Wednesday, May 28, 2014

இஸ்ரா, மிஃராஜ் தின செய்தி

இஸ்ரா,  மிஃராஜ் தினங்கள் வருகின்ற பொழுதெல்லாம் கண் முன்னே முதன் முதலில் விரிகின்ற காட்சி எமது மூன்றாவது புனிதத்தளமான மஸ்ஜிதுல் அக்ஸாதான். இன்று யூதர்களின் பிடியில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஹைகல் சுலைமானை இடித்துத் தள்ளிவிட்டு அதன் மீது முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டி விட்டார்கள் என்ற ஒரு வரலாற்றுப் பொய்யின் மீது எழுந்த நியாயங்களை வைத்துக் கொண்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை இடித்துத் தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இமாம் புஹாரி பதிவு செய்துள்ள இந்த ஹதீஸைப் பாருங்கள். அபூதர் அல் கிபாரி (றழி) அவர்கள் நபியவர்களிடம் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே, பூமியில் முதன் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாயல் எது? “அல் மஸ்ஜிதுல் ஹராம்என்றார்கள். பின்னர் எது? எனக் கேட்டார்கள். மஸ்ஜிதுல் அக்ஸாஎன்றார்கள். இரண்டுக்குமிடையில் எத்தனை வருடங்கள் வித்தியாசம்? என்று கேட்டார்கள். நாற்பது வருடங்கள்என்றார்கள்.

இந்த ஹதீஸின் கருத்துப்படி கஃபதுல்லாஹ் கட்டப்பட்டு,  நாற்பது வருடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டுள்ளது. இதில் கஃபதுல்லாஹ்வை முதன் முதலில் கட்டியவர் யார் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. பொதுவாக இப்றாகீம் (அலை) அவர்கள் அதனைக் கட்டினார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம். ஆனால் முதன் முதலில் அவர்தான் கட்டினாரா? இல்லை. அதுபற்றி மூன்று கருத்துக்கள் உள்ளன. ஒன்று மலக்குகள் கட்டினார்கள். மற்றது ஆதம் (அலை) அவர்கள் கட்டினார்கள். அடுத்தது ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் கட்டினார்.

பின்னர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கஃபா அழிக்கப்பட்டதாகவும் அந்த இடத்தில்தான் இப்றாகீம் (அலை) அவர்கள் அதனை மீளக் கட்டியதாகவும் ஒரு வரலாறு சொல்கிறது.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது கஃபதுல்லாஹ் கட்டப்பட்டு நாற்பது வருடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டது எனின், ஹைகல் சுலைமானின் மீது அது கட்டப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதையே இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.


இதுபோன்று இன்னும் எத்தனையோ பொய்களின் மீது புனிதப் போராட்டம் எனும் பெயரில் யூதர்களின் அராஜகம் பலஸ்தீனத்தின் மீது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அங்கு அநியாயத்திற்கு எதிராக எழுந்து நின்றிருக்கும் மனிதர்களுக்காகவும் எமது பிரார்த்தனைகளில் ஒரு பங்கை ஒதுக்குவோம். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

Friday, May 23, 2014

உழைக்கும் ஆற்றல் கொண்டவன்

காதிருன் அலல் கஸ்ப்

காதிருன் அலல் கஸ்ப்தனிமனித உருவாக்கப் பண்புகளில் மற்றொரு மிக முக்கியமான பண்பு. வழமை போல் இந்தத் தலைப்பையும் மூன்று முக்கியமான கிளைத் தலைப்புக்களில் அணுகலாம் என்று நினைக்கிறோம்.
1.            ‘கஸ்ப்என்பது எதனைக் குறிக்கின்றது?
2.            ‘காதிர்என்பது எதனைக் குறிக்கிறது?
3.            தனிமனித உருவாக்கத்தில் காதிர் அலல் கஸ்ப் என்ற பண்பின் முக்கியத்துவம் என்ன?

இன்ஷா அல்லாஹ் இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில்களாகவே இந்த ஆக்கம் அமையப் போகிறது.

கஸ்ப்என்பது எதனைக் குறிக்கிறது?

முதலில் கஸ்ப்என்ற சொல்லுக்குரிய மொழிரீதியான கருத்தைப் பார்க்கும் போது, ‘ஒன்றைப் பெற்றுக் கொள்ளுதல்என்ற கருத்தே பொதுவாக வழங்கப்படுவதைக் காணலாம். பெற்றுக் கொள்ளும் விடயம் வேறுபட முடியும். அது அன்பாகவோ,  அறிவாகவோ, ஆற்றலாகவோ, பொருளாகவோ காணப்படலாம். 

இந்த இடத்தில் பொருள் தேடுதல், பொருளைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கஸ்ப் என்ற சொல்லை,  உழைத்தல் அல்லது சம்பாதித்தல் என்று மொழிபெயர்ப்புச் செய்யலாம்.

அடுத்து உழைத்தல் அல்லது சம்பாதித்தல் எனும் போது அங்கு இரண்டு முக்கிய பரிமாணங்கள் காணப்படுகின்றன. முதலாவது ஒருவன் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் உழைத்தல் என்பது. இதனைத்தான் நபியவர்கள் இவ்வாறு வலியுறுத்தினார்கள். ஒருவன் தானே சம்பாதித்து சாப்பிடும் உணவை விடவும் சிறந்த உணவு இருக்க முடியாதுஎன்றார்கள் (புகாரி). ஒருவன் பிறரிடத்தில் கையேந்தி நிற்காமல் தனக்காக தானே உழைத்து வாழ்வது மிகவும் சிறப்புக்குரியது என்பது இங்கு பேசப்படுகிறது.

மற்றொரு ஹதீஸை அவதானியுங்கள். ஒரு தடவை பலமும் சுறுசுறுப்பும் மிக்க ஒரு மனிதனைக் கண்ட போது,  இவன் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்பொழுது நபியவர்கள் இவன் தனது சிறிய பிள்ளைகளுக்காக உழைக்கச் சென்றாலும்,  வயோதிபப் பெற்றோருக்காக உழைக்கச் சென்றாலும்,  தனக்காக உழைக்கச் சென்றாலும் அவன் அல்லாஹ்வின் பாதையிலேயே செயற்படுகிறான். ஆனால் அவன் பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் உழைக்கச் சென்றால் அவன் ஷெய்த்தானின் பாதையில் இருக்கிறான் என்றார்கள்” (தபரானி)

இந்த ஹதீஸ் ஒருவன் தனக்காகவும் குடும்பத்திற்காகவும் உழைத்தலின் சிறப்பை வலியுறுத்துகிறது. இங்கு உழைத்தலை அல்லது சம்பாதித்தலை அல்லாஹ்வின் பாதையில் ஈடுபடுதல் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

இது இரண்டு கருத்துக்களை வலியுறுத்துகிறது. ஒன்று நேரடியாக அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற அல்லது தஃவாவில் ஈடுபடுகின்ற ஒருவன் பெற்றுக் கொள்ளும் நன்மைகளுக்கு சமானமான நன்மைகளை இவனும் பெற்றுக் கொள்வான் என்பது. 

இரண்டாவது , போராட்டம் அல்லது தஃவா என்பது இந்த உலகில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு வழி என்பது போல் உழைத்தல் அல்லது பொருள் சம்பாதித்தல் என்பதும் உலகில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு வழியாகும்.
எனவே,  ஒருவன் தனக்காகவும்,  தனது குடும்பத்தினர்க்காக உழைத்தல் என்பது கஸ்ப் என்ற சொல் குறிக்கும் முதலாவது பொருள்.

அதன் இரண்டாவது பரிமாணம் செல்வ விருத்தியில் ஈடுபடுதல் என்பதாகும். பொதுவாக அபிவிருத்தி என்பது மனித இனத்தின் பிரதான பணிகளுள் ஒன்று என்பது அல்-குர்ஆன் வலியுறுத்தும் ஓர் உண்மை. அவன் உங்களை பூமியில் இருந்து படைத்து அதனை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறான்” (ஹுத் - 60) என அல்குர்ஆன் கூறுகிறது.

இந்தப் பின்புலத்தில் செல்வ விருத்தி என்பது பொது நலனை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் ஒரு செயற்பாடு என்பதுடன், அது துறைகள், நிலங்கள்,  ஆட்கள் என்ற வரையறைகளைத் தாண்டிய ஒரு செயற்பாடு என்பதையும் புரிந்து கொள்ளலாம். இந்தக் கருத்தை அல்-குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. நீங்கள் விரும்பியவாறு வளைந்து கொடுக்கும் விதத்தில் பூமியை நாம் அமைத்து வைத்துள்ளோம். அதன் எல்லாத் திசைகளிலும் நீங்கள் பரந்து செல்லுங்கள். அல்லாஹ் வைத்துள்ள ரிஸ்க்கை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். அவனிடமே மீண்டு வர வேண்டும்” (முல்க் - 15)

இந்த வசனத்தில் உழைப்புக்குரிய எல்லா வழிகளும் பூமியில் திறக்கப்பட்டுள்ளன என்பதும்,  உழைப்புக்கு நில வரையறை கிடையாது என்பதும்,  துறை வரையறை கிடையாது என்பதும்,  மனித வரையறை கிடையாது என்பதும் மிகத் தெளிவாகப் பேசப் பட்டுள்ளதைக் காணலாம்.
நபியவர்களது இந்த ஹதீஸும் செல்வ விருத்தி எனும் பொதுக் கருத்தை வலியுறுத்துவதைப் பாருங்கள். ஒரு முஸ்லிம் ஒரு பயிரையோ அல்லது மரத்தையோ நாட்டி,  அதிலிருந்து ஒரு பறவையோ,  மனிதனோ,  மிருகமோ எது சாப்பிட்டாலும்,  அது அவன் ஸதகா செய்த நன்மையைப் பெற்றுத் தரும்என்றார்கள் (புகாரி).

இதனால்தான் நல்ல ஆரோக்கியமும் வலிமையும் உள்ள ஒருவனுக்கு ஸதகா வழங்கப்படக் கூடாது என ஹதீஸ்கள் கூறுகின்றன. பணக்காரனுக்கோ, வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவனுக்கோ ஸதகா கொடுப்பது அனுமதிக்கப்பட மாட்டாதுஎன்றார்கள். (திர்மிதி) மற்றோர் அறிவிப்பில், “உழைக்கும் திறன் உள்ளவனுக்கு ஸதகாவில் பங்கு இல்லை” (அஹ்மத்) என்றார்கள்.

இவர்களுக்கு ஸதகா வழங்கப்படுவது பொறுத்தமற்றது என்பதற்கான மிகப் பிரதானமான காரணம் செல்வ விருத்தி என்பது ஒரு கடமை,  அதிலும் அந்த ஆற்றல் உள்ள ஒருவருக்கு அந்தக் கடமை இன்னும் அழுத்தமடைகிறது. சோம்பலும் முயற்சியின்மையும்,  இஸ்லாம் மனிதர்களில் பயிற்றுவிக்க நினைக்கின்ற ஒரு பண்பல்ல.

இதனாலேயே ஒவ்வாரு நபியும் ஒவ்வொரு துறையில் உழைப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஒரு விவசாயி,  நூஹ் (அலை) அவர்கள் ஒரு தச்சர்,  இத்ரீஸ் (அலை) அவர்கள் ஒரு நெசவுத் தொழிலாளி,  தாவூத் (அலை) அவர்கள் ஒரு கொல்லன்,  மூஸா (அலை) அவர்கள் விலங்கு வேளாண்மையாளர் (ஹாகிம்) நபியவர்களும் கூட விலங்கு வேளாண்மையிலும்,  வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே,  செல்வ விருத்தியில் ஈடுபடுதல் என்பது கஸ்ப் என்ற சொல் குறிக்கும் இரண்டாவது கருத்தாகும்.

காதிர்என்பது எதனைக் குறிக்கிறது?

காதிர்என்ற அறபுப்பதம் ஆற்றல் மிக்கவன்,  சக்தியுள்ளவன் என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஆற்றல் அல்லது சக்தி என்பது மூன்று பரிமாணங்களில் விளங்கப்படுத்தப்படுகிறது.
முதலாவது பரிமாணம் நேர்மை,  உண்மை,  ஹராம்-ஹலால் பேணல் போன்ற பெறுமானங்கள் சார்ந்தது. உழைப்பு என்பது இந்தப் பெறுமானங்களை மீறாததாகக் காணப்படல் வேண்டும். ஒருவனது உழைக்கின்ற ஆற்றல் எனும்போது அதில் முதலாவது பரப்பு அவன் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஹராம் - ஹலால் விதிகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

அல்-குர்ஆன் அளவை நிறுவையில் குறைபாடு செய்பவர்களைக் கண்டிக்கிறது. அளவை நிறுவையில் குறைபாடு செய்வோர்க்கு கேடு உண்டாகட்டும்,  அவர்கள் நிறுத்து வாங்கினால் அதிகமாகப் பெறுவார்கள். கொடுத்தால் குறைவாகவே கொடுப்பார்கள்” (முதப்பிபீன் 1-2)

ஒரு தடவை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். உண்மையும் நேர்மையும் உள்ள ஒரு வியாபாரி,  மறுமையில் நபிமார்களுடனும் ஷஹீத்களுடனும்,  ஸித்தீகீன்களுடனும் இருப்பான்என்றார்கள் (திர்மிதி)
நபியவர்கள் கூறினார்கள் ஹராமான உழைப்பில் வளர்கின்ற உடலுக்கு நரகமே மிகவும் பொறுத்தமான இடமாகும்என்றார்கள். (புகாரி)

ஹராமான உழைப்பு எந்தவிதமான பயனையும் தர மாட்டாது. நபியவர்கள் கூறினார்கள் ஒருவன் ஹராமான முறையில் உழைத்து நல்ல வழியில் செலவு செய்தாலும் அது அவனது செல்வத்தில் பரகத்தை ஏற்படுத்த மாட்டாது. அவன் அதிலிருந்து ஸதகா செய்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் விட்டுச் செல்லுகின்ற ஹராமான சொத்து,  அவனை நரகத்திற்கே எடுத்துச் செல்லும். ஒரு தீய செயல் மற்றொரு தீய செயலால் இல்லாது போய் விட மாட்டாது. மாற்றமாக ஒரு நல்ல செயலாலேயே தீய செயல் அழிகிறது. (பைஹகீ)

ஹராமான உழைப்பாளியின் துஆவும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. நீண்ட தூர பிரயாணத்தின் காரணமாக தலை கலைந்து தூசு படிந்த நிலையில் ஒருவன் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறான். ஆனால் அவனது உணவு ஹராமானது, பாணம் ஹராமானது,  உடை ஹராமானது. அவன் ஹராத்திலேயே வளர்ந்திருக்கிறான். இவனது துஆவுக்கு எப்படி பதில் கிடைக்கும்...?” என நபியவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். (முஸ்லிம்)

எனவே,  உண்மை,  நேர்மை,  ஹலால்-ஹராம் விதிகளைப் பேணி நடத்தல் என்பது உழைக்கும் ஆற்றல் என்பதன் முதலாவது பரப்பு.

அதன் இரண்டாவது பரப்பு அல்லது பரிமாணம் தேர்ச்சி அல்லது நிபுணத்துவம் சார்ந்தது. அதாவது உழைத்தல் என்பது போகிற போக்கில் நடைபெறும் ஒரு விடயமாகவன்றி,  தேர்ச்சியுடனும் நிபுணத்துவத்துடனும் நடைபெறல் வேண்டும். அப்போதுதான் உழைப்பின் நோக்கம் மிகச் சரியாக எட்டப்பட முடியும்,  என்பது போல் குறைந்த முயற்சியில்,  குறைந்த காலத்தில் கூடிய விளைவுகளையும் அடைந்து கொள்ள முடியும்.

அல்-குர்ஆனில் அல்லாஹ்தஆலா தனது பணியை விளங்கப்படுத்தும் பொழுது இவ்வாறு கூறியுள்ளான். அல்லாஹ்வின் உற்பத்தி,  அவன் அனைத்தையும் நேர்த்தியாக செய்திருக்கிறான்” (நம்ல் - 88) “அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்து படைத்திருக்கின்றான்” (ஸஜ்தா – 7) அல்லாஹ்தஆலா தனது உற்பத்தியின்போது நேர்த்தியையும் அழகையும் கடைபிடித்தமையை பறைசாற்றுவதன் மூலம் மனிதர்கள் தமது உழைப்பின்போது அதே நேர்த்தியையும் அழகையும் கடைபிடிக்க வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

அதுபோல் அல்லாஹ்தஆலாவின் விருப்பமும் இதுதான் என்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது அதனை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதையே அல்லாஹ்தஆலா விரும்புகிறான்என்றார்கள் (திர்மிதி)

உமர் (றழி) அவர்களுக்கு ஒரு மனிதனைப்பிடித்து விட்டால்,  அவர் எந்தத் தொழிலில் நிபுணத்துவம் மிக்கவர் என்பதை விசாரிப்பார்கள். அவ்வாறு எதுவும் இல்லை என்று தெரிந்தால் எனது பார்வையில் அவர் மிகவும் தாழ்ந்து விட்டார்என்று கூறுவார்கள்.

இன்றைய முகாமைத்துவக் கற்கைகள் வலியுறுத்துகின்ற,  சிறப்புத் தேர்ச்சியும்,  நிபுணத்துவமும்,  விளைவு மையப்பட்ட முகாமையும் போன்ற அனைத்தும்,  ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய அகீதா அவனிடத்தில் எதிர்பார்க்கின்ற பண்புகளாகவே காணப்படுகின்றன. இங்குதான் உழைப்பிலும் அவன் ஒரு முன்னோடியாக தொழிற்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கின்றது.
எனவே, உழைக்கின்ற ஆற்றல் எனும் போது அது நிபுணத்துவத்துடனும் தேர்ச்சியுடனும் நடைபெற வேண்டும் என்பது உழைக்கும் ஆற்றல் என்பதன் இரண்டாவது கருத்தாகும்.

இனி,  உழைக்கும் ஆற்றல் என்பதன் மூன்றாவது பரிமாணத்திற்கு வருவோம். அதுதான் சமநிலை பேணுதல் எனும் பரப்பு. இங்கு சமநிலை என்பதன் பொருள் என்ன?

பொருள் தேடுவதற்கான உழைப்புக்கும் மனிதனது ஏனைய நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பையே இது குறித்து நிற்கின்றது. ஒரு மனிதனது குடும்ப வாழ்வு, ஆன்மீக வாழ்வு,  தஃவா வாழ்வு போன்ற பல்வேறு பகுதிகளுடன் பொருள் தேடும் வாழ்வு எவ்வாறு சம்பந்தப்படுகிறது?

பல சமயங்களில் பொருள் தேடுவதற்காய் குடும்ப வாழ்வு புறக்கணிக்கப்படும் ஒரு நிலை காணப்படுகிறது. பலருடைய குடும்ப வாழ்வு வார இறுதி நாட்களாக மாத்திரம் அல்லது வருடத்தில் சில மாதங்களாக மாத்திரம் காணப்படுவதை அவதானிக்கலாம். அல்லது உழைப்பை மறந்த இபாதத்தையும் இபாதத்தை மறந்த உழைப்பையும் ஒரு புறத்தில் காண்பதுடன்,  மறுபுறத்தில் உழைப்பை மறந்த தஃவாவையும்,  தஃவாவை மறந்த உழைப்பையும் காணலாம்.

இவை போன்ற சமநிலையற்ற நிலைகளைத் தாண்டி ஒவ்வொன்றுக்கும் வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை வழங்குவதே இங்கு சமநிலை எனப்படுகிறது. உழைக்கும் ஆற்றல் எனும் பொழுது அதில் சமநிலை பேணல் என்ற பகுதி மிகவும் முக்கியமானது.

அல்லாஹ்தஆலா அல்குர்ஆனிலே கூறுகிறான். ஒரு பிரிவினர் பூமியில் பரந்து சென்று,  அல்லாஹ்வின் அருளை தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். மற்றும் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் போராடுகிறார்கள் (முஸ்ஸம்மில் - 20)

இங்கு உழைப்பும் ஜிஹாதும் இணைத்துக் கூறப்படுவதன் மூலம் ஏற்கனவே கூறப்பட்டது போல் உலகில் மார்க்கத்தை நிலை நாட்டுதல் என்பது ஜிஹாதின் மூலம் மாத்திரமன்றி உழைத்தலின் மூலமும் நடைபெறுகிறது என்ற கருத்து தெளிவாகிறது. அத்துடன், சிலர் உழைத்தலில் ஈடுபட மற்றும் சிலர் ஜிஹாதில் ஈடுபடுகிறார்கள். இந்த வழிகாட்டல் சமூகக் கட்டமைப்பில் பேணப்பட வேண்டிய ஒரு முக்கிய சமநிலையைக் கற்றுத் தருகிறது.

அபூபக்ர் (றழி) அவர்கள் ஷாம் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு வியாபாரத்திற்குச் சென்றமை குறித்து உம்மு ஸலமா (றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது நடைபெறுகிறது. நபியவர்களுடன் உடனிருந்து தஃவா வேலைகளில் ஈடுபட வேண்டியதன் அவசியம்,  ஆர்வம் இவை எல்லாம் உள்ள நிலையிலேயே அவரது வியாபரரப் பயணம் நிகழ்ந்திருக்கிறது. அத்துடன் அவரைப் போக வேண்டாம் என நபியவர்களும் தடுக்கவில்லை.

உமர் (றழி) அவர்கள் தனது அயலவர் ஒருவருடன் தொழிலையும், நபியவர்களது மஜ்லிஸ்களில் கலந்து கொள்வதையும் பங்கு போட்டுச் செயற்பட்டமையும் தஃவாவையும் உழைப்பையும் ஸஹாபாக்கள் ஒன்றை ஒன்று மீறாத வகையில் அழகான முறையில் சமநிலைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஒரு சூபித்துவ அறிஞரான ஷெய்க் ஷஃரானி என்பவர் கூறுகிறார், இபாதத்தில் ஈடுபடுபவர்களை விடவும் உற்பத்தியில் ஈடுபடுவோர் சிறந்தவர்கள். ஏனெனில்,  இபாதத்தின் பயனை அவர்கள் மாத்திரமே அடைந்து கொள்வர். ஆனால் உற்பத்தியின் பயன் எல்லா மக்களையும் சென்றடையும். ஒரு நெசவுத் தொழிலாளி தனது ஊசியை தஸ்பீஹ் செய்வதற்கான கருவியாய்ப் பயன்படுத்தட்டும். ஒரு தச்சன் தனது வாளை தஸ்பீஹுக்கான கருவியாய் பயன்படுத்தட்டும் என்றார். (முஷ்கிலதுல் பக்ர் - கர்ளாவி)

இந்தக் கூற்று உழைத்தலின் சிறப்பை வலியுறுத்துவது போல் இபாதத்தையும் உழைப்பையும் எவ்வாறு இணைத்து மேற்கொள்ள முடியும் என்பதையும் விளக்குகிறது.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் எனும் தாபிஈ இடம் ஒருவர் வந்து நீங்கள் எமக்கு பற்றற்ற வாழ்வைப் போதித்து விட்டு நீங்கள் மட்டும் குராஸானிலிருந்து மக்காவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறீர்களே எனக் கேட்டார். அதற்கு அவர்கள் நான் உயிர் வாழவும், மானத்துடன் வாழவும்,  எனது ரப்பை மிகச் சரியாக வணங்கவுமே இதனைச் செய்கிறேன். அல்லாஹ்வுக்குரிய ஒரு கடமையை எப்பொழுதும் நான் விரைந்து மேற்கொள்வேன் என்றார்கள்.

மேலே பேசப்பட்ட எல்லா ஆதாரங்களும் எங்களுக்குச் சொல்லும் பாடம் இதுதான். உழைப்பும்,  தஃவாவும், இபாதத்தும்,  குடும்பமும் இன்னும் உள்ள எந்தப் பணியாக இருப்பினும் இவை ஒன்றை ஒன்று முரண்பட்டவையல்ல. இவை அனைத்தும் மனிதனிடம் எதிர்பார்க்கப்படும் கடமைகளே. இவற்றிற்கு மத்தியில் ஒன்றை ஒன்று மீறாத வகையில் ஒவ்வொன்றிற்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கி செயற்படல் வேண்டும் என்பது உழைக்கும் ஆற்றல் என்பதன் மூன்றாவது பொருளாகும்.

தனிமனித உருவாக்கத்தில் காதிர் அலல் கஸ்ப்என்பதன் முக்கியத்துவம் என்ன?

இஸ்லாமிய தஃவாவில் உருவாக்கப்படும் தனிமனிதர்கள்,  சுயமாக உழைத்து செல்வ விருத்தியில் ஈடுபடும் ஆற்றல் கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும் என்பது உருவாக்கப் பரப்பில் முக்கிய ஒரு அம்சமாகும்.

 இந்த முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?

1.            இஸ்லாத்தின் பார்வையில் உழைப்பு என்பது ஒரு கடமை. அதிலும் குறிப்பாக ஒரு ஆணைப் பொறுத்தவரையில் அவன் தனது மனைவி பிள்ளைகளுக்காக செலவு செய்வது அவன் மீது இஸ்லாம் வாஜிபாக்கிய ஒரு விடயமாகும். இதற்கப்பால் சமூக மட்டத்தில் நின்று நோக்கும் போது செல்வ விருத்தியில் ஈடுபடல் ஒரு சமூகக் கடமையாகிறது. சமூகத்தில் பொறுத்தமானவர்கள் இதில் ஈடுபடாத போது முழு சமூகமும் அங்கு குற்றவாளியாக மாறுகிறது. எனவே, உழைப்பு என்பது தனிமனித,  சமூகக் கடமை என்ற வகையில் தனிமனித உருவாக்கத்தில் இந்தப் பண்பு தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகிறது.

2.            ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது போல் பூமியை அபிவிருத்தி செய்தல் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் எதிர்பார்க்கப்படும் பணியாகும். பொருளாதாரம் என்பது அபிவிருத்திக் காரணிகளில் முதன்மையானது. அந்த வகையில் பொருள் தேடுவதற்கான உழைப்பு பூமியை அபிவிருத்தி செய்வதன் வடிவங்களில் ஒன்று. எனவே தனிமனித உருவாக்கத்தில் உழைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக மனிதரக்ள் பயிற்றப்படுவதன் மூலம் அவர்கள் தமது பணியான பூமியை அபிவிருத்தி செய்யும் பணிக்கே தயார் செய்யப்படுகிறார்கள்.

3.            அல்லாஹ்தஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான் உங்களது வாழ்வின் அத்திவாரமாகக் காணப்படும் செல்வத்தை புத்திகுறைந்தவர்களது கைகளில் ஒப்படைத்து விடாதீர்கள்.” (நிஸா – 05)
இந்த வசனத்தில் மனித வாழ்வு எழுந்து நிற்பதற்குரிய காரணி பொருளாதாரம் அல்லது செல்வம் என்கிறது.

ஒரு தனிமனித வாழ்வின் ஸ்திரப்பாடு அவனது பொருளாதார ஸ்திரப்பாட்டில் தங்கியிருக்கிறது. பொருளாதார ஸ்திரப்பாடு இல்லாது போகின்ற பொழுது அவனது வாழ்வின் ஏனைய அனைத்துப் பகுதிகளும் ஸ்திரமற்று தளர்ந்து போவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது. தஃவாவில் ஒருவனது பின்னடைவுகளும் குடும்ப வாழ்வில் அமைதியின்மைகளும் பொருளாதாரம் பலவீனமடைவதால் ஏற்பட முடியும். நபியவர்கள் இந்தக் கருத்தையே இவ்வாறு கூறினார்கள் வறுமை என்பது குப்ருக்கே எடுத்துச்செல்ல முடியும்என்றார்கள்.

உண்மையில் பொருளாதாரப் பிரச்சினை ஒருவனை ஆக்கிரமித்து இருக்கின்ற பொழுது அவனால் வேறு எதனையும் சிந்திக்க இயலாது போகிறது. அவன் ஈடுபடும் எந்த வேலையிலும் அவனால் உரிய விளைவுகளைக் கொண்டு வர முடியாது போகலாம். எனவே, பொருளாதார ஸ்திரப்பாடு மிக முக்கியமானது.

அடுத்து ஒரு தஃவாவைப் பொறுத்தவரையிலும் அதனுடைய ஸ்திரப்பாடு வெற்றி என்பன பொருளாதாரத்தில் பெரிதும் தங்கியிருக்கின்றன. இதனால்தான் அல்லாஹ்தஆலா செல்வத்தையும் உயிரையும் கொடுத்துப் போராடுமாறு பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்துகிறான். அதிலும் குறிப்பாக செல்வத்தை உயிரை விடவும் முதன்மைப்படுத்திப் பேசியிருப்பதையும் அவதானிக்கலாம். ஒரு தஃவாவின் ஓட்டத்திற்கு பொருளாதாரம் மிக முக்கியமானது என்பதையே இது வலியுறுத்துகிறது.

அடுத்து இன்று சர்வதேச சக்திகள் என்று நாம் அடையாளப்படுத்துகின்ற வற்றில் பல்தேசியக் கம்பனிகள் எனும் பெரும் பொருளாதார சக்திகள் பிரதானமாவை. உலகின் போக்கையே மாற்றிவிடும் வலிமை இவற்றிற்கு இருக்கின்றன,  எனின் உலகின் சக்தியாக மாறுதல் என்பதும் பொருளாதாரத்தில் பெரிதும் தங்கியிருக்கிறது என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இஸ்லாம் உலகின் சக்தியாக மாற வேண்டும் எனின்,  அது ஒரு பொருளாதார சக்தியாகவும் காணப்படல் வேண்டும். அல்-குர்ஆன் உங்களால் இயன்றவரை சக்தியை திரட்டி வைத்துக் கொள்ளுங்கள் (அன்பால் - 60) என்று கூறுகிறது. நாம் திரட்ட வேண்டிய சக்திகளுள் பொருளாதாரம் பிரதானமானது.

ஆகவே, தனிமனித ஸ்திரப்பாடும் சரி,  ஒரு தஃவாவின் ஸ்திரப்பாடும் சரி,  உலக சக்தியாக இருத்தல் என்பதும் சரி அனைத்திற்கும் பொருளாதாரம் ஒரு முக்கிய அடிப்படையாக அமைகிறது. அதனைத்தான் அல்குர்ஆன் உங்கள் வாழ்க்கையின் அத்திவாரமாக அமைந்த செல்வம்என்கிறது. எனவே,  தனிமனித உருவாக்கத்தில் உழைக்கும் ஆற்றல் என்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

4.            பொருளாதாரம் அல்லது உழைப்பு சமூகப் பாதுகாப்பிற்கு அல்லது சமூக அமைதிக்கு வழி வகுக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொள்வது வறுமையிலிருந்து பாதுகாக்கும்என்றார்கள். சமூகத்தின் அமைதியின்மை குழப்பங்களுக்கு வறுமை ஒரு முக்கிய காரணம்,  அந்த வகையில் உழைப்பும் பொருள் தேடுதலும் ஒரு அமைதியான பாதுகாப்பான சமூக சூழலை தோற்றுவிக்க உதவுகின்றன.

இங்கு ஒரு விடயத்தைக் குறித்துக் காட்ட வேண்டும். இன்று பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சி கண்ட நாடுகளில் இந்த அமைதியும் பாதுகாப்பும் இல்லாதிருக்கிறதே என்று எவரும் ஒரு கேள்வியை எழுப்ப முடியும். உண்மைதான். ஆனால் பொருளாதாரத்தால் மாத்திரம் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வந்து விட முடியாது. அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த பொருளாதாரமும் ஒரு காரணி. பொருளாதாரத்தால் மாத்திரம் அமைதியை ஏற்படுத்த நினைப்பது ஒரு சடவாதப் பார்வை. இன்றைய வளர்ந்த நாடுகளின் குழப்பநிலை இங்குதான் இருக்கிறது.

எனவே,  அமைதியும் பாதுகாப்பும் பொருளாதாரத்துடன் இன்னும் பல காரணிகளும் இணைகின்ற பொழுதே முழுமையாக ஏற்பட முடியும். இந்தக் கருத்தையே நபியவர்களின் இந்த வார்த்தைகள் உணரத்துகின்றன. தனது ரிஸ்க் விரிவாக்கப்பட வேண்டும் என்றும்,  ஆயுள் அதிகரிக்க வேண்டும் என்றும் யார் விரும்புகிறாரோ அவர் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும். உறவுகளை இணைந்து நடக்கட்டும்என்றார்கள். (புகாரி)


இறுதியாக தனிமனித உருவாக்கத்தில் உழைக்கும் ஆற்றல் என்பது இன்றியமையாத ஒரு பரப்பு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எமது பணியில் இந்தப் பக்கத்தை நாம் ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும். அல்லாஹ்வே போதுமானவன்.