Wednesday, October 16, 2013

தனிமனித உருவாக்கம்


நோக்கங்கள்

தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்கள் குறித்துப் பேசுகின்ற பொழுது, அந்த சிந்தனை எழ முடியுமான பல தளங்கள் குறித்து கடந்த அமர்வில் கலந்துரையாடினோம்.  அந்த வகையில் இது, பல கோணங்களில் அணுகப்பட முடியுமான ஒரு தலைப்பு என்பதில் சந்தேகமில்லை. இங்கு வேறுபட்ட பல கோணங்களின் மீதான வாசிப்பின் அடிப்படையில் முடிந்தவரையில் ஒரு முழுமையான பார்வையை செலுத்தும் வகையில் ஒரு தனிப்பட்ட இஜ்திஹாதாகவே இந்தப் பார்வை முன்வைக்கப்படுகிறது.

அந்தவகையில் தனிமனித உருவாக்கத்தின் பிரதான நோக்கங்களாக கீழ்வரும் ஐந்து அம்சங்களைக் குறிப்பிட முடியும்.

1.         ஒரு முஸ்லிம் ஆளுமையை உருவாக்குதல்

2.         ஒரு ஜமாஅத்தின் அல்லது சமூகத்தின் நாளைய இருப்பை உத்தரவாதப்படுத்துதல்

3.         இழந்த கண்ணியத்தை இஸ்லாத்திற்கு மீளப் பெற்றுக் கொடுத்தல்

4.         உலகில் ஒரு உயர்ந்த மனித நாகரீகத்தைக் கட்டியெழுப்புதல்

5.         மறுமையில் வெற்றி பெறுதல்

இந்த ஐந்து அம்சங்களும் விரிவாக தனித்தனியாக நோக்கப்பட வேண்டியவை. இன்ஷா அல்லாஹ் அடுத்துவரும் அமர்வுகள் இந்த விடயத்தை அழங்கரிக்கவுள்ளன. ஆரம்பமாக ஒரு முஸ்லிம் ஆளுமையை உருவாக்குதல்என்ற முதலாவது நோக்கம் குறித்து சற்று கவனத்தைச் செலுத்துவோம்.

ஒரு முஸ்லிம் ஆளுமையை உருவாக்குதல் என்பதன் மூலம் நாடப்படுகின்ற கருத்து என்ன? அதாவது, தர்பிய்யத் செயற்பாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் முதலாவது நேரடியாக மனிதன் சம்பந்தப்பட்டதாகும். குறிப்பிட்ட மனிதனில் நடைபெற வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசுவதாகும். மாற்றமாக குடும்பம்,  சமூகம்,  நாடு போன்றவற்றில் தர்பிய்யத்தின் மூலம் ஏற்படப் போகும் மாற்றத்தைப் பற்றிப் பேசுவதல்ல. அந்தவகையில் ஒரு தனிமனிதன் என்ற வரையறையை மாத்திரமே இந்த இலக்கு பேசுகிறது.

கடந்த அமர்வில் தனிமனித உருவாக்கத்தின் இலக்குகள் எழ முடியுமான தளங்களைப் பற்றிப் பேசுகின்ற பொழுது தனிமனித உருவாக்கம் பற்றிப் பேசப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன என்று குறிப்பிட்டோம். அந்த வரைவிலக்கணங்களில் சில, தர்பியத் செயற்பாட்டினை ஒரு தனிமனித எல்லையுடன் சுறுக்கியிருந்தன. மற்றும் சில வரைவிலக்கணங்கள் அதனை தனிமனித எல்லையைத் தாண்டி வேறு சில விடயங்களையும் இணைத்துக் கூறியிருந்தன. இதனை இன்னும் தெளிவாகக் கூறினால்,  ஒரு வரைவிலக்கணத்தில் தர்பியத் என்பது,  ஒரு ஆளுமையின் எல்லாப் பக்கங்களையும் வளர்த்து விடுதல் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தர்பியத் என்பது ஒரு மனித மாற்றம் என்ற எல்லையுடன் மட்டுப்படுத்தப்படுகிறது. மற்றோர் வரைவிலக்கணத்தில் உலகில் தனது கடமையை நிறைவேற்றத் தகுதியான ஒரு முழுமையான முஸ்லிம் ஆளுமையை உருவாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இந்த வரைவிலக்கணத்தின் படி தர்பியா செயற்பாடு வெறுமனே ஒரு மனித மாற்றம் என்ற எல்லையைத்தாண்டி சமூக வாழ்வில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு மாற்றத்தையும் உள்ளடக்கியதாக அடையாளம் காட்டப்படுகிறது.

இந்த வேறுபாட்டைக் குறித்துக் காட்டும் விதமாகவே தனிமனித உருவாக்கத்தின் முதலாவது இலக்காக ஒரு முஸ்லிம் ஆளுமையை உருவாக்குதல்என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம். எனவே,  இதன் மூலம் மனிதன் என்ற எல்லைக்குள் மாத்திரம் நிகழ்த்தப்படும் மாற்றமே நாடப்படுகிறது. அந்தவகையில் தனிமனித உருவாக்கச் செயற்பாடு முதலில் உலகில் ஒரு முஸ்லிம் ஆளுமை உருவாக வேண்டும் என்றே விரும்புகிறது.

ஒரு முஸ்லிம் ஆளுமை உருவாக்கப்படும்போது அதன் விளைவாக எத்தனையோ சமூக பயன்களும் நலன்களும் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். அவை ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதும் தனிமனித உருவாக்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என்பதும் உண்மைதான். ஆனால் அந்த விளைவுகள் ஏற்பட முடியாத ஒரு சூழலாக இருப்பினும் கூட, அந்த முஸ்லிம் ஆளுமை உருவாக்கப்படத்தான் வேண்டும். ஏனெனில்,  ஒரு முஸ்லிம் ஆளுமை உருவாக வேண்டும் என்பதும் கூட ஒரு இலக்காகும்.

இந்த விடயத்தை மிக எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் முஸ்லிமாக வாழும் நிலையை உதாரணமாகக் கூறலாம். ஒருவன் முஸ்லிமாக வாழ்வதனால்,  சமூகமும் மனித குலமும் பௌதீக உலகமும் கூட பல நன்மைகளை அடைகின்றன. அவன் முஸ்லிமாக வாழ்வதன் நோக்கங்களில் கூட அவை அடங்குகின்றன. ஆனால் இந்த நன்மைகள் எதனையும் செய்ய முடியாத ஒரு சூழல் காணப்பட்டாலும் அவன் முஸ்லிமாக வாழுதல் என்பது தவிர்க்க முடியாத ஒரு கடமையாகவே காணப்படும். ஏனெனில்,  முஸ்லிமாக வாழுதல் என்பதும் எம்மிடத்தில் எதிர்பார்க்கப்படும் ஒரு இலக்காகும்.

ரொபின்சன் குரசோஎன்ற தனிமையாக ஒரு தீவில் மாட்டிக் கொண்ட ஒரு மனிதனின் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவனுக்கு அங்கு ஒரு சமூக வாழ்க்கை இல்லை. அப்படி ஒரு நிலையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டாலும் கண்டிப்பாக தனிமனித வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டிய கடப்பாடு அவனுக்குக் காணப்படுகின்றது. சமூக வாழ்வுடனும் பௌதீக வாழ்வுடனும் சம்பந்தமில்லாமல் ஒருவன் வாழ்ந்தாலும் அவன் அல்லாஹ்வை ஈமான் கொள்வதும்,  இபாதத்களில் ஈடுபடுவதும்,  பாவங்களைத் தவிர்ந்து வாழ்வதும்,  தனிமனித வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதும் கடமையானதாகும்.

தனிமனித உருவாக்கமும் இதுபோன்றதுதான். சமூக ரீதியான,  பௌதீக ரீதியான தஃவா கடமைகளை மேற்கொள்வதற்கான சூழல் காணப்படாதபோதும்,  தனிமனித உருவாக்கம் காணப்படும். ஏனெனில் தனிமனித உருவாக்கம் என்பது ஒரு தனியான கடமை. ஒரு தனியான இலக்கு.

இஸ்லாமிய தஃவாவில் உருவாக்கம் என்பது ஒரு மாறாத பண்பாகும். மாற்றமாக இது கால சூழல் பரிமானங்களுக்கு ஏற்ப மாற்றத்திற்குட்பட முடியுமான ஒரு விடயமல்ல. உருவாக்கம் எல்லாக் காலத்திலும் எல்லா சூழலிலும் இருக்கும்,  ஆனால் முறைமைகளும் உத்திகளும் வளர்ச்சி காணமுடியும். இந்த உண்மையைத் தான் நாம் நபியவர்களின் வாழ்வில் மிகத் தெளிவாகக் காண்கிறோம். அவர்களது தஃவாவில் உருவாக்கம் தடைப்பட்டது. அல்லது இடைநிறுத்தப்பட்டது என்று சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் நாம் காண முடியாது. மாத்திரமன்றி இது எல்லா நபிமார்களுடைய தஃவாவிலும் நாம் காணக்கூடிய உண்மையாகும். அல்குர்ஆன் மூஸா (அலை) அவர்கள் சுதந்திரப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டமையைப் பேசுகின்றது. ஆனால் அதனை ஒரு உருவாக்கமின்றி அவர்கள் மேற்கொண்டார்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் அடைந்த வெற்றி நிச்சயமாக ஒரு உருவாக்கத்தின் விளைவுதான். நபிமார்களது போராட்டக்களம் வேறுபட்டிருக்கின்றது. போராட்ட உத்திகள் வேறுபட்டிருக்கின்றன. ஆனால் மனிதர்களைத் தயார்படுத்தாத ஒரு போராட்டம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாக எவரும் சொல்ல மாட்டார்கள். இந்த உண்மையின் பொதுவிதியைத்தான் அல்லாஹ்தஆலா இவ்வாறு குறிப்பிட்டுள்ளான். ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அவன் அந்த சமூகத்தை மாற்ற மாட்டான்” (ரஃத்) எனவே,  உருவாக்கம் எல்லா சமூகங்களுக்கும், எல்லா காலங்களுக்கும் உரிய ஒரு பண்பு என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இந்தப் பின்புலத்தில்தான் தனிமனித உருவாக்கம் என்பது ஒரு தனித்த கடமையாகவும் தனித்த இலக்காகவும் மாறுகிறது.

அடுத்து, முஸ்லிம் ஆளுமை என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வியும் மிக முக்கியமானது. ஏனெனில்,  பல சமயங்களில் உருவாக்கத்தின் அவசியம் குறித்து ஒரு உடன்பாடான நிலை தோன்றினாலும் எவ்வாறான ஒரு மனிதன் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் பார்வைகள் நிறையவே வேறுபடுகின்ற ஒரு சூழலை அவதானிக்க முடியும்.

முஸ்லிம் ஆளுமை என்பதன் மூலம் சிலர் ஒரு ஆன்மீக மனிதனைக் கற்பனை செய்கிறார்கள். சிலர் அகீதாவுக்காகத் தொழிற்படும் ஒரு மனிதனைக் கற்பனை செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு அரசியல் போராளியைக் கற்பனை செய்கிறார்கள். மற்றும் சிலர் ஒரு அபிவிருத்திப் போராளியைக் கற்பனை செய்கிறார்கள். வேறு சிலர் ஒரு உரிமைப் போராளியைக் கற்பனை செய்கிறார்கள். இவை சில உதாரணங்கள் மட்டும்தான். பட்டியல்படுத்தினால் இன்னும் பல கற்பனைகளைச் சொல்ல முடியும். இவற்றில் நடுநிலைக் கற்பனைகளும் இருக்கின்றன. தீவிரக் கற்பனைகளும் இருக்கின்றன. இவற்றில் பிறவற்றை அங்கீகரிக்கின்ற கற்பனைகளும் இருக்கின்றன. மறுதலிக்கின்ற கற்பனைகளும் இருக்கின்றன. அந்தவகையில் இவற்றை மொத்தமாக சரி என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மொத்தமாக பிழை என்று நிராகரித்துவிடவும் முடியாது. இவற்றிற்கு தீர்வு சொல்வது எமது நோக்கமல்ல. மாற்றமாக இப்படி ஒரு யதார்த்தம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே விரும்பினோம்.

ஆனால் ஒரு விடயத்தில் நாம் தெளிவுடன் காணப்படல் வேண்டும். இஸ்லாம் எதிர்பார்க்கும் தனிமனிதன் நிச்சயமாக முழுமையானவன். சமநிலையானவன் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இந்த முழுமையும் சமநிலையும் நாம் உருவாக்க விரும்பும் முஸ்லிம் ஆளுமையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது இங்கு முக்கியமானது. கடந்த சில அமர்வுகளுக்கு முன்னர், தனிமனித உருவாக்கத்தின் மூன்று பரப்புக்கள் என்ற ஒரு ஆக்கம் வரையப்பட்டதை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். அங்கு முக்கியமாக மூன்று கருத்துக்கள் பேசப்பட்டன. முதலாவது,  ரப்பானியான ஒரு முஸ்லிம். இரண்டாவது நபியவர்களது அணுகுமுறையில் மாற்றத்திற்காகத் தொழிற்படும் ஒரு போராளி. மூன்றாவது,  ஒரு துறையில் முன்னோடியாய்த் தொழிற்பட்டு தலைமை வகிப்பவன். இந்த மூன்று பரப்புக்களும் உருவாக்கத்தில் சிறந்த முறையில் பேணப்படுகின்ற போது நிச்சயமாக அங்கு உருவாக்கப்படும் மனிதன் முழுமையானவனாகவும்,  சமநிலையானவனாகவும் காணப்படுவான்.

இறுதியாக,  ஒரு விடயத்தை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். அதுதான் தனிமனித உருவாக்கத்திற்கான பாடத்திட்டமும் பொறிமுறையும்.

இங்கு ஆரம்பத்தில் பேசப்பட்ட கோட்பாடுகளில் பலரிடத்தில் தெளிவு நிலை காணப்பட்டாலும் அதன் முறையான செயற்பாட்டு வடிவத்தில் தெளிவற்ற நிலை இருப்பதை அவதானிக்கலாம். முறையான,  முழுமையான பாடத்திட்டம் காணப்படாமையும் அதன் அமுலாக்கத்திற்கான முறைமை தெளிவற்றிருத்தலும் ஏற்படுத்த விரும்பும் மாற்றப் பண்புகள் குறித்த பரிச்சயம் காணப்படாமையும், விளைவுகளை அடையாளப்படுத்தக் கூடிய பொறிமுறை இல்லாமையும்,  எல்லாவற்றையும்விட இந்த உருவாக்கச் செயன்முறையின் மையத் தூணாகத் தொழிற்பட வேண்டிய,  தகுதியான முரப்பி காணப்படாமையும், பலர் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளாகும்.

இங்கு பாடத்திட்டம் பற்றியும்,  உருவாக்கப் பொறிமுறை பற்றியும் விரிவாகப் பேசுவது நோக்கமல்ல. இன்ஷா அல்லாஹ் அதற்கான தனியானதொரு சந்தர்ப்பத்தைப் பின்னர் எடுத்துக் கொள்வோம். மாற்றமாக இங்கு வலியுறுத்த விரும்பிய முக்கிய விடயம் என்னவெனில், வெறுமனே கோட்பாட்டுத் தெளிவு மாத்திரம் உருவாக்கச் செயற்பாட்டில் வெற்றி பெறுவதற்குப் போதாது. அதன் செயற்பாட்டு வடிவம் மிகவும் தெளிவாகக் காணப்படல் வேண்டும். அந்தவகையில் முறையான முழுமையான பாடத்திட்டமும், அதனை அமுல்படுத்துவதற்குரிய பொறிமுறையும் மிகத் தெளிவாகக் காணப்படல் அவசியமாகும். இந்த இடத்தில் விடப்படும் குறைபாடு உருவாக்கத்தில் குறைபாட்டைத் தோற்றுவிக்கும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

கடைசியாக,  தனிமனித உருவாக்கத்தின் முதலாவது நோக்கமான ஒரு முஸ்லிம ஆளுமையை உருவாக்குதல்என்பதன் சாராம்சம் இதுதான். ஒரு முஸ்லிம் ஆளுமை உருவாக்கப்பட வேண்டும் என்பது ஒரு கடமை. ஒரு இலக்கு. கால சூழல் இட பரிமாணங்களின் அடிப்படையில் மாறக்கூடிய ஒரு விடயமன்று. அத்துடன் உருவாக்கப்படும் முஸ்லிம் ஆளுமை. ஒரு முழுமையான ஆளுமையாகவும் சமநிலையான ஆளுமையாகவும் காணப்படல் வேண்டும். இந்த உருவாக்கத்திற்கான முறையான பாடத்திட்டமும் பொறிமுறையும் காணப்பட வேண்டும் என்பதாகும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வில் இரண்டாவது நோக்கத்துடன் சந்திப்போம்.

Tuesday, October 15, 2013

ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனை

அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: பெருநாள் தினத்தில் தொழுகை முடிந்தவுடன் நபியவர்கள் மக்களைப் பார்த்து, ஸதகா செய்யுங்கள் என்று சொல்வார்கள், மக்கள் ஸதகா செய்வார்கள். அன்றைய தினம் பெண்கள்தான் அதிகமாக ஸதகா செய்தார்கள்,  என்றார்கள். முஸ்லிம்-
பெருநாள் தினத்தில் செய்யப்பட வேண்டிய ஒரு சிறந்த அமலை, இந்த ஹதீஸ் குறித்துக் காட்டுகிறது, அதுதான் ஸதகா.
பொதுவாக ஸதகாஎன்ற அமல் காலம், இடம், என்பவை வரையறுக்கப்பட்ட ஒரு இபாதத் அல்ல, மாற்றமாக எல்லா நேரங்களிலும், எல்லாக் காலங்களிலும் செய்யப்பட முடியுமானது. இருப்பினும் பெருநாள் தினத்தில் நபியவர்கள் விஷேடமாக ஸதகாவைக் குறிப்பிட்டிருப்பதானது, அன்றைய தினத்தில் அந்த செயலுக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பதனையே உணர்த்துகிறது. அந்த தனிச்சிறப்பு எதுவாக இருக்கலாம்?
பொதுவாக  பெருநாள் தினம் என்பது எல்லோரும் சந்தோஷமாக இருப்பதற்குரிய ஒரு நாள், இங்கு அந்த சந்தோஷம் ஒவ்வொரு மனிதனது உள்ளத்திலும் வெளிப்பட வேண்டும். அதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக அமைந்துவிடக்கூடாது. சுவையான உணவு, அழகா ஆடைகள், உறவுகளின் தரிசனம், லாக்களும் விழாக்களும் என அந்த சந்தோஷம் வெளிப்படுத்தப்பட முடியும். இந்த சந்தோஷ வெளிப்பாடும் ஒரு வணக்கம். இதுவும் நாம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதன் ஒரு வடிவம்.
எனவே இந்த சந்தோஷ இபாதத்வசதியில்லை என்ற காரணத்தினால் எவருக்கும் தடைப்பட்டுவிடக் கூடாது. ஒரு சமூகக் கட்டமைப்பின் ஒவ்வொரு தனிமனிதனும் அன்றைய தினம் அந்த சந்தோஷ இபாதத்தில் பங்கெடுக்க வேண்டும், அதற்காக ஒரு சமூகக் கூட்டு ஒத்துழைப்பை நபியவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள், என்பதை ஸீறாவைப் படித்துப் பார்க்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். மேலே கூறப்பட்ட ஹதீஸ் இந்த கூட்டு ஒத்துழைப்பின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியையே அடையாளப்படுத்திக் காட்டுகிறது.
இது ஒரு சுன்னா இதனை எமது ஊர் மட்டங்களில் நடைமுறைப்படுத்த முயல்வது நல்ல விளைவுகளைத் தரவல்லது.
அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடை பெறுகிறேன்.
தகப்பலள்ளாகு மின்னா வமின்கும்

குல்லு ஆமின் வஅன்தும் பிஹய்ர்