Thursday, July 25, 2013

அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் கலாநிதி மஹ்மூத் கஸ்லான் அவர்கள் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யிற்கு எழுதிய கடிதம்.

கலாநிதி மஹ்மூத் கஸ்லான் 

பாகம் – 03

(இறுதிப் பகுதி)

தளபதி அவர்களே,

நீங்கள் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்தான் இராணுவப் புரட்சிக்கு உந்தப்பட்டதாக தொடர்ந்தும் மக்களை நம்பவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உண்மையில் அது இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி என்பதை எல்லோரும் அறிவர்.

 அந்த செய்திகள் தற்போது பக்கம் பக்கமாக வெளிவரத் தொடங்கியுள்ளன, உங்களுக்கும் ஜப்ஹதுல் இன்காத் தலைமைகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்புகளில், அரசியல் வாதிகளும் ஊடகவியலாளர்களும் மக்களைத் திரட்டுவதாகவும், அப்போது நீங்கள் இராணுவப் புரட்சியை மேற்கொள்வதாகவும், தீர்மானிக்கப்பட்டுள்ளன.

 நிச்சயமாக இது புதிய விடயமல்ல, முகம்மத் அபூ ஹாமித் கூறியிருந்தார்,  கலாநிதி முர்ஸி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது, அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஒரு இலட்சம் பேரை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் திரட்ட முடியும் எனின் அவர்களை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்று தெரவித்ததாகக் கூறியுள்ளார்,  அத்துடன் அப்போதைய இராணுவத் தளபதி தன்தாவி, மக்களைத் திரட்டும் வேலை வெற்றியளிக்கும் எனின் தான் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்,  பரதாகி, அம்ர் மூஸா, ஸப்பாஹி ஆகியோருடன் நீங்கள் மேற்கொண்ட சந்திப்புகளின் இரகசியத்தை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் காணலாம்.

எகிப்தின் பொருளாதாரம் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தமையும், மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையும்,  அவற்றைச் சீர்செய்வதற்கான எண்ணமும் இல்லாதிருந்தமைதான் மக்களின் கோபத்திற்கு காரணமாயின என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

 இங்கு ஒரு முக்கிய கேள்வி எழுகிறது, எகிப்தின் பொருளாதாரப் பின்னடைவுக்கு உண்மையில் ஜனாதிபதி முகம்மத் முர்ஸிதான் காரணமா? அல்லது அறுபது வருட பொருளாதார சீர்கேட்டின் விளைவுகளா? அதனை சீர்செய்ய இயலாமல் போனது ஏன்?

பிராந்திய சர்வதேச பொருளாதாரத் தடை ஒரு புறம்,  மற்றொரு புறம் தொடரான ஆர்ப்பாட்டங்களும் நாசகார வேலைகளும் மூச்சுவிடுவதற்கே சந்தர்ப்பமளிக்கவில்லை, முர்ஸியை தேல்வியடையச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவற்றின் நோக்கமாக இருந்தது.

 இருந்த போதிலும் பல துறைகளில் சிறந்த பெறுபேறுகளும் அடைவுகளும் இக்காலப்பகுதியில் அடையப் பெற்றுள்ளன என்பதும் உண்மை,  அவை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை,  மற்றவை மட்டுமே தெரிந்தன, இது ஆட்சிக் கவிழ்ப்புக்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தமையன்றி வேறு என்ன?

மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அபிப்ராய வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்லவேண்டும் என, பல தடவைகள் நீங்கள் தலைமைக்கு உபதேசித்ததாகக் கூறியிருந்தீர்கள், ஆரம்பத்தில் ஒரு வாரம் காலக்கெடு வழங்கியதாகவும் பின்னர் இரண்டு நாட்கள் வழங்கியதாகவும் அதன் பின்னரே அடுத்த கட்ட திட்டவரைபொன்றை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

 இந்த செயற்பாடுகள் எல்லாம் "அரசியலில் தலையிடுதல்" அல்ல, என்று நீங்கள் சொல்வதாயின்,  அரசியல் என்றால் என்ன என்பதற்கு,  நீங்கள் தான் விளக்கம் கூறவேண்டும்? இராணுவத்தின் பணி இதுதான் என்று நீங்கள் நினைக்கீறீர்களா?

மற்றொரு புறத்தில்,  எதிர் தரப்பினர்க்கும் உபதேசிக்கவேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும், அதன் பயணத்தை தடை செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது முழு நோக்கமாக இருந்தது,  யாப்பின் அடிப்படையில் உருவான எல்லா நிறுவனங்களையும் வீழ்த்துவதற்காகவே அவர்கள் தொழிற்பட்டார்கள்,  கலந்துரையாடலுக்கோ சமாதானத்திற்கோ விடுக்கப்பட்ட எந்த அழைப்புக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை, இந்த இடத்தில் அநியாயம் இழைக்கப்பட்டவர் யார்? அநியாயம் இழைத்தவர் யார்?

எகிப்தின் உள்ளே நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு போலியான பிரச்சாரம் என்பதில் முழு உலகமும் தனது கவனத்தைக் குவித்திருக்கிறது என்பதையிட்டு எகிப்து மக்கள் திருப்தியோடிருக்கின்றனர், அவர்கள் தாம் இழந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எதனையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள், எந்த அச்சுறுத்தலையும் அவர்கள் பொருற்படுத்த மாட்டார்கள்.

தளபதியே

உங்கள் மக்களை நோக்கி மீண்டு வாருங்கள்.

உங்கள் சதிப்புரட்சியை ரத்துச் செய்யுங்கள்.

உமது இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள், அவன் பாவமன்னிப்பு வழங்கலாம்.

"அநியாயக்காரர்களது செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கிறான் என்று நினைக்கவேண்டாம்"

"அநியாயக்காரர்கள் தாம் போக வேண்டிய இடம் என்ன என்பதை அறிந்து கொள்வார்கள்" அல்குர்ஆன்-

No comments:

Post a Comment