Thursday, March 28, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு…-சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் - (அமர்வு – 2)





திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களும் சகோதரிகளும் விடை தேட வேண்டிய ஐந்து கேள்விகள் காணப்படுகின்றன.

எப்பொழுது? ஏன்? யார்? எங்கே? எவ்வாறு?


இவற்றுக்குப் பதில் கூறும் அமைப்பில் இந்தக் கட்டுரைத் தொடர் அமையவுள்ளதாக கடந்த அமர்வில் கூறியிருந்தோம். அந்த வகையில் முதல் கேள்வியான எப்பொழுது என்பதற்கு இந்த அமர்வில் பதில் சொல்ல ஆரம்பம் செய்வோம்.

எப்பொழுது என்ற கேள்வியை திருமணம் செய்யாதவர்களிடம் கேட்டால் ஒரு புன்னகை உங்களுக்குப் பதிலாய்க் கிடைக்கும். இந்தப் புன்னகைக்குப் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. சிலர் சொல்வார்கள் பருவமடைந்த நாளிலிருந்து நான் திருமணத்திற்குத் தகுதியானவனாகத்தானே இருக்கிறேன் என்பார்கள். உண்மைதான். ஆனால் அல்குர்ஆன் பருவ வயது குறித்து முன்வைக்கும் கருத்தை சற்று விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். செல்வத்தைக் கையாளத் தகுதியானவர்கள் குறித்துப் பேசும்போது,

அவர்கள் திருமணத்தைஅடையும் வரை” (அந்நிஸா 4:60) என்கிறது.

இங்கு திருமணம் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள அறபுப் பதம் ‘நிகாஹ்’ என்பதாகும். இதன் கருத்து இங்கு செல்வத்தைக் கையாள்வதற்கான முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது. இந்தக் கருத்தைக் குறிக்க அல்குர்ஆனே பயன்படுத்திய மற்றொரு சொல்லும் காணப்படுகிறது.

அந்தச் சொல் ‘ருஷ்த்’ என்பதாகும். இந்த வசனத்தில் ‘ருஷ்த்’ என்ற சொல்லுக்குப் பகரமாக ‘நிகாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டமைக்குக் காரணம் திருமணத்திற்கும் அதே முதிர்ச்சி அவசியம் என்பதைக் குறிப்பதற்காகும். அத்துடன் குறித்த வசனத்தின் நேரடிக் கருத்து, பருவ வயதை அடைதல் என்பதை சொல்ல வருகிறது என்றிருப்பினும், பருவ வயது என்பது உடலியல் ரிதியாக இனப்பெருக்கத் தொழிற்பாட்டுக்கு உடல் தயாராக இருக்கிறது என்பது மட்டுமல்ல, அதற்கப்பால் சில முதிர்ச்சிகள் அவசியப்படுகின்றன என்பதையே நிகாஹ் என்ற சொல்லின் மூலம் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது. இந்த முதிர்ச்சி பற்றிய கருதுகோள் அல்லது தகைமை பற்றிய கருதுகோள்தான் அவர்களது பதில் புன்னகையாய் மட்டும் புலப்படுவதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

மனித வளர்ச்சியில் இனப் பெருக்கத் தொகுதியின் வளர்ச்சி முழுமையடைந்து, அதன் தொழிற்பாடு ஆரம்பிக்கின்றபொழுது, உடலின் ஏனைய பாகங்களிலும் விரைவான வளர்ச்சியை அவதானிக்கலாம். ஆனாலும் இனப் பெருக்கத் தொகுதியின் பூரணம் என்பது முழு மனித ஆளுமையின் பூரணம் என்பதல்ல. ஏனைய ஆளுமைப் பக்கங்களின் முதிர்ச்சி சமூகவாழ்வு அனுபவங்களால்தான் முழுமையடைகிறது.

அந்த வகையில் பருவவயதை அடைதல் என்பது திருமண செயற்பாட்டை, இனப்பெருக்க செயற்பாடாக மாத்திரம் மேற்கொள்வதற்குப் போதுமான தகைமையாகக் கருதலாம். ஆனால், திருமணம் என்பதை ஒரு பொறுப்பாக, வாழ்க்கைத் துணையுடனான உறவாடலாக, பிள்ளை வளர்ப்பாக, வாழ்வின் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் ஈடு கொடுத்தலாகப் பார்க்கின்ற பொழுது பருவ வயது என்பது மாத்திரம் திருமணத்திற்கான போதிய தகைமை என்று கருதலாமா? நிச்சயமாக முடியாது என்றே நினைக்கிறேன்.

அந்த வகையில் எப்போது என்று கேட்கும்போது போதுமான முதிர்ச்சியை அடையும்போது என்பதுதான் சுருக்கமான பதிலாக இருக்க முடியும். ஆனாலும், எப்போது என்பதை இந்தப் பதிலுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்வதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் மட்டுமல்ல நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால்தான் இந்த அமர்வை எப்போது என்ற கேள்விக்கான பதிலின் ஆரம்பம் என்று குறிப்பிட்டேன்.

ஏனெனில் இந்தக் கேள்விக்கான பதில் சற்று நீண்டது. இரண்டு மூன்று அமர்வுகளை வேண்டி நிற்கக்கூடியது.

அந்தவகையில் ‘போதியமுதிர்ச்சி’ அல்லது ‘போதியதகைமை’ என்பதை அடையாளப்படுத்தக்கூடிய சில பிரதான காரணிகள் குறித்து சற்று கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது.

சகோதரிகளே!

மேற்சொன்ன முன்னுரை உங்களுக்காகவும்தான் பேசப்பட்டிருக்கிறது. பெண் பிள்ளையைப் பெற்ற அதிகமான பெற்றோர்களின் முக்கியமான எதிர்பார்ப்பு தனது மகளுக்கு ஒரு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதாகும். வாழ்க்கையின் சந்தோஷமான பொழுதுகளில் குடும்பங்களுக்குள்ளே பெண் பிள்ளையை வைத்து செய்யும் பரிகாசங்களில் மிக முக்கியமானது, அவர்களின் எதிர்காலக் கணவன் பற்றியதாகத்தான் இருக்கும். அந்தநேரத்தில் பொய்க் கோபம் காட்டும் உங்கள் மகளின் அழகிய முகத்தைச் சற்று கூர்ந்து பாருங்கள். கண்களில் ஒரு பிரகாசம் தெரியும். மெலிதாகக் கண்ணங்கள் சிவக்கத் தொடங்கும். அடடா, அல்லாஹ்வின் அற்புதப் படைப்பியல்பை நீங்கள் அங்கு காணலாம். சில வீடுகளில் பார்த்திருக்கிறேன் அங்கு இந்தப் பரிகாசம் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கொஞ்சம் வளர்ந்த கட்டிளம் பருவத்துப் பெண்கள் உள்ள வீடுகளில்,

இது தடை, பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள் என்ற அச்சம்.

பரிகாசம் தடை செய்யப்பட்ட வீடாக இருப்பினும், அனுமதிக்கப்பட்ட வீடாக இருப்பினும், எல்லோருக்குரிய கவலை ஒன்றுதான். தமது பெண் மக்களுக்கு ஸாலிஹான கணவன் அமைய வேண்டும். நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். இது எப்போது நடைபெறப்போகிறது? அதனை யார் தீர்மானிக்கப்போகிறார்? இவற்றுக்கான பதில்களைக் காண்பதுதான் எமது அடுத்த பணி. வாருங்கள்...

திருமணவயது

முதலில் திருமண வயது குறித்துப் பேசுவோம். திருமண வயது குறித்த இஸ்லாமியப் பார்வை பற்றிப் பேசுகின்றபொழுது, அதற்கு குறித்த ஒரு வரையறையை இஸ்லாம் ஏற்படுத்தவில்லை என்பதே பொதுவான நிலைப்பாடாகும். ஆனால் இஸ்லாம், காலம் தாமதிக்காமல் திருமணம் செய்வதைத் தூண்டியிருக்கின்றது. நபியவர்கள் காலநடைமுறையைப் பார்க்கின்றபோதும் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களுக்கு ஃபாத்திமா பின்த் கைஸ் என்ற பெண்ணை நபயிவர்கள் திருமணம் பேசியபோது அவருக்கு வயது பதினைந்தைவிடவும் குறைவாகக் காணப்பட்டிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

அதேபோல் நபியவர்கள் ஆயிஷா ((ரழி) அவர்களைத் திருமணம் செய்தபோது ஆயிஷா (ரழி) அவர்களின் வயது ஆறு என்பது நாம் எல்லோரும் அறிந்த பிரபல்யமான உண்மை.

அதேபோல் பைஹகீ எனும் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் அறிவிப்பின்படி, “ஒருபெண் ஒன்பது வயதை அடைந்தால், அவள் ஒரு வளர்ந்த பெண்ணாகக் கருதப்படுவாள்என்பதை வைத்துப் பார்க்கும்போதும், திருமண வயது தாமதப்படுத்தப்படுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பது புரிகிறது.

அதேநேரம் ஏற்கனவே நாம் கூறியது போல் திருமணத்திற்கான பௌதீக முதிர்ச்சியையும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இங்கு நபியவர்கள் காலத்தில் சிறிய வயதில் திருமணங்கள் நடைபெற்றமை அவர்களது பௌதீக முதிர்ச்சிக்கு முன்னர் நடைபெற்றவையாக வரலாற்றில் ஒருபோதும் நாம் காணமுடியாது. இதன் காரணமாகத்தான் திருமண வயது எது? என்பது இஸ்லாத்தில் வரையறை செய்யப்படவில்லை என அறிஞர்கள் கருதுகிறார்கள். அதேநேரம் திருமண வயதைப் பிற்போடுதலையும் இஸ்லாம் ஆதாரிக்கவில்லை என்பதன் பொருள் இஸ்லாமிய சமூக சூழல் என்பது சிறிய வயது முதலே உரிய முதிர்ச்சிகளை வழங்கும் வகையில் காணப்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

அந்த வகையில் திருமண வயது தீர்மானிக்கப்படுதல் என்பது, ஆள், இட, சூழ்நிலை, கால அடிப்படைகளுக்கேற்ப மாற்றமடைய முடியும். நாம் வாழும் நாட்டிற்கு வயதை வரையறை செய்ய நான் நினைக்கவில்லை. மாற்றமாக, அது பற்றிய சில பொதுவான வழிகாட்டல்களை வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன்.

  1. உங்கள் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் தீர்மானம் அடிப்படையில் உங்களுக்குரிய உரிமைதான். எனினும்,வயதுகுறையக் குறையஉங்களதுஅந்தத் தீர்மானத்தில் உங்களது பங்கைவிடவும் அடுத்தவர்களின் பங்கு அதிகமாகக் காணப்படும்.
  2. நாம் வாழும் சூழலில் பதினெட்டு வயதிற்கு முன்னர், எமது குடும்ப, சமூக, கல்வி ஒழுங்குகள் சகோதர சகோதரிகளுக்கு போதிய அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் வகையில் இல்லை.
  3. சகோதரர்களைப் பொறுத்தவரையில் சுயமான பொருளாதார பலத்தைப் பெறமுன்னர் துணைத் தெரிவு பற்றி சிந்திப்பது பொறுத்தமற்றது. கற்பனையில் இருந்துகொண்டு எவரும் பெண் தரமாட்டார்கள். பதினெட்டு வயதிற்கு முன்னர் பொருளாதாரப் பலத்தைப் பெறுதல் என்பதும் மிகவும் சிரமமான ஒரு விடயம்தான்.
  4. புறத் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துவிடுதல் என்பது மிகப் பெரும்பாலும் கட்டிளம் பருவத்து பிரச்சினைதான். துணையைத் தெரிவு செய்வதற்கு புறத் தோற்றத்திற்கப்பால் பார்க்கப்பட வேண்டிய இன்னும் எத்தனையோ அம்சங்கள் காணப்படுகின்றன.
  5. குறைந்த வயது திருமணம் எனும்போது அதிகமாக ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் வயது வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும் அல்லது மிகவும் அதிகமாக இருக்கும். இந்த இரு நிலைகளுமே அவ்வளவு விரும்பத்தக்கதல்ல.
  6. சகோதரியே...! குறைந்தவயதில் உன்னைப் பெண் கேட்டுவரும் ஆணும் குறைந்த வயதாகவே இருந்தால் அவன் சுயமான பொருளாதாரம் கொண்டவனாக இருப்பதாது, பெரும்பாலும் பெற்றோரில் தங்கி வாழ்பவனாக இருப்பான். இது உனது குடும்ப வாழ்வுக்கு அகல்ல; அந்த ஆணுக்கும் இது அழகல்ல.
அடுத்த அமர்வில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்...

Thursday, March 14, 2013

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல் தொடர்பாக...


ங்கு குறிப்பாக இன்று சந்திக்கு இழுக்கப்பட்டுள்ள விவகாரங்களைப் பொருத்தவரை, அவை குறித்த மிக நடுநிலையான பார்வை முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒவ்வொரு தரப்பினரும் தாம் சரிகாணும் நிலைப்பாடுகளை மாத்திரம் இஸ்லாத்தின் நிலைப்பாடுகளாக முன்வைப்பது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்பதும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம்தான்.


ஆனாலும், செயற்பாட்டளவில் எது நடைபெறுகிறது என்று பார்த்தால் தத்தமது நிலைப்பாடுகளைப் பேசுகின்ற சூழ்நிலைதான் மிகைத்துக் காணப்படுவதாகத் தோன்றுகிறது. நிகாப் பற்றிப் பேசுகையிலும் சரி, தாடி பற்றிப் பேசுகையிலும் சரி, ஆண்களின் ஆடையில் எது சுன்னா என்று பேசுகையிலும் சரி, இது போன்ற இன்னும் எத்தனையோ விடயங்களில் இந்த உண்மையை அவதானிக்கலாம்.

அந்த வகையில் இஸ்லாத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல நிலைப்பாடுகள் காணப்படுகின்ற விவகாரங்களில் ஒரு நிலைப்பாட்டை வலியுறுத்துதல் என்பதைவிடவும் அந்த விவகாரங்களில் இஸ்லாத்தின் விசாலத்தன்மை குறித்து அதிகம் பேசப்படுவது பொறுத்தமானது.

இஸ்லாமிய சட்டக்கலையில் உள்ள இந்த விசேட பண்பு வெளிக்காட்டப்பட வேண்டிய தேவை தற்போது உள்ளது. இஸ்லாம் எல்லா கால இடசூழ்நிலைகளுக்கும் பொறுந்தக்கூடிய ஒரு மார்க்கம், முடிந்த முடிவுகளாக, இனி மாற்றப்பட முடியாத தீர்ப்புகளாக இஸ்லாம் சில சட்டங்களை முன்வைத்திருக்கின்றது.

ஆனால், ஒப்பீட்டளவில் அவை குறைவானவைதான். கால இடசூழலமைவுகளுக்கு ஏற்பமாறிச் செல்ல முடியுமான சட்டப்பரப்பு இஸ்லாத்தில் மிக அதிகமானவை. இந்த இரண்டாம் பரப்பில்தான் ஒரு விவகாரத்தில் பல அபிப்ராயங்கள் தோன்றுகின்றன. இந்த பல அபிப்ராயங்கள் என்பது இஸ்லாமிய சட்டத்தின் செழுமையைக் குறிப்பனவே அன்றி அவை பிளவுகள் அல்ல. இஸ்லாமிய சட்டம் விசாலமானது. அங்கு செயற்படுவதற்கான ஒரு வழி மட்டும் சொல்லப்படவில்லை. பல வழிகள் மனிதனுக்கு முன்னே காட்டப்பட்டிருக்கின்றன.

இதனால்தான், கலீஃபா உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் சஹாபாக்கள் பல கருத்து நிலைப்பாடுகளைக் கொள்ளவில்லை என்றிருப்பின், அது நிச்சயம் எனக்கு சந்தோசத்தை அளிப்பதாக இருந்திருக்கமாட்டாது என்று குறிப்பிட்டார்கள். அன்று அவர்கள் பல கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டமையால்தான் இன்று நாம் இஸ்லாமியச் சட்டங்களின் விசாலத்தன்மையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இல்லாதபோது மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம் என்பதுதான் உமர் (ரஹ்) அவர்கள் சொல்லவந்த செய்தியாகும்.

அந்த வகையில் நிகாபை அணிவதும் அணியாமல் இருப்பதும், தாடி வைப்பதும் வைக்காமல் இருப்பதும், அதனை கத்தரிப்பதும் கத்தரிக்காமல் இருப்பதும், இஸ்லாமியச் சட்டப் பரப்புக்குள் உள்ள பல்வேறு பார்வைகள், இவற்றுள் ஒன்று தீவிரவாதமாகவும் மற்றொன்று மிதவாதமாகவும் பார்க்கப்படுவதற்குரியனவல்ல என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிஒரு விடயம் மட்டுமல்ல அடுத்தவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய செய்தியும் இதுவாகும். இஸ்லாமியச் சட்டத்தின் விசாலத்தன்மை இதுதான்.

அதன் பல்வேறு கருத்து நிலைப்பாடுகள் சரி - பிழை, ஹக்கு -பாத்தில், தீவிரவாதம் – மிதவாதம் என்று வேறுபடுத்திப் பார்க்கப்படுவதற்கு உரியனவல்ல. எல்லா மனிதர்களையும் எல்லாச் சூழல்களையும் எல்லா இடங்களையும் அரவணைப்பதற்கான ஏற்பாடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- அக்ரம் அப்துஸ் ஸமத்