Monday, October 9, 2017

மகாஸித் தேடல்கள் (3)

மகாஸித் சிந்தனையும் மகாஸித் கலையும்

அண்மையில் மகாஸித் சிந்தனையாளர் கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்களிடம்,  இஸ்லாத்தின் ஏனைய கலைகளுடன் ஒப்பிடும் பொழுது மகாஸித் கலை புதியதா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் தரும் போது மகாஸித் சிந்தனையையும் மகாஸித் கலையையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளல் வேண்டும்,  மகாஸித் சிந்தனை வஹி இறங்கிய சந்தர்ப்பத்துடனேயே தோற்றம் பெற்றது. வஹி பேசிய ஒவ்வொரு விடயமும் நோக்கங்கள் கொண்டதாகவே காணப்பட்டது. அல்லாஹ்தஆலா தன்னை ஹகீம் என்று அடையாளப்படுத்தகிறான். அதன் பொருள் என்ன? அவன் எதனையும் காரணமின்றி செய்ய மாட்டான்,  எல்லாவற்றிற்கும் நோக்கம் இருக்கிறது என்பதாகும். ஆனால் மகாஸித் ஒரு கலையாக வளர்ச்சியடைந்தமை பிற்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது.(1)

இந்த வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ளும் உண்மை என்னவெனின் மகாஸித் சிந்தனைக்கு காலவரையறைகள்,  தோற்றம், முடிவு என்ற விடயங்கள் கிடையாது,  அது எல்லாக் காலத்திலும் இருக்க முடியுமானது. ஆனால் மகாஸித் ஒரு கலை என்ற வடிவில், அது தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த ஒரு வரலாறு இருக்கிறது. இது எல்லா இஸ்லாமிய கலைகளுக்கும் பொருந்தும். அங்கு தோற்றம்,  வளர்ச்சி,  ஏற்ற இறக்கங்கள்,  ஏன்?  முடிவைக் கூட சிலவற்றில் காணக்கூடியதாக இருக்கும்.

மகாஸித் சிந்திப்பு என்றால் என்ன?  எளிமையாக் சொன்னால்,  எந்தவொரு விடயத்தையும் அதன் இலக்கு மைய்யப்பட்டு சிந்திப்பது அல்லது அதன் நோக்கம் என்ன என்ற அடிப்படையில் சிந்திப்பது,  மகாஸித் சிந்திப்பு எனப்படும். இந்தவகையான சிந்திப்பு முறைமை இஸ்லாத்தின் ஆரம்பம் முதலே இருந்திருக்கிறது. ஸஹாபாக்களது பத்வாக்களில் இந்த உண்மையை நாம் தெளிவாகக் காணலாம். 

உமர் (றழி) அவர்களது காலத்தில் மதுபானம் அருந்தியவருக்கான தண்டனை குறித்து ஸஹாபாக்கள் மத்தியில் ஆலோசணை நடைபெற்றது. அப்போது அலி (றழி) அவர்கள் எண்பது கசையடிகள் வழங்குவதே பொருத்தமானது,  ஏனெனில் மது அருந்தினால் போதை ஏற்படும்,  போதை ஏற்பட்டால் உளரத் தொடங்குவான்,  உளரினால் பிறர் மீது அவதூறு சொல்லத் தொடங்குவான்,  அவதூறு சொல்பவனுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்படும்,  அந்தவகையில் அவதூறுக்கான தண்டனையையே இதற்கும் வழங்கலாம் என்றார்கள். அதன் பின்னர் உமரவர்கள் மதுபானம் அருந்துபவருக்கு எண்பது கசையடிகள் வழங்கினார்கள். (முஅத்தா மாலிக்).

கலாநிதி இமாதுத்தீன் அர்ரஷீத் அவர்கள் இந்த சம்பவத்தை விளங்கப்படுத்தும் பொழுது,  மது அருந்தினால் உலகில் ஒரு தண்டனை வழங்கப்படுவதற்கான நியாயம் என்ன என்பதைத்தான்,  உண்மையில் அலி (றழி) அவர்களது தர்க்கம் விளங்கப்படுத்துகிறது. உலகியல் தண்டனைக்குப் போதை ஏற்படுதல் என்பது மாத்திரம் காரணமல்ல,  மாற்றமாக போதையினால் ஏற்படும் சமூகப் பாதிப்பையும் கருத்தில் கொண்டுதான் உலகியல் தண்டனை வரையறுக்கப்படுகிறது. அந்தவகையில் இங்கு அலி (றழி) அவர்களது சிந்தனை தண்டனை ஏன் வழங்கப்படல் வேண்டும்? என்ற கேள்வியை மையப்படுத்தியே அமைந்திருந்தது,  என்கிறார்.(2) இதனைத்தான் மகாஸித் சிந்திப்பு என்கிறோம்.

மற்றோர் உதாரணத்தைப் பாருங்கள்,  உமர் (றழி) அவர்கள் காலத்தில் யமன் பிரதேசத்தில் பலர் இணைந்து ஒரு சிறுவனை படுகொலை செய்கிறார்கள். இதற்கு உமரவர்கள் அந்த அனைவரும் பலிக்குப்பலி வாங்கப்படல் வேண்டும் என தீர்ப்பளிக்கிறார்கள். அத்துடன் ஸன்ஆவாசிகள் அனைவரும் இந்தக் கொலையில் பங்கெடுத்திருந்தாலும் அவர்கள் அனைவரையும் கொலை செய்திருப்பேன் என்றார்கள். (புஹாரி)

கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் கூறுவது போல்(3),  ஒருவருக்காகப் பலர் பலிவாங்கப்படுவது வெளிப்படையில் நியாயமற்றது போல் தோன்றினாலும்,  உண்மையில் பலிக்குப்பலி வாங்குதல் எனும் சட்டத்தின் நோக்கத்தின் அடியாக நின்று பார்க்கின்ற பொழுது அதில் ஒரு பெரிய நியாயமிருப்பதைக் கண்டு கொள்ளலாம். உமரவர்களும் அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை அணுகியிருக்கிறார்கள்.

பலிக்குப்பலி வாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது (பகரா – 179) என்று அல்குர்ஆன் இதன் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. மனித உயிர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் மக்ஸத். ஒருவர் கொலை செய்யப்படும் பொழுது அதற்காகக் கொலை செய்தவரும் கொல்லப்படுவார் என்ற நிலை இருக்கின்ற பொழுது இயல்பாகவே அந்த செயலுக்கு யாரும் துணியமாட்டார்கள். ஒரு தடவைக்குப் பலதடவைகள் யோசிப்பார்கள். இங்கு கொலை செய்தவர் ஒருவராக இருந்தாலும் பலராக இருந்தாலும் அவர்கள் பலிவாங்கப்படுவார்கள் என்றிருக்கின்ற பொழுதே உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்கான உத்தரவாதம் அங்கிருக்கும். பலர் சேர்ந்து செய்கின்ற கொலைக்குப் பலிக்குப்பலி கிடையாது என்றிருப்பின்,  எந்தக் கொலையின் போதும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இந்த வழிமுறை பின்பற்றப்பட வாய்ப்பிருக்கிறது. அது உயிர்கள் பாதுகாக்கப்படுதல் எனும் நோக்கத்திற்கு முரணானதாகவே இருக்கும். எனவே உமரவர்களுடைய மகாஸிதிய சிந்திப்பே இத்தகையதொரு முடிவை எடுக்க வைத்தது.

அண்மையில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள்,  வெளிவர இருக்கின்ற மகாஸிதிய சிந்தனை முஸ்லிமின் சிந்தனையை ஒழுங்கமைப்பதற்கான மீள்வாசிப்புகள் என்ற தனது புதிய நூல் பற்றி தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார்.(4) குறித்த நூலின் உள்ளடக்கப்பரப்பு என்ன என்பது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மகாஸிதிய சிந்திப்பு என்றால் என்ன? என்பதைச் சொல்ல அந்த உள்ளடக்கத் தலைப்புகள் மட்டுமே போதுமானதாக இருந்தது. 

அதாவது,  எது நோக்கம்? எது முக்கியம்? எது அடிப்படை? எது கட்டாயம்? எது பொருத்தம்? என்றவகையான சிந்திப்பு முறையையே அவர் மகாஸிதிய சிந்திப்பு என அடையாளம் காட்டுவதை அவதானிக்க முடிந்தது. அதாவது முக்கியமானதை நோக்கி,  அடிப்படையானதை நோக்கி கவனம் திருப்பப்படுவதுதான் உண்மையில் நோக்கத்தைத் தேடும் முயற்சியாகும். இதுதான் மகாஸிதிய சிந்திப்பு.

இந்த சிந்திப்பு முறை இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் மகாஸிதுஷ் ஷரீஆ என்ற ஒரு கலை தனியாகத் தோற்றம் பெற்றமை பிற்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. வஹி இறங்கிய காலப்பகுதியில் எந்த இஸ்லாமியக் கலையும் தனித்து வெளித் தெரியவில்லை. அனைத்துக் கலைகளும் அல்குர்ஆன் சுன்னா என்ற இரண்டிற்கும் உள்ளேயே பொதிந்திருந்தன. காலவோட்டத்தில் மனித சிந்தனையின் வளர்ச்சிக்கு ஏற்ப தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் அகீதா என இஸ்லாத்தின் கலைகள் தனியாகத் தோற்றம் பெற ஆரம்பித்தன. அதன் தொடரிலேயே மகாஸிதும் ஒரு கலையாக அடையாளம் காணப்பட்டது.

மகாஸித் ஒரு கலை என்பதன் பொருள் என்ன? எளிமையாகச் சொன்னால் அது ஒரு தனித்துறையாகக் காணப்படுகிறது,  அதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறது,  நோக்கம் இருக்கிறது,  அது செய்யும் ஒரு பணி இருக்கிறது,  அதற்கான வகைப்பாடுகள் இருக்கின்றன,  உருவான ஒரு வரலாறு இருக்கின்றது,  அதற்கான அறிஞர்கள் இருக்கிறார்கள். இந்த வடிவங்களைப் பெற்ற ஒன்றைத்தான் நாம் கலை என்போம். ஷரீஆப் பரப்புக்குள்ளே தப்ஸீர் கலை,  ஹதீஸ் கலை,  பிக்ஹ் கலை,  உஸுலுல் பிக்ஹ் கலை என ஒவ்வொன்றும் இத்தகைய வடிவங்களைக் கொண்டதாகவே அமைந்துள்ளன. மகாஸிதின் இந்த வடிவங்களை அறிமுகம் செய்வதையே இந்த தொடர் பத்தி முக்கிய நோக்கமாகக் கொள்கிறது.

ஷரீஆக் கலைகளுக்குள் மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய கலையாகவே நாம் மகாஸிதை இனம் காணமுடிகிறது. ஒரு தனிக்கலையாக மகாஸித் எப்போது உருப்பெற்றது? என்ற கேள்விக்கு விடை தேட முற்பட்ட ஆய்வாளர்களில் பலர் அது,  இமாம் ஷாதிபியின் முவாபகாத் எனும் நூலுடனேயே ஆரம்பிக்கிறது என்கின்றனர். இது ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. அடிப்படையில் முவாபகாத் உஸுலுல் பிக்ஹ் சம்பந்தமாக எழுதப்பட்ட நூலாகும். அதில் ஒரு பகுதியாகவே மகாஸித் என்ற தலைப்பு ஆராயப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத் தலைப்பு ஆராயப்பட்டிருக்கின்ற வடிவம் அதற்குத் தனியான கலை வடிவம் ஒன்றைத் தருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.(5) தலைப்பின் உட்கட்டமைப்பு மாத்திரமன்றி அதற்கான தனியான முன்னுரையும் முடிவுரையும் அமைக்கப்பட்டிருப்பதுவும் அக்கருத்தை மேலும்  வலுப்படுத்துவதாகக் காணப்படுகிறது.

ஆனால் கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் இது தொடர்பில் முன்வைக்கும் கருத்து இங்கு நோக்கத்தக்கது. அதாவது,  இமாம் ஷாதிபி அவர்களது முவாபகாத்தைப் பொருத்தவரையில் அதனை மகாஸித் கலையின் முதல் பிரசவம் என்று சொல்ல முடியுமாக இருந்தாலும் அந்தப் பிரசவம் ஒரு தெளிவற்ற பிரசவமாகும்,  மிகவும் வெளிப்படையானது அல்ல,  ஏனெனில் அது உஸுலுல் பிக்ஹின் ஒரு பகுதியாகவே அங்கு தொகுக்கப்பட்டது. மாற்றமாக அதன் முழுமையான தெளிவான பிரசவம் நவீனகாலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது.

 சாதாரணமானதொரு மேலோட்டமான பார்வை மாத்திரமே அந்த உண்மையை உணர்த்தப் போதுமானது. இன்று மகாஸித் பற்றி பல ஆயிரக்கணக்கான ஆய்வுகள் பலவேறு மொழிகளில் வெளிவருகின்றன,  பல்கலைக் கழகங்களில் தனியான பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அதற்கான தனியான ஆய்வு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன,  தொடராக ஆய்வு மாநாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,  மகாஸிதின் பல்வேறு புதிய ஆய்வுப்பரிமாணங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன,  இவையனைத்தையும் பார்க்கின்ற பொழுது,  மகாஸித் ஒரு கலையாகக் கருதப்படுவதற்கான அனைத்துப் பண்புகளுடனும் அது வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்,  எனவே மகாஸிதுஷ் ஷரீஆ என்றொரு கலை பிறந்து விட்டது என்கிறார்.(6)


(1). கலாநிதி வஸ்பி ஆஷுர் அபூ ஸைத்,  நேர்காணல் - மகாஸித் பரவலான அறிவாக மாறவே ஆசைப்படுகிறோம்,  நேர்கண்டவர் - முஸ்தபா ஆஷுர்,  இஸ்லாம் ஒன்லைன் வலைத்தளம்,  20-07-2017.

(2). பௌஸலா நிகழ்ச்சித் தொடர்,  ஹுதைபா அக்காஷ்,  அல்மகாஸித்,  பத்தாவது அமர்வு, கனாதுர் ருஃயா லிஸ்ஸகாபா வல் இஃலாம்,  2016.

(3). கலாநிதி வஸ்பி ஆஷுர் அபூ ஸைத்,  மகாஸிதுல் அஹ்காம் அல்பிக்ஹிய்யா,  வெளியீடு - அவ்காப் அமைச்சு,  குவைத்,  பக்கம் 29.

(4). கலாநிதி ஜாஸிர் அவ்தா,  முகநூல் பதிவு,  24 ஆகஸ்ட் 2017,  20:10 மணி.

(5). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  இல்மு மகாஸிதிஷ் ஷரீஆ மினல் விலாதா காமினா இலல் விலாதா காமிலா,  இஃமாலுல் மகாஸித் பைன அத்தஹய்யுப் வத்தஸய்யுப்,  ஆய்வுகளின் தொகுப்பு,  வெளியீடு - இஸ்லாமிய முதுசங்களுக்கான அல்புர்கான் நிறுவனம்,  மகாஸிதுஷ் ஷரீஆ கற்கைகளுக்கான மையம்,  பக்கம் 907.


(6). மேற்சொல்லப்பட்ட அதே மூலம்,  பக்கம் 907, 908, 909.

No comments:

Post a Comment