Monday, July 29, 2013

எகிப்திய சூழல் குறித்த ஓர் அவதானம்


கலாநிதி முஹம்மத் முர்ஸிக்கு எதிரான இராணுவப் புரட்சி கடந்த ஜூலை 03ம் திகதி அரங்கேறியபோது, இஃவான்கள் ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள். சட்டபூர்வமான ஜனாதிபதியே எமக்கு வேண்டும். இந்த அநியாயமான புரட்சியை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். இந்த அநியாயக்காரர்களுடன் எவ்விதமான சமரஸமும் கிடையாது. மக்கள் போராட்டம் தொடரும். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்கள்.

இந்த நிலைப்பாட்டை மேலோட்டமாகப் பார்க்கும் போது, அல்-இஃவானுல் முஸ்லிமூன் என்ற இயக்கத்தின் எதிர்காலம் எகிப்தினுள் எவ்வாறு அமையப் போகிறது என்ற ஒரு அச்சம் நிச்சயமாக அதனை நேசிக்கின்ற எவருக்கும் ஏற்படும். ஆரம்பத்தில் எனக்கும் கொஞ்சம் இந்த அச்சம்  ஏற்படத்தான் செய்தது.

இந்த இராணுவப் புரட்சி வெற்றி பெறும் எனின்,  நிச்சயமாக மீண்டும் இஃவான்கள் பழைய நிலைக்குத் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில் அந்தத் தேவை உள்நாட்டு சக்திகளுக்கு மாத்திரமன்றி சர்வதேச சக்திகளுக்கும் இருக்கின்றது. அவர்களை அடக்கி,  மீண்டும் தலையெடுக்க விடாமல் வைத்திருப்பதே அனைவருக்கும் பாதுகாப்பானது.

Thursday, July 25, 2013

அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் கலாநிதி மஹ்மூத் கஸ்லான் அவர்கள் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யிற்கு எழுதிய கடிதம்.

கலாநிதி மஹ்மூத் கஸ்லான் 

பாகம் – 03

(இறுதிப் பகுதி)

தளபதி அவர்களே,

நீங்கள் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்தான் இராணுவப் புரட்சிக்கு உந்தப்பட்டதாக தொடர்ந்தும் மக்களை நம்பவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உண்மையில் அது இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி என்பதை எல்லோரும் அறிவர்.

 அந்த செய்திகள் தற்போது பக்கம் பக்கமாக வெளிவரத் தொடங்கியுள்ளன, உங்களுக்கும் ஜப்ஹதுல் இன்காத் தலைமைகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்புகளில், அரசியல் வாதிகளும் ஊடகவியலாளர்களும் மக்களைத் திரட்டுவதாகவும், அப்போது நீங்கள் இராணுவப் புரட்சியை மேற்கொள்வதாகவும், தீர்மானிக்கப்பட்டுள்ளன.

 நிச்சயமாக இது புதிய விடயமல்ல, முகம்மத் அபூ ஹாமித் கூறியிருந்தார்,  கலாநிதி முர்ஸி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது, அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஒரு இலட்சம் பேரை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் திரட்ட முடியும் எனின் அவர்களை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்று தெரவித்ததாகக் கூறியுள்ளார்,  அத்துடன் அப்போதைய இராணுவத் தளபதி தன்தாவி, மக்களைத் திரட்டும் வேலை வெற்றியளிக்கும் எனின் தான் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்,  பரதாகி, அம்ர் மூஸா, ஸப்பாஹி ஆகியோருடன் நீங்கள் மேற்கொண்ட சந்திப்புகளின் இரகசியத்தை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் காணலாம்.

Wednesday, July 24, 2013

அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் கலாநிதி மஹ்மூத் கஸ்லான் அவர்கள் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யிற்கு எழுதிய கடிதம்.

கலாநிதி மஹ்மூத் கஸ்லான் 

பாகம் - 02

கௌரவ தளபதி அவர்களே,

நீங்கள் உங்கள் நாட்டு மக்களையே கொலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்த போது உங்கள் உண்மையான முகம் வெளித்தெரிந்து விட்டது, அவர்கள் மிகவும் அமைதியாக தாம் தெரிவு செய்த ஜனாதிபதியை விடுவிக்குமாறு போராடிக் கொண்டிருந்தார்கள்.

 சுப்ஹ் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உங்களது நாட்டு சகோதரர்களையே கொல்லுமாறு நீங்கள் சொன்ன போது,  உங்களது மிருகத்தன்மையும் இரத்த வெறியும் வெளிப்பட்டது,  அந்த சோக நிகழ்வில் ஜம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்,  நூற்றுக் கணக்கானோர் காயப்பட்டார்கள், இன்னும் பலர் கைது செய்யப்பட்டு மிக மோசமாக நடாத்தப்பட்டார்கள்,  எந்தளவுக்கு எனின் ஒரு படைவீரர் ஒரு கைதியின் கழுத்தில் தனது சப்பாத்தை வைத்து மிதித்ததைப் பார்த்தோம்.

 ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி விடலாம் என்றுதானே,  இவை அனைத்தும் செய்யப்பட்டன,  ஆனால்,  நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் எகிப்து மக்கள் பயத்தை மறந்து விட்டார்கள்,  அவர்களது சுதந்திரம் உயிரை விடவும் பெறுமதியானது என நம்புகிறார்கள்,  இனி ஒருபோதும் அவர்கள் இழிவடைய மாட்டார்கள்.

Tuesday, July 23, 2013

அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் கலாநிதி மஹ்மூத் கஸ்லான் அவர்கள் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யிற்கு எழுதிய கடிதம்.

கலாநிதி மஹ்மூத் கஸ்லான் 

பாகம் - 01

கௌரவ தளபதி அவர்களே,

நீங்கள் உங்கள் படையினரில் ஒரு பிரிவினரை பக்கபலமாக வைத்துக் கொண்டு, சட்டபூர்வமான ஜனாதிபதி முகம்மத் முர்ஸி அவர்களை எதிர்க்கத் தலைப்பட்டு விட்டீர்கள், இது, ஒரு மனிதராக நீங்கள் செய்யக்கூடாத ஒரு விடயம் என நான் நினைக்கிறேன்.

  பல நூற்றுக் கணக்கான இராணுவத் தலைவர்கள் இருக்கையில் இவர்தான் உங்களைத் தெரிவு செய்தார்,  பாதுகாப்பு அமைச்சராகவும் இராணுவத் தளபதியாகவும் உங்களை நியமனம் செய்தார்,  உங்களது தரத்தை உயர்த்தி உங்கள் மீது நம்பிக்கையும் வைத்தார்,  அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதாகவும் சட்டத்தையும் யாப்பையும் மதித்து நடப்பதாகவும் நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்தீர்கள்.

  இந்த அனைத்திற்கும் நீங்கள் மாறு செய்து விட்டீர்கள்,  சத்தியத்தை முறித்து விட்டீர்கள்,  அரசுக்கு துரோகமிழைத்து விட்டீர்கள், அல்லாஹ்தஆலா கூறுகிறான் " நீங்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்,  சத்தியங்களை முறிக்காதீர்கள்,  உங்களுக்குப் பொறுப்பாக நீங்கள் அல்லாஹ்வையே வைத்திருந்தீர்கள்,  நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிவான் ( நஹ்ல் - 91)

நீங்கள் ஜனாதிபதியை பதவி நக்கம் செய்துவிட்டீர்கள்,  அவரைக் கைதுசெய்து மறைத்து வைத்து விட்டீர்கள்,  பின்னர், உங்கள் இராணுவத்தில் சிலரை ஒன்றுகூட்டி, அவர் பற்றி பிழை சொல்லத் தொடங்கினீர்கள்,  அவர் எந்தவகையிலும் சம்பந்தமேயில்லாத குற்றச் சாட்டுகளை அவர் மீது சுமத்தினீர்கள்.

Saturday, July 20, 2013

ரமழானில் கணவனும் மனைவியும்

 - மூன்று ஆலோசணைகள் -
முதலாவது ஆலோசணை :

இபாதத்களில் இருவரும் இணைந்து ஈடுபடுங்கள்,  அதிலும் குறிப்பாக இரவுத் தொழுகையை இருவரும் இணைந்து நிறைவேற்றுங்கள், தினமும் குறைந்தது இரண்டு ரக்அத்களேனும் தொழுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா?  கணவன் மனைவியரிடையே பிணைப்பையும் நெருக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதில் இபாதத்களைப் போல் வேறு எந்த செயலும் பங்களிக்க முடியாது.

அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான் : "உங்களது மனைவியரையும் தொழுமாறு கட்டளையிடுங்கள்,  இந்த விடயத்தில் மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள்" ( தாஹா – 132) என்கிறான்.

இந்த வசனத்தில் வீட்டினுள்ளே இபாதத் சூழல் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். இதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?  வீட்டினுள்ளே ஆன்மீக சூழல் மேலோங்கியிருத்தல் என்பது,  குடும்ப உறவு பலமடைவதற்கான ஒரு முக்கிய காரணியாகும்.

Tuesday, July 16, 2013

சௌகரியமான எல்லையிலிருந்து விடுபடல் - Comfort zone -


ரமழான் மாதம் எங்களை வந்தடைந்திருக்கிறது. எத்தனையோ பல செய்திகளைச் சுமந்து வந்திருக்கிறது. அந்த செய்திகளில் ஒன்றை உங்களுடன் கொஞ்சம் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ரமழான் மாதம் பற்றியும், நோன்பு நோற்றல் பற்றியும் வந்துள்ள அல்-குர்ஆன் வசனங்கள்,  ஹதீஸ்களில் பார்வையைச் செலுத்துகின்ற பொழுது,  பொதுவாக உள்ளத்துடனான போராட்டத்திற்கே முக்கியத்துவம் தருவதைக் காணலாம். அதாவது,  உள்ளத்தை அசைத்து,  குளுக்கி,  கழுவி,  துடைத்து,  தட்டி,  நசுக்கி,  பழுதுபார்க்கும் ஒரு வேலை முக்கிய நோக்கமாகக் கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம்.

அல்-குர்ஆன் தக்வாவை வரவழைப்பது பற்றிப் பேசுகிறது. ஒரு ஹதீஸ் மனிதனது இச்சையைக் கட்டுப்படுத்துவது பற்றிப் பேசுகிறது. இந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் உணவும் பாணமும் உடல் உறவும் பகல் பொழுதுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன, குறைவான தூக்கமே வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகமான இபாதத்கள் தூண்டுதல் அளிக்கப்பட்டுள்ளன.

உள்ளத்திற்கு இங்கு ஒரு வன்மையான பயிற்சி அளிக்கப்படுகிறது. தான் விரும்புகின்ற விடயங்கள் தடை செய்யப்படுகின்றன. விரும்பாத விடயங்களை வலிந்து செய்ய வேண்டி ஏற்படுகிறது. இதுதான் ஒரு மனிதனது சௌகரியமான எல்லைக்கு – Comfort zone - சவால் விடுக்கின்றது.

சௌகரியமான எல்லைக்குள் வாழுதல் என்பது,  இன்று மனித நடத்தை குறித்துப் பேசப்படுகின்ற ஒரு முக்கிய பிரச்சினையாகும். முகாமைத்துவ கலையும், தர்பிய்யத் கலையும் இதனை வெகுவாகப் பேசியிருக்கின்றன. ஒரு நிறுவனத்திலோ அல்லது எந்த இடத்திலோ இந்த சௌகரியமான எல்லையை தனக்கு சிருஷ்டித்துக் கொள்கின்ற ஒருவர்,  மாற்றங்களுக்குச் செல்ல மாட்டார்,  முன்னேற்றத்தில் அக்கறை கொள்ள மாட்டார்,  புதியவைகளை விரும்ப மாட்டார்,  சுயநலத்தை முற்படுத்துவார். மொத்தத்தில் அந்த நிறுவனத்தின் அல்லது அந்தப் பணியின் தோல்விக்குக் காரணமாக இருப்பார்.

இத்தகைய ஒரு மனித நடத்தையை சீர்செய்வதற்கான சிறந்த மருந்து,  உள்ளத்திற்கு வழங்கப்படுகின்ற சற்று வன்மையான தர்பிய்யத்தாகும்.

இஸ்லாம் இந்த தர்பியத்தை வருடம் தோறும் ஒரு மாத காலத்திற்கு கட்டாயமான ஒரு பயிற்சி நெறியாக முஸ்லிம் உம்மத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ரமழான் மாதத்தின் சாதாரணமான வாழ்வொழுங்கைப் பாருங்கள்,  உணவு நேரசூசி மாறுகிறது,  உறங்கும் நேரசூசி மாறுகிறது,  ஏன்? மலசலம் கழிக்கும் நேரசூசி கூட மாறுகிறது,  இந்த மாற்றம் மனிதனில் நிர்பந்தமாய் ஏற்படுத்தப்படுகிறது. அவனை அவனது சௌகரியமான எல்லையில் இருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறது. இது ரமழான் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் வழங்குகின்ற ஒரு உன்னதமான தர்பிய்யத்,  அதனால்தான்,  முஸ்லிம் உம்மத் என்றும் மாற்றமுறும் உம்மத்தாகவும்,  முன்னேற்றமடையும் உம்மத்தாகவும்,  புதுமைகளைக் காணும் உம்மத்தாகவும், சுயநலமற்ற உம்மத்தாகவும் இருக்கின்றது.

இந்த வருட ரமழானை சௌகரியமான எல்லையில் – Comfort zone -  வாழுதல் என்ற தவறிலிருந்து எம்மை மாற்றிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வோம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

Sunday, July 7, 2013

ரமழானும் குடும்பமும்


ரமழான் நன்மைகளுக்குரிய மாதம், பாவமன்னிப்புக்குரிய மாதம், மாற்றத்திற்குரிய மாதம், ரமழானின் இந்த அனைத்துப் பயன்களும் தனிமனித வடிவிலும், குடும்ப வடிவிலும், சமூக வடிவிலும் பெறப்பட முடியுமானவையே. நபியவர்களது வாழ்வில் இந்த எல்லா வடிவங்களுக்கும் வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் இன்றைய அமர்வில் குடும்ப வடிவில் ரமழானின் பயன்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான சில கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

அல்லாஹ்தஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான் ஈமான் கொண்டவர்களே, மனிதர்களும் கற்களும் எரிபொருட்களாய் இருக்கின்ற நரக நெருப்பிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” - தஹ்ரீம் – 6- என்கிறான். மற்றோர் இடத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு தொழுமாறு கட்டளையிடுங்கள். இந்த விடயத்தில் மிகுந்த பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள்” -தாஹா 132- என்கிறான்

ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகிறார்கள் ரமழானின் இறுதிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் நபியவர்கள் இரவுப் பொழுதை இபாதத்களில் கழிப்பார்கள். தனது குடும்பத்தினரையும் அதற்காக எழுப்பி விடுவார்கள். இபாதத்களில் மிகவும் சீரியஸாக முனைப்போடு ஈடுபடுவார்கள்” –முஸ்லிம்-

மேலே கூறப்பட்ட இரண்டு அல்குர்ஆன் வசனங்களும் ரமழான் காலத்தில் மாத்திரமன்றி, பொதுவாக எல்லாக் காலங்களிலும் குடும்பத்தின் மீதான கவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பில் பேசுகின்றன. ஒருவன் தனக்குத் தானே பொறுப்பானவன். அவனுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பது போல், தனது குடும்பத்திற்கும் அவன் பொறுப்பானவன் என்பதையும், அந்தப் பொறுப்பு மிகுந்த பொறுமையுடன் சுமக்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் இவ்வசனங்கள் வலியுறுத்துகின்றன.

அந்தக் குடும்பப் பொறுப்பை, குறிப்பாக ரமழான் காலத்தில் நபியவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாகவே மேற்கூறப்பட்ட ஹதீஸ் காணப்படுகின்றது.

குடும்பம் ஒரு பொறுப்பு என்பதை வலியுறுத்தும் மற்றொரு ஹதீஸைப் பாருங்கள். - நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் தனது குடும்பத்திற்குப் பொறுப்பானவன். ஒரு பெண் தனது வீட்டிற்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்பானவள். இந்தப் பொறுப்புக்கள் பற்றி அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்- புஹாரி, முஸ்லிம்

மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் ஒரு உண்மையைச் சொல்கின்றன. ரமழானை நாம் தனிமனிதர்களாகப் பயன்படுத்துகின்றோம். சமூகமாகவும் பயன்படுத்துகின்றோம். அதேபோல் அதனைக் குடும்பமாகவும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு குடும்பத்தின் மீதான பொறுப்பும் கடமையுமாகும்.

அடுத்து, குடும்பம் என்பது தனியே கணவன்-மனைவி, பிள்ளைகள் என்ற எல்லையை மாத்திரம் குறித்து நிற்க மாட்டாது. மாற்றமாக பெற்றோர், கணவனின் குடும்பத்தினர், மனைவியின் குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள் என்ற விரிந்த வட்டத்தையே குறித்து நிற்கின்றது. மற்றொரு வகையில் கூறினால், ஒரு குடும்பத்தின் தொடர்புகளும் உறவுகளும் கணவன், மனைவி, பிள்ளைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. மாற்றமாக மேற்கூறப்பட்ட அனைத்து உறவுகளுடனும் அவர்கள் அன்றாடம் தொடர்பு கொள்கிறார்கள். குடும்ப வாழ்க்கை இந்த அனைத்து உறவுகளுடனும் இணைந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரமழான் காலத்தில் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற ஒரு குடும்பம், இந்த அனைத்துத் தொடர்புகளையும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் ரமழானைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒரு குடும்பம் திட்டமிடுகின்ற போது, அங்கு வீட்டின் புறத்தோற்றம், கணவன்-மனைவி, பிள்ளைகள், பிள்ளைகளது நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் போன்ற எல்லாப் பக்கங்களும் அந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவது மிகவும் பொறுத்தமானதாகும். ஏனெனில், இவற்றைத் தவிர்த்து, ஒரு குடும்ப வாழ்க்கை காணப்படுவது சிரமமானது.

அடுத்து, ரமழான் மாதத்தில் செய்யப்பட வேண்டிய அமல்கள் தொடர்பில், நோக்கும்போது பொதுவாக வலியுறுத்தப்படும் விடயம் என்னவெனின், ரமழான் காலத்தில் எல்லாவிதமான செயற்பாடுகளுக்கும் பன்மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன என்பதாகும். இந்தக் கருத்தைத்தான் கீழ்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. ஸல்மானுல் பாரிஸி றழி- அவர்கள் கூறுகிறார்கள். ஷஃபான் மாதத்தின் இறுதி நாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் இவ்வாறு உரையாற்றினார்கள் – மக்களே, மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பரகத் பொறுந்திய ஒரு மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகின்றது. இதன் பகல் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும். இதில் எவர் ஒரு நற்காரியத்தைச் செய்கிறாரோ, அவர் ஏனைய நாட்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியதைப் போன்றதாகும். இது பொறுமையின் மாதம். பொறுமைக்குரிய கூலி சுவர்க்கமாகும். இது துயர் துடைக்கும் மாதம். இது ஒரு முஃமினுடைய ரிஸ்க் அதிகரிக்கப்படும் மாதம். இதில் ஒருவருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் அந்த செயல் அவருக்கான பாவ மன்னிப்பாகவும், நரக விடுதலையாகவும் காணப்படும். இவருக்கும் நோன்பு நோற்றவரைப் போன்ற கூலி கிடைக்கும். அதேவேளை நோன்பாளியின் கூலியில் எந்தக் குறைபாடும் ஏற்பட மாட்டாது…-இப்னு குஸைமா-

மேற்கூறப்பட்ட ஹதீஸ் வலியுறுத்தும் சில உண்மைகளைப் பாருங்கள். முதலில் ரமழான் மாதம் வருமுன்னரே நபியவர்கள் அதனை வரவேற்கும் மானசீகத் தயார் நிலையை ஸஹாபாக்களில் தோற்றுவித்தார்கள். இரண்டாவது, எந்த நற்செயலுக்கும் சாதாரண நாட்களில் அதனை செய்வதை விடவும் எழுபது மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, ரமழான் காலத்தில் ஒரு மனிதனது ஒவ்வொரு அசைவுக்கும் நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. இது வாழ்வின் எல்லாப் பகுதிகளுடனும் சம்பந்தப்பட்டதாகும்.

மூன்றாவது, இது பிறர் துயர் துடைக்கும் மாதம் என்கிறது. அடுத்த மனிதர்களது தேவைகள், கஷ்டங்களை அறிந்து, அவற்றிற்கு பரிகாரம் தேடுதல் இந்த மாதத்தின் மிக முக்கிய நற்செயல்களில் ஒன்று மாத்திரமன்றி, இந்த மாதத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றுமாகும்.

நான்காவதாக, நோன்பு நோற்றல், இரவில் நின்று வணங்குதல், லைலதுல் கத்ர் இரவைப் பயன்படுத்துதல், பொறுமையைக் கடைபிடித்தல், நோன்பு திறக்க உதவி செய்தல் போன்ற பல நற்செயல்களை உதாரணமாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அத்துடன். இவற்றின் விளைவுகளாக பரகத் ஏற்படுதல், சுவர்க்கம் கிடைத்தல், பாவமன்னிப்புக் கிடைத்தல், நரக விடுதலை கிடைத்தல், கூலி பல மடங்காகக் கிடைத்தல் என பல்வகைப் பயன்கள் விளைவுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ரமழானில் மேற்கொள்ளப்படும் நற்செயல்கள் குறித்து பொதுவாக இமாம்கள் முன்வைக்கும் ஒரு கருத்தை இங்கு சற்று ஞாபகப்படுத்திச் செல்வது பொறுத்தம் என நினைக்கிறேன்.

ரமழானில் நேரடியான இபாதத்களில் ஈடுபடுவது சிறந்ததா? அல்லது பொதுவான சமூக. தஃவா பணிகளில் ஈடுபடுவது சிறந்ததா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் இமாம்கள் அந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றனர். அதாவது ரமழானில் பொதுவாக எல்லாவிதமான நற்செயல்களும் வரவேற்கத்தக்கவையே. நிச்சயமாக அவற்றிற்கு ஏனைய நாட்களை விடவும் பல மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், குடும்ப உறவுகள், கல்விப்பணி, தஃவாப் பணி, அரசியல் பணி, சமூகப் பணிகள் என எந்தவகையான செயலாக இருப்பினும் அவற்றிற்கு ரமழானில் விஷேட நன்மைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றில் மிகச் சிறந்தது எது எனின், நிச்சயமாக நேரடியான வணக்க வழிபாடுகளாகும். நபியவர்களது வாழ்விலும் சரி, பின்னர் ஸஹாபாக்களுடைய வாழ்விலும் சரி, தொடர்ந்த எல்லா ஸாலிஹான மனிதர்களது வாழ்விலும் சரி இந்த உண்மையை அவதானிக்கலாம். சில இமாம்கள் தமது ஹதீஸ் மஜ்லிஸ்களையும் பிக்ஹ் மஜ்லிஸ்களையும் இக்காலத்தில் நிறுத்தி வைத்துவிட்டு இபாதத்களுக்காக நேரம் ஒதுக்கியமையைக் காணலாம்.

அந்தவகையில் ரமழானில் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற வேண்டியதும், அதிக நேரங்கள் ஒதுக்கப்பட வேண்டியதும் நேரடியான இபாதத்களாகும். அதேநேரம் ஏனைய நற்செயல்களையும் வழமைபோல் செய்யலாம். ஏனெனில், நபியவர்களின் வழிகாட்டலில் பல மடங்கு கூலியை எல்லா நற்செயல்களும் பெற்றுத்தரும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறப்பட்ட பின்புலத்துடன் ரமழான் மாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த நினைக்கின்ற ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில், குடும்பம் என்ற விரிந்த பரப்பு அவர்களது கவனத்தில் இருக்க வேண்டும் என்பது போல், ரமழானுக்கான செயற்பாடுகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டியவை எவை என்பதும் அவர்களது கவனத்தில் காணப்பட வேண்டியதாகும்.

அந்தவகையில் ஒரு குடும்பம் ரமழானில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்த சில ஆலோசனைகள் கீழே வழங்கப்படுகின்றன.

1.        ரமழான் வருவதற்கு முன்னரே உங்கள் வீட்டை அதற்காய் தயார்படுத்துங்கள். வீட்டின் புறச்சுத்தம் அகச் சுத்தம் இரண்டிலும் கவனம் செலுத்துங்கள். வீட்டின் உற்புற ஏற்பாட்டை மீள ஒழுங்குபடுத்துவது கூட தவறில்லை. வீட்டில் ஒரு விழாக்கோலம் தென்படுவது, குடும்பத்தினர் மத்தியில் ரமழானின் வருகை பற்றிய சார்பு மனநிலையை ஏற்படுத்த உதவும்.

2.         குடும்பத்தினர் அனைவரையும் இணைத்து ஒரு அவசரக் கூட்டத்தை நடாத்துங்கள். ரமழான் வருகிறது. அதற்காக செய்யப்படவேண்டியவை என்ன என்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள். ஏன்? ஒரு திட்டத்தையே தயாரித்துக்கொள்ளுங்கள். இதுவும் உற்சாகத்திற்கான ஒரு நல்ல வழிதான்.

3.         குடும்பத்தில் ஒருவரைப் பயன்படுத்தியோ அல்லது யாரேனும் ஒரு பொறுத்தமான வளவாளரைப் பயன்படுத்தியோ ரமழானின் சிறப்புக்கள், சட்டங்களைப் பற்றி, குடும்பத்தினர்க்காக ஒரு பயான் நிகழ்ச்சியை நடாத்துங்கள். இந்த நிகழ்வில் உங்கள் அயலவர்கள், உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொள்ளலாம்.

4.         வீட்டின் உற்புறத் தோற்றத்தில் ரமழான் களையை ஏற்படுத்துங்கள். ரமழானை ஞாபகப்படுத்தும் வாசகங்கள், துஆக்கள் போன்றன வீட்டுச் சுவர்களை அழங்கரிக்கலாம். கிராஅத்கள், பாடல்கள் என்பன வீட்டுக் கணனிகளில் ஒலித்துக் கொண்டிருக்கலாம்.

5.         குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும், ஒரு வீட்டு மஜ்லிஸை நாளாந்தம், அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அல்லது குறைந்தபட்சம் வாராந்தம் அமைத்துக் கொள்ளுங்கள். அதிலே எல்லோரும் இணைந்து அல்குர்ஆனை ஓதவும், ரமழானின் சிறப்புக்களையும் சட்டங்களையும் கற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்வில் பிள்ளைகளுக்கான இடம் மிகவும் முக்கியமானது. அவர்களது தரத்திற்கு ஏற்ப, சில பாடங்களை நடாத்தவும், கதைகள் சம்பவங்களைச் சொல்லவும் அவர்கள் பொறுப்பளிக்கப்படல் வேண்டும். வீட்டில் மனைவியோ அல்லது வளர்ந்த ஒரு பிள்ளையோ சபைக்குத் தலைமை தாங்கலாம்.

6.         மேற்சொன்ன அதே ஒழுங்கிலோ அல்லது வேறுவடிவிலோ, வீட்டில் சிறிய பிள்ளைகளுக்கு கதை சொல்லும் நேரம் ஒன்று ஒதுக்கப்படலாம். இதில் அயலவர்களின் பிள்ளைகளும் பங்கு கொள்ளலாம். வீட்டில் வளர்ந்த ஒருவர், அல்லது ஒரு முதியவர், அல்லது பொறுத்தம் எனக் கருதும் எவரும் இதனை நடாத்தி வைக்கலாம். நபிமார்களது வரலாறுகள், ஸஹாபாக்களது கதைகள், வரலாற்று நிகழ்வுகள் என்பன இங்கு இடம்பெறலாம்.

7.         ரமழானில் தொலைக்காட்சியை தவிர்ந்து கொள்வது நல்லதுதான். ஆனால் பார்த்தல் ஊடாக ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும் சந்தர்ப்பத்தையும் இதனால் தடை செய்து விடக்கூடாது. எனவே, தொலைக்காட்சிக்குப் பதிலாக சீ டீ க்கள் மூலமோ வேறுவகையிலோ பயனுள்ள விடயங்களை பிள்ளைகள் பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கப்படல் வேண்டும். வரலாற்றுக் கார்டூன்கள், கல்வி நிகழ்ச்சிகள் போன்றன தற்பொழுது சந்தையில் நிறையவே கிடைக்கின்றன. பார்த்தல் மட்டுமே பிள்ளைகளது வேலையாக அமைந்துவிடாமல் பெற்றோர் கவனமாக இருத்தல் வேண்டும்.

8.         அல்குர்ஆன் ஓதுதல், மனனம், ஹதீஸ், துஆக்கள் மனனம் போன்ற பல விடயங்களில் வீட்டுக்குள்ளே போட்டி நிகழ்ச்சிகளை அறிவிப்புச் செய்யுங்கள். வெற்றியாளர்களுக்கு நல்ல பரிசில்களை வழங்குங்கள். தோல்வி கண்டவர்களையும் கவனிக்க மறந்து விடாதீர்கள்.

9.         உங்கள் சிறிய பிள்ளைகளை நோன்பு கால எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளச் செய்யுங்கள். ஸஹர் நேரம், நோன்பு திறக்கும் நேரம் என்பன அவர்கள் நோன்பு நோற்கவில்லை என்பதற்காக விலகியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அல்ல, அவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

10.        உங்கள் சிறிய பிள்ளைகளை கொஞ்சம் கொஞ்சமாக நோன்பு நோற்கப் பழக்குங்கள். முதலில் காலை 10 மணி வரை, அடுத்து லுஹர் வரை பின்னர் அஸர் வரை இறுதியாக முழு நோன்பையும் நோற்கப் பழக்கலாம். அவர்கள் முழுமையான நோன்பு நோற்ற நாளைக் கொண்டாடுங்கள். குடும்பத்தினர் எல்லோரும் ஒரு சுற்றுலாச் சென்று நோன்பு திறக்கலாம். அல்லது இரவுணவை ஒரு உயர்தர உணவகத்தில் பெறலாம். அல்லது பிள்ளையின் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து வீட்டில் ஒரு இப்தார் செய்யலாம்.

11.        பொதுவாக வீடுகளிலும், பள்ளிவாயல்களிலும் வளர்ந்தவர்களுக்குத்தான் இப்தார் செய்வார்கள். நீங்கள் சிறிய பிள்ளைகளுக்கு மாத்திரம் ஒர் இப்தார் நிகழ்ச்சி செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் அதில் முக்கியம். அயலவர்களின் பிள்ளைகள், உறவினர்களின் பிள்ளைகள் எல்லோரையும் பங்கு கொள்ளச் செய்யுங்கள். நோன்பு நோற்றவர் நோக்காதவர் என்று வேறுபடுத்தாதீர்கள். அழைப்பாளர் பட்டியல் தயாரித்தல், அழைப்பை மேற்கொள்ளல் அனைத்தையும் பிள்ளைகளே மேற்கொள்ளலாம். மாத்திரமல்ல இப்தார் உணவு வகைகள், நிகழ்ச்சிகளைக் கூட அவர்களே தீர்மானித்து செய்ய சந்தர்ப்பமளியுங்கள்.

12.        குடும்பத்தில் ஆண்கள் தொழுகைகளை முடிந்தவரை பள்ளிவாயலிலேயே மேற்கொள்ளுங்கள். பெண்கள் வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுங்கள். தொழுகையின் பின்னர் உரிய துஆக்களை திக்ர்களை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். தொழுகையின் பின்னர் ஒரு சிறிய காதிராவை - உபதேசம் - அமைத்துக் கொள்வது சிறந்தது. சுன்னத்தான தொழுகைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற வைத்தல் சிறந்தது. ஆண்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களும் இந்த கூட்டான இபாதத்தில் பங்கு கொள்ளலாம்.

13.        தராவீஹ் தொழுகையை பள்ளிவாயலில் நிறைவேற்றுவது நல்லது. குடும்பத்தினர் இணைந்து பள்ளிக்குச் சென்று நிறைவேற்றி விட்டு வருவது ஒரு நல்ல மாறுதலாக இருக்கும். இயலாதபோது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றுவது மிகவும் சிறந்தது. இதிலே உறவினர்களும் அயலவர்களும் இணைந்து கொள்வார்கள் எனின், இங்கும் சிறிய உரைகளும் உபதேசங்களும் இடம்பெறலாம்.

14.        ஸஹர் வேளையில் குடும்பத்துடன் குறைந்தபட்சம் இரண்டு ரக்அத்துக்கள் ஏனும் ஜமாஅத்துடன் தொழுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் பங்கு கொள்ளல் இதில் முக்கியமானது. ஆனால் நிர்ப்பந்தித்து வற்புறுத்தி ஈடுபட வைப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

15.        ஸதகா ரமழானில் ஒரு உயர்ந்த வணக்கமாகும். நபியவர்கள் வீசுகின்ற காற்றை விடவும் வேகமாய் ஸதகா செய்துள்ளார்கள். ரமழானின் ஒவ்வொரு தினமும் கழிகின்றபொழுது ஸதகா என்ற இபாதத்தும் அன்றைய நாளில் ஒரு முக்கிய இபாதத்தாக அமைவதில் அவதானமாக இருங்கள். தினமும் குறைந்தது ஒருவரையேனும் உங்களுடன் நோன்பு திறக்க இணைத்துக் கொள்வது பற்றி சிந்திக்கலாம். இதுவே நீங்கள் ஒரே மாதத்தில் அறுபது நோன்புகளை நோற்ற நன்மையைப் பெற்றுத் தரும். நோன்பு கால உணவுகளில் அயலவருக்கான பங்கை மறந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் பொறுப்பளித்தால் உற்சாகத்துடன் அவர்கள் விநியோகித்துவிட்டு வருவார்கள்.

16.        வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு உண்டியலை வைத்து தினமும் இயலுமான ஒரு தொகையை சேமித்து வரலாம். ரமழானின் இறுதியில் ஒரு ஏழைக்குரிய பெருநாள் ஆடையாகவும் அது மாறலாம். அல்லது பெருநாள்தின கொண்டாட்டத்திற்கே அது உதவலாம்.

17.        குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் ஏதாவது ஒரு வீட்டை தரிசிக்கச் செல்லுங்கள். அது அயலவராக அல்லது உறவினராக அல்லது நண்பராக இருக்கலாம். ஒரு தடவையில் ஒரு வீடு மட்டும் என்று அமைத்துக் கொள்வது இந்த நடைமுறையை தொடர்ந்தும் செய்ய உதவும். இது இரவு நேரங்களில் அமைதல் சிறந்தது. ஆனால் பள்ளிவாயல் இபாத்கள் இதனால் பாதிப்புறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

18.        முடிந்தவரை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குடும்பத்துடன் ஒன்றாய் அமைவது சிறந்தது. வீட்டில் எல்லோரும் அமர்ந்து துஆக்களைக் கேட்டு, திக்ர்களில் ஈடுபட்டு நோன்பு திறக்கலாம். கணவன்மர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். தொழில்,  தஃவா காரணங்கள் குடும்பத்துடனான இந்த அமர்வின் முக்கியத்துவத்தை மறக்கடிக்காதிருக்கட்டும்.

19.        இறுதிப்பத்து என்பது ரமழானின் மிக விஷேடமான காலப்பகுதி. ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு அதில் இருக்கிறது. அதனால்தான் இஃதிகாப் எனும் அமல் விஷேடமாக இந்தக் காலப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பத்து நாட்களையும் குடும்பத்தவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பேற்படுத்துங்கள். ஆண்கள் குறைந்தபட்சம் இரவு வேலைகளில் பள்ளிவாயலில் இஃதிகாப் இருப்பது நல்லது பெண்கள் வீடுகளில் தமது படுக்கையறைகளில் அல்லது அதற்காய் ஒதுக்கப்பட்ட அறைகளில் இஃதிகாப் இருக்கலாம். வீட்டில் பெண்கள் தொடர்ந்து இஃதிகாப் இருப்பதில் சிரமங்கள் இருக்கும். அப்போது விட்டு, விட்டு இருக்கலாம். இஃதிகாபில் பிள்ளைகளையும் இணைத்துக் கொள்ளுங்கள். அந்த அமலின் சிறப்பை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். லைலதுல் கத்ரைப் பற்றிக் கற்றுக் கொடுங்கள். அல்குர்ஆனை கூட்டாக ஓதுங்கள். கூட்டாக இரவுத் தொழுகையில் ஈடுபடுங்கள். திக்ர்களை அதிகம் செய்யுங்கள். லைலதுல் கத்ரினுடைய விஷேட துஆக்களை எழுதி குறித்த அறைச் சுவர்களில் ஒட்டி விடுங்கள்.

20.        ஸகாதுல் பித்ர் ஒரு கடமையான இபாதத் அதனை தவறாது நிறைவேற்றுங்கள். ஒவ்வொருவருக்காகவும் அந்த கடமை நிறைவேற்றப்படுவதை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்தவரை பணமாகக் கொடுத்து வசதி குறைந்த ஒருவருடைய பாரத்தைக் குறைக்க முயலுங்கள்.

21.        ரமழானில் வீட்டில் மனைவியின் பணிகளில் கணவன்மார் பங்கெடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். சமையலறையிலும் சரி ஏனைய வீட்டு வேலைகளிலும்சரி இருவரும் இணைந்து வேலைகளைச் செய்வதற்கான சந்தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சமயங்களில் கண்டிப்பாக நீங்கள் பல விடயங்களையும் பேசிக் கொள்வீர்கள். சமையல் பணிகள், வீட்டு வேலைகளின் நுட்பங்கள் பற்றி மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது வேலை பற்றிய விடயங்களையும் மனைவியிடம் கூறுங்கள். இது ரமழானில் மனைவிக்கு இபாதத்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பது மாத்திரமன்றி கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வையும் அன்பையும் அதிகரிக்கின்ற விடயமாகவும் இருக்கின்றது.

22.        பெருநாள் தினம் ரமழானுக்கான பரிசு. எனவே புதிய ஆடைகள், விதம்விதமான உணவுகளை குடும்பத்தினர்க்குப் பெற்றுக் கொடுப்பதில் கணவன்மார் தாராளமாய் நடந்து கொள்ளலாம். குறிப்பாக பிள்ளைகளின் பெருநாள் தின சந்தோசம் ஆடைகளிலும் உணவு வகைகளிலும்; அதிகம் தங்கியிருக்கிறது. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி பெற்றோருக்காகவும் ஆடைகள் வாங்குவது நல்லது. இயலுமானால் யாரேனும் ஒரு வசதியற்றவர்க்காகவும் வாங்கிக் கொடுங்கள். பெருநாள் தின சமையலை, உறவினர்கள் அயலவர்கள் என பல வீடுகள் இணைந்து மேற்கொள்வது பற்றி சிந்தியுங்கள். நாம் பெருநாள் கொண்டாடினோம் என்பது அப்போதுதான் மறக்காதிருக்கும்.

இவை சில ஆலோசனைகள் மட்டுமே. சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இவை பயனுள்ளதாய் அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விடை பெறுகிறேன்.