Thursday, April 16, 2015

சிந்தனை உதிப்புகளைக் கையாழ்தல்

அல்-குர்ஆனுடனான ஒன்றித்த உறவாடல் குறித்தும் அதற்குத் துணையாக அமையக் கூடிய காரணிகள் குறித்தும் கடந்த பல அமர்வுகளில் கலந்துரையாடியிருந்தோம். அவற்றில் அல்லாஹ் மீதான பயம், அல்குர்ஆனை ஓதும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் போன்ற இரு காரணிகள் குறித்து கடந்த அமர்வில் சில கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

இன்றைய அமர்வில் அல்குர்ஆனை ஓதும் போது தோன்றும் சிந்தனைகள் எவ்வாறு கையாளப்படல் வேண்டும்? என்பது குறித்து சில கருத்துக்கள் பரிமாறப்படவுள்ளன.

முதலில் அல்குர்ஆனை ஓதும் போது ஏற்படும் சிந்தனை உதிப்புகள் என்பது,  அல்குர்ஆனின் கருத்துக்களை விளங்குதல் என்பதோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். அந்த வகையில் இங்கு அறபுமொழியை அறிந்திருத்தல் என்பது இங்கு முக்கியமாக மாறுகிறது. அப்பொழுது அல்குர்ஆன் பேசும் கருத்துக்களுடன் இயைந்து பயணிப்பது மிகவும் இலகுவான ஒன்றாக அமைந்து விடுகிறது. மாத்திரமன்றி தன்னில் புதிய சிந்தனைகள் துளிர் விடுவதும் தாராளமாக நடைபெற முடியும்.

ஆனால் அல்-குர்ஆனுடன் ஒன்றித்துப் பயணிப்பதும், புதிய சிந்தனைகள் தோன்றுவதும்,  தனித்து அறபு மொழியறிவுடன் மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒரு விடயமுமல்ல. அறபு மொழியறிவு குறித்த செயற்பாட்டை இலகுபடுத்திக் கொடுக்கும் என்றிருப்பினும் அறபு மொழி அறிவு இல்லாத போதும் கூட ஒருவர் அல்குர்ஆனின் கருத்துக்களை சீரணிப்பதற்கும்,  புதிய சிந்தனைகளை உருவாக்குவதற்கும் இடமிருக்கிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஏனெனில்,  ஒருவர் அல்குர்ஆன் மொழி பெயர்ப்புகளை வைத்துக் கொண்டு அல்குர்ஆனை ஓதிவிட்டு,  மொழிபெயர்ப்புகள் ஊடாக குறித்த வசனங்களின் கருத்துக்கள் மீது கவனம் செலுத்த முடியும். அப்போதும் கூட அல்குர்ஆனின் கருத்துக்களுடன் ஒன்றித்த உறவாடலும் புதிய சிந்தனைகளும் சாத்தியப்படும். எனவே,  இந்தப் பத்தி அறபு மொழியறிவு உடையவர்களுக்கு மாத்திரம் உரியது என்று எவரும் கருதி விடத் தேவையில்லை.

அறிஞர் ஸலாஹ் காலிதி அவர்கள் குறிப்பிடுகிறார்கள் ஒருவர் தனது முழு உடலாலும் மனதாலும் அல்குர்ஆனுடன் வாழும் போது,  அல்குர்ஆனில் அவர் வாசிக்கும் வசனங்கள் அவருக்கு புதுப்புது அர்த்தங்களை வழங்கிக் கொண்டிருக்கும். புதிய சிந்தனைகள் மனதில் துளிர்விட்டுக் கொண்டிருக்கும். பற்பல சுவைகளை அவர் அனுபவிப்பார். மனது ஆனந்தமடையும். அல்லாஹ்வின் அருளில் அவர் மிதக்க ஆரம்பிப்பார். அப்பொழுது அவருக்கு வாழ்வின் அர்த்தம் புரியும். உள்ளத்தில் அமைதியை உணர்வார்என்றார்கள்.

இது முற்றிலும் உண்மை. என்றாலும் ஒரு வசனத்தை ஓதும் போது தோன்றும் புதிய சிந்தனையும் உணர்வும் மற்ற வசனத்திற்கு மாறும் போது மறைந்து விட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், மற்ற வசனத்தில் வேறு சிந்தனையும் வேறு உணர்வும் ஏற்பட்டு விடுகிறது. அல்குர்ஆனை ஓதுவதை நிறுத்திக் கொள்கிற போது,  உதித்த புதிய சிந்தனைகளும்,  பூரிப்பு உணர்வுகளும் மறந்து போகின்ற ஒரு நிலையும் ஏற்பட்டு விடும். தனது வாழ்க்கை விவகாரங்களில் மூழ்கி விடுகின்ற போது அல்லது ஷைத்தான் அவனை கவனயீனங்களுக்கோ பாவங்களுக்கோ இழுத்துச் செல்கின்ற போது தோன்றிய அந்த சிந்தனைகளும் பூரிப்புகளும் முழுமையாக மறைந்து போய் விடவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே,  அல்குர்ஆனை ஓதும் போது,  உதிக்கும் சிந்தனைகளை உடனுக்குடன் பதிவு செய்து கொள்வதே மிகவும் சிறந்தது. அவை மறந்து போகாமல் இருக்க இதுவே சிறந்த வழி. ஏனெனில் உதிப்புகள் நீண்ட நேரம் தங்கி நிற்பதில்லை. அடுத்த கணமே மறைந்து விடுகின்றன. இவ்வாறு செய்கின்ற பொழுது எமக்கு இரண்டு சந்தோசங்கள் இருக்கின்றன. ஒன்று அல்குர்ஆனின் சிந்தனைகளுடன் வாழ்ந்த சந்தோசம். இரண்டாவது அல்குர்ஆனிலிருந்து தான் பெற்ற சிந்தனைகளைத் தொகுத்து எடுத்த சந்தோசம்.

அந்தவகையில் அல்குர்ஆனை ஓதும் போது,  உடன் ஒரு குறிப்புப் புத்தகத்தையும் பேனையையும் வைத்துக் கொள்ளுங்கள். தோன்றும் கருத்துக்களை எல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். அவசரமாய் ஓதி முடிக்க வேண்டும் என்பது உங்கள் நோக்கமாக இருந்து விடக் கூடாது. அவசரமாக கடந்து போய்விட நினைப்பது சிந்தனைகள் உதிப்பதைத் தடை செய்து விடும். பல குர்ஆன்களை குறுகிய காலத்திற்குள் ஓதி முடித்து விட வேண்டும் என்பதுதான் நோக்கம் எனின்,  அங்கு அல்குர்ஆனின் கருத்துக்களுடன் வாழுதல் சாத்தியப்பட மாட்டாது.

நீங்கள் அல்குர்ஆனின் சிந்தனைகளுடன் வாழுவதற்கு ஆசைப்படுகிறீர்கள் எனின், எத்தனை ஜூஸ்உகள் ஓதினோம் என்பதைப் பார்க்காதீர்கள். எவ்வளவு நேரம் செலவு செய்தோம் என்பதைப் பார்க்காதீர்கள். 

ஸஹாபாக்களும் அறிஞர்களும் அல்குர்ஆனின் சிந்தனைகளுடன் சங்கமிப்பதற்காக எவ்வளவு நேரங்களை செலவு செய்திருக்கிறார்கள். சில சமயங்களில் ஓரிரவு முழுவதையும் ஒரு வசனத்தில் மாத்திரம் கழித்திருக்கிறார்கள். அதே சமயம் நேரத்தின் முக்கியத்துவத்தையும் அது வீணாய் கழிந்து விடக் கூடாது என்பதையும் ஸஹாபாக்களும் எமது முன்னோர்களும் நன்குணர்ந்தவர்களாக மாத்திரமன்றி செயற்பாட்டளவிலும் அதில் மிகுந்த கரிசனையுடனும் இருந்திருக்கிறார்கள். இவ்வாறு இருந்தும் அல்குர்ஆனுக்காக நீண்ட நேரங்களை வழங்கியிருக்கிறார்கள்.

அல்குர்ஆனை வாசிக்கும் போது உண்மையில் புதிய கருத்துக்கள் தோன்றுமா? தோன்றா விட்டால் என்ன செய்வது? என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழ முடியும். கவலைப்படாதீர்கள். நிச்சயமாய் புதிய சிந்தனைகள் தோன்றும். ஆனால் ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கும் அல்லது எதுவும் தோன்றாத ஒரு நிலையும் ஏற்படலாம். இது எதிர்பார்க்கக்கூடியதுதான். நாம் வலிந்து எதனையும் செய்யவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வசனத்தையும் ஓதிவிட்டு சற்று நின்று சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் அல்குர்ஆன் பேசும் கருத்தோட்டத்தைப் புரிந்து கொண்டு வழமை போல் நிதானமாக ஓதிச் சென்றால் மாத்திரம் போதுமானது. கொஞ்சம் கொஞ்சமாக எமது சிந்தனையில் கருத்துக்கள் உதிக்கத் தொடங்கும். நாளடைவில் அவை அதிகரிக்கத் தொடங்கும்.

ஒவ்வொரு தடவை அல்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும் போதும், வெவ்வேறு குறிப்புப் புத்தகங்களைப் பயன்படுத்துங்கள். முடிந்தவரை அந்த சிந்தனைகளை உங்கள் வாழ்வில் செயற்படுத்த முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு முறை அல்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும் போதும் வெவ்வேறாக கருத்துக்களை பதிவு செய்யும் போது நீங்கள் ஒரு அதிசயத்தைக் காண்பீர்கள். உங்கள் சிந்தனைகளில் அபரிமிதமான வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். ஆரம்பக் குறிப்பேட்டையும் இறுதிக் குறிப்பேட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும். எந்த ஒரு விடயத்திலும் ஆர்வத்துடன் உண்மையாய் உழைக்கின்ற பொழுது அல்லாஹ் அதில் வெற்றியைத் தருவான். நபியவர்கள் கூறினார்கள் யார் ஒரு நல்ல விடயத்தைப் பெற்றுக் கொள்ள ஈடுபாட்டுடன் முயற்சிக்கிறாரோ அல்லாஹ் அவனுக்கு அதனை வழங்கி விடுகிறான்என்றார்கள்.

சிந்தனை உதிப்புக்களைக் கையாள்வதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறை. அதாவது அல்குர்ஆனை தொடராக ஓதும் போது தோன்றும் சிந்தனைகளைப் பதிவு செய்தலும்,  அவற்றை முடிந்தவரை தனது வாழ்வில் செயற்படுத்த முயல்தலும். 

இரண்டாவது வழிமுறை குறித்த ஒரு தலைப்பைத் தெரிவு செய்து அந்த தலைப்பு தொடர்பில் அல்குர்ஆன் பேசும் சிந்தனைகளைத் தொகுத்தல். இதனை தனிப்பட்ட வகையில் ஒருவர் மேற்கொள்ளவும் முடியும் அல்லது அதனை ஒரு குழுவாக மேற்கொள்ளவும் முடியும். அதாவது ஒரு குர்ஆன் ஹலகாவில் ஒரு தலைப்பைத் தெரிவு செய்து,  ஒவ்வொருவரும் தாம் அன்றாடம் ஓதுகின்ற பகுதிகளில் இந்தத் தலைப்பு தொடர்பில் அல்குர்ஆன் பேசும் கருத்துக்களை ஒன்றுதிரட்டலாம். 

இன்ஷா அல்லாஹ் இந்த இரண்டாவது வழிமுறை தொடர்பான ஒரு உதாரணத்தை அடுத்த அமர்வில் நோக்குவோம்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.