Tuesday, May 7, 2019

தீவிரவாதம். வன்முறை. பயங்கரவாதம்


இன்றைய இலங்கைச் சூழலில் முஸ்லிம்களும் இஸ்லாமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் ஒரு நிலை தோற்றம் பெற்று வருகிறது. தீவிரவாதம்,  வன்முறை மற்றும் பயங்கரவாதம் போன்ற சொற்களால் முஸ்லிம்களும் இஸ்லாமும் குறிவைக்கப்படுகின்றன. இந்நிலை வெறும் புறக்காரணிகளால் மாத்திரம் நிகழ்ந்ததல்ல,  முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் சில அகக் காரணிகளும் இதற்குப் பங்களித்திருக்கின்றன. அந்தவகையில் மேற்சொன்ன மூன்று சொற்கள் குறித்தும் அவை பற்றிய இஸ்லாத்தின் பார்வை குறித்தும் சில தெளிவுகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய தேவை இருக்கிறது. 

அதுபோல்,  இந்த சொற்களுக்குப் பின்னால் இன்று ஒரு அரசியல் இருக்கின்றது. அரசியல் இருக்கின்றது என்பதன் பொருள்,  இந்த சொற்கள் உணர்த்தும் அடிப்படைக் கருத்து ஒன்று இருக்கின்ற பொழுதிலும் இன்றைய உலகின் அரசியல் சூழ்நிலை தனது அரசியல் தேவைகளுக்காக இவற்றிற்குப் பல்வேறு விளக்கங்களை வழங்குகிறது. அதன் மூலம் தனது நிலைப்பாட்டுக்கு மாற்றமான அனைத்தையும் அல்லது தனது எதிரிகள் அனைவரையும் இந்தச் சொற்களின் கீழ் வரையறை செய்யும் அபாயமான ஒரு நிலை காணப்படுகிறது. இந்த அபாயத்திலிருந்து இஸ்லாமும் முஸ்லிம்களும் விடுவிக்கப்படும் வகையில் இவை குறித்த சரியான பார்வையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  அந்தவகையில் இந்தத் தலைப்பைக் கீழ்வரும் கிளைத் தலைப்புக்களின் கீழ் அணுகலாம் என்று நினைக்கிறேன்.

1.            தீவிரவாதம்,  வன்முறை,  பயங்கவாதம் பொருள் விளக்கம்.

2.            தீவிரவாதம்,  வன்முறை,  பயங்கரவாதம் என்பன பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு.

3.            பிற மதங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு.

4.            தீவிரவாதம்,  வன்முறை,  பயங்கரவாதம் என்பன தோன்றுவதற்கான காரணங்கள்.

5.            தீவிரவாத வன்முறை நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புக்கள்.

6.            இஸ்லாத்தின் புனிதங்கள் அவமதிக்கப்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.

தீவிரவாதம்,  வன்முறை,  பயங்கவாதம் பொருள் விளக்கம்

தீவிரவாதம் என்பது அடிப்படையில் நடுநிலை தவறிய போக்கைக் குறித்து நிற்கின்றது. அதாவது,  நடுவில் நிற்பது மிதவாதம். நடுவிலன்றி இரு துருவ நிலைகளில் நிற்பது தீவிரவாதம் எனப்படும். அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் தீவிரவாதம் என்ற கருத்தைக் காட்டக் கூடிய குலுவ்வு,  ததர்ருப்,  தனத்துஃ, தஅம்முக் போன்ற சொற்களை அடிப்படையாக வைத்து நோக்கும் பொழுது, தீவிரவாதம் என்பது மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, வரையறை தாண்டி,  எல்லை மீறி நடந்து கொள்வதைக் குறிக்கிறது. இரண்டாவது,  ஒரு விடயத்தில் கடினப் போக்கைக் கடைபிடிப்பதைக் குறிக்கிறது அல்லது விட்டுக் கொடுக்காமையைக் குறிக்கின்றது. மூன்றாவது,  மற்றமையை அங்கீகரிக்காமையைக் குறிக்கின்றது. இந்த மூன்று பரப்புக்களும் இணைந்ததைத்தான் தீவிரவாதம் என்கிறோம். இது கருத்து ரீதியாகவும் வெளிப்படலாம் செயல் ரீதியாகவும் வெளிப்படலாம். அந்தவகையில் எல்லை மீறல்,  விட்டுக் கொடுக்காமை, பிறவற்றின் இருப்பை ஏற்காமை என்பதை தீவிரவாதம் என்று வரையறை செய்யலாம்.

மேற்சொன்ன இந்த விளக்கம் இஸ்லாத்திற்குள் பல்வேறு கருத்து நிலைப்பாடுகளுக்கு மத்தியில் தோன்றக் கூடிய தீவிரவாத நிலை குறித்தே விளங்கப்படுத்துகிறது. ஆனால் பல்வேறு மதங்களுக்கு மத்தியில் ஒருவன் எடுக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில் தீவிரவாதம் என்று எதனை அடையாளப்படுத்த முடியும்? மற்றொரு வகையில் கூறினால் மதத்தீவிரவாதம் என்பதன் மூலம் நாடப்படுவது எது? இந்த இடத்தில்தான் மேற்கின் பார்வையும் இஸ்லாத்தின் பார்வையும் முக்கியமாக வேறுபடுகிறது. மேற்குலகம் மதப்பன்முகத்தன்மை என்று பேசும் பொழுதும் சரி, மதத்தீவிரவாதம் என்று பேசும் பொழுதும் சரி,  மதத்தினை ஒரு மனித ஆக்கமாக மாத்திரமே நோக்குகிறது. எனவே மதங்கள் அனைத்தும் கடவுளை அடைந்து கொள்வதற்கான வழிகளே, அவையனைத்தும் சரியானவை, அவையனைத்தும் சமமானவை என்கிறது. இதனடிப்படையில் பிறவற்றின் இருப்பை மறுத்தல் மாத்திரமன்றி,  இவற்றில் ஒன்று மாத்திரம் சரியெனக் கொள்ளும் நிலைப்பாடும் அல்லது ஒன்றை மாத்திரம் விட்டுக் கொடுக்காமல் கடைபிடிக்கும் நிலைப்பாடும் கூட மேற்குலகின் பார்வையில் தீவிரவாதமாகவே பார்க்கப்படும். இஸ்லாம் இந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. ஏனெனில் இஸ்லாம் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட மார்க்கம் என்பது அடிப்படை நம்பிக்கை. எனவே இஸ்லாம்தான் சத்தியம் எனக் கொள்வதும் அதனை விட்டுக் கொடுக்காமல் உறுதியுடன் கடைபிடிப்பதும் ஒரு போதும் தீவிரவாதமாகக் கருதப்பட மாட்டாது. மாற்றமாக பிறமதங்களின் இருப்பை மறுதலிக்கும் நிலைப்பாடே இஸ்லாத்தின் பார்வையில் தீவிரவாதமதாகப் பார்க்கப்படும். இஸ்லாம் மதத்தீவிரவாதம் என்பதன் மூலம் இதனையே நாடுகிறது. 
அடுத்து,  வன்முறை என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது : ஒரு நபர் அல்லது குழு அல்லது சமூகம் போன்றவற்றிற்கு எதிராக காயம்,  மரணம்,  உளவியல் தீங்கு,  வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புக்களை உருவாக்கும்படியாக உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும் படியாகவோ உடல் வலிமை மற்றும் அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்.

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் வன்முறையை வரைவிலக்கணப்படுத்தும் பொழுது பின்வருமாறு கூறுகிறார் : வன்முறை என்பது கடினத்தையும் வன்மையையும் பொருத்தமற்ற இடத்தில் அல்லது பொருத்தமற்ற நேரத்தில் அல்லது தேவைக்கு அதிகமாக அல்லது தேவையின்றி அல்லது வரையறைகள் எதுவுமின்றிப் பயன்படுத்துவதைக் குறிக்கும் என்றார்கள்.

மேற்குறிப்பிடப்பட்ட வரைவிலக்கணங்களை நோக்கும் போது, வன்முறை என்பது, தனித்து பௌதீக ரீதியான அல்லது ஆயுத ரீதியான பலத்தைப் பிரயோகித்தல் மாத்திரமன்றி வார்த்தை ஊடாகவும் நடைபெறமுடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்தவகையில் தீவிரவாதம் வார்த்தையிலும் செயலிலும் காணப்பட முடியும் என்பது போல், வன்முறை என்பதும் வார்த்தை மற்றும் செயல் ஆகிய இரண்டு வகையிலும் நிகழ முடியும். ஆனால் இங்கு வன்முறை என்ற சொல் உணர்த்தும் மிக முக்கியமான கருத்து என்னவெனின்,  மென்மையான வழிமுறைகளின் ஊடாகக் கையாள முடியுமான ஒரு விடயத்தை மென்மையான வழியைத் தவிர்த்து வன்மையான வழிமுறை ஊடாக செய்தலே வன்முறை ஆகும். உதாரணமாக ஒரு விடயத்தை, கலந்துரையாடல், ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவுதல் மற்றும் உபதேசித்தல் போன்றவற்றின் மூலம் செய்ய இயலுமாக உள்ள போதும் வன்வழிமுறையைக் கடைபிடித்தலையே வன்முறை என்கிறோம். இந்த வன்முறை குடும்பம், சமூகம், நீதித்துறை,  கல்வி, அரசியல் என மனித வாழ்வின் பல்வேறு பரப்புக்களில் நடைபெற முடியும்.

அதுபோல்,  ஒரு தனிநபர் அல்லது சமூகம் தனக்கு ஏற்படும் தீங்கை தற்காத்துக் கொள்வதற்காக எடுக்கும் நடவடிக்கை வன்முறை என்றழைக்கப்பட மாட்டாது. ஏனெனில் அது தேவையின் நிமித்தம் நடைபெறும் ஒன்றாகும். அதுபோல், அதிகார பீடமொன்று நீதி விசாரணையின் அடிப்படையில் வழங்கும் தண்டனைகளும் வன்முறை என்று அழைக்கப்பட மாட்டாது.

அடுத்து பயங்கரவாதம் என்பதை ராபிததுல் ஆலமில் இஸ்லாமியின் கீழ் இயங்கும் மஜ்மஉல் பிக்ஹில் இஸ்லாமி கீழ்வருமாறு வரையறை செய்கிறது : தனிமனிதர்கள் அல்லது குழுக்கள் அல்லது நாடுகள் மனிதனின் மீது அதாவது மனிதனின் மார்க்கம்,  உயிர்,  அறிவு, சந்ததி,  செல்வம் ஆகியவற்றின் மீது  மேற்கொள்ளும் அத்துமீறலாகும். இது எந்த நியாயமும் இன்றி செய்யப்படுகின்ற அனைத்து வகையான தீங்குகள்,  பயத்தை ஏற்படுத்துதல்,  அச்சுறுத்துதல்,  கொலை செய்தல் அனைத்தையும் உள்ளடக்குகிறது…”.

ஷெய்க் அப்துல்லாஹ் பின் பய்யாஹ் அவர்கள் இதனை வரையறை செய்யும் போது, பயங்கரவாதம் என்பது, அழிவு, நாசம், பயத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்தும் வகையில் நிரபராதிகளைக் கொலை செய்தல், உடமைகளை அழித்தல்,  போதைப் பொருட்களை பரவாலாக்கள் போன்ற வன்செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் குறிக்கும். அதுபோல் தீவிரக் குழுக்கள் சட்டபூர்வமான அரசுக்கு எதிராக, குழப்ப நிலையை ஏற்படுத்துதல், சகஜ வாழ்வை சீர்குழைத்தல், பொதுமக்களைப் பயமுறுத்துதல்,  சட்டபூர்வ அரசை வீழ்த்துதல் போன்றவற்றை அடைந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளும் வன்செயற்பாடுகளைக் குறிக்கும் என்றார்கள்.

மேற்குறிப்பிடப்பட்ட வரைவிளக்கணங்களின் அடிப்படையில் நோக்கும் போது,  பயங்கரவாதம் என்பது, எந்தவிதமான வரையறைகளும் ஒழுக்க வரம்புகளும் நியாயமான நோக்கங்களும் இன்றி பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அநியாயமான அனைத்து வன்முறைகளையும் குறித்து நிற்கின்றது. இதனை தனிமினிதனும் செய்ய முடியும், தீவிரக்குழுக்களும் செய்ய முடியும், ஏன் அரசாங்கங்களும் செய்ய முடியும்.

தீவிரவாதம், வன்முறை, பயங்கவாதம் என்பவற்றிற்கிடையிலான ஒப்பு நோக்கு

தீவிரவாதம்,  வன்முறை மற்றும் பயங்கரவாதம் என்பன ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் உள்ளவையாகும். ஒன்றன் வளர்ச்சிப் படியாக மற்றொன்று உருவாவதைக் காணலாம். தீவிரவாதம் என்பது, சமநிலை தவறிய ஒரு நிலைப்பாட்டைக் கொள்வதும் அதில் விட்டுக் கொடுக்காமையும் பிறவற்றின் இருப்பை ஏற்காமையுமாகும். இதில் பிறவற்றின் இருப்பை ஏற்காமை என்ற கூறுதான் மிகவும் அபாயமான கூறாகும் இந்த இடத்திலிருந்துதான் அது வன்முறையை நோக்கி செல்வதற்கான வழி உருவாகிறது.

கலாநிதி அப்துல் மஜீத் அந்நஜ்ஜார் அவர்கள் குறிப்பிடுவது போல், தீவிரவாதத்திற்குப் பல படித்தரங்கள் உள்ளன. முதலாவது, ஒருவர் தனது கருத்திலோ செயற்பாட்டிலோ நடுநிலை தவறிய ஒரு நிலைப்பாட்டினை தன்னில் மாத்திரம் வைத்திருப்பார், ஆனால் பிறரது நிலைப்பாடுகளை மறுதலிக்க மாட்டார்,  தனது கருத்தே சரியானது பிறரது கருத்துக்கள் பிழையானவை என்று நம்பும் அதேவேளை தனது கருத்து பிழையாகவும் பிறரது கருத்துக்கள் சரியாக அமைய இடம்பாடுள்ளதையும் மறுக்க மாட்டார். இரண்டாவது,  தனது நிலைப்பாடுதான் சரியானது ஏனையவை பிழையானவை என்ற நிலைப்பாட்டில் இருப்பார்,  ஆனால் தனது கருத்தை மக்கள் மன்றத்தில் பரப்பும் வேலையைச் செய்ய மாட்டார். மூன்றாவது,  அவர் தனது நிலைப்பாடுதான் சத்தியமானது என்றும் பிறரது நிலைப்பாடுகள் அசத்தியமானவை என்றும் மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் செய்பவராக இருப்பார். நான்காவது,  தனது நிலைப்பாட்டை அமுலாக்குவதற்காக வன்வழிமுறைகளையும் கையாளுபவராகக் காணப்படுவார். தீவிரவாதம் வன்முறையை நோக்கி இவ்வாறுதான் செல்கிறது.

அதுபோல், வன்முறை என்பது, முறையான வரையறைகளோ சட்டவரம்புகளோ இன்றி வன்நடவடிக்கையில் ஈடுபடுதலைக் குறிக்கும். இது தன்னுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது பிரயோகிக்கப்படும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், பயங்கரவாதம் என்பது, தன்னுடன் சம்பந்தமே இல்லாதவர்கள் மீதும் வன்நடவடிக்கையை மேற்கொள்வதைக் குறிக்கும். இது பிறரை அச்சமூட்டுவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது நோக்கமாக இருக்கும். பொது இடத்தில் குண்டு வைத்தல், விமானங்களைக் கடத்துதல்,  சுற்றுலாப் பயணிகளைக் கொலை செய்தல் போன்றனவெல்லாம் இதில் அடங்கும். இங்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறை இரண்டும் வன்நடவடிக்கையில் ஒற்றுமைப்படுகின்றன, ஆனால் வன்முறை தன்னுடன் சம்பந்தப்பட்டவர்களை குறிவைப்பது, ஆனால் பயங்கரவாதம் தன்னுடன் சம்பந்தப்படாதவர்களையும் குறிவைப்பதாகும். அந்தவகையில் வன்முறையின் ஒரு தீவிரநிலைதான் பயங்கரவாதமாக மாறுகிறது.

தீவிரவாதம், வன்முறை, பயங்கரவாதம் என்பன பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு

இவை குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் பின்வரும் ஆறு அடிப்படைகளில் நின்று புரிந்து கொள்ளலாம்.

முதலாவது, இஸ்லாம் நடுநிலையைப் போதித்தது தீவிரநிலையைத் தடைசெய்தது : அல்குர்ஆன் கூறுகிறது: நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்கின்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உங்களை நடுநிலையான சமூகமாக ஆக்கினோம் (பகரா -143). நபியவர்கள் கூறினார்கள்,  மார்க்கத்தில் எல்லை கடந்து செல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கின்றேன். உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மார்க்கத்தில் எல்லை கடந்து சென்றதனாலேயே அழிந்து விட்டனர், என்றார்கள் (அஹ்மத்,  நஸாஇ).

இரண்டாவது,  இஸ்லாம் பன்முகத்தன்மையை ஏற்று, பிறவற்றின் இருப்பை அங்கீகரிக்கிறது : இஸ்லாம் இனம்,  மதம்,  மொழி பேதங்களை ஏற்கிறது. அதனை புரிந்துணர்விற்கான ஒரு அடிப்படையாகவே கருதுகிறது. அல்குர்ஆன் கூறுகிறது,  வானங்கள் பூமி படைக்கப்பட்டதிலும் உங்களது நிறமும் மொழியும் வேறுபட்டிருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் உள்ளதாகும்,  அறிந்து கொள்பவர்களுக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது என்கிறது (ரூம் - 22).

மூன்றாவது,  இஸ்லாம் அன்பையும் அருளையும் போதிக்கிறது,  வன்முறையைத் தடை செய்கிறது : அருள்,  அன்பு போன்ற கருத்துக்களைத் தரக் கூடிய ரஹ்மா என்ற சொல்லின் பல்வேறு பிரயோகங்கள் அல்குர்ஆனில் முன்னூற்றி நாற்பது (340) தடவைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வாசகத்தில் அருளாளன் அன்புடையவன் என்ற சொற்கள் நூற்றிப் பதிமூன்று (113) தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல் நபியவர்களின் இறுதித் தூது இறக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே உலகத்தாருக்கான அருள் என்கிறது அல்குர்ஆன் உங்களை உலகத்தாருக்கான அருளாகவே அனுப்பிவைத்தோம் (அன்பியா – 107). நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ்தஆலா மிருதுவானவன் அவன் மிருதுவான பண்பையே விரும்புகிறான்,  வன்முறைக்கு வழங்காததை மிருதுவான தன்மைக்கு வழங்குகிறான் என்றார்கள் (முஸ்லிம்). 

நான்காவது,  இஸ்லாம் அமைதியையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துகிறது,  அச்சமூட்டலையும் அழிவையும் தடை செய்கிறது : அல்குர்ஆன் அல்லாஹ்வை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கான நியாயத்தைக் பற்றிக் கூறும் போது,  இந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்குங்கள்,  அவன் அவர்களுக்கு பசியின் போது உணவளித்தவன்,  அச்சத்திலிருந்து பாதுகாப்பளித்தவன் (குறைஷ் – 2, 3) என்கிறது. நபியவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை பயமுறுத்துவது ஹலாலாகாது என்றார்கள் (அஹ்மத்,  அபூதாவூத்). மற்றொரு சமயம் கூறினார்கள் : யார் ஒரு முஸ்லிமை எந்த நியாயமும் இன்றி பயமுறுத்தும் வகையில் பார்க்கிறாரோ அல்லாஹ் மறுமையில் அவனைப் பயமுறுத்துவான் என்றார்கள் (முஸ்லிம்).

ஐந்தாவது,  இஸ்லாம் குழப்பம் விளைவித்தல்,  கிளர்ச்சி செய்தல் போன்றவற்றை தண்டனைக்குரிய குற்றம் என்றது : கலாநிதி அலி கரதாகி அவர்கள் குறிப்பிடுவது போல்,  இன்றைய வன்முறை மற்றும் பயங்கரவாதம் போன்ற குற்றச் செயல்களை,  இஸ்லாம் குறிப்பிடும் அல்ஹிராபா மற்றும் அல்பக்யி போன்ற குற்றங்களுக்கு ஒப்பிட முடியும். அல்ஹிராபா என்பது பொது மக்களை அச்சமூட்டும் வகையில் அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிப்பதாகும். அல்பக்யி என்பது சட்டபூர்வமான அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆயுத வன்முறையைக் குறிக்கும். இந்த இரண்டும் இஸ்லாத்தில் மிகவும் பாரதூரமான குற்றச் செயல்களாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றிற்கு கடுமையான தண்டனையையும் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் இன்று வன்முறை மற்றும் பயங்கரவாதம் என்று அழைக்கப்படும் குற்றச் செயல்களும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும்.

ஆறாவது,  இஸ்லாம் ஜிஹாத் என்னும் புனிதப் போராட்டத்தை அநீதிகளை அகற்றுவதற்காகவே கடமையாக்கியது : இஸ்லாம் ஆயுத வன்முறையைத் தடைசெய்கிறது என்று சொல்லும் பொழுது,  இஸ்லாம் கடமையாக்கியுள்ள ஜிஹாத் என்னும் புனிதப் போர் குறித்து ஒரு கேள்வி எழுகிறது. அதிலும் குறிப்பாக இன்று உலகில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் ஆயுத வன்முறைக்கு அவர்கள் ஜிஹாத் என்ற விளக்கத்தைத் தானே வழங்குகிறார்கள் என்று ஒரு கேள்வி தோன்ற முடியும். ஆயுத வன்முறையும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதும் உண்மையில் வித்தியாசமானவை. ஜிஹாத் மற்றும் வன்முறை ஆகியன பௌதீகப் பலத்தைப் பிரயோகிப்பதில் ஒன்று படுகின்றன. ஆனால் ஜிஹாதைப் பொறுத்தவரையில் அதன் நோக்கம் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் தெளிவானவை வரையறுக்கப்பட்டவை. அங்கு பலப்பிரயோகம் தேவைக்கு ஏற்ப தேவையான அளவில் தேவையான நேரத்தில் தேவையான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆனால் வன்முறை எந்த வரையறையும் அற்றது. இஸ்லாத்தில் ஜிஹாத் என்பது ஒரு போதும் ஆட்சி விஸ்தீரணத்திற்காகப் பயன்படுத்தப்படுவதல்ல,  அதுபோல் சமூக மாற்றத்திற்கான ஒரு வழிமுறையும் அல்ல. மாற்றமாக உலகில் நீதியை நிலை நாட்டுதல் அநீதியை அகற்றுதல் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் என்பதுவே அதன் நோக்கமாகும். அதுபோல் அதன் வழிமுறைகளையும் கட்டற்ற அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்தாத வகையிலேயே இஸ்லாம் முன்வைத்துள்ளது. அல்குர்ஆனும் சுன்னாவும் ஜிஹாத் பற்றிப் பேசிய அனைத்து உண்மைகளும் இதனையே உணர்த்துகின்றன.

அத்துடன்,  இன்று இஸ்லாத்தின் பெயரால் ஜிஹாத் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பிரபல்யமான ஆயுதக் குழுக்களான அல்காயிதா மற்றும் ஐஸிஸ் போன்றன நிச்சயமாக எந்த புனித நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவையும் அல்ல. அவை சில ஏகாதிபத்திய அரசியல் நலன்களின் உற்பத்திகள் என்பது நிறுவப்பட்ட உண்மை. அந்தவகையில் அவற்றின் தவறுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பிற மதங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு

பிறமதங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் பின்வரும் நான்கு அடிப்படைகளில் நின்று விளங்கிக் கொள்ள முடியும்.

முதலாவது,  இஸ்லாம் மத பன்முகத்தன்மையை ஏற்று,  மதச் சுதந்திரத்தை வழங்குகிறது : இஸ்லாம் ஒரு போதும் பிறமதங்களின் இருப்பை மறுக்கவில்லை. அதனால்தான் பிறமதத்தவர்களின் கடவுளர்களை ஏச வேண்டாம் என்றும்,  அநியாயங்களில் ஈடுபடாத பிறமதத்தவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அல் குர்ஆன் வழிகாட்டல் வழங்கியது. அது போல் நபியவர்களும் பிறமதத்தவர்களின் வழிபாடுகளை மதித்து நடந்தார்கள். இவை பிற மதங்களின் இருப்பை அங்கீகரித்தமையைக் காட்டுகிறது. அதுபோல்,  ஒருவர் தான் சரியென நம்பும் மார்க்கத்தைக் கடைபிடிக்கும் சுதந்திரத்தையும் இஸ்லாம் மறுக்கவில்லை. அல்குர்ஆன் கூறுகிறது உங்களது இரட்சகனிடமிருந்து வந்துள்ள சத்தியத்தைச் சொல்லுங்கள் விரும்பியவர் அதனை ஏற்கட்டும் விரும்பியவர் மறுக்கட்டும் என்கிறது (கஹ்ப் - 29).

இரண்டாவது,  இஸ்லாம் மதங்களைப் பாதுகாப்பது வாஜிப் என்கின்றது : மதத்தினைப் பாதுகாத்தல் என்பது ஷரீஆவின் பிரதான மகாஸிதுகளில் ஒன்று. இதன் பொருள் உலகில் இஸ்லாத்தைப் பாதுகாத்தல் என்பது மாத்திரமல்ல மாற்றமாக உலகில் பொதுவாக மார்க்க உணர்வையும் மார்க்க விழுமியங்களையும் பாதுகாப்பது இதில் பிரதானமானது. இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறியது அல்லாஹ் மனிதர்களில் ஒரு பகுதியினரை மற்றொரு பகுதியினரைக் கொண்டு தடுக்காவிட்டால் உலகில் ஆலயங்களும் வணக்கஸ்தளங்களும் தொழுகைகளும் அழிக்கப்பட்டுவிடும் (ஹஜ் - 40). இமாம் லைஸ் இப்னு ஸஃத் அவர்கள்,  இஸ்லாமிய நாட்டை அபிவிருத்தி செய்தல் என்பதினுள் கிறிஸ்தவ தேவாலயங்களை அமைத்தலும் உள்ளடங்குகிறது என்றார்கள்.

மூன்றாவது,  மத வேறுபாட்டின் காரணமாக ஒருவன் எதிரியாகக் கருதப்பட மாட்டான் மாற்றமாக அவன் எதிராகச் செயற்படுவதன் காரணமாகவே எதிரியாக மாறுவான் : இஸ்லாம் பிற மதங்களை அங்கீகரிக்கச் சொல்கின்ற பொழுது,  நிச்சயமாக அவற்றைப் பின்பற்றுபவர்களை எதிரியாகக் கொள்வதில்லை. மாற்றமாக இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் அநியாயமாக போர்த்தொடுக்கின்றவர்களையே இஸ்லாம் எதிரி என்கின்றது. இதனைத்தான் அல்குர்ஆன் உங்களுக்கு எதிராக போர்தொடுப்பவர்களுடனேயே நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள்,  நீங்கள் அத்துமீறிவிட வேண்டாம்,  ஏனெனில் அல்லாஹ் அத்துமீறுபவர்களை விரும்புவதில்லை (பகரா – 190) என்ற வார்த்தைகள் மூலம் விளங்கப்படுத்துகிறது.

நான்காவது,  எதிரி என்பதும் நிரந்தரத் தன்மை கொண்டது அல்ல,  அது நட்பாக மாறவும் முடியும் : அல்குர்ஆன் கூறுகிறது மிகச் சிறந்த முறையிலேயே ஒன்றைத் தடுத்து நிறுத்துங்கள்,  அப்பொழுது,  உங்களுடன் எதிர்ப்பில் இருப்பவனும் உற்ற நட்பாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது (புஸ்ஸிலத் - 34) என்கின்றது.

தீவிரவாதம்,  வன்முறை,  பயங்கரவாதம் என்பன தோன்றுவதற்கான காரணங்கள்

இஸ்லாம் பற்றிய புரிதல் கோளாறுகள் : கலாநிதி அலி கரதாகி அவர்கள்,  தீவிரவாத வன்முறை சிந்தனைகள் தோன்றுவதற்குக் காரணமாக அமையும் புரிதல் கோளாறுகளை பின்வருமாறு வரையறை செய்கிறார். முதலாவது,  சட்டவசனங்களின் நோக்கங்கள் மற்றும் காரணங்களைப் பார்க்காது,  புறக்கருத்தை மாத்திரம் எடுத்தல். இரண்டாவது,  வரலாறு மற்றும் வெற்றி தோல்விக்கான பௌதீக,  சமூகவியல் விதிகள் போன்றவை குறித்த போதிய தெளிவின்மை. மூன்றாவது,  தெளிவான வசனங்களை விட்டுவிட்டு தெளிவற்ற குழப்பமான வசனங்களைப் பின்பற்றல். நான்காவது,  முக்கியமான பெரும் விவகாரங்களை விட்டு விட்டு பகுதி விவகாரங்களில் கவனம் செலுத்துதல். ஐந்தாவது,  மார்க்கத்தில் ஒதுங்கியிருத்தல் வட்டத்தை விசாலப்படுத்தி இணைந்திருத்தல் வட்டத்தை குறுக்கியமை. ஆறாவது,  ஹராம் மற்றும் குப்ர் வட்டங்களை எல்லை மீறி விசாலப்படுத்தியமை. போன்றவற்றை அடையாளப்படுத்தலாம்.

உரிமை மீறல்களும் அநீதிகளும் : இன்றைய உலக ஒழுங்கிலும் சரி,  தேச அரசுகளிலும் சரி,  பாரியளவில் உரிமை மீறல்களும் அநீதிகளும் நடைபெறுகின்றன. இன்றைய உலகின் மிகப் பெரிய அநீதியாக பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். இதே வகையான அநீதியும் உரிமை மீறல்களும் அறபு நாடுகளின் சிறைகளில் பல அரசியல் கைதிகளுக்கு எதிராகவும் நடைபெற்றமை குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் இன்னும் உள்ள இஸ்லாமிய உலகிலும் நடாத்திவரும் அநீதிகளும் உரிமை மீறல்களும் மிகவும் வெளிப்படையானவை. இந்த அநீதிகளும் உரிமை மீறல்களும் பல்வகையானவை,  கொலை,  சித்திரவதை,  கற்பழிப்பு,  முடிவே தெரியாத சிறைவாசம்,  உடமைகள் அழிப்பு,  பொருளாதார அடக்குமுறை,  சிந்தனை அடக்குமுறை,  ஊடக அடக்குமுறை என பல வடிவங்களில் நடைபெறுகிறது. இந்த அநீதிகளின் முன்னால் மனிதன் வெகுண்டெழுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது. இதன் விளைவாகவும் தீவிரவாதமும் வன்முறையும் தோற்றம் பெறுகின்றன.

ஏகாதிபத்திய சக்திகளின் சதிமுயற்சிகள்: தீவிரவாத வன்முறைக் குழுக்களில் பல சமயங்களில் ஏகாதிபத்திய சக்திகள் தமது அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு உருவாக்கியவையும் காணப்படுகின்றன. அல்காஇதா,  ஐஸிஸ் போன்ற வன்முறைப் பயங்கரவாத இயக்கங்கள் குறித்து பல ஆய்வு நிறுவனங்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளன. மாத்திரமன்றி அவற்றிலிருந்து தப்பியோடி வந்தவர்களின் வாக்கு மூலங்களும் இந்த உண்மையைச் சொல்லுகின்றன.

இவை தவிர இன்னும் பல காரணங்கள் காணப்படுகின்றன என்றிருப்பினும் இவை மூன்றும் மிகவும் பிரதானமானவை. தீவிரவாதம் வன்முறை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றிற்கு இவை காரணமாக இனம் காணப்பட்டாலும்,  உண்மையில் இன்றைய உலக சூழ்நிலையைப் பார்க்கின்ற பொழுது,  தீவிரவாதமும் வன்முறையும் பயங்கரவாதமும் தோற்றம் பெறுகின்றன என்பதை விடவும் அவை தோற்றுவிக்கப்படுகின்றன அல்லது விதைக்கப்படுகின்றன என்பதுவே உண்மை. புரிதல் கோளாறுகள் மாத்திரம் தனித்து ஒரு போதும் வன்முறையை ஏற்படுத்தி விடுவதில்லை. அங்கு ஒரு தீவிர பின்பற்றல் தோன்ற முடியும் அல்லது பிறவற்றை மதிக்காமை தோன்ற முடியும். ஆனால் அது வன்முறையாக மாற்றம் பெறுவது,  அந்தப் புரிதல் கோளாறுடன் அநீதியும் உரிமை மீறலும் இணைகின்ற பொழுது,  அல்லது ஏகாதிபத்திய சதியொன்று சம்பந்தப்படுகின்ற பொழுதுதான். தொடர்ந்து அதன் நீட்சியாக பயங்கரவாதம் எழுகிறது.

தீவிரவாத வன்முறை நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புக்கள்

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவது போல்,  தீவிரவாத வன்முறை நடவடிக்கைகளால் தனிமனிதனுக்கோ சமூகத்திற்கோ அல்லது நாட்டிற்கோ எந்த நன்மையும் விளைந்து விடப் போவதில்லை. அது தீமைகளையே அதிகம் கொண்டு வந்து விடுகின்றது. அத்தகைய தீமைகளையும் பாதகங்களையும் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

முதலாவது,  தனிமனித இழப்புக்கள் : அதிகமான இளைஞர்களின் உயிர் இழப்புக்கள்,  அல்லது தமது வாழ்வின் பெரும்பகுதியை சிறைகளில் கழித்து எதிர்காலத்தைத் தொலைத்து விடுகின்றனர்,  அல்லது நிரந்தரமான உள உடல் பாதிப்புக்களுக்கு ஆளாகிவிடுகின்றனர். ஒவ்வொருவரும் தமது கல்வியை தொழிலை குடும்பத்தை இழந்து விடுகின்றனர். அர்த்தமற்ற,  இலக்கே இல்லாத ஒன்றுக்காக இவ்வாறு தமது வாழ்வை அழித்துக் கொள்ளும் இளைஞர்கள் சில சமயம் இதனை பெரும் தியாகம் என்று நினைக்கலாம். அவர்களது எண்ணம் தூய்மையாக இருக்கலாம்,  ஆனால் எண்ணம் தூய்மையாக இருப்பதால் மாத்திரம் தாம் மறுமையில் வெற்றி பெற்று விட முடியும் என்று ஒருவர் நினைத்தால் நிச்சயம் அது மிகப் பெரிய தவறாகும். எண்ணம் மட்டுமன்றி செயலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

இரண்டாவது,  இஸ்லாம் குறித்து ஏற்படுத்தப்படும் தவறான விம்பம் : ஒரு தீவிரவாத வன்முறை நடவடிக்கையின் போது,  சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அமைப்போ மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதில்லை. அவன் சார்ந்திருக்கும் சிந்தனைப் பின்புலமும் மதமும் கூட குற்றவாளியாக்கப்படுகிறது. இந்த உண்மையை இன்று உலகில் மிகவும் தெளிவாகக் கண்டு கொள்ளலாம். மாத்திரமன்றி ஒரு சிந்தனையை அல்லது மதத்தை குற்றப்படுத்த நினைக்கும் ஏகாதிபத்திய சக்திகள் அவர்கள் சார்பாக வன்முறைகளை அரங்கேற்றுவதையும் மறுப்பதற்கில்லை. இன்று இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம்,  அது உலகத்திற்கு அபாயமானது என்றும் முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள் என்றும் ஒரு விம்பம் உருவாக்கப்பட்டு விட்டது. இதற்கு சதிகள் மாத்திரமன்றி முஸ்லிம்களின் புரிதலற்ற தவறுகளும் ஒரு முக்கிய காரணம்.

மூன்றாவது,  இஸ்லாம் மறுக்கப்படுவதற்கும் இஸ்லாமிய தஃவா எதிர்க்கப்படுவதற்கும் ஒரு நியாயத்தைக் கொடுத்து விடுகிறது : இன்று இஸ்லாமிய தஃவா அமைப்புகள் இந்த பாதிப்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. மறுக்கப்படுவதும் எதிர்க்கப்படுவதும் தீவிரவாதம் மட்டுமல்ல, நடுநிலை இஸ்லாமிய சிந்தனையும் மறுக்கப்படுகிறது எதிர்க்கப்படுகிறது. இஸ்லாம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் எதுவும் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கப்படுகிறது. இதுதான் இஸ்லாத்தின் தீர்வு என்று பெருமையுடன் முன்வைக்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டுள்ளது. அதனாலோ என்னவோ நாம் இஸ்லாம் என்ற சொல்லை வலிந்து தவிர்க்க முற்படுகிறோம்.

நான்காவது,  சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஏற்படும் இழப்புக்கள் : நல்ல திறமையான மனித வளங்களை சமூகமும் நாடும் இழந்து விடுகின்றன. எங்களது முயற்சிகளும் நேரங்களும் சமூகத்தையும் நாட்டையும் கட்டிவளர்ப்பதை விட்டு விட்டு வேறு ஒன்றில் வீணாக கழிந்து விடுகின்றன. உள்ளுக்குள்ளேயே முரண்பட்டு பொது இலக்குகளையும் பொது எதிரியையும் மறந்து விடுகின்றோம்.

ஐந்தாவது,  இஸ்லாத்தின் இலக்குகளை அடைய முடியாமல் போதல் : இஸ்லாத்தின் இலக்குகள் நிலையான தன்மை கொண்டவை. அவை அறிவூட்டுதல் மற்றும் உருவாக்குதல் போன்ற கட்டிவளர்த்தல் அணுகுமுறையின் ஊடாகவே அடைந்து கொள்ள முடியுமானவை. பலப்பிரயோகம் அவசியமானதுதான்,  ஆனால் அது இலக்குகளை அடையும் பாதையில் உள்ள தடைகளை அகற்றுவதற்குத்தானேயன்றி பலப்பிரயோகத்தினால் கட்டியெழுப்ப முடியாது. இதனால்தான் ஜிஹாத் என்பது சமூக மாற்றத்திற்கான வழிமுறை அல்ல என்று இமாம்கள் குறிப்பிடுகின்றனர்.

இஸ்லாத்தின் புனிதங்கள் அவமதிக்கப்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

இன்று இஸ்லாம் குற்றவாளியாக்கப்பட்டுள்ளதன் விளைவில் இஸ்லாத்தின் புனித அம்சங்கள் அவமதிக்கப்படும் ஒரு நிலை தோற்றம் பெற்றுள்ளது. அல்லாஹ்வும் நபியவர்களும் மோசமான சொற்களால் வசைபாடப்படுகின்றனர். பள்ளிவாயல்கள் அவமதிக்கப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்களது மத உணர்வு சீண்டப்படுகிறது. முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலை எவ்வாறு எதிர் கொள்ளப்பட வேண்டும்? தீவிரமான அணுகுமுறைகளும் வன்முறைகளும் எதிர்தாக்குதல்களும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையுமா? இங்குதான் முஸ்லிம்கள் மிகவும் சமயோசிதமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அந்தவகையில் சில ஆலேசணைகளை அடுத்து நோக்குவோம்.

முதலாவது,  பொதுமைப்படுத்தலைத் தவிர்த்தல் : அதாவது,  குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் அல்லது மதத்தின் பிரதிநிதிகள் இஸ்லாத்தினை அவமதித்துள்ளனர் எனின்,  அதனை அந்த முழு சமூகத்தினதும் அல்லது மதத்தினதும் குற்றமாக மாற்றிவிடக் கூடாது. அந்தவகையில் அந்த முழு சமூகத்திற்கும் தீவிரவாத சாயம் பூசுவதோ அல்லது அந்த மதத்தினை மாறி நிந்தனைக்கு உற்படுத்துவதோ நேர்மையான அணுகுமுறையாக அமைய மாட்டாது. இதனால் புதிய எதிரிகளை உருவாக்கிக் கொள்வது மாத்திரமன்றி பல உதவியாளர்களையும் இழந்து விடுவோம்.

இரண்டாவது,  சரணாகதி மனநிலையைத் தவிர்த்தல் : நாம் சிறுபான்மையினர் எனவே அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது என்ற சரணாகதி மனோநிலைக்குக் கண்டிப்பாக சென்று விடக் கூடாது. இது நியாயமான எதிர்கொள்ளல்களையும் விட்டும் எம்மை திசை திருப்பிவிடும். இந்த நாட்டின் யாப்பின் பிரகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய மதச்சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் மதநிந்தனைத் தவிர்ப்பையும் பெற்றுக் கொள்வதற்கு எந்தவகையிலும் பின்நிற்கக் கூடாது. இந்த நாட்டில் வாழும் ஒரு மதக்குழுவினர் என்ற முழுமையான கௌரவத்துடன் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். ஏனெனில் அடிமைத்துவம் என்பது தீர்வு அல்ல.

மூன்றாவது,  நிகழ்வுகளால் உந்தப்படுவதைத் தவிர்த்தல் : எமது மிகப் பெரிய பலவீனங்களில் ஒன்று இது. தனித்தனி நிகழ்வுகள் எம்மை இயக்குவிக்கும் நிலை மாறி,  இது போன்ற ஒரு சூழ்நிலை ஏன்வந்தது? எங்கே தவறு நடந்திருக்கிறது? என்பதை ஆய்ந்தறிந்து தீர்வுகளுக்குச் செல்ல வேண்டும். நியாயமாக அடுத்த சமூகங்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முற்படல் வேண்டும். சதி என்ற ஒற்றைக் காரணியில் மாத்திரம் நின்று தீர்வு தேட முற்படுவது பிரச்சினைக்குரிய தீர்வுகளைத் தர மாட்டாது. இதன் சமய,  சமூக,  பொருளாதார,  அரசியல் காரணிகள் என்ன என்பது ஆராயப்படல் வேண்டும்.

நான்காவது,  வேறுபட்ட வியூகங்கள் தேவை : நிச்சயமாக அனைத்து விவகாரங்களையும் ஒரே அணுகுமுறையில் கையாள முடியாது. சில விவகாரங்கள் கண்டுகொள்ளப்படாமல்,  பெரிதுபடுத்தப்படாமல் விடப்பட முடியும். மற்றும் சில விவகாரங்கள் தெளிவான பதில்கள் வழங்குவது கட்டாயமானதாக இருக்கும். சில விவகாரங்கள் பொறுமை காக்க வேண்டியிருக்கும் மற்றும் சில ஆறப்போடுவது அபாயமானதாக இருக்கும்.

ஐந்தாவது,  உரையாடல் என்பது சவால் விடுவதல்ல : சில விடயங்களுக்கு பொதுத்தளத்தில் விளக்கம் அளிக்கப்படல் வேண்டும். ஒன்றன் உண்மை நிலை என்ன? என்பது பற்றிய அறிவு பூர்வமான,  தர்க்க ரீதியான உரையாடல் தேவை. ஆனால் ஒரு போதும் அது அடுத்தவர்களின் மத உணர்வை சீண்டிவிடுவதாக அமைந்து விடக் கூடாது. உரையாடலும் விளக்கமளித்தலும்தான் அவசியமேயன்றி சவால் விடுவது அல்ல. அதாவது யாருடைய மதக்கருத்து சத்தியமானது என்ற தேடலாக எமது முன்வைப்புகள் அமையுமாக இருப்பின் அது திறந்திருக்கும் மனதுகளையும் மூடச் செய்து விடும் செயலாக மாறிவிடும்.

ஆறாவது,  பதில் நிந்தனையும் வன்முறையும் தவிர்க்கப்படுதல் : மதநிந்தனை என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று,  எதிர்தாக்குதல் நடாத்துவதற்கு இது ஒன்றும் யுத்தம் அல்ல. எனது மதத்தை அவமதித்தால் உனது மதத்தை நானும் அவமதிப்பேன் என்ற அணுகுமுறை இந்த விடயத்திற்குப் பொருந்தி வரமாட்டாது. அதுபோல்  மதவிவகாரத்தில் வன்முறையைக் கையாள்வது பிரச்சினையை மென்மேலும் சிக்கலாக்கி விடுமேயன்றி பிரச்சினைக்குத் தீர்வைத் தர மாட்டாது.
அல்லாஹ் எமது செயல்களை அங்கீகரிப்பானாக.

உசாத்துணைகள்

1.            அல் இர்ஹாப் பீ மீஸானில் இஸ்லாம்,  அல் உம்மதுல் வஸத் (6),  அல் இத்திஹாதுல் ஆலமி லிஉலமாஇல் முஸ்லிமீன்,  2015.

2.            அல் கர்ளாவி யூசுப் அப்துல்லாஹ்,  பிக்ஹுல் ஜிஹாத் திராஸா முகாரனா லிஅஹ்காமிஹி வபல்ஸபதிஹி பீ ழெளஇல் குர்ஆன் வஸ்ஸுன்னா,  கெய்ரோ,  மக்தபது வஹ்பா,  2009.

3.            அல் கர்ளாவி யூசுப் அப்துல்லாஹ்,  அஸ்ஸஹ்வா அல் இஸ்லாமிய்யா பைனல் ஜுஹுதி வத்ததர்ருப்,  தௌஹா,  ரிஆஸதுல் மஹாகிம் அஷ்ஷரஇய்யா வஷ்ஷுஊன் அத்தீனிய்யா,  ஹி. 1402.

4.            பஸ்யூனி மஹ்ரூஸ் முகம்மத் மஹ்ரூஸ்,  அத்தஅத்துதிய்யா அத்தீனிய்யா ரூஃயா நக்திய்யா,  வலைத் தளத்தில் உள்ளது,  https://www.taibahu.edu.sa/Pages/AR/DownloadCenter.aspx?SiteId=50a13fdf-fc2d-43ef-a1d5-50bd4a749c1b&FileId=4bb3f9f2-707a-40a2-a4a0-383686a414c1

5.            அல் கதீப் முஃதஸ்,  அல்உன்புல் முஸ்தபாஹ்,  கெய்ரோ,  தாருஷ் ஷுரூக்,  2018.