Friday, March 17, 2017

ஆன்மீகம் ஒரு சமநிலைப் பார்வை

ஆன்மீகம் மிகவும் பிரபல்யமான ஒரு சொல். உலகில் எல்லா மதங்களும் கோட்பாடுகளும் அங்கீகரித்த ஒரு சொல். ஆனால் ஆன்மீகம் என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்துவதில் எல்லோரும் ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லை. மிகப் பெரும்பாலும் ஆன்மீகத்தை விளங்கப்படுத்தும் போது, அது உலக வாழ்வைத் துறந்த ஒரு நிலை என்ற கருத்தியலே மேலோங்கிக் காணப்படுகிறது. இஸ்லாமியப் பாரம்பரியத்திற்குள்ளேயும் இதே பாதிப்பு இருப்பதை அவதானிக்க முடிகிறது. உலக வாழ்வு அற்பமானது. உலகப் பொருட்கள் கவர்ச்சி மிகுந்தவை. அவை மனிதனை திசை திருப்பி விடும் வல்லமை கொண்டன. எனவே,  உலகத்தைத் துறப்பதன் மூலமே ஆன்மீக விமோசனத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாகக் காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நம்பிக்கைப் பின்புலத்தின் விளைவாகவோ என்னவோ மனித செயல்களை உலகத்திற்குரிய செயல்கள் மறுமைக்கான செயல்கள் என வேறுபடுத்திப் பார்க்கும் ஒரு பார்வை வளர்ந்திருக்கிறது அல்லது மனித நடத்தைகள் கிடையான வடிவில் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன, உடலுக்கான நடத்தைகள் என்றும் அறிவுக்கான நடத்தைகள் என்றும், ஆன்மாவுக்கான நடத்தைகள் என்றும் ஒன்றையொன்று சம்பந்தமில்லாதவை போன்று அடையாளப்படுத்தப்படுவதைக் காணலாம்.

மற்றொரு புறத்தில் ஆன்மீகம் என்பது,  நேரடியான வணக்க வழிபாடுகளில் காட்டுகின்ற தீவிர ஈடுபாடாக மாத்திரம் புரிந்து கொள்ளப்பட்ட நிலையும் காணப்படுகிறது. குறித்த அந்த செயற்பாடுகளினால் உளநிலையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? என்ற கேள்விகளைத் தாண்டி,  புற செயற்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் பருமன் போன்றவற்றின் பின்னால் ஓடுகின்ற ஒரு நிலை தோன்றியிருக்கிறது. சில சமயங்களில் அந்த எண்ணிக்கையும் அல்லது கால அளவும் அல்லது பருமனும் தான் ஒருவனது ஆன்மீகத் தரத்தை மதிப்பிடுவதற்கான அளவீடுகளாக மாறி விடுகின்றன. ஒரு சமயம் ஷெய்க் அல் கஸ்ஸாலி அவர்கள் கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒரு நல்ல வணக்கவாளி,  தொழுகை,  திக்ர்,  திலாவத் என்ற அனைத்திலும் சிறந்து விளங்கும் ஒருவர்,  குறித்த ஒரு வைபவத்தின்போது,  அதில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை வைத்து பெரும் அமளி துமளியை ஏற்படுத்தி விட்டார். அவரது வணக்க வழிபாடுகள் வெறும் எண்ணிக்கைகளாகவும்,  பருமன்களாகவுமே இருந்திருக்கின்றன. அவை அவரில் உளப் பக்குவத்தைத் தரவில்லை என்கிறார்.

இந்த யதார்த்தங்களைத் தாண்டி,  ஆன்மீகம் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? இது பற்றிய இஸ்லாத்தின் சமநிலைப் பார்வை என்ன? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் சற்று அலசலாம் என்று நினைக்கிறோம்.

ஆன்மீகம் என்ற சிந்தனையை விளங்கிக் கொள்வதற்கு,  அல்குர்ஆன் அதிகம் பயன்படுத்தியுள்ள ரூஹ் என்ற சொல்லின் பிரயோகங்கள் குறித்து முதலில் சற்று பார்வையைச் செலுத்துவது பொறுத்தமானது. இது குறித்து ஆரம்பகால,  நவீனகால அறிஞர்களின் விளக்கங்களைத் தொகுத்து நோக்கியதில் மூன்று பிரதான கருத்துக்களை அடையாளம் காண முடிந்தது.

1.            ‘ரூஹ் என்பது மனிதனை ஏனைய படைப்புக்களை விட்டும் வேறுபடுத்தக்கூடிய ஒரு காரணி. அதாவது,  ரூஹை அல்லாஹ்தஆலா மனிதனில் மாத்திரமே ஏற்படுத்தியிருக்கிறான். ஏனைய படைப்புக்கள் எதிலும் இந்த ரூஹ் கிடையாது. அல்குர்ஆன் மனிதப் படைப்பைப் பற்றி பேசும் போது மாத்திரமே இந்த ரூஹ் பற்றி சொல்கிறது. ஏனைய படைப்புகளின்போது இதனைக் குறிப்பிடவில்லை. உமது இரட்சகன் மலக்குகளிடத்தில்,  நான் மனிதனை மண்ணிலிருந்து படைக்கப் போகிறேன் என்று கூறிய தருணத்தில்,  நான் அவனைப் படைத்து,  அவனில் எனது ரூஹிலிருந்து ஊதியபோது,  மலக்குகள் அவன் முன்னே ஸுஜுதில் வீழ்ந்தனர் (ஸாத் 71-72) என்று அல்குர்ஆன் கூறுகிறது. 

கலாநிதி அத்னான் இப்றாகீம் அவர்கள் இதுபற்றிக் கூறும்போது,  தனது இருப்பை அறிவதும்,  அதற்கான நோக்கத்தைத் தேடுவதும்,  எதிர்காலம் பற்றி சிந்திப்பதும் மனிதர்கள் மட்டும்தான். ஏனைய படைப்புகள் இவ்வாறு செயலாற்றுவதில்லை. இது ரூஹ் ஊதப்பட்டதனாலேயே நடைபெறுகிறது என்கிறார்.


2.            ‘ரூஹ் என்பது ஒரு உள்ளார்ந்த சக்தி. அல்லாஹ்வே மனிதனில் அதனை வைத்திருக்கிறான். மனிதனை இயக்குவிக்கின்ற சக்தி இதுதான். அவனை முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற உள்ளார்ந்த பலம் இதுதான். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. அவர்களது உள்ளத்தில்தான் ஈமான் எழுதப்பட்டுள்ளது. அவர்களை அவனது ரூஹின் மூலம் பலப்படுத்தினான் (முஜாதலா – 22)


3.            “ரூஹ் என்பது அல்லாஹ்வுடனான தொடர்பு,  நெருக்கம்,  அவனது உதவி போன்ற கருத்துக்களைக் குறிக்கும் ஒரு சொல். கலாநிதி அத்னான் ரிபாஇ அவர்கள் இது பற்றிக் கூறும் போது,  அல்குர்ஆனில் வந்துள்ள ரூஹ் என்ற சொல்லுக்குப் பாரம்பரியமாக அல்குர்ஆன்,  ஜிப்ரீல்,  ஈஸா,  உயிர் போன்ற பல விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் விட,  ‘ரூஹ் என்பது அல்லாஹ்வுடனான ஒரு உறவைக் குறிக்கும் சொல்லாகும் என்கிறார்.


மேற்குறிப்பிடப்பட்ட,  ‘ரூஹ்  என்ற சொல்லுக்கான மூன்று விளக்கங்களும்,  ஒன்றை விட்டு மற்றையது தூரமான பொருள் கொண்டதல்ல. அவற்றுக்கிடையில் ஒரு நெருக்கமான தொடர்பு இருப்பதைக் காணலாம். உண்மையில் மூன்று கருத்துக்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, அது குறித்ததோர் உளநிலையை விளங்கப்படுத்துவதாகவே இருக்கிறது.

கலாநிதி அத்னான் இப்றாகீம் அவர்கள் கூறுவது போல்,  இந்த மூன்று கருத்துக்களையும் வைத்துப் பார்க்கும்பொழுது,  ரூஹ் என்பது மனிதனில் செங்குத்து நிலையிலேயே காணப்படுகிறது. கிடைநிலையில் அல்ல என்கிறார். இதன் பொருள் என்ன? அதாவது மனிதனின் ஒரு பகுதி உடல் மற்றொரு பகுதி அறிவு,  மூன்றாம் பகுதி ரூஹ் என்ற கருதுகோள் தவறானது. ரூஹ் என்பது தனித்த ஒரு பொருள் அல்லது விடயம் அல்ல. மாற்றமாக அது ஒரு பரிமாணம். மனிதனின் எல்லாப் பகுதிகளிலும் தாக்கம் செலுத்தவல்ல,  எல்லாப் பகுதிகளையும் வழிநடாத்தக்கூடிய,  ஆளக்கூடிய ஒரு சக்தி என்கிறார். ரூஹ் என்பதை அல்குர்ஆன் இந்தக் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கிறது. 

இந்தப் பின்புலத்தில் நின்றே ரூஹிய்யா எனும் ஆன்மீகத்தையும் நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். ஆன்மீகம் என்பதுவும் மனிதனின் பல்வேறு செயற்பாடுகளில் பத்தோடு பதினொன்றாவதாக கருதப்படக் கூடிய ஒன்றல்ல. மாற்றமாக முழு மனித வாழ்விலும் தாக்கம் செலுத்துகின்ற,  அதனை வழிநடாத்துகின்ற ஒரு நிலையையே ஆன்மீகம் என்கிறோம். அந்த வகையில் ஆன்மீகம் என்பதன் பொருள் பரப்பை எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்பதை அடுத்து நோக்குவோம்.

முதலாவது,  ஆன்மீகம் என்பது இலக்கு நிலையொன்றினைக் குறிக்கிறது. உலகில் ஒரு மனிதனது இறுதி தேடல் என்ன? அவன் கிடைசியாக எதனை அடைந்து கொள்ள விளைகின்றான்? அல்குர்ஆன் கூறுகிறது இறுதி அடைவு உங்களுடைய இரட்சகனிடமேயாகும் (நஜ்ம்-42). ஆன்மீகம் என்பது உயர்ந்த, இறுதி இலக்காக அல்லாஹ்வை அடைந்து கொள்ளுதல்,  என்பதாகும். உலகில் எல்லாவற்றையும் அனுபவித்த,  மிகப் பெரும் செல்வந்தர்களிடம் கேட்டுப் பார்த்தால்,  உஙகள் தேடல் முடிந்துவிட்டதா?  எல்லா இலக்குகளையும் அடைந்து கொண்டு வீட்டீர்களா?   என்றால் இல்லை ஏதோ குறைகிறது திருப்தி காணவில்லை என்பார்கள். மனிதனின் அல்லாஹ்வை நோக்கிய பயணம்தான் அவனுக்கு முழுத் திருப்தியைத் தருகிறது. அந்த இலக்குதான் அவனை அமைதி அடையச் செய்கிறது. அதுதான் ஆன்மீகம். இதனால் தான் அல்குர்ஆன் மரணத்தின் பின்னர் அந்த ஆன்மாவிடம் அமைதியடைந்த ஆன்மாவே,  உனது இரட்சகனிடம் திருப்தியுடன் திரும்பிச் செல் ( பஜ்ர்-27-30) என்கிறது.

உங்களது வாழ்வை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். கடந்து வந்த பயணத்தில் அல்லாஹ் என்ற இலக்கு எந்தளவு இருந்திருக்கிறது. உண்மையில் அல்லாஹ்தான் இலக்காக இருந்ததா? இல்லை பொருளும்,  ஆசையும்,  பகையும் இலக்குகளாக இருந்துள்ளனவா? ஒரு கணம் சிந்திப்போம்.

எனவே,  ஆன்மீகம் என்பதன் முதலாவது பொருள் அல்லாஹ்வை இறுதி இலக்காகக் கொள்ளுதல் என்பதாகும்.

இரண்டாவது,  ஆன்மீகம் என்பது ஒரு உயிர்ப்பு நிலை,  உறங்கு நிலை அல்ல. அந்த உயிர்ப்பு நிலையை நோக்கியே இஸ்லாத்தின் தூது அழைக்கிறது. அல்குர்ஆன் கூறுகிறது,  “ஈமான் கொண்டவர்களே,  உங்களை உயிர்ப்பிக்கக்கூடிய ஒன்றை நோக்கி,  அல்லாஹ்வும் றஸுலும் அழைக்கின்ற பொழுது,  அதற்குப் பதிலளியுங்கள். அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்தஆலா மனிதனுக்கும் அவனது உள்ளத்திற்கும் இடையில் ஒரு தடையை ஏற்படுத்துவான்,  அவன் முன்னாலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் (அன்பால் - 24)

இந்த அல்குர்ஆன் வசனம் சில நுண்ணிய உண்மைகளைப் பேசுகின்றன. முதலில் இது ஈமான் உள்ள மனிதர்களை நோக்கியே உயிர்ப்பு நிலை அழைப்புக்கு பதில் தருமாறு கூறுகிறது. எனவே,  ஈமான் இருத்தல் என்பது மாத்திரம் போதாது. அதற்கு ஒரு உயிர்ப்பு நிலை அவசியம். அந்த உயிர்ப்பு நிலை உள்ள போதுதான் மனிதன் செயல்களை நோக்கி விரைந்து செல்வான். ஏனெனில் அது ஒரு உந்துதல் சக்தி. இதனால்தான் இதே வசனத்தில் மனிதனுக்கும் அவனது உள்ளத்திற்குமிடையில் ஒரு தடையை அல்லாஹ் ஏற்படுத்துவான் என அல்குர்ஆன் கூறுகிறது. இங்கு தடை என்பது உயிர்ப்பு அற்ற நிலையையே குறிக்கின்றது.

இக்கருத்தை இன்னும் தெளிவாக மற்றொரு அல்குர்ஆன் வசனம் கூறுகிறது. அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதன் மூலமும் இறக்கப்பட்ட சத்தியத்தின் மூலமும் ஈமான் கொண்டவர்களது உள்ளங்கள் அச்சப்பட்டு உயிர்ப்புறும் நிலை இன்னும் வரவில்லையா? முன்னர் வேதம் வழங்கப்பட்டோர் போல் அவர்கள் இருந்து விடக் கூடாது. நீண்ட காலம் சென்றுவிட்டதால் அவர்களது உள்ளங்கள் இறுகிப் போய்விட்டன. அவர்களில் அதிகமானோர் பாவிகளாவர் (ஹதீத் - 16)

உள்ளத்தின் உயிர்ப்பு நிலை போய் உறங்கு நிலைக்கு வந்ததன் விளைவாகவே முன்னைய வேதங்களில் சிதைவு நிகழ்ந்திருக்கிறது. வாழ்வின் போக்கே மாறியிருக்கிறது. உயிர்ப்பு நிலை சத்தியத்தை ஸ்திரப்படுத்துகிறது. மனித வாழ்வுக்கு ஒளி கொடுக்கிறது. அல்குர்ஆன் கூறுகிறது உறங்கு நிலையில் இருந்தவரை நாம் உயிர்ப்பித்தோம். மக்கள் மத்தியில் செயலாற்றுவதற்கு அவனுக்கு ஒரு ஒளியைக் கொடுத்தோம் (அன்ஆம் 122) என்கிறது.

எனவே,  ஆன்மீகம் என்பதன் இரண்டாவது கருத்து,  உள்ளத்தின் உயிர்ப்பு நிலை என்பதாகும்.

மூன்றாவது,  ஆன்மீகம் என்பது அற்பமான விடயங்களை விட்டும் மேலெழுந்த ஒரு உயர் மனநிலையைக் குறிக்கின்றது. நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ்தஆலா உயர் நிலைகளை விரும்புகிறான். அற்பமானவற்றை வெறுக்கிறான் (தபரானி). ஆன்மீகம் என்பது,  இந்த உலகத்தின் மீதான பற்று,  ஆசைகள்,  பிடிப்புகள்,  மரணத்தை விரும்பாமை போன்றவற்றிலிருந்து விடுபட்ட ஒரு உயர்ந்த மனநிலை. இங்கு உலகை விரும்புதல் ஆன்மீகத்திற்கு எதிரானது என்பதல்ல,  மாற்றமாக உலகத்தைத் துறக்கத் தயாரில்லாத நிலை. உலகமே இலக்காக மாறிய நிலை. மரணத்தை எதிர்கொள்ளத் தயாரில்லாத நிலை. இவற்றைத்தான் ஆன்மீகத்திற்கு எதிரான அற்ப உணர்வுகள் என்கிறோம். 

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் ஒரு தடவை நபியவர்களிடம் இஸ்லாத்தை நோக்கி ஒருவனது உள்ளம் விரிவுபடுத்தப்பட்டால் அவன் தனது இரட்சகனிடமிருந்து ஒரு ஒளியைப் பெற்றுக் கொள்வான் (ஸுமர் 22) என்ற வசனத்தில் உள்ளம் விரிவுபடல் என்றால் என்ன என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் உள்ளத்தில் ஒளி நுழைந்து விட்டால் உள்ளம் விரிவடைந்து,  திறந்து கொள்ளும் என்றார்கள். அதற்கான அடையாளங்கள் என்ன என்று நாம் கேட்டோம். அதற்கு நபியவர்கள் நிலையான உலகத்திற்கு மீண்டுவருதல்,  ஏமாற்று உலகில் இருப்புக் கொள்ளாதிருத்தல்,  மரணம் நிகழ முன்னர் அதற்குத் தயாராகுதல் என்றார்கள். (ஹாகிம்,  பைஹகீ)

இந்த அடையாளங்கள்,  அற்பங்களைத் தாண்டிய ஒரு உயர் மனநிலை. உலகம்,  மனோ இச்சைகளை விட்டும் உயர்ந்து நிற்கும் நிலை. இந்த உயர்ந்த மனநிலையை ஆன்மீகம் என்போம். ஆன்மீகத்தின் மிகக் கடினமான போராட்டம் இந்த இடத்தில்தான் இருக்கிறது. மனிதனது பொருள் தேடல்,  அனுபவித்தல்,  மனோ இச்சை,  நீண்ட நாள் வாழும் எண்ணம் இவற்றை இரண்டாம் தரத்திற்குத் தள்ளி,  அல்லாஹ்வையும் மறுமையையும் உள்ளத்தில் முதல் தரத்தில் அமர்த்தும் பணி உண்மையில் சிரமமானது தான். இந்த இடத்தில் வெற்றி காண முடிந்தால்,  உலகில் போட்டிகள் குறைந்துவிடும். மோதல்கள் குறைந்து விடும். பழிவாங்கல்கள் இல்லாது போய்விடும். எனவே,  ஆன்மீகம் என்பதன் மூன்றாவது கருத்து அற்பங்கள் தவிர்ந்த உயர் மனோநிலை என்பதாகும்.

எனவே,  ஆன்மீகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதிலை தொகுத்து நோக்கினால்,  அது அல்லாஹ்வை அடைந்து கொள்ள நினைக்கும்,  எப்பொழுதும் உயிர்ப்பு நிலையில் இருக்கின்ற,  ஒரு உயர்ந்த உளநிலையைக் குறிக்கும். இது மனித வாழ்வின் ஒரு பகுதியல்ல. மாற்றமாக மனித வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் பரவி,  விரவிக் காணப்படக்கூடிய ஒரு அம்சம். மனித வாழ்வின் தலைமை,  உந்து சக்தி,  வழிகாட்டி இதுதான்.

அடுத்து,  மேற்சொன்ன கருத்தை ஆதாரப்படுத்தும் வகையில் சில சிந்தனைகளை நோக்குவோம்.

முதலில் ஒரு அல்குர்ஆன் வசனம் அல்குர்ஆன் முஃமீன்களுக்கு நேர்வழியாகவும்,  சுபசோபனமாகவும் காணப்படும். அந்த முஃமின்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள்,  ஸகாத் கொடுப்பார்கள்,  அவர்கள் மறுமையில் ஆழ்ந்து நம்பிக்கை கொண்டவர்கள் (நம்ல் – 2, 3) இந்த வசனம் முஃமின்களை விளங்கப்படுத்தும் போது மூன்று விடயங்களை குறிப்பிடுகின்றது. தொழுகை,  ஸகாத்,  மறுமை நம்பிக்கை. ஆனால் இந்த வசன ஒழுங்கில் உள்ள நுணுக்கம் என்னவெனின் தொழுகை,  ஸகாத் இரண்டையும் முஃமின்கள் நிறைவேற்றுவார்கள் என்று நிகழ்கால வினை வடிவில் கூறிவிட்டு,  மறுமை நம்பிக்கையைக் கூறும் போது,  வினை வடிவமாகவன்றி,  நிலை வடிவமாகவே கூறுகிறது. அந்தவகையில் மறுமையை உறுதியாக நம்பும் நிலையில் என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. எனவே,  முஃமின்கள் மறுமையை உறுதியாக நம்பும் நிலையில்,  தொழுகை,  ஸகாத் போன்ற கடமைகளை நிறைவேற்றுகின்றனர் என்பதே இந்த வசனத்தின் கருத்து. அந்த வகையில் குறித்த அந்த உளநிலை மனித நடத்தையில் தாக்கம் செலுத்துவதைக் காணலாம்.

அடுத்து ஹதீஸு ஜிப்ரீல் என்ற பிரபல்யமான ஹதீஸில்,  ஜிப்ரீல் அலை அவர்கள் மனித உருவில் வந்து, இஸ்லாம், ஈமான்,  இஹ்ஸான் போன்ற சொற்களுக்கான விளக்கங்களை நபியவர்கள் வாயிலாகவே ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். அதனை நபியவர்கள் இது ஜிப்ரீல்,  உங்களது மார்க்கத்தை உங்களுக்கு கற்பிக்க வந்திருந்தார் என்றார்கள். 

ஷெய்க் அல் கஸ்ஸாலி அவர்கள் இது பற்றிக் கூறும் பொழுது, இங்கு ஒரே உண்மையை மூன்று வெவ்வேறு வார்த்தைகளில் நபியவர்கள் விளங்கப்படுத்துகிறார்கள். தீன் எனும் உண்மையை வெளிப்படையான செயற்பாடுகளாக நோக்கினால் அது இஸ்லாம்,  அதே உண்மையை ஒரு நம்பிக்கை,  உந்து சக்தியாகப் பார்த்தால் அது ஈமான்,  அதே உண்மையை இலக்கை அடையும் வகையிலான சம்பூரணமான முயற்சியாகவும் வினைத்திறன்மிக்க செயலாகவும் பார்த்தால் அது இஹ்ஸான் என்றார்கள். தொடர்ந்தும் கூறுகையில்,  ஜிப்ரீல் கற்றுத் தந்த தீன்,  அதுதான் இஸ்லாம்,  இஸ்லாம் அதனுள்ளே மறைந்திருக்கும் உயிர்,  இயங்கு சக்தியான ஈமான் இன்றி செல்லுபடியானதாகக் கருதப்பட மாட்டாது. இந்த நம்பிக்கை ஆழ்ந்து பதிந்து விட்டால் அங்கு அல்லாஹ்வுடனான ஆழ்ந்த தொடர்பும் நெருக்கமும் உருவாகி விடும். இதுதான் இஹ்ஸான் எதிர்பார்க்கும் நிலை என்கிறார். (அல்ஜானிபுல் ஆதிபி மினல் இஸ்லாம்)

இங்கு புரிந்து கொள்ளப்படும் முக்கிய கருத்து என்னவெனின்,  இந்த ஒவ்வொரு பகுதியும் அடுத்த பகுதியை முழுமைப்படுத்தக் கூடியது. ஈமானினால் நல்ல செயல்கள் தோன்றுகின்றன. நல்ல செயல்கள் ஈமானைப் பலப்படுத்துகின்றன. ஈமானுடன் நல்ல செயல்கள் நிறைவேற்றப்படுகின்ற போது,  அங்கு இஹ்ஸான் தோன்றுகிறது. இஹ்ஸானுடன் நிறைவேற்றப்படும் செயல் மெருகேற்றப்படுவதுடன் ஈமானுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. இந்த சுற்று வட்டம் மனித வாழ்வின் உயிர்ப்புக்கு அல்லாஹ்தஆலா வைத்திருக்கும் ஒரு அற்புத விதி.

அடுத்து,  அல்குர்ஆன் பேசும் ரப்பானிய்யா என்ற சிந்தனையும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. ரப்பானிய்யா என்பது கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவது போல்,  அல்லாஹ்வை இலக்காகவும் அவனது சிந்தனையை தனது வாழ்வின் மூலமாகவும் கொள்ளுதலாகும். இந்த ரப்பானிய்யா என்பது யூதர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்திய மாத்திய்யா எனும் சடவாத சிந்தனைக்கும், கிறிஸ்தவர்கள் அறிமுகப்படுத்திய ரஹ்பானிய்யா எனும் துறவர சிந்தனைக்கும் மத்தியில் அமைந்த ஒரு நடுநிலைத் தத்துவமாகும். அந்தவகையில் ரப்பானிய்யா என்பது உலகில் கால் பதித்து,  அதனைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வை அடைந்து கொள்ளும் செயற்பாடாகும்.

எனவே உலகின் எல்லா செயற்பாடுகளின் ஊடாகவும் அல்லாஹ்வை அடைந்து கொள்வதை நாம் ரப்பானிய்யா என்கிறோம். அந்தவகையில் ஆன்மீகம் என்ற செயற்பாட்டையும் இதே வடிவம் கொண்டதாகவே நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த இடத்தில் கலாநிதி அலாஉத்தீன் அப்துல் கப்பார் அவர்கள் (விரிவுரையாளர்,  ஜாமியா நளீமிய்யா) பரிமாறிக் கொண்ட ஒரு சிந்தனையைப் பகிர்ந்து கொள்வது பொறுத்தமானது. நாம் ரப்பானி என்று யாரைக் குறிப்பிடுகிறோம். நேரடியான வணக்க வழிபாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுபவனை மாத்திரம் நாம் ரப்பானி என்று கருத முடியாது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவனும் ரப்பானிதான். அரசியலில் ஈடுபடுபவனும் ரப்பானி தான். வாழ்வின் எந்தப் பகுதியிலும் அல்லாஹ்வுடைய மன்ஹஜுக்கு ஏற்ப தொழிற்படுபவன் ரப்பானியாவான் என்றார்கள். அந்தவகையில் ரப்பானிய உளநிலையின் காரணமாக ஒருவன் எல்லாப் பகுதிகளிலும் தொழிற்படும் உந்துதலைப் பெறுவது போல்,  அவனது எல்லாத் தொழிற்பாடுகளும் ரப்பானிய உளநிலையை பலப்படுத்தும் பணியையும் செய்கிறது.

அடுத்து,  கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி அவர்கள் பேசும் அல்குர்ஆனின் மொத்த சிந்தனை குறித்த கோட்பாடும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. அல்குர்ஆன் பேசும் மொத்த சிந்தனையை நோக்கினால்,  அது மூன்று முக்கிய மகாஷித்களை பேசுவதாக கலாநிதி அலவானி அவர்கள் கூறுகிறார்கள்.

முதலாவது,  தௌஹீத் எனும் ஏகத்துவம். இது வேறு எந்த மக்ஸதுக்கும் ஈடாகாத தனித்துவமான உயர்ந்த மக்ஸத் என்கிறார். மனித செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் அது எந்த செயலாக இருப்பினும் இந்த மக்ஸதுடன் சம்பந்தப்பட்டதாகும். மனித செயலை சார்பாகவோ எதிராகவோ இது பாதிக்கிறது என்கிறார். மாத்திரமன்றி மனித செயலை மதிப்பீடு செய்வது என்பது பெரியளவில் இந்த மக்ஸதைக் கருத்தில் கொள்வதிலேயே தங்கியிருக்கிறது என்கிறார்.

இரண்டாவது,  தஸ்கியா எனும் தூய்மைப்படுத்தல். இதன் பொருள் ஒருவன் தன்னையும் தனது சூழலையும்,  தனது வாழ்வொழுங்கையும் தனது சமூகத்தையும்,  தனது வாழ்வோடு சம்பந்தப்பட்ட,  தன்னோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் தூய்மைப்படுத்துவதைக் குறிக்கும். இந்தத் தூய்மைப்படுத்தலின் மூலமே ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய அமானிதத்தையும்,  கிலாபத் எனும் பிரதிநிதித்துவத்தையும், வெற்றிகரமாக நிறைவேற்றக் கூடியவனாக மாறுகிறான் என்கிறார்.
மூன்றாவது,  உம்ரான் எனும் அபிவிருத்தி. இதன்பொருள் உலகை வளப்படுத்தல்,  அபிவிருத்தி செய்தல்,  அல்லாஹ் வசப்படுத்திய அனைத்தையும் பயன்படுத்தல் என்பதாகும். ஒவ்வொரு படைப்பும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன என்பது அவை ஒவ்வொன்றும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. மனித வசமாகவே அவை இருக்கின்றன என்பதையே வலியுறுத்துகின்றன என்கிறார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,  “மனித செயல் என்பது,  இந்த மூன்று மகாஸித்களினதும் பரஸ்பர ஈடுபாட்டின் விளைவாகும். எனவே மனித செயலில் இந்த மூன்று பகுதிகளும் கருத்தில் கொள்ளப்படுவது அவசியமாகிறது. மனித செயல் பற்றிய மதிப்பீடும் இந்த மூன்று மகாஸித்களினதும்,  மனித செயல்கள் மீதான தாக்கத்தினை வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். மனித செயல்களில் சிறந்தது,  ஏற்றுக் கொள்ளத்தக்கது,  சட்டபூர்வமானது எது எனின் ஏகத்துவத்தின் அடிப்படையில் தோன்றும் செயலாகும். அந்த செயலே அவனது உள்ளத்தில் ஏகத்துவத்தின் வலிமைக்கான குறிகாட்டியாக இருக்கும். அதே சமயம் அந்த செயல் தூய்மைப்படுத்தப்பட்ட ஒரு உள்ளத்திலிருந்து புறப்படுகிறது. எனவே அதன் விளைவு அபிவிருத்தியை நோக்காகக் கொள்கிறது. ஒருபோதும் அது அழிவை நோக்காகக் கொள்ள மாட்டாது (ஸைனப் அல் அலவானி,  முராஜஆத் பீ ததவ்வுரில் மன்ஹஜ் அல் மகாஸிதி இன்தல் முஆஸிரீன்)

கலாநிதி அலவானி அவர்களுடைய வார்த்தைகள் விளக்கம் அவசியமில்லாத அளவுக்கு மிகவும் தெளிவானவை. மனித வாழ்வின் முழுமைத் தன்மையை கச்சிதமாகப் பிரதிபளித்துக் காட்டுகிறது. அதில் ஆன்மீகம் என்பது தலையாயது. அதன் ஊற்றிலிருந்தே ஏனைய அனைத்து செயல்களும் பசுமையடைகின்றன. அந்தவகையில் ஒவ்வொன்றும் ஒன்றை விட்டு மற்றையதைப் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன என்ற செய்தியையே மேற்குறித்த எல்லா விளக்கங்களும் சொல்லிச் செல்கின்றன.

இறுதியாக,  ஒரு முக்கிய விடயத்தையும் தொட்டுக் காட்டிச் செல்லலாம் என்று நினைக்கிறேன். பொதுவாக ஆன்மீகச் செயற்பாடுகள் என்று சொல்லும் போது, அங்கு அவற்றின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டிய உளநிலை மாற்றம் என்ன என்பதை விடவும்,  அவற்றின் புற வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக குறித்த செயற்பாடுகளின் எண்ணிக்கை,  பருமன்,  கால அளவு போன்ற விடயங்களில் ஒரு போட்டித்தன்மை நிலவுவதையும் காணலாம். 

இந்த யதார்த்தம் அடிப்படையில் தவறானதல்ல. ஏனெனில் ஒரு மனிதனிடத்தில் செயற்பாடுகளைப் பயிற்றுவிக்கின்ற பொழுது,  அங்கு எண்ணிக்கை,  பருமன்,  கால அளவு போன்றவற்றில் சில வரையறைகளை இட்டு,  அவற்றை அடையத் தூண்டுவதும்,  யார் அதிகமாக செய்கிறார் என்ற போட்டித்தன்மையை ஏற்படுத்துவதும் பிழையான ஒரு விடயமல்ல. இமாம் கஸ்ஸாலி போன்றவர்களும் இவ்வகையான அணுகுமுறைகளை தர்பிய்யத்தின் போது பேசியிருக்கிறார்கள். ஆனால் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவெனின் இந்த எண்ணிக்கைப் போட்டியின் நோக்கம் என்ன என்பதுதான். ஒரு மனிதனிடத்தில் செயற்பாடுகள் இயல்பான,  அன்றாட ஒரு நடைமுறையாக மாற வேண்டும். அதனடிப்படையில் உளநிலை மாற்றத்திற்கு அது காரணமாக வேண்டும். இதுதான் நோக்கம்.

இந்த நோக்கம் தவறிப் போய் வெறுமனே எண்ணிக்கைப் போட்டியாக மாத்திரம் செயற்பாடுகள் மாறிவிடக் கூடாது. அத்துடன் எண்ணிக்கைகளும்,  பருமன்களும்,  கால அளவுகளும் மாத்திரம் ஒருவரின் ஆன்மீகத் தரத்தை தீர்மானிக்கின்ற காரணிகளாகவும் மாறிவிடக் கூடாது. இந்தக் கவனமான சமநிலை குறிப்பாக ஆன்மீகப் பயிற்றுவிப்புகளின்போது பேணப்படுவது அவசியமாகிறது.

இறுதியாக,  ஆன்மீகம் என்பது எல்லா மனிதர்களுக்குமுரியது. அது சிலரால் முடிந்த மற்றும் சிலரால் முடியாத ஒரு செயற்பாடு அல்ல. ஏனெனில் ஆன்மீகம் என்பது மனித வாழ்வின் இயங்கு சக்தி. ஆனால் ஆன்மீகத் தரத்தில் வேறுபாடுகள் இருக்க முடியும். இதனை அளவீடு செய்வது அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். 

அந்தவகையில் ஒரு மனிதனது மொத்த வாழ்வுச் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதே முக்கியமானது. நேரடியான வணக்க வழிபாடுகளில் எண்ணிக்கை,  பருமன்,  கால அளவு என்பன குறைவாக இருத்தல் என்பது அவரது ஆன்மீகத்தின் குறைபாட்டைப் பிரதிபளிக்க மாட்டாது. அவரது ஏனைய பங்களிப்புகள் பல சமயங்களில் உயர்ந்ததாகக் காணப்பட முடியும். அவையும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகள்தாம். மனித மதிப்பீடுகளின் போது இந்த சமநிலைப் பார்வையும் முக்கியமானதாகும். 

ஆனால் இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் மறந்துவிடக் கூடாது, நேரடியான வணக்க வழிபாடுகளைப் பொறுத்தவரை,  அவற்றில் கடமையானவற்றில் (வாஜிப்) குறைபாடு விடுதல் என்பது ஒருவனது ஆன்மீகத் தரத்தின் குறைபாட்டையே பிரதிபளிக்கின்றது என்பதும்,  அதே நேரம் ஏனைய நபிலான நேரடி வணக்க வழிபாடுகள்,  ஆன்மீக விருத்திக்கு நேரடியாகப் பங்களிக்கக் கூடிய காரணிகள் என்பதும் மறக்கப்படக் கூடாது.
அல்லாஹ்வே போதுமானவன்.

உசாத்துணைகள்
1.            அல் ஜானிபுல் ஆதிபி மினல் இஸ்லாம்,  ஷெய்க் அல்கஸ்ஸாலி.
2.            அல் ஈமானு அவ்வலன் பகைப நப்தஉ பிஹி,  மஜ்தி ஹிலாலி.
3.            முராஜஆத் பீ ததவ்வுரில் மன்ஹஜ் அல் மகாஸிதி இன்தல் முஆஸிரீன்,  ஸைனப் அல் அலவானி.
4.            அத்தீன் வததல்லுஆதில் இன்ஸான் நஹ்வ ஸைளரதின் ரூஹிய்யா, அத்னான் இப்ராஹீம்,  யூடியூப் விரிவுரைத் தொடர்.

5.            அர்ரூஹ் வன்நப்ஸ் ருஇய்யா ஜதீதா, அத்னான் இப்ராஹீம்.