Thursday, February 14, 2019

பிள்ளை வளர்ப்பு என்றால் என்ன?


பிள்ளை வளர்ப்பு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பல்வேறு கோணங்களில் பலர் பதில் தந்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் பொறுத்தமானது என நான் கண்ட வரைவிலக்கணத்தையே இங்கு கலந்துரையாட நினைக்கின்றேன்.

பிள்ளை வளர்ப்பு என்பது,  ஒரு பிள்ளை பிறந்தது முதல் சுயமாய் தீர்மானம் எடுத்து செயற்பட முடியுமான பருவத்தை அடையும் வரையில் மிகச் சிறந்த முறையில் வாழ்வை மேற்கொள்வதற்கு பிள்ளையைத் தயார்படுத்துவதைக் குறிக்கும்.

இந்த வரைவிலக்கணம் பல விடயங்களைப் பேசுகிறது. ஒரு தொடக்க காலத்தையும் முடிவுக்காலத்தையும் பேசுகிறது. சுயமாய்ச் செயற்பட முடியுமான ஒரு பருவத்தைப் பற்றிப் பேசுகிறது. வாழ்வு குறித்துப் பேசுகிறது. இந்த ஒவ்வொரு விடயத்தையும் கொஞ்சம் அலசிச் செல்வது பொறுத்தமாக அமையும்,  இன்ஷா அல்லாஹ்.

முதலில் பிள்ளை வளர்ப்புக் காலம். இங்கு குறிப்பாக பிறந்தது முதல்கொண்டே இவ்விடயம் ஆரம்பிப்பதாகக் சொல்லப்படுகிறது. எனவே ஒரு பிள்ளை கருவில் உள்ளபோது பிள்ளை வளர்ப்பு என்ற ஒரு விடயம் இல்லையா? என்ற ஒரு கேள்வி தோன்றலாம். உண்மையில் கருவில் உள்ள போது,  அங்கு பிள்ளைக்கு வாழ்வைக் கற்றுக் கொடுத்தல் என்ற விடயம் நடைபெறுவதை விடவும்,  அந்தப் பணியை சிறந்த முறையில் மேற்கொள்வதற்காகவும்,  கருவில் வளரும் பிள்ளையின் ஆரோக்கியம் பேணவும் தந்தையும் தாயும் தயார்படுத்தப்படுகின்ற ஒரு செயற்பாடே அங்கு பிரதானமாக நடைபெறுகிறது. இதனால்தான் பிள்ளை வளர்ப்பு என்பது பிறந்தது முதல் நடைபெறுகின்ற ஒரு பணியாக இங்கு அடையாளப்படுத்தப்பட்டது.

கோட்பாட்டு ரீதியான விளக்கங்களுக்கப்பால் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவெனின்,  குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாயும் தந்தையும் உளரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் அதனை வளர்க்கத் தயாராக வேண்டும். அதிலும் குறிப்பாக முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கின்ற பொழுது இவ்விடயம் இன்னும் முக்கியம் பெறுகின்றது. பல சமயங்களில் தாய் இயல்பிலேயே எளிதாக இந்த இடத்திற்கு வந்து விடுவாள். ஆனால் பாவம்,  அந்த இளம் தந்தையை,  தந்தையாய்த் தொழிற்பட மனதளவில் நிறையவே தயார்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் மனைவியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இது விரிவாகப் பேசப்பட வேண்டிய தனியான ஒரு பகுதியாகும்.

அடுத்து,  சுயமாய்த் தீர்மானம் எடுத்து செயற்பட முடியுமான பருவம் என்றால் என்ன?  இதுதான் பிள்ளை வளர்ப்பு என்ற பணி நிறைவு பெறும் கட்டமாகவும் காணப்படுகிறது. இந்தப் பருவத்தை அல்-குர்ஆன் ருஷ்த் என்ற சொல்லின் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறது. ருஷ்த் என்பது ஒரு வேலையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில் தெளிவுடன் காணப்படுவதனைக் குறிக்கும். அதாவது தெளிவான நிலை அல்லது சீரான நிலை என்று பொருள்படும்.

இந்தப் பருவத்தை இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் அஹ்லியது அதா என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் பொருள் ஒரு மனிதன் வெறுமனே உரிமைகளையும் கடமைகளையும் பெற்றவன் என்ற எல்லையைத் தாண்டி அவன் |வகைசொல்வதற்குரியவன்| என்ற நிலையை அடைவதாகும். இதனை இன்னும் சற்று விரிவாகக் கூறினால் ஒரு குழந்தை உயிர் பெறுகின்ற போதே  உரிமைகளையும் கடமைகளையும் பெற்றுக் கொள்வதற்குரிய அடிப்படைத் தகுதியை அது பெற்றுக் கொள்கிறது. ஆனால் அந்தக் கடமைகளை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை அந்தப் பிள்ளைக்கு எப்போது இடப்படும்?  அதுபோல் அந்தப் பிள்ளை தனது வார்த்தைகள் செயல்களுக்கு தானே பொறுப்பு,  தான் வகைசொல்ல வேண்டும் என்ற நிலையை எப்போது அடைந்து கொள்ளும்?  இந்த நிலையையே அஹ்லியது அதா என்பர். இதனைத்தான் மற்றோர் பாஷையில் அல்குர்ஆன் ருஷ்த் என்று கூறியது.
இது ஒரு முதிர்ச்சி நிலை. சுயமாய் செயற்படும் தகுதி நிலை. இந்நிலையை ஒரு பிள்ளை எந்த வயதில் அடைந்து கொள்ளும் என்பது கால இட சூழலுக்கு ஏற்ப வேறுபட முடியுமான ஒரு விடயமாகும். ஆனாலும் பல அறிஞர்கள் இந்நிலையை பதினைந்து வயதில் அடையப் பெறலாம் என்பதுடன்,  பதினெட்டு வயது வரை நீடிக்கவும் முடியும் என்று கூறியுள்ளனர். நவீன சட்டமும் இதனை பதினெட்டு வயது என வரையறை செய்துள்ளமையைக் காணலாம். அத்துடன் இதற்கு முந்திய பருவத்தை சிறுவர் என்றே கருதுகிறது.

எனவே,  மேலே சொல்லப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பிள்ளை வளர்ப்பு என்பது ஆரம்பமும் முடிவும் உள்ள ஒரு செயற்பாடு என்பதையே நாம் புரிந்து கொள்கிறோம். இந்த வாசகங்கள் பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். அது எப்படி சாத்தியமாகலாம்?  பிள்ளை வளர்ப்பு முடிந்து போய்விடுமா?  வாழ்க்கை எவ்வளவு மாறினாலும் அது எனது பிள்ளை தானே என்று பெற்றோர்கள் வினா எழுப்பலாம். உண்மைதான் பெற்றவர்கள் என்ற நிலையில் அவர்களது இந்த மன உணர்வு நியாயமானதுதான். இருந்த போதிலும் நாம் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது பிள்ளை சுதந்திரமாக தீர்மானம் எடுத்து செயற்படும் ஒரு கட்டம் இருக்கிறது. அது திருமணத்திற்குப் பின்னர்தான் என்று மாத்திரம் நாம் நினைத்து விடக்கூடாது. அதற்கு முன்னரே எனது பிள்ளைக்கு அந்தப் பருவம் வந்து விடுகிறது. இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு அந்த சுதந்திரத்தை வழங்க வேண்டும். குறிப்பாக அவனது திருமணம்,  தொழில்,  படிப்பு போன்ற விடயங்களில் அவன் சரி காணுகின்ற ஒரு விடயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளும் உரிமையை இஸ்லாம் அவனுக்கு வழங்கியிருக்கிறது. இந்த இடத்தில் பெற்றோரின் பணி என்ன? அவன் தனது தீர்மானத்தை சிறந்த முறையில் பெறுவதற்கு உதவி செய்தலாகவே காணப்படல் வேண்டும். மாற்றமாக,  இன்னும் அவன் எனது பிள்ளை, அவனுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனவே,  நான் சொல்வதைத்தான் அவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உண்மையில் பிள்ளை வளர்ப்பு என்பதே அவனை சுயமாய் செயற்பட தகுதியானவனாக மாற்றி விடுவதாகும். மாற்றமாக எல்லா விடயங்களிலும் அவன் பெற்றோரிலேயே தங்கியிருக்கிறான் எனின்,  நீங்கள் வரைந்த கோட்டைத் தாண்டாமல் இருக்கிறான் எனின்,  அவன்தான் நல்ல பிள்ளை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில் நீங்கள் அவனை சரியாக வளர்க்கவில்லை என்றே இங்கு பொருள் கொள்ளப்படும். இங்கு அவன் கட்டுப்பாடற்றவனாக விடப்பட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. மாற்றமாக அவன்  சிறந்த முறையில் தயார்படுத்தப்பட்டு,  சுயமாய்ச் செயற்பட விடப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது.

பிள்ளை வளர்ப்பு எனும் வரைவிலக்கணத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் இருக்கிறது. அது வாழ்வு என்றால் என்ன? என்ற கேள்வியாகும். அல்குர்ஆனுடைய பார்வையில் வாழ்வு என்பது இபாதத்,  இமாரத்,  கிலாபத் எனும் முப்பெரும் பணிகளை உள்ளடக்கியதாகும். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் இபாதத் என்பது அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையிலான தொடர்பைக் குறிக்கிறது. இமாரத் என்பது அவனுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது. கிலாபத் என்பது அவனுக்கும் ஏனைய மனிதர்களுக்குமிடையிலான தொடர்பைக் குறிக்கிறது.

எனவே,  வாழ்வு என்பது அல்லாஹ்வுடன் தொடர்புபடுவது,  அவனுக்கு அடிமையாய் வாழ்வது,  பூமியை அபிவிருத்தி செய்வது ஏனைய மனிதர்களுக்கு வழிகாட்டுவது என்ற மூன்று பரப்புக்களையும் உள்ளடக்கியது. இந்த வாழ்வை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான தயார்படுத்தலே பிள்ளை வளர்ப்பு எனப்படுகிறது.

எனது பிள்ளை வைத்தியராக வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன்,  அதற்காக முயற்சிக்கிறேன்,  அந்த திசையை நோக்கி எனது பிள்ளையை உந்தித் தள்ளுகிறேன். இங்கு பூமியை அபிவிருத்தி செய்தல் என்ற பணி மிகச் சரியாக நிறைவேற்றப்படுகிறது. இது வாழ்வின் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே. பெற்றோராக பிள்ளை வளர்ப்பு பற்றிய எமது எதிர்பார்ப்பு இந்த எல்லையுடன் சுறுங்கி விடக் கூடாது. அந்தப் பிள்ளை அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான ஒரு மனிதனாக வாழ்வதற்கான தயார்படுத்தலும் இங்கு மிகுந்த கவனத்தைப் பெறவேண்டிய ஒரு பகுதியாகும். இதற்கான முயற்சி பல சமயங்களில் மிகவும் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனது பிள்ளையை நான் அல்லாஹ்வுடன் எந்தளவு சம்பந்தப்படுத்துகிறேன்,  எந்தளவு அவன் தனது வாழ்வில் தான் அல்லாஹ்வுக்குரிய அடிமை என்பதைப் பேணுகிறான்,  அந்தளவுக்கே அவனது சமூக வாழ்வு சீர்பெறுகிறது,  மறுமை வாழ்வு வெற்றி பெறுகிறது.
அதே போல் கவனத்தைப் பெறவேண்டிய மற்றொரு பகுதி கிலாபத் என்பது,  இதன் பொருள் என்ன?  அடுத்த மனிதர்களுக்குப் பயனுள்ளவனாக வாழ்தல், அடுத்த மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் இருத்தல்,  பயன்மிக்க சமூக மாற்றத்தை வழிநடாத்திச் செல்லல். இது அல்குர்ஆன் கூறிய வாழ்வின் பரப்புக்களில் ஒன்று,  பல  சமயங்களில் இந்தப் பரப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. எனது பிள்ளை தனது படிப்பை அல்லது தொழிலை நன்றாகச் செய்ய வேண்டும்,  இபாதத்களை தவறாது செய்து கொள்ள வேண்டும்,  இது போதும்,  வேறு எந்த ஊர் பிரச்சினைகளுக்கும் போய்விடக் கூடாது,  இப்படியிருந்தாலேயே அவன் நல்ல பிள்ளை,  என்ற மனப்பாங்குடனேயே பலர் தமது பிள்ளைகளை வளர்க்க முற்படுகின்றனர். ஆனால் நாம் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்,  அல்லாஹ்தஆலா ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சமூகப் பொறுப்பையும் வைத்துள்ளான்,  சமூகத்திற்குப் பயனளித்தலும் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் ஈமான் கொண்ட ஒவ்வொருவர் மீதும் கடமையான ஒரு பணி என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. எனவே எனது பிள்ளைக்கு வாழ்வைக் கற்றுக் கொடுத்தல் என்பது,  இந்த முப்பெரும் பணிகளை உள்ளடக்கிய வகையில் அமைய வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

இறுதியாக,   வாழ்வின் முழுமையான பரப்புக்களை உள்ளடக்கிய தயார்படுத்தலையே ஒரு சம்பூரணமான பிள்ளை வளர்ப்பு என்று கூற முடியும். பிள்ளை வளர்ப்பு பற்றிய எமது பார்வைகள் இந்தவகையில் விரிந்து காணப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விடை பெறுகிறேன்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.