Thursday, August 28, 2014

சகோதரிகள் ஏன் திருமணம் செய்கிறார்கள்?

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

கடந்த அமர்வில் நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்?’ என்ற கேள்விக்கான பதிலை இளைஞர்களை மையப்படுத்தி நோக்கினோம். இன்றைய அமர்வில் அந்தக் கேள்வியை யுவதிகளை நோக்கி முன்வைத்தால் எத்தகைய பதில்கள் வெளிவர முடியும் என்பதையும்,  அவை குறித்த ஒரு சிறிய பகுப்பாய்வையும் நோக்குவது பொறுத்தமானது என நினைக்கிறோம்.

சகோதரிகளின் மாதிரிப் பதில்களுக்குச் செல்வதற்கு முன்னர் இங்கு மூன்று விடயங்களைப் பதிவு செய்வது சற்று பெறுத்தமானது. முதலாவது,  பொதுவாக அனுபவத்தில் கண்ட ஒரு விடயம் என்னவெனில்

 பெண்களின் இயல்பான கூச்ச சுபாவம்,  சமூக வழக்காறு,  ஆண்களுடன் கருத்துப் பரிமாறுவதில் உள்ள தடைகள் போன்ற பல காரணங்களால்,  நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவர்களது நிஜமான ஆசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பதில்களைத் தருவது மிகவும் குறைவாக இருக்கின்றது. மிகவும் மேலோட்டமான,  பாதுகாப்பான பதில்களையே தெரிவு செய்து முன்வைப்பதைக் காணலாம். இதற்கு மாற்றமான நிலை சகோதரிகள் மத்தியில் இல்லை முழுமையாக என்று சொல்லவும் முடியாது,  பெரும்பாலான நிலையையே இங்கு குறிப்பிடுகிறோம்.

இரண்டாவது,  இன்றைய நாட்களின் இஸ்லாமிய எழுச்சி சூழலின் காரணமாகவோ என்னவோ மேற்சொன்ன கேள்விகளுக்கு சகோதரிகளிடத்திலிருந்து குறிப்பாக இஸ்லாமியச் சாயல் மிகுந்த பதில்களே அதிகமாக வருகின்றன. இது சந்தோஷம் கொள்ளத்தக்க ஒரு நிலைதான் என்றிருந்த போதிலும்,  இங்கு நடைபெற்று இருக்கின்ற ஒரு தவறு என்னவென்றால்,  அவர்களது நிஜமான மனித உணர்வுகள் மார்க்கம் என்ற பெயரால் ஹராமாக்கப்பட்டிருக்கின்றன. 

எனவே,  அவை வெளிப்படுத்தப்படக் கூடாத அசிங்கங்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அன்பு,  காதல்,  அழகு, வசதி,  சொகுசு போன்றன திருமணம் என்ற தலைப்பில் சகோதரிகள் பேசக்கூடாத கெட்ட வார்த்தைகள் அல்லது எதிர்பார்க்கக் கூடாத அம்சங்கள் என்ற மனப்பாங்கு. அதுதான் மார்க்கம் என்ற பெயரில் வளர்க்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயமாகும். இங்கு இவை பற்றிய பத்வாவை வழங்க நினைக்கவில்லை. என்றாலும் இத்தகைய குறுகிய பார்வைகளை விடவும் இஸ்லாம் மிகவும் விசாலமானது என்பதுவே உண்மையாகும்.

எனவே மார்க்கம் பற்றிய சில தவறான புரிதல்களின் காரணமாகவும் சகோதரிகள் தமது உண்மையான பதில்களை பல சமயங்களில் சொல்லாமல் இருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களிடத்தில் குறிப்பாக அந்த விடயங்கள் கேள்விகளாகக் கேட்கப்படும் போது,  சிரிப்பும் வெட்கமும் முகங்களில் தோன்றுவதுடன் மாத்திரமன்றி,  அவை ஆகுமா என்ற ஆச்சரிய வினாவும் சேர்ந்து முகங்களில் தென்படுவதை அவதானிக்கலாம்.

மூன்றாவது,  பொதுவாக சகோதரிகளிடத்தில் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலேயே,  ஒருவித பயம் தொற்றிக் கொள்கின்ற நிலையைத்தான் அதிகம் அவதானிக்க முடிகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எமது சமூக சூழல் பின்னணியில் அமைகின்ற முக்கிய காரணம் எது எனின்,  பெரும்பாலான பெண்களின் எதிர்காலம் அவர்களது கையில் இல்லை என்பதாகும். அவர்களது படிப்பு,  திருமணம்,  தொழில் போன்ற விடயங்களில் அவர்களே சுதந்திரமான தீர்மானம் எடுக்கும் குடும்ப சூழ்நிலைகள் மிகவும் குறைவு. அவர்களுக்காக வேறு யாரோதான் தீர்மானம் எடுக்கிறார்கள். அதில் அவர்களது விருப்பு வெறுப்புக்கள்,  எதிர்பார்ப்புகள் கருத்தில் கொள்ளப்படுவது குறைவு என்ற நிலை காணப்படுகிறது.

இதுபோன்ற ஒரு சூழலில் வாழும் சகோதரிகளிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்கின்ற பொழுது,  ஏன் எதற்கு என்று தர்க்க ரீதியாக சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை. குடும்பத்தினர் பார்த்து ஏதோ செய்து வைப்பார்கள். நான் அதனைப்பற்றி சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மனோநிலையே மிகைத்துக் காணப்படுகிறது. 

திருமணம் குறித்து காதல், இன்பம், சுவை, வசதி என்ற கருத்துக்களையோ அல்லது இபாதத்,  பொறுப்பு,  பாதுகாப்பு என்ற பெறுமானங்களையோ எதனையும் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய ஒரு வீட்டுச் சூழ்நிலையாலும் சில சமயங்களில் பெண் பிள்ளைகள் திருமணத்தால் எதுவும் கிடைக்காது அது ஒரு சடங்கு பூர்வமான வாழ்க்கை என்று நினைத்து காதல் உறவுகளை தேடிச் செல்ல எத்தனிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு.

எனவே, இந்த சுதந்திரமற்ற சூழ்நிலை, அல்லது எதிர்காலம் என்னவென்று தெரியாத மயக்கமான சூழ்நிலை பல சகோதரிகள், நாம் ஏன் திருமணம் செய்கிறோம் என்பதற்குத் தெளிவான பதில்களைத் தருவதற்குத் தடையாக அமைகின்றன.

இந்தப் பின்புலங்களின் காரணமாக, நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இங்கு முன்வைக்கப்படும் சகோதரிகளின் மாதிரி பதில்கள் மிக நுட்பமானவையாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் முடிந்தவரை சரியாக அமைவதற்கான முயற்சி இங்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை.

இனி, பொதுவாக யுவதிகளிடமிருந்து வருகின்ற மாதிரிப் பதில்களை நோக்குவோம்.

1.            கலியாணம் என்பது சந்தோஷமான விடயம். ஆடைகள், நகைகள், சாமான்கள் என எல்லாமே புதிது புதிதாகக் கிடைக்கும்.
2.            வீட்டில் உம்மா, வாப்பா, நானா போன்றவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து, எனக்கு சுதந்திரப் பறவையாகத் திரிவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
3.            எனது வகுப்பு நண்பிகள் அனைவரும் ஒன்றில் திருமணம் முடித்து விட்டனர் அல்லது திருமணம் பேசப்பட்டுள்ளனர். எனக்கு மட்டும்ஒரே சங்கடமாக இருக்கிறது.
4.            ஒரு பெண் பிள்ளை கட்டாயம் கலியாணம் முடித்துதானே ஆக வேண்டும்.
5.            ஒரு நல்ல மாப்பிள்ளை வந்திருக்காரு, அவரைப் போன்ற ஒருவரை வாழ்க்கையில் தவற விடக் கூடாது.
6.            நாள் ஒருவரை விரும்புகிறேன்
7.            அவர் எனது மாமியின் மகன், சிறிய வயதிலிருந்தே அவர் எனக்கு,  நான் அவருக்கு என்றாகிவிட்டது.
8.            திருமணம் என்பது நபியவர்களது சுன்னா
9.            திருமணம் அல்லாஹ்வின் அருளும் அமைதியுமாகும்.
10.          திருமணம் செய்வதன் மூலம் எனது உலக, மறுமை நோக்கங்களை அடைந்து கொள்ள முடியும்.
11.          திருமணம் ஆபாச உலகில் இருந்து என்னைக் காக்கும் வேலியாகும்.
12.          தாய்மை அடைவதன் மூலம் எனது பெண்மையை முழுமைப்படுத்திக் கொள்வதற்காக.
13.          கணவனுடனான உறவாடல் சுவர்க்கம் செல்வதற்கான வழியாகும்.
14.          திருமணம் இஸ்லாம் எதிர்பார்க்கும் ஸாலிஹான சந்ததியை உருவாக்கும் வழி.
15.          திருமணம் வசதியான வாழ்வுக்கும் வறுமையில் இருந்து தப்பிக் கொள்ளவும் வழியாகும்.
16.          திருமணம் என்பது எனது கனவு நாயகனை அடைந்து கொள்ளும் வழி.

இவை நான் ஏன் திருமணம் செ;யய வேண்டும் என்ற கேள்விக்கு சகோதரிகள் அளிக்கின்ற பதில்களுக்கான சில உதாரணங்கள். கடந்த பத்தியில் குறிப்பிட்டது போல்,  இந்தப் பதில்களில் எவையும் ஹராமானவையல்ல என்றிருந்த போதிலும் இவற்றில் அடிப்படையானவையையும் கிளையானவையையும் கண்டிப்பாக நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். 

இங்கு அடிப்படையான பதில்கள் என்பதன் மூலம் நாம் எதனைக் குறிப்பிடுகிறோம் எனின்,  திருமணம் என்ற ஒரு முறைமையை மனித வாழ்வில் அல்லாஹ்தஆலா ஏன் வைத்திருக்கிறான்? அதன் மூலம் உலகில் பிரதானமாக என்ன மாற்றத்தை விளைவிக்க விரும்புகிறான்? போன்ற விடயங்களை மையப்படுத்தி அமைகின்ற பதில்கள் அனைத்தும் அடிப்படையான பதில்களாகக் கருதப்படும். கடந்த அமர்வில் குறித்துக் காட்டியது போல் திருமணத்தை ஒரு வணக்கமாகவும்,  பொறுப்பாகவும் சமூகப் பாதுகாப்பாகவும் உணர்கின்ற பொழுதே அந்தக் குடும்ப வாழ்வின் நிலைத்த தன்மை உத்தரவாதப்படுத்தப்படுகிறது. எனவே,  திருமண வாழ்விற்குள் நுழையும் ஒருவரது திருமணம் பற்றிய பார்வை மேற்போந்த அடிப்படைகளின் மீது அமைய வேண்டும் என்பதே இங்கு பிரதானமாக வலியுறுத்தப்படுகிறது.

அதேபோல் கிளையான பதில்கள் என்பதன் மூலம் கடந்த அமர்வில் சுட்டிக் காட்டியது போல்,  சில உடனடித் தேவைகளின் எதிர்வினையாக அமைய முடியும் அல்லது சில மனவெழுச்சிகளாக அமைய முடியும். இவை இயல்பான மனித எதிர்பார்ப்புகள்,  விருப்பங்கள் என்ற வகையிலும்,  திருமணம் என்ற செயற்பாட்டின் பொதுவான பயன்கள் என்ற வகையிலும் இவற்றை எவரும் மறுத்துரைக்க மாட்டார்கள். ஆனால் ஒருவரது திருமணம் பற்றிய பார்வை இவற்றை மாத்திரம் மையப்படுத்தியதாகக் அமைந்துவிடக்கூடாது. இவற்றின் மீது மாத்திரம் எழுகின்ற ஒரு குடும்ப வாழ்வு நிலைத்து நிற்பதிரிது. ஏனெனில்,  எதிர்பார்ப்புகளும் மனவெழுச்சிகளும் கிடைக்காமல் போகின்ற பொழுது வாழ்வையே இழந்துவிட்டது போலவும், வாழ்வே அர்த்தமற்றுப் போய்விட்டதாகவும் ஒருவர் நினைத்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனாலும் வாழ்வை ஒரு இபாதத்தாகவும் பொறுப்பாகவும் நோக்குகின்ற பொழுது,  மேற்போந்த எதிர்பார்ப்புகளில் குறைபாடு நிகழ்ந்தாலும் அவற்றை விட்டுக் கொடுத்து வாழ்வது இலகுவாகி விடுகிறது. அடிப்படைகளின் மீதுதான் வாழ்வு எழுந்து நிற்கிறது. அவை விட்டுக் கொடுக்கப்பட முடியாதவை. கிளைகள் வாழ்வை அழகுபடுத்துபவை. விட்டுக் கொடுக்க முடியுமானவை. நாம் அடிப்படைகளின் மீது உறுதியாக உள்ள போது கிளைகளில் ஆசை வைத்தல் ஒரு போதும் தவறாக மாட்டாது.


இறுதியாக, மேலே சகோதரிகளால் வழங்கப்பட்ட பதில்களுள் எட்டாவது முதல் பதினான்கு வரையான பதில்கள் திருமணம் பற்றிய அடிப்படைப் பார்வையை பிரதிபளிக்கும் பதில்களாகும். ஏனையவை அனைத்தும் கிளைகளாகும். சகோதரிகளே,  திருமணம் பற்றிய உங்களது பார்வைகளை சரியான திசைக்கு திருப்புவதற்கான ஒரு வழிகாட்டல் இங்கு இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி உங்கள் பார்வைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள் என்று நினைக்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் எமது அடுத்த அமர்வில் குடும்ப வாழ்வின் நோக்கங்கள் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது பற்றி சற்று கவனம் செலுத்துவோம். அல்லாஹ் எம்மை பொறுந்திக் கொள்வானாக.

Monday, August 11, 2014

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல்

முஸ்லிமுக்கு ஆதரவளித்தலும் நாட்டுக்கு ஆதரவளித்தலும்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியினர் இலங்கையில் கிரிக்கட் போட்டிகளுக்கான ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்,  இலங்கை முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் அல்லது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற ஒரு கருத்து பெரும்பான்மை சமூகத்தவர்களிடம் பரவாலாக காணப்படுகிறது. 

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் இங்கு ஆதரவளித்தல் சம்பந்தமாக ஷரீஅத் ரீதியான ஒரு பார்வையை முன்வைப்பது பொறுத்தம் என நினைக்கிறேன்.

முஸ்லிம்கள் ஒரே உம்மத்தினர் என்ற கோட்பாடும்,  தாய் நாட்டுச் சிந்தனையும் ஒன்றை ஒன்று முரண்பட்ட விடயங்கள் அல்ல என்பது இன்று பல தடவைகள் பல உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களால் தெளிவுபடுத்தப்பட்ட ஒரு விடயமாகும். அந்த வகையில் ஒரு நாட்டைச் சார்ந்திருப்பதும் அதனை நேசிப்பதும் அதற்காக உழைப்பதும் அதன் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதும் இஸ்லாமிய அகீதாவுக்கோ அல்லது ஷரீஅத் சட்டங்களுக்கோ முரணானதல்ல என்பது போல் முஸ்லிம்கள் ஒரே உம்மத்தினர் என்ற கோட்பாட்டுக்கும் முரணானதாக அமைய மாட்டாது. 

கருத்து ரீதியாக இந்த உண்மையை பொதுவாக எவரும் மறுக்க மாட்டார்கள்,  ஆனால் இதன் செயற்பாடு வடிவங்களில், மயக்கங்களும் தெளிவின்மைகளும் தோன்ற முடியும்.

அத்தகைய ஒரு தெளிவற்ற நிலை மேற்சொன்ன விவகாரத்திலும் இருப்பதாக நினைக்கிறேன். இஸ்லாம் முன்வைக்கும் |அல் வலா| எனும் சார்ந்திருத்தல் கோட்பாடு பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது இங்கு சார்ந்திருத்தல் என்பது வெறுமனே பௌதீக ரீதியானதாக மாத்திரமன்றி,  அது உளப்பூர்வமானதாகவும் காணப்படல் வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். எனவே அங்கு பற்று நேசம் ஆதரவு உதவி ஒத்துழைப்பு என்ற எல்லா வகையான உறவுகளும் காணப்படல் வேண்டும் என்பார்கள்.

அந்த வகையில் இந்த வலா என்ற சிந்தனையை அறிஞர்கள் உம்மத் தேசியம் என்ற அடிப்படையில் நின்று சகோதரத்துவ சார்ந்திருத்தல் என்றும் ஒரு முறைமையைச் சார்ந்திருத்தல் என்றும் இரண்டாக வகுத்து நோக்குவார்கள். (வலா என்ற சார்ந்திருத்தல் கோட்பாட்டை பல்வேறு கண்ணோட்டங்களில் பலவேறு பிரிவுகளாக அறிஞர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பதும் இங்கு அதன் ஒரு வகையான பாகுபாடு மாத்திரமே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவும்). 

இதில் முதல்வகை நம்பிக்கை சார்ந்தது முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற அல்குர்ஆன் வசனம் இக்கருத்தையே குறித்து நிற்கின்றது. அந்தவகையில் இது உம்மத்தை நோக்கிய சார்ந்திருத்தலாகும். இரண்டாம் வகை ஒரு முறைமை சார்ந்தது,  அதாவது இது ஒரு தேசத்தை மையப்படுத்தியது

தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தமக்கு மத்தியில் உரிமைகளையும் கடமைகளையும் பகிர்ந்து வாழும் ஒரு முறைமையாகும்,  இங்கு இன மொழி நிற நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்வு கட்டமைக்கப்பட மாட்டாது,  மாற்றமாக குறித்த அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களது பொது நலனை அடிப்டையாகக் கொண்டு அங்கு வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய ஒரு வாழ்வொழுங்கையும் இஸ்லாம் மறுதலிக்கவில்லை. நபியவர்களது மதீனா சாசனம் இந்த வாழ்வொழுங்குக்கு சிறந்த உதாரணமாகும்.

இந்த இருவகையான சார்ந்திருப்பையும் இஸ்லாம் பேசியிருக்கின்றது, இரண்டையும் ஏற்றுக் கொண்டுமிருக்கிறது,  எனின் இவற்றிற்கிடையிலான சமநிலைப்படுத்தல் எவ்வாறு அமையலாம்

ஒரு தேசத்தில் வாழும் முஸ்லிம் தனது தேசத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிமுடன் பேணும் சார்ந்திருப்பு என்பது ஒரு போதும் தான் வாழும் தேசத்தின் ஏற்றுக் கொண்ட பொது நலன்களுக்கு முரணானதாகவோ அல்லது அவற்றை அவமதிப்பதாகவோ அமையக் கூடாது மாத்திரமன்றி தேசத்தை சார்ந்திருத்தல் என்பதும் வெறுமனே பௌதீக ரீதியானதாக மாத்திரமன்றி உளப்பூர்வமானதாகவும் காணப்படல் வேண்டும். 

அத்துடன் தனது தேசத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிமுடனான சார்ந்திருப்பு நம்பிக்கை சார்ந்தது என்ற வகையில் அந்த நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையிலும் அதனை வளர்க்கும் வகையிலும் அந்த சார்ந்திருப்பு காணப்பட முடியும். அது ஒரு போதும் அநியாயத்திற்கு துணை போவதாகவோ உடன்படிக்கைகளை மீறுவதாகவோ அமையக்; கூடாது.

மேற்கூறிய சிந்தனைகளை ஓரளவுக்கு கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் பேசுவதாக நினைக்கிறேன். அல்குர்ஆன் ஹிஜ்ரத் செய்து இஸ்லாமிய தேசத்திற்கு வந்தவர்களையும் வராதிருந்தவர்களையும் பற்றிப் பேசுகின்ற பொழுது,  | ஈமான் கொண்டு ஹிஜ்ரத் செய்யாமல் இருக்கின்றவர்களுடன் உங்களுக்கு வலா எனும் சார்ந்திருப்புக் கிடையாது,   அவர்களது மார்க்கத்தில் உங்களிடம் உதவி கேட்டால் அதற்கு உதவி வழங்குங்கள்.  ஆனால், நீங்கள் ஏற்கனவே உடன்படிக்கை செய்த ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் அது காணப்படக் கூடாது| (அன்பால் - 72). 

இந்த அல் குர்ஆன் வசனத்தில் சார்ந்திருப்பு இல்லை என்று குறிப்பிடப்பட்டமை தேசம் சம்பந்தப்பட்ட சார்ந்திருத்தலையே குறிக்கின்றது.  மாற்றமாக நம்பிக்கை சார்ந்த சார்ந்திருத்தலைக் குறிக்கவில்லை என்பதை வசனத்தின் ஓட்டத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலே பேசப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையில் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கான ஆதரவு நிலைகள் எவ்வாறு அமைவது பொறுத்தமானது என்பதை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். 

இங்கு கிரிக்கட் எனும் விளையாட்டின் ஷரீஅத் ரீதியான நிலைப்பாடு குறித்து நான் பேசவில்லை, அதில் சார்பான எதிரான வாதங்கள் காணப்பட முடியும். அவற்றைத் தாண்டிச் சென்று கிரிக்கட் விளையாட்டின் போதும் சரி அதுவல்லாத ஏனைய விடயங்களின் போதும் சரி எங்களது நடத்தை எவ்வாறு காணப்பட வேண்டும் என்பது குறித்தே இங்கு பேசப்படுகிறது.

அந்த வகையில் ஒருவர் பாகிஸ்தான் என்ற நாட்டையும் அதன் மக்களையும் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் விரும்புவதும் உதவி செய்வதும் தவறானதல்ல. ஆனால் அது இலங்கைக்கு எதிரானதாகக் கட்டமைக்கப்படுவது தவறானதாகும். 

அதே போல் எமது தாய் நாடு என்ற வகையில் இலங்கையையும் அதன் மக்களையும் விரும்புவதும் உதவி செய்வதும் தவறானதல்ல,  ஆனால் அது இஸ்லாம் தடை செய்த வெறியாகவோ பாகிஸ்தானை அவமதிப்பதாகவோ அமைந்து விடக் கூடாது. 

கிரிக்கட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இது நம்பிக்கை சம்பந்தப்பட்டதல்ல நலன்கள் சம்பந்தப்பட்டது. எனவே இவ்விளையாட்டின் மூலம் நாட்டுக்கு ஒரு நன்மை அமையப் பெறுகிறது என்றிருக்கும் போது நமது நாட்டை ஆதரிப்பதே பொறுத்தமானதாகும். அதேவேளை திறமைகள் எந்தத் தரப்பில் வெளிப்பட்டாலும் அவை மதிக்கப்படவும் பாராட்டப்படவும் வேண்டும்.


இது எனது தனிப்பட்ட ஒரு இஜ்திஹாத் மாத்திரமேயாகும். இதில் யாரும் மாற்றுக் கருத்துக் கொள்ள முடியும். அவற்றையும் வரவேற்றவனாக முடிந்தவரை எமது நடத்தைகளை இந்த வரையறைகளைப் பேணி அமைத்துக் கொள்ள அல்லாஹ்தஆலா தௌபீக் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விடைபெறுகிறேன்.