Friday, October 27, 2017

உங்கள் எதிர்காலத் துணையிடம் நீங்கள் எதிர்பார்க்கும் பண்புகள் எவை?

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் விடை தேட வேண்டிய மூன்றாவது கேள்வி யார்? என்பது. அதற்கான பதிலின் இறுதிப்பகுதியாக இந்தப்பத்தி அமைகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பத்தியில் கோட்பாட்டு உண்மைகளைத் தாண்டி அனுபவத்தில் கண்ட சில விடயங்களைப் பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளிடம், குறிப்பாகச் சொன்னால் பதினெட்டு வயதிற்கும் இருபத்தி ஐந்து வயதிற்கும் இடைப்பட்டவர்களிடம் நான் ஒரு கருத்துக் கணிப்பை செய்து பார்த்திருக்கிறேன். அதில் அவர்களிடம் இவ்வாறு ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்த்தேன். உங்கள் எதிர்காலத் துணையிடம் நீங்கள் எதிர்பார்க்கும் பண்புகள் எவை?” 

இதற்கான அவர்களது பதில்கள் என்னில் சந்தோசம் கலந்த ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஆச்சரியத்திற்கு ஒரு குறிப்பான காரணம் இருந்தது. அதுதான் அந்த இளைஞர்களும் யுவதிகளும் பெரியளவு மார்க்க ஈடுபாடுகளோ தஃவா ஈடுபாடுகளோ இல்லாத,  எம் சமூகத்தின் சராசரி இளைஞர்களும் யுவதிகளுமாகவே இருந்தனர். அந்த வகையில் அவர்களது எதிர்பார்ப்புகள் அதிகமாக உல்லாசத் தேடல்களாக இருக்கும் என்பதுதான் பெரிதும் எனது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கவகையில் அதற்கு முற்றிலும் மாற்றமான பதில்கள் வந்திருந்தன. அவை இஸ்லாமிய விழுமியங்களுக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன.

ஆண்கள் தரப்பில் இருபத்தி மூன்று வகையான பதில்கள் அளிக்கப்பட்டிருந்தன. பெண்கள் தரப்பில் இருபது வகையான பதில்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவையனைத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்வது எனது நோக்கமல்ல. மாற்றமாக அவற்றின் அதிகூடிய விகிதாசாரத்தைப் பெற்ற பதில்களையும் அவை குறித்த சில அவதானங்களையும் முன்வைப்பதே எனது நோக்கம்.

முதலில் ஆண்கள் தரப்பு பதில்களில் கூடுதல் விகிதாசாரத்தைப் பெற்ற ஐந்து வகையான பதில்களைத் தருகின்றேன்.

1.            நல்ல ஈமானும் மார்க்கப் பண்பும் உள்ளவள் – 89 வீதம்
2.            விட்டுக்கொடுப்பு,  பொறுமை,  புரிந்துணர்வுடன் அனுசரித்து நடப்பவள் – 79 வீதம்
3.            நல்ல ஒழுக்கம் உள்ளவளாக இருத்தல் – 64 வீதம்
4.            அன்பாய் நடந்து கொள்பவள் – 57 வீதம்
5.            எனது குடும்பத்தினர்,  பெற்றோருடன் நன்கு பழகி கௌரவமாக நடாத்துபவள் – 50 வீதம்

பெண்கள் தரப்புப் பதில்களில் முதல்தர ஐந்து பதில்களை அவதானியுங்கள்

1.            நல்ல ஈமானும் மார்க்கப் பண்பும் உள்ளவர் – 84 வீதம்
2.            என்னுடன் அன்பாக நடப்பவர் – 72 வீதம்
3.            விட்டுக்கொடுப்பு,  பொறுமை,  புரிந்துணர்வுடன் நடப்பவர் – 63 வீதம்
4.            எனது பெற்றோர்,  குடும்பத்தினர்க்கு உதவி செய்து,  கௌரவப்படுத்துபவர் – 59 வீதம்
5.            பொது விடயங்களுக்கு உதவி செய்யக் கூடியவர் – 50 வீதம்

இரு தரப்பினருடைய பதில்களையும் பொதுப்படையாகப் பார்க்கின்ற பொழுது,  மார்க்கம்,  புரிந்துணர்வு,  அன்பு,  குடும்ப உறவுகளை மதித்தல் போன்ற விடயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆண்கள் தரப்பில் மேலதிகமாக ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதையும் பெண்கள் தரப்பில் மேலதிகமாக சமூக ஈடுபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

இந்தப் பதில்களைப் பார்க்கின்ற பொழுது,  அன்பு,  புரிந்துணர்வு போன்ற விடயங்கள் பொதுவாக எல்லோரும் எதிர்பார்க்கக் கூடியவைதான். ஆனால் மார்க்கம்,  குடும்பம் என்ற இரண்டு அம்சங்களும் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கக் கூடியவையாக இருந்தன. இன்றைய இளைஞர் சமூகத்திடம் இவற்றிற்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பது உண்மையில் மிகுந்த நம்பிக்கையைத் தரக்கூடிய ஒரு விடயம். எவ்வளவுதான் சமூகத்தில் சீர்கேடுகள்,  ஒழுக்க வீழ்ச்சி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் அந்த ஒழுக்க வீழ்ச்சியை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை,  என்பதே உண்மை. தனக்குரிய துணை என்று தேடும் பொழுது மார்க்கமும் ஒழுக்கமும் முக்கியமானது என்றுதான் பார்க்கிறார்கள். உண்மைதான் இதுதான் மனித இயல்பு. அல்லாஹ் இவ்வாறுதான் எங்களைப் படைத்திருக்கிறான். அந்தப் படைப்பியல்பைத்தான் துணை தேடும் பொழுதும் கடைபிடிக்குமாறு நபியவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

அடுத்து,  குடும்பம் என்ற காரணி இது மிகவும் வலிமை மிகுந்தது. உண்மையில் குடும்பத்தினரை மதித்தல்,  உதவுதல் என்பது இரு தரப்பினரிடமும் மிகுந்த தாக்கத்தை செலுத்தக்கூடியது. குடும்பத்தை மதிக்கவில்லை என்பது பல சமயங்களில் வெளியில் சொல்லாத வலிகளை சுமந்து வாழும் நிலைமைத்தான் இரு தரப்பினரிடமும் ஏற்படுத்தி விடுகிறது. குடும்ப உறவை இணைந்து நடத்தல் என்பதும் மனிதப் படைப்பியல்பு சார்ந்த ஒன்றுதான். அதனால்தான் இஸ்லாம் அதனை மிகவுமே வலியுறுத்திப் பேசியிருக்கிறது. அந்த இயல்பின் வெளிப்பாட்டைத்தான் இளைஞர்கள் தமது பதில்களாய்த் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

பெண்கள் தரப்புப் பதில்களில் குறிப்பாக துணையின் சமூக ஈடுபாட்டைப் பேசியிருப்பது ஒரு செய்தியைச் சொல்கிறது. ஒரு பெண் தனது துணையை அதிகமாக வீட்டுடன் முடங்கிக் கிடப்பவனாகக் காண விரும்புவதில்லை. தான் உண்டு தனது வேலை உண்டு என்று வாழ வேண்டும் என விரும்புவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனை ஒரு ஹீரோவாகவே காண விரும்புகிறாள். அவனது சமூக ஈடுபாட்டால் சந்தோசமடைகிறாள். என்னிடம் பல சகோதரர்கள் தமது மனைவியர் பற்றி முறைப்பட்டிருக்கிறார்கள். பள்ளிவாயல் வேலைக்குப் போங்கள்,  பாடசாலையின் கூட்டத்திற்குப் போங்கள்,  அதற்குப் போங்கள்,  இதற்குப் போங்கள் என்ற மனைவியின் நச்சரிப்பை அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது நச்சரிப்பு அல்ல. தனது கணவனை ஹீரோவாகக் காணும் எதிர்பார்ப்பு. இதுவும் ஒரு படைப்பியல்புதான். அதுதான் அவர்களது வார்த்தைகளில் வெளிவந்திருக்கிறது.

இந்தப் பதில்களில் திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் ஒவ்வொருவரக்கும் வலிமையான ஒரு செய்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆணும் தனக்கு வரப்போகும் துணைவி முக்கியமாய்த் தன்னிடம் எதனை எதிர்பார்க்கிறாள் என்பதை இவை சொல்கின்றன. அதுபோல் ஒவ்வொரு பெண்ணும்,  தனக்கு வரப்போகும் துணைவன் தன்னிடம் எதனை முக்கியமாய் எதிர்பார்க்கிறான் என்பதை இந்தப் பதில்கள் சொல்கின்றன. எனவே நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற செய்தியை இரு தரப்புக்கும் சொல்கிறது.

இறுதியாக,  இங்கு மற்றொரு உண்மையைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இவர்களது பதில்களில் அழகு,  அறிவு,  பொருளாதாரம் போன்ற காரணிகள் ஐம்பது வீதத்திற்கும் குறைவான முக்கியத்துவத்தையே பெற்றிருந்தன. இன்றைய குடும்பங்களுக்குள்ளே குறிப்பாக இந்தக் காரணிகளுக்குப் பெரிய இடமிருக்கிறது. ஆனால் இளைஞர்களுடைய பார்வை இவற்றைத் தாண்டிச் சென்றிருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக புறத்தோற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அழகு என்ற காரணிக்கு ஆண்கள் அளித்த முக்கியத்துவம் வெறும் 39 வீதம்தான்,   பெண்கள் அளித்த முக்கியத்துவம் வெறும் 28 வீதம் மாத்திரமே. பெண்களை விட ஆண்கள் புற அழகிற்கு அதிக இடம் தருவார்கள் என்பது உளவியல் சொல்லும் உண்மை. அந்த உண்மை இங்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அழகு என்ற காரணி,  துணைத் தெரிவில் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது அல்ல என்பதுவே இங்கு புலப்படுகிறது. அழகு என்ற காரணி சார்பு நிலை கொண்டது என்பதுவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதாவது அழகு என்பது எது என்பதை வரையறை செய்வதில் ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறது. ஒருவருக்கு அழகாய்த் தெரிவது மற்றவருக்கு அழகாய் இருக்க மாட்டாது.

பொருளாதாரத்திற்கு பெண்கள் தரப்பு கொடுத்த முக்கியத்துவம் 22 வீதம். ஆனால் ஆண்கள் தரப்பு பொருளாதாரம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லியிருக்கவில்லை. குடும்பத்தின் பொருளாதாரம் ஆணின் கடமை என்பதை உணர்ந்ததனாலோ என்னவோ பெண்ணின் பொருளாதார நிலை குறித்து ஆண் தரப்பு எதுவும் பேசாதிருந்திருக்கலாம். ஆனால் பெண்களும் ஆணின் குணநலன்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை பொருளாதாரத்திற்கு வழங்கவில்லை என்பதுவே உண்மை. இங்கு பொருளாதாரம் அவசியமற்றது என்று சொல்லவில்லை. மாற்றமாக துணைத் தெரிவின்போது அது பெறும் முக்கியத்துவம் என்ன என்பது மட்டுமே இங்கு அடையாளப்படுத்தப்பட்டது.

அல்லாஹ்வே போதுமானவன்.

Thursday, October 19, 2017

மகாஸித் தேடல்கள் (4)

உஸுல் சிந்திப்பும் மகாஸித் சிந்திப்பும்

உஸுலுல் பிக்ஹ்,  மகாஸிதுஷ் ஷரீஆ என்பன இன்று தனிப்பெரும் கலைகளாக வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் இந்த இருவகையான சிந்திப்புகளும் மிகவும் பழமையானவை. இஸ்லாம் அறிமுகமான காலம் முதலே மகாஸித் சிந்திப்பு இருந்திருக்கிறது என்பதை கடந்த பத்தியில் கண்டோம். உஸுல் சிந்திப்பு என்பதும் அதே போன்றதுதான். அதுவும் ஆரம்பம் தொட்டே புழக்கத்தில் இருந்திருக்கிறது. நபியவர்களது வபாத்திற்குப் பின்னர்,  அபூபக்ர் (றழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அல்குர்ஆனை நூலுருப்படுத்துதல் எனும் சம்பவம். இந்த சம்பவத்தில் உஸுல் சிந்திப்பையும் மகாஸித் சிந்திப்பையும் ஒரு சேரக் காண முடியும்.

ஸைத் பின் ஸாபித் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : யமாமா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்,  அபூபக்ர் (றழி) அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். நான் அங்கு போன போது உமர் (றழி) அவர்களும் உடன் இருந்தார்கள். அபூபக்ர் (றழி) அவர்கள் என்னைப் பார்த்துச் சொன்னார்கள். உமர் (றழி) அவர்கள் என்னிடம் ஒரு விடயத்தைப் பற்றி பேசுகிறார். யமாமா போரில் அல்குர்ஆனை மனனமிட்டோர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்று யுத்தங்களில் அல்குர்ஆனை மனனமிட்டோர் பல இடங்களில் கொல்லப்படும் நிலை ஏற்பட்டால்,  அல்குர்ஆனின் பெரும்பகுதி இல்லாமல் போய்விடும் என்று நான் அச்சப்படுகிறேன். எனவே,  அல்குர்ஆனை ஒன்று திரட்டி நூலுருப்படுத்துவதற்கு நீங்கள் ஆவண செய்ய வேண்டும் என்று என்னிடத்தில் கேட்டுக் கொண்டார். 

அதற்கு நான் நபியவர்கள் செய்யாத ஒரு விடயத்தை நான் எவ்வாறு செய்ய முடியும் என்று உமரவர்களிடம் வினவினேன். அதற்கவர் அல்லாஹ் மீது சத்தியமாக இந்தப் பணியில் நலனிருக்கிறது என்றார். தொடர்ந்தும் உமரவர்கள் இந்த விடயம் தொடர்பில் என்னிடம் பேசிக் கொண்டேயிருந்தார். இறுதியில் இந்த விடயத்தில் உமரவர்களுக்கு அல்லாஹ் தெளிவைக் கொடுத்தது போல் எனக்கும் தெளிவைத் தந்தான். தற்போது நானும் உமரவர்களுடைய கருத்தையே கொண்டிருக்கிறேன் என்றார்கள். (புஹாரி,  திர்மிதி)

பின்னர் அபூபக்ர் (றழி) அவர்கள் அந்தப் பொறுப்பை ஸைத் பின் ஸாபித்திடம் ஒப்படைக்க,  அவரும் ஆரம்பத்தில் அபூபக்ர் (றழி) அவர்கள் எழுப்பிய அதே கேள்வியை எழுப்ப,  அவருக்கும் விடயம் தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர்,  அவர் அல்குர்ஆனை ஒன்று திரட்டியதாக அந்த சம்பவம் தொடர்கிறது.

இந்த சம்பவத்தில் அபூபக்ர் (றழி) அவர்களுடைய சிந்திப்பு முறையை உஸுல் சிந்திப்பு என்போம். உமர் (றழி) அவர்களுடைய சிந்திப்பு முறையை மகாஸித் சிந்திப்பு என்போம். அதாவது சம்பவத்தில் அபூபக்ர் (றழி) அவர்கள், அல்குர்ஆனை நூலுருப்படுத்தும் ஆலோசனையை உமரவர்கள் முன்வைத்தபோது,  நபியவர்கள செய்யாத ஒரு விடயத்தை நான் செய்யலாமா? என்ற கேள்வியை எழுப்பினார்கள். இந்தக் கேள்வியின் மூலம் அபூபக்ர் (றழி) அவர்கள் சொல்ல வந்த செய்தி என்னவெனின்,  மார்க்கத்தில் எந்தவொரு விடயத்தையும் செய்வதற்கு ஒரு ஆதாரம் அவசியம். ஒரு விடயம் ஆதாரம் இன்றி தனித்து எழுந்து நிற்க முடியாது. ஒரு கருத்து எழுவதற்கு ஒரு அடிப்படை வேண்டும், ஒரு மூலம் வேண்டும். இஸ்லாத்தின் மூலங்கள் இரண்டு. ஒன்று அல்குர்ஆன் மற்றது நபியவர்களது வாழ்வு.

 அல்குர்அனை நூலுருப்படுத்தல் என்ற செயற்பாடு நபியவர்களது வாழ்வில் நடைபெறவில்லை. எனவே,  அந்த செயற்பாட்டை நான் செய்வதற்கான அடிப்படை இல்லாதிருக்கிறது என்பதுவே அபூபக்ர் (றழி) அவர்களது கேள்வியின் பின்னால் இருந்த செய்தியாகும். அந்த வகையில் ஒரு விடயத்திற்கான ஆதாரம் என்ன என்ற வகையிலான சிந்திப்பை நாம் உஸுல் சிந்திப்பு எனலாம்.

உமரவர்களுடைய சிந்திப்பை நாம் மகாஸித் சிந்திப்பு என்கிறோம். அதாவது,  ஒரு விடயத்தின் நோக்கம் என்ன என்ற வகையிலான சிந்திப்பை மகாஸித் சிந்திப்பு என்போம். உமரவர்கள் அல்குர்ஆனை நூலுருப்படுத்துவதன் நோக்கம் என்ன என்று சிந்தித்தார்கள். அதனால்தான் அபூபக்ர் (றழி) அவர்கள் அந்தக் கேள்வியை எழுப்பிய போது,  அதில் நலனிருக்கிறது என்று பதிலளித்தார்கள். 

நலன் என்ற கருத்தைக் குறிக்க சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அறபுப்பதம் கைர் என்பதாகும். கைர் என்ற சொல் மிக விரிந்த பொருற்பரப்பைக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் எது பயனுள்ளது? எது சிறப்புமிக்கது? எது நலன்பயக்கக் கூடியது? அதனைத்தான் அறபு மொழியில் கைர் என்பர். அந்தவகையில் இதில் கைர் இருக்கிறது என்ற உமரவர்களின் பதிலின் மூலம் அவர் சொல்ல வந்த செய்தி என்னவெனின்,  அல்குர்ஆனை நூலுருப்படுத்துவதன் பயன் என்ன? நலன் என்ன? சிறப்பு என்ன? என்று சிந்தியுங்கள். அதுதான் முக்கியமானது என்பதாகும். இதுதான் மகாஸிதிய சிந்திப்பு. இங்கு உமரவர்கள் அந்த செயற்பாட்டின் நோக்கத்தைத் தேடினார்கள்.

இந்த இடத்தில் உமரவர்கள் தேடிய நோக்கம் எது? என்ற ஒரு கேள்வி தோன்றலாம். அதற்கான பதிலும் அந்த சம்பவத்திலேயே இருக்கிறது. உமரவர்கள் தான் அச்சப்படும் விடயமாக அல்குர்ஆனை சுமந்தவர்கள் கொல்லப்பட்டால் அல்குர்ஆனின் பெரும்பகுதி இல்லாது போய்விடலாம் என்றார்கள். இங்கு அல்குர்ஆனின் பெரும்பகுதி இல்லாது போய் விடக்கூடாது என்ற அவரது ஆதங்கம்தான் முக்கியமானது. அல்குர்ஆனை முழுமையான வடிவில் அடுத்த பரம்பரைக்கு நகர்த்த வேண்டிய பொருப்பின் கனதியை இட்டே உமரவர்கள் அச்சப்பட்டார்கள்.

இந்த சம்பவம் பற்றிய மற்றோர் அறிவிப்பில் ஸைத் பின் ஸாபித் கூறுவதாக இவ்வாறு வருகிறது. எமது தீனை இந்த அல்குர்ஆன்தான் முழுமையாக சுமந்திருக்கிறது. அல்குர்ஆன் இல்லாது போய் விட்டால் எமது தீனும் இல்லாது போய்விடும் என்றார்கள். (இப்னுல் அன்பாரி). எனவே,  தீனைப் பாதுகாத்து அடுத்த பரம்பரைக்கு நகர்த்துதல் என்ற நோக்கம் அல்குர்ஆனைப் பாதுகாத்து அடுத்த பரம்பரைக்கு நகர்த்துவதில் தங்கியிருக்கிறது. அந்தவகையில் தீனை,  கூட்டுதல் குறைத்தல் இன்றி,  முழுமையான வடிவில் பாதுகாத்து அடுத்த பரம்பரையினர் கையில் ஒப்படைத்தல் என்ற நோக்கத்தையே உமரவர்கள்,  அதில் கைர் இருக்கிறது என்றார்கள்.

எனவே,  ஆதாரம் என்ன என்று சிந்திப்பது உஸுல் சிந்திப்பு. நோக்கம் என்ன என்று சிந்திப்பது மகாஸித் சிந்திப்பு. இந்த இருவகையான சிந்திப்பு முறைகளும் இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக சட்ட சிந்தனையைப் பொறுத்தவரையில் இவ்விரு சிந்திப்பு முறைகளும் இன்றியமையாதவை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒரு சட்ட முடிவு மிகச் சரியானதாகவும்,  கால,  இட,  சூழல் பொருத்தம் கொண்டதாகவும் அமைய வேண்டும் எனின்,  அங்கு இந்த இரண்டு வகை சிந்திப்பினதும் கலவை அத்தியவசியமானது. இங்கு ஒன்று மற்றையதை முழுமைப்படுத்துகிறது,  வலிமைப்படுத்துகிறது.

இக்கருத்தை இன்னும் தெளிவாக விளங்க ஒரு உதாரணம் சொல்கிறேன். நபியவர்கள் காலத்தில் ஒரு தடவை சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. அப்போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு நபியவர்கள் விலையைக் கட்டுப்படுத்துபவனும்,  ஒன்றைக் குறைத்துக் கொடுப்பவனும்,  அதிகரித்துக் கொடுப்பவனும் உணவளிப்பவனும் அல்லாஹ்தஆலாதான். உங்களில் எவரும் தனது செல்வத்திலோ உயிரிலோ நான் ஒரு அநியாயம் இழைத்ததாக முறைப்பாடு எதுவும் இல்லாத நிலையிலேயே நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன் என்றார்கள். (அபூதாவூத்,  திர்மிதி)

இந்த ஹதீஸ்,  சந்தைத் தொழிற்பாடு சுதந்திரமாக விடப்படல் வேண்டும். அரசு தலையீடு செய்து விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளக் கூடாது என்ற சட்ட முடிவுக்கான நேரடியான ஆதாரமாக அமைகிறது. இந்த சட்ட முடிவே நபியவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள் காலத்திலும் பின்பற்றப்பட்டது. ஆனால் கலாநிதி அப்துல் ஸலாம் பலாஜி அவர்கள் கூறுவது போல்(1)  தாபிஈன்கள் காலத்தில் அரசு தலையீடு செய்து விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட முடியும் என்ற பத்வா வழங்கப்பட்டது. இங்கு தாபிஈன்களுடைய சிந்திப்பு,  விலைக்கட்டுப்பாடு அனுமதிக்கப்பட்டதா? இல்லையா? என்பதற்கான ஆதாரம் என்ன என்ற வகையில் மாத்திரம் அமையவில்லை. மாற்றமாக விலைக்கட்டுப்பாடு ஏன் அவசியம்? நோக்கம் என்ன? என்ற அடிப்படையிலும் சிந்தித்தார்கள்.

 அதாவது இந்த ஹதீஸில் நபியவர்கள் விலைக்கட்டுப்பாட்டின் நோக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள். தான் யாருடைய செல்வத்திற்கோ உயிருக்கோ அநியாயம் இழைத்த நிலையில் அல்லாஹ்வை சந்திக்க விரும்பவில்லை என்றார்கள். எனவே அன்று விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுமாறு ஸஹாபாக்கள் கேட்ட பொழுது நபியவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை? எனின் அதனால் விற்பனையாளர்களுக்கு ஏதேனும் அநியாயம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவேயாகும். ஏனெனில் அன்று நிகழ்ந்த விலையுயர்வு பொருற்களின் கேள்வி,  நிரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்த இயல்பானதொரு சந்தைத் தொழிற்பாடு. இந்த இடத்தில் அரசு என்ற வகையில் நபியவர்கள் தலையீடு செய்து விலையைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் விற்பனையாளர்களைப் பாதிக்கும். எனவே நபியவர்கள் விலைக் கட்டுப்பாட்டை தடை செய்தார்கள் என்பதை விடவும் அநியாயம் இழைக்கப்படுவதையே தடை செய்தார்கள். இதுதான் தாபிஈன்களது புரிதலாக இருந்தது. அநியாயம் இழைக்கப்படக் கூடாது என்ற நோக்கமே அன்று விலைக்கட்டுப்பாடு விதிக்கப்படாமைக்கான காரணம் என்று புரிந்து கொண்டார்கள்.

ஆனால் இன்று தாபிஈன்கள் காலத்தில் நிகழந்த விலையுயர்வு இயல்பான சந்தைத் தொழிற்பாட்டினால் நிகழ்ந்ததல்ல. மாற்றமாக வியாபாரிகள் சந்தைத் தொழிற்பாட்டை தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தியதால் விளைந்தது. அதனால் நுகர்வாளர்கள் அநியாயம் இழைக்கப்படுகிறார்கள். எனவே,  வியாபாரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வாளர்களுக்கு நடக்கும் அநியாயத்தைத் தடுப்பதற்காக அரசு தலையிட்டு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என பத்வா வழங்கப்பட்டது. இங்கு விலைக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சட்ட முடிவின் நோக்கமும் அநியாயம் இழைக்கப்படக் கூடாது என்பதாகவே அமைந்திருக்கிறது.

எனவே,  இரண்டு சூழ்நிலைகளிலும் தனித்து ஆதாரம் என்ன என்ற தேடலின் மூலம் மாத்திரமன்றி நோக்கம் என்ன என்ற தேடலின் மூலமாகவே மிகச் சரியானதும் கால,  இட,  சூழல் பொறுத்தப்பாட்டுக்குரிய முடிவைப் பெற முடியுமாக அமைந்தது. அந்தவகையில் சட்ட சிந்திப்பில் இந்த இரண்டு வகையான சிந்திப்பு முறைகளும் முக்கியம் பெறுகின்றன. ஆதாரம் என்ன என்ற தேடலுடன் மாத்திரம் சுருங்குவதும் பொறுத்தமற்றது. நோக்கம் என்ன என்ற தேடலுடன் மாத்திரம் சுருங்குவதும் பொருத்தமற்றது. இரண்டும் இணைந்த சிந்திப்பே இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியமாகும்.


(1)          கலாநிதி அப்துல் ஸலாம் பலாஜி,  ததவ்வுர் இல்மி உஸுலில் பிக்ஹ் வதஜத்துதுஹு,  பதிப்பகம் : தாருல்வபா,  முதலாம் பதிப்பு 2007,  பக்கம் 32.

Monday, October 9, 2017

மகாஸித் தேடல்கள் (3)

மகாஸித் சிந்தனையும் மகாஸித் கலையும்

அண்மையில் மகாஸித் சிந்தனையாளர் கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்களிடம்,  இஸ்லாத்தின் ஏனைய கலைகளுடன் ஒப்பிடும் பொழுது மகாஸித் கலை புதியதா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் தரும் போது மகாஸித் சிந்தனையையும் மகாஸித் கலையையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளல் வேண்டும்,  மகாஸித் சிந்தனை வஹி இறங்கிய சந்தர்ப்பத்துடனேயே தோற்றம் பெற்றது. வஹி பேசிய ஒவ்வொரு விடயமும் நோக்கங்கள் கொண்டதாகவே காணப்பட்டது. அல்லாஹ்தஆலா தன்னை ஹகீம் என்று அடையாளப்படுத்தகிறான். அதன் பொருள் என்ன? அவன் எதனையும் காரணமின்றி செய்ய மாட்டான்,  எல்லாவற்றிற்கும் நோக்கம் இருக்கிறது என்பதாகும். ஆனால் மகாஸித் ஒரு கலையாக வளர்ச்சியடைந்தமை பிற்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது.(1)

இந்த வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ளும் உண்மை என்னவெனின் மகாஸித் சிந்தனைக்கு காலவரையறைகள்,  தோற்றம், முடிவு என்ற விடயங்கள் கிடையாது,  அது எல்லாக் காலத்திலும் இருக்க முடியுமானது. ஆனால் மகாஸித் ஒரு கலை என்ற வடிவில், அது தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த ஒரு வரலாறு இருக்கிறது. இது எல்லா இஸ்லாமிய கலைகளுக்கும் பொருந்தும். அங்கு தோற்றம்,  வளர்ச்சி,  ஏற்ற இறக்கங்கள்,  ஏன்?  முடிவைக் கூட சிலவற்றில் காணக்கூடியதாக இருக்கும்.

மகாஸித் சிந்திப்பு என்றால் என்ன?  எளிமையாக் சொன்னால்,  எந்தவொரு விடயத்தையும் அதன் இலக்கு மைய்யப்பட்டு சிந்திப்பது அல்லது அதன் நோக்கம் என்ன என்ற அடிப்படையில் சிந்திப்பது,  மகாஸித் சிந்திப்பு எனப்படும். இந்தவகையான சிந்திப்பு முறைமை இஸ்லாத்தின் ஆரம்பம் முதலே இருந்திருக்கிறது. ஸஹாபாக்களது பத்வாக்களில் இந்த உண்மையை நாம் தெளிவாகக் காணலாம். 

உமர் (றழி) அவர்களது காலத்தில் மதுபானம் அருந்தியவருக்கான தண்டனை குறித்து ஸஹாபாக்கள் மத்தியில் ஆலோசணை நடைபெற்றது. அப்போது அலி (றழி) அவர்கள் எண்பது கசையடிகள் வழங்குவதே பொருத்தமானது,  ஏனெனில் மது அருந்தினால் போதை ஏற்படும்,  போதை ஏற்பட்டால் உளரத் தொடங்குவான்,  உளரினால் பிறர் மீது அவதூறு சொல்லத் தொடங்குவான்,  அவதூறு சொல்பவனுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்படும்,  அந்தவகையில் அவதூறுக்கான தண்டனையையே இதற்கும் வழங்கலாம் என்றார்கள். அதன் பின்னர் உமரவர்கள் மதுபானம் அருந்துபவருக்கு எண்பது கசையடிகள் வழங்கினார்கள். (முஅத்தா மாலிக்).

கலாநிதி இமாதுத்தீன் அர்ரஷீத் அவர்கள் இந்த சம்பவத்தை விளங்கப்படுத்தும் பொழுது,  மது அருந்தினால் உலகில் ஒரு தண்டனை வழங்கப்படுவதற்கான நியாயம் என்ன என்பதைத்தான்,  உண்மையில் அலி (றழி) அவர்களது தர்க்கம் விளங்கப்படுத்துகிறது. உலகியல் தண்டனைக்குப் போதை ஏற்படுதல் என்பது மாத்திரம் காரணமல்ல,  மாற்றமாக போதையினால் ஏற்படும் சமூகப் பாதிப்பையும் கருத்தில் கொண்டுதான் உலகியல் தண்டனை வரையறுக்கப்படுகிறது. அந்தவகையில் இங்கு அலி (றழி) அவர்களது சிந்தனை தண்டனை ஏன் வழங்கப்படல் வேண்டும்? என்ற கேள்வியை மையப்படுத்தியே அமைந்திருந்தது,  என்கிறார்.(2) இதனைத்தான் மகாஸித் சிந்திப்பு என்கிறோம்.

மற்றோர் உதாரணத்தைப் பாருங்கள்,  உமர் (றழி) அவர்கள் காலத்தில் யமன் பிரதேசத்தில் பலர் இணைந்து ஒரு சிறுவனை படுகொலை செய்கிறார்கள். இதற்கு உமரவர்கள் அந்த அனைவரும் பலிக்குப்பலி வாங்கப்படல் வேண்டும் என தீர்ப்பளிக்கிறார்கள். அத்துடன் ஸன்ஆவாசிகள் அனைவரும் இந்தக் கொலையில் பங்கெடுத்திருந்தாலும் அவர்கள் அனைவரையும் கொலை செய்திருப்பேன் என்றார்கள். (புஹாரி)

கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் கூறுவது போல்(3),  ஒருவருக்காகப் பலர் பலிவாங்கப்படுவது வெளிப்படையில் நியாயமற்றது போல் தோன்றினாலும்,  உண்மையில் பலிக்குப்பலி வாங்குதல் எனும் சட்டத்தின் நோக்கத்தின் அடியாக நின்று பார்க்கின்ற பொழுது அதில் ஒரு பெரிய நியாயமிருப்பதைக் கண்டு கொள்ளலாம். உமரவர்களும் அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை அணுகியிருக்கிறார்கள்.

பலிக்குப்பலி வாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது (பகரா – 179) என்று அல்குர்ஆன் இதன் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. மனித உயிர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் மக்ஸத். ஒருவர் கொலை செய்யப்படும் பொழுது அதற்காகக் கொலை செய்தவரும் கொல்லப்படுவார் என்ற நிலை இருக்கின்ற பொழுது இயல்பாகவே அந்த செயலுக்கு யாரும் துணியமாட்டார்கள். ஒரு தடவைக்குப் பலதடவைகள் யோசிப்பார்கள். இங்கு கொலை செய்தவர் ஒருவராக இருந்தாலும் பலராக இருந்தாலும் அவர்கள் பலிவாங்கப்படுவார்கள் என்றிருக்கின்ற பொழுதே உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்கான உத்தரவாதம் அங்கிருக்கும். பலர் சேர்ந்து செய்கின்ற கொலைக்குப் பலிக்குப்பலி கிடையாது என்றிருப்பின்,  எந்தக் கொலையின் போதும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இந்த வழிமுறை பின்பற்றப்பட வாய்ப்பிருக்கிறது. அது உயிர்கள் பாதுகாக்கப்படுதல் எனும் நோக்கத்திற்கு முரணானதாகவே இருக்கும். எனவே உமரவர்களுடைய மகாஸிதிய சிந்திப்பே இத்தகையதொரு முடிவை எடுக்க வைத்தது.

அண்மையில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள்,  வெளிவர இருக்கின்ற மகாஸிதிய சிந்தனை முஸ்லிமின் சிந்தனையை ஒழுங்கமைப்பதற்கான மீள்வாசிப்புகள் என்ற தனது புதிய நூல் பற்றி தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார்.(4) குறித்த நூலின் உள்ளடக்கப்பரப்பு என்ன என்பது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மகாஸிதிய சிந்திப்பு என்றால் என்ன? என்பதைச் சொல்ல அந்த உள்ளடக்கத் தலைப்புகள் மட்டுமே போதுமானதாக இருந்தது. 

அதாவது,  எது நோக்கம்? எது முக்கியம்? எது அடிப்படை? எது கட்டாயம்? எது பொருத்தம்? என்றவகையான சிந்திப்பு முறையையே அவர் மகாஸிதிய சிந்திப்பு என அடையாளம் காட்டுவதை அவதானிக்க முடிந்தது. அதாவது முக்கியமானதை நோக்கி,  அடிப்படையானதை நோக்கி கவனம் திருப்பப்படுவதுதான் உண்மையில் நோக்கத்தைத் தேடும் முயற்சியாகும். இதுதான் மகாஸிதிய சிந்திப்பு.

இந்த சிந்திப்பு முறை இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் மகாஸிதுஷ் ஷரீஆ என்ற ஒரு கலை தனியாகத் தோற்றம் பெற்றமை பிற்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. வஹி இறங்கிய காலப்பகுதியில் எந்த இஸ்லாமியக் கலையும் தனித்து வெளித் தெரியவில்லை. அனைத்துக் கலைகளும் அல்குர்ஆன் சுன்னா என்ற இரண்டிற்கும் உள்ளேயே பொதிந்திருந்தன. காலவோட்டத்தில் மனித சிந்தனையின் வளர்ச்சிக்கு ஏற்ப தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் அகீதா என இஸ்லாத்தின் கலைகள் தனியாகத் தோற்றம் பெற ஆரம்பித்தன. அதன் தொடரிலேயே மகாஸிதும் ஒரு கலையாக அடையாளம் காணப்பட்டது.

மகாஸித் ஒரு கலை என்பதன் பொருள் என்ன? எளிமையாகச் சொன்னால் அது ஒரு தனித்துறையாகக் காணப்படுகிறது,  அதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறது,  நோக்கம் இருக்கிறது,  அது செய்யும் ஒரு பணி இருக்கிறது,  அதற்கான வகைப்பாடுகள் இருக்கின்றன,  உருவான ஒரு வரலாறு இருக்கின்றது,  அதற்கான அறிஞர்கள் இருக்கிறார்கள். இந்த வடிவங்களைப் பெற்ற ஒன்றைத்தான் நாம் கலை என்போம். ஷரீஆப் பரப்புக்குள்ளே தப்ஸீர் கலை,  ஹதீஸ் கலை,  பிக்ஹ் கலை,  உஸுலுல் பிக்ஹ் கலை என ஒவ்வொன்றும் இத்தகைய வடிவங்களைக் கொண்டதாகவே அமைந்துள்ளன. மகாஸிதின் இந்த வடிவங்களை அறிமுகம் செய்வதையே இந்த தொடர் பத்தி முக்கிய நோக்கமாகக் கொள்கிறது.

ஷரீஆக் கலைகளுக்குள் மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய கலையாகவே நாம் மகாஸிதை இனம் காணமுடிகிறது. ஒரு தனிக்கலையாக மகாஸித் எப்போது உருப்பெற்றது? என்ற கேள்விக்கு விடை தேட முற்பட்ட ஆய்வாளர்களில் பலர் அது,  இமாம் ஷாதிபியின் முவாபகாத் எனும் நூலுடனேயே ஆரம்பிக்கிறது என்கின்றனர். இது ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. அடிப்படையில் முவாபகாத் உஸுலுல் பிக்ஹ் சம்பந்தமாக எழுதப்பட்ட நூலாகும். அதில் ஒரு பகுதியாகவே மகாஸித் என்ற தலைப்பு ஆராயப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத் தலைப்பு ஆராயப்பட்டிருக்கின்ற வடிவம் அதற்குத் தனியான கலை வடிவம் ஒன்றைத் தருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.(5) தலைப்பின் உட்கட்டமைப்பு மாத்திரமன்றி அதற்கான தனியான முன்னுரையும் முடிவுரையும் அமைக்கப்பட்டிருப்பதுவும் அக்கருத்தை மேலும்  வலுப்படுத்துவதாகக் காணப்படுகிறது.

ஆனால் கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் இது தொடர்பில் முன்வைக்கும் கருத்து இங்கு நோக்கத்தக்கது. அதாவது,  இமாம் ஷாதிபி அவர்களது முவாபகாத்தைப் பொருத்தவரையில் அதனை மகாஸித் கலையின் முதல் பிரசவம் என்று சொல்ல முடியுமாக இருந்தாலும் அந்தப் பிரசவம் ஒரு தெளிவற்ற பிரசவமாகும்,  மிகவும் வெளிப்படையானது அல்ல,  ஏனெனில் அது உஸுலுல் பிக்ஹின் ஒரு பகுதியாகவே அங்கு தொகுக்கப்பட்டது. மாற்றமாக அதன் முழுமையான தெளிவான பிரசவம் நவீனகாலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது.

 சாதாரணமானதொரு மேலோட்டமான பார்வை மாத்திரமே அந்த உண்மையை உணர்த்தப் போதுமானது. இன்று மகாஸித் பற்றி பல ஆயிரக்கணக்கான ஆய்வுகள் பலவேறு மொழிகளில் வெளிவருகின்றன,  பல்கலைக் கழகங்களில் தனியான பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அதற்கான தனியான ஆய்வு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன,  தொடராக ஆய்வு மாநாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,  மகாஸிதின் பல்வேறு புதிய ஆய்வுப்பரிமாணங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன,  இவையனைத்தையும் பார்க்கின்ற பொழுது,  மகாஸித் ஒரு கலையாகக் கருதப்படுவதற்கான அனைத்துப் பண்புகளுடனும் அது வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்,  எனவே மகாஸிதுஷ் ஷரீஆ என்றொரு கலை பிறந்து விட்டது என்கிறார்.(6)


(1). கலாநிதி வஸ்பி ஆஷுர் அபூ ஸைத்,  நேர்காணல் - மகாஸித் பரவலான அறிவாக மாறவே ஆசைப்படுகிறோம்,  நேர்கண்டவர் - முஸ்தபா ஆஷுர்,  இஸ்லாம் ஒன்லைன் வலைத்தளம்,  20-07-2017.

(2). பௌஸலா நிகழ்ச்சித் தொடர்,  ஹுதைபா அக்காஷ்,  அல்மகாஸித்,  பத்தாவது அமர்வு, கனாதுர் ருஃயா லிஸ்ஸகாபா வல் இஃலாம்,  2016.

(3). கலாநிதி வஸ்பி ஆஷுர் அபூ ஸைத்,  மகாஸிதுல் அஹ்காம் அல்பிக்ஹிய்யா,  வெளியீடு - அவ்காப் அமைச்சு,  குவைத்,  பக்கம் 29.

(4). கலாநிதி ஜாஸிர் அவ்தா,  முகநூல் பதிவு,  24 ஆகஸ்ட் 2017,  20:10 மணி.

(5). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  இல்மு மகாஸிதிஷ் ஷரீஆ மினல் விலாதா காமினா இலல் விலாதா காமிலா,  இஃமாலுல் மகாஸித் பைன அத்தஹய்யுப் வத்தஸய்யுப்,  ஆய்வுகளின் தொகுப்பு,  வெளியீடு - இஸ்லாமிய முதுசங்களுக்கான அல்புர்கான் நிறுவனம்,  மகாஸிதுஷ் ஷரீஆ கற்கைகளுக்கான மையம்,  பக்கம் 907.


(6). மேற்சொல்லப்பட்ட அதே மூலம்,  பக்கம் 907, 908, 909.