Sunday, December 3, 2017

மகாஸித் தேடல்கள் (6)

மகாஸித் என்பது உயர் விழுமியங்கள் மாத்திரமா?

மகாஸித் என்றால் என்ன? என்ற கேள்விக்கான மற்றொரு பதிலாகத்தான் உண்மையில் இந்தப் பத்தியும் அமைகிறது. இங்கு குறிப்பாக மகாஸிதுஷ் ஷரீஆ என்பது உயர் விழுமியங்கள் என்ற எல்லையில் மாத்திரம் அடையாளப்படுத்தப்படக்கூடிய ஒன்றா? அல்லது அதனை விடவும் வித்தியாசமானதா? என்ற விடயம் அலசப்படுகிறது.

சிலர் மகாஸிதுஷ் ஷரீஆ என்பதை ஷரீஆவின் உயர் இலக்குகள் என்று மொழிமாற்றம் செய்கின்றனர். இந்த மொழிபெயர்ப்பு நுணுக்கமானது அல்ல என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த மொழி பெயர்ப்பு மகாஸிதை சில உயர் விழுமியங்களுடன் மாத்திரம் சுருக்கி விடுகிறது. உண்மையில் பிரச்சினை இருப்பது மொழிபெயர்ப்பில் மாத்திரமல்ல, மாற்றமாக சிலரது புரிதலும் கூட,  மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் நீதி,  பாதுகாப்பு,  சமத்துவம் போன்ற உயர் விழுமியங்கள் மாத்திரம்தான் என்றிருக்கிறது. இதன் விளைவில்,  இவை போன்ற உயர் விழுமியங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்டால்,  இனி நாம் அல்குர்ஆன்,  சுன்னாவினது சட்ட வசனங்களில் பெரியளவு தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த உயர் விழுமியங்களை மையப்படுத்தி,  எமது முன்னோக்கிய,  அடுத்த கட்ட சிந்தனைகளை வடிவமைத்து விடலாம். எதிர்கொள்ளும் புதிய சவால்களுக்குத் தீர்வு கண்டுவிடலாம். புதிய இஜ்திஹாத்களை மேற்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். புதிய இஜ்திஹாத்களுக்கும் உயர் விழுமியங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை - இது தனித்துப் பேசப்பட வேண்டிய ஒரு தலைப்பு,  அதாவது மகாஸிதின் பணி என்ன என்பது தனித்து ஆராயப்பட வேண்டிய ஒரு தலைப்பு,  மகாஸிதைப் பயன்படுத்தி ஒரு புதிய இஜ்திஹாதை மேற்கொள்வதன் வரையறைகள் குறித்து மகாஸித் அறிஞர்கள் மத்தியில் நீண்ட விவாதம் இருக்கிறது - ஆனால் மகாஸிதுஷ் ஷரீஆ என்பதை உயர்விழுமியங்களாக மாத்திரம் வரையறை செய்யும் பார்வை தவறானது.

இந்தக் கருத்தை,  மகாஸிதின் நவீன ஜாம்பவான்கள் சிலரது கருத்துக்களை மையமாக வைத்து விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது கலாநிதி தாஹா அப்துர் ரஹ்மான் அவர்களது பார்வை.(1) இவர் மகாஸித் என்ற சொல் அடிப்படையில் மூன்று கருத்துக்களைத் தருகிறது என்று விளக்குகிறார். முதலாவது கருத்து,  ஒரு புனித வசனம் என்ன கருத்தைக் குறித்து நிற்கிறது,  என்பது மகாஸித் என்ற வட்டத்தில் உள்ளடங்குகிறது. அதாவது,  பொதுவாக மொழியில் நேரடியான வார்த்தைகளை விளங்கிக் கொள்வதற்கும்,  அந்த வார்த்தைகளைப் பேசியவனின் எதிர்பார்ப்பு என்ன என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. அந்தவகையில் அல்குர்ஆனினதும் சரி,  ஹதீஸினதும் சரி,  நேரடியான வார்த்தைகளை விளங்கிக் கொள்வதை விடவும் அந்த வார்த்தைகளின் மூலம் நாடப்படுவது எது என்பதைப் புரிந்து கொள்வது,  மகாஸித் என்ற சொல் உணர்த்தும் முதலாவது கருத்து.

 இதே கருத்தை கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்களும் மகாஸிதை இரண்டு படித்தரங்களாக வகுத்து விளங்கப்படுத்தும் போது முன்வைக்கிறார்.(2) மகாஸிதுல் கலிமா புனித வசனங்களின் மகாஸித்,  மகாஸிதுல் அஹ்காம் - சட்டங்களின் மகாஸித் என இரு படித்தரங்களைக் குறிப்பிட்டு,  மகாஸிதுல் கலாம் என்பது,  குறித்த வசனத்தின் மூலம் நாடப்படுவது எது? என்று விளங்கப்படுத்துகிறார். ஏனெனில்,  பொது வழக்கில்,  ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும்போது,  குறிப்பாகப் பேசலாம்,  பொதுவாகப் பேசலாம்,  நேரடியாகப் பேசலாம்,  சிலேடையாகப் பேசலாம். இந்த எல்லா நிலைகளிலும் அவரது மொழியைத் தாண்டி,  அவரது நாட்டத்தைப் புரிந்து கொள்வது மகாஸிதுல் கலாம் எனப்படுகிறது.

இரண்டாவது கருத்து,  ஒருவனது எண்ணம் அல்லது நிய்யத் எது என்பதும் மகாஸித் என்ற வட்டத்தில் உள்ளடங்குகிறது. இதனைத்தான் இமாம் ஷாதிபி அவர்கள் மகாஸிதுல் முகல்லப் என்று அடையாளப்படுத்தினார்கள்.(3) அதாவது,  ஒரு செயலைச் செய்கின்ற பொழுது,  அதனைச் செய்கின்றவனின் உளநிலை எவ்வாறு காணப்படுகின்றது? அவன் அதன் மூலம் என்ன விளைவை எதிர்பார்க்கின்றான்? இந்த எதிர்பார்க்கப்படும் விளைவும் மகாஸித் என்ற வட்டத்தில் அடங்குகிறது. இதனை விளங்கப்படுத்தும் வகையிலேயே இமாம்கள் விடயங்கள் அதன் நோக்கத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்படும் என்ற ஒரு சட்ட விதியை முன்வைத்தார்கள். அந்த வகையில் மகாஸித் என்பது,  செய்கின்றவனது எண்ணம்,  நாட்டம் போன்றவற்றையும் பிரதிபளிக்கின்றது.

மூன்றாவது கருத்து,  ஒரு விடயத்தின் நோக்கம் என்ன? அதன் நியாயம் என்ன? என்ற தேடலும் மகாஸித் என்ற வட்டத்தில் உள்ளடங்குகிறது. தற்போதைய புழக்கத்தில் மகாஸிதின் இந்த மூன்றாவது கருத்துதான் அதிகமாகப் பேசப்படுகிறது. இமாம் ஷாதிபி அவர்கள்,  இவ்வகை மகாஸிதுகளை ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான நேரடி மகாஸிதுகள் என்ற தலைப்பின் கீழ் விளங்கப்படுத்துகிறார்கள்.(4)

மகாஸித் என்ற சொல் மேற்சொன்ன மூன்று கருத்துக்களையும் உணர்த்துவதாக கலாநிதி தாஹா அப்துர் ரஹ்மான் அவர்கள் கருதுகிறார்கள். அதாவது மகாஸித் என்பது மூன்று உள்ளடக்கங்களைக் கொண்டது,  மகாஸிதின் பொருள் கோடல் உள்ளடக்கம்,  மகாஸிதின் உணர்வு அல்லது நாட்ட உள்ளடக்கம்,  மகாஸிதின் விழுமிய உள்ளடக்கம் என்ற சொல்லாடல்கள் மூலம் அதனைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

கலாநிதி தாஹா அப்துல் ரஹ்மான் அவர்களது இந்த விளக்கத்திலிருந்து பார்க்கும் பொழுது,  மகாஸித் என்பதை,  தனித்து உயர்ந்த இலக்குகள் அல்லது விழுமியங்கள் என்ற எல்லையில் மாத்திரம் புரிந்து கொள்ள முடியாது. மாற்றமாக அது பரந்த ஒரு பொருளை உள்ளடக்கியிருக்கிறது. ஒரு வசனத்தின் பொருள் என்ன? என்பதிலிருந்து ஷரீஆவின் உயர்விழுமியங்கள் வரை நீண்டு செல்லக் கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இரண்டாவது ஷெய்க் அப்துல்லாஹ் பின் பய்யாஹ் அவர்களது பார்வை.(5) இவர் மகாஸித் என்பது பல்வேறு வடிவங்களில் காணப்பட முடியும் என்கிறார். அந்தவகையில்,  முதலில் நேரடியான ஒரு சட்ட வடிவிலும் மகாஸித் காணப்பட முடியும். அதாவது சட்டத்தின் நோக்கம் மட்டுமன்றி நேரடியாக சட்டமே மகாஸிதாகவும் அமையும். ஒரு குறித்த சட்டம் அல்லது செயற்பாடு மனித வாழ்வில் என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்று அல்லாஹ்தஆலா கருதக்கூடியவை இந்த வகையில் அடங்கும். இவற்றை இல்லாது செய்யவோ அல்லது விட்டுக் கொடுப்பு செய்யவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. வணக்க வழிபாடுகளை இவ்வகைக்கு உதாரணமாகக் கூறலாம்.

இரண்டாவது வடிவம்,  நோக்கங்கள்,  விழுமியங்கள் என்ற வடிவம். இவை நேரடியாக புனித வசனங்கள் மூலமாகவோ அல்லது அவற்றின் காரணங்கள் மீது மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலமாகவோ அடையாளம்காணப்பட முடியும். இவ்வகை நேரடியாக சட்டங்களையோ அல்லது செயற்பாடுகளையோ குறிக்காமல் அவற்றின் நோக்கங்கள் எவை என்பதைக் குறிப்பவையாகும். தற்போதைய ஆய்வுகளில் மகாஸிதின் இந்த வடிவமே அதிகமாக வெளிக் கொண்டு வரப்படுகிறது.

மூன்றாவது வடிவம்,  எண்ணம்,  நிய்யத் என்ற வடிவம். கலாநிதி தாஹா அப்துல் ரஹ்மான் அவர்கள் பேசிய இரண்டாவது கருத்து இதுதான். குறித்த செயலை மேற்கொள்பவனது எண்ணம் எவ்வாறு இருக்கிறது என்பது மகாஸிதின் மற்றொரு வடிவம்.

ஷெய்க் அப்துல்லாஹ் பின் பய்யாஹ் அவர்களது விளக்கத்தில் நின்று பார்க்கின்ற பொழுது,  அவர்,  மகாஸித் என்பதை ஒரு இலக்கு நிலையாக மாத்திரம் விளங்கப்படுத்தவில்லை. மாற்றமாக மகாஸித் என்பது ஒரு செயற்பாட்டு நிலையிலும் காணப்படக்கூடியது என்கிறார். அவர் இந்த சிந்தனையை இமாம் கஸ்ஸாலி,  இமாம் கராபி,  இமாம் ஷாதிபி போன்றவர்களை மேற்கோள்காட்டி விளங்கப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது,  கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்களது பார்வை.(6) இவர் மகாஸிதை பல்வேறு வித்தியாசமான மட்டங்களில் காணப்படக்கூடிய ஒன்று என்கிறார். மகாஸித் என்பது இலக்கு நிலை என்ற மட்டத்திற்குரியது மாத்திரமன்றி,  அதனைத் தாண்டி வேறுபட்ட மட்டங்களிலும் அமைகிறது என்கிறார். அதாவது குறித்ததொரு விடயத்தின் மகாஸித் எது என்பதை அடையாளம் காண்பதற்கு ஏன்? என்ற கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்விக்கான பதில் ஒவ்வொரு மட்டத்திலும் வித்தியாசமான வெவ்வேறு பதில்களாகவே அமைகின்றன. உதாரணமாக ரமழானில் ஏன் நோன்பு நோற்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஐந்து மட்டங்களில் வெவ்வேறான பதில்கள் வழங்கப்பட முடியும்.

முதலில் அடையாளம் என்ற மட்டம் : ரமழானில் ஏன் நோன்பு நோற்க வேண்டும்? என்ற கேள்விக்கான முதல் பதில் பிறை தென்பட்டமை என்று அமைய முடியும். பிறை தென்படுதல் என்பது ஒரு அடையாளம். அதாவது மாதம் ஆரம்பிக்கின்றது என்பதற்கான அடையாளம். அந்தவகையில் பிறை தோன்ற முன்னர் மாதம் ஒன்று ஆரம்பிக்கப்பட முடியாது என்ற வகையில் இதுவும் ஒரு மக்ஸதாக மாறுகிறது.

இரண்டாவது சட்டம் என்ற மட்டம். ரமழானில் பிறை தென்பட்டவுடன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்? என்று அடுத்து ஒரு கேள்வி எழுகின்ற போது,  பிறை தென்பட்டவுடன் நோன்பு நோற்பது வாஜிப் என்பது பதிலாக அமைய முடியும். இங்கு வாஜிப் என்பது ஒரு சட்டம். இது இரண்டாவது மட்டம். அடையாளம் என்ற மட்டத்தை விட உயர்ந்தது. இது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய சட்டம் என்ற வகையில் இதுவும் ஒரு மக்ஸதாகிறது.

மூன்றாவது,  பொது நலன்கள் என்ற மட்டம் : ரமழானில் நோன்பு ஏன் வாஜிபாகிறது? என்ற ஒரு கேள்வி அடுத்து கேட்கப்பட்டால்,  அதற்கான பதில் ஏழைகளது பசியை உணர்ந்து ஸதகா தூண்டப்படுதல்,  உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு பாவங்கள் தடுக்கப்படுதல் என்று அமைய முடியும். இந்தப் பதில்கள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் எல்லோரும் பயன்பெறக்கூடிய பொது நலன் சார்ந்தவை. இவை சமூக மட்டத்தில் என்றும் நடைபெற வேண்டியவை அல்லது சமூகத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டியவை என்ற வகையில் இவையும் மகாஸித்களில் ஒன்றாக மாறுகின்றன.

நான்காவது,  விழுமியங்கள் என்ற மட்டம் : ரமழானில் ஏன் ஸதகா தூண்டப்பட்டு,  பாவங்கள் தடுக்கப்படல் வேண்டும்? என்ற கேள்வியை அடுத்ததாகக் கேட்டுப் பார்த்தால்,  தக்வாவை ஏற்படுத்துதல்,  மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தைப் பேணல் என்று அதற்குப் பதிலளிக்கப்பட முடியும். தக்வா,  சமத்துவம் என்பன இஸ்லாம் நிலை நாட்ட விரும்பும் உயர் விழுமியங்கள். சமத்துவம் ஒரு உயர் விழுமியம் என்பது தெளிவானது. தக்வா என்பதன் பொருள் என்ன? உண்மையில் தக்வா என்பது எந்த விதப் புறத் தூண்டுதலும் இன்றி சுயமாயச் செயற்படும் நிலையைக் குறிக்கிறது. இது ஒரு உளநிலை. அந்த வகையில் இது ஒவ்வொரு தனி மனிதனிலும் வாழ வேண்டிய ஒரு விழுமியமாகிறது. இந்தப் பண்புகள் சமூக வாழ்வில் இன்றியமையாதவை என்ற வகையில் இவை மகாஸித்களில் ஒன்றாக மாறுகின்றன.

ஐந்தாவது,  அகீதா என்ற மட்டம் : நோன்பின் மூலம் தக்வாவும்,  சமத்துவமும் ஏன் ஏற்படுத்தப்படல் வேண்டும்? என்று அடுத்து ஒரு கேள்வி கேட்கப்பட முடியும். அதற்கான பதில் ஏனெனில் அல்லாஹ் நீதியானவன்,  அருளாளன் என்றமைய முடியும். அல்லாஹ் நீதியாளன்,  அருளாளன் என்பது எமது அகீதா,  நம்பிக்கை. இந்த நம்பிக்கைகளின் சமூக வடிவமாகத்தான் தக்வாவும் சமத்துவமும் உலகில் நடைமுறையாகின்றது. அல்லாஹ் நீதியாளன்,  அருளாளன் என்று ஒரு மனிதன் நம்பிக்கை கொள்வதன் சமூக விளைவு என்ன? அல்லது நீதியினதும்,  அருளினதும் சமூக நடைமுறை வடிவம் என்ன? அதுதான் தக்வாவாகவும் சமத்துவமாகவும் சமூக வாழ்வில் பிரதிபளிக்கிறது. அல்லாஹ் பற்றிய இந்த நம்பிக்கைகள் நிலையானவை என்ற வகையில் அவை மக்ஸதாக மாறுகின்றன.

இந்த ஐந்தாவது மட்டத்தைத் தான் பலர் மகாஸிதுல் அகீதா என்று பேசுகிறார்கள். கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் கூறுவது போல்(7) மகாஸிதுஷ் ஷரீஆ என்று பேசப்படுவது போல் மகாஸிதுல் அகீதா என்ற பகுதியும் கட்டாயம் பேசப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் இஸ்லாம் கூறும் நம்பிக்கைகள் தனித்து மறுமை முக்கியத்தை மாத்திரம் கொண்டவை அல்ல. அவற்றிற்கு நிச்சயமாக உலக வாழ்வு முக்கியத்துவம் ஒன்றும் இருக்கிறது. உலக வாழ்வில் ஒரு மனிதனுடைய நம்பிக்கைகளாக,  இவை காணப்படல் வேண்டும் என்று சொல்வதற்கு அப்பொழுதுதான் ஒரு அர்த்தம் கிடைக்கிறது. அந்த வகையில் மகாஸிதுல் அகீதா என்ற பகுதியும் மகாஸித் ஆய்வுப் பரப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒரு பகுதியாகும்.

கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்களது மேற்கூறப்பட்ட மகாஸித் அணுகுமுறையில்,  ஒரே தலைப்பின் கீழ் மகாஸித் என்பதை பல மட்டங்களில் அடையாளம் காண முடியும் என்பது விளக்கப்படுகிறது. இங்கு ஒரு புதிய இஜ்திஹாத் மேற்கொள்ளப்படும்போது,  மகாஸிதின் இந்த எல்லா மட்டங்களும் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும். இவற்றுக்கிடையில் முதல் நிலைப்படுத்தல் வேறுபாடுகள் நிகழ முடியும். ஆனால் எந்த ஒன்றும் புறக்கணிக்கப்படும் நிலைக்குச் செல்ல முடியாது.

கலாநிதி ஜாஸிர் அவ்தாவுடைய மகாஸித் பற்றிய பார்வையின் மூலமும் நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்னவெனின்,  மகாஸித் என்பதை நாம் வெறுமனே உயர் விழுமியங்களாகவோ இலக்குகளாகவோ மாத்திரம் நோக்கக் கூடாது. அது உயர்மட்டத்திலிருந்து கீழ் இறங்கி இன்னும் பல மட்டங்களிலும் காணப்பட முடியுமானது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

இறுதியாக,  நிறைவு செய்ய முன்னர்,  இரண்டு விடயங்களை தொட்டுக் காட்டிச் செல்ல நினைக்கிறேன். முதலாவது,  மேற்சொல்லப்பட்ட மூன்று மகாஸித் சிந்தனையாளர்களினதும் ஆய்வணுகுமுறை வித்தியாசப்பட்டிருக்கிறது. பாரிய வேறுபாடுகள் இல்லை என்றிருந்தாலும் மகாஸித் என்பது எது என்பதை வரையறை செய்வதற்கான முறைமையில் மூவரும் வித்தியாசப்படுகின்றனர். இந்த அணுகுமுறை வேறுபாடு மகாஸித் கலைக்குள்ளே மிகவும் பொதுவான ஒரு உண்மையாகும்.

ஏனெனில் மகாஸித் கலையின் உண்மையான எழுச்சி நவீன காலத்தில்தான் நிகழ்ந்துள்ளது. ஒன்றின் எழுச்சிக் காலப்பகுதியில் பல்வேறு வித்தியாசப்பட்ட அணுகுமுறைகள் காணப்படுவது இயல்பானது. அந்த வேறுபட்ட அணுகுமுறைகளுக்கிடையிலான வாதப் பிரதிவாதங்கள் செழுமையாக நடைபெறுகின்ற போது,  அவை தமக்கிடையே முட்டி மோதி சில சமநிலைகளைக் கண்டடைந்து கொள்கின்றன. இஸ்லாமிய வரலாற்றில் எந்தக் கலையை எடுத்தாலும் இந்த உண்மையை நாம் அவதானிக்கலாம். உஸுலுல் பிக்ஹ்,  உஸுலுல் ஹதீஸ் போன்ற எந்தக் கலையிலும் ஆரம்பத்தில் பலத்த வாதப் பிரதிவாதங்களின் பின்னர்தான் நீண்ட காலத்தில் எல்வோரும் உடன்படக்கூடிய பொது உடன்பாட்டுப் புள்ளிகளை இனம் கண்டார்கள். இந்த நிலை மகாஸித் கலையிலும் யதார்த்தமானது. எனவே,  இங்கு அவதானிக்கக் கூடிய வேறுபாடுகள் எதிர்மறையாகவன்றி சாதகமாகவே நோக்கப்படல் வேண்டும். மகாஸித் கலையின் நீடித்த வளர்ச்சிக்கான அஸ்திவாரமாகவே புரிந்து கொள்ளப்படல் வேண்டும்.

இரண்டாவது,  இந்த மூன்று மகாஸித் சிந்தனையாளர்களது அணுகுமுறையும் சரி,  அதனூடாக மகாஸித் எது என்று இனம் கண்ட முடிவுகளிலும் சரி,  சில வித்தியாசங்கள் இருந்த போதிலும் மூவரும் உடன்படுகின்ற ஒரு விடயம் இருக்கின்றது. அதுதான் மகாஸித் என்பது இலக்கு நிலையை மாத்திரம் குறிக்க மாட்டாது. அது மூலோபாய நிலையையும் செயற்பாட்டு நிலையும் கூட குறிக்கக் கூடியது. அதுபோல் மகாஸித் என்பது தனித்து உயர் விழுமிய நிலையை மாத்திரம் குறிக்க மாட்டாது. அதனை விடவும் தாழ்ந்த பல்வேறு மட்டங்களிலும் அது பிரதிபளிக்க முடியும் என்பதில் மூவரும் உடன்படுகின்றனர். அந்தவகையில் மகாஸித் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் இந்த வரையறையும் மிகவும் முக்கியமானது.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக!.

(1)          கலாநிதி தாஹா அப்துல் ரஹ்மான்,  தஜ்தீதுல் மன்ஹஜ் பீ தக்வீமித் துராஸ். பதிப்பகம் : மர்கஸுல் தகாபி அல் அரபி,  இரண்டாம் பதிப்பு,  பக்கம் 93 – 102.

(2)          கலாநிதி அஹ்மத் அப்துல் ஸலாம் அர்ரைஸுனி,  முஹாழராத் பீ மகாஸிதிஷ் ஷரீஆ,  பதிப்பகம் : தாருல் கலிமா,  கெய்ரோ. இரண்டாம் பதிப்பு 2013,  பக்கம் 9 – 20.

(3)          அபூ இஸ்ஹாக் அஷ்ஷாதிபி,  அல் முவாபகாத் பீ உஸுலிஷ் ஷரீஆ,  பதிப்பகம் : தாருல் பிக்ரில் அரபி,  இரண்டாம் பாகம்,  பக்கம் 333.

(4)          முன்னைய அதே நூல்,  அல்முவாபகாத்,  பக்கம் 8 – 62.

(5)          ஷெய்க் அப்துல்லாஹ் இப்னுஷ் ஷெய்க் அல் மஹ்பூல் பின் பய்யாஹ்,  மஷாஹித் மினல் மகாஸித்,  தாருல் வுஜுஹ் – ரியாத்,  சவூதி அரேபியா,  இரண்டாம் பதிப்பு 2012,  பக்கம் 13 – 33.

(6)          கலாநிதி ஜாஸிர் அவ்தா,  முகர்ரர் திராஸாத் உல்யா ஹெளலல் மகாஸித் வல் இஜ்திஹாத்,  யூடியூப் தொடர் உரைகள் 2012,  உரை இல – 01,  02.

(7)          கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி,  அத்தரீஆ இலா மகாஸிதிஷ் ஷரீஆ,  பதிப்பகம் தாருல் கலிமா,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் 41 – 76.