Saturday, September 22, 2018

தஃவாவில் - கட்டிவளர்த்தலும் கட்டுடைத்தலும்


   ஒரு சமநிலைப் பார்வை 
(1)




இஸ்லாமிய தஃவாவில் கட்டிவளர்த்தல் மற்றும் கட்டுடைத்தல் என்ற இரு அணுகுமுறைகளும் மிகவும் முக்கியமானவை. இன்றைய தஃவாக் களத்தில் இவற்றைச் சுற்றிய விவாதம் முதலிடத்திலிருக்கிறது என்று சொன்னால் அது மிகையானது அல்ல என்று நினைக்கிறேன். பழைய தலைமுறையினர்க்கும் புதிய தலைமுறையினர்க்குமிடையிலான கருத்து வேறுபாட்டின் மையப் புள்ளிகளில் இதுவும் ஒன்று. மாத்திரமன்றி சில இடங்களில் சிலரது ஒதுங்குதல்களுக்கும் சிலரது மௌனங்களுக்கும் ஏன்?  உடைவுகளுக்கும் கூட இது காரணமாக இருந்திருக்கிறது. எனவே தஃவா பரப்பிற்குள்ளே இது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்ற வகையில் இத்தலைப்பை கீழ்வரும் கிளைத் தலைப்புக்கள் மூலம் அணுகலாம் என்று நினைக்கிறேன். அவற்றில் முதல் பகுதி மாத்திரமே இன்றைய பத்தியில் ஆராயப்படுகிறது.

1.            கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்றால் என்ன?
2.            கட்டிவளர்த்தல் அணுகுமுறையும் ஷாதிபியும் பன்னாவும்
3.            கட்டுடைத்தல் அணுகுமுறை என்றால் என்ன?
4.            சமநிலை எங்கே இருக்கிறது?

கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்றால் என்ன?

முதலில் கட்டிவளர்த்தல் என்ற சொல்லின் பொருளை சற்று விளங்கிக் கொள்ள முற்படுவோம். அறபு மொழியில் அல்பினாஃ என்ற சொல்லின் தமிழ் பதமே கட்டிவளர்த்தல் என்று விளங்கப்படுத்தப்படுகிறது. அல்பினாஃ என்பது நேரடிப் பொருளில் ஒரு கட்டடத்தைக் கட்டுதல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டாலும் சிலேடைப் பொருளில் ஒரு சிந்தனையையோ அல்லது ஒரு வேலைத்திட்டத்தையோ உருவாக்கி, வளர்த்து,  அபிவிருத்தி செய்தல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது,  (முஃஜமுல் மஆனி). 

இந்தக் மொழிக் கருத்தை மீள்வலியுறுத்தும் வகையிலேயே இதன் பிரயோகக் கருத்தும் அமைந்திருக்கிறது. பிரயோகக் கருத்து பிரதானமாக இரண்டு விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது செயல் சார்ந்தது,  அதாவது மொழிக்கருத்தில் விளங்கப்படுத்தப்பட்டது போல் ஒரு செயல் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இங்கு தெளிவாக ஒரு செயல் தோற்றம் பெறுகிறது. பேச்சளவில் மாத்திரம் நிற்காமல் செயல்திட்டம் ஒன்று உருவாகிறது. ஏனெனில் செயல்தான் நிலைபேறானது,  தொட்டுணரும் பயனைத் தரக் கூடியது. 

இரண்டாவது உணர்வு சார்ந்தது,  அதாவது சாதகமான உளநிலை ஒன்று இங்கு வெளிப்படும். முடியும் என்ற நம்பிக்கை,  நல்லது நடக்கும் என்ற எண்ணம்,  செயற்பட வேண்டும் என்ற கடமையுணர்வு,  பொறுப்புடைமை போன்ற மனநிலைகள் இதில் உற்பொதிந்திருக்கும். இந்த சாதகமான உளநிலையும் செயலுருவாக்கமும் தான் கட்டிவளர்த்தல் அணுகுமுறை எனப்படுகிறது. 

அந்தவகையில் அல்பினாஃ அல்லது கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்பது ஒரு ஆக்க அணுகுமுறை அழிக்கும் அணுகுமுறையல்ல. ஒன்றை தோற்றுவிக்கும் செயற்பாடு இல்லாது செய்யும் செயற்பாடு அல்ல. ஒன்றை சேர்க்கும் வேலை பிரிக்கும் வேலையல்ல. ஒன்றை ஏற்கும் அணுகுமுறை மறுக்கும் அணுகுமுறையல்ல. ஒன்றைத் தூக்கி நிறுத்துவது வீழ்த்தி விடுவதல்ல. ஒன்றைத் தாங்கிப் பிடிப்பது கைவிடுவதல்ல.

கட்டிவளர்த்தல் அணுகுமுறையின் ஷரீஅத் பெறுமானம்

கட்டிவளர்த்தல் அணுகுமுறை இஸ்லாமிய ஷரீஆவில் மிகுந்து வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயம். உண்மையில் தனியான அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இக்கருத்தை விளக்குவதை விடவும் இஸ்லாம் சொல்லும் சில மொத்தத் தத்துவங்கள் இக்கருத்தை மிகவும் அழுத்தமாக பேசுகின்றன. அவ்வகையில் சில சிந்தனைகளை இங்கு பார்ப்போம்.

இஸ்லாமிய ஷரீஆவில் அமல் என்று ஒரு விடயம் பேசப்படுகிறது. அதாவது செயல்,  இந்த செயல்நிலையை ஷரீஅத் ஒரு விடயத்தின் பரிபூரணம்,  முழுமை என்கிறது. அதாவது ஒரு விடயம் சம்பூரணமாவதும் முழுமையடைவதும் செயல் இணைகின்ற பொழுதுதான். வெறுமனே வார்த்தைநிலையை மாத்திரம் இஸ்லாம் சம்பூரணமான ஒன்றாக அல்லது முழுமையான ஒன்றாக நோக்கவில்லை. அல்குர்ஆன் கூறுகிறது ஈமான் கொண்டவர்களே நீங்கள் செய்யாத ஒன்றை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்புக்குரியதாகும் (ஸப்-02). இந்த வசனத்தில் சொல்லுடன் செயலும் இணைவதே முழுமை என்று பார்க்கப்படுகிறது. வெறுமனே வார்த்தைநிலை மாத்திரம் அல்லாஹ்விடத்தில் எவ்வகையிலும் ஏற்புநிலையில் இல்லை என்பதைக் கூறுகிறது. வார்த்தை நிலையோடு மாத்திரம் நிற்றல் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய வெறுப்புக்குரியது என்று ஏன் கூறப்பட்டது? ஏனெனில் செயலில்லாத வார்த்தையாக மாத்திரம் மனிதனது நடத்தை ஒரு போதும் இருந்து விடக் கூடாது,  அதனால்தான் அல்லாஹ் தனது வெறுப்பை இந்த இடத்தில் வெளிப்படுத்தியுள்ளான். ஏனெனில் செயலில்லாத வார்த்தையால் விளைவது எதுவுமில்லை. செயலே உலகை அர்த்தப்படுத்துகிறது. பேசுதல் மாத்திரம் பிழையானது அல்ல,  ஆனால் அதனுடன் மாத்திரம் சுறுங்குவது பிழையானது. ஏனெனில் உலகிற்கு வேலைத்திட்டங்கள் தேவை,  செயற்படுத்துபவர்கள் தேவை,  அதனால்தான் இந்த வசனத்தில் செயலில்லாத பேச்சைக் கண்டித்த அல்லாஹ்தஆலா அடுத்த வசனத்தில் ஒரு முக்கிய வேலைத்திட்டத்தைப் பற்றிப் பேசுகின்றான். இறுக்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தைப் போன்று ஒரே அணியாக அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்(ஸப்-03). இது ஒரு நீண்டகால வேலைத்திட்டம்.

அதுபோல் தனித்து உளநிலையை மாத்திரம் முழுமையானதாக இஸ்லாம் கருதவில்லை. உளநிலையுடன் செயலும் இணைய இணைய வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. ஈமானுக்கு இமாம்கள் முன்வைத்த வரைவிலக்கணம் மிகவும் பிரபல்யமானது வார்த்தையால் மொழிந்து உள்ளத்தால் ஏற்று உறுப்புக்களால் செயற்படுத்துவது என்றனர். (ஜிப்ரீல்,  ஹயாத் இப்னு முஹம்மத். அல்ஆதார் அல் வரிதா அன் உமரிப்னு அப்தில் அஸீஸ் பில் அகீதா. பாகம் 01,  பக்கம் 541.)  இந்த மூன்றும் இணைகின்ற பொழுதே அது ஈமானாக மாறுகிறது. எனவே வார்த்தையை மாத்திரம் அல்லது உளநிலையை மாத்திரம் இஸ்லாம் ஈமான் என்று கருதவில்லை. செயலும் சேர்கின்ற பொழுதே அது ஈமான்.
நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும் செல்வங்களையும் பார்ப்பதில்லை மாற்றமாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான் என்றார்கள்,  (முஸ்லிம்). இந்த ஹதீஸ் உள்ளத்தை மாத்திரம் பார்ப்பதாகக் கூறவில்லை,  உள்ளத்துடன் செயலையும் சேர்த்துப் பார்ப்பதாகவே நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே,  ஷரீஆவில் செயல் எனும் எண்ணக்கரு எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனின்,  ஒரு பொசிடிவ் கண்ணோட்டமே அங்கு வெளிப்படுகிறது. அதனை நடத்தையின் அல்லது ஷரீஆவின் முழுமையை அல்லது பரிபூரணத்தன்மையை பிரதிபலிக்கும் ஒன்றாக அடையாளம் காட்டுகிறது. அதனை ஆக்கத்தை நோக்கிய உந்துதலாகக் காட்டுகிறது. அதனை நிலைபேறான ஒரு வேலைத்திட்டம் உலகில் ஸ்தாபிக்கப்படுவதாய் விளங்கப்படுத்துகிறது. இதுதான் அல்பினாஃ எனும் கட்டிவளர்த்தல் அணுகுமுறை. இதனால்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது மக்களைப் பார்த்து செயற்படுமாறு நபியே நீங்கள் சொல்லுங்கள்,  உங்களது செயற்பாட்டை அல்லாஹ்வும் அவனது தூதரும் முஃமின்களும் காண்பார்கள்,  கற்புலனாகக் கூடியதையும் கற்புலனாகாததையும் அறிந்த அல்லாஹ்விடத்தில் நீங்கள் மீண்டு வருவீர்கள் அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவை உங்களுக்கு அறிவிக்கப்படும் என்கிறது. (தௌபா 105). இங்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் முஃமின்களும் காண்பார்கள் என்பது,  அது உலகில் தொட்டுணரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது.
இக்கருத்தை மற்றொரு அல்குர்ஆன் வசனம் இன்னும் தெளிவாக முன்வைக்கிறது. நுரை பயனின்றிப் போய்விடும்,  ஆனால் மக்களுக்குப் பயனளிக்கின்ற ஒன்று உலகில் என்றும் நிலைத்து நிற்கும் (ரஃத்-18). இங்கு மக்களுக்குப் பயனளிக்கும் ஒன்று நிலைத்து நிற்கும் என்கிறது. எனவே செயல் என்பது நிலையான ஒரு வேலைத்திட்டம் கட்டியெழுப்படுதல் என்பதையே இது குறிக்கிறது.

அந்தவகையில்,  ஷரீஆவில் செயல் என்ற எண்ணக்கரு பற்றிய விளக்கம் இஸ்லாத்தின் கட்டிவளர்த்தல் அணுகுமுறையை பறைசாட்டுகிறது.
அத்துடன்,  அல்குர்ஆனின் மற்றொரு சொற்பிரயோகம் கட்டிவளர்த்தல் அணுகுமுறையை விளங்கப்படுத்துகிறது. அதுதான் இகாமா எனும் சொல். சாதாரணமாக இச்சொல் நிலைநாட்டுதல் எனும் கருத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. அல்குர்ஆனில் அதிகமாக தொழுகையை நிலைநாட்டுதல் என்ற கருத்தில் இகாமா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது போல் தீனை நிலைநாட்டுதல்,  தௌராத்தை நிலைநாட்டுதல்,  நீதியான சமநிலையை நிலைநாட்டுதல்,  சாட்சியத்தை நிலைநாட்டுதல் போன்ற பல கருத்துக்களைச் சொல்வதற்கு; இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து இடங்களிலும் இகாமா எனும் சொல்லின் மூலம் குறித்த அந்த செயற்பாட்டை நிறைவேற்றுதல் என்ற கருத்தன்றி,  குறித்த அந்த செயற்பாடு இந்த உலகில் நிலைபெறுவதற்கான எல்லாவகையான ஏற்பாடுகளையும் செய்தல் என்ற கருத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உதாரணமாக தொழுகையை நிலை நாட்டுதல் எனும் பொழுது,  அது அதன் புறவடிவங்கள் சரியாகப் பேணப்படுதல்,  பரிபூரண உள்ளச்சம் காணப்படுதல்,  அதன் நோக்கங்களை விளங்கித் தொழுதல்,  அது ஜமாஅத்துடன் நிறைவேற்றப்படுதல்,  அது கூட்டாக நிறைவேற்றப்படுவதற்கான புற ஏற்பாடுகள் காணப்படுதல்,  அது பற்றிய ஆர்வம் ஏற்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள்,  போன்ற பலவிடயங்களை உள்ளடக்கிய தொழிற்பாடுதான் இகாமதுஸ் ஸலாத் எனப்படுகிறது. இதனை மற்றொரு வகையில் கூறினால் தொழுகை மனிதவாழ்வில் இன்றியமையாத ஒரு அமல்,  அது ஒருபோதும் சமூக வாழ்வில் இல்லாது போகின்ற ஒரு நிலமை ஏற்பட்டுவிடக் கூடாது. அதற்கான எல்லா ஒழுங்கும் மேற்கொள்ளப்படுவதையே நாம் இகாமதுஸ் ஸலாத் என்கிறோம். இது உண்மையில் தொழுகை பற்றி வந்துள்ள ஒரு ஆயத் அல்லது ஒரு ஹதீஸின் மூலம் புரிந்து கொள்ளப்படும் கருத்தல்ல. மாற்றமாக தொழுகை பற்றி வந்துள்ள அனைத்து ஆயத்களையும் ஹதீஸ்களையும் தொகுத்து விளங்கும் போது பெறப்படும் கருத்தாகும். இகாமத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் இந்த வடிவத்தில் புரிந்து கொள்ளப்படுகின்ற பொழுது,  குறித்த செயல் பூமியில் நிலைநாட்டப்படுவதற்கான ஒரு ஏற்பாடு அங்கு பரிந்துரைக்கப்படுவதைக் கண்டு கொள்ளலாம்.

அந்தவகையில் இகாமா எனும் சொல் ஒரு நிலைபேறான வேலைத்திட்டம் கட்டமைக்கப்படுவதையே குறித்து நிற்கிறது. எனவே இகாமா என்பதன் மூலமும் கட்டிவளர்க்கும் அணுகுமுறை வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

அடுத்து,  ஷரிஆ பேசும் கேள்வி கேட்டல் மற்றும் விடையளிக்கும் அணுகுமுறையிலும் இந்தக் கட்டிவளர்த்தல் அணுகுமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆன் கூறுகிறது அவர்கள் உங்களிடம் பிறையைப் பற்றிக் கேட்கின்றனர்,  அது மக்களுக்குக் காலத்தைக் காட்டக் கூடியதும் ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதுமாகும் என்று கூறுங்கள்…” (பகரா-189). இமாம் ஷாதிபி அவர்கள் கூறுவது போல் இந்த இடத்தில் கேள்வி கேட்டவரது நோக்கம் பிறை ஏன் மெல்லியதாக ஆரம்பித்து பூரணவடிவம் பெற்று மீண்டும் மெல்லியதாக மாறுகிறது என்பதை அறிந்து கொள்வதாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ்தஆலா அவனுக்கு எது பயனுள்ள செயலாக இருக்குமோ அதனை மாத்திரம் விடையாக இங்கு தந்தான். (ஷாதிபி,  அல்முவாபகாத்,  பாகம் 01,  பக்கம் 46). இங்கு வினா கேட்பவர் ஆக்கசிந்தனையை நோக்கி வழிநடாத்தப்படுகிறார். அவர் வீணான ஒரு விடயத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இது கட்டிவளர்க்கும் அணுகுமுறையாகும்.

நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து,  அல்லாஹ்வின் தூதரே மறுமை நாள் எப்போது? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அதற்காக நீங்கள் என்ன  தயார்படுத்தி வைத்திருக்கிறீர்கள்? என்று மறுகேள்வி கேட்டார்கள்…” (புஹாரி,  முஸ்லிம்). இந்த ஹதீஸிலும் மறுமை எப்பொழுது வரும் என்பதைத் தெரிந்து கொள்வதை விடவும் அதனை எதிர் கொள்வதற்கான தயார்படுத்தல்தான் முக்கியமானது என்பது வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் அதுதான் மனிதனுக்குப் பயனுள்ளது. இந்த இடத்திலும் கேள்விக்கான விடையளிக்கப்படுவதை விடவும் ஆக்க சிந்தனையை நோக்கி மனிதன் வழிநடாத்தப்படுவதுதான் முக்கியமாக நடைபெறுகிறது. இதுவும் கட்டிவளர்க்கும் ஒரு அணுகுமுறைதான்.

அதுபோல்,  பயனுள்ள,  ஒரு ஆக்கத்தைக் கொண்டுவராத,  சாதகமான விளைவைத் தராத கேள்விகளையும் கூட இஸ்லாம் பெரியளவில் வரவேற்கவில்லை. அல்குர்ஆன் கூறுகிறது ஈமான் கொண்டவர்களே,  சில விடயங்களைப் பற்றிக் கேட்காதீர்கள்,  அவை உங்களுக்குத் தெரியவருவது உங்களுக்குத் தீங்காகவே அமையும்…” (மாஇதா-101). இதனால்தான் நபியவர்களிடம் தனது தந்தை யார் என்று கேள்வி கேட்ட மனிதனுக்கு நபியவர்கள் உனது தந்தை ஹுதாபா என்று பதில் தந்த போதிலும் நபியவர்கள்  கோபத்துடன் அவசியமற்ற விடயங்களை என்னிடம் கேட்காதீர்கள்,  உங்களுக்கு அவசியமானதை நான் சொல்வேன் என்றார்கள் (புஹாரி,  முஸ்லிம்). இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் அதிகரித்த கேள்விகள் கேட்கப்படுவதையும் தடுத்தார்கள் (புஹாரி). ஏனெனில் அதிகரித்த கேள்விகள் பயனற்ற விவகாரங்களை நோக்கி கலந்துரையாடலை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது.
நபியவர்கள் பயனற்ற கேள்வியையே தடுத்திருக்கிறார்கள்,  எனின் ஒரு கேள்வியின் மூலம் இருக்கின்ற ஒரு நலன் பாதிக்கப்படுகிறது எனின் கட்டாயமாக அந்தக் கேள்வி தடுக்கப்பட வேண்டியதாகும். நபியவர்கள் கூறினார்கள் மக்களில் மிகப்பெரிய குற்றம் செய்தவர் யார் எனின்,  ஹராமாக்கப்படாத ஒரு விடயம் பற்றிக் கேள்வி கேட்டு,  அவரது கேள்வியின் காரணமாக அவ்விடயம் ஹராமாக்கப்படுவதாகும் என்றார்கள்,  (புஹாரி,  முஸ்லிம்). இங்கு வலியுறுத்தப்படும் முக்கிய விடயம் என்னவெனின் கேள்வி கேட்டல் தடுக்கப்படுதல் என்பதை விடவும்,  மனிதவாழ்வில் முக்கியமாய் விதைக்கப்பட வேண்டியது எது என்பதுதான். வாழ்வில் நலன் உருவாக்கப்பட வேண்டும். இருக்கின்ற ஒரு நலன் சிதைக்கப்படக் கூடாது. இதுதான் முக்கியமானது. இதனைப் பாதிக்கும் காரணிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் அல்லது அவை குறித்து போதியளவு எச்சரிக்கப்பட வேண்டும். உண்மையில் கேள்வி  கேட்டல் குறித்து எச்சரிக்கை வழங்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் மூலம் மனித நலன் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற விடயமே வலியுறுத்தப்படுகிறது.

எனவே,  கேள்வி கேட்டல் மற்றும் விடையளித்தல் எனும் விவகாரத்தில் இஸ்லாம் பேசியுள்ள வரையறைகளும் எச்சரிக்கைகளும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பின்புலம் இதுதான். கட்டிவளர்த்தல் எனும் பொசிடிவ்வான அணுகுமுறை சமூகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது.

அடுத்து,  அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டடம் எனும் சொல் அல்லது கட்டுதல் எனும் சொல்,  ஒரு சமூக உருவாக்கத்தைக் குறிக்க அல்லது சமூகப்பிணைப்பைக் குறிக்க அல்லது சமூகத்தின் நீண்டகால இருப்பைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த சொல்லுக்குள்ளேயே கட்டிவளர்த்தல் எனும் கருத்து மறைந்திருக்கிறது மாத்திரமன்றி குறித்த அந்த செயற்பாடுகளிலும் வெகுவாக இழையோடியிருக்கும் அம்சம் இந்த கட்டிவளர்த்தல் பொறிமுறையாகும். நபியவர்கள் கூறினார்கள் எனக்கும் எனக்கு முன்பு வாழ்ந்த நபிமார்களுக்குமான உதாரணம்,  ஒரு மனிதன் ஒரு கட்டடத்தைக் கட்டுகிறான்,  அதில் ஒரேயொரு செங்கல்லுக்குரிய இடத்தைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளையும் அழகிய வடிவில் பூரணப்படுத்தியிருக்கிறான்,  அந்தக் கட்டடத்தைக் கடந்து செல்லும் மனிதர்கள் சொல்வார்கள்,  இந்த ஒரு செங்கல்லுக்குரிய இடத்தைத் தவிர ஏனைய விடயங்களை வைத்துப் பார்த்தால் இதனை விடவும் அழகான ஒரு கட்டடத்தை நாம் பார்த்ததில்லை என்பார்கள்,  அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த செங்கல் என்றார்கள் (புஹாரி,  முஸ்லிம்). இங்கு பேசப்படும் முக்கிய உண்மை என்னவெனின்,  இந்த தீன்,  குறித்த ஒரு காலப்பகுதியில் மாத்திரம் குறித்த ஒரு தூதுவரால் மாத்திரம் கட்டப்பட்ட ஒரு பணியல்ல,  மாற்றமாக மனிதவரலாற்றின் தோற்றம் முதல் மெதுவாக கட்டப்பட்டு வந்த ஒரு விடயம்,  அந்த வகையில் இது ஒரு தொடரான செயன்முறையாகவே இருந்திருக்கிறது. ஒன்றன் நீட்சியாக அதனை முழுமைப்படுத்தும் வகையிலேயே பிரிதொன்று வந்திருக்கிறது. அதன் இறுதி வடிவத்தை முகம்மத் (ஸல்) அவர்கள் முன்வைத்துப் பூரணப்படுத்தியிருக்கிறார்கள். இதனைத்தான் அல்குர்ஆன்இன்று உங்கள் மார்க்கத்தைப் ப10ரணப்படுத்தி விட்டேன்,  எனது அருளை சம்பூரமாக்கி விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக ஏற்றுக் கொண்டு விட்டேன்…” (மாஇதா-03) என்கிறது. நபிமார்களது பணி குறித்த இந்த உவமை மிகவும் அழகாக கட்டிவளர்த்தல் அணுகுமுறையை பிரதிபளிப்பதைக் காணலாம்.

மற்றொரு சமயத்தில் நபியவர்கள் கூறினார்கள்,  ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவன். ஒருவர் மற்றவரை பிணைத்து வைத்திருப்பார் என்றார்கள்,  (புஹாரி,  முஸ்லிம்). அல்குர்ஆன் கூறுகிறது இறுக்கமான கட்டடத்தைப் போன்று ஒரேயணியாக இருந்து அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்றவர்களை அவன் விரும்புகின்றான் (ஸப்-04). ஒரு சமூகத்தின் இருப்பு அதன் வெற்றி போன்றன அந்த சமூகத்தின் ஆழமான அத்திவாரம்,  இறுக்கமான பிணைப்பு போன்றனவற்றிலேயே தங்கியிருக்கிறது. சமூகக் கட்டமைப்பு குறித்த இந்தப் பார்வை,  கட்டிவளர்த்தல் அணுகுமுறையையே மறைமுகமாக வலியுறுத்துகிறது. இதனால்தான் நபியவர்களின் சமூக உருவாக்கப் பொறிமுறையை அல்குர்ஆன் அமைதியாக நிதானமாக நடைபெறவேண்டிய ஒரு பயிர்செய்கைக்கு ஒப்பிட்டிருக்கின்றது. அல்குர்ஆன் கூறுகிறது இன்ஜீலில் அவர்களுக்கான உதாரணம்,  ஒரு பயிர் தனது கன்றை ஈன்றெடுத்து அதற்குப் பக்கலமாய் இருக்கிறது,  கன்று வலுவடைந்து தனது சொந்தக்காலில் நிற்கின்ற பொழுது,  பயிர்செய்தவர்களை அது சந்தோசப்படுத்துகின்றது. காபிர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது (பத்ஹ்-29). இங்கு நபியவர்கள் ஸஹாபா சமூகத்தை கட்டிவளர்த்தமை,  ஒரு வலைப்பின்னல் அமைப்பில் அமைதியாக நடைபெற்றிருக்கிறது. அதிலும் உருவாக்கி,  பலப்படுத்தி,  சொந்தக்காலில் நிற்கும் வரை அந்தப் பணி தொடர்ந்திருக்கிறது. இங்கு மிகத் தெளிவாக கட்டிவளர்க்கும் அணுகுமுறை பிரதிபளிக்கிறது.

மேற்கூறப்பட்ட ஆதாரங்களை மையப்படுத்திப் பார்க்கின்ற பொழுது,  கட்டிவளர்த்தல் எனும் அணுகுமுறை இஸ்லாமிய ஷரீஆவின் ஒரு அடிப்படைப் பெறுமானமாக,  அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரதிபளித்துக் காணப்படுவதை அவதானிக்கலாம். அந்தவகையில் கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்பது ஷரீஆவின் மகாஸிதுகளில் ஒன்று என்பது இங்கு நிறுவப்பட முடியும். ஏனெனில் கட்டிவளர்த்தல் எனும் செயற்பாடு ஒரு அடிப்படையான செயற்பாடு,  காலத்தால் அவசியமற்றுப் போகின்ற ஒன்று அல்ல. எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் உரிய ஒன்று.

உசாத்துணைகள்
1.            அஷ்ஷாதிபி,  அபூ இஸ்ஹாக். (1975). அல்முவாபகாத் பீ உஸுலிஷ் ஷரீஆ. தாருல் பிக்ரில் அரபி.
2.            அல்கர்ளாவி,  யூசுப் அப்துல்லாஹ். (2004). கைப நதஆமலு மஅத் துராஸ் வத்தமத்ஹுப் வல் இக்திலாப். கெய்ரோ: மக்தபது வஹ்பா.
3.            ஜும்ஆ,  அப்துல் ரஹ்மான்.(2007). துரூஸுன் பில் பஹ்மி வல் அமல் ஜௌலாதுன் ஹெளலல் உஸுல் அல் இஷ்ரீன். கெய்ரோ,  எகிப்து : தாருன் நஷ்ர் லில் ஜாமிஆத்.
4.            அப்துல் அஸீஸ்,  அமீன் ஜும்ஆ. (2005). பஹ்முல் இஸ்லாம் பீ ழிலாலில் உஸுலில் இஷ்ரீன். இஸ்கந்தரிய்யா,  எகிப்து : தாருத் தஃவா லித்தபஃ வந்நஷ்ர் வத்தௌஸீஃ.
5.            ஜிப்ரீல்,  ஹயாத் இப்னு முஹம்மத். (2002). அல்ஆதார் அல் வரிதா அன் உமரிப்னு அப்தில் அஸீஸ் பில் அகீதா. மதீனா முனவ்வரா,  சவூதி அரேபியா: இமாதுல் பஹ்ஸ் அல் இல்மி பில் ஜாமிஆ அல் இஸ்லாமிய்யா.