Sunday, December 28, 2014

நபியவர்களது வாழ்வை மூலாதாரமாகப் புரிந்து கொள்ளுதல்

நபியவர்களது வாழ்வைக் குறிக்கும் சுன்னா என்ற சொற்பிரயோகம் இமாம்களது பரிபாஷையில் மூன்று கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றன.

1.            சுன்னா என்பது மன்தூப் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. மன்தூப் என்பது ஷரீஅத் சட்ட முடிவு ஒன்றின் தராதரத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். அதாவது வாஜிப் என்றால் கட்டாயமானது என்று பொருள்படும். மன்தூப் என்றால் கட்டாயமானதல்ல. ஆனால் செய்தால் நன்மைகள் கிடைக்கும். செய்யாத போதும் குற்றிமில்லை. இது சுன்னா என்பதன் முதல் கருத்தாகும். இக்கருத்தில் புகஹாக்கள் எனப்படும் சட்டத்துறை அறிஞர்களே அதிகம் பயன்படுத்தினர்.

2.            சுன்னா என்பது சட்ட மூலாதாரம் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு செயற்பாட்டினதும் சட்டபூர்வத் தன்மையை உரசிப் பார்ப்பதற்குரிய ஒன்று என்பது மூலாதாரம் என்பதன் பொருளாகும். அல்குர்ஆன் முதலாவது சட்ட மூலாதாரம். சுன்னா இரண்டாவது சட்ட மூலாதாரம். சுன்னா என்ற பிரயோகத்தை இந்த இரண்டாவது கருத்தில் உஸுலிய்யூன் எனப்படும் சட்ட அடிப்படை சார் அறிஞர்களே அதிகம் பயன்படுத்தினர். இந்த இரண்டாவது கருத்தையே இன்றைய கட்டுரையில் நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

3.            சுன்னா என்பது ஷரீஆ என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பித்அத் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விடயம் ஷரீஅத்தில் அல்லது இஸ்லாத்தில் உள்ளது என்று கூறுவதற்கு சுன்னா என்றும் இஸ்லாத்தில் இல்லாதது என்று கூறுவதற்கு பித்அத் என்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரயோகம் அதிகமாக வுஃஆல்எனப்படும் உபதேசகர்கள், பொதுப் பேச்சாளர்களிடத்தில் காணப்பட்டது.

சுன்னா என்ற பதம் கையாளப்பட்ட மூன்று வேறுபட்ட பரிமாணங்களையே மேலே பேசப்பட்ட விடயங்கள் குறித்து நிற்கின்றன. சுன்னா பற்றிய இந்த வேறுபட்ட பரிமாணங்களைப் புரிந்து கொள்ளுதல் பல சமயங்களில் சமூகத்தில் மாறுபட்ட அபிப்பிராயங்களை சீரணித்துச் செல்வதற்கு உதவியாக அமைய முடியும்.

அத்துடன் இங்கு நபியவர்களது வாழ்வு என்ற கருத்து இரண்டாவது பரிமாணத்திலேயே பிரதிபளிக்கின்றது. முதலாவது பரிமாணம் குறித்த ஒரு சட்டத்தரத்தை மாத்திரம் பேசுகிறது. மூன்றாவது பரிமாணம் நபியவர்களது வாழ்வை மாத்திரமன்றி அல்குர்ஆனையும் உள்ளடக்கியிருக்கிறது.

இனி இந்த இரண்டாம் பரிமாணம் குறித்த விளக்கத்திற்கு வருவோம். நபியவர்களது வாழ்வு ஒரு சட்ட மூலாதாரம் என்பதில் பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அவரது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் சட்ட மூலாதாரமாகக் கொள்ளுதல் என்பதைப் பொறுத்தவரையில் வேறுபட்ட பார்வைகள் இருக்கின்றன.

இதில் இரண்டு விடயங்கள் குறித்து சற்று பார்வையைச் செலுத்துவது பொறுத்தம் என்று நினைக்கிறேன்.

1.            நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சட்டமாக அமையுமா? மாட்டாதா?

2.            நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நேரடியாக அந்த அம்சமே சட்டமாக அமையுமா? அல்லது அதன் நோக்கங்கள் காரணங்கள் போன்றனவும் சட்டமாக அமையுமா?

இதில் முதலாவது பகுதியை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு நபியவர்களது வாழ்வு என்பதன் மூலம் நாடப்படும் கருத்தையும் சற்று விளங்கிக் கொள்வது அவசியமாகும். 
அதனை மிக எளிமையாகக் கூறினால், நபியவர்களது வாழ்வு எனும் போது அவர்களது வார்த்தைகள், செயற்பாடுகள், அவர்கள் வழங்கிய அங்கீகாரங்கள் போன்றன மிகப் பிரதானமாக உள்ளடங்குகின்றன. நபியவர்களது வாழ்வில் ஸஹாபாக்களது நடவடிக்கைகள் உள்ளடங்குவதில்லை.

இன்று நாம் வாழும் சமூக வாழ்க்கைக்கான மூலாதாரமாக நபியவர்கள் எனும் தனிமனிதனின் வாழ்வை மாத்திரமே நாம் எடுத்துக் கொள்கிறோம். மாற்றமாக, ஸஹாபாக்களின் நடவடிக்கைகளையும் சேர்த்து நாம் சுன்னா என்ற கருத்தில் மூலாதாரமாகக் கருதுவதில்லை. ஸஹாபாக்களது வாழ்வு மூலாதாரமாகக் கருதப்படுமா? என்பது ஒரு தனியான விவாதம் அதனைப் பற்றி இங்கு நான்  பேசவில்லை, மாற்றமாக மூலாதாரம் என்ற கருத்தில் நபியவர்களது சுன்னாவில் ஸஹாபாக்களது நடவடிக்கைகள் உள்ளடங்க மாட்டாது என்பதையே குறித்துக் காட்ட விரும்புகிறேன்.

அந்தவகையில் ஒரு தனிமனிதனின் வாழ்வை சமூக வாழ்வொன்றில் நாம் எவ்வாறு பிரயோகிக்கப் போகின்றோம்? என்பதுவே இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு விடை காணும் முயற்சியை ஆரம்ப கால இமாம்கள் முதல் நவீன கால ஆய்வாளர்கள் வரையில் பலர் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் வகித்த சமூகப் பாத்திரங்கள் குறித்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இமாம் கராபி அவர்கள் தனது கிதாபுல் புரூக் எனும் நூலில் நபியவர்கள் முபல்லிக்எனும் அல்லாஹ்விடமிருந்து வஹியை அறிவிப்பவர் என்ற பாத்திரத்தை மாத்திரம் வகிக்கவில்லை. மாற்றமாக அவர்கள் இமாம்எனும் தேசத்தின் தலைவர் காழிஎனும் நீதிபதி,  ‘முப்திஎனும் பத்வா வழங்குனர் போன்ற பல்வேறு பாத்திரங்களை சமகாலத்தில் வகித்திருக்கிறார்கள். 

ஒரு சமூக வாழ்வில் காணப்பட முடியுமான எல்லா வகைப் பாத்திரங்களும் நபியவர்களுக்கு இருந்திருக்கிறது. மாத்திரமன்றி,  அந்த ஒவ்வொரு பாத்திரத்தினதும் உயர்ந்த தரத்தையே நபியவர்களது வாழ்வு பிரதிபளித்துமிருக்கின்றது என்று விளங்கப்படுத்தியிருக்கிறார்.
நபியவர்களது மேற்சொன்ன பாத்திரப் பரப்புகளில் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியை அறிவிப்பவர் என்ற வகையில் பேசிய வார்த்தைகள்,  மேற்கொண்ட நடவடிக்கைகள்,  வழங்கிய அங்கீகாரங்கள் என்பன எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது சட்டங்களாகக் காணப்படும். இவை பொதுவாக அல்குர்ஆனுக்கு நபியவர்கள் வழங்கிய விளக்கங்கள்,  நம்பிக்கைகள்,  வணக்க வழிபாடுகள்,  ஒழுக்கப் பண்பாடுகள்,  ஹலால்-ஹராம் தொடர்பானவை போன்ற பரப்புக்களை உள்ளடக்கியிருக்கும்.

இவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைபிடிப்பது கடமையாகும். மறுமை வரையில் அமுலில் இருக்கக்கூடிய பொது சட்டங்களாக இவை கருதப்படும். இவற்றை எவரேனும் தவிர்ந்து கொள்வதாக இருப்பின் இவை பற்றி வந்துள்ள ஹதீஸ்களின் நம்பகத்தன்மையில் ஒரு மாறுபடட கருத்து இருக்கின்ற போது மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும்.

அதுபோல் நபியவர்கள் ஆட்சித் தலைவர் என்ற வகையிலோ அல்லது நீதிபதி என்ற வகையிலோ பேசிய அல்லது செயற்பட்ட அல்லது அங்கீகாரம் வழங்கிய விடயங்களைப் பொறுத்தவரையில் அவை எல்லா மனிதர்களுக்குமான பொது சட்டங்களாகக் கருதப்பட மாட்டாது. மாற்றமாக அத்தகைய ஒரு சட்டத்தை ஒரு ஆட்சித் தலைவரோ அல்லது ஒரு நீதிபதியோ மாத்திரமே முன்வைக்க முடியும். உதாரணமாக ஒரு தடவை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் ஒரு தரிசு நிலத்தை எவர் பண்படுத்துகிறாரோ அந்த நிலம் அவருக்கே சொந்தமானதாகும்” (அபூதாவூத்).

நபியவர்களின் இந்த வார்தைகளை அவர் வஹி அறிவிப்பவர் என்ற அடிப்படையில் நின்று நோக்கினால் எந்தவொரு மனிதனும் பிறர்க்கு சொந்தமில்லாத ஒரு பொது நிலத்தைப் பயன்படுத்த முடியும். அப்போது அதன் உரிமையாளராக அவர் கருதப்படுவார். அரசாங்கமோ அல்லது வேறு எவரும் இதனைத் தடை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு செயற்பட முடியும் என்ற கருத்தையே பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த விளக்கம் நிச்சயமாக ஒரு சமூக ஒழுங்குக்குப் பொறுத்தமானதல்ல. அதனால் இமாம் அபூஹனீபா அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் போது,  நபியவர்கள் இக்கருத்தை பொதுச் சட்டமாக முன்வைக்கவில்லை. மாற்றமாக அவர் ஒரு ஆட்சித் தலைவர் என்ற அடிப்படையிலே இதனை முன்வைத்திருக்கிறார். எனவே,  இது போன்ற ஒரு முடிவை ஆட்சித் தலைவர் ஒருவர் மாத்திரமே பெற முடியும். அந்தவகையில் ஒரு தரிசு நிலம் எவ்வாறு கையாளப்பட வேண்டும்? என்பது பற்றிய சட்டத்தை அந்தந்த சூழலுக்கு ஏற்ப ஒரு அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே,  மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடியாக நாம் விளங்கிக் கொள்வது என்னவெனின்,  நபியவர்களது வாழ்வின் சில பகுதிகள் எல்லா மனிதர்களுக்குமான பொதுச் சட்டங்களாக அமையும், அதேவேளை மற்றும் சில பகுதிகள் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கான அல்லது சில சமூக அலகுகளுக்கான சட்டங்களாக மாத்திரம் அமைகின்றன. 

அந்தவகையில் நபியவர்களது வாழ்வை நாம் ஒரு சட்ட மூலாதாரமாக நோக்கும்போது,  அவர்களது வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் எல்லோருக்கும் உரியவை என்ற பொது நோக்கிலன்றி, நபியவர்கள் என்ற தனிமனிதன் வகித்த பல்வேறு சமூகப் பாத்திரங்களுக்கு ஏற்ப அந்தந்த பாத்திரப் பரப்புகளிலேயே எமது சமூக வாழ்வில் அவை மூலாதாரமாக மாறுகின்றன என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும். 

உண்மையில் இந்தப் பகுதி மிகவும் விரிவான ஓர் ஆய்வுப் பரப்பாகும்,  அதன் ஒரு சில துளிகளை தொட்டுக்காட்டுவது மாத்திரமே எனது முயற்சியாகும்.

இனி இரண்டாவது பகுதிக்கு வருவோம். நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் அந்த நேரடி நிகழ்வுகளே,  எமக்கு சட்டங்களாக அமையுமா? அல்லது அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் எமக்கு சட்டங்களாக மாறுமா? என்ற இந்த விடயத்தைப் பொறுத்தவரை முதலாவது பேசிய கருத்துடனும் நெருங்கிய சம்பந்தம் உள்ள ஒரு பகுதியாகும்.

கீழ்வரும் ஹதீஸின் மூலம் இக்கருத்தை சற்று விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

நபியவர்கள் மதீனா வந்த பொழுது ஸஹாபாக்கள் பேரீத்தம் மரத்தில் மகரந்தச் சேர்க்கை செய்வதைப் பார்த்து அதனைத் தடை செய்தார்கள். அவ்வருடம் விளைச்சல் குறைந்தபோது மகரந்தச் சேர்க்கை தடை செய்யப்பட்டமையே காரணம் எனக் குறிப்பிட்டார்கள். அதற்கு நபியவர்கள் அது உங்களுக்குப் பயனளிக்கும் எனின் செய்யுங்கள் அவ்வாறு செய்வது நல்லதில்லை என்று நான் கருதினேன். அவ்வளவுதான்,  எனது எண்ணம் தவறாக இருக்கலாம். ஆனால் நான் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதனைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வைப் பற்றி நான் ஒரு போதும் பொய்யுரைக்க மாட்டேன். ஆனால் எனது சொந்தக் கருத்தைக் கூறியிருந்தால் (அதனைப் பின்பற்றுவது அவசியமில்லை) ஏனெனில்,  நானும் ஒரு மனிதன்தான்,  உங்களது உலக விவகாரங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்” (முஸ்லிம்)

இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற மிக முக்கிய விடயம் என்னவெனில் நபியவர்களது வாழ்வில் எமக்கு சட்டமாக அமைகின்ற ஒரு பகுதியும் இருக்கிறது. சட்டமாக அமையாத ஒரு பகுதியும் இருக்கிறது. நபியவர்களே அதனை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் பற்றியும் அவனிடமிருந்தும் நான் சொல்பவையே உங்களுக்கு ஷரீஅத்தாக அமையும். அவ்வாறன்றி நான் ஒரு மனிதன் என்ற நிலையில் முன்வைக்கும்,  எனது சொந்த அபிப்பிராயங்கள் உங்களுக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது என்கிறார்கள்.

மேற்சொன்ன வார்த்தைகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? உண்மையிலேயே நபியவர்களது வாழ்வில் எமக்கு ஷரீஅத்தாக அல்லது சுன்னாவாக அல்லது மூலாதாரமாக அமையாத ஒரு பகுதி இருக்கிறதா?

உண்மையில் ஏற்கனவே குறித்துக் காட்டியது போன்று, நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி அறிவிப்பவர் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள்,  செயற்பாடுகள், அங்கீகாரங்கள் அனைத்துமே நேரடியாக எமக்கு ஷரீஅத்தாக மாறுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நபியவர்கள் தொழுது காட்டியமையும்,  ஹஜ் செய்து காட்டியமையும்,  சாப்பிடும் போது பிஸ்மில் சொன்னமையும் வலது கையால் சாப்பிட்டமையும் அனைத்துமே நேரடியாக அதே செயல்கள் எமக்கு ஷரீஅத்தாக மாறுகின்றன.

ஆனால் நபியவர்கள் ஒரு மனிதர் என்ற வகையில் அவர்களிடமிருந்து புறப்படுகின்ற செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் நேரடியாக அந்த ஒவ்வொரு செயலும் எமக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. மாற்றமாக அந்த செயலை எந்த நோக்கத்திற்காக செய்தாரோ அந்த நோக்கமே எமக்கு ஷரீஅத்தாக மாறுகிறது. 

உதாரணமாக ஏற்கனவே கூறப்பட்ட பேரீத்தம் மரத்தின் மகரந்தச் சேர்க்கைத் தடை விவகாரத்தினை ஸஹாபாக்கள் கூட ஆரம்பத்தில் வஹியின் அடிப்படையிலான கட்டளையாக ஏற்று கைவிட்டார்கள். பின்னர் அதனை நபியவர்கள் அனுமதித்தார்கள். இந்த இடத்தில் மகரந்தச் சேர்க்கை செய்வதும் சரி அல்லது அதனைக் கைவிடுவதும் சரி. இரண்டுமே நேரடியாக எங்களுக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. ஆனால் விவசாய அபிவிருத்திக்காக அல்லது விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள முடியும் அல்லது கையாள வேண்டும் என்பது இங்கு ஷரீஅத்தாக மாறுகிறது. அதாவது புதிய தொழிநுட்பக் கையாள்கை என்பது இஸ்லாமியப் பாரம்பரியத்தில் வலியுறுத்தப்படும் ஒரு அம்சம் என்பதற்கான ஆதாரமாக இந்தச் சம்பவம் காணப்படுகிறது. இங்கு நேரடியாக குறித்த செயல் எமக்கு சட்டமாக அமையவில்லை. மாற்றமாக அந்த செயலின் நோக்கம் சட்டமாக அமைந்தது.

ஷெய்க் மஹ்மூத் ஷல்தூத் அவர்கள்,  நபியவர்கள் ஒரு மனிதர் என்ற ரீதியில் தொழிற்பட்ட நிலைகளை முக்கிய மூன்று பரப்புக்களில் குறிப்பிடுகிறார்கள்.

1.            நபியவர்கள் மனிதத் தேவைகளின் அடிப்படையில் தொழிற்பட்டமை உதாரணமாக சாப்பிடுதல்,  உறங்குதல் போன்றன. இதில் நபியவர்களது விருப்பு வெறுப்புக்களும் உள்ளடங்குகின்றன. உதாரணமாக,  நபியவர்கள் ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியை விரும்பிச் சாப்பிட்டார்கள்.

2.            சமூக வழக்காறு என்ற அடிப்படையில் நபியவர்கள் தொழிற்பட்டமை. உதாரணமாக,  அவர்களது ஆடைமுறைகள்,  அவர்களது மருத்துவம்,  விவசாய முறைகள் போன்றன.

3.            நபியவர்கள் மனித அனுபவத்தின் அடிப்படையில் தொழிற்பட்டமை. உதாரணமாக,  நபியவர்களது யுத்த தந்திரங்கள் போன்றன.

இந்த மூன்று பரப்புக்களையும் பொறுத்தவரையில் இவற்றின் நேரடி செயற்பாடுகள் எமக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. மாற்றமாக அவற்றின் நோக்கங்களே எமக்கு ஷரீஅத்தாக அமையும். 

ஆனாலும் இந்தப் பரப்புகளுக்குள்ளேயும் சில சமயங்களில் சில நேரடி செயற்பாடுகளும் ஷரீஅத்தாக அமைகின்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவை குறிப்பாக வஹியின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற செய்திகளாகவே காணப்படும். அவ்வாறான செயற்பாடுகளை நபியவர்கள் தெளிவான கட்டளையாகவே குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார்கள். உதாரணமாக,  சாப்பிடும் போது பிஸ்மில் கூறுவது,  வலது கையால் சாப்பிடுவது,  உறங்கும் போது துஆ ஓதுவது போன்றன.

இறுதியாக,  இமாம் முகம்மத் தாஹிர் இப்னு ஆஷுர் அவர்கள் நபியவர்களது சுன்னாவை மிகச் சரியாக புரிந்து கொள்வதற்கு நபியவர்களது நடவடிக்கைகள் என்ன வகையான நோக்கங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது என்று வலியுறுத்துவதுடன்,  நபியவர்களது சுன்னா எழுகின்ற பன்னிரண்டு வகையான நோக்கங்களை விரிவாக விளக்குகிறார்கள். 

அந்த ஒவ்வொரு நோக்கத்தையும் விரிவாகப் பேசுவதற்குரிய இடம் இதுவல்ல என்றிருந்தாலும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை என்னவெனில்,  நபியவர்களது வாழ்வு என்பது இன்றைய எமது வளர்ச்சியடைந்த சமூக வாழ்வின் எல்லாப் பாகங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கையாகும். எமது சமூக வாழ்வு துறை வாரியாக வகைப்படுத்தப்பட்டு,  ஒவ்வொரு துறையும் சுயாதீனமாய்த் தொழிற்படுவது போன்ற ஒரு நிலைமையை நபியவர்கள் வாழ்வில் காண்பதரிது. அதனால் அவரது வாழ்வை எமது சமூக வாழ்வில் பிரயோகிக்கும் போது ஒரு விரிந்த பகுப்பாய்வுப் பார்வை எமக்கு அவசியப்படுகிறது. அப்பொழுதுதான் இன்றைய நாளில் சுன்னாவை மிகச் சரியாக அமுல்படுத்தியவர்களாக நாம் மாறுவோம்.


அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

Sunday, November 16, 2014

ஹரீஸுன் அலா வக்திஹி

 தனது நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்பவன்

தனிமனித உருவாக்கப் பரப்புகளில் மற்றொரு முக்கியமான பகுதி, நவீன முகாமைத்துவக் கற்கைகளில் பெரிதும் விவாதிக்கப்படுகின்ற ஒரு அம்சம்,  இமாம் ஹஸனுல் பன்னாவின் பாஷையில் ஹரீஸுன் அலா வக்திஹிஎன அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்ன?

ஒரு தனிமனிதனது நடத்தைக்கும் நேரத்திற்கும் இடையிலான தொடர்பை இது விளக்குகிறது. இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் நான்கு இணைத் தலைப்புகளில் இது விளக்கப்படுகிறது.

1.            ஹரீஸ் என்பதன் பொருள் என்ன?
2.            வக்த் என்பதன் பொருள் என்ன?
3.            ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் பொருள் என்ன?
4.            தனிமனித உருவாக்கத்தில் இந்தப் பண்பின் முக்கியத்துவம் என்ன?

1. ஹரீஸ் என்பதன் பொருள் என்ன?

ஹரீஸ் என்பதன் மூலச் சொல் அல்-ஹிர்ஸ் என்பதாகும். இந்தச் சொல் அடிப்படையில் உலோபித்தனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு விடயத்தை தான் மாத்திரம் அனுபவிப்பதும் பிறர்க்கு விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் உலோபித்தனம் என்பதன் மூலம் நாடப்படுகிறது. இது ஒரு எதிர்மறையான பொருளைத் தருகின்ற போதிலும் இதற்கு ஒரு நேர்மறையான வடிவமும் இருக்கிறது. 

அந்த நேர்மறையான வடிவத்தையே மிகப் பிரதானமாக அல்ஹிர்ஸ்என்ற சொல் குறிக்கிறது. அதாவது ஒரு விடயத்தின் மீது அதீத ஆர்வம் கொள்ளுதல். இது சாதாரணமாக ஆர்வம் என்ற எல்லையைத் தாண்டி வேட்கை,  பசி என்ற எல்லை வரையான கருத்துக்களையும் குறிக்கக் கூடியதாகும். இந்த ஆர்வம் ஒன்றை அனுபவிப்பதற்காகவும் காணப்பட முடியும். பிறிதொருவருக்கு நன்மை விளைவிப்பதற்காகவும் காணப்பட முடியும்.

மேற்குறித்த மொழிக் கருத்தை வைத்து நோக்கும் போது,  ஹரீஸ் என்பது ஒரு விடயத்தை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவனைக் குறிக்கிறது. அதில் எந்த ஒரு சிறிய பகுதியும் வீணடைவதையோ அல்லது அழிந்து போவதையோ அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அத்துடன் அதன் முழுமையான பயனை அடைந்து கொள்வதில் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுவான். அவற்றில் எதனையும் விட்டுக் கொடுக்க மாட்டான். இத்தகைய உளநிலைக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரனையே நாம் ஹரீஸ் என்போம்.

2. வக்த் என்பதன் பொருள் என்ன?

பொதுவாக மொழியில் வக்த்என்ற சொல்,  வரையறுக்கப்பட்ட ஒரு நேரத்தைக் குறித்து நின்றாலும், இங்கு ஹரீஸுன் அலா வக்திஹிஎன்ற சொற்றொடரில் வக்த் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு நேரத்தையன்றி பொதுவாக எல்லா நேரங்களையுமே குறிக்கின்றது. இமாம் ஹஸனுல் பன்னா கூறியது போல் நேரம் தான் வாழ்க்கை. முழு மனித வாழ்வும் நேரம் என்ற சொல்லில் உள்ளடங்குகிறது. 

இக்கருத்தையே இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள் ஆதமின் மகனே,  நீ சில நாட்களாவாய். ஒரு நாள் கழிந்து விட்டால் உன்னில் ஒரு பகுதி கழிந்து விட்டது என்ற பொருள்என்றார்கள். இதன் காரணமாகத்தான் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் ஒரு நாள் கழிவதையிட்டுக் கவலையடைந்தார்கள். ஒரு நாள் சூரியன் மறைகிற போது,  எனது ஆயுளில் ஒரு நாள் குறைந்து விடுகிறது. ஆனால் எனது செயல்கள் அதிகரிக்கவில்லை எனின்,  இதனை விடவும் ஒரு விடயத்திற்காக நான் கைசேதப்பட்டது கிடையாதுஎன்றார்கள்.
எனவே,  நேரம் என்பது வாழ்க்கை. அது வீணடையாமல் உச்ச பயன் மிக்கதாய் அமைக்கப்படல் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் இமாம்கள் நேரத்தின் சிறப்பியல்புகளைக் கீழ்வருமாறு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

-              நேரம் யாருக்காகவும் காத்திருக்க மாட்டாது. அது மிக வேகமாகக் கடந்து போய்க் கொண்டேயிருக்கும்.

-              கடந்த போன ஒரு நேரத்தை ஒருபோதும் மீளப் பெற முடியாது. இமாம் ஹஸனுல் பஸரீ அவர்கள் கூறுகிறார்கள் ஒவ்வொரு விடியலும் மனிதனைப் பார்த்துச் சொல்கிறது ஆதமுடைய மகனே,  நான் ஒரு புதிய படைப்பு. உன்னுடைய செயல்களுக்கு நான் சாட்சி. என்னைப் பயன்படுத்திக் கொள். நான் போய்விட்டால் மறுமை நாள் வரையில் மீண்டும் வர மாட்டேன்என்று சொல்கிறது என்றார்கள்.

-              நேரம் விலை மதிப்பற்றது. மனித வாழ்வின் முழு மூலதனமும் அதுதான். இமாம் ஹஸனுல் பஸரி கூறுவது போல் அது குறைந்து விட்டால்,  அவனது வாழ்வு குறைந்து விடுகிறது.

3. ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் பொருள் என்ன?

மேலே விளக்கப்பட்டவாறு ஹரீஸ்,  வக்த் ஆகிய இரு சொற்களினது கருத்துக்களையும் இணைத்து நோக்குகின்ற பொழுது ஹரீஸுன் அலா வக்திஹிஎன்ற சொற்றொடர் பேசும் கருத்துக்களை பின்வருமாறு அணுக முடியும்.

முதலில்,  நேரம் என்பது வாழ்க்கை. அதில் ஒரு சிறிய பகுதியும் வீணாகக் கடந்த விடக்கூடாது. பயனற்றதாய் சென்று விடக் கூடாது என்பது ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் முதலாவது கருத்தாகும். மேலே முன்வைக்கப்பட்ட,  அறிஞர்களது எல்லாக் கருத்துக்களும் இந்த உண்மையை விளக்கப் போதுமானதாகும். 

உண்மையில் நேர வீணடிப்பு என்பது ஒரு குற்றச் செயல். அதற்கான விசாரணை நிச்சயம் மறுமையில் காணப்படுகிறது. அல்குர்ஆன் இந்த உண்மையை இவ்வாறு கூறுகிறது யார் அணுவளவு நன்மை செய்தாலும் அதனைக் கண்டு கொள்வார். அணுவளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டு கொள்வார்” (ஸல்ஸலா – 7, 8)

இக்கருத்தை இன்னும் தெளிவாக இந்த ஹதீஸ் விளக்குகிறது மறுமையில் ஒரு மனிதனிடம் நான்கு விடயங்கள் பற்றி விசாரிக்கப்பட முன்னர் அவனது கால்கள் நகர மாட்டாது. அவனது வயதை எவ்வாறு கடத்தினான்? அவனது அறிவைப் பயன்படுத்தி என்ன செய்தான்? அவனது செல்வம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது?  எவ்வாறு செலவு செய்யப்பட்டது? அவனது உடம்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

இந்த ஹதீஸில் வயது என்பது நேரத்தைக் குறிக்கிறது. எனவே,  நேர வீணடிப்பு ஒரு குற்றம். அதற்கு விசாரணை இருக்கிறது என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுகிறார்கள் ஒருவன் நேரத்தை வீணடிப்பது என்பது அவன் தன்னைத் தானே கொலை செய்வதாகும். இது மக்கள் பார்த்திருக்க மெதுவாக நடைபெறும் ஒரு தற்கொலைக் குற்றமாகும். ஆனால் இதற்கு எவரும் தண்டனை வழங்குவதில்லைஎன்றார்கள்.

இமாம் இப்னுல் கையிம் அவர்கள் கூறுகிறார்கள் நேர வீணடிப்பு என்பது மரணத்தை விடவும் ஆபத்தானது. ஏனெனில்,  நேர வீணடிப்பு உங்களை அல்லாஹ்வையும் மறுமை நாளை விட்டும் தூரமாக்கி விடுகிறது. ஆனால் மரணம் உங்களை உலகையும் அதிலுள்ள மக்களையும் விட்டுத்தான் தூரமாக்குகிறதுஎன்றார்கள்.

உமர் (றழி) அவர்கள் கூறினார்கள் உங்களில் எவரும்,  உலகம் சம்பந்தப்பட்ட அல்லது மறுமை சம்பந்தப்பட்ட எந்த வேலையும் இன்றி சும்மா இருப்பதை நான் வெறுக்கிறேன்என்றார்கள்.

அடுத்து ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் இரண்டாவது கருத்துக்கு வருவோம். அதாவது நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். கலாநிதி அப்துல் ஹமீத் பிலாலி அவர்கள் கூறுவது போல் நேர முகாமை என்று ஒரு விடயம் கிடையாது. உண்மையில் நேரத்தை முகாமை செய்ய முடியாது. ஏனெனில் அது எமது கைகளில் இல்லாத ஒரு விடயம். மாற்றமாக நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற விடயமே உண்மையில் இங்கு நடக்கிறது. நேரத்தின் உச்ச பயனைப் பெறும் வகையில் ஒரு மனிதன் தன்னை முகாமை செய்ய முடியும். தனது செயல்களை முகாமை செய்ய முடியும். நேரத்தை முகாமை செய்ய முடியாது. நேரம் என்றும் மாற்றமுறாது. ஒரே வடிவில் நகர்ந்து கொண்டேயிருக்கும். கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்திலிருந்தும் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பதே இங்கு முக்கியமானது. அதற்காக ஒருவன் தன்னையும் தனது செயல்களையும் மாற்றியமைத்துக் கொள்வான். 

இந்தக் கருத்தைக் குறிக்கும் விதமாகவே இமாம் ஹஸனுல் பன்னா அவர்களும் தனிமனித ஆளுமைப் பண்புகளைப் பேசும்போது,  நேரம் எனும் பண்பை ஹரீஸுன் அலா வக்திஹி என்று தான் குறிப்பிட்டார். இது நேரத்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துவதையே குறிக்கிறது. அதேவேளை செயற்பாட்டுப் பகுதியை முனழ்ழமுன் பீ சுஊனிஹி என்று குறிப்பிட்டார்கள். அதாவது தன்னைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திக் கொள்பவன் என்று இது பொருள்படுகிறது. எனவே நேரம் என்பதில் முகாமை இல்லை உச்ச பயன் பெறுதலே இருக்கிறது. ஆனால் செயற்பாடுகளில் முகாமை இருக்கிறது.

நேரத்தின் உச்ச பயன் பெறப்படல் வேண்டும் என்பதையே நபியவர்களது இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. ஐந்து விடயங்கள் நிகழ முன்னர் ஐந்து விடயங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்திற்கு முன்னர் வாழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நோயிற்கு முன்னர் ஆரோக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலைப்பளுவுக்கு முன்னர் ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வறுமைக்கு முன்னர் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்என்றார்கள் (ஹாகிம்)

இங்கு ஒவ்வொரு நிலையும் கடந்து செல்ல முன்னர் அதன் உச்ச பயன்பாடு பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இதே கருத்தை மற்றோர் ஹதீஸிலும் காண முடிகிறது. அல்லாஹ்வின் இரண்டு நிஃமத்துக்கள் குறித்து அதிகமானவர்கள் மிகவும் கவனயீனமாக இருக்கிறார்கள். அவை ஆரோக்கியமும் ஓய்வும் ஆகும்என்றார்கள் (புஹாரி)

இந்த ஹதீஸிலும் இவற்றின் உச்ச பயனைப் பெறாது மக்கள் கவனமற்றிருக்கிறார்கள் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இங்கு நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு? என்ற ஒரு கேள்வி எழ முடியும். இங்கு தான் திட்டமிடலும் சுய முகாமையும் பெரிதும் அவசியப்படுகின்றது. இது தனியான விரிவான ஒரு பரப்பு என்பதால் இங்கு அது தவிர்க்கப்படுகிறது.

அடுத்து ஹரீஸுன் அலா வக்திஹிஉணர்த்தும் மூன்றாவது கருத்து,  ஒவ்வொரு செயலையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். ஏனெனில்,  அல்லாஹ்தஆலா ஒவ்வொரு விடயத்திற்கும் அதற்கென ஒரு நேரத்தை வைத்திருக்கிறான். அந்த நேரத்திற்கு முன்னரும் சரி,  பின்னரும் சரி அது நிகழ மாட்டாது. அந்த உரிய நேரத்திலேயே நிகழும். அல்குர்ஆனில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்தஆலா பயன்படுத்திய ஒரு சொற்பிரயோகம் அஜலுன் முஸம்மாஎன்பது. இது ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட நேரம் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. 

எந்தளவுக்கு எனின்,  அல்லாஹ்வின் தண்டனை கூட அவன் வரையறை செய்த உரிய நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ நிகழ மாட்டாது என அல்குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் செய்யும் அநியாயங்களுக்காக அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பதாக இருப்பின்,  பூமியின் மீது ஒரு கால் நடையும் மீதமிருக்க மாட்டாது. மாற்றமாக அவன் வரையறை செய்த அந்த நேரம் வரையில் அதனைப் பிற்போடுகிறான். ஆனால் அந்த நேரம் வந்தால் தண்டனை கொஞ்ச நேரம் முற்படுத்தப்படவோ பிற்படுத்தப்படவோ மாட்டாது” (நஹ்ல் 61)

இதனால்தான் நபியவர்களது சுன்னாவும்,  ஒவ்வொரு பணியையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாக அமைந்திருந்தது. உக்பத் இப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் ஒரு நாளைக்குரிய வேலையை அன்றைய தினமே நிறைவு செய்து விடுவார்கள்என்றார்கள் (அஹ்மத்)

கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் ஒரு தடவை வேளைப்பளுவின் காரணமாக களைப்படைந்திருந்தபோது,  இதனை நாளைக்குச் செய்யலாமே என்று சிலர் ஆலோசனை கூறினர். அதற்கவர் ஒரு நாளைக்குரிய வேலையே என்னை மிகவும் சிரமப்படுத்தி விட்டது. இரண்டு நாளைக்குரிய வேலைகள் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? என்று பதிலளித்தார்கள்.

எனவே,  ஒவ்வொரு வேலையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பது ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் மூன்றாவது கருத்தாகும்.

4. தனிமனித உருவாக்கத்தில் ஹரீஸுன் அலா வக்திஹி என்ற பண்பின் முக்கியத்துவம் என்ன?

முதலாவது,  நேரம் என்பது வாழ்க்கை. இந்த வாழ்க்கை அல்லாஹ் தந்த மிகப் பெரிய ஒரு அருள். அந்த அருளுக்காக நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மிகச் சிறந்த நன்றி எது தெரியுமா? அந்த வாழ்க்கையை வீணாகவன்றி,  உச்ச பயனை அடையும் வகையில் வாழ்வதாகும்.

இரண்டாவது,  நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ்தஆலா படைத்த நாட்களில் சில விஷேட பொழுதுகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றைப் பயன்படுத்திக் கொண்டவருக்கு இதன் பின்னர் வாழ்க்கையில் நஷ்டமே கிடையாதுஎன்றார்கள் (தபரானி)

அல்லாஹ்தஆலா மக்கா,  மதீனா போன்ற விஷேட இடங்களை அமைத்திருப்பது போல் சில விஷேட காலங்களையும் அமைத்திருக்கிறான். ரமழான்,  ஹஜ் காலம் போன்ற பல விஷேட பொழுதுகள் உள்ளன. அவற்றில் பல சிறப்பம்சங்கள் வைக்கப்பட்டுள்ளன. ரமழான் மாதம் குறித்து,  அது பரகத் செய்யப்பட்ட மாதம் என நபியவர்கள் கூறினார்கள். அது போல் அதிகாலைப் பொழுதைப் பற்றிக் கூறும் பொழுது அதிகாலைப் பொழுதில் பரகத் இருக்கிறது என்றார்கள்.

இத்தகைய விஷேட பொழுதுகள் ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையில் கிடைக்கப் பெற்றுள்ள பெறுமதியான சந்தர்ப்பங்கள். இவற்றைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமானது என்பதைப் போல் ஒரு கடமையும் ஆகும். மனிதன் தனது வாழ்வை வீணாக்கி விடக் கூடாது என்பதில் அல்லாஹ்தஆலாவும் மிகுந்த கரிசனையுடன் காணப்படுகிறான். அதற்கான அவனது பௌதீக ஏற்பாடுகளே இவை. அல்லாஹ்தஆலாவின் இந்த ஏற்பாட்டுக்கமைய மனித வாழ்வு ஒழுங்கமைக்கப்படுவதற்காகவும் தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் இந்தப் பண்பும் இடம் பெற்றிருக்கிறது.

மூன்றாவது,  இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் கூறியது போல்,  நேரங்களை விட கடமைகள் அதிகமானவை. எனவே,  எம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதியானது. அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெற்றுக் கொள்கின்ற பொழுதே,  கடமைகளின் பரிமாணத்தை ஓரளவுக்கேனும் எட்டிப் பிடிக்க இயலுமாக இருக்கும். அந்த வகையில் கடமைகளில் குறைபாடு விடாத ஒரு பரம்பரையின் உருவாக்கத்திற்காய்,  தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் இப்பண்பு இன்றியமையாததாக மாறுகின்றது.

நான்காவது. ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு கடமை இருக்கிறது. குறித்த நேரத்திற்குரிய கடமையைச் செய்வதில் சில சமயங்களில் சிலர் தவறு விடுகின்றனர். ஒன்றில் கடந்த காலத்தில் வாழ்கின்றனர். அல்லது எதிர்காலக் கற்பனைகளில் மிதக்கின்றனர். இன்றைய நாள் கடமையை மறந்து போகின்றனர். ஷெய்க் முகம்மது ஹூஸைன் அவர்கள் சொல்வது போல் இதுவும் ஷைத்தானுடைய ஒரு ஊசலாட்டமாகும். இவன் நிச்சயம் எதனையும் சாதிக்காதவனாகவே இருப்பான். கடந்த காலம் மீள வராது. எதிர்காலம் நிச்சயமற்றது. அதேவேளை நிகழ்காலத்திலும் எதுவும் செய்யவில்லை. உண்மையில் இவன் பெரும் நஷ்டவாளிதான். இதுபோன்ற நஷ்டவாளிகளாக மனிதர்கள் மாறிவிடக் கூடாது. நேரத்திற்குரிய கடமையை ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டும். இதன் காரணமாகவும் தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் இப்பண்பு இடம் பெற்றிருக்கிறது.

ஐந்தாவது,  இவ்வுலகிலே மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் மிகவும் பாரியது. ஆனால் ஒவ்வொரு தனிமனிதனதும் ஆயுள் மிகவும் குறுகியது. எனவே எமது குறுகிய ஆயுளின் உச்ச பயனை அடைந்து கொள்கின்ற பொழுதே,  உலக மாற்றத்தில் ஒரு சிறிய தாக்கத்தையேனும் நாம் விளைவிக்க முடியும். அபூபக்ர் (றழி) அவர்கள் தனது இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் அன்றைய நாளின் மிக முக்கிய சாதனைகளை நிகழ்த்தினார்கள். மத மாற்ற சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். அல்குர்ஆனை ஒன்று திரட்டினார்கள். சிந்தனைச் சிக்கல்களை நீக்கி,  மீண்டும் மக்களை அல்குர்ஆனுடைய சிந்தனைக்கு மீட்டு வந்தார்கள். ஒவ்வொரு சோதனையையும் சாதனையாக மாற்றியமைத்தார்கள். இவர் போட்ட பலமான அடித்தளம் அடுத்தவர்கள் அதன் மீது கட்டுவதற்கு வசதியாக அமைந்தது.

உமர் (றழி) அவர்களின் பத்து வருட ஆட்சியில் மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டார்கள். அதன் மூலம் உலகத்தின் தலைமையை நேரடியாக முஸ்லிம்கள் வசமாக்கினார்கள். ரோமம்,  பாரசீகம் எனும் அன்றைய உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களை வெற்றி கொண்டார்கள். பத்து வருடங்களில் உலகின் உச்சிக்கு இஸ்லாத்தைக் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

உமர் இப்னு அப்துல் அஸீஸைப் பாருங்கள். சுமார் இரண்டரை வருடங்களில் கடன்களற்ற,  வறுமையற்ற செல்வச் செழிப்புமிக்க நாடாய் இஸ்லாமிய பூமியை மாற்றியமைத்தார்கள். அவரது காலத்தில் வசதியீனத்தின் காரணமாக திருமணம் முடிக்காதோர் இருக்கவில்லை. அதுபோல் ஹஜ் செய்யாதோர் இருக்கவில்லை என வரலாறு சொல்கிறது.
இவை குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்ந்த சாதனைகளுக்கான சில உதாரணங்கள் மட்டுமே. 

இஸ்லாமிய வரலாற்றில் இவை மிகவும் அதிகம். உலக மாற்றத்தில் இவை என்றும் மறக்க முடியாத மறுக்க முடியாத பங்களிப்புகள். இவற்றைப் போன்றதாய் எங்களது பங்களிப்புகள் மாற வேண்டும். அவை உலக மாற்றத்தில் பாரிய தாக்கத்தை விளைவிப்பனவாய் அமைய வேண்டும். ஏனெனில் உலகம் எதிர்பார்க்கும் மாற்றம் மிகவும் பாரியது. தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் ஹரீஸுன் அலா வக்திஹி என்ற பண்பும் இடம் பெற்றமைக்கான மற்றொரு முக்கிய நியாயமாக இது அமைகிறது.


அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

Monday, November 3, 2014

முயற்சி எங்களுடையது, விளைவு அல்லாஹ்வுடையது

நபியவர்கள் கூறினார்கள் எனக்கு முன்னைய சமூகங்களின் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நபியுடன் ஒருவர் மாத்திரமே இருந்தார். மற்றொரு நபியுடன் இருவர் இருந்தனர். இன்னொரு நபியுடன் ஒரு கூட்டம் இருந்தது. மற்றொரு நபியுடன் ஒருவரும் இருக்கவில்லைஎன்றார்கள். (புஹாரி, திர்மிதி)

இந்த ஹதீஸ் நபிமார்களுடைய தஃவாவின் விளைவு நிலையை குறித்துக் காட்டுகிறது. விளைவு மையப்பட்ட செயற்பாடு எந்தப் பணிக்கும் பொதுவானது. தஃவா அதற்கு விதிவிலக்கு அல்ல. விளைவுகளைத் திட்டமிடுதலும் அவற்றை அடைந்து கொள்ளுதலும் இஸ்லாம் வலியுறுத்தும் ஸாலிஹான அமல் என்பதன் ஒரு வடிவமாகும்.

ஆனால் இங்கு இஸ்லாமிய தஃவாவைப் பொறுத்தவரை ஒரு நுணுக்கமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தஃவா என்பது விளைவுகள் எட்டப்படாத போது நிறுத்திக் கொள்வதற்குரிய ஒரு பணியல்ல அல்லது விளைவுகள் எட்டப்படாத போது நாம் செய்தது அனைத்தும் பிழையானது அர்த்தமற்றது என்று முடிவு செய்வதற்குரிய ஒரு விடயமல்ல அல்லது நாம் செய்தது தஃவாவே அல்ல என்று கவலைப்படுவதற்குரிய ஒன்றுமல்ல.

மாற்றமாக விளைவுகளுக்குப் பொறுப்பானவன் அல்லாஹ்தஆலா. முயற்சிகள் மாத்திரமே மனிதனுக்குப் பொறுப்பானவை. நபிமார்களைப் பற்றி அல்லாஹ்தஆலா சொல்கிறான் தூதுவர்கள் மீது தெளிவாக எத்திவைக்கும் பொறுப்பு மாத்திரமல்லவா இருக்கிறது?” (நஹ்ல் - 35)

ஆரம்பத்தில் பதிவு செய்த ஹதீஸில் நபிமார்களது தஃவா விளைவு எப்படியிருக்கிறது? இவர்களில் எவரும் தஃவாவை இடை நிறுத்தியதில்லை. தாம் செய்தது பிழை என்று கருதியதில்லை. உடன் உழைத்தவர்களைக் குற்றவாளிகளாக்கியதில்லை.

விளைவைக் காணாவிட்டாலும் எமது உழைப்புக்கு கூலி இருக்கிறது என்ற உண்மையை நாம் பல சமயங்களில் மறந்து போகிறோம். விளைவைக் காண வேண்டும் அப்போது தான் கூலி உண்டு இல்லாத போது குற்றவாளிகள் என்ற மனப்பாங்கு தவறானது. இது தஃவாவை உலகியல் பார்வையில் மாத்திரம் சுறுக்கி விட்ட கண்ணோட்டம். தஃவா இதனை விடவும் உயர்ந்தது. அதற்கு ஒரு ஆன்மீகப் பெறுமானமும் இருக்கிறது.

மாத்திரமன்றி உலகியல் கண்ணோட்டத்திலும் எமது உழைப்புகள் ஒரு போதும் வீண் போவதில்லை. கடந்த காலத்தின் மீதுதான் எதிர்காலங்கள் கட்டப்படுகின்றன. எமது உழைப்புகள் விளைவுகளின் ஏதேனும் ஒரு படியாய்த்தான் அமையப் போகின்றன. முதல் உழைப்பிலேயே இறுதி விளைவைக் காண்பது சிரமமானது ஒவ்வொரு விடயத்திற்கும் அதற்குரிய ஒரு காலம் இருக்கிறது என்று அல்குர்ஆன் கூறுகிறது. எனவே, பொறுமையும் நம்பிக்கையும் மிகவும் முக்கியமானவை.

மற்றொரு புறத்தில் விளைவை எட்டாத எமது உழைப்புகள் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்,  கற்றுக் கொண்ட பாடங்கள். இது செயற்களத்தில் கிடைக்கும் தர்பிய்யத். இது விலை மதிக்க முடியாதது. இது செயற்பாட்டில் முதிர்ச்சியைக் கொண்டு வரும். தெளிவை ஏற்படுத்தும். அடுத்த கட்டப் பயணத்தை வேகப்படுத்திவிடும்.

மீண்டும் நபிமார்களைப் பாருங்கள். அவர்கள் எதனை இழந்து விட்டார்கள்? உலகை இழக்கவுமில்லை. மறுமையை இழக்கவுமில்லை. அவர்களுக்கு கூலி கிடைக்க மாட்டாது என்று சொல்ல மாட்டோம். அவர்கள் மரியாதையையோ நபி என்ற அந்தஸ்த்தையோ இழந்து விட்டார்கள் என்று நாம் சொல்ல மாட்டோம்.

தஃவாவை கூட்டு வடிவில் மேற்கொள்கின்ற பொழுது,  சகோதரர்களிடையே மேற்போந்த எதிர்மறை எண்ணங்கள் இடைக்கிடையே தோன்றி மறைய வாய்ப்பிருக்கிறது.

சகோதரர்களே,  நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். விளைவுகளைத் திட்டமிட்டுத்தான் நாம் தஃவாவை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை அடைந்து கொள்ள முடியாது போகிற போது உங்களது முயற்சி அர்த்தமற்றது என்று எண்ணி விடாதீர்கள். அவை வீணாகி விட்டன. எமக்கு எந்தக் கூலியும் இல்லை என்று நினைக்காதீர்கள். உடன் உழைத்தவர்கள் தவறு செய்து விட்டதாய்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.

நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் உழைப்புகள் எவையும் வீணாகவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தஆலா கூலி தருவான். ஒவ்வொருவரதும் எண்ணத்துக்கும் உழைப்புக்கும் உரியவற்றை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். உடன் உழைப்பவர்களை மதித்து நடவுங்கள். அவர்களது உழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உழைப்புக்கு மட்டுமே நாம் பொறுப்பானவர்கள். விளைவுக்கு அல்லாஹ்வே பொறுப்பானவன். உழைப்பைப் பற்றியே நாம் விசாரிக்கப்படுவோம். விளைவைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டோம்.


அல்லாஹ்வே போதுமானவன்.

Thursday, September 11, 2014

அல்-குர்ஆனுடனான ஒன்றித்த உறவாடலுக்கு துணையாக அமையும் காரணிகள்

ஈமானிய அமர்வுகள்

அல்குர்ஆனை ஓதுதல் என்பது,  அல்குர்ஆனுடனான எமது உறவின் ஒரு ஆரம்ப நிலையாகும். இந்த உறவின் அழுத்தமான மற்றறொரு கட்டமாகவே அதனுடன் ஒன்றித்த உறவாடல் என்ற நிலை காணப்படுகின்றது. இந்த இரண்டாம் கட்டத்தை அடைந்து கொள்வதற்கு பொறுமையுடன் கூடிய நீண்ட முயற்சியும் பயிற்சியும் அவசியப்படுகிறது.

 குறிப்பாக இந்த நகர்வின் ஆரம்ப நாட்களில் இதன் அவசியம் மிகவும் அழுத்தமானது. சாதாரணமாக அல்-குர்ஆனை திருத்தமாக ஓதுவதற்கே ஒரு பயிற்சி அவசியப்படுகிறது. அதேபோல்,  அர்-குர்ஆனுடன் ஒன்றித்துப் போகவும்,  அதனுடன் வாழவும்,  அதிலிருந்து சிந்தனைகளையும் நடைமுறைகளையும் பெற்றுக் கொள்ளவும் ஒரு பயற்சி அவசியப்படுகிறது. அத்தகைய ஒரு பயிற்சிக்கு துணை செய்யக் கூடிய சில காரணிகள் காணப்படுகின்றன.

1. அல்-குர்ஆனின் பயனை அனுபவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்தல்.

2. அல்-குர்ஆனை ஓதுவதற்கான ஒழுக்கங்களைப் பேணுதல்.

3. அல்-குர்ஆனுடன் ஒன்றித்துப் போகும் போது தோன்றும் சிந்தனைகளை சிறந்த முறையில் கையாளுதல்.

4. சிந்தனைகளைத் தோற்றுவிப்பதற்கான மாதிரி வடிவங்களைப் பின்பற்றல்.

இந்த ஒவ்வொரு காரணியும் விரிவாக நோக்கப்பபட வேண்டியவை. இன்ஷா அல்லாஹ் இன்றைய அமர்வில் முதல் இரண்டு காரணிகள் குறித்து மாத்திரம் பார்வையை செலுத்துவோம்.

1. அல்-குர்ஆனின் பயனைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்தல்.

இந்தக் கருத்து குறித்து முன்னைய ஒரு அமர்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும் மீண்டும் இங்கே ஒரு ஞாபகமூடடல் மாத்திரம் செய்யப்படுகிறது. ஏனெனில், அல்குர்ஆனின் சிந்தனைக்குள்ளே நுழைவதற்கான திறவுகோல் இந்த நிபந்தனையிலேயே தங்கியிருக்கிறது.

அதுதான் அல்லாஹுத்தஆலா மீதான பயம். இங்கு பயம் என்பது விரண்டோடுகின்ற பயம் அல்ல. அல்லாஹுத்தஆலா மீது விருப்பத்தையும் அன்பையும் கண்ணியத்தையும் ஞாபகப்படுத்துகின்ற பயம். அல்லாஹ்வின் வழிகாட்டல் எமது நலனுக்கானது. அதனைப் புறக்கணிப்பதால் நானே எனக்கு தீமையைத் தேடிக் கொள்கிறேன். எனவே,  எமக்கு தீமை நிகழ்ந்து விடக்கூடாது என்ற உணர்வின் உந்துதலே இந்தப் பயம். இதனைத்தான் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

'யார் பயப்படுகின்றாரோ அவர் நுழைந்து விடுவார். நுழைபவர் உரிய அந்தஸ்த்தை அடைந்து கொள்வார்..."

அல்குர்ஆனை ஓதும்போது அல்லது அதனை செவிமடுக்கும்போது அது பேசும் சிந்தனைகளைப் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆனால்,  தான் புரிந்து கொண்டதை தனது வாழ்வில் எப்போது பிரயோகிப்பார் எனின் அதனுடைய அவசியத்தை அவர் தனது வாழ்வில் உணர்கின்றபோதுதான் அது சாத்தியப்படுகிறது. அவசியத்தை எப்போது உணர்வார்? அது எந்தளவு தனது வாழ்வைப் பாதிக்கப் போகிறது என்ற அச்சம் அவரை ஆட்கொள்கின்ற போதே அதன் அவசியம் அங்கு உணரப்படுகிறது. அல்லாஹுத்தஆலா இதனை இவ்வாறு பேசுகிறான்,  'உங்களுக்கு தீங்காக அமைவதற்காக அல்குர்ஆன் இறக்கப்படவில்லை. மாற்றமாக,  பயப்படுபவர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலாகவே காணப்படுகின்றது. (1-3- தாஹா)

2. அல்குர்ஆனை ஓதுவதற்கான ஒழுங்குகளைப் பேணுதல்.

நாம் அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் அதன் சிந்தனைகளை விளங்கி நடைமுறைப்படுத்துவது நோக்கமாக இருக்கின்றது. அல்குர்ஆனை ஓதுகின்றபோது அல்லாஹுத்தஆலாவின் ஞான ஒளி,  நாம் செய்யும் பாவங்களின் காரணமாக எமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கின்றது. எனவே,  இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புக் கேட்டல், அல்குர்ஆனை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கான ஒரு நிபந்தனையாகிறது. அல்குர்ஆன் கூறுகிறது: 'நீங்கள் அவர்களுடன் இருக்கின்ற போது அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான். அதுபோல் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்கின்ற போதும் அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான்." (அன்பால்: 33)

அல்குர்ஆனின் சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடியாமல் போவதும் ஒரு விதமான தண்டனையே. எனவே,  இங்கு உள்ளத்தால் உணர்ந்த ஒரு உண்மையான பாவமீட்சி அவசியப்படுகிறது. வெறுமனே நாவோடு மாத்திரம் சுருங்கிய 'அஸ்தஃபிருல்லாஹ்" என்ற வார்த்தை மொழிவு மாத்திரம் போதாது. அப்போதுதான் கதவுகள் திறந்து கொள்ளும்,  சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.

அடுத்து நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல். இதனால் அல்லாஹ்வும் எம் மீது ஸலவாத்துச் சொல்கிறான். அவனது அருள் எம்மீது சொரிகின்றன. அவனது வார்த்தைகளை சீரணிப்பதற்கு இந்தப் பேரரருள் எமக்கு துணை செய்யப் போகின்றது.

இத்துடன் ஸதகா செய்கின்ற பழக்கம் மிகவும் முக்கியமானது. நீர் நெருப்பை அணைத்து விடுவது போல் ஸதகா பாவங்களை அனைத்து விடுகிறது. இவற்றுடன் யா அல்லாஹ் அல்குர்ஆனை; விளங்கிக் கொள்ளும் பாக்கியத்தை தருவாயாகஎன்ற பிரார்த்தனையும் உடன் இணையுமாக இருந்தால்,  நாம் பாவங்கள் கலைந்து அருள் பெற்று சிறந்த விளக்கங்களையும் பெற்றவர்களாக மாறுவோம். 

அறிஞர் ஸலாஹ் காலிதி என்பவர்,  'அல்குர்ஆனுடன் உறவாடுவதற்கான திறவுகோள்கள்" என்ற தனது நூலில் அல்குர்ஆனை ஓதும்போது பேண வேண்டிய சில ஒழுக்கங்களை பேசியிருக்கின்றார். அவற்றை இங்கு சுருக்கமாக தருகிறோம்.

1.            அல்குர்ஆனை ஓதுவதற்கு மிகவும் பொருத்தமான நேரத்தை தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும். மிகச் சிறந்த நேரம் இரவின் மூன்றாவது பகுதியான ஸஹர் நேரம். அடுத்து பொதுவாக இரவு நேரம். அடுத்து அதிகாலை நேரம். அடுத்து ஸுப்ஹ் தொழுகைக்கு பின்னர் உள்ள நேரம். அடுத்து ஏனைய பகல் பொழுதுகள்.

2.            பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பள்ளிவாயலே மிகவும் பொருத்தமான இடம். வீடாக இருப்பின் அதற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடமாக இருப்பது சிறந்தது. பொதுவாக எந்த இடத்திலும் ஓதலாம். ஆனால்,  சந்தடிகளற்ற கவனச் சிதைவுகளற்ற அமைதியான சுத்தமான இடமாக இருப்பது முக்கியமானது. ஏனெனில்,  அல்குர்ஆன் மழையைப் போன்றது. அது கற்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது. தயார் நிலையில் உள்ள பூமி மீதே தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. அல்குர்ஆனும் அமைதியுடன் தயார் நிலையில் உள்ள உள்ளத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

3.            அல்லாஹ்வே எமக்குத் தஞ்சம். அவனே எமக்குப் பாதுகாப்பு. எனக்கு மீட்சி. எனக்கு எந்த சக்தியும் இல்லை. எந்த அறிவும் இல்லை. எல்லாம் அவன் தருபவையே என்று முழுமையாக அல்லாஹ்விடத்தில் தன்னை அர்ப்பணித்த மனோநிலையுடன் அல்குர்ஆனை ஓத வேண்டும். இவனிடத்தில்தான் அல்குர்ஆனின் அறிவு பிரவாகித்து ஓடத் தொடங்கும்.

4.            ஷெய்த்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடும் அந்த வார்த்தைகளில் தொடங்கி,  அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்க வேண்டும். இது வெறுமனே வார்த்தையுடன் மாத்திரம் நின்று விடுவதாக அமைந்து விடக்கூடாது. அந்த வார்த்தைகளின் பொருளின் ஆழத்தை உணர்ந்து உச்சரிக்க வேண்டும். ஷெய்த்தான் எவ்வளவு பெரிய எதிரி. என்னை வழிகெடுப்பதை மாத்திரமே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவன். அவனிடத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது அல்லாஹ்வின் மூலமே சாத்தியப்படுகிறது.

5.            உள்ளத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். புறத் தேவைகளை எதிர்பார்த்த நிலையில் உள்ளம் இருக்கக் கூடாது. அவற்றை நிறைவு செய்த பின்னரே ஓத ஆரம்பிக்க வேண்டும். இல்லாதபோது அதனுடன் ஒன்றித்து வாழ்வது சாத்தியமற்றுப் போகிறது. பசி,  தாகம்,  உபாதைகள்,  கவலை, சூடு,  குளிர் போன்ற பல விடயங்கள் மனதின் அமைதியை குலைத்து விட முடியுமானவை.

6.            ஓதும்போது தனது சிந்தனையை முழுமையாக குர்ஆனுடனேயே வைத்திருக்க வேண்டும். அதனை வேறு எங்கும் சிதற விடக்கூடாது. புலனுணர்வுகள் அனைத்தும் ஒருசேர அல்குர்ஆனில் ஒன்று குவிகின்ற போதே அதன் அறிவியல் உண்மைகளை அவன் சரியாகப் புரிந்து  கொள்ள முடியும்.

7.            அல்குர்ஆனின் ஓட்டத்துடன் இரண்டரக் கலந்து உறவாடிக் கொண்டு அதனை ஓதுதல் வேண்டும். ஒரு சுபசோபன செய்தி வருகிறபோது சந்தோசத்தை வெளிப்படுத்துதலும் தண்டனையையும் வேதனையையும் பற்றி பேசுகிறபோது கவலையையும் அழுகையையும் வெளிப்படுத்துதலும் பாவங்களைக் கூறும்போது அருவருத்தலும் தூரமாகுதலும் கடமைகளைக் கூறும்போது உற்சாகமடைதலும் நடைமுறைப்படுத்தும் உறுதி கொள்ளுதலும் அதன் வடிவங்களாகும்.

8.            அல்குர்ஆன் எம்மை நோக்கியே பேசுகிறது என்ற உணர்வுடன் அதனை ஓத வேண்டும். அதன் ஒவ்வொரு கட்டளையும் ஒவ்வொரு எச்சரிக்கையும் ஒவ்வொரு உபதேசமும் என்னை நோக்கியே சொல்லப்படுகிறது என்று அழுத்தமாக உணர வேண்டும். அப்பொழுதுதான் ஈமான் கொண்டவர்களே என்று அல்குர்ஆன் விளிக்கும்போது எனது கண்களும் காதுகளும் உள்ளமும் விளித்துக் கொள்ளும். எனக்கு ஒரு கட்டளை வரப்போகிறது. அதனை ஏற்கத் தயாராக வேண்டும் என்ற உணர்வு வருகிறது.



மாத்திரமன்றி,  ஒவ்வொரு வசனத்தையும் நின்று நிதானித்து ஓதுவதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அது எனக்கு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள முற்படும்போது நிச்சயமாக நிதானமாகவே ஓதுவோம். அவசரமாக பக்கங்களைப் புரட்டி விட்டு ஓடி விட நினைக்க மாட்டோம். 

இன்ஷா அல்லாஹ், அடுத்த பத்தியில் மீதமுள்ள காரணிகளுடன் சந்திப்போம். அல்லாஹ் எம் அனைவரையும் ஏற்றுக் கொள்வானாக.