியபோதும் நபியவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். மக்காவில் நபியவர்களது தஃவா பெரியளவில் வெற்றி பெற்ற பரப்புக்கள் என்று நாம் அடையாளம் காணமுடியுமானவை தனிமனிதன் குடும்பம்; என்ற பரப்புகளாகும். உண்மையில் அதிகம் வெற்றி பெற்றன என்பதை விடவும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டன என்பதே மிகவும் பொறுத்தமான வார்த்தையாகும் என நினைக்கிறேன். இந்த உண்மையை அவர்களது சீராவில் மிகத் தெளிவாகக் காணலாம்.

அதனால் தான் மதீனாவில் ஒரு இஸ்லாமிய வாழ்வொழுங்கையும் அதற்குரிய கட்டமைப்பையும் உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கும், வருகின்ற சவால்களை தைரியமாய் எதிர்கொள்வதற்கும் இயலுமாக இருந்தது. அவர்களிடம் போதுமான மனிதவளம் காணப்பட்டது. போதுமானளவு அவர்கள் பயிற்றப்பட்டும் இருந்தார்கள். இஸ்லாமிய வாழ்வொழுங்கை எந்தத் தடையுமின்றி இலகுவில் அங்கிகரித்துச் செயற்படும் மனோநிலை அவர்களிடம் காணப்பட்டது.

இந்தப் பின்புலத்தைத்தான் சமூகமாற்றக் கோட்பாட்டில் இவ்வாறு சொல்வார்கள். மாற்றம் என்பது வேறிலிருந்து செய்யப்பட வேண்டியது. அது ஒரு நீண்ட கட்டம் கட்டமான செயற்பாடாகக் காணப்படும். அது தனிமனிதனில் இருந்து ஆரம்பித்து ஒரு முழுமையான சமூகக் கட்டமைப்பை நோக்கிப் பயணிக்கிறது. அரைவாசித் தீர்வுகளையும் ஒட்டுப் போடுதல்களையும் மாத்திரம் அது போதுமாகக் கருதுவதில்லை. ஒரே பாய்ச்சலில் இலக்கை அடைய நினைப்பதுமில்லை. இருக்கின்ற சமூக ஒழுங்கினுள் நுழைவதனால் அடிப்படை மாற்றத்தை மறந்து விடுவதுமில்லை.

இன்ஷா அல்லாஹ் மூன்றாம் குறிப்பு எமது நாட்டுச் சூழலுக்குரியது. அதனை அடுத்த அமர்வில் நோக்குவோம்.

Friday, April 5, 2013

சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் அறிக்கை


இலங்கைச் சூழ்நிலை குறித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வஅறிக்கை.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தார், அவர்களைப் பின்பற்றுவோர் அனைவர்மீதும் உண்டாவதாக

இன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு வரும் இனமுறுகல் நிலைகள் தொடர்பாக வெளிவரும் தொடர்ச்சியான செய்திகள், அறிக்கைகளை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் மிகுந்த கவலையுடன் அவதானித்து வருகிறது.

குறிப்பாக, முஸ்லிம்கள் மிகுதியாக வாழ்நதுவரும் மத்தியப் பகுதிகளில் இந்நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளில் தாக்கத்தை விளைவித்துள்ளதுடன், பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், நாட்டின் சில உயர்மட்டத் தலைவர்களின் அணுசரனையுடன் இயங்கிவரும் சில பௌத்த தீவிரவாதக் குழுக்களின் செயற்பாடுகளையும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் அவதானித்தே வருகிறது. பள்ளிவாசல்கள்மீதான தாக்குதல்கள், அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகள், முஸ்லிம் இளைஞர்கள்மீதான கெடுபிடிகள், முஸ்லிம் பெண்களுக்கு, பிறர் முன்னிலையில் இஸ்லாம் கடமையாக்கிய ஹிஜாப் ஆடை மீதான அத்துமீறல்கள் இவற்றில் சிலவாகும். இது மிகத் தெளிவாக நம்பிக்கை, மத அனுஷ்டானங்களின் மீதான சுதந்திரத்திற்கெதிரான அத்துமீறலாகும்.

அத்துடன், முஸ்லிம்கள் குறித்தும் அவர்களது இருப்பு குறித்தும் அவர்கள் பௌத்தர்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்ற தவறான கருதுகோளின் அடிப்படையில் பரப்பப்படும் வீண்வதந்திகள் குறித்தும், சில தீவிரக் குழுக்களால் முஸ்லிம் வியாபார நிலையங்கள்மீதும் அவர்களின் பொருளாதாரத்தின் மீதும் தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறது.

இலங்கையில் சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக சில இனவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தீவரவாத நடவடிக்கைகள் குறித்து சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கீழ்க்காணும் விடயங்களை வலியுறுத்துகிறது:

1. சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் பின்வருமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது:

சூழ்நிலையை அமைதிப்படுத்தப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். ஒரே தேசத்தின் மக்கள் என்ற வகையில் அவர்களிடையே உண்மையான பங்குபற்றலை உத்தரவாதப்படுத்துவதுடன், அவர்களிடையே சமூக அமைதியை பலமடையச் செய்தல் வேண்டும். இலங்கையின் சமூகக் கூறுகளிடையே உரிமைகளிலும், கடமைகளிலும், சமத்துவம் பற்றிய பிரக்ஞையை மேலோங்கச்செய்வதுடன், இனரீதியாகவோ மதரீதியாகவோ அவற்றுக்கிடையில் பாகுபாடு உருவாவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது. மதரீதியான வெறுப்புணர்வுகளை தூண்டி விடுபவர்களுக்கெதிராகவும், இனரீதியான குழப்பங்களை உருவாக்குபவர்களுக்கெதிராகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் அமைதியும் பாதுகாப்பும் சிறந்த முறையில் காணப்பட்ட ஒரு சூழ்நிலை காணப்பட்டிருக்கிறது. எனவே, சர்வதேச சட்டங்களும், எல்லா மதங்களின் வழிகாட்டல்களும் வலியுறுத்துவது போல், அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதும் அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். குழப்பங்கள் தோன்றி, அவை தலைதூக்காமல் இருப்பதில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடனும் உறுதியுடனும் செயற்பட வேண்டும். ஏனெனில், இதனால் விளையும் நஷ்டம் இலங்கையின் அனைத்துத் தரப்பினர்க்கும் உரியதாகும்.



  1. 2. அத்துடன் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் இதுபற்றிப் பேச வேண்டும் எனவும், முஸ்லிம் தரப்பையும் பௌத்த அமைப்புக்களையும் இணைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான குழுக்களை அமைத்து செயற்பட வேண்டுமென்றும், அதன் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடியதொரு நிரந்தர சகவாழ்வுக்கான வழிவகைகளைக் காண வேண்டுமென்றும், சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.


  1. 3. இலங்கை முஸ்லிம்களின் இருப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை வழங்குமாறு முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பையும், ஏனைய எல்லா சிவில் சமூக, தனியார், மனித உரிமை ஸ்தாபனங்களையும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கேட்டுக்கொள்வதுடன், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமைகள் விடயத்தில், தாம் அதிக அக்கறையுடன் காணப்படுகிறோம் என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்தும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

  1. 4. இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றும், ஒரேயணியாக நிற்க வேண்டும் என்றும், வன்முறையைத் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், சவால்களை எதிர்கொள்வதற்கு அவசியமான சட்டரீதியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், எதிர்ப்பு நடவடிக்கைகளை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா, உள்நாட்டில் வியாபாரப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதை விட்டுக்கொடுத்தமையை மதிக்க வேண்டும் என்றும், இலங்கை முஸ்லிம்களை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.

  1. 5. நீதி சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த சகவாழ்வையும், பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் இலங்கையில் நிலைநாட்டும் நோக்கில், நிலைமைகளை நேரடியாகக் கண்டறிவதற்காகவும், இது குறித்து அரசாங்கத்துடனும், அறிஞர்களுடனும் கலந்தாலோசிப்பதற்காகவும் ஓர் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்கிறது. ஏனெனில், சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் பரந்த அடிப்படையில் இந்த நாட்டின் நலனுக்காகவே செயற்பட நினைக்கிறது. அந்த வகையில் குடியுரிமையின் முழுமையான பயனை அனைத்துப் பிரஜைகளும் அனுபவிக்க வேண்டும் என்பதுடன், சம்பூரணமானதொரு அபிவிருத்தியை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்பதையே அது விரும்புகிறது. முஸ்லிம்கள், பௌத்தர்கள் என்றோ அரசாங்கம், பொதுமக்கள் என்றோ எந்த வேறுபாடுமின்றி அனைவரினதும் நலனையும் முன்னேற்றத்தையுமே சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.

  1. அல்குர்ஆன் கூறுகிறது: நீங்கள் நன்மையான விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பை வழங்கிக்கொள்ளுங்கள். தீமையான விடயங்களில் ஒத்துழைப்பு வழங்காதீர்கள். அல்லாஹ்வை  அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்மாஇதா- 02)


கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி
தலைவர்
கலாநிதி அலி கரதாகி
பொதுச் செயலாளர்


தோஹா22, ஜமாதுல் அவ்வல் - 1434
03-04-2013