Monday, April 28, 2014

ஷெய்க் நாதிர் அந்நூரி குறித்து சில வரிகள்

ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் 16-04-2014 புதன்கிழமை இரவு காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ்தஆலா அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக. ஆமீன்.

1954ம் ஆண்டு குவைத்தில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இவர், நிர்வாகத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றதுடன் ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளராகவும் காணப்பட்டார். 

பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் உள்ளங்களில் வாழும் இவர் குறித்து சில வார்த்தைகளை இங்கே பதிவு செய்வது உண்மையில் பெருமைப்படத்தக்க ஒரு விடயமாகும். மூன்று அடிப்படைகளில் நின்று இவர் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது. ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் ஒரு உயர்ந்த பண்பாட்டாளர். நபியவர்கள் கூறினார்கள் உங்களில் மரணித்தவர்கள் குறித்து நல்லவற்றை மாத்திரமே பேசுங்கள்என்றார்கள். ஒருவர் விரும்பினாலும் ஷெய்க் அவர்கள் குறித்துப் பேசுவதற்குத் தீய விடயங்கள் எதுவுமில்லை எனும் அளவுக்கு மனிதர்களுடனான உறவாடலில் ஒரு உயர்ந்த பண்பாட்டை அவர் கடைபிடித்திருக்கிறார்.

இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் தான் உருவாக்க விரும்பும் மனிதனின் இறுதி அடைவை சாராம்சப்படுத்தும் போது,  ஐந்து பண்புகளைக் குறித்துக் காட்டுவார்கள். எளிமை,  தொழுகை.  குர்ஆன் ஓதுதல். எதனையும் செயற்படுத்தும் தயார்நிலை.  பண்பாடு. இந்த ஐந்து பண்புகளினதும் உண்மையான செயல் வடிவமாகவே ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

எல்லோருடனும் வேறுபாடின்றிப் பழகுகின்ற அவரது பாங்கும், முகம் நிறைந்த புன்னகையும்,  நிதானமான அணுகுமுறையும் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த விடயங்களாகும். அவரது இலங்கை விஜயங்களின்போது, இலங்கை மனிதர்களின் எளிமையான வாழ்க்கையையே அவரும் வாழ்ந்தார்கள். குவைத்தின் உயர்ரக வாழ்வை ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. கீரைக்கறியும், சோறும் சாப்பிட்டமையும், சிறிய அறைக்குள்ளே எல்லோருடனும் கால்மடித்து உட்கார்ந்திருந்தமையும், சகோதரர்களுடன் சேர்ந்து ஓட்டப் போட்டியில் ஈடுபட்டமையும் இன்றுவரை பலரிடத்தில் மறவாத நினைவுகள்.

இரண்டாவது,  ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் ஒரு தன்னிகரற்ற சமூக நல செயற்பாட்டாளர். குவைத்தில் சமூக நல செயற்பாட்டிற்கு இவரது குடும்பம் பெயர் போனது. இவரது பாட்டனார், முஹம்மத் அந்நூரி என்பவர் குவைத்தில் சமூக நல செயற்பாட்டின் முன்னோடியாகக் கருதப்படுபவர். எனவே, ஷெய்க் நாதிர் நூரி அவர்களை சமூக நல செயற்பாட்டுப் பரம்பரை ஒன்றின் அங்கத்தவன் என்றால் அது மிகையாகாது. 

இதனால்தான் இவரது வபாத் செய்தி குறித்து ஒரு அறபு சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில், “குவைத்தின் சமூக நல செயற்பாடு மரணித்துவிட்டதுஎன்று குறிப்பிட்டிருந்தார். ஏனெனில், இவரது வாழ்வு முழுமையாக பிறருக்கானதாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் இவர் சமூக நலப்பணியில் ஈடுபட்டார் என்று கூறாமல் சமூக நலப் பணியே இவர்தான் என்று அவரது ஒப்பீடு அமைந்திருந்தது.

இவரது சமூக நல செயற்பாட்டின் பரப்பு எந்தளவு விரிவுபட்டிருந்தது எனின், மெக்ஸிகோ முதல் யப்பான் வரையில் உலகின் எல்லாக் கண்டங்களையும் உள்ளடக்கி இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இவரது கவனம் மிகவும் அதிகமாகக் குவிந்து காணப்பட்டிருக்கிறது.

எண்பதுகள் முதலே இலங்கையிலும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் இவர் மூலம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புக்கள்,  தனிமனிதர்களுடன் தொடர்புபட்டு அவர் செயற்பட்டிருக்கிறார்.

உலகில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறார். பசியைக் போக்கியிருக்கிறார். கஷ்டங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார். அல்குர்ஆனின் போதனையான ஹைரைச் செய்யுங்கள் என்பது இவரது வாழ்வின் சுலோகமாகவே இருந்திருக்கிறது, மாத்திரமன்றி இவரது பணியை நில எல்லைகளோ,  இன எல்லைகளோ,  மொழி எல்லைகளோ எதுவுமே கட்டுப்படுத்தவில்லை. ஒரு உலகளாவிய மானுடப் பார்வைக்குச் சொந்தக்காரர் அவர்.

மூன்றாவது, ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் ஒரு தலை சிறந்த தாஇ, இஸ்லாமிய சிந்தனையாளர். அவரது வீட்டில் அவரை சந்திக்கச் சென்றவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்ட ஒரு விடயம் இருக்கிறது. அதுதான் அவரது வீட்டில் அமைந்திருந்த ஒரு மிகப் பெரிய வாசிகசாலை. அது அவரது தனிப்பட்ட வாசிகசாலை. அங்கே அவர் நூல்களை சேமித்து மாத்திரம் வைக்கவில்லை. அனைத்தையும் கற்று முடித்திருந்தார்.

அவர் தரிசித்த நாடுகளும், சந்தித்த மனிதர்களும் அவரை உதவி செய்யும் ஒரு செல்வந்தராக மாத்திரம் காணவில்லை. மாற்றமாக உள்ளத்தைத் தொடும் வகையில் இஸ்லாத்தை முன்வைக்கும் ஒரு தாஇயாகவும், நுணுக்கமான சமூகத் தீர்வுகளை முன்வைக்கும் ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் கண்டார்கள். இந்த எல்லா இடங்களிலும் அவர் மிக முக்கியமாகக் கவனம் செலுத்திய சில விடயங்கள் இருக்கின்றன.

ஒன்று, சமூக நலப் பணியை ஒரு சிறந்த தஃவாவாக அறிமுகப்படுத்தியமை. மனித நலன்களில் அக்கறை செலுத்தாத போது, வெறும் சிந்தனைகளும் தத்துவங்களும் எதனையும் சாதித்து விடப் போவதில்லை என்ற கருத்து அவரால் ஆழ்ந்து விதைக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் சமூக சேவை நிறுவனங்கள் தோற்றம் பெறவே அவர் காரணமாக இருந்திருக்கிறார்.

மற்றது,  உருவாக்கச் சிந்தனையை அறிமுகப்படுத்தியமை,  இஸ்லாமிய தஃவா என்பது வெறுமனே கருத்துக்களையும்,  சிந்தனைகளையும் எத்திவைத்தல் என்பது மாத்திரமல்ல,  மாற்றமாக ஒரு இஸ்லாமிய வாழ்வு உருவாக வேண்டும் எனின்,  அங்கு இஸ்லாத்தை வாழ்வாகக் கொண்ட மனிதர்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற சிந்தனையை வழங்கினார். இதனால் பல இடங்களில் ஒழுங்குபடுத்தப்படாத, இலக்கற்ற சிதறிய தஃவா செய்றபாடுகள், முறைமைப்படுத்தப்பட்டு இலக்கு நோக்கியதாக அமைய இவர் காரணமாயிருந்தார்.

அடுத்து,  இஸ்லாமிய தஃவாவின் நீண்டகால இருப்பை நோக்கிச் செயற்பட வழிகாட்டியமை. அந்தவகையில் எதிர்காலத் தலைமைகளை உருவாக்குதல், பொருளாதார ஸ்திரப்பாடு,  கட்டமைப்பின் உறுதி,  அதன் கீழ்நோக்கிய மேல்நோக்கிய தொடர்புப் பலம் போன்ற பல விடயங்கள் அவரது மிகுந்த கவனத்தைப் பெற்ற விடயங்களாகும்.


தனக்கு அல்லாஹ் அருளிய அறிவு,  செல்வம் எனும் இருபெரும் நிஃமத்துக்களை மிகச் சிறந்த முறையில் மனித நலனுக்காகப் பிரயோகித்த ஒரு மாமனிதர்,  அவர். அவரது மறுமை வாழ்வுக்காக எமது பிரார்த்தனைகளிலும் ஒரு இடத்தை வழங்குவோம்.