Saturday, July 20, 2013

ரமழானில் கணவனும் மனைவியும்

 - மூன்று ஆலோசணைகள் -
முதலாவது ஆலோசணை :

இபாதத்களில் இருவரும் இணைந்து ஈடுபடுங்கள்,  அதிலும் குறிப்பாக இரவுத் தொழுகையை இருவரும் இணைந்து நிறைவேற்றுங்கள், தினமும் குறைந்தது இரண்டு ரக்அத்களேனும் தொழுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா?  கணவன் மனைவியரிடையே பிணைப்பையும் நெருக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதில் இபாதத்களைப் போல் வேறு எந்த செயலும் பங்களிக்க முடியாது.

அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான் : "உங்களது மனைவியரையும் தொழுமாறு கட்டளையிடுங்கள்,  இந்த விடயத்தில் மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள்" ( தாஹா – 132) என்கிறான்.

இந்த வசனத்தில் வீட்டினுள்ளே இபாதத் சூழல் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். இதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?  வீட்டினுள்ளே ஆன்மீக சூழல் மேலோங்கியிருத்தல் என்பது,  குடும்ப உறவு பலமடைவதற்கான ஒரு முக்கிய காரணியாகும்.



இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் ரமழானில் குறிப்பாக இரவுத் தொழுகையில் தனது மனைவியரை ஈடுபடுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்,  உமர் றழி- அவர்களும் இதே நடை முறையைப் பின்பற்றியதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

ஸுஹைப் இப்னு முகம்மத் என்பவரது மனைவி இரவு வேளையில் தனது கணவனைப் பார்த்து இவ்வாறு கூறுவார் " இரவு கடந்து விட்டது,  நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது,  எம்மிடம் உணவு மிகவும் குறைவாகவே இருக்கிறது,  ஸாலிஹான மனிதர்களின் பயணக் குழுக்கள் முன்னே சென்று விட்டன, நாம் மாத்திரம்தான் இன்னும் எஞ்சியிருக்கிறோம்." என்பார்.

இங்கு இபாதத்கள்  குடும்பமாக மேற்கொள்ளப்படுகின்றன,  ஏனெனில் இவை அவர்களை அல்லாஹ்வுடன் நெருக்கமாக்குகின்ற வேலையை மாத்திரம் செய்யவில்லை, மாற்றமாக அவர்களது குடும்ப உறவையும் பலமடையச் செய்கின்றன என்பதும் காரணமாகும்.

இரண்டாவது ஆலோசணை :

எனது இரண்டாவது ஆலோசணை ரமழானில் மிகவும் விஷேடமானது,  ஏனெனில் அதற்கான புறச்சூழலை அல்லாஹ்வே ஏற்படுத்தித் தந்திருக்கிறான்.

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தன்னிடத்தில் காணப்படுகின்ற தனது துணைக்குப் பிடிக்காத ஒரு பண்பை அடையாளப்படுத்தி இந்த ரமழானில் மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஓன்றுக்கு மேற்பட்ட பண்புகளை மாற்றிக்கொள்வதாக இருப்பினும் தவறில்லை,  குறைந்த பட்சம் ஒரு பண்பையேனும் மாற்றிக் கொண்டால் நிச்சயமாக அது ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்.

ஓவ்வொருவரும் தாமே அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடியும் அல்லது தனது துணையிடம் நேரிடையாகவே "என்னிடத்தில் உங்களுக்குப் பிடிக்காத மூன்று விடயங்களைச் சொல்லுங்கள்" என்று கேளுங்கள். நிச்சயமாக சொல்லுவார்கள்.

ரமழான் ஒரு பயிற்சிக் காலம்,  அதிலும் குறிப்பாக மனித உள்ளத்தை பன்படுத்தி அவனது நடத்தைகள் சீரமைக்கப்படுதல் ஒரு முக்கிய நோக்கமாகக் காணப்படுகிறது.

நபியவர்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் பாருங்கள் " நோன்பு ஒரு பாதுகாப்புக் கருவியாகும்,  நீங்கள் நோன்பு நோற்றால் வீண் பேச்சுக்களில் ஈடுபடாதீர்கள் ,  சத்தங்களை உயர்த்தி சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள்,  உங்களை ஒருவர்  ஏசினால் அல்லது உங்களுடன் சண்டை பிடித்தால் நான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்று சொல்லுங்கள்" (புஹாரி,  முஸ்லிம்) என்றார்கள்.

இந்த ஹதீஸில் மறைமுகமாக வலியுறுத்தப்படும் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது,  அதுதான் நோன்பு என்பது வலிந்து செய்தல் அல்லது வலிந்து தவிர்ந்து கொள்ளுதல் என்ற கருத்து.

வீண்பேச்சும் சர்ச்சையும் சாதாரண சமூக வாழ்வில் அதிகம் நிகழக் கூடிய விடயங்கள்,  அவை ரமழானில் " நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்ற மூல மந்திரத்தைப் பயன்படுத்தி சிரமப்பட்டு தவிர்க்கப்பட வேண்டும்.

அது போல் ஏச்சு, அல்லது சண்டை நேரடியாக என்னை நோக்கி வருகின்ற போது சாதாரண சமூக வாழ்வில் ஒதுங்கிச் செல்வதை விடவும் எதிர்கொள்கின்ற மனோபாங்குதான் மிகைத்துக் காணப்படும். ஆனால் நோன்பு நோற்ற நிலையில் அவை வலிந்து தவிர்க்கப்படவேண்டும்,  என்று இந்த ஹதீஸ் சொல்கிறது.

எனவே ஒரு நடத்தை மாற்றத்திற்காக வலிந்து தொழிற்படும் ஒரு முறைமை ரமழானில் கடைபிடிக்கப்படுவதை அவதானிக்கலாம், மாத்திரமன்றி அது தொடராக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதும் ரமழானில் பொதிந்துள்ள ஒரு உண்மையாகும்,  அதனால்தான் ஒரு மாதகாலம் கட்டாயமாக அனுஷ்டிக்க வேண்டிய ஒரு கடமையாக நோன்பு காணப்படுகிறது.

எனவே கணவன்மார்களே மனைவிமார்களே ,  இது உங்களுக்கான சந்தர்ப்பம். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்வது உங்கள் கைகளில் இருக்கிறது.

உள்ளத்தில் ஆழ்ந்து உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்,  "எனது கணவனுக்கு நான் இவ்வாறு இருப்பது பிடிக்கவில்லை,  எனது மனைவிக்கு நான் இவ்வாறு இருப்பது பிடிக்கவில்லை,  நான் மாற வேண்டும், எனது குடும்ப வாழ்வின் சந்தோசமும் பிடிப்பும் அதில்தான் தங்கியிருக்கிறது. இந்த ரமழானில் நான் இந்தப் குறையிலிருந்து மீண்டு வந்து விடுவேன்" உறுதிகொள்ளுங்கள்.

மூன்றாவது ஆலோசணை :

அண்மையில் ஒரு நாள் தொலைக் காட்சியில் ஒரு உளவியல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் சொல்லப்பட்ட ஒரு செய்தி எனது கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அது சமையல் சம்பந்தப்பட்டது.

சமையல் என்பது ஒரு கடமை என்பதையும் தாண்டி அது ஒரு கலை,  அதில் ஈடுபடுகின்றவர்களது உள்ளத்தை அது மென்மைப்படுத்தும்,  சமையலுக்கு உளக்கட்டுப்பாடும் நிதானமும் சந்தோசமும் அவசியமானது,  அதுதான் சாப்பாட்டின் ருசிக்குக் காரணமாகிறது. மாத்திரமன்றி மனதின் மென்மைத் தன்மைக்கும் அது காரணமாகிறது.

மற்றோர் புறத்தில் ரமழானில் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி ஆளுதல் முக்கிய நோக்கமாகக் காணப்படுகிறது, அதனை விடவும் முக்கியமாக ரமழானில் ஷைத்தான் விலங்கிடப்பட்டுள்ளான்,  மனித மனதில் தப்பெண்ணங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி மனிதர்களுக்கிடையில் மாத்திரமல்ல குறிப்பாக கணவன் மனைவியிடையேயும் பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுவது ஷைத்தானின் மிகப் பெரிய பணியாகும்.

ரமழானில் ஷைத்தான் இல்லை எனவே உள்ளத்தில் பிரச்சினையைத் தோற்றுவிக்கும் காரணி இல்லாது போய்விட்டது,  ரமழான் உள்ளத்தையே மிகையாகப் பயிற்றுவிக்கிறது,  எனவே உளரீதியான ஒரு அடைவைக் கண்டு கொள்வதற்குரிய மிகப் பொறுத்தமான காலம் ரமழான் மாதம்.

சமையல் கலை உள்ளத்தை மென்மைப்படுத்துகிறது,  ரமழானில் எல்லா வடுகளிலும் சமையல் ஒரு பிரதான நிகழ்ச்சி என்பதில் நிச்சயமாக மாற்றுக் கருத்தில்லை,  குறிப்பாக ரமழானில் சமையல் வேலையை மனைவி மாத்திரம் மேற்கொள்வது சற்று சிரமமானது மாத்திரமன்றி அது ஒரு அநியாயமும் கூட,  ஏனெனில் மனைவி ரமழானில் இபாதத்களில் அதிகம் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் குறைந்து விடுகிறது.

ஆகவே கணவன்மார்களே மனைவிமார்களே ரமழானில் உங்களுக்கு ஓர் அறிய சந்தர்ப்பம்,  இருவரும் இணைந்து சமையல் வேலையில் ஈடுபடுங்கள்,  தினமும் ஈடுபடவேண்டும் என்று நான் சொல்லவில்லை,  அதிகமான சந்தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைச் செய்கிறீர்கள்,  நீங்கள் மனைவிக்கு ஒத்துழைக்கிறீர்கள்,  அவள் இபாதத்களில் ஈடுபட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள்,  இந்தக் கோணத்திலும் உங்கள் இருவருக்குமிடையில் நெருக்கமும் அந்நியோன்னியமும் ஏற்படுகிறது.

இதனை விடவும் முக்கியமாக இன்று பல வீடுகளில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினை,  கணவனும் மனைவியும் சாவகாசமாக அமர்ந்து,  மனம் விட்டுப் பேசிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அல்லது அந்த சந்தர்ப்பம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை,  அல்லது அவ்வாறான ஒரு விடயத்தின் தேவையை பலரும் உணராமலேயே இருக்கிறார்கள்.

இதுதான் அன்புப் பரிமாற்றம்,  புரிந்துணர்வு போன்ற விடயங்களை குடும்ப வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி,  அதனை இயந்திரத்தனமான  வரட்சி நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றது.

ரமழானில் சமயலறையில் நீங்கள் இந்த இடைவெளியை நிரப்பிக் கொள்ளலாம் என்பதே எனது ஆலோசணை.

நிச்சயமாக சமைக்கும் போது நீங்கள் பல விடயங்களையும் பேசிக் கொள்வீர்கள்,  அது மனம் விட்டுப் பேசுவதாக அமையட்டும்,  இருவரும் ஒருவரை மற்றவர் நன்கு புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமையட்டும்.
ரமழானின் இறுதியில் நீங்கள் இருவரும் இணைந்து ரமழானுக்கு பிரியாவிடை கொடுக்கும் வார்த்தைகள் " ரமழானே எமது குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்திச் சென்ற,  சந்தோசத்தை விதைத்து விட்டுச் சென்ற, உனக்கு எமது உள்ளார்ந்த நன்றிகள், அடுத்த வருடம் உன்னை தவறாது எதிர்பார்த்து விடைபெறுகிறோம்." என்பதாக அமையட்டும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

1 comment:

  1. " ரமழானே எமது குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்திச் சென்ற, சந்தோசத்தை விதைத்து விட்டுச் சென்ற, உனக்கு எமது உள்ளார்ந்த நன்றிகள், அடுத்த வருடம் உன்னை தவறாது எதிர்பார்த்து விடைபெறுகிறோம்." என்பதாக அமையட்டும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

    ReplyDelete