Tuesday, December 10, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்

சகோதரர்களே, சகோதரிகளே,  உங்கள் மனதோடு கொஞ்ச நேரம் உரையாட நினைக்கிறேன். நீங்கள் தயாரா?

அந்தி மயங்கும் நேரத்தில்,  சந்தடிகளற்ற ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு நிமிடம் கண்களை மூடுங்கள். ஒரு தடவை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். மனது அமைதியாக இருக்கிறதா?

சப்தமின்றி,  உங்கள் மனதுக்கு மட்டும் கேட்கும் விதத்தில், ஆனால் தெளிவான வார்த்தைகளில்,  உறுதியான தொனியில், ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் சொல்லிப் பாருங்கள்.

நான் திருமணம் செய்யப் போகிறேன்

உள்ளத்தில் என்ன தோன்றுகிறது? மனதின் மறுமொழி என்ன? உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் மெலிதான ஒரு பூரிப்பு தோன்றுகிறா? அல்லது மறுதலையாக மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்து கொள்கிறதா?

இந்தப் பயிற்சியை பல இளைஞர்,  யுவதிகளிடத்தில் நான் நேரடியாக செய்து பார்த்திருக்கிறேன். அதில்,  அதிகமான இளைஞர்கள் சந்தோசத்தை உணர்வதாகக் கூறியிருக்கிறார்கள். சிலர் பயம் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்நிலை பெண்களிடத்தில் மறுதலையாகக் காணப்பட்டிருக்கிறது. அதிகமானவர்கள் பயமாக இருக்கிறது என்றும் சிலர் மாத்திரம் சந்தோஷத்தை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இங்கு பயம் என்பதன் அசாதாரண நிலைகளைத் தவிர்த்துப் பார்க்கும்போது,  அதாவது,  கடந்த கால கசப்பான அனுபவங்களால் திருமணம் குறித்து ஏற்படும் பயம், அல்லது அடுத்தவர்களது குடும்ப வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பார்த்து ஏற்படுகின்ற பயம் போன்றவை அசாதாரண பயம்கள். இவற்றைத் தவிர்த்து சாதாரணமாகப் பார்க்கின்ற பொழுது சந்தோசம்,  பயம் என்ற இரு உணர்வுகளும் வெளிப்பார்வையில் ஒன்றை ஒன்று முரண்பட்ட இரு உணர்வுகளாகத் தென்பட்டாலும்,  உண்மையில் திருமணம் என்ற விடயத்தில் இந்த இரு உணர்வுகளும் ஒன்றை ஒன்று முரண்பட்டவைகளல்ல. இரண்டுமே திருமணம் பற்றிய சார்பு மனப்பான்மையின் இருவேறுபட்ட வெளிப்பாடுகள் மாத்திரமே. அதாவது,  சந்தோசம் என்பதை ஒரு சமநிலையான மனநிலையாகவும் பயம் என்பதை சமநிலையற்ற ஒரு மனநிலையாகவும் நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மாற்றமாக சாதாரண நிலையில் திருமணம் பற்றிய சிந்தனையின் போது சந்தோசம் தோன்றினாலும் பயம் தோன்றினாலும் அது ஒரு சமநிலையான மனநிலையின் பிரதிபளிப்பே அன்றி வேறில்லை.

ஏனெனில், ஆண்-பெண் உறவின் ஆழங்கள் திருமணத்தின் மூலமே எட்டப்படுகின்றன. மனிதன் பிறக்கின்ற போதே அந்த உறவுக்கான இயல்பான தேடல் அவனில் விதைக்கப்பட்டே இருக்கின்றது. எனவே,  திருமணம் என்ற உறவு நினைவு கூறப்படுகின்ற பொழுது எல்லாம்,  ஒரு விதமான இன்பப் பூரிப்பு மேலெழுந்து வருவது இயல்பான ஒரு விடயம். அதே போல் பயம் என்பதும் இயல்பான ஒரு விடயமே. திருமணம் வாழ்க்கையின் ஒரு முக்கிய நிகழ்வு. இதற்கு முன்னர் அனுபவப்பட்டில்லாத ஒரு புதிய நிகழ்வு,  புதிய சூழல்,  புதிய முகங்கள்,  புதிய அனுபவங்கள் என்று எல்லாமே ஒரேயடியாய் புதிதாய் அமையப் போவதை நினைக்கும் போது நிச்சயம் மனதில், எவ்வளவு பெரிய தைரியசாலிக்கும் இலேசாய் ஒரு பயம் பிடித்துக் கொள்ளத்தான் செய்யும். புதியது மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பது இயல்பு.

எனவே,  திருமணம் எனும் போது சந்தோஷமும் பயமும் இயல்பானவையே. சாதாரண நிலையில் அவற்றில் எதுவும் சமநிலையற்ற மனநிலையைக் குறித்து நிற்க மாட்டாது. அல்லாஹ்தஆலா மனிதனைப் படைத்த இயல்பு நிலை இதுதான். அவனது படைப்பில் மாற்றமேதும் இல்லை” (ரூம் - 30) என்று அல்குர்ஆன் கூறுவது இந்த உண்மையையும் உள்ளடக்குகிறது. ஏனெனில்,  இதே சூறாவின் இருபத்தி ஓராவது வசனத்தில்,  அல்லாஹ்வின் படைப்பு அற்புதங்களைப் பேசும் போது,  ஆண்-பெண் உறவின் அபூர்வமான பிணைப்பைப் பற்றிப் பேசுகிறான். ஆணிலிருந்து பெண் படைக்கப்பட்டமையும்,  ஒருவர் மற்றவரில் அமைதி காண்பது பற்றியும்,  இருவருக்குமிடையிலான அன்பு,  இரக்கம் போன்ற பிணைப்புகளைப் பற்றியும் பேசுகிறான். இவை அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு அற்புதங்கள்,  சிந்திப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறது. - ரூம் – 21-

எனவே,  ஆண்-பெண் உறவின் இயல்பான ஈர்ப்புத் தன்மையும் பூரிப்புத் தன்மையும் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இங்கு சந்தோசம்,  பயம் ஆகிய இரு உணர்வுகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்குரிய ஒரு நிலையும் காணப்படுகிறது. இந்த வேறுபடுத்தலும் உண்மையில் எதிர்மறையானதல்ல. இதுவும் மனிதப் படைப்பின் ஒரு அற்புதத்தன்மையை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.

இந்த விடயத்தைப் புரிந்து கொள்ள நாம் ஏற்கனவே மனதில் சொல்லிப் பார்த்த நான் திருமணம் செய்யப் போகிறேன் என்ற வார்த்தைகளுடன் ஏன்?” என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டுப் பார்க்க வேண்டும். நான் திருமணம் செய்யப் போகிறேன் ஏன்? நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? கட்டாயம் திருமணம் செய்துதான் ஆக வேண்டுமா? திருமணம் செய்யாமல் இருக்க முடியாதா? திருமணம் செய்வதால் எனக்கு என்ன கிடைக்கிறது?

இந்தக் கேள்விக்கான பதில்கள் மிகவும் முக்கியமானவை. எந்தவிதமான புறத்தூண்டுதல்களோ அல்லது புறத்தடைகளோ இன்றி திறந்த மனதுடன்,  தெளிந்த மனதுடன் இந்தக் கேள்விக்கான பதில்களைப் பட்டியல் படுத்துங்கள். உண்மையாகவே உள்ளத்தில் தோன்றும் எல்லா உந்துதல்களையும் எழுத்தில் கொண்டு வாருங்கள்.

எழுதி விட்டீர்களா? அந்தப் பட்டியலை ஒரு தடவை அமைதியாக வாசித்துப் பாருங்கள். மீண்டும் வாசித்துப் பாருங்கள். அவை சந்தோஷத்தின் பிரதிபளிப்புகளாக மாத்திரம் அமைந்துள்ளனவா? அல்லது பயத்தின் பிரதிபளிப்புகளும் அங்கு காணப்படுகின்றனவா?

அதாவது ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்று நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொண்ட நியாயங்களில் சந்தோஷம் சம்பந்தப்பட்ட நியாயங்களும் பயம் சம்பந்தப்பட்ட நியாயங்களும் கலந்து காணப்படுகின்ற பொழுதுதான் நீங்கள் சமநிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எப்படி? என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதேவேளை சந்தோஷத்தையும் பயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய இடம் எது? என்ற கேள்வியும் தோன்றலாம்.


இங்குதான் திருமண வாழ்வை எதிர்நோக்கி இருக்கும் சகோதரர்களுக்காகவும் சகோதரிகளுக்காகவும் நாம் எழுதும் இந்தத் தொடரின் இரண்டாவது பகுதிக்கு வருகிறோம். அவர்கள் விடைதேட வேண்டிய ஐந்து கேள்விகள் உள்ளன. எப்போது? ஏன்? யார்? எவ்வாறு? எங்கே? என்பன. இவற்றில் இரண்டாவது கேள்வி ஏன்? இந்தக் கேள்விக்குரிய விடையைத் தேடுவதற்கான முன்னுரையாகவே மேலே எழுப்பிய சில கேள்விகள் காணப்படுகின்றன. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பத்திகளில் இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களுடன் சந்திப்போம். 
அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

Monday, December 2, 2013

ஹிஜ்ரத்தின் திட்டமிடல் பரிமாணங்கள்

முஹர்ரம் மாதம் வருகின்ற போதெல்லாம் தவறாது நினைவு கூறப்படுகின்ற ஒரு நிகழ்வுதான் ஹிஜ்ரத். நபியவர்களது வாழ்வில்,  வெறுமனே ஒரு புற அச்சுறுத்தலால் நிகழ்ந்த ஒரு சராசரி நிகழ்வாக இதனை நோக்க முடியாது. மாற்றமாக நபியவர்களது சமூக மாற்ற செயற்றிட்டத்தின் ஒரு மூலோபாய நகர்வாகவே இதனை நோக்க முடியும்.

நான் ஒரு வினாவை எழுப்பிப் பார்க்கிறேன். இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வைப் போன்று,  நபியவர்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காது ஒரே இரவில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கலாமே? அல்லாஹ்தஆலா ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஆம். நிச்சயமாக அதற்கு ஒரு வலுவான நியாயமிருக்கிறது. நபியவர்களது சமூக மாற்றச் செயற்பாட்டின் மூலோபாயக் கட்டங்களில் ஒன்றை நோக்கிய நகர்வாகவே ஹிஜ்ரத் அடையாளப்படுத்தப்படுகிறது. மக்காக் காலப் பகுதியில் தனிமனிதன்,  குடும்பம் என்ற பரப்புக்களில் மாற்றப் பணி அழுத்தமாக நடைபெற்றுள்ளது. இனி அடுத்து இஸ்லாம் ஒரு சமூக செயற்பாடாக மாற வேண்டும். இஸ்லாம் வெறுமனே தனிமனிதனாகவும், குடும்பமாகவும் வாழுகின்ற ஒரு மார்க்கமல்ல. அதற்கு ஒரு சமூக வடிவமிருக்கிறது. ஆட்சி வடிவமிருக்கிறது. சர்வதேச வடிவமும் இருக்கிறது. தஃவாவின் இந்த ஒவ்வொரு பரப்பும் சமூக மாற்றச் செயற்பாட்டின் ஒவ்வொரு மூலோபாயக் கட்டங்கள். இது எல்லாக் காலத்திலும் காணப்பட முடியுமானது. இது ஒரு மாறாத பொதுவிதி. இது மனித முயற்சி ஊடாகவே எட்டப்பட வேண்டும் என்ற அல்லாஹ்தஆலாவின் ஏற்பாட்டைத்தான்,  ஹிஜ்ரத்,  இஸ்ராவைப் போல் அற்புதமாக நிகழ்த்தப்படாமல்,  நபியவர்களது முயற்சிக்கு விடப்பட்டமை குறித்து நிற்கின்றது.

அதேபோல்,  நபியவர்களது தாயிப் விஜயம்,  ஹபஷா ஹிஜ்ரத் போன்றனவும் நபியவர்கள் இது போன்றதொரு மூலோபாய நகர்வுக்கான சூழலைத் தேடியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அத்துடன்,  அகபா உடன்படிக்கைகளும்,  முஸ்அப் இப்னு உமைர் (றழி) அவர்கள் மதீனாவுக்கு அனுப்பப்பட்டமையும்,  இஸ்லாம் சமூக வடிவமாகத் தொழிற்படும் அடுத்த மூலோபாயக் கட்டத்திற்கான தயார்படுத்தலாகவே நடைபெற்றமையைக் காணலாம்.

எனவே,  ஹிஜ்ரத் என்பது இஸ்லாமிய சமூக மாற்றச் செயற்பாட்டில் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கான ஒரு மூலோபாய நகர்வு. அதற்கான அடையாளமே ஹிஜ்ரத். இது ஹிஜ்ரத்தின் திட்டமிடல் பரிமாணங்களில் முதலாவது.

இனி இரண்டாவது பரிமாணத்திற்கு வருவோம். ஹிஜ்ரத் எனும் செயற்பாட்டின் இலக்கும்,  அதன் ஒவ்வொரு அமுலாக்கக் கட்டங்களும் அவற்றிற்கான கால வரையறைகளும் மிகத் தெளிவாகக் காணப்பட்டன.
இது வெற்றிகரமான ஒரு திட்டத்தின் தனிச் சிறப்பு என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு மதீனாவில் உருவாக வேண்டும். அதுதான் ஹிஜ்ரத் தொழிற்பாட்டின் இறுதி இலக்கு. அதன் முதல் கட்டம் அகபா உடன்படிக்கை. இரண்டாம் கட்டம் முஸ்அப் இப்னு உமைர் தாயிஆக அனுப்பப்பட்டு மதீனா சூழலை அதற்குத் தயார்படுத்துதல். மூன்றாம் கட்டம் முஸ்லிம்கள் சிறு சிறு குழுக்களாக மதீனாவுக்குச் செல்லுதல். நான்காவது கட்டம் நபியவர்கள் மதீனாவுக்குச் செல்லுதல்,  ஐந்தாவது கட்டம் மதீனா சாசனம் எனும் உடன்படிக்கை. ஆறாவது கட்டம் நபியவர்களது தலைமையில் ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல்.

மதீனாவின் இஸ்லாமிய சமூக அமைப்பு உருவாக்கப்பட்ட இந்த ஆறு கட்டங்களும்,  ஏதேச்சையான நிகழ்வுகளாக நடைபெறவில்லை. மாற்றமாக ஒரு நீண்டகால மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட செயற்பாடுகளே அவை. முதலாவது அகபா உடன்படிக்கையின்போது,  அடுத்த வருடம் மீண்டும் சந்திப்பதாக இருந்த உடன்பாடு,  தௌர் குகையில் மூன்று நாட்கள் தங்கியமை போன்றன கால அடிப்படையிலும் தெளிவாக இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தமையைக் காட்டுகிறது.
எனவே,  ஹிஜ்ரத்தின் திட்டமிடல் பரிமாணங்களில் இரண்டாவது,  அதன் இலக்கும், கட்டங்களும்,  காலமும் மிகத் தெளிவாக வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டமையாகும்.

ஹிஜ்ரத்தின் மூன்றாவது திட்டமிடல் பரிமாணம் இது ஒரு குழுச் செயற்பாடாக நடைபெற்றமை : இந்தக் குழுச் செயற்பாட்டில் இரண்டு முக்கிய சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஒன்று,  குழுச் செயற்பாட்டின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,  இதன் வேலைப்பரப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொறுத்தமான அந்தத் துறையில் சிறப்புச் தேர்ச்சி பெற்றோரே தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன்,  மிகவும் கச்சிதமாக வேலைப்பகிர்வு இடம்பெற்றிருந்தமையையும் காணலாம்.

மதீனா சூழலைத் தயார்படுத்துவதற்காக முஸ்அப் இப்னு உமைர் எனும் வேகமான விவேகமான இளைஞர் தெரிவு செய்யப்பட்டமையும்,  உடன் செல்வதற்கு அபூபக்ர் (றழி) அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையும்,  தௌர் குகையில் தகவல் அறிந்து சொல்ல அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் நியமிக்கப்பட்டமையும்,  உணவுப் பரிமாற்றத்திற்கு அஸ்மா பின்த் அபீபக்ர் நியமிக்கப்பட்டமையும் அமானிதங்களை கையளித்து விட்டு வருவதற்காக அலி (றழி) அவர்கள் நியமிக்கப்பட்டமையும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

இரண்டாவது சிறப்பம்சம்,  முஸ்லிமல்லாதவர்களுடைய பங்களிப்பும் இந்த வேலைத்திட்டத்திற்குப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்துல்லாஹ் இப்னு உரைகத் எனும் முஸ்லிமல்லாதவர் மதீனாவிற்கான வழிகாட்டியாகத் தொழிற்பட்டமை இதனைக் குறித்து நிற்கிறது.

ஹிஜ்ரத்தின் நான்காவது திட்டமிடல் பரிமாணம் இதன் இரகசியத் தன்மை. இங்கு இரகசியத்தன்மை என்பதன் பொருள்,  அதன் உள்ளார்ந்த வேலைத்திட்டம் என்ன? யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? ஒவ்வொன்றும் எந்தெந்த காலங்களில் நடைபெறப் போகின்றன? போன்ற விடயங்களின் இரகசியத் தன்மையே இங்கு நாடப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களும் நபியவர்களும் மதீனாவை விட்டுச் செல்கிறார்கள் அல்லது செல்லப் போகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாத ஒரு இரகசியமாக இருக்கவில்லை. உமர் (றழி) அவர்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டுத்தான் ஹிஜ்ரத் போனார்கள். ஆனாலும் இங்கு ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. இந்த ஹிஜ்ரத் நிகழ்வு அது வெற்றிகரமாக நடந்து முடியும் வரையில் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டு,  காபிர்கள் உசாராகி விடாமல் இருப்பதிலும் நபியவர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். அகபா உடன்படிக்கையின் இரகசியத்தன்மை,  ஹிஜ்ரத்தை சிறு சிறு குழுக்களாக மேற்கொண்டமை போன்றன இந்த உண்மையைச் சொல்கின்றன.

இங்கு மற்றொரு விடயத்தையும் குறித்துக் காட்ட வேண்டும். இந்த இரகசியத் தன்மை ஏன்? முஸ்லிம்கள் சிறு கூட்டத்தினர்,  அவர்கள் இது போன்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்தால்,  அந்த முயற்சியைத் தோல்வியடையச் செய்வது மாத்திரமல்ல,  முஸ்லிம்களது உயிர்களுக்கும் அது பாதிப்பாக அமையும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் நியாயம். இந்த நியாயத்தில் உண்மை இருக்கிறது. இருந்த போதிலும்,  மேற்குறித்த அபாயம் இல்லை எனின்,  அங்கு இரகசியத் தன்மையின் அவசியம் இல்லை என்ற ஒரு வாதம் தோன்ற முடியும். உண்மையில் இரகசியத் தன்மை என்பது அபாயத்தின் போது மாத்திரம் கையாளப்படும் ஒரு உத்தியல்ல. மாற்றமாக,  எல்லாவிதமான செயற்திட்டங்களிலும் கட்டாயமாக இரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒரு பரப்பு காணப்படுகிறது. அவை பகிரங்கப்படுத்தப்படக்கூடாது. அது பகிரங்கப்படுத்தப்படுவதே இராஜ துரோகமாகப் பார்க்கப்படுகிறது. நபியவர்களது சுன்னாவில் இதற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன. இதனால்தான் நபியவர்கள் ஒரு தடவை இவ்வாறு கூறினார்கள். உங்கள் தேவைகளை இரகசியமான முறையில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில்,  உங்களது நிஃமத்துகளைப் பார்த்து அடுத்தவர்கள் பொறாமை கொள்வார்கள்என்றார்கள். (தபரானி) இது சாதாரண எல்லா நிலைகளிலும் இரகசியத்தன்மை என்பது ஒரு செயற்பாட்டின் வெற்றிற்கு காரணமாக அமையும் ஒரு பெறுமானம் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

ஹிஜ்ரத்தின் ஐந்தாவது திட்டமிடல் பரிமாணம் அல்லாஹ் மீதான தவக்குல். நபியவர்கள் இலக்கில் மிகத் தெளிவாகக் காணப்பட்டார்கள். திறமையான ஒரு குழுவை பணிக்கு அமர்த்தினார்கள். வேலைப்பகிர்வை நுணுக்கமாக செய்திருந்தார்கள். இவை மாத்திரம் ஒரு செயற்றிட்டம் வெற்றி பெறுவதற்கு போதுமானவையாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் உதவி என்றைக்கும் அவசியம். காரணங்களை சிறந்த முறையில் கையாழ்வதைத்தான் மனிதன் செய்ய முடியும். அவற்றை வெற்றி பெறச் செய்வது அல்லாஹ்வின் கையிலேயே காணப்படுகின்றது. இந்த நம்பிக்கையுடன்தான் நபியவர்கள் ஹிஜ்ரத் செயற்பாட்டிற்குப் போனார்கள். தௌர் குகையில் வைத்து அபூபக்ர் (றழி) அவர்கள் காபிர்கள் கீழே பார்த்தால் நாம் மாட்டிக் கொள்ளலாம். நாம் இருவர் மாத்திரமே இருக்கிறோம் என்ற அச்சத்தை வெளியிட்டபோது,  நபியவர்கள் நாங்கள் இருவரல்ல. அல்லாஹ் மூன்றாவதாக உடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை நபியவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

திட்டமிடலின்போது,  இலக்கின் தெளிவும்,  பகிர்வின் நுணுக்கமும், ஆட்களின் திறமையும்,  மாத்திரம்தான் வெற்றிக்கு காரணம் என்ற பிரம்மை எம்மிடம் ஏற்பட்டுவிடக் கூடாது. இவற்றில் மாத்திரம் நம்பிக்கை வைத்து வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. இவற்றிற்கப்பால் அல்லாஹ் உதவி செய்வான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவசியம். அப்போதுதான் பௌதீகக் காரணிகள் கொஞ்சம் பலவீனப்படுகின்றபோது பின்வாங்க மாட்டோம். தோல்வி ஏற்பட்டாலும் நம்பிக்கையிழந்து போக மாட்டோம். வெற்றி வருகின்றபோது பெருமையடிக்க மாட்டோம்.


அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.