Friday, July 15, 2016

மகாஸிதியப் பெண்மணி - ஜமீலா திலூத்


மொரோக்கோவின் மகாஸிதியப் பாரம்பரியத்தில் ஆண்களின் பங்களிப்பைப் போன்றே அதனுடன் போட்டி போடுகின்ற வகையில் பெண்களின் பங்களிப்பும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நான் கலந்து கொண்ட மகாஸிதுல் குர்ஆன் 2 என்ற கருத்தரங்கில் சுமார் பாதிக்கு மேல் பெண்கள் கலந்து கொண்டமையும், அவர்களது தரமான பின்னூட்டல்களும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவர்களில் சகோதரி ஜமீலா திலூத் முன்னணியில் இருக்கும் குறிப்பிடத்தக்க மகாஸித் ஆய்வாளர்களில் ஒருவர், மொரோக்கோவின் கஸப் லங்கா எனப்படும் தாருல்பைழாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர், ஆரம்பத்தில் பொருளியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டாலும், அடுத்து தனது துறையை மாற்றி இஸ்லாமியத் துறையில் கற்கையை மேற்கொண்டிருக்கிறார்.




ஒரு தடவை, ஆய்வரங்கு ஒன்றில் தனது ஆய்வனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சமயத்தில், இமாம் ஷாதிபியின் பார்வையில் சட்டமியற்றப்படாமல் விடப்பட்ட பகுதிஎன்ற தனது ஆய்வுக்கட்டுரை குறித்துப் பேசும் போது, தான் எப்பொழுதும் உடன்வைத்திருக்கின்ற ஒரு நூலாக இமாம் ஷாதிபியின் முவாபகாத் என்ற நூல் இருந்திருக்கிறது. மாத்திரமன்றி அதனை நான் பல தடவை பூரணமாக வாசித்து முடித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் மீண்டும் புதிதாய் வாசிக்கின்ற உணர்வே என்னில் மேலிட்டிருக்கிறது, ஒவ்வொரு தடவையும் கடந்த வாசிப்பில் கிடைக்காத ஒரு புதிய விடயம் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மகாஸித் துறையில் ஈடுபடுகின்ற எல்லோரும் இமாம் ஷாதிபியின் முவாபகாத்தை ஒரு தடவையேனும் வாசிப்பதே மிகவும் அரிதான ஒன்று, அப்படி இருக்கையில் பல தடவைகள் வாசித்திருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான், அந்த சபை அதற்காக அவருக்கு எழுந்து நின்று கைதட்டியது.

சகோதரி ஜமீலா திலூத்தை வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு முக்கிய விடயம் என்னவெனில் அவரது பல்துறை ஈடுபாடாகும். அவரே அது பற்றிக் குறிப்பிடும் பொழுது, உஸுலுல் பிக்ஹ், மகாஸிதுஷ் ஷரீஆ, இஸ்லாமியக் குடும்பவியல், அரசியல்தத்துவம், மானுடசமூகவியல் விவகாரங்கள், நவீன இஸ்லாமிய சிந்தனை என பல பரப்புக்களில் தனது ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாத்திரமன்றி இந்த எல்லா பரப்புக்களிலும் தனது புலமைத்துவப் பங்களிப்பை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் (2016) துருக்கியில் நடைபெற்ற குடும்பம் பற்றிய சர்வதேச இஸ்லாமிய சாசனத்திற்கான மாநாட்டிலும், பரம்பரையைப் பாதுகாத்தல் எனும் மக்ஸதும் அதன் சமூக உளவியல் தாக்கங்களும்என்ற ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருந்தார். குடும்பவியல் துறையில் இவரது முன்னோடியான பங்களிப்பாக குடும்பம் பற்றிய அல்குர்ஆனின் சிந்தனைஎனும் நூலைக் குறிப்பிடலாம். இவரது கலாநிதிக் கற்கைக்கான ஆய்வு மத ஒப்பீட்டாய்வும் நாகரீக உரையாடலும்என்ற தலைப்பில் அமையப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்தில் இந்த ஆய்வை நிறைவுசெய்து கலாநிதிக் கற்கையை நிறைவு செய்யவுள்ளார். கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்களால் வழிநடாத்தப்படும் மொரோக்கோவில் அமைந்துள்ள மர்கஸுல் மகாஸித் நிறுவனத்திலும் ஒரு அங்கத்தவராகத் தொழிற்படுகிறார்.

இவரது ஆய்வுகளில் எனக்கு சற்று வித்தியாசமாய்த் தோன்றிய இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று குடும்பவியல், பெண்கள் பற்றிய அவரது ஆய்வுகள், என்னுடைய வாசிப்பில் இந்த இரு தலைப்புக்களிலும் ஆண்களால் எழுதப்பட்ட ஆக்கங்களையே அதிகம் வாசித்திருக்கிறேன், ஆனால் இவை பற்றி ஒரு பெண் எழுதினால் அந்தப் பார்வைக் கோணம் எவ்வாறு இருக்கும், அதிலும் மகாஸித் பின்புலத்தில் நின்று எழுதினால் எவ்வாறு இருக்கும் என்பது உண்மையில் ஒரு புது அனுபவம். ஆண்களை நோக்கிய செய்திகள் அங்கு நிறையவே இருப்பதை அவதானித்தேன்.

இரண்டாவது மகாஸித், உஸுல் பிக்ஹ் பற்றிய அவரது ஆய்வுகள், அவரது ஆய்வுத் தலைப்புக்களில் அதிக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டவை இவைதான். இந்தப் பரப்பில் அவர் முன்வைக்கும் ஒரு கருத்து அவதானத்திற்குரியது. அதாவது, மகாஸித் தனித்த கலையா? உஸுல் பிக்ஹின் ஒரு பகுதியா? என்பதில் இந்த விவாதத்தைத் தாண்டி இவற்றின் விளைவு என்ன என்ற அடிப்படையில் எமது சிந்தனை அமைவதே பொருத்தம் என்கிறார். மகாஸித் தனித்த கலை என்று நாம் வைத்துக் கொண்டாலும் அது ஒரு கோட்பாட்டு உண்மை மாத்திரம்தான், சட்டவாக்கத்திலோ, சிந்தனையாக்கத்திலோ அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டாது. உஸுல் பிக்ஹுடன் இணைத்துப் பயன்படுத்துகின்ற போதே அது மிகச் சரியான விளைவைத் தரமுடியும், மாத்திரமன்றி சிந்தனைப் பிறழ்வுகளிலிருந்தும் பாதுகாக்கும், ஏனெனில் மகாஸிதின் தனித்த பிரயோகம் வரையறையற்றது, அங்கு நிறையவே அபாயங்கள் இருக்கின்றன, என்கிறார்.


எதிர்கால புலமைத்துவ செயற்தளத்தில் சகோதரி ஜமீலா திலூத்திற்கு ஒரு தனியிடம் இருக்கப் போகிறது, அதற்கு நிகழ்காலம் சாட்சி. இந்த ஒரு ஜமீலா மாத்திரமன்றி இவர் போன்ற ஆயிரம் ஜமீலாக்கள் தோற்றம் பெறுவதற்கான புற ஏற்பாடு அந்த நாடுகளில் காணப்படுகின்றன, எங்களிடத்திலும் திறமையான ஜமீலாக்கள் இருக்கிறார்கள், நாம் செய்ய வேண்டியது அவர்களுக்கான புற அக ஏற்பாடுகளைச் தயார் செய்து கொடுப்பதுதான்.