Thursday, October 19, 2017

மகாஸித் தேடல்கள் (4)

உஸுல் சிந்திப்பும் மகாஸித் சிந்திப்பும்

உஸுலுல் பிக்ஹ்,  மகாஸிதுஷ் ஷரீஆ என்பன இன்று தனிப்பெரும் கலைகளாக வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் இந்த இருவகையான சிந்திப்புகளும் மிகவும் பழமையானவை. இஸ்லாம் அறிமுகமான காலம் முதலே மகாஸித் சிந்திப்பு இருந்திருக்கிறது என்பதை கடந்த பத்தியில் கண்டோம். உஸுல் சிந்திப்பு என்பதும் அதே போன்றதுதான். அதுவும் ஆரம்பம் தொட்டே புழக்கத்தில் இருந்திருக்கிறது. நபியவர்களது வபாத்திற்குப் பின்னர்,  அபூபக்ர் (றழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அல்குர்ஆனை நூலுருப்படுத்துதல் எனும் சம்பவம். இந்த சம்பவத்தில் உஸுல் சிந்திப்பையும் மகாஸித் சிந்திப்பையும் ஒரு சேரக் காண முடியும்.

ஸைத் பின் ஸாபித் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : யமாமா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்,  அபூபக்ர் (றழி) அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். நான் அங்கு போன போது உமர் (றழி) அவர்களும் உடன் இருந்தார்கள். அபூபக்ர் (றழி) அவர்கள் என்னைப் பார்த்துச் சொன்னார்கள். உமர் (றழி) அவர்கள் என்னிடம் ஒரு விடயத்தைப் பற்றி பேசுகிறார். யமாமா போரில் அல்குர்ஆனை மனனமிட்டோர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்று யுத்தங்களில் அல்குர்ஆனை மனனமிட்டோர் பல இடங்களில் கொல்லப்படும் நிலை ஏற்பட்டால்,  அல்குர்ஆனின் பெரும்பகுதி இல்லாமல் போய்விடும் என்று நான் அச்சப்படுகிறேன். எனவே,  அல்குர்ஆனை ஒன்று திரட்டி நூலுருப்படுத்துவதற்கு நீங்கள் ஆவண செய்ய வேண்டும் என்று என்னிடத்தில் கேட்டுக் கொண்டார். 

அதற்கு நான் நபியவர்கள் செய்யாத ஒரு விடயத்தை நான் எவ்வாறு செய்ய முடியும் என்று உமரவர்களிடம் வினவினேன். அதற்கவர் அல்லாஹ் மீது சத்தியமாக இந்தப் பணியில் நலனிருக்கிறது என்றார். தொடர்ந்தும் உமரவர்கள் இந்த விடயம் தொடர்பில் என்னிடம் பேசிக் கொண்டேயிருந்தார். இறுதியில் இந்த விடயத்தில் உமரவர்களுக்கு அல்லாஹ் தெளிவைக் கொடுத்தது போல் எனக்கும் தெளிவைத் தந்தான். தற்போது நானும் உமரவர்களுடைய கருத்தையே கொண்டிருக்கிறேன் என்றார்கள். (புஹாரி,  திர்மிதி)

பின்னர் அபூபக்ர் (றழி) அவர்கள் அந்தப் பொறுப்பை ஸைத் பின் ஸாபித்திடம் ஒப்படைக்க,  அவரும் ஆரம்பத்தில் அபூபக்ர் (றழி) அவர்கள் எழுப்பிய அதே கேள்வியை எழுப்ப,  அவருக்கும் விடயம் தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர்,  அவர் அல்குர்ஆனை ஒன்று திரட்டியதாக அந்த சம்பவம் தொடர்கிறது.

இந்த சம்பவத்தில் அபூபக்ர் (றழி) அவர்களுடைய சிந்திப்பு முறையை உஸுல் சிந்திப்பு என்போம். உமர் (றழி) அவர்களுடைய சிந்திப்பு முறையை மகாஸித் சிந்திப்பு என்போம். அதாவது சம்பவத்தில் அபூபக்ர் (றழி) அவர்கள், அல்குர்ஆனை நூலுருப்படுத்தும் ஆலோசனையை உமரவர்கள் முன்வைத்தபோது,  நபியவர்கள செய்யாத ஒரு விடயத்தை நான் செய்யலாமா? என்ற கேள்வியை எழுப்பினார்கள். இந்தக் கேள்வியின் மூலம் அபூபக்ர் (றழி) அவர்கள் சொல்ல வந்த செய்தி என்னவெனின்,  மார்க்கத்தில் எந்தவொரு விடயத்தையும் செய்வதற்கு ஒரு ஆதாரம் அவசியம். ஒரு விடயம் ஆதாரம் இன்றி தனித்து எழுந்து நிற்க முடியாது. ஒரு கருத்து எழுவதற்கு ஒரு அடிப்படை வேண்டும், ஒரு மூலம் வேண்டும். இஸ்லாத்தின் மூலங்கள் இரண்டு. ஒன்று அல்குர்ஆன் மற்றது நபியவர்களது வாழ்வு.

 அல்குர்அனை நூலுருப்படுத்தல் என்ற செயற்பாடு நபியவர்களது வாழ்வில் நடைபெறவில்லை. எனவே,  அந்த செயற்பாட்டை நான் செய்வதற்கான அடிப்படை இல்லாதிருக்கிறது என்பதுவே அபூபக்ர் (றழி) அவர்களது கேள்வியின் பின்னால் இருந்த செய்தியாகும். அந்த வகையில் ஒரு விடயத்திற்கான ஆதாரம் என்ன என்ற வகையிலான சிந்திப்பை நாம் உஸுல் சிந்திப்பு எனலாம்.

உமரவர்களுடைய சிந்திப்பை நாம் மகாஸித் சிந்திப்பு என்கிறோம். அதாவது,  ஒரு விடயத்தின் நோக்கம் என்ன என்ற வகையிலான சிந்திப்பை மகாஸித் சிந்திப்பு என்போம். உமரவர்கள் அல்குர்ஆனை நூலுருப்படுத்துவதன் நோக்கம் என்ன என்று சிந்தித்தார்கள். அதனால்தான் அபூபக்ர் (றழி) அவர்கள் அந்தக் கேள்வியை எழுப்பிய போது,  அதில் நலனிருக்கிறது என்று பதிலளித்தார்கள். 

நலன் என்ற கருத்தைக் குறிக்க சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அறபுப்பதம் கைர் என்பதாகும். கைர் என்ற சொல் மிக விரிந்த பொருற்பரப்பைக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் எது பயனுள்ளது? எது சிறப்புமிக்கது? எது நலன்பயக்கக் கூடியது? அதனைத்தான் அறபு மொழியில் கைர் என்பர். அந்தவகையில் இதில் கைர் இருக்கிறது என்ற உமரவர்களின் பதிலின் மூலம் அவர் சொல்ல வந்த செய்தி என்னவெனின்,  அல்குர்ஆனை நூலுருப்படுத்துவதன் பயன் என்ன? நலன் என்ன? சிறப்பு என்ன? என்று சிந்தியுங்கள். அதுதான் முக்கியமானது என்பதாகும். இதுதான் மகாஸிதிய சிந்திப்பு. இங்கு உமரவர்கள் அந்த செயற்பாட்டின் நோக்கத்தைத் தேடினார்கள்.

இந்த இடத்தில் உமரவர்கள் தேடிய நோக்கம் எது? என்ற ஒரு கேள்வி தோன்றலாம். அதற்கான பதிலும் அந்த சம்பவத்திலேயே இருக்கிறது. உமரவர்கள் தான் அச்சப்படும் விடயமாக அல்குர்ஆனை சுமந்தவர்கள் கொல்லப்பட்டால் அல்குர்ஆனின் பெரும்பகுதி இல்லாது போய்விடலாம் என்றார்கள். இங்கு அல்குர்ஆனின் பெரும்பகுதி இல்லாது போய் விடக்கூடாது என்ற அவரது ஆதங்கம்தான் முக்கியமானது. அல்குர்ஆனை முழுமையான வடிவில் அடுத்த பரம்பரைக்கு நகர்த்த வேண்டிய பொருப்பின் கனதியை இட்டே உமரவர்கள் அச்சப்பட்டார்கள்.

இந்த சம்பவம் பற்றிய மற்றோர் அறிவிப்பில் ஸைத் பின் ஸாபித் கூறுவதாக இவ்வாறு வருகிறது. எமது தீனை இந்த அல்குர்ஆன்தான் முழுமையாக சுமந்திருக்கிறது. அல்குர்ஆன் இல்லாது போய் விட்டால் எமது தீனும் இல்லாது போய்விடும் என்றார்கள். (இப்னுல் அன்பாரி). எனவே,  தீனைப் பாதுகாத்து அடுத்த பரம்பரைக்கு நகர்த்துதல் என்ற நோக்கம் அல்குர்ஆனைப் பாதுகாத்து அடுத்த பரம்பரைக்கு நகர்த்துவதில் தங்கியிருக்கிறது. அந்தவகையில் தீனை,  கூட்டுதல் குறைத்தல் இன்றி,  முழுமையான வடிவில் பாதுகாத்து அடுத்த பரம்பரையினர் கையில் ஒப்படைத்தல் என்ற நோக்கத்தையே உமரவர்கள்,  அதில் கைர் இருக்கிறது என்றார்கள்.

எனவே,  ஆதாரம் என்ன என்று சிந்திப்பது உஸுல் சிந்திப்பு. நோக்கம் என்ன என்று சிந்திப்பது மகாஸித் சிந்திப்பு. இந்த இருவகையான சிந்திப்பு முறைகளும் இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக சட்ட சிந்தனையைப் பொறுத்தவரையில் இவ்விரு சிந்திப்பு முறைகளும் இன்றியமையாதவை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒரு சட்ட முடிவு மிகச் சரியானதாகவும்,  கால,  இட,  சூழல் பொருத்தம் கொண்டதாகவும் அமைய வேண்டும் எனின்,  அங்கு இந்த இரண்டு வகை சிந்திப்பினதும் கலவை அத்தியவசியமானது. இங்கு ஒன்று மற்றையதை முழுமைப்படுத்துகிறது,  வலிமைப்படுத்துகிறது.

இக்கருத்தை இன்னும் தெளிவாக விளங்க ஒரு உதாரணம் சொல்கிறேன். நபியவர்கள் காலத்தில் ஒரு தடவை சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. அப்போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு நபியவர்கள் விலையைக் கட்டுப்படுத்துபவனும்,  ஒன்றைக் குறைத்துக் கொடுப்பவனும்,  அதிகரித்துக் கொடுப்பவனும் உணவளிப்பவனும் அல்லாஹ்தஆலாதான். உங்களில் எவரும் தனது செல்வத்திலோ உயிரிலோ நான் ஒரு அநியாயம் இழைத்ததாக முறைப்பாடு எதுவும் இல்லாத நிலையிலேயே நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன் என்றார்கள். (அபூதாவூத்,  திர்மிதி)

இந்த ஹதீஸ்,  சந்தைத் தொழிற்பாடு சுதந்திரமாக விடப்படல் வேண்டும். அரசு தலையீடு செய்து விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளக் கூடாது என்ற சட்ட முடிவுக்கான நேரடியான ஆதாரமாக அமைகிறது. இந்த சட்ட முடிவே நபியவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள் காலத்திலும் பின்பற்றப்பட்டது. ஆனால் கலாநிதி அப்துல் ஸலாம் பலாஜி அவர்கள் கூறுவது போல்(1)  தாபிஈன்கள் காலத்தில் அரசு தலையீடு செய்து விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட முடியும் என்ற பத்வா வழங்கப்பட்டது. இங்கு தாபிஈன்களுடைய சிந்திப்பு,  விலைக்கட்டுப்பாடு அனுமதிக்கப்பட்டதா? இல்லையா? என்பதற்கான ஆதாரம் என்ன என்ற வகையில் மாத்திரம் அமையவில்லை. மாற்றமாக விலைக்கட்டுப்பாடு ஏன் அவசியம்? நோக்கம் என்ன? என்ற அடிப்படையிலும் சிந்தித்தார்கள்.

 அதாவது இந்த ஹதீஸில் நபியவர்கள் விலைக்கட்டுப்பாட்டின் நோக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள். தான் யாருடைய செல்வத்திற்கோ உயிருக்கோ அநியாயம் இழைத்த நிலையில் அல்லாஹ்வை சந்திக்க விரும்பவில்லை என்றார்கள். எனவே அன்று விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுமாறு ஸஹாபாக்கள் கேட்ட பொழுது நபியவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை? எனின் அதனால் விற்பனையாளர்களுக்கு ஏதேனும் அநியாயம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவேயாகும். ஏனெனில் அன்று நிகழ்ந்த விலையுயர்வு பொருற்களின் கேள்வி,  நிரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்த இயல்பானதொரு சந்தைத் தொழிற்பாடு. இந்த இடத்தில் அரசு என்ற வகையில் நபியவர்கள் தலையீடு செய்து விலையைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் விற்பனையாளர்களைப் பாதிக்கும். எனவே நபியவர்கள் விலைக் கட்டுப்பாட்டை தடை செய்தார்கள் என்பதை விடவும் அநியாயம் இழைக்கப்படுவதையே தடை செய்தார்கள். இதுதான் தாபிஈன்களது புரிதலாக இருந்தது. அநியாயம் இழைக்கப்படக் கூடாது என்ற நோக்கமே அன்று விலைக்கட்டுப்பாடு விதிக்கப்படாமைக்கான காரணம் என்று புரிந்து கொண்டார்கள்.

ஆனால் இன்று தாபிஈன்கள் காலத்தில் நிகழந்த விலையுயர்வு இயல்பான சந்தைத் தொழிற்பாட்டினால் நிகழ்ந்ததல்ல. மாற்றமாக வியாபாரிகள் சந்தைத் தொழிற்பாட்டை தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தியதால் விளைந்தது. அதனால் நுகர்வாளர்கள் அநியாயம் இழைக்கப்படுகிறார்கள். எனவே,  வியாபாரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வாளர்களுக்கு நடக்கும் அநியாயத்தைத் தடுப்பதற்காக அரசு தலையிட்டு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என பத்வா வழங்கப்பட்டது. இங்கு விலைக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சட்ட முடிவின் நோக்கமும் அநியாயம் இழைக்கப்படக் கூடாது என்பதாகவே அமைந்திருக்கிறது.

எனவே,  இரண்டு சூழ்நிலைகளிலும் தனித்து ஆதாரம் என்ன என்ற தேடலின் மூலம் மாத்திரமன்றி நோக்கம் என்ன என்ற தேடலின் மூலமாகவே மிகச் சரியானதும் கால,  இட,  சூழல் பொறுத்தப்பாட்டுக்குரிய முடிவைப் பெற முடியுமாக அமைந்தது. அந்தவகையில் சட்ட சிந்திப்பில் இந்த இரண்டு வகையான சிந்திப்பு முறைகளும் முக்கியம் பெறுகின்றன. ஆதாரம் என்ன என்ற தேடலுடன் மாத்திரம் சுருங்குவதும் பொறுத்தமற்றது. நோக்கம் என்ன என்ற தேடலுடன் மாத்திரம் சுருங்குவதும் பொருத்தமற்றது. இரண்டும் இணைந்த சிந்திப்பே இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியமாகும்.


(1)          கலாநிதி அப்துல் ஸலாம் பலாஜி,  ததவ்வுர் இல்மி உஸுலில் பிக்ஹ் வதஜத்துதுஹு,  பதிப்பகம் : தாருல்வபா,  முதலாம் பதிப்பு 2007,  பக்கம் 32.

No comments:

Post a Comment