Monday, February 10, 2014

நாளைய இருப்பை உத்தரவாதப்படுத்தல்

தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்களில் முதலாவது நோக்கம் குறித்து கடந்த அமர்வில் உரையாடினோம். முதல் நோக்கம் மனிதன் சம்பந்தப்பட்டது. அதாவது மனிதனில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்படல். அந்த மாற்றம் சமூக விளைவை தந்தாலும் தராவிட்டாலும் அந்த மனித மாற்றம் மாத்திரமே தனிமனித உருவாக்கத்தின் ஒரு இலக்காகும் என்று பேசினோம்.

இரண்டாவது நோக்கம் ஜமாஅத் சம்பந்தப்பட்டது. அல்லது சிந்தனை சம்பந்தப்பட்டது. ஒரு ஜமாஅத்தின் அல்லது ஒரு சிந்தனையின் நாளைய இருப்பு எவ்வாறு உத்தரவாதப்படுத்தப்படுகிறது? அந்த உத்தரவாதத்தை வழங்குவது தனிமனித உருவாக்கத்தின் ஒரு நோக்கமாகும். 

இங்கு நாம் சில கேள்விகளை எழுப்பிப் பார்க்கிறோம். நாளைய இருப்பு என்றால் என்ன? நாளைய இருப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் என்ன? தனிமனித உருவாக்கத்தால் அது எவ்வாறு உத்தரவாதப்படுத்தப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில்தான், இன்ஷா அல்லாஹ் கட்டுரையின் அடுத்த பகுதிகள் அமையவுள்ளன.

நாளைய இருப்பு என்றால் என்ன?

உலகில் இஸ்லாமிய மாற்றம் என்பது, நிலையானது, நீண்ட ஆயுளைக் கொண்டது. அதனை ஒரு போதும் இந்த உலகை விட்டும் துடைத்து எறிந்துவிட முடியாது. அவ்வாறு துடைத்தெறியப்படும் ஒரு நிலை வரும் எனின், அதுதான் மறுமை நாளாக அமைந்துவிடும். அந்த வகையில் ஒரு நிலையான நீண்ட மாற்றத்தையே நாளைய இருப்பு என்கிறோம். இங்கு மாற்றத்தின் வகைகளும் வடிவங்களும் மாறலாம். ஆனால் அதன் இஸ்லாமியப் பண்பு மாற மாட்டாது. அதற்கு எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் இறப்பு கிடையாது. இதுதான் இஸ்லாமிய மாற்றத்தின் இயல்பு.

இங்கு ஒரு முக்கிய விடயத்தைக் குறித்துக் காட்ட வேண்டும். இந்த இஸ்லாமிய மாற்றம் இரண்டு முக்கிய கூறுகளில் எழுந்து நிற்கின்றது. ஒன்று சிந்தனை. மற்றையது அந்த சிந்தனையைச் சுமந்த கட்டமைப்பு. இஸ்லாமிய மாற்றம் என்பது சிந்தனை மாற்றமும் கட்டமைப்பு மாற்றமும் இணைந்தது. 

ஒரு கொள்கையின் இருப்பு, அது தனிமனிதர்களில் மாத்திரம் வாழ்வதால் ஏற்பட மாட்டாது, மாற்றமாக அது சட்டங்களாகவும் ஒழுங்குவிதிகளாகவும் ஒரு கட்டமைப்பிலும் வாழவேண்டும். கட்டமைப்புதான் கொள்கைக்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கும். இங்குதான் ஒரு ஜமாஅத்தின் அவசியமும்,  தர்பியத்தின் அவசியமும் முக்கியம் பெறுகிறது. ஒரு ஜமாஅத்தாகத் தொழிற்படுவதன் மூலமும் தர்பியத் நிகழ்வதன் மூலமுமே சிந்தனை,  கட்டமைப்பு என்ற இரு பரப்புக்களிலும் ஒரு முழுமையான மாற்றம் ஏற்படுவது சாத்தியமாகிறது. சிந்தனையின்றி கட்டமைப்பு நிலைப்பதரிது,  கட்டமைப்பு இன்றி சிந்தனை வாழ்வதரிது. எனவே, ஒரு நிலையான நீண்ட மாற்றம் என்பது இந்த இரண்டு பரப்புகளும் இணைகின்ற பொழுதே சாத்தியப்படுகிறது. 

எனவே, நாளைய இருப்பு எனும் போது,  அது ஒரு நிலையான நீண்ட மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. அந்த நிலைத்த தன்மை உத்தரவாதப்படுத்தப்படுவதற்கு, அந்த மாற்றம், கட்டமைப்பு, சிந்தனை எனும் இரண்டு பரப்புக்களையும் உள்ளடக்கிய முழுமையான வடிவம் கொண்டதாகக் காணப்படுவது இன்றியமையாததாகிறது.

நாளைய இருப்பு பற்றி பேசுகின்ற பொழுது இங்கு மற்றுமோர் முக்கிய விடயம் குறித்து கவனம் செலுத்துவது பொறுத்தமானது. அதாவது நவீன முகாமைத்துவக் கற்கைகளில், ஒரு நிறுவனத்திற்குரிய இலக்குகளை வரையறை செய்யும் பொழுது, அந்த நிறுவனத்தின் நிலைத்த தன்மை என்ற பரப்பு குறித்தும் முக்கியமாகப் பேசுவார்கள். சாதாரணமாக ஒரு நிறுவனம் ஏன்? அது யாரை நோக்கிச் செயற்பட வேண்டும்? என்று கேட்டுப் பார்த்தால், அது மக்களுக்காகத்தான், மக்களை நோக்கியே செயற்பட வேண்டும், நிறுவனம் நிறுவனத்திற்காக அல்ல, என்பதே இயல்பாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தத்துவம்.

 ஆனால் மக்களுக்காகத் தொழிற்படுவதற்கு ஒரு நிறுவனத்தின் இருப்பும் முக்கியமானது. எனவே, ஒரு நிறுவனம் அதனுடைய நீண்டகால இருப்பை நோக்கியும் தொழிற்பட வேண்டும். அதனுடைய இலக்குகளில் ஒன்றாக இதுவும் காணப்பட வேண்டும். இந்த நியாயத்தையும் முகாமைத்துவ கற்கைகள் வெகுவாக வலியுறுத்துகின்றன. எனவே, மக்களுக்காக என்று தன்னை மறந்து போவதும் தவறானது,  தனக்காக என்று மக்களை மறந்து போவதும் தவறானது.

அந்தவகையில் நாளைய இருப்பு என்பதும் ஒரு இலக்கு. அந்த இலக்கு இல்லாமல் ஒரு ஜமாஅத்தோ, கட்சியோ,  நிறுவனமோ தொழிற்பட முடியாது. அவ்வாறு தொழிற்படுவது முயற்சிகளின் தோல்விக்கு மாத்திரமன்றி,  நிறுவனத்தின் மரணத்திற்கும் அது காரணமாக அமைந்துவிடும்.

 இங்குதான் நடைமுறையில் பல அமைப்புகளையும்,  சிந்தனைகளையும் பார்க்கிறோம். அவற்றை உருவாக்கியவர்களின் மரணத்தோடு அவையும் மரணித்து விடுகின்றன. அந்த சிந்தனை அல்லது நிறுவனம் நிலைத்து நிற்பதற்கான இலக்கோடும் அவை தொழிற்படவில்லை. மக்களுக்காகத் தொழிற்படுகிறோம் என்ற மயக்கத்தில் தம்மை மறந்து செயற்பட்டிருக்கிறார்கள்.

இன்று துருக்கிய உதாரணத்தைப் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். அல்லது குறிப்பாகச் சொன்னால் அர்தூகானின் மாதிரியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அந்த மாதிரி குறித்து எழுந்துள்ள மிகப் பெரிய அச்சம் என்ன தெரியுமா? அதன் நிலைத்த தன்மை குறித்த கேள்விக்குறி. அர்தூகானின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அந்த வேலைத்திட்டத்தை அதே வேகத்துடனும் உறுதியுடனும் அதே சிந்தனையுடனும்,  அடுத்து சுமந்து செல்லப் போவது யார் என்ற கேள்விக்கு விடை காண முடியாத ஒரு தடுமாற்ற நிலை காணப்படுவதாக பல விமர்சகர்கள் கருதுகிறார்கள். இங்கு மக்களுக்காக என்ற இலக்கு வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தனக்காக என்ற இலக்கு இன்னும் வெற்றி கொள்ளப்படவில்லை.

சமூகத்தில் ஜமாஅத்களை நோக்கி ஒரு உபதேசம் செய்வார்கள், “ஜமாஅத்தை வளர்ப்பதற்காக வேலை செய்யாதீர்கள். இஸ்லாத்தை வளர்ப்பதற்காக வேலை செய்யுங்கள்இந்த உபதேசத்தில் ஜமாஅத்தை வளர்ககாதீர்கள் என்பதன் மூலம் ஜமாஅத் ஒன்று தேவையில்லை. அதற்கு ஒரு நீண்டகால இருப்பு அவசியமில்லை என்றோ அல்லது ஜமாஅத்தை வளர்ப்பதும் அதனுடைய ஒரு இலக்காகக் காணப்படக்கூடாது என்று சொல்வார்கள் எனின், அவர்களது உபதேசம் தவறானது.

ஏனெனில் ஜமாஅத் என்பது இஸ்லாத்தை வளர்ப்பதற்கான ஒரு கருவி. இஸ்லாம் பாதுகாக்கப்பட அந்தக் கருவி பாதுகாக்கப்படுவதும் அவசியமாகிறது. இந்தக் கண்ணோட்டத்திலேயே ஜமாஅத்கள், தமது ஜமாஅத்தை ஸ்திரப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள். அதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சி பலமாக அமைய வேண்டும் என்பதே அவற்றின் எதிர்பார்ப்பு.

 ஜமாஅத்தை வளர்க்காதீர்கள் என்பதன் மூலம் வெறியுணர்வை வளர்க்காதீர்கள் என்றோ அல்லது மக்களை விட்டு உங்களுக்குள்ளே சுறுங்கிக் கொள்ளாதீர்கள் என்றோ அல்லது இஸ்லாத்தின் இலக்குகளை மறந்து போகாதீர்கள் என்றோ கூறுவார்கள் எனின், அந்த உபதேசம் நியாயமானது. ஏனெனில் ஒரு ஜமாஅத் தன்னை வளர்த்தல் என்பது,  வெறியை வளர்த்தலல்ல. மக்களை விட்டு ஒதுங்குவதல்ல. இஸ்லாத்தின் இலக்குகளை மறந்து போவதல்ல. இந்த விடயத்தில் ஜமாஅத்கள் தெளிவுடன் காணப்படுகின்றன என்று நினைக்கிறோம். ஆனால் இந்த விடயத்தில் தவறுகள் காணப்படுமிடத்து அவை கண்டிப்பாக திருத்தப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை.

இங்கு இன்னொரு விடயமும் நினைவு கூரப்பட வேண்டும். அது நாளைய இருப்புக்காய் செயற்படும்போது, இன்றைய நாளை மறந்து விடவும் கூடாது. சிலர் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வார்கள். நாளைய இருப்பைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். வேறு சிலர் நாளைய இருப்புக்காக மட்டுமே செயற்படுவார்கள். நிகழ்காலத்தில் வாழ மாட்டார்கள். இந்த இரு நிலைகளுமே தவறானவை. சமகாலத்தில் இன்றைக்காகவும் நாளைக்காகவும் செயற்படுகின்ற ஒரு வேலைத்திட்டமே வெற்றிகரமானது. 

ஏனெனில் அல்லாஹ்தஆலா ஒரே மனிதனில் இந்த இரண்டு இயல்பையும் படைத்துள்ளான். ஆனால் செயற்பாட்டளவில் அவன் அவற்றில் ஏதேனும் ஒரு பகுதியையே அதிகம் சார்ந்து காணப்படுவான். அந்தவகையில், மனிதர்களில் வேகமான நிகழ்காலச் செயற்பாட்டாளர்களையும் காண்பீர்கள். எதிர்கால மூலோபாய மனிதர்களையும் காண்பீர்கள். முதலாமவர் அதிகமாக உணர்ச்சிப் பிளம்பாக இருப்பார். எப்பொழுதும் மக்களுடன் வாழ்வார். அவர்களது பிரச்சினைகளுக்காக பெரும் கவலையடைவார். உடனே செயற்களத்தில் இறங்குவார். செயற்படத் தொடங்கியதன் பின்னர்தான் திட்டத்தைப் பற்றிச் சிந்திப்பார். 

ஆனால் இரண்டாமவர் அமைதியானவர். தனித்திருந்து ஆழ்ந்து சிந்திப்பவர். பிரச்சினைகளை நிதானமாகவே கையாழ்வார். அது ஏன் வந்தது? எப்படி வந்தது? இனிமேல் வராமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதிலேயே தனது கவனத்தைக் குவிப்பார். தெளிவான திட்டத்துடனேயே செயற்பாட்டுக்குச் செல்வார்.

இந்த இருவகையான மனிதர்களும் இன்றைய சமூக தஃவாக் களத்தில் இருக்கிறார்கள். இருவகையினர்க்கும் வேலை வேண்டும். எவரும் புறந்தள்ளப்படக்கூடாது என்றால்ஒரு ஜமாஅத்தில் கண்டிப்பாக நாளயை இருப்பும் ஒரு இலக்காகக் காணப்படல் வேண்டும். அதுபோல் இன்றைய தேவையும் ஒரு இலக்காகக் காணப்படல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட சிந்தனைகளைச் சாராம்சப்படுத்தினால் நாளைய இருப்பு என்பது ஒரு நிலையான நீண்டகால மாற்றத்தைக் குறிக்கின்றது. அந்த மாற்றத்தின் நிலைத்ததன்மை, அது சிந்தனையாகவும் கட்டமைப்பாகவும், அமைகின்ற போதே சாத்தியப்படுகிறது. அதுவே முழுமைத்தன்மையையும் பிரதிபளிக்கின்றது. அந்த நிலையான மாற்றத்திற்கான உற்பத்திகளையும் தயார்நிலைகளையும் மேற்கொள்வது ஜமாஅத்தின் ஒரு இலக்காகவே காணப்படுகிறது. இவ்வாறு தொழிற்படும்போது, நிகழ்காலத்தை மறந்துவிடவும் கூடாது.

நாளைய இருப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் என்ன?

அல்-குர்ஆனில் மிகவும் சிறிய ஸுரா, ஸுரதுல் கௌஸர், ஆனால் மிகவும் பெரிய ஒரு தத்துவத்தைப் பேசுகிறது. ஆஸ் இப்னு வாயில் என்பவன் நபியவர்களது தஃவா பற்றி இவ்வாறு சொன்னான்.
அவரை சும்மா விட்டு விடுங்கள். அவரது பிரச்சாரம் தானாகவே ஓய்ந்துவிடும். ஏனெனில் அவருக்கு ஆண் வாரிசுகள் கிடையாது. தொடர்ந்து அவரது பணியை முன்னே எடுத்துச் செல்ல ஆட்களில்லை” என்றான்.
 கிட்டத்தட்ட இதே போன்ற விமர்சனங்களைப் பலரும் முன்வைத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் அல்லாஹ்தஆலா இந்த ஸுராவை இறக்கி வைத்துள்ளான்நாம் உங்களுக்கு எல்லையற்ற அதிகரிப்பைத் தந்துள்ளோம். எனவே,  நீங்கள் அல்லாஹ்வுக்காக மாத்திரமே தொழுங்கள். அவனுக்காக மாத்திரமே அறுங்கள். உங்களது எதிரிகள்தான் சந்ததியற்றவர்கள்” (கௌஸர்)

அன்று அந்த மக்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. சந்ததி உள்ளவன் என்பது இரத்த உறவின் அடிப்படையிலான பரம்பரையைக் கொணடவன். ஒருவனது சிந்தனையாக இருக்கட்டும், பெருமையாக இருக்கட்டும் அனைத்தையும் கட்டிக் காப்பது இந்தக் குடும்பப் பரம்பரைதான். அதிலும் ஆண் வாரிசுகளே இவற்றை சுமந்து செல்வோராகக் கருதப்பட்டனர். எனவே, குடும்பப் பரம்பரை அற்ற ஒருவனது, சிந்தனைகளும் சரி, கோட்பாடுகளும் சரி எதுவுமே நீண்டகாலம் நிலைத்து நின்று வாழ மாட்டாது. இந்த நம்பிக்கைதான் ஆஸ் இப்னு வாயில் என்பவனது வார்த்தைகளில் தெளிவாகப் பிரதிபளித்தது.

ஆனால் அல்லாஹ்தஆலா அதற்கு மாற்றமான ஒரு நம்பிக்கையை இங்கு முன்வைக்கிறான். சந்ததி உள்ளவன் என்பது, குடும்பப் பரம்பரையைக் கொண்டவனல்ல. மாற்றமாகக் கொள்கைப் பரம்பரையைக் கொண்டவன். நபியவர்களுக்கு ஆண் வாரிசுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது கொள்கையை சுமந்து செல்லும் வாரிசுகள் எல்லையில்லாமல் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். அவரது கொள்கை எல்லையற்ற வாரிசுகளுடன், எல்லையற்ற வெற்றியைக் காணும். ஆனாலும் நபியவர்களுக்கு எதிரான சிந்தனைகள், அதனை சுமந்தவர்களது மரணத்துடன் மரணித்துப் போகும். உண்மையில் சந்ததியற்றவர்கள் அவர்கள்தான் என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

ஒரு கொள்கை நீண்ட காலம் நிலைத்து வாழ்வதுதான் வெற்றி. அதுதான் பெருமை. மாற்றமாக ஒரு மனிதனது ஆயுளோ அல்லது அவனுக்கு இரத்த வாரிசுகள் எத்தனை பேர் காணப்படுகிறார்கள் என்பதோ வெற்றியாகவோ பெருமையாகவோ காணப்பட மாட்டாது. எனவே, ஒரு சிந்தனையின் நாளைய இருப்பு உத்தரவாதப்படுத்தப்படல் என்பதுதான் அந்த சிந்தனையின் உண்மையான வெற்றி என்பதை இந்த ஸுரா வலியுறுத்துவதைக் காணலாம்.

லிபியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்,  பாலைவனச் சிங்கம் என அழைக்கப்பட்ட உமர் முக்தார் அவர்கள்,  அவரது இறுதித் தருவாயில் ஜெனரல் குராஸியானியின் முன்னால் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள். நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். ஒன்றில் வெற்றி பெறுவோம் அல்லது மரணித்து விடுவோம். நிச்சயமாக இது முடிவல்ல. நீங்கள் அடுத்த பரம்பரையுடனும் போராட வேண்டியிருக்கும் மாத்திரமல்ல தொடர்ந்து வரும் பரம்பரைகளுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். எனது ஆயுள் எனக்கு தண்டனை வழங்குகின்ற உங்களது ஆயுளை விடவும் மிகவும் நீளமானதுஎன்றார்கள்.
ஒரு தனிமனிதனின் அழிவு என்பது ஒரு கொள்கையின் அழிவு அல்ல. அது தலைவனின் அழிவாக இருந்த போதிலும் கூட,  அவருடன் கொள்கையும் மரணித்துப் போய்விட மாட்டாது. அந்த நம்பிக்கையைத்தான் உமர் முக்தார் அவர்களின் வார்த்தைகளில் பார்க்கிறோம். என்னை அழிக்க முடியும் எனது சிந்தனைகளை அழிக்க முடியாது என்ற உறுதியை அவரது வார்த்தைகள் பிரதிபளிக்கின்றன.

ஒரு சிந்தனையின் நாளைய இருப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதன் அவசியம் இந்த சம்பவத்தில் வலியுறுத்தப்படுகிறது. கொள்கையின் எதிரிகள் அதனை அழிப்பதற்கு என்றும் வழிபார்த்துக் கொண்டே இருப்பார்கள். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான போராட்டம் மறுமை நாள் வரையில் ஓய மாட்டாது என்ற நபியவர்களது வாக்குப்படி, சத்தியத்திற்கு எதிரிகள் என்றும் இருந்து கொண்டே இருப்பார்கள். சத்தியத்தை அழிப்பதற்கான அவர்களது முயற்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். சத்தியம் எதிர்கொள்கின்ற அபாயங்களில் ஒன்றுதான் அதன் தலைமைகள் அழிக்கப்படுவது. இங்கு சத்தியத்தின் நாளைய இருப்பு புதிய தலைமைகளின் உருவாக்கத்தில் தங்கியிருக்கிறது.

 இந்த உண்மையை பலஸ்தீனப் போராட்டத்தில் தெளிவாகக் காணலாம். எத்தனை தலைவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். ஆனால் அந்தப் போராட்டம் சிறிதளவேனும் நலிவடையவில்லை. தொடர்ந்தும பலமடைந்து கொண்டே செல்கின்றது.

தலைமை திட்டமிட்டு அழிக்கப்படுவது மட்டுமல்ல தலைமையின் இயல்பான மரணம் கூட,  ஒரு சிந்தனையில் அல்லது செயற்றிட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். நபம்பிக்கையீனங்களைக் கொண்டு வந்து விட முடியும். நபியவர்களது வபாத்தின் போது உமர் (றழி) அவர்கள் ஒரு வாளைக் கையில் எடுத்துக் கொண்டு நபியவர்கள் மரணித்ததாக யாரேனும் சொல்வார்கள் எனின், அவரது கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொல்லித் திரிந்தமை இதற்கு நல்ல உதாரணம். பின்னர் அபூபக்ர் (றழி) அவர்கள் தலையிட்டு பிரச்சினையை அழகாகத் தீர்த்து வைத்தார்கள். யார் முஹம்மதை வணங்கினாரோ அவர் மரணித்துவிட்டார். யார் அல்லாஹ்வை வணங்கினாரோ அவனுக்கு மரணமில்லைஎன்றார்கள். தலைவன் மரணித்தாலும் கொள்கை வாழ வேண்டும் என்பதையே அபூபக்ர் (றழி) அவர்களது வார்த்தைகள் உணர்த்தின.

நாளைய இருப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் என்ன என்று மீண்டும் கேட்டுப் பார்த்தால் அதுதான் உண்மையான வெற்றி என்போம். தலைமைகளுக்கு அழிவும் மரணமும் உண்டு. ஆனால் கொள்கைகள் தொடர்ந்தும் வாழ வேண்டும் என்போம்.

தனிமனித உருவாக்கத்தின் மூலம் நாளைய இருப்பு எவ்வாறு உத்தரவாதப்படுத்தப்படுகிறது?

ஏற்கனவே பேசப்பட்ட அனைத்து உண்மைகளும் இந்தக் கேள்விக்கும் சேர்த்தே பதில்களைத் தந்துவிட்டன. இருந்தபோதிலும் மேலதிகமான சில விடயங்கள் மாத்திரமே இங்கு கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

இமாம் ஹஸனுல் பன்னாவிடம் ஒருவர் வந்து, மிகுந்த யோசனையுடன் உங்களுக்குப் பிறகு நாங்கள் என்ன செய்யப் போகிறோமோ தெரியாது என்று கவலைப்பட்டார். அதற்கு இமாமவர்கள் எனக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை எனின், நான் உங்களுக்கு சரியாக தர்பிய்யத் தரவில்லை என்று அர்த்தம்என்றார்கள்.

இங்கு இமாம் ஹஸனுல் ப்னனா அவர்கள் தனக்குப் பிறகு இந்த வேலைத்திட்டத்தை சுமந்து செல்லத் தகுதியானவர்களை உருவாக்குவதைத் தர்பியத் என்கிறார்கள். எனவே, இமாமவர்களது வார்த்தைகள் எந்தவித மயக்கமும் இன்றி மிகத்தெளிவாகச் சொல்கின்றன தனிமனித உருவாக்கம் என்பது நாளைய இருப்பை உத்தரவாதப்படுத்துகிறது

இந்த சிந்தனையை அவருக்கு அல்குர்ஆன்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஸுறதுல் பத்ஹின் இறுதி வசனத்தில் அல்லாஹ்தஆலா இவ்வாறு சொல்கிறான் இன்ஜீலில் அவர்களுக்கான (நபியவர்களும் ஸஹாபாக்களும்) உதாரணம் ஒரு தாவரம் தனது கன்றை ஈன்றெடுக்கிறது,  அதனைப் பலமடையச் செய்கிறது, அதன் தண்டுகள் உறுதியடைகின்றன. அது தனது சொந்தக் காலில் நிற்கிறது. இது பயிர் செய்தவனுக்கு சந்தோஷத்தை அளிக்கும். இது காபிர்களுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணும்” (பத்ஹ் - 29)

இந்த வசனத்தில் தனிமனித உருவாக்கச் செயன்முறை, ஒரு தாவர உதாரணத்தின் மூலம் விளங்கப்படுத்தப்படுகிறது. ஒரு தாவரம் மற்றொரு தாவரத்தை உருவாக்கிப் பலப்படுத்தி சுயமாய் செயற்படும் தரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறது. தனிமனித உருவாக்கப் பொறிமுறையும் இதனையே செய்கிறது. ஒருவர் மற்றொருவரை உருவாக்கி பலப்படுத்தி, அவர் சுயமாய் செயற்படும் இடத்திற்கு கொண்டுவந்து விடுகிறார். இங்கு சுயமாய் செயற்படல் என்பது அவர் தலைமை வழங்கும் தரத்தை அடைகிறார் என்பதாகும். அமைதியான ஆரவாரமில்லாத இந்த மனித உற்பத்திதான் வளர்ந்து ஒரு பெரும் காடாக மாறுகின்றபோது, குப்ருக்கு மிகப் பெரும் சவாலாக மாறுகிறது.

இந்த வசனம் வெறுமனே நாளைய இருப்பைப் பற்றி மாத்திரம் பேசவில்லை. இருப்பைத் தாண்டி சாதனையையும் பேசுகிறது. அதற்கு எது காரணமாகிறது? அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மனித உருவாக்கம்தான் காரணம என்கிறது.


இறுதியாக,  தனிமனித உருவாக்கத்தின் இரண்டாவது இலக்கு, நாளைய இருப்பை உத்தரவாதப்படுத்தல் என்பது,  ஒரு சிந்தனை அல்லது ஒரு ஜமாஅத் நிகழ்காலத்தில் மாத்திரமன்றி எதிகாலத்திலும் வாழ வேண்டும் எனின்,  எதிர்காலத்திற்கான இன்றைய செயற்பாடு என்ன? அதுதான் தனிமனித உருவாக்கம். நாளை நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கான இன்றைய தயார்படுத்தல்தான் தனிமனித உருவாக்கம். இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வில் மூன்றாவது இலக்குடன் சந்திப்போம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

Monday, February 3, 2014

இலங்கையின் 66 வது சுதந்திர தின செய்தி

அல்லாஹ்தஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான் உங்களுடைய இந்த உம்மத் ஒரே உம்மத்தாகும். நான்தான் உங்கள் இரட்சகன். என்னையே வணங்குங்கள்” (அன்பியா - 92)

இந்த அல்குர்ஆன் வசனம் முழு மனித சமூகத்திற்கும் ஒரு பிணைப்பைச் சொல்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே உம்மத். அல்லாஹ்வின் படைப்பினர்கள்,  அவனது அடியார்கள் என்ற வகையில் அனைவரும் ஒரே உம்மத்தினர் என்கிறது.

இதே சிந்தனையை நபியவர்கள் கீழ்வருமாறு உருவகப்படுத்திக் காட்டினார்கள். எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான தொடர்பை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம்,  ஒரு மனிதன் ஒரு அழகிய வீட்டைக் கட்டுகிறான். அதன் ஒரு மூலையில் ஒரு செங்கல் வைக்கப்படாமல் இருக்கிறது. அதனைச் சுற்றி வரும் மனிதர்கள் ஆச்சரியத்துடன் இந்த இடத்திற்குரிய கல்லையும் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பார்கள். நான்தான் அந்த செங்கல். நான் இறுதி நபியாவேன்என்றார்கள் (முஸ்லிம்)

மனித சமூகம் ஒரே உம்மத் என்ற செய்தியே இங்கும் பரிமாறப்படுகிறது. எல்லா நபிமார்களும் இணைந்து ஒரே உம்மத்தையே கட்டியிருக்கிறார்கள்.

அடுத்து, முஸ்லிம் உம்மத்தின் பிணைப்பை நபியவர்கள் இவ்வாறு உருவகப்படுத்திக் காட்டினார்கள்.

முஃமின்கள் மத்தியிலான அன்பு, கருணை,  பரிவு என்பவற்றிற்கான உதாரணம் அவர்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். அதன் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் முழு உடம்பும் வலியை உணரும்என்றார்கள். (புகாரி,  முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்,  “முஃமின்கள் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள். ஒருவர் மற்றவருடன் பிணைந்து காணப்படுவார்கள்என்றார்கள் (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிம் உம்மத்துக்கு மத்தியிலான இந்தப் பிணைப்பும்,  உறவும் இனம்,  நிறம்,  மொழி,  பௌதீக எல்லைகளைக் கடந்தது. ஒரு நம்பிக்கையையும் வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக் கொண்டது.

மேற்சொல்லப்பட்ட உண்மைகள் ஒரு பௌதீக எல்லைக்குற்பட்ட தாய்நாட்டுச் சிந்தனைக்கு முரணானவையா? என்பது பலரிடம் தோன்ற முடியுமான ஒரு கேள்வி.

இங்கு ஒரு முக்கிய விடயத்தைப் புரிந்து கொள்வோம். இஸ்லாம் ஒரு போதும் ஒரு மனிதன் ஒரு குடும்பத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு கோத்திரத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு இனத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு நிலப்பிரதேசத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு மொழியைச் சார்ந்திருப்பதையோ மறுக்கவில்லை. மாத்திரமன்றி,  அதனை நேசிப்பதையும் பற்றுக் கொள்வதையும் அதனை வளர்ப்பதையும்,  பாதுகாப்பதையும் கூட இஸ்லாம் மறுக்கவில்லை. இதற்கான சான்றுகள் நபியவர்களது சுன்னாவில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.

ஆனால் இஸ்லாம் தடை செய்த அல்லது மறுத்த சில விடயங்கள் இருக்கின்றன. பெருமையடித்தலை இஸ்லாம் தடை செய்கிறது. வெறிகொள்வதை இஸ்லாம் தடை செய்கிறது. அடுத்தவர்களை இழிவுபடுத்துவதை இஸ்லாம் தடை செய்கிறது. மேலாதிக்கத்தையும் அடிமைப்படுத்தலையும் இஸ்லாம் தடை செய்கிறது. வெறுப்பையும் குரோதத்தையும் பகைமையையும் இஸ்லாம் தடை செய்கிறது. பொறாமையை இஸ்லாம் தடை செய்கிறது. தீங்கிழைத்தலையும அநியாயம் செய்தலையும் இஸ்லாம் தடை செய்கிறது.

இங்கு தடை செய்யப்பட்ட விடயங்கள் மேற்கூறப்பட்ட குடும்பம்,  கோத்திரம், இனம், மொழி,  நிலப்பிரதேசம் போன்றவற்றை மையப்படுத்தி மாத்திரமன்றி,  எதனை மையப்படுத்தி எழுந்தாலும் அவை இஸ்லாத்தில் மறுக்கப்படக் கூடியவை என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.

எனவே,  நாம் ஒன்றைச் சார்ந்திருத்தலோ பற்றுக் கொள்தலோ அதன் வளர்ச்சிக்காக உழைத்தலோ ஒரு போதும் நாம் ஒரே உம்மத் என்பதற்கும்,  நாம் முஸ்லிம்கள் என்பதற்கும் முரண்படுகின்ற ஒரு விடயமல்ல. மாறாக, எமது சார்பு நிலையும் பற்றும்,  உழைப்பும்,  பெருமையடித்தலாக,  பிறவற்றை மறுத்தலாக,  வெறியாக,  காழ்ப்புணர்வாக,  பிறவற்றின் மீதான பொறாமையாக,  பிறர்க்கு தீங்கிழைப்பதாக அமைந்து விடக்கூடாது. இதுவே இஸ்லாம் எமக்குக் கற்றுத்தரும் பாடமாகும்.

ஷெய்க் ஸல்மான் அவ்தா அவர்கள் கூறுவது போல், தாய் நாடு என்பது மூன்று அடிப்படைகளின் மீது எழுந்து நிற்கும் ஒரு சிந்தனையாகும்.

1.            நிலப்பிரதேசம் சார்ந்தது : ஒருவன் பிறந்த பூமி, தான் வாழ்வதற்காக தெரிவு செய்த பூமி.
2.            உள்ளம் சார்ந்தது : தான் விரும்புகின்ற,  நேசிக்கின்ற பூமி.
3.            கூட்டு நலன், உரிமைகள் சார்ந்தது : ஒரு மனிதக் கூட்டம் தமக்கு மத்தியில் நலன்களையும் உரிமைகளையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஒரு பூமி

மேற்சொன்ன அடிப்படைகளின் ஒளியில் தாய் நாடு எனும் சிந்தனையைப் பார்க்கின்ற பொழுது அது எந்த வகையிலும் நாம் ஒரே உம்மத் என்ற கோட்பாட்டையும் நாம் முஸ்லிம்கள் என்ற கோட்பாட்டையும் மறுதலிப்பதாக அமையவில்லை என்பது புரிகிறது.


அந்தவகையில் இலங்கை எமது தாய் நாடு. அதனை நாம் சார்ந்திருப்பதும், பற்றுக் கொள்வதும்,  அதன் வளர்ச்சிக்காக உழைப்பதும்,  அதனைப் பாதுகாக்க செயற்படுவதும் ஒரு மனிதனாக எங்களிடத்தில் இயல்பாய் எழ வேண்டிய பணிகள் என்பது மாத்திரமன்றி இஸ்லாம் வலியுறுத்துகின்ற ஒரு கடமையுமாகும் என்ற சிந்தனையை இலங்கையின் 66வது சுதந்திர தின சிந்தனையாக உங்கள் முன்வைப்பதில் மகிழச்சியடைகிறேன்.