Wednesday, February 17, 2016

‘தாய்நாட்டுச் சிந்தனை’ ஒரு சமநிலைப் பார்வை

தாய் நாடுஎன்ற சொல் இன்றைய அரசியல் கலாச்சாரத்தினுள் முக்கிய இடத்தைப் பெறுகிறது. மனித மனங்களைக் கட்டிப் போடும் வல்லமை அதற்கிருக்கிறது. அரசியல் களத்தில் இது ஒரு பலமான ஆயுதம். ஆனால் இதனைப் பயன்படுத்தும் எல்லோரும்,  இதன் பொருள் பரப்பு குறித்த ஒத்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. 

அதுபோல் இஸ்லாமியத் தளத்திலும் தாய் நாட்டின் மீதான நேசம்,  பங்களிப்பு தொடர்பான விரிவான கருத்தாடல்கள் ஆரம்பிக்கபட்டுள்ளதைக் காணலாம். இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் தாய்நாட்டுச் சிந்தனை குறித்து, இஸ்லாமியப் பின்புலத்தில் நின்று ஒரு சமநிலைப் பார்வையை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு ஒரு புதிய பார்வை முன்வைக்கப்படுகிறது என்பதை விடவும்,  ‘தாய்நாட்டுச் சிந்தனைகுறித்த புரிதல்களில் காணப்படும் தெளிவின்மைகள் அகற்றப்பட்டு,  ஒரு செம்மைப்படுத்தலே இங்கு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்தக் கட்டுரை கீழ்வரும் கிளைத் தலைப்புக்களில் ஆராயப்படவுள்ளது.

1. தாயகம் - நாடு வேறுபாடு
2. ஷரீஅத் நிலைப்பாடு
3. சமநிலை வரையறைகள்
4. முஸ்லிம் பிரஜை ஒருவரின் பணி

தாயகம் - நாடு வேறுபாடு

தாய்நாடு என்பதில் தாயகம் - நாடு என்ற இரு சொற்கள் காணப்படுகின்றன. இவை இரண்டும் தனித்தனியாக எடுத்தாளப்படுகின்றபோது,  அவற்றின் பொருள் பரப்பும்,  பின்புலமும்,  அவை ஏற்படுத்தும் உணர்வும் நிச்சயமாக ஒரே மாதிரியானதாக இல்லை. தாயகம் என்பது மிகப் பெரும்பாலும் மனித இயல்புகள் மற்றும் உணர்வுகள் பாற்பட்ட ஒரு பொருள்பரப்பைக் கொண்டது. ஆனால் நாடு என்பது மிகப் பெரும்பாலும் அரசியல்பாற்பட்ட ஒரு பொருள் பரப்பைக் கொண்டது.

தாயகம் என்பது ஒருவன் பிறந்து,  வளர்ந்து,  வாழ்வதற்காகத் தெரிவு செய்து கொண்ட இடத்தைக் குறிக்கிறது. பல சமயங்களில் தான் பிறக்காத ஆனால் வாழ்வதற்காக மாத்திரம் தெரிவு செய்த இடத்தையும் இது குறிக்கும். ஏனெனில் தாயகம் என்பது மனித இயல்பு,  உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. அது நிலத்தை மாத்திரம் வைத்து எழுகின்ற ஒன்றல்ல. மாற்றமாக தன்னைச் சுற்றியுள்ள உறவுகள்,  பழக்க வழக்கங்கள்,  கலாச்சாரம் போன்ற பலவற்றின் அடிப்படையில் எழுகின்ற ஒரு விடயமாகும்.

இது குறித்து கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். “(மனிதன் வாழும்) ஊர்,  கிராமம்,  நகரம் இவற்றிலிருந்துதான் தாயகம் என்ற சிந்தனை தோன்றியது. ஊர்களும் கிராமங்களும் அதிகரித்தபோது,  பல காரணங்களால் மனிதன் தான் வாழும் ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது அவனால் தான் வாழ்ந்த இடத்தை மறக்க முடிவதில்லை. ஏனெனில் அங்கு அவன் குடும்பம்,  சொந்தங்கள்,  நண்பர்கள் என அன்பான உறவுகளை உருவாக்கியிருப்பான். எனவே,  அந்த இடத்தோடும் அங்கு வாழ்பவர்களோடும் அவனுக்கு ஒரு ஆத்மார்ந்த உறவு ஏற்பட்டு விடுகிறதுஎன்கிறார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் எவ்வாறு இருந்த போதிலும் தாயக சிந்தனை என்பது ஒருவனது குறித்த ஒரு இடத்தின் பாலான தேவையின் நிமித்தமும் அதனுடனான உறவின் காரணமாகவுமே ஏற்படுகிறது. இது இயல்பானதொரு விடயமாகும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் அடைக்கலம் புகுவதற்கு ஒரு இடம் தேவை. மிருகங்களுக்கு அவற்றின் குகைகளும்,  பறவைகளுக்கு அவற்றின் கூண்டுகளும் உள்ளன. பறவைகள் மீனினங்கள் போன்றன நீண்ட தூரங்களைக் கடந்து சென்ற போதிலும் மீண்டும் தமது வாழிடத்திற்குத் திரும்பி வருவதைக் காண்கிறோம். அதாவது அவற்றின் தாயகத்திற்குத் திரும்பி வருகின்றன. அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வழங்கியுள்ள நேர்வழி உள்ளுணர்வின் மூலம் அவை வழி தவறாது தமது வாழிடத்தை அறிந்து கொள்கின்றன.
எமது இரட்சகன்தான்,  தனது படைப்புகளுக்கு அனைத்தையும் வழங்கினான். பின்னர் வழியையும் காட்டினான்” (தாஹா – 50)1

கலாநிதி கர்ளாவி அவர்களின் வார்த்தைகளில் இருந்து தாயக சிந்தனை, மனித இயல்பு மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்பதையும் அது நிலத்தை மையப்படுத்தி எழுவது போல். அந்த நிலத்துடன் சம்பந்தப்பட்ட மக்கள்,  கலாச்சாரம் போன்றவற்றையும் மையப்படுத்தி எழுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். எனவேதான் ஒரு மனிதன் இயல்பாகவே தனது தாயகத்தை நேசிக்கிறான்,  அதற்காக செயற்படுகிறான்,  அதனைப் பாதுகாக்க முற்படுகிறான்.

குவைத்திய இஸ்லாமிய அறிஞர் கலாநிதி அஜீல் அந்நஷ்மி அவர்கள் இதுபற்றிக் கூறும் போது,  “தாயக சிந்தனை என்பது தனது சமூகம் மற்றும் வாழிடத்தின் மீதான ஒருவனது அன்பைக் குறித்துக் காட்டுகிறது. அதனைச் சார்ந்து வாழ்வதுவே கண்ணியம் என்ற அவனது உணர்வையும்,  அதற்காகத் தியாகம் செய்யும் அவனது தயார் நிலையும் குறித்துக் காட்டுகிறது. எனவே,  தாயக சிந்தனை என்பது ஒரு உள்ளார்ந்த மன உணர்வு. அது அன்பு,  விசுவாசம்,  சார்பெண்ணம்,  தாயகத்தின் உயர்ச்சிக்காகச் செயற்படும் சுயதூண்டல் போன்ற காரணிகளாக வெளிப்படுகின்றனஎன்றார்கள்.2

அடுத்து,  நாடு என்ற சிந்தனைக்கு வருவோம். நாடு என்பது நில எல்லை,  மக்கள்,  இறைமை ஆகிய மூன்றையும் இணைத்த ஒரு அலகைக் குறிக்கும். கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் குறிப்பிடுவது போல்,  ஒரு குறித்த நிலப் பிரதேசத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தினர் நீண்டகாலம் வாழும் நிலை அங்கு காணப்படும். அவர்கள் பிரத்தியேகமான சுயவிலாசம் கொண்ட சமூகமாக இருப்பர். ஒரு அரசாங்கத்தின் அடிப்படையில் இயங்குவர். சுய அரசியல் இறைமையுடன் அவர்கள் காணப்படுவர்.

 நாடு என்பதன் இந்த பொருள்பரப்பு,  நீண்ட கால ஓட்டத்தில் வளர்ச்சியடைந்த ஒரு சிந்தனையாகும். இங்கு குறித்த நிலப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தொகைக்கு ஒரு அரசியல் வடிவம் வழங்கப்படுகிறது. இந்த அரசியல் வடிவம் அந்த மக்களிடத்தில் எதனை எதிர்பார்க்கிறது எனின்,  அந்த நாட்டின் மீதான நேசம்,  அதனை வளர்த்தல்,  பாதுகாத்தல் போன்ற விடயங்களே எதிர்பார்க்கப்படுகின்றன.

தாயகம்,  நாடு என்ற இரு சிந்தனைகளையும் பார்க்கும்போது தாயக சிந்தனை இயல்பான மனித உணர்வின் அடிப்படையில் எழுவதையும் நாடு என்ற சிந்தனை அரசியல்,  நிர்வாக ரீதியான தேவையின் அடிப்படையில் எழுவதையும் காணலாம். தாயகத்தின் மீது இயல்பான அன்பும் பற்றும் எழுவது தவிர்க்க முடியாதது. ஆனால் நாட்டின் மீது அன்பும் பற்றும் அந்த நாட்டின் இயங்கு தன்மையைப் பொறுத்தே எழுகின்றது.

இந்த இரண்டு சிந்தனைகளும் இனம்,  மொழி,  மதம் போன்ற காரணிகளை மையப்படுத்தாமல் நிலம் என்ற காரணியை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில்தான் இவ்விரு சிந்தனைகள் குறித்த இஸ்லாமியப் பார்வையின் அவசியம் எழுகிறது. ஏனெனில் இஸ்லாம் அடிப்படையில் நிலம்,  மொழி,  இனம் ஆகியவற்றின் அடியாக மனிதனை பாகுபடுத்துகிறதா? அல்லது மனிதப் பாகுபாடு என்பது அவன் விரும்பித் தெரிவு செய்கின்ற அவனது நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரமே அமைகிறதா? போன்ற கேள்விகள் இத்தலைப்பினுள் எழுப்பப்படும் முக்கியமான வினாக்களாகும். எனவே,  நிலத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்குறித்த இரு சிந்தனைகளினதும் ஷரீஅத் நிலைப்பாட்டை அறிந்து கொள்வது இந்த இடத்தில் அவசியமாகிறது.

ஷரீஅத் நிலைப்பாடு

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல்,  தாயக சிந்தனை என்பது,  தான் பிறந்த அல்லது வாழுகின்ற நிலம்,  அதன் உறவுகள்,  கலாச்சாரம் என்பனவற்றின் மீதான பற்றின் அடிப்படையில் எழுகின்ற ஒரு சிந்தனையாகும். இது மனிதனின் இயல்பான உணர்வுடன் சம்பந்தப்பட்டது என்ற வகையில் இஸ்லாம் ஒரு போதும் அதனை மறுதலிப்பதில்லை. ஏனெனில் இஸ்லாம் மனித இயல்புடன் ஒத்துச் செல்கின்ற ஒரு மார்க்கம்.
கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் குறிப்பிடுவதுபோல்,  அல்குர்ஆன் பல்வேறு இடங்களில் பயன்படுத்தியுள்ள தியார்என்ற சொற்பிரயோகம் மிகப் பெரும்பாலும் தாயக சிந்தனையைக் குறிக்கின்ற வகையிலேயே அமைந்திருக்கிறது. அல்குர்ஆனின் தாயக சிந்தனையை விளங்கும் வகையில் அல்குர்ஆனுக்கான தலைப்பு ரீதியான ஒரு தப்ஸீர் எழுத முடியுமான அளவிற்கு அல்குர்ஆன் இச்சிந்தனையை பேசியுள்ளதாக அவர் கருதுகிறார்.3

அல்குர்ஆன் பல்வேறு இடங்களில் சொந்த வாழிடத்தை விட்டு வெளியேறுதல் அல்லது வெளியேற்றப்படுதல் குறித்துப் பேசுகின்றது. அவை ஒவ்வொன்றும் வாழிடம் என்பது மனித வாழ்வுடன் எந்தளவு பின்னிப் பிணைந்த ஒரு அம்சம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

 உதாரணமாக மனித சமூகத்துடன்,  அதிலும் குறிப்பாக யூத சமூகத்துடன் செய்து கொண்ட வாழ்வொப்பந்தமாக வாழிடத்திலிருந்து வெளியேற்றாமையைக் குறிப்பிடுகின்றது (பகரா 84).  
ஒரு சமூகத்திற்கான தண்டனையாக வாழிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டமையைக் குறிப்பிடுகின்றது (ஹஷ்ர் 2). 
ஒரு சமூகம் செய்த மிகப் பெரும் தியாகத்தை மெச்சிப் பாராட்டும் போது அவர்கள் சொந்த வாழிடத்திலிருந்து வெளியேறியமையைக் குறிப்பிடுகின்றது (ஹஷ்ர் 8). 
 ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அநீதியாக சொந்த வாழிடத்திலிருந்து வெளியேற்றப் படுகின்றமையைக் குறிப்பிடுகின்றது (ஹஜ் 39, 40).  
ஒரு சமூகம் மற்ற சமூகத்தின் மீது போர் தொடுக்கும் அனுமதிக்கான காரணமாகவும் சொந்த வாழிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டமையைக் குறிப்பிடுகின்றது (மும்தஹினா 8).  
ஒரு சமூகத்திற்கான குற்றப் பரிகாரமாகவும்,  அவர்கள் சுவர்க்கம் செல்லக் காரணமாக இருப்பதும் சொந்த வாழிடத்திலிருந்து வெளியேற்றப்படுதல் என்று குறிப்பிட்டுள்ளது (ஆல இம்ரான் 195).

அடுத்து,  நபியவர்கள் குறித்து அபூஹுரைரா (றழி) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். நபியவர்கள் மக்காவின் ஹஸுரா எனும் இடத்தில் நின்று கொண்டு சொன்னார்கள் அல்லாஹ்வின் பூமியில் நீ சிறந்தது என்றும் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியது என்றும் எனக்குத் தெரியும். உனது மக்கள் என்னை உன்னிலிருந்து வெளியேற்றிராவிட்டால் நான் வெளியேறியிருக்க மாட்டேன்என்றார்கள் (அஹ்மத்).

மற்றோர் ஹதீஸில்,  ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்கள் மதீனா வந்த போது அபூபக்ர் (றழி) அவர்களும் பிலால் (றழி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். ஆயிஷா (றழி)அவர்கள்,  இருவரையும் சுகம் விசாரிக்கச் சென்றபோது,  இருவரும் மக்காவைப் பிரிந்து வந்த கவலையை கவிதை வரிகளில் வெளிப்படுத்தினர். அது பற்றி நபியவர்களிடம் கூறிய போது பின்வருமாறு துஆச் செய்தார்கள். இறைவா மக்கா மீது உள்ள அன்பைப் போல் அல்லது அதனை விடவும் அதிகமாக மதீனா மீது அன்பை ஏற்படுத்துவாயாக. மதீனாவை சீர்படுத்திவிடு,  மதீனாவின் உற்பத்திகளிலும் வியாபாரத்திலும் எமக்கு பரகத்தைத் தந்துவிடு. அதன் நோயை நகர்த்தி ஜுஹ்பா எனுமிடத்தில் போட்டு விடுஎன்றார்கள். (புஹாரி)

மேற்சொன்ன அல்குர்ஆன்,  சுன்னா ஆதாரங்களின் ஒளியில் நின்று பார்க்கும் பொழுது,  வாழிடத்தின் மீதான நேசமும்,  பற்றும்,  அதற்கு நன்மையை நாடுதலும்,  அதன் அபிவிருத்திக்காக உழைத்தலும், அதனைப் பாதுகாத்தலும், மனித இயல்பு சார்ந்தது மாத்திரமன்றி அது ஒரு ஷரீஅத் பெறுமானமாகவும் காணப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

எனவே,  தாயக சிந்தனை என்பது ஈமான் வலியுறுத்துகின்ற ஒரு சிந்தனையேயன்றி ஈமானுக்கெதிரான ஒரு சிந்தனையல்ல. இங்கு கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் குறிப்பிடும் ஒருவிடயத்தை எடுத்துக் காட்டுவது பொறுத்தம் என நினைக்கிறேன். 

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டாவது ஹதீஸில் நபியவர்கள் மதீனா குறித்து கேட்ட துஆவைப் பார்க்கும் போது,  இன்றைய முஸ்லிம் சிறுபான்மையினருக்கு,  அதிலும் குறிப்பாக குடிபெயர்ந்து,  ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு சிறந்த படிப்பினை இருக்கிறது. அவர்கள் தாம் வாழும் நாட்டை நேசிப்பதும்,  அந்த நாட்டின் நலன்களில் பங்கேற்பதும். அபிவிருத்தியில் கலந்து கொள்வதும்,  நாடு குறித்த சாதகமான மனநிலையில் செயற்படுவதும் அவசியமானது மாத்திரமன்றி அது ஒரு ஷரீஅத் பெறுமானம் என்பதையும் இந்த ஹதீஸ் வலியுறுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.4

அடுத்து நாடு என்ற சிந்தனையின் ஷரீஅத் நிலைப்பாட்டுக்கு வருவோம். ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் நாடு என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில்,  குறித்த மக்கள் தொகையினர்,  குறித்ததொரு உடன்பாட்டின் அடிப்படையில் வாழுதலைக் குறிக்கும். இந்த வாழ்க்கை முறையை அடிப்படையில் இஸ்லாம் மறுதலிக்கவில்லை. மதீனாவில் நபியவர்கள் உருவாக்கிய வாழ்க்கை முறை மிகப் பெரும்பாலும் நாடு என்ற இந்த நவீன சிந்தனை வடிவத்தை ஒத்ததாகவே காணப்பட்டது.

இது குறித்து கலாநிதி கர்ளாவி அவர்கள் விளக்கும்போது,  நபியவர்களுடைய மதீனா சாசனத்தை உற்று நோக்கும்போது,  உம்மத் என்ற பிரயோகத்தை நான்கு பரப்புக்களில் பயன்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். முதலாவது,  நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உம்மத்,  இது மார்க்க சகோதரத்துவத்தின் மீது கட்டப்படுகிறது. இரண்டாவது அரசியல் ரீதியான உம்மத். இது பல்வேறு மார்க்கங்களை ஒரு அரசியல் அலகில் இணைத்த உம்மத்தைக் குறிக்கிறது. மூன்றாவது பௌதீக நில எல்லையை அடிப்படையாகக் கொண்ட உம்மத். இது தனித்துவ அரசியல் அடையாளத்தின் மீது கட்டப்படுகிறது. நான்காவது சமூக,  கலாச்சார ரீதியான உம்மத். இது குடும்ப,  சமூகப் பிணைப்புக்களின் அடிப்படையில் கட்டப்பட்டதாகும்.

இங்கு உம்மத் என்பதன் மூன்றாவது பொருள் பரப்பான பௌதீக நில எல்லைகளின் அடிப்படையில் அமைந்த உம்மத் என்ற பொருள் பரப்பே,  இன்றைய நில எல்லைகளால் வகுக்கப்பட்ட நாடு என்ற சிந்தனையைப் பேசுகிறது. கலாநிதி கர்ளாவி அவர்கள் கூறுவது போல் இங்கு குறித்த ஒரு நில எல்லைக்கு உற்பட்டு வாழும் மக்களை,  மதீனா சாசனம் ஒரே உம்மத் என்று அடையாளப்படுத்தியது. மதீனா சாசனத்தின் முதலாவது, இரண்டாவது ஷரத்துக்கள் இவ்வாறு கூறுகின்றன. மதீனாவாசிகள் மற்றும் குறைஷிகளைச் சேர்ந்த முஃமின்களும்,  முஸ்லிம்களும்,  அவர்களைப் பின்பற்றியவர்கள், தொடர்ந்து வந்தவர்கள்,  அவர்களுடன் இணைந்து போராடியவர்கள்,  அனைவரும் ஏனைய மனிதர்களைத் தவிர்த்து ஒரே உம்மத்தினராவர்”5

நவீன கால பாஷையில் அரசியல் இறைமையைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தையே இது குறிக்கிறது. மேற்கூறப்பட்ட ஷரத்திலிருந்து புரிந்துகொள்ளப்படும் ஒரு முக்கிய விடயம் என்னவெனின்,  நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட உம்மத்தினரும் கூட,  இந்த பௌதீக நில எல்லைக்குற்பட்ட சமூகத்தினருடன் இணையும்போது மாத்திரமே மேற்குறித்த அரசியல் சிறப்புரிமையையும்,  இறைமையையும் பெறுவர். இல்லாதபோது அவர்கள் அதற்குத் தகுதியற்றவர்களாகி விடுவர். இக்கருத்தை அல்குர்ஆனும் கீழ்வருமாறு விளக்குகிறது. ஈமான் கொண்டு ஹிஜ்ரத் செய்யாதிருப்போரைப் பொறுத்தவரை அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரை உங்களுக்கு அவர்கள் எந்த வகையிலும் பொறுப்பற்றவர்கள். உங்களிடம் அவர்கள் உதவி கேட்டால் உதவி செய்வது கடமை. ஆனால் நீங்கள் ஏற்கனவே உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு சமூகத்திற்கு எதிரானதாக அது அமைதல் கூடாது” (அன்பால் 72).  

எனவே, இஸ்லாமிய உம்மத்தில்,  அகீதாவின் அடிப்படையில் அங்கத்துவம் வகிக்கும் ஒருவன் இஸ்லாமிய நாட்டின் அங்கத்துவத்தை இயல்பாகப் பெற்றுக் கொள்ள மாட்டான். இஸ்லாமிய நாட்டில் வாழும் போது மாத்திரமே அது அவனுக்குக் கிடைக்கிறது. மாத்திரமன்றி இஸ்லாமிய நாட்டில் அங்கத்துவம் பெறாத முஸ்லிமுக்கு உதவுதல் என்பதும் கூட நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டே நடைபெறும் என்பதையும் மேலுள்ள வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.6

சமநிலை வரையறைகள்

மேலே பேசப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையில் தாய்நாட்டுச் சிந்தனைஎன்பது,  ஒரு புறத்தில் இயல்புக் காரணியையும் மறு புறத்தில் அரசியல் காரணியையும் கொண்டது. இந்த இரு காரணிகைளயும் இணைத்த வகையிலேயே இன்றைய எமது வாழ்வு முறை அமைந்திருக்கிறது. குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நாட்டில் முஸ்லிம்களது வாழ்வு மிகத் தெளிவாக இந்த இரு அடிப்படைகளையும் கொண்டது. இந்த இரு அடிப்படைகளும் ஷரீஅத் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்ற வகையில் இங்கு எமது வாழ்வு ஒரு இஸ்லாமிய வாழ்வு என்பதில் சந்தேகமில்லை. 

அத்துடன்,  இந்த வாழ்வு,  இஸ்லாமிய வடிவத்தை எப்பொழுது மிகச் சரியாகப் பெறுகிறது எனின் தாயக சிந்தனையும்,  நாடு என்ற சிந்தனையும் அதனைச் சார்ந்துள்ள மக்கள் தொகுதியிடம் எதனை எதிர்பார்க்கின்றதுவோ அதனை முழுமையாக வழங்கும் போதே எமது வாழ்வு மிகச் சரியாக இஸ்லாமிய வடிவத்தைப் பெறுகிறது. அந்த வகையில் தாய் நாட்டை நேசித்தல்,  அதன் நலன்களில் அக்கறை கொள்ளுதல்,  அதனை அபிவிருத்தி செய்வதில் பங்கு கொள்ளுதல்,  அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துதல் போன்ற வடிவங்களில் முஸ்லிம்களின் வாழ்வு அமைகின்ற போது,  அது இஸ்லாமிய வாழ்வாக அமைகிறது. 

ஏனெனில் இஸ்லாமிய ஷரீஅத்,  தாயக சிந்தனையையும் நாடு என்ற சிந்தனையையும் இஸ்லாமிய பரப்பிற்குள் உற்பட்டது என்று பேசும் போது அதன் புறத் தோற்றப்பாடுகளை மாத்திரம் கருத்தில் கொள்ளவில்லை. மாற்றமாக அதன் மூலம் நாடப்படுவது எது? அது என்ன விளைவுகளைத் தருகின்றன? என்ற விடயங்களே முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் அதன் பொருள்பரப்பு,  இலக்குகள்,  செயற்பாடுகள்,  விளைவுகள் என்பனவே அவற்றிற்கு இஸ்லாமிய வடிவத்தைக் கொடுக்கின்றன. எனவே,  இவற்றை மையப்படுத்திய செயலார்ந்த ஈடுபாட்டினாலேயே இஸ்லாமிய வாழ்வு உருவாகிறது. மாற்றமாக வெற்றுக் கோஷங்களோ தோற்றப்பாடுகளோ மாத்திரம் இஸ்லாமிய வாழ்வை உருவாக்கி விடப் போவதில்லை.

அந்தவகையில் இங்கு சில சமநிலைப்படுத்தல்களின் அவசியம் எழுகிறது. அவை குறித்து அடுத்து நோக்குவோம்.

1.தாய்நாட்டைச் சார்ந்திருத்தலும் இஸ்லாமிய அகீதாவைச் சார்ந்திருத்தலும் ஒன்றையொன்று முரண்படுமா?

மதீனா சாசனத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பது போல் உம்மத்தின் அகீதா வடிவமும்,  அரசியல் வடிவமும் அடிப்படையில் ஒன்றை ஒன்று முரண்படிக் கூடியவை அல்ல. ஆனால் இரண்டு விடயங்கள்  குறித்து நாம் தெளிவுடன் காணப்படல் வேண்டும்.

முதலாவது,  கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் குறிப்பிடுவது போல்,  பல சமங்களில் தாய்நாட்டுச் சிந்தனைஒரு நம்பிக்கைக் கோட்பாட்டின் தரத்திற்கு உயர்த்தப்பட்டு நோக்கப்படுகின்றது. அல்லது அல்லாஹ்வுக்கு நிகரான ஒன்றாக எவரும் தலையீடு செய்ய முடியாத,  நிகரற்ற ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது. இது ஒரு பெரும் ஏமாற்று. சிலர் தமது அதிகார நலன்களை காப்பாற்றிக் கொள்ளவும் அடக்குமுறையை நியாயப்படுத்தவும் சுகபோகத்தை இழக்காதிருக்கவும் நாய்நாட்டுச் சிந்தனையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். தாய்நாட்டு நலன்,  பாதுகாப்பு,  இறைமை போன்ற அழகான விடயங்களை முன்னிறுத்தி சொந்த மக்களையே அழித்தொழிக்கும் அநியாயம் நடைபெறுகிறது. சர்வதேச உலகமும் அந்த நாட்டின் இறைமையில் தலையீட செய்ய முடியாது என்று வேடிக்கை பார்க்கிறது. இந்த இடத்தில் தாய்நாட்டுச் சிந்தனை வணங்கப்படும் ஒரு கடவுளாக மாறி விடுகிறது. தாய்நாட்டுச் சிந்தனையின் இந்தத் தீவிர நிலை தவறானது,  இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாதது. 

தாய் நாட்டுச் சிந்தனையை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால் தாய்நாடு என்ற பெயரில் இணையற்ற ஒரு சிலை உருவாக்கப்படுவதையும்,  அது எல்லையில்லா அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.7

இரண்டாவது,  கலாநிதி யூசுப் கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போல்,  அடிப்படையில் அகீதாவைச் சார்ந்திருத்தலும்,  தாய்நாட்டைச் சார்ந்திருத்தலும் ஒன்றையொன்று முரண்படாவிட்டாலும்,  தாய்நாடா?  அகீதாவா?  என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு பிரிகோட்டில் ஒருவர் நிற்கின்ற நிலை ஏற்படும் எனின்,  கண்டிப்பாக அகீதாவே முற்படுத்தப்படல் வேண்டும். 

இஸ்லாமிய வரலாற்றில் ஸஹாபாக்கள் அகீதாவுக்காக தமது சொந்த நிலத்தைத் துறந்து சென்றதை நாம் காணலாம். அல்குர்ஆன் கூறுகிறது அவர்கள் அநியாயமாக தமது சொந்த வாழிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ்வே எமது இரட்சகன் என்று சொன்னதனாலேயே இது நடைபெற்றது” (ஹஜ் - 40).

கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் குறிப்பிடுவது போல்,  ஏனைய சித்தாந்தங்களில் இல்லாத இஸ்லாமிய அகீதாவின் சிறப்பம்சம் என்னவெனின்,  இஸ்லாமிய அகீதா சமகாலத்தில் பல்வேறு சார்புநிலைகளை அல்லது விசுவாச நிலைகளை ஏற்கிறது. இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் வாழ்வு கட்டமைக்கப்படுகின்றபோது,  அது குடும்பத்தின் மீதான விசுவாசத்தையும் ஏற்கிறது. நாட்டின் மீதான விசுவாசத்தையும் ஏற்கிறது. மனித இனத்தின் மீதான விசுவாசத்தையும் ஏற்கிறது. ஏன் நிலத்தின் மீதான விசுவாசத்தையும் ஏற்கிறது. இவை ஒன்றை ஒன்று முரண்பட்டது என்று கூறவில்லை. 

ஆனால் பல சமயங்களில் தாய் நாட்டுச் சிந்தனையாளர்கள் தாய்நாட்டின் மீதான விசுவாசத்துடன் வேறு எதுவும் இணைந்திருப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இஸ்லாமிய அகீதா மிகவும் விசாலமானது. அனைத்தையும் அங்கீகரிக்கிறது. மாத்திரமன்றி இஸ்லாமிய அகீதாவே நாட்டிற்குப் பங்களிக்குமாறும் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய அகீதாவை ஏற்றல்,  பின்பற்றல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானதாக அமையுமேயன்றி ஒருபோதும் பாதகமானதாக அமைய மாட்டாது என்கிறார்.8

2. தாய்நாட்டைச் சார்ந்திருத்தலும் உம்மத்தைச் சார்ந்திருத்தலும் ஒன்றை ஒன்று முரண்படுமா?

நபியவர்கள் கூறினார்கள் முஃமின்கள் தமக்கு மத்தியிலான அன்பு,  பரிவு,  கருணை போன்ற பரிமாற்றங்களில் ஒரே உடம்பைப் போன்றவர்கள். அதில் ஒரு உறுப்பு நோய்வாய்ப்பட்டாலும்,  முழு உடம்பும் கண் விழித்தும்,  காய்ச்சலாலும் அவதியுறும்என்றார்கள் (முஸ்லிம்).

இது உலகெங்கும் வாழும் முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியிலான பிணைப்பையும் நெருக்கத்தையும் பேசுகிறது. அந்தவகையில் இந்த உம்மத்தின் ஒரு பிரதிநிதி உலகின் எந்த மூலையில் அவதியுற்றாலும் அவனுக்காகக் குரல் கொடுத்தல் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. உங்களது இந்த உம்மத்,  ஒரே உம்மத்,  நான் உங்களது இரட்சகன்,  என்னையே வணங்குங்கள்” (அன்பியா – 92)  என்று அல்குர்ஆன் நாம் ஒரே உம்மத் என்பதை ஞாபகப்படுத்துகிறது. 

ஆனால் இங்கு ஒரு விடயத்தை மனதில் கொள்ளுதல் வேண்டும். உலக முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களில் கவனம் செலுத்துதல் அவர்களுடனான உறவைப் பேணுதல் என்பது,  தாய்நாட்டு மக்களது விவகாரங்களையும் அவர்களுடனான உறவையும் மறந்து அல்லது புறக்கணித்த வடிவில் அமைந்து விடக் கூடாது. அதேவேளை தாய் நாட்டுப் பிரச்சினையை முற்படுத்துகிறோம் என்ற பெயரில் உலக முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்கள் தமக்குரியவை அல்ல. அவை ஒவ்வொன்றும் அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரம் என்பது போல் நடந்து கொள்வதும் தவறானது. இங்கு அவசியமானது அழகிய சமநிலை.

அடுத்து,  தாய்நாட்டு நலனை பாதிக்கின்ற வகையில் உலக முஸ்லிம் உம்மத்திற்கு உதவுதல் என்பது அமைந்து விடக் கூடாது. அதேவேளை தாய்நாட்டு சட்டத்தின் பிரகாரம் உதவி செய்ய அனுமதியுள்ள இடத்திலும் மௌனமாக இருந்து விடவும் கூடாது.

3. இஸ்லாமிய இயக்கங்களில் அங்கத்துவம் வகித்தல் தாய்நாட்டுச் சிந்தனைக்கு முரணானதா?

இஸ்லாமிய இயக்கங்களில் அங்கத்துவம் வகித்தல்,  தாய்நாட்டுச் சிந்தனைக்கு முரணானதாக சில சமயங்களில் நோக்கப்படுகிறது. ஒரு இயக்க சிந்தனைக்கு விசுவாசமாக இருத்தலும் தாய் நாட்டுக்கு விசுவாசமாக இருத்தலும் ஒரு போதும் முரண்பட மாட்டாது. நபியவர்கள் மதீனா சாசனத்தை வரைந்து மதீனா நாட்டை உருவாக்கியபோது,  அந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்பட்ட ஒவ்வொரு சமூகமும் அவர்களது கோத்திரக் கட்டமைப்புகளோ அல்லது கோத்திரங்களுக்கிடையில் காணப்பட்ட உடன்படிக்கைகளோ எதுவும் இரத்துச் செய்யப்படவில்லை. காரணம் சம காலத்தில் வேறுபட்ட பல விசுவாச நிலைகள் காணப்படலாம். அவை முரண்பாடுகளாகக் கருதப்படத் தேவையில்லை என்பதாகும்.

அதேவேளை,  இஸ்லாமிய இயக்கங்களின் சிந்தனையும் செயற்பாடுகளும் கூட,  தாய்நாட்டுச் சிந்தனையுடன் முரண்படக் கூடியவையல்ல. தாய்நாட்டுச் சிந்தனை மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும் வகையிலேயே இஸ்லாமிய இயக்கங்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் காணப்படுகின்றன. இஸ்லாமிய விழுமியங்கள்,  சுதந்திரம்,  சமாதானம், சகவாழ்வு,  அபிவிருத்தி,  மனித நாகரீகம் போன்ற இலக்குகளை நோக்கியே இஸ்லாமிய இயக்கங்கள் செயற்படுகின்றன. இவை ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பெரிதும் பங்களிப்புச் செய்யக் கூடிய காரணிகளாகும். அந்தவகையில் தாய் நாட்டுச் சிந்தனையும் இயக்க சிந்தனையும் ஒரே திசையில் ஒன்றை ஒன்று முழுமைப்படுத்தும் வகையில் பயணிக்கும் சிந்தனைகளாகும்.

அடுத்து,  முக்கியமாக இஸ்லாமிய இயக்கங்களின் சர்வதேச உறவுகள் சந்தேகக் கண்டு கொண்டு பார்க்கப்படும் நிலை இருக்கிறது. அது தாய் நாட்டுக்கு அபாயமானதாக விளங்கப்படுத்தப்படும் நிலையிருக்கிறது. இங்கு ஒரு விடயம் உண்மையானது. சர்வதேச உலகில் இஸ்லாத்தின் பெயரால் தொழிற்படும் ஐஸிஸ் போன்ற, ஆயுதத்தால் கிலாபத்தைக் கொண்டு வர நினைக்கும் இயக்கங்கள் மனித குலத்திற்கே எதிரானது என்பதில் சந்தேகமில்லை. அவை இஸ்லாமிய சிந்திப்புக்களின் விளைவுகள் என்பதை விடவும் சதிகளின் உற்பத்திகள் என்பதுவே உண்மை. அந்த வகையில் அவற்றுடனான உறவுகள் தனிமனித வடிவிலும் சரி,  இயக்க வடிவிலும் சரி தாய்நாட்டுச் சிந்தனைக்கு எதிரானதாகவே காணப்படும்.

 மாற்றமாக ஜனநாயகபூர்வமான நடுநிலை சர்வதேச அமைப்புக்களின் உறவுகள்,  தாய்நாட்டுச் சிந்தனைக்குப் பயனளிக்கும் வகையிலேயே காணப்படும். அறிவு,  பொருளாதாரம்,  சமூக நலன் போன்ற பல்வேறு பரப்புக்களில் இந்த உறவுகள் மூலம் தாய் நாடு பயனடைகிறது என்பது உண்மை. எனவே,  அடிப்படையில் அந்த உறவுகள் மூலம் தாய்நாட்டுச் சிந்தனை பலப்படுகிறதேயன்றி,  முரணானதாய் அமைய மாட்டாது.

4. தாய்நாட்டுச் சிந்தனை வெறியுணர்வாக மாறக்கூடாது.

இங்கு வெறி என்பது,  நியாயமாக இருப்பினும் அநியாயமாக இருப்பினும் தனக்கு சார்பாகவும் பிறர்க்கு எதிராகவும் நடந்து கொள்வதைக் குறிக்கும். பல சமயங்களில் தாய்நாட்டுச் சிந்தனை அதன் மக்களை இந்த இடத்திற்குத் தள்ளி விடுவதைப் பார்க்கிறோம். தனது தாய் நாட்டை நேசித்தல் என்பது பிறரை வெறுத்தல் அல்ல. தனது தாய் நாட்டை ஆதரித்தல் என்பது பிறரை எதிர்த்தல் அல்ல. நாம் அரசியல் அடிப்படையில் பல  நாடுகளாகப் பிரிந்திருக்கிறோம். ஆனால் எமக்கு மத்தியில் மனித சகோதரத்துவம் இருக்கிறது. சிறந்த மானுட விழுமியங்கள் வாழும் ஒரு மனித நாகரீகத்தை கட்டியெழுப்புவதையே இஸ்லாம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி கூறுகிறார் : இஸ்லாம் முஸ்லிமுக்கு இவ்வாறுதான் கற்பிக்கிறது. எங்கு சுழன்றாலும் சத்தியத்திலேயே நிற்க வேண்டும். கசப்பாக இருந்தாலும் சத்தியத்தையே மொழிய வேண்டும். உறவினர் மற்றும் பெற்றோர் ஏன் தனக்கே எதிரானதாக இருந்தாலும் நீதியாகவே நடந்து கொள்ள வேண்டும். அதுபோல் ஒரு சமூகத்துடன் காணப்படும் பகைமை அவர்களுடன் அநீதியாக நடந்து கொள்ள வைக்கக் கூடாது. தான் விரும்புகின்ற விரும்பாத அனைவருடனும் நீதியாகவே நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் நீதி அவனது அனைத்து அடியார்களுக்கும் உரியதாகும்”9

5. தாய் நாட்டின் மதச்சார்பின்மை என்பது மதத்தைத் துறத்தலோ அல்லது விட்டுக் கொடுத்தலோ அல்ல.

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவது போல்,  சிலர் தாய்நாட்டுச் சிந்தனையை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றமைக்கான காரணங்களில் ஒன்று அது மதச்சார்பின்மையின் அடிப்படையில் கட்டப்படுகிறது என்பதாகும். ஆனால் தாய்நாட்டுச் சிந்தனை என்பது மதம் சார்ந்த அல்லது சாராத எந்த சிந்தனையின் மீதும் கட்டமைக்கப்பட்டதல்ல. மாற்றமாக அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தக் கூடிய சார்பு நிலையற்ற பொதுச் சிந்தனை ஒன்றின் மீதே கட்டப்படுகிறது. 

நபியவர்களது மதீனா சாசனத்தின் இயல்பும் இவ்வாறுதான் காணப்பட்டிருக்கிறது. மதீனா சாசனத்தின் மூலாதாரமாக (Reference) அல்குர்ஆனும் சுன்னாவும் காணப்பட்டிருக்கிறது. ஆனால் அது எந்த உரிமையிலும் கடமையிலும் முஸ்லிம்களுக்கு சார்பானதாகவும் ஏனையோருக்கு எதிரானதாகவும் காணப்படவில்லை. ஏனைய எந்த சமூகத்தினரும் தமது மத நம்பிக்கைகளைத் துறக்க வேண்டும் என்றோ அவற்றில் சிலவற்றில் விட்டுக் கொடுப்புகள் செய்ய வேண்டும் என்றோ சொல்லவில்லை. இஸ்லாமியப் போதனைகளின் சிறப்பம்சம் இதுதான்.

மதச்சார்பின்மை பேசும் மதத்தை முற்றாக நிராகரித்தல் என்ற நிலைப்பாடு தாய்நாட்டுச் சிந்தனையில் ஏற்கப்படவில்லை. மதத்தைத் துறந்து அல்லது நம்பிக்கைகளில் சமரசம் செய்து வருகின்ற ஒரு உடன்பாடாக இது இல்லை. மாற்றமாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் மத நம்பிக்கை தான் இந்த உடன்பாட்டை தூண்டுகிறது,  அதனைப் பலப்படுத்துகிறது.

முஸ்லிம் பிரஜை ஒருவரின் பணி

இது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு தலைப்பு. இருப்பினும் இங்கு கலாநிதி ஸலாஹ் ஸுல்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்தை மாத்திரம் சுருக்கமாகப் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இஸ்லாம் ஸாலிஹான ஒரு மனிதனையும் ஸாலிஹான ஒரு பிரஜையையும் சமகாலத்தில் உருவாக்குகிறது. இடத்தைப் பொறுத்தவரை அவன் சிறந்த பிரஜை. நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அவன் சிறந்த மனிதன். இதுதான் ஒருவன், தான் பிறந்த,  பயனடைந்த,  உறவு கொண்ட பூமிக்கு செலுத்தும் விசுவாசத்திற்கும்,  அவன் எந்தப் பூமியில் வாழ்ந்தாலும் அவனைப் பயனுள்ள ஒரு மனிதனாக மாற்றும் உயர்பண்பாடுகளுக்கும் விழுமியங்களுக்கும் இடையிலான சம்பந்தமாகும். ஒரு முஸ்லிமின் ஈமான் செழுமையடைகிறதுபோது,  அவன் ஒரு பிரஜைக்குரிய கீழ்வரும் ஐந்து பரப்புக்களில் அமைந்த கடமைகளை ஆழமாக உணர்ந்து கொள்வான்.

1. அல்லாஹ்வுக்கு அடிமையாக வாழ்வான். மனித மற்றும் ஜின் இனங்களை எனக்கு அடிமையாக வாழவே படைத்திருக்கிறேன்” (தாரியாத் - 56)

2. மக்கள் நலன்களில் கரிசனை எடுத்து செயற்படுபவனாக வாழ்வான். உம்மை நாம் உலகத்தாருக்கு அருளாகவே அனுப்பி வைத்தோம்.” (அன்பியா – 108)

3. பூமியை அபிவிருத்தி செய்பவனாக வாழ்வான். அவன்தான் உங்களை பூமியில் இருந்து படைத்து அதனை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டான்” (ஹுத் - 61)

4. சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வான். (ஷரீஅத்துக்க முரண்படாத வகையில்) அவர்களுக்கு மிகவும் உசிதமானது எது எனின்,  கட்டுப்படுவதும் நல்ல வார்த்தை சொல்வதுமாகும்” (முஹம்மத் - 20)

5. அரசாங்கத்துடன் ஷரீஅத்துக்கு முரண்படாத வகையில் பரஸ்பரம் ஒத்துழைப்பவனாக வாழ்வான். நன்மையான விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள். தீமையான விடயங்களில் ஒத்துழைக்காதீர்கள்” (மாஇதா – 2)10

மேற்சொன்ன ஐந்து அம்சங்களும் சமகாலத்தில் முஸ்லிம் என்ற வகையிலும் தாய் நாட்டின் பிரஜை என்ற வகையிலும் ஒருவனிடத்திருந்து வெளிப்பட வேண்டிய கடமைகளை எடுத்துக் காட்டுகின்றன. அந்தவகையில் முஸ்லிமாக இருத்தலும் ஒரு நல்ல பிரஜையாக இருத்தலும் ஒன்றை ஒன்று முரண்படுகின்ற இரு அம்சங்களல்ல. மாற்றமாக ஒன்றை ஒன்று முழுமைப்படுத்துகின்ற பலப்படுத்துகின்ற பணிகள் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

நாம் நல்ல முஸ்லிம்களாகவும்,  நல்ல பிரஜைகளாகவும் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

உசாத்துணைகள்

1. கர்ளாவி,  அல்வதன் வல் முவாதனா,  பக்கம் 14,  15,  தாருல் ஷுரூக் 2010.
2. அந்நஷ்மி,  அல்வதன் வல்வதனிய்யா பீ மீஸானிஷ் ஷரீஆ,  ஆய்வுக் கட்டுரை,  ராபிதது உலமா அஷ்ஷரீஆ மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது 2010.
3. வஸ்பி ஆஷுர்,  அல் வஹ்தா அல் வதனிய்யா,  பக்கம் 33,  தாருல் மகாஷித் - 2016
4. அல்வஹ்தா அல் வதனிய்யா,  பக்கம் 35.
5. கர்ளாவி,  அல்வதன் வல் முவாதனா.
6. கர்ளாவி,  அல்வதன் வல் முவாதனா,  பக்கம் 30,  31,  32,  தாருஷ் ஷுரூக்,  2010.
7. ஜாஸிர் அவ்தா , அடக்குமுறையைக் கட்டவிழ்த்தல் தொடர்பான கட்டுரைத் தொடரின் மூன்றாம் பாகம்.
8. அல் வஹ்தா அல் வதனிய்யா,  பக்கம் 51,  52,  53.
9. அல்வதன் வல் முவாதனா,  பக்கம் 50.

10. ஸலாஹ் ஸுல்தான் , முன்னுரை,  அல்வஹ்தா அல்வதனிய்யா,  பக்கம் 3,  4.