Monday, July 29, 2013

எகிப்திய சூழல் குறித்த ஓர் அவதானம்


கலாநிதி முஹம்மத் முர்ஸிக்கு எதிரான இராணுவப் புரட்சி கடந்த ஜூலை 03ம் திகதி அரங்கேறியபோது, இஃவான்கள் ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள். சட்டபூர்வமான ஜனாதிபதியே எமக்கு வேண்டும். இந்த அநியாயமான புரட்சியை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். இந்த அநியாயக்காரர்களுடன் எவ்விதமான சமரஸமும் கிடையாது. மக்கள் போராட்டம் தொடரும். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்கள்.

இந்த நிலைப்பாட்டை மேலோட்டமாகப் பார்க்கும் போது, அல்-இஃவானுல் முஸ்லிமூன் என்ற இயக்கத்தின் எதிர்காலம் எகிப்தினுள் எவ்வாறு அமையப் போகிறது என்ற ஒரு அச்சம் நிச்சயமாக அதனை நேசிக்கின்ற எவருக்கும் ஏற்படும். ஆரம்பத்தில் எனக்கும் கொஞ்சம் இந்த அச்சம்  ஏற்படத்தான் செய்தது.

இந்த இராணுவப் புரட்சி வெற்றி பெறும் எனின்,  நிச்சயமாக மீண்டும் இஃவான்கள் பழைய நிலைக்குத் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில் அந்தத் தேவை உள்நாட்டு சக்திகளுக்கு மாத்திரமன்றி சர்வதேச சக்திகளுக்கும் இருக்கின்றது. அவர்களை அடக்கி,  மீண்டும் தலையெடுக்க விடாமல் வைத்திருப்பதே அனைவருக்கும் பாதுகாப்பானது.

எனவே,  இவ்வாறானதொரு உறுதியான எதிர் நிலைப்பாடு சரியானதுதானா? தஃவா நலனை மையப்படுத்தி ஒரு இயக்கமாக சிந்திக்கின்ற பொழுது இந்த முடிவு பொறுத்தமானதுதானா? என்ற கேள்வி இயக்கத்திற்கு வெளியில் இருந்து மாத்திரமல்ல, உள்ளிருந்தும் தோன்றக்கூடிய ஒரு கேள்வியாக இருந்தது.

ஏனெனில்,  இஃவான்களது சமூக மாற்ற சிந்தனை மிகவும் பரந்தது. நிச்சயமாக அது அரசாங்கத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நினைக்கிறதேயன்றி,  அதன் அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொள்வது அதன் நோக்கமல்ல. அதே வேளை அரசியல் சீர்திருத்தம் என்பது, இஃவானிய சீர்திருத்த சிந்தனையின் ஒரு பகுதி மாத்திரமேயன்றி,  அரசியல் சீர்திருத்தம்தான் எல்லாம் என்ற நிலை கிடையாது.

எனவே,  அரசியலில் விட்டுக் கொடுப்புகள் செய்வது, நஷ்டமாக அமைய மாட்டாதுதானே. இன்றைய புதிய சூழ்நிலையில் இராணுவத்துடனும் புதிய அரசுடனும் சமாதானமாகச் செல்வது எதிர்கால தஃவாவுக்கு நன்மையானதாக அமையலாமே என்று பலரும் அபிப்பிராயம் தெரிவிக்கவும் இடமிருக்கின்றது. இந்த சிந்திப்பு தவறானதல்ல,  இஃவான்கள் மீது அக்கறையுள்ள ஒரு உள்ளத்தின் கவலைகளின் வெளிப்பாடாக அது அமையும் போது நிச்சயம் அது தவறானதல்ல.

இந்தக் கேள்விகளும் அபிப்பிராயங்களும் ஆரம்பத்தில் என்னைப் பொறுத்தவரையிலும் சற்று தோன்றி மறைந்தன என்பது உண்மை. ஆனாலும் கொஞ்சம் நிதானித்து,  சற்று ஆழ்ந்து நோக்குகின்ற பொழுது,  அதிலும் குறிப்பாக மொத்தமான சர்வதேச இஃவானிய ஆன்மாவின் உணர்வுப் பரிமாற்றத்தை சீரணிக்கின்ற பொழுது,  இஃவான்கள் இந்த நிலைப்பாட்டுக்கு சாதாரணமாக வரவில்லை, இராணுவப் புரட்சிக்கு முன்னரே சூழலைக் கணித்து,  மிகுந்த நிதானத்துடன் பெறப்பட்ட ஒரு நிலைப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இது போன்றதொரு நிலைப்பாடும் போராட்டமும்தான் எகிப்துக்கு இன்று அத்தியவசியமானது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கு இஃவான்களது நிலைப்பாட்டின் நியாயத்தன்மை குறித்து,  ஓர் அடிப்படையின் மீது நின்றே நான் பேச நினைக்கிறேன். இஃவான்களது நிலைப்பாட்டிற்கும் அதன் போக்கிற்கும் அவற்றிற்கு மாற்றமான தனிமனித அரசியல் அவதானங்களுக்குமிடையில் இருக்கின்ற ஒரு அடிப்படை வேறுபாட்டை நாம் பல சமயங்களில் மறந்து போகின்றோம். இது ஒரு தத்துவார்த்த வேறுபாடல்ல,  மிகவும் எளிமையான ஒரு வேறுபாடு,  ஆனால் மிக முக்கியமானது. கடந்த காலங்களில் இந்த உண்மையை சீரணிக்காததன் காரணமாகவோ அல்லது மனமுரண்டாக சீரணிக்க மறுத்தமையாலோ சிலர்,  சில தனிமனித அரசியல் அவதானங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இஃவான்களை விமர்சிக்க முற்பட்டமையை அவதானித்தோம்.

இஃவான்கள் என்போர் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து செயற்படுகின்ற ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். சுமார் தொன்னூறு வருடங்களாக,  உலகின் பல்வேறு பிரதேசங்களிலும்,  பல்வேறு வகையான சவால்களை கையாண்ட நிறைந்த அனுபவம் அதற்கு இருக்கின்றது. இந்த மாபெரும் இயக்கத்தின் அனுபவத்தையும் முதிர்ச்சியையும் நிச்சயமாக ஒரு தனிமனிதனின் அனுபவத்துடன் சமானப்படுத்த முடியாது என்பது மிகவும் தெளிவான விடயம். சமானப்படுத்தல் ஒரு புறமிருக்க அதனை நெருங்கி வருதலும் கூட சாத்தியமற்றது.

அந்தவகையில் நியாயமாக சிந்திக்கின்ற எந்த ஒரு மனிதனும் ஒரு தனிமனித அவதானத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு,  ஒரு மாபெரும் இயக்கத்தின் நிலைப்பாட்டை எடுத்த எடுப்பிலேயே விமர்சிக்க முற்பட மாட்டான். ஏனெனில் ஒரு தனிமனித நிலைப்பாட்டை விடவும் ஒரு இயக்கத்தின் நிலைப்பாடு பாரம் மிகுந்தது என்றவகையில் அந்த நிலைப்பாட்டின் நியாயத்தன்மையை அளந்து பார்த்து,  சற்று நிதானமாக முடிவுக்கு வருவதே பொறுத்தமானதாகும். இந்த நிதானமான பார்வை பல சமயங்களில் பல விமர்சகர்களிடம் இல்லாமல் இருப்பது அவதானத்திற்குரியது.

ஒரு தனிமனித நிலைப்பாட்டை விடவும் ஒரு இயக்கத்தின் நிலைப்பாடு பாரம் மிகுந்ததுஎன்ற என்னுடைய வாசகத்திற்கு ஒரு ஷரீஅத் பின்புலம் இருக்கிறது. இது விளக்கம் சொல்ல அவசியமில்லாத அளவுக்குத் தெளிவானதொரு உண்மை. அல்லாஹ்வின் உதவி ஜமாஅத்திற்கே காணப்படுகிறதுஎன்ற நபியவர்களது வார்த்தைகள் மிகத் தெளிவாக தனிமனிதனாகச் சிந்திப்பதற்கும் ஜமாஅத்தாகச் சிந்திப்பதற்கும் இடையிலான வேறுபாட்டைச் சொல்கின்றது. பிழையான ஒரு விடயத்தின்மீது என்னுடைய உம்மத் உடன்பட மாட்டாதுஎன்ற நபிமொழியும்,  ஒரு ஜமாஅத்தாகப் பெறுகின்ற தீர்மானத்தில் உள்ள பரகத்தைச் சொல்லப் போதுமானதாகும்.

எனவே,  மேற்கண்ட இஃவான்களின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை,  அது ஒரு ஜமாஅத்தின் நிலைப்பாடு. நீண்ட அனுபவங்களின் அடிப்படையில் பெறப்பட்ட ஒரு நிலைப்பாடு. அல்லாஹ்வின் உதவியைப் பெற்ற நிலைப்பாடு,  தவறுகள் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்த நிலைப்பாடு என்ற அடிப்படைகள் அதற்குக் காணப்படுகின்றன என்பது மறுக்கப்படக் கூடாது அல்லது மறக்கப்படக் கூடாது என்று நினைக்கிறேன்.

இதன் மூலம் இஃவான்களது நிலைப்பாட்டுக்கு ஒரு புனிதத்தன்மை இருப்பதாக நான் சொல்ல வரவில்லை,  மாற்றமாக அவர்களது வரலாறும்,  விசாலத் தன்மையும், கூட்டுச் சிந்திப்புக்கு ஷரீஅத் வழங்கியுள்ள பெறுமானமும் அவர்களது நிலைப்பாட்டுக்கு வலுசேர்க்கின்றன. அதற்கு ஒரு பெறுமானத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. அது நிச்சயமாக குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளே அமர்ந்து கொண்டு எழுதப்படும் தனிமனித அரசியல் அவதானங்களைப் போன்றதல்ல.

மேற்சொன்ன அடிப்படையில் நின்று நோக்கும்போது இஃவான்களது நிலைப்பாட்டின் நியாயத் தன்மையை கீழ்வருமாறு முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

1.                   முபாரக்கிற்கு எதிரான புரட்சிக்கு முன்னர் இருந்த இஃவான்களது நிலைக்கும் தற்போது இருக்கின்ற இஃவான்களது நிலைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. முபாரக்கிற்கு எதிரான புரட்சி அவர்களுக்குப் பல விடயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது. அவர்களது உண்மையான பலத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றது.


சாதாரணமாக ஒரு மனிதன் பெரும்பலத்தோடு காணப்படுகின்ற போதும் அதனைப் பிரயோகிக்காத வரை அல்லது அதற்கான வாய்ப்பை எடுத்துக்கொள்ளாத வரை அவனது உண்மையான பலத்தை அவனாலேயே மிகச் சரியாக மதிப்பீடு செய்ய முடியாதிருக்கும். இது போன்றதொரு நிலை எகிப்திய இஃவான்களைப் பொறுத்தவரையிலும் காணப்பட்டிருக்கிறது.


இஃவான்களின் உள்தளங்களில் எகிப்திய இஃவான்கள் குறித்து பேசப்பட்டு வந்த ஒரு அவதானம் இருக்கிறது. அவர்கள் பாரிய ஆள், பௌதீக, பொருளாதார வளங்களைப் பெற்றிருந்த போதிலும் கூட துணிந்து நடவடிக்கை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். மோதல் சூழ்நிலைகளை முடிந்தவரை தவிர்த்தே வருகிறார்கள். அளவுக்கு மீறிய நிதானத்துடனேயே ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைக்கிறார்கள். இந்த நிலையில் மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்திருக்கிறது. பல சபைகளில் இது விவாதிக்கப்பட்டிருக்கின்றது.


அந்த சூழ்நிலையில் இருந்து அவர்களைத் தலைகீழாய் மாற்றிவிட்ட ஒரு நிகழ்வுதான் முபாரக்கிற்கு எதிரான புரட்சி,  அவர்கள் தம்மை அறிந்து கொண்டு விட்டார்கள். மாத்திரமன்றி மக்கள் மத்தியில் அவர்கள் பற்றிய மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. இந்த யதார்த்தம்,  அவர்கள் இன்று இராணுவத்தை எதிர்த்து இந்த உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகியது என்பதை மறுக்க முடியாது. எனவே,  இஃவான்கள் ஒரு வித அசட்டுத் துணிச்சலில் இந்தப் போராட்டத்தில் குதிக்கவில்லை. தமது பலத்தை நன்கு அறிந்து செயற்படுகிறார்கள். அவர்களது உள்ளார்ந்த பலமும் நம்பிக்கையும் பாரியளவு அதிகரித்திருக்கின்றது.


2.                   எகிப்தில் இராணுவ சதிப்புரட்சி நடைபெற்ற ஆரம்ப நாட்களில் டியூனிஷிய நஹ்லா இயக்கத்தின் தலைவர் கலாநிதி ராஷித் அல் கன்னூஷி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். எகிப்தின் யூகோ சாவீஸாக முர்ஸி மாறுவார் என்றார். அதாவது வெனிசூலா ஜனாதிபதியை இராணுவம் பதவி கவிழ்த்த போது,  மக்கள் எழுச்சியால் மீண்டும் அவர் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த நிகழ்வு எகிப்தில் மீட்டப்படும் என்றார்.

இதற்குப் பதிலளித்த சில அரசியல் அவதானிகள் எகிப்தில் இவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்பில்லை என்று மறுத்துரைத்தனர். அவர்களது மறுப்புக்கு மிகப் பிரதானமான காரணம் வெனிசூலாவில் யூகோ சாவீஸுக்கு இராணுவத்திற்கு உள்ளே பலமான ஆதரவு காணப்பட்டது. இராணுவத்திற்குள்ளே தோன்றிய பிளவு,  புரட்சியை மேற்கொண்டவர்களை அதனை வாபஸ் வாங்க வைத்தது, அத்தகைய ஒரு நிலை எகிப்தில் கிடையாது என்றார்கள்.


ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள்,  எகிப்தில் இராணுவத்திற்குள்ளேயும்,  அப்துல் பத்தாஹ் ஸீஸி மேற்கொண்ட இராணுவச் சதிப்புரட்சியை ஆதரிக்காதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும் தொகையானவர்களாகவும்,  மிகுந்த பலத்தோடும் இருக்கிறார்கள் என்ற செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக முன்னால் களப்படையணியின் தளபதி ஸப்வத்அளித்த பேட்டியொன்றில், மிகத் தெளிவாக இராணுவத்தினுள்ளே ஒரு தளம்பல் நிலை காணப்படுவதாகவும், ஸீஸியை பதவி கவிழ்த்து விட்டு,  புரட்சியை இரத்துச் செய்யக்கூடிய சக்தியுள்ள தலைவர்கள் இராணுவத்தினுள்ளே காணப்படுகிறார்கள். அடுத்த கட்டமாக இதுதான் நிகழ முடியுமானது என்று குறிப்பிட்டிருந்தார்.


இவற்றிற்கப்பால்,  உளவுப் பிரிவில் பிரதானமான தலைவர்களில் இருவர் தமது இராஜினாமாவை முன்வைத்ததாகவும் ஸீஸி அதனை ஏற்க மறுத்ததாகவும் மேற்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. அத்துடன்,  இராணுவத்தை அரசியல் மயப்படுத்துவதற்கு எதிரான படைவீரர்கள் என்ற பெயரில் ஒரு பிரிவினர் ஸீஸியின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்து வருவதுடன்,  புரட்சியை இரத்துச் செய்து,  முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலைகளைப் பார்க்கும்போது,  கலாநிதி ராஷித் அல் கன்னூஷியின் எதிர்வு கூறல் வெறும் எழுமாறாகக் கூறப்பட்ட ஒன்றாகத் தோன்றவில்லை. அதேவேளை,  இஃவான்களது நிலைப்பாடும் வெறுமனே உணர்ச்சி உந்துதலால் பெறப்பட்ட ஒன்றாகவோ அல்லது சிலர் விவாதிக்க முற்படுவதுபோல்,  அரசியல் முதிர்ச்சியின்மையால் பெறப்பட்ட ஒரு முடிவாகவோ தோன்றவில்லை. மாற்றமாக கள நிலைமைகளை நன்கு அவதானித்து,  அறிவுபூர்வமாகப் பெறப்பட்ட ஒரு முடிவாகவே தோன்றுகிறது.


3.                   மூன்றாவது நியாயம் மிக முக்கியமானது. கலாநிதி தாரிக் அல் பிஷ்ரி அவர்கள் குறித்துக் காட்டியது போல்,  இன்றைய எகிப்தின் பிரச்சினை: அங்கு ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நீண்ட நெடும் காலமாக சர்வாதிகார அடக்கு முறைக்குள் வாழ்ந்த மக்களுக்கு,  முதல் தடவையாக ஜனநாயக முறையில் தமது ஆட்சியாளரை தெரிவு செய்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் கலாநிதி முஹம்மத் முர்ஸியைத் தெரிவு செய்தார்கள். இன்று அந்த ஜனநாயக சூழலும் சுதந்திரமும் பறிக்கப்பட்டு,  நாடு மீண்டும் முபாரக் யுகத்திற்கு திரும்பிச் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது.

 இந்த அபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் பணிக்காகத்தான் இஃவான்கள் களமிறங்கியிருக்கிறார்கள். எனவே,  இங்கு இஃவான்களது போராட்டம் நீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டம். மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான போராட்டம். நீதி,  சுதந்திரம் என்ற இஸ்லாத்தின் மிக உயர்ந்த பெறுமானங்களை நிலை நாட்டுவதற்கான போராட்டம்.


இது போன்ற ஒரு போராட்டத்தில் நிச்சயமாக சில விலைகள் கொடுக்கப்பட வேண்டும். அது தவிர்க்க முடியாதது. அதனைக் கொடுக்க இஃவான்கள் தயாராக இருக்கிறார்கள். கலாநிதி முர்ஸி அவர்கள் உரத்துச் சொன்ன செய்திகளுள் இது முக்கியமான ஒன்று. மக்களது சுதந்திரத்திற்காக கொடுக்கப்பட வேண்டிய விலை எனது உயிராக இருப்பின்,  நிச்சயம் நான் அதனை வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

இஃவானிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதனுடைய போராட்டம்,  மக்களது சுதந்திரம்,  நீதி என்பவற்றை மையப்படுத்திக் காணப்பட்டிருக்கிறது. எகிப்திய இஃவான்களது வரலாறு இந்த உண்மையை மிகத் தெளிவாகச் சொல்கிறது. அவர்கள் தங்களுக்காக,  தமது இருப்புக்காக அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக என்றைக்கும் போராடியதில்லை.

 ஆட்சியாளர்களை எதிர்த்தல் அவர்களது வழிமுறையல்ல. எப்போது மக்கள் மீதான அநியாயமும் அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ அப்போதுதான் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். இல்லாதபோது அவர்களது அரசியல் செயற்பாடு என்றும் ஜனநாயக வழியில்தான் அமைந்திருக்கிறது. இந்தோனேஸியா,  மலேஸியா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

முபாரக்கை வீழ்த்துவதற்கான போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தபோது, அதில் தமது முழுப் பங்களிப்பையும் இஃவான்கள் ஏன் வழங்கினார்கள்? அந்த நாட்டில் ஜனநாயகமும் சுதந்திரமும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே.

அதுபோல் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் இந்தப் பின்புலத்திலேயே எடுத்தார்கள். ஏனெனில், அன்றைய சூழ்நிலையில் பழைய முபாரக் யுகத்திற்கு தேர்தல் மூலம் மீண்டு செல்வதற்கான ஒரு பாதை மிகத்தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அவர்களுக்கு முன்னால் மிகப்பொறுத்தமான வேறு தெரிவு இருக்கவில்லை.


எனவே,  மிகப் பெரிய அபாயங்கள் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும், இது ஒரு விஷப்பரீட்சை என்றும் தெரிந்து கொண்டுதான் அவர்கள் கலாநிதி முஹம்மத் முர்ஸியை இதற்காகத் தியாகம் செய்ய முன்வந்தார்கள். அவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டபோது,  அவர் குழுங்கிக் குழுங்கி அழுத சம்பவத்தை ஒரு சகோதரர் ஞாபகப்படுத்தியிருந்தார்

. அவரது ஆட்சிக் காலத்திலும்,  அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளை பலர் விமர்சிக்க முற்பட்டாலும் அவரை மற்றொரு சர்வாதிகாரியாக சித்திரிக்க முற்பட்டாலும், அவையனைத்தும் மக்களது சுதந்திரத்தை எவரும் பறித்து விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளாகவே அமைந்தன.

இறுதியாக,  அவரது பதவி கவிழ்ப்பின் ஊடாக மீண்டும் முபாரக் யுகம்,  மிக மோசமான வடிவில் திரும்பி வந்தது. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இன்று வரையும் போராடி வருகிறார்கள்.


இவை சில பின்புலங்கள் மாத்திரமே இவற்றிற்கப்பால் இன்னும் பல நியாயங்கள்  பேசப்பட முடியும். எனினும்,  இவற்றோடு போதுமாக்கிக் கொள்ள நினைக்கிறேன். இஃவான்களது நிலைப்பாடு மிகவும் பொறுத்தமானது,  அவசியமானது என்பதைச் சொல்ல இவை போதுமானதாகும்.

No comments:

Post a Comment