Thursday, September 11, 2014

அல்-குர்ஆனுடனான ஒன்றித்த உறவாடலுக்கு துணையாக அமையும் காரணிகள்

ஈமானிய அமர்வுகள்

அல்குர்ஆனை ஓதுதல் என்பது,  அல்குர்ஆனுடனான எமது உறவின் ஒரு ஆரம்ப நிலையாகும். இந்த உறவின் அழுத்தமான மற்றறொரு கட்டமாகவே அதனுடன் ஒன்றித்த உறவாடல் என்ற நிலை காணப்படுகின்றது. இந்த இரண்டாம் கட்டத்தை அடைந்து கொள்வதற்கு பொறுமையுடன் கூடிய நீண்ட முயற்சியும் பயிற்சியும் அவசியப்படுகிறது.

 குறிப்பாக இந்த நகர்வின் ஆரம்ப நாட்களில் இதன் அவசியம் மிகவும் அழுத்தமானது. சாதாரணமாக அல்-குர்ஆனை திருத்தமாக ஓதுவதற்கே ஒரு பயிற்சி அவசியப்படுகிறது. அதேபோல்,  அர்-குர்ஆனுடன் ஒன்றித்துப் போகவும்,  அதனுடன் வாழவும்,  அதிலிருந்து சிந்தனைகளையும் நடைமுறைகளையும் பெற்றுக் கொள்ளவும் ஒரு பயற்சி அவசியப்படுகிறது. அத்தகைய ஒரு பயிற்சிக்கு துணை செய்யக் கூடிய சில காரணிகள் காணப்படுகின்றன.

1. அல்-குர்ஆனின் பயனை அனுபவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்தல்.

2. அல்-குர்ஆனை ஓதுவதற்கான ஒழுக்கங்களைப் பேணுதல்.

3. அல்-குர்ஆனுடன் ஒன்றித்துப் போகும் போது தோன்றும் சிந்தனைகளை சிறந்த முறையில் கையாளுதல்.

4. சிந்தனைகளைத் தோற்றுவிப்பதற்கான மாதிரி வடிவங்களைப் பின்பற்றல்.

இந்த ஒவ்வொரு காரணியும் விரிவாக நோக்கப்பபட வேண்டியவை. இன்ஷா அல்லாஹ் இன்றைய அமர்வில் முதல் இரண்டு காரணிகள் குறித்து மாத்திரம் பார்வையை செலுத்துவோம்.

1. அல்-குர்ஆனின் பயனைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்தல்.

இந்தக் கருத்து குறித்து முன்னைய ஒரு அமர்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும் மீண்டும் இங்கே ஒரு ஞாபகமூடடல் மாத்திரம் செய்யப்படுகிறது. ஏனெனில், அல்குர்ஆனின் சிந்தனைக்குள்ளே நுழைவதற்கான திறவுகோல் இந்த நிபந்தனையிலேயே தங்கியிருக்கிறது.

அதுதான் அல்லாஹுத்தஆலா மீதான பயம். இங்கு பயம் என்பது விரண்டோடுகின்ற பயம் அல்ல. அல்லாஹுத்தஆலா மீது விருப்பத்தையும் அன்பையும் கண்ணியத்தையும் ஞாபகப்படுத்துகின்ற பயம். அல்லாஹ்வின் வழிகாட்டல் எமது நலனுக்கானது. அதனைப் புறக்கணிப்பதால் நானே எனக்கு தீமையைத் தேடிக் கொள்கிறேன். எனவே,  எமக்கு தீமை நிகழ்ந்து விடக்கூடாது என்ற உணர்வின் உந்துதலே இந்தப் பயம். இதனைத்தான் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

'யார் பயப்படுகின்றாரோ அவர் நுழைந்து விடுவார். நுழைபவர் உரிய அந்தஸ்த்தை அடைந்து கொள்வார்..."

அல்குர்ஆனை ஓதும்போது அல்லது அதனை செவிமடுக்கும்போது அது பேசும் சிந்தனைகளைப் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆனால்,  தான் புரிந்து கொண்டதை தனது வாழ்வில் எப்போது பிரயோகிப்பார் எனின் அதனுடைய அவசியத்தை அவர் தனது வாழ்வில் உணர்கின்றபோதுதான் அது சாத்தியப்படுகிறது. அவசியத்தை எப்போது உணர்வார்? அது எந்தளவு தனது வாழ்வைப் பாதிக்கப் போகிறது என்ற அச்சம் அவரை ஆட்கொள்கின்ற போதே அதன் அவசியம் அங்கு உணரப்படுகிறது. அல்லாஹுத்தஆலா இதனை இவ்வாறு பேசுகிறான்,  'உங்களுக்கு தீங்காக அமைவதற்காக அல்குர்ஆன் இறக்கப்படவில்லை. மாற்றமாக,  பயப்படுபவர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலாகவே காணப்படுகின்றது. (1-3- தாஹா)

2. அல்குர்ஆனை ஓதுவதற்கான ஒழுங்குகளைப் பேணுதல்.

நாம் அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் அதன் சிந்தனைகளை விளங்கி நடைமுறைப்படுத்துவது நோக்கமாக இருக்கின்றது. அல்குர்ஆனை ஓதுகின்றபோது அல்லாஹுத்தஆலாவின் ஞான ஒளி,  நாம் செய்யும் பாவங்களின் காரணமாக எமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கின்றது. எனவே,  இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புக் கேட்டல், அல்குர்ஆனை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கான ஒரு நிபந்தனையாகிறது. அல்குர்ஆன் கூறுகிறது: 'நீங்கள் அவர்களுடன் இருக்கின்ற போது அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான். அதுபோல் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்கின்ற போதும் அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான்." (அன்பால்: 33)

அல்குர்ஆனின் சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடியாமல் போவதும் ஒரு விதமான தண்டனையே. எனவே,  இங்கு உள்ளத்தால் உணர்ந்த ஒரு உண்மையான பாவமீட்சி அவசியப்படுகிறது. வெறுமனே நாவோடு மாத்திரம் சுருங்கிய 'அஸ்தஃபிருல்லாஹ்" என்ற வார்த்தை மொழிவு மாத்திரம் போதாது. அப்போதுதான் கதவுகள் திறந்து கொள்ளும்,  சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.

அடுத்து நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல். இதனால் அல்லாஹ்வும் எம் மீது ஸலவாத்துச் சொல்கிறான். அவனது அருள் எம்மீது சொரிகின்றன. அவனது வார்த்தைகளை சீரணிப்பதற்கு இந்தப் பேரரருள் எமக்கு துணை செய்யப் போகின்றது.

இத்துடன் ஸதகா செய்கின்ற பழக்கம் மிகவும் முக்கியமானது. நீர் நெருப்பை அணைத்து விடுவது போல் ஸதகா பாவங்களை அனைத்து விடுகிறது. இவற்றுடன் யா அல்லாஹ் அல்குர்ஆனை; விளங்கிக் கொள்ளும் பாக்கியத்தை தருவாயாகஎன்ற பிரார்த்தனையும் உடன் இணையுமாக இருந்தால்,  நாம் பாவங்கள் கலைந்து அருள் பெற்று சிறந்த விளக்கங்களையும் பெற்றவர்களாக மாறுவோம். 

அறிஞர் ஸலாஹ் காலிதி என்பவர்,  'அல்குர்ஆனுடன் உறவாடுவதற்கான திறவுகோள்கள்" என்ற தனது நூலில் அல்குர்ஆனை ஓதும்போது பேண வேண்டிய சில ஒழுக்கங்களை பேசியிருக்கின்றார். அவற்றை இங்கு சுருக்கமாக தருகிறோம்.

1.            அல்குர்ஆனை ஓதுவதற்கு மிகவும் பொருத்தமான நேரத்தை தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும். மிகச் சிறந்த நேரம் இரவின் மூன்றாவது பகுதியான ஸஹர் நேரம். அடுத்து பொதுவாக இரவு நேரம். அடுத்து அதிகாலை நேரம். அடுத்து ஸுப்ஹ் தொழுகைக்கு பின்னர் உள்ள நேரம். அடுத்து ஏனைய பகல் பொழுதுகள்.

2.            பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பள்ளிவாயலே மிகவும் பொருத்தமான இடம். வீடாக இருப்பின் அதற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடமாக இருப்பது சிறந்தது. பொதுவாக எந்த இடத்திலும் ஓதலாம். ஆனால்,  சந்தடிகளற்ற கவனச் சிதைவுகளற்ற அமைதியான சுத்தமான இடமாக இருப்பது முக்கியமானது. ஏனெனில்,  அல்குர்ஆன் மழையைப் போன்றது. அது கற்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது. தயார் நிலையில் உள்ள பூமி மீதே தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. அல்குர்ஆனும் அமைதியுடன் தயார் நிலையில் உள்ள உள்ளத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

3.            அல்லாஹ்வே எமக்குத் தஞ்சம். அவனே எமக்குப் பாதுகாப்பு. எனக்கு மீட்சி. எனக்கு எந்த சக்தியும் இல்லை. எந்த அறிவும் இல்லை. எல்லாம் அவன் தருபவையே என்று முழுமையாக அல்லாஹ்விடத்தில் தன்னை அர்ப்பணித்த மனோநிலையுடன் அல்குர்ஆனை ஓத வேண்டும். இவனிடத்தில்தான் அல்குர்ஆனின் அறிவு பிரவாகித்து ஓடத் தொடங்கும்.

4.            ஷெய்த்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடும் அந்த வார்த்தைகளில் தொடங்கி,  அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்க வேண்டும். இது வெறுமனே வார்த்தையுடன் மாத்திரம் நின்று விடுவதாக அமைந்து விடக்கூடாது. அந்த வார்த்தைகளின் பொருளின் ஆழத்தை உணர்ந்து உச்சரிக்க வேண்டும். ஷெய்த்தான் எவ்வளவு பெரிய எதிரி. என்னை வழிகெடுப்பதை மாத்திரமே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவன். அவனிடத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது அல்லாஹ்வின் மூலமே சாத்தியப்படுகிறது.

5.            உள்ளத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். புறத் தேவைகளை எதிர்பார்த்த நிலையில் உள்ளம் இருக்கக் கூடாது. அவற்றை நிறைவு செய்த பின்னரே ஓத ஆரம்பிக்க வேண்டும். இல்லாதபோது அதனுடன் ஒன்றித்து வாழ்வது சாத்தியமற்றுப் போகிறது. பசி,  தாகம்,  உபாதைகள்,  கவலை, சூடு,  குளிர் போன்ற பல விடயங்கள் மனதின் அமைதியை குலைத்து விட முடியுமானவை.

6.            ஓதும்போது தனது சிந்தனையை முழுமையாக குர்ஆனுடனேயே வைத்திருக்க வேண்டும். அதனை வேறு எங்கும் சிதற விடக்கூடாது. புலனுணர்வுகள் அனைத்தும் ஒருசேர அல்குர்ஆனில் ஒன்று குவிகின்ற போதே அதன் அறிவியல் உண்மைகளை அவன் சரியாகப் புரிந்து  கொள்ள முடியும்.

7.            அல்குர்ஆனின் ஓட்டத்துடன் இரண்டரக் கலந்து உறவாடிக் கொண்டு அதனை ஓதுதல் வேண்டும். ஒரு சுபசோபன செய்தி வருகிறபோது சந்தோசத்தை வெளிப்படுத்துதலும் தண்டனையையும் வேதனையையும் பற்றி பேசுகிறபோது கவலையையும் அழுகையையும் வெளிப்படுத்துதலும் பாவங்களைக் கூறும்போது அருவருத்தலும் தூரமாகுதலும் கடமைகளைக் கூறும்போது உற்சாகமடைதலும் நடைமுறைப்படுத்தும் உறுதி கொள்ளுதலும் அதன் வடிவங்களாகும்.

8.            அல்குர்ஆன் எம்மை நோக்கியே பேசுகிறது என்ற உணர்வுடன் அதனை ஓத வேண்டும். அதன் ஒவ்வொரு கட்டளையும் ஒவ்வொரு எச்சரிக்கையும் ஒவ்வொரு உபதேசமும் என்னை நோக்கியே சொல்லப்படுகிறது என்று அழுத்தமாக உணர வேண்டும். அப்பொழுதுதான் ஈமான் கொண்டவர்களே என்று அல்குர்ஆன் விளிக்கும்போது எனது கண்களும் காதுகளும் உள்ளமும் விளித்துக் கொள்ளும். எனக்கு ஒரு கட்டளை வரப்போகிறது. அதனை ஏற்கத் தயாராக வேண்டும் என்ற உணர்வு வருகிறது.



மாத்திரமன்றி,  ஒவ்வொரு வசனத்தையும் நின்று நிதானித்து ஓதுவதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அது எனக்கு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள முற்படும்போது நிச்சயமாக நிதானமாகவே ஓதுவோம். அவசரமாக பக்கங்களைப் புரட்டி விட்டு ஓடி விட நினைக்க மாட்டோம். 

இன்ஷா அல்லாஹ், அடுத்த பத்தியில் மீதமுள்ள காரணிகளுடன் சந்திப்போம். அல்லாஹ் எம் அனைவரையும் ஏற்றுக் கொள்வானாக.

Monday, September 1, 2014

திருமணத்தின் நோக்கங்கள்

திருமண வாழ்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு


கடந்த அமர்வுகளில் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளைஞர் யுவதிகளின் பக்கம் நின்று கலந்துரையாடினோம். அதில் அவர்களது விருப்பு வெறுப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் எவ்வாறு இருக்கின்றன என்பதும்,  உண்மையில் அவை எவ்வாறு இருப்பது மிகவும் பொறுத்தமானது என்பதும் கலந்துரையாடலில் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

இன்றைய அமர்வில் இஸ்லாமிய ஷரீஆவின் பக்கம்  நின்று பார்க்கின்ற பொழுது திருமண வாழ்வு ஏன்? என்ற கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்து கலந்துரையாடுவது பொருத்தமானது.

அல்லாஹுத்தஆலா இந்த பூமியைப் படைத்து,  அதில் மனிதனைப் படைத்துள்ளான். அவன் விரும்பியிருந்தால் ஆண் இனத்தை மாத்திரமே படைத்திருக்க முடியும் அல்லது பெண் இனத்தை மாத்திரமே படைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆணையும் பெண்ணையும் படைத்து,  அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்ற ஒழுங்கையும் ஏற்படுத்தியிருக்கிறான். இது ஏன்?  இதற்குப் பின்னால் உள்ள தத்துவம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில்தான் திருமண வாழ்விற்கான அல்லது குடும் வாழ்விற்கான நோக்கத்தை எமக்கு மிகச் சரியாக எடுத்துரைக்கின்றது.

இது,  அல்லாஹ்வின் நாட்டத்தை பலவீனமான மனித அறிவினால் கண்டு கொள்வதற்கான முயற்சி என்பதனை விடவும்,  மேற்சொன்னது போன்ற ஒரு வினாவினைத் தொடுப்பதன் மூலம் எமது விருப்பு வெறுப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால்,  அல்குர்ஆனும் சுன்னாவிலும் இவ்விடயம் எவ்வாறு பேசப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இது காணப்படுகிறது.

இஸ்லாமியக் குடும்பவியல் அறிஞரான கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியில்,  இஸ்லாமிய ஷரீஅத் குடும்ப வாழ்வுக்கான மூன்று பிரதான நோக்கங்களை முன்வைப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

1.            ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.
2.            உள,  உடல் அமைதியை ஏற்படுத்தல்.
3.            சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல்.

இங்கு முதலாவது நோக்கம் குடும்பத்தின் தர்பிய்யத் பணியுடன் சம்பந்தப்படுகிறது. இரண்டாவது நோக்கம் அதன் பாதுகாப்புப்  பணியுடன் சம்பந்தப்படுகிறது. மூன்றாவது நோக்கம் அதன் நாகரீகப் பணியுடன் சம்பந்தப்படுகிறது. இந்த மூன்று நோக்கங்களும் சிறந்த முறையில் நிறைவேற்ப்படுகின்ற பொழுது உலகில் ஒரு உன்னதமான மனிதவாழ்வு கட்டியெழுப்பப்படுகிறது.

1.            ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.

ஸாலிஹான சந்ததிகள் என்பது முதலில் மனித இனத்தின் நீண்ட கால இருப்பைக் குறிக்கின்றது. அல்குர்ஆனும் ஹதீஸும் இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகவே திருமணத்தின் விளைவு குறித்துப் பேசும் போது,  ‘துர்ரிய்யாஎன்ற சொல்லைக் கையாண்டிருப்பதைக் காணலாம். இது நேரடியாக பிள்ளை என்ற கருத்தை தாண்டி ஒரு நீண்ட கால பரம்பரையைக் குறிக்கின்றது. எனவே,  திருமணம் என்பது பரம்பரை பரம்பரையாக மனித இனம் நிலைத்திருப்பதற்கான ஒரு பொறிமுறை என்பது இங்கு விளங்கப்படுத்தப்படுகிறது.

அடுத்து,  ஸாலிஹான சந்ததி என்பது மனித இயல்பு சார்ந்த ஒரு தேவை. தாய்மை என்பதும் தந்தையாக இருத்தல் என்பதும் கற்றுத் தேர்ச்சி பெறுவதற்குரிய ஒரு துறைசார் கலையல்ல. மாற்றமாக,  மனிதனின் இயல்பாக அல்லாஹ் அமைத்து வைத்திருக்கின்ற ஓர் உணர்வு அது. இதனால்தான் அல்குர்ஆன் மனைவி பிள்ளைகளக் கண்குளிர்ச்சி என்று அடையாளப்படுத்தியது. (புர்கான்: 74)

ஒரு மனிதனிடத்தில் பிள்ளை வேண்டுமென்ற தேடலும் எதிர்பார்ப்பும் இந்த உணர்வுப் பின்புலத்தில்தான்  உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையிலான பிரத்தியேக உறவின்போது கூட அந்த எதிர்பார்ப்பை வைத்துச் செயற்படவேண்டும் என்று அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது. இப்போது அவர்களுடன் உறவு கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு எழுதி வைத்தவற்றை ஆர்வத்துடன் எதிர்பாருங்கள்.’ (பகரா: 187)

மற்றது ஸாலிஹான சந்ததி என்பது ஒரு தர்பிய்யத்தை அல்லது பயிற்றுவிப்பைக் குறித்து நிற்கின்றது. அல்குர்ஆன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரகத்தை விட்டுப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறுவதன் மூலம் அந்தப் பணியை ஆரம்பித்து வைக்கின்றது. இஸ்லாமிய ஷரீஅத் முன்வைக்கும் பெற்றோர் கடமைகள்,  பிள்ளைகள் கடமைகள், வாரிசுரிமை சட்டங்கள்,  பரம்பரைச் சட்டங்கள் போன்ற அனைத்துமே இந்த உண்மையை எங்களுக்கு எடுத்துச் சொல்கின்றன. 

நபியவர்கள் இந்தப் பணியை மிகவும் எளிமையாக இவ்வாறு கூறினார்கள்:
உங்கள் பிள்ளைகளை கண்ணியமாக  நடாத்துங்கள். அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.’ (இப்னு மாஜா)

2.            உள உடல் அமைதியை ஏற்படுத்துதல்

திருமணம் என்பது உலகில் ஆணும் பெண்ணும் அடைந்து கொள்கின்ற மிக பெரிய இன்பமும் சந்தோசமும் திருப்தியுமாகும். இதில் உள்ளம் சம்பந்தப்பட்ட ஒரு பக்கமும் உடல் சம்பந்தப்பட்ட மற்றொரு பக்கமும் இருக்கின்றது. இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
நீங்கள் அமைதியடைந்து கொள்வதற்காக உங்களில் இருந்தே உங்களது சோடியை படைத்தமையும் உங்கள் மத்தியில் அன்பையும் அருளையும் ஏற்படுத்தியமையும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்திப்பவர்களுக்கு இந்த அத்தாட்சிகளைப் புரிந்து கொள்ள முடியும்.’ (ரூம்: 21)

ஒரு கிரிக்கட் வீரரிடம் ஒரு பத்திரிகையாளன் கேட்டான். பொதுவாக கிரிக்கட் வீரர்கள் சில காலம் நன்றாக விளையாடுகிறார்கள். இன்னும் சில காலம் நன்றாக விளையாடுவதில்லை. ஆனால்,  நீங்கள் நீண்ட காலமாக நன்றாகவே விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதன் இரகசியம் என்ன? இக்கேள்விக்கு அவ்வீரன் இந்தக் காலத்தில்தான் நான் திருமணம் முடித்தேன் என்றார். இந்த பதிலில் ஓர் அபூர்வமான உண்மை இருக்கிறது. திருமணம் ஒரு மனிதனிடத்தில் அமைதியையும் நிதானத்தையும் ஒரு விடயத்தை மிகச் சரியாக கையாளும் ஆற்றலையும் கொண்டு வந்து சேர்க்கிறது. மன அமைதி ஒருவனது செயலாற்றலை அதிகரிக்கிறது, அவனது உற்பத்தித் திறனை பலமடங்குகளாக மாற்றுகிறது. இதனையே அல்குர்ஆன் ஸகன்’ (அமைதி) என்ற சொல்லினூடாக விளங்கப்படுத்தியிருக்கின்றது.

சமூக வாழ்வில் மேற்கூறப்பட்ட விளைவு கண்டிப்பாக எட்டப்பட வேண்டும் என்பதனாலேயே,  கணவன் மனைவிக்கிடையிலான பிரத்தியேக உறவை நன்மை தரக்கூடிய ஓர் இபாதத் என்று இஸ்லாம் கூறுகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: உங்கள் மனைவியுடன் உறவு கொள்வதும் ஸதகாவாகும் என்றார்கள்,  ஸஹாபாக்களில் ஒருவர் தனது இச்சையை தீர்த்துக் கொள்வதற்கும் நன்மைகள் வழங்கப்படுகின்றனவா என்று கேட்க,  அதே இச்சையை அவன் பாவமான வழியில் தீர்த்துக் கொண்டால் தீமை கிடைக்கும் அல்லவா,  அதேபோல் ஹலாலான வழியில் தீர்த்துக் கொண்டால் நன்மை கிடைக்கும் என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
இது உடல் உள அமைதி என்பதன் முதலாவது கருத்து,  இதுவொரு மனிதனை ஆக்க சக்தியுள்ளவனாக மாற்றுகின்றது.

அடுத்து,  அதன் இரண்டாவது கருத்து,  ஒரு ஒழுக்க பண்பாட்டு வடிவத்தைக் குறிக்கிறது. அதாவது மனிதனை பாவங்கள் குற்றச் செயல்களை விட்டும் காப்பாற்றக்கூடிய ஒரு பாதுகாப்பு அரணாக திருமணம் அமைகிறது. அல்குர்ஆன் திருமணமானவரைக் குறிப்பதற்கு முஃஸின்என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இந்த சொல் அடிப்படையில் ஹிஸ்ன்எனும் பாதுகாப்பு அரண் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். எனவே,  இங்கு திருமணம் என்பது ஒரு பாதுகாப்பு அரண். திருமணம் முடித்தவர் அந்த அரணிற்குள் பாதுகாப்பாக இருப்பவர் என்ற கருத்து பெறப்படுகிறது.

மனிதனின் பாலியல் உணர்வு மிகவும் சக்திவாய்ந்தது. அது பல குற்றச் செயல்களுக்கும் காரணமாக இருக்கக் கூடியது. இந்த உணர்வு மிகச் சரியாக ஒழுங்குபடுத்தப்படாதபோது மனித வாழ்வே சீர்கெட்டுவிட வாய்ப்பிருக்கின்றது. இக்கருத்தைக் குறிக்கும் விதமாகவே,  நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: யார் திருமணம் செய்கின்றாரோ அவர் தனது மார்க்கத்தில் அரைவாசியை பாதுகாத்துக் கொண்டு விட்டார்.
இங்கு,  ஒரு இளைஞன் செய்யும் பாவங்களில் அரைவாசிப் பகுதி பாலியல் சம்பந்தப்பட்டவையாக அமைய வாய்ப்பிருக்கிறது,  என்பதை புரிந்து கொள்ளலாம். திருமணத்தின் மூலம் இந்நிலை மாற்றியமைக்கப்படுகிறது. எனவே திருமணம் ஒரு சமூக ஒழுக்கத்தை உருவாக்குகிறது. மனிதனை பாவங்களை விட்டும் காப்பாற்றுகிறது. இது உள உடல் அமைதியின் இரண்டாவது கருத்து.

3.            சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல்.

குடும்பம் என்ற செங்கற்களின் மூலமே சமூகம் கட்டமைக்கப்படுகின்றது. அந்த செங்கல்லின் பிரதான கூறுகளாகவே கணவனும் மனைவியும் பிள்ளைகளும் காணப்படுகின்றனர். ஒரு குடும்பக் கட்டமைப்பு எந்தளவு பலமாகவும் சீராகவும் காணப்படுகின்றதோ அந்தளவுக்கு சமூகக் கட்டமைப்பின் பலமும் சீர்மையும் உறுதி செய்யப்படுகின்றது.

குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் சம்பந்தப்படுத்தி அல்குர்ஆன் வலியுறுத்தும் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. அதுதான்,  சமூக வாழ்வில் தலைமை வழங்குகின்றவர்களின் குடும்ப வாழ்வு அமைதியாக காணப்படல் வேண்டும். அப்போதுதான் அவர்களால் சமூகத்தை சரியான பாதையில் வழிநடாத்த முடியும். அல்குர்ஆன் இபாதுர்ரஹ்மான்களின் கீழ்வரும் துஆவின் மூலம் இக்கருத்தைப் பேசுகிறது. இறைவா எமது மனைவிமார்கள்,  பிள்ளைகள் மூலம் எமக்கு கண்குளிர்ச்சியை ஏற்படுத்துவாயாக. எங்களை முத்தகீன்களது தலைவர்களாக ஆக்கிவிடுவாயாக.’ (புர்கான்: 74)

இங்கு சமூகப் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்னர் குடும்பத்தில் அமைதியையும் சந்தோசத்தையும் ஏற்படுத்துமாறு அவர்கள் கேட்டமையை அவதானிக்கலாம். குடும்பங்களில் சீர்மையை ஏற்படுத்தாமல் சமூக சீர்மையை கற்பனை செய்வது சாத்தியமற்றது என்பது இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது.

நபியவர்கள் பொறுப்புணர்வு சம்பந்தமாக பேசும்போது குடும்பப் பொறுப்பையும் சமூகப் பொறுப்பையும் இணைத்துப் பேசியுள்ளமையை அவதானிக்கலாம். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்புக்கள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் ஒரு பொறுப்பாளர். அவர் மக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தனது குடும்பத்திற்கு பொறுப்பாளன். குடும்பம் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண் தனது கணவனின் வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்பானவள். இது பற்றி அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளன் தனது எஜமானின் செல்வத்துக்கு பொறுப்பானவன். அந்தப் பொறுப்புப் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.’ (புஹாரி)

இந்த ஹதீஸ் தனிமனிதப் பொறுப்புணர்ச்சியை பேசுவதுபோல்,  குடும்ப பொறுப்புணர்ச்சியையும் சமூக பொறுப்புணர்ச்சியையும் இணைத்து பேசுகிறது. அத்துடன் இந்த ஒவ்வொன்றும் மற்றையதில் தங்கி நிற்கின்றது என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் சமூகத் தலைமையையும் அடுத்து குடும்பத் தலைமையையும் பற்றி பேசியிருப்பது குடும்பக் கட்டமைப்பின் சீராக்கம்,  சமூகக் கட்டமைப்பின் சீரான உருவாக்கத்துக்கு அவசியம் என்பதை உணர்த்துகின்றது.

இந்த ஹதீஸில் மீண்டும் மீண்டும்  வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயம் இருக்கின்றது. அதுதான் வகைகூறல். அதாவது,  சமூகக் கட்டமைப்பு பொறுப்பற்றதாக எவரும் வகைகூறுவதற்கு இல்லாத ஒரு நிலை காணப்படக்கூடாது. இந்த வகைகூறல் பணி சமூகத்தலைமைகளுடன் மட்டும் சுருங்கியதல்ல. அதன் முக்கிய பகுதி குடும்ப மட்டத்தில் நடைபெறுகிறது. உருவாக்குதல்,  பாதுகாத்தல் என்ற குடும்பப் பணியின் மூலம் குடும்பம்  வகைகூறக் கடமைப்பட்டிருக்கிறது. எனவே,  சமூக வகைகூறலின் முழுமைப் பண்பு குடும்ப வகைக்கூறலில் தங்கியிருக்கிறது என்பது இங்கு புலப்படுகிறது.


இறுதியாக,  மேற்கூறப்பட்ட சிந்தனைகளை சாராம்சப்படுத்தி நோக்கினால்,  திருமணத்தின் அல்லது குடும்ப வாழ்வின் நோக்கம் ஷரீஅத்தின் பார்வையில் மூன்று பிரதான மையக் கருத்துக்களில் அமைகின்றது. அவை,  ஸாலிஹான சந்ததி,  மன அமைதியும் சந்தோசமும்,  சீரான சமூகக் கட்டமைப்பு என்பனவாகும். 

இவை,  மனித வாழ்வுக்குரிய பொது நோக்கத்தின் பிரதிபலிப்புகளாகவே காணப்படுகின்றன. ஓர் உன்னத மனித நாகரிகம் எழுகின்ற கூறுகள் இவை. எனவே,  திருமணம் குறித்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் என்பன இந்த நோக்கங்களுடன் இயைந்து செல்ல வேண்டும். மாற்றமாக,  இந்த நோக்கங்களை சிதறடிக்கின்ற அல்லது மறுதலிக்கின்ற அல்லது கருத்தில் கொள்ளாத வகையில் தனிமனித விருப்பு வெறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் அமைந்துவிடக் கூடாது. அப்பொழுதே ஒரு நல்ல குடும்ப வாழ்வும் சமூக வாழ்வும் தோற்றம் பெற முடியும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.