Sunday, May 12, 2013

நாபிஉன் லிகைரிஹி (பிறருக்குப் பயனளிப்பவன்)


தனிமனித உருவாக்கப் பண்புகளில் மற்றுமோர் முக்கியமான பண்பு நாபிஉன் லி கைரிஹிஎன்பது. பிறர்க்குப் பயனுள்ளவனாக வாழ்தல்என்பது இதன் பொருளாகும். நாபிஹ்என பயன்படுத்தப்பட்டுள்ள இந்த சொற்பிரயோகம் பிறர்க்குப் பயனளிப்பவன்என்ற கருத்தில் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு சொற்பிரயோகமாகும்.

அந்த வகையில் நாபிஉன் லிகைரிஹிஎன்பது ஒரு ஷரீஅத் சொற்பிரயோகம் என்று கூறினால் அது நிச்சயமாக ஒரு மிகையான கருத்தாக இருக்க மாட்டாது.

நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் எவருக்கு தனது சகோதரனுக்குப் பயனளிக்க இயலுமாக இருக்கிறதோ அவன் அதனைச் செய்யட்டும். (முஸ்லிம்)
நபியவர்கள் மற்றோர் சந்தர்ப்பத்தில் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய மனிதன் பிறர்க்குப் பயனுள்ளவனாவான். (ஸஹீஹுல் ஜாமிஃ)

அடுத்து இதே கருத்தை அல்குர்ஆன் நன்மையான விடயங்களில் ஈடுபடல்என்ற சொற்பிரயோகத்தின் ஊடாக விளங்கப்படுத்தியுள்ளது.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஹ் செய்யுங்கள். ஸுஜூத் செயுங்கள். உங்களது இரட்சகனுக்கு இபாதத் செய்யுங்கள். நல்ல காரியங்களில் ஈடுபடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்என்கிறது. (ஹஜ் - 77)

இங்கு நல்ல காரியங்கள்என்ற கருத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள அறபுப் பதம் கைர்என்ற சொல்லாகும். அதனை விளங்கப்படுத்திய திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிரீன்) பயன்தரக் கூடிய அனைத்து விதமான செயல்களையும் இந்தச் சொல் குறிக்கும் என்றார்கள்.

மற்றோர் இடத்தில் அல்குர்ஆன் நபிமார்களது பணியைப் பற்றிப் பேசும் பொழுது இவ்வாறு கூறுகிறது:

நன்மையான விடயங்களைச் செயுமாறு நாம் அவர்களுக்கு அறிவித்தோம். (அன்பியா  73)

இந்த வசனத்திலும் நன்மையான விடயங்கள் என்பதைக் குறிக்க கைராத் என்ற சொற்பிரயோகமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் பயன்தரக்கூடியவைஎனும் விளக்கத்தையே தப்ஸீர் ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் நாபிஉன் லிகைரிஹிஎன்பது ஒரு ஷரீஅத் பெறுமானம் என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம். இனி அந்த சொல்லின் கருத்து குறித்து சற்று கவனம் செலுத்துவோம்.

நாபிஉன் லி கைரிஹிஎன்பதன் கருத்தை விளங்கிக்கொள்ள நபியவர்களின் ஒரு ஹதீஸை விளங்கிக் கொள்தல் மிகவும் பொறுத்தமானது. ஒரு தடவை ஒரு பிரயாணத்தின்போது நோன்பு நோற்காதிருந்தவர்கள் பிரயாணத்தின் அனைத்து பணிவிடைகளையும் செய்தார்கள். கூடாரங்களை அடித்தார்கள். ஒட்டகங்களுக்கு நீர் புகட்டினார்கள். உணவு தயாரித்தார்கள். நோன்பு நோற்றவர்களால் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. களைத்துப் போய் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள்; இன்று நோன்பு நோற்காதவர்கள்தான் எல்லா நன்மைகளையும் எடுத்துவிட்டார்கள்என்றார்கள்.

நோன்பு நோற்காதவர்களுக்கு எல்லா நன்மைகளும் ஏன் சென்றன? ஏனெனில் அவர்களது செயற்பாட்டின் பிரயோசனம் அவர்களுடன் மாத்திரம் சுறுங்கிவிடவில்லை. அது அடுத்தவர்களையும் சென்றடைந்தது. ஆனால் நோன்பு நோற்றவர்களைப் பொறுத்தவரையில் அதன் பயனை அவர்கள் மாத்திரமே பெற்றுக் கொண்டார்கள். அது பிறர்க்கும் கடத்தப்படவில்லை. எனவே, ஒருவனது செயலின் பயன் அவனுக்கு மாத்திரம் உரியதல்லாமல் பிறர்க்கும் கடத்தப்படக்கூடியதாக இருத்தல் மிகவும் முக்கியமானது. அதில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்கிறோம்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பார்வையில் எந்த செயலுக்குப் பெறுமானம் அதிகம்? செய்பவனுக்கு மாத்திரம் பயனளிக்கும் செயற்பாடா? அல்லது பிறர்க்கும் பயனளிக்கும் செயற்பாடா? நிச்சயமா இரண்டாவது அம்சம்தான். அந்த வகையில் ஒரு செயலின் முழுமையான கூலி அந்த செயல் பிறர்க்கும் பயனளிக்கும்போதுதான் கிடைக்கிறது. நாபிஉன் லிகைரிஹிஎன்பதன் பொருள் இதுதான்.

இதனால்தான் ஸலஃப்கள் எப்பொழுதும் கஷ்டத்தில் உள்ள ஒரு மனிதனைவிட தாம் சிறப்புக்குரியவர்கள் என்று நினைக்கமாட்டார்கள். மாற்றமாக கஷ்டத்தில் உள்ளவர்கள் தான் சிறப்புக்குரியவர்கள் என நினைப்பார்கள். காரணம் அவர்களுக்குப் பயனளிப்பதற்கான வாய்ப்பை தமக்கு ஏற்படுத்துகிறார்கள் என்பதற்காகவாகும்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் தனது ஆசிரியரான இமாம் இப்னு தைமியா அவர்களைப் பற்றிக் கூறும் பொழுது, அவர்கள் மக்களது தேவையை நிவர்த்திப்பதில் மிகவும் கடுமையாக உழைப்பார்கள் என்றார்கள்.

ஸைனுல் ஆப்தீன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இமாம் அலி இப்னுல் ஹுஸைன் அவர்கள் இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் உணவுப் பொருட்களை சுமந்து சென்று ஏழைகளின் வீட்டு வாசல்களில் வைத்து விட்டு வருவார்கள். இதனைச் செய்பவர் யார்? என்பது எவருக்கும் தெரியவில்லை. அவர் வபாத்தானதன் பின்னர் இந்த வேலை நடைபெறாத போதுதான், அது இவரால்தான் நடைபெற்றது என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களைப் பார்க்கும் போது அடுத்தவர்களுக்கு கிடைக்கும் பயன்தான் முக்கியமானது. அதுதான் நோக்கமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. தனது பயன் நோக்கமாகக் கொள்ளப்படவில்லை என்பது விளங்குகிறது. இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். இந்தப் பள்ளிவாசலில் ஒரு மாதம் இஃதிகாப் இருப்பதை விடவும் எனது சகோதர முஸ்லிம் ஒருவரின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அவருடன் நடந்து செல்வது எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியது என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ)

அடுத்து இன்னும் இரண்டு விடயங்கள் குறித்து பார்வையைச் செலுத்துவது சற்று பொறுத்தமானது என நினைக்கிறோம். ஒன்று பயனுள்ள விடயங்கள் எவை? என்பது பற்றிய ஷாPஅத் பார்வை பற்றியது. மற்றையது பிறர்என்பதன் பொருள் என்ன? என்பது பற்றியது.

முதலில் பயனுள்ளவை எவை? என்பது பற்றிய ஷாPஅத் பார்வையை இவ்வாறு விளங்கலாம். அல்லாஹ்தஆலா அல்குர்அனில் கூறுகின்றான்:

உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபிக்கும் ஒரு விடயத்தை நாம் அறிவித்திருக்கிறோம். அதுதான் என்னைத்தவிர வேறு கடவுள் கிடையாது. எனக்கு மாத்திரமே நீங்கள் அடிமைப்பட்டு வாழ வேண்டும்” (அன்பியா  25)

இந்த வசனம் எதனைச் சொல்கிறது? அல்லாஹ் உலகில் மனித இனத்திற்கு வழங்கிய தூதுத்துவத்தின் சாராம்சம் இதுதான். பூமியில் அல்லாஹுதஆலா தோற்றுவிக்க விரும்பிய மனித நாகரீகத்தின் அடிநாதம் இதுதான். அதனால்தான் எல்லா நபிமார்களுக்கும் சொல்லப்பட்ட செய்தியாக இது காணப்படுகிறது. அல்லாஹ் மாத்திரம்தான் கடவுள். அவனது கொள்கை மாத்திரம் தான் மனிதன் பின்பற்றி வாழ்வதற்குரியது. இதன் மீதுதான் மனித நாகரீகம் கட்டியெழுப்பப்படுகிறது.

இதனடிப்படையில் எழும் நாகரீகம்தான் மனிதனின் படைப்பியல்போடு இயைந்து செல்லக் கூடியது. இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டு வாழுதலை முழுமையாக மேற்கொள்ளுங்கள். இதுதான் அல்லாஹ்தஆலா மனிதனைப் படைத்த இயல்பாகும். அல்லாஹ்வின் இந்தப் படைப்பொழுங்கில் எந்த மாற்றமும் இல்லை. இதுதான் நேர்த்தியான மார்க்கமாகும். ஆனாலும் அதிகமான மனிதர்கள் இதனை அறியாதிருக்கிறார்கள்.” (ரூம் - 30)
அல்லாஹ் மாத்திரம் தான் கடவுள். அவனது தூதுத்துவம் மாத்திரம் தான் பின்பற்றுவதற்குரியது. இதுதான் மனித இயல்புடன் இயைந்து செல்வதற்குரியது. என்ற கோட்பாட்டை பலப்படுத்துவதற்குரிய அனைத்துமே பயனுள்ளவைதான். இந்தக் கோட்பாட்டுக்குத் துணை செயாத ஒன்று உலகில் நிச்சயமாப் பயனற்றதாகவே காணப்படும். எனவேதான் அல்லாஹ்வை நோக்கிய அழைப்பே உலகிலேயே மிக அழகிய வார்த்தை என்றும் மிகவும் பயனுள்ள வார்த்தை என்றும் அல்குர்ஆன் கூறியது.

அல்லாஹ்வை நோக்கி அழைத்து ஸாலிஹான அமல் செது நான் முஸ்லிம் என்றும் சொல்பவனை விடவும் அழகான வார்த்தை பேசுபவன் வேறு யார் இருக்க முடியும்?” (புஸ்ஸிலத் - 33)
எனவேதான், அந்த மனித நாகரீகத்தை நோக்கி அழைப்பு விடுக்கின்ற, முஸ்லிம் சமூகத்தை மனிதர்களுக்காகவே வந்துள்ள மிகவும் பயனுள்ள சமூகம் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

நீங்கள் மனிதர்களுக்காகவே அனுப்பப்பட்டுள்ள பயனுள்ள சமூகம். நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள். தீமையைத் தடுக்கிறீர்கள் (ஆலுஇம்ரான்)

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நன்மைஎன்பது மனித நாகரீகத்திற்கு பயனளிக்கக்கூடியது. தீமைஎன்பது மனித நாகரீகத்திற்கு பயனற்றது. எனவே, பயனுள்ளது ஏவப்படுகிறது. பயனற்றது தடை செயப்படுகிறது. இங்கு பயனுள்ளது எது? என்பதும் பயனற்றது எது? என்பதும் வேறுபடுத்தப்படுவது ஏற்கனவே நாம் கூறிய மனித நாகரீ உருவாக்கத்தின் அடிநாதக் கோட்பாட்டின் அடியாகவே நடைபெறுகிறது.

இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாத்தில் கல்வியும், பொருளாதாரமும், பண்பாடும், ஒழுக்கமும், ஆன்மீகமும், சகோதரத்துவமும் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், இவையனைத்தும் அல்லாஹ்தஆலா எதிர்பார்க்கும் மனித நாகரீகத்திற்கு பயனளிக்கும் காரணிகள். இதனால்தான் மனித நாகரீகத்தை இறுதியாக முழுமையான வடிவில் நடைமுறைப்படுத்திக் காட்ட வந்த நபியவர்கள் இந்த ஒவ்வொரு காரணியையும் ஆழ்ந்து வலியுறுத்தியுள்ளார்கள்.

இவற்றில் ஒன்றை மாத்திரம் உதாரணத்திற்காக அடையாளப்படுத்திக் காட்டலாம். கல்வியைப் பற்றி நபியவர்கள் கூறியதைப் பாருங்கள். அல்லாஹ்வும் மலக்குமார்களும் வானங்களில் உள்ளவர்களும், பூமிகளில் உள்ளவர்களும், ஏன் தமது குழிகளில் வசிக்கும் எறும்புகளும், கடலில் உள்ள மீன்களும், மனிதர்களுக்கு நல்ல விடங்களைக் கற்றுக் கொடுப்பவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கின்றன என்றார்கள்.

வானங்கள், பூமிகளில் உள்ள எல்லா உயிரினங்களும்,எத்தனை உயிரினங்கள்!? எத்தனை பறவைகள்?! எத்தனை மிருகங்கள்?! நிச்சயமாக மனிதகணக்கியல் பெறுமானங்களுக்கு அப்பால்பட்ட எண்ணிக்கையாகத்தான் இருக்கும். இவற்றுடன் அல்லாஹ்வும், மலக்குமார்களும், ஸலவாத்துச் சொல்கின்றார்கள். யாருக்கு? கல்வியைப் போதிக்கின்றவனுக்கு, ஏன் இந்த சிறப்பு? அல்லது ஏன் இவையனைத்தும் இவனுக்குச் ஸலவாத்துச் சொல்ல வேண்டும்?

ஏனெனில், கல்வி என்பது இந்த அனைத்திற்கும் பயனளிக்கக் கூடியது. அதனுடைய பயன் இந்த எல்லா பரப்புக்களையும் தொடக்கூடியது. ஒவ்வொரு உயிருள்ள பொருளுக்காகவும் உதவி செய்வது நன்மையைப் பெற்றுத் தருகிறது என்றும் ஒரு நாய்க்கு நீர் புகட்டினாலும் சுவர்க்கம் கிடைக்கிறது என்றும் கல்விதானே சொல்லிக் கொடுக்கிறது. எனவே, உயிரினங்கள் அந்த நன்றிக் கடனைத் தான் ஸலவாத்தாக மொழிகின்றன.

உண்மையில் மனித நாகரீகம் என்பது இதுதான். அது உலகின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு படைப்பிற்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்குகிறது. உரிய கண்ணியத்தைக் கொடுக்கிறது. அதன் பரப்பு இந்த வானங்கள் பூமிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். அதனால்தான் கல்வி என்ற காரணி இந்த முழுப் பரப்பையும் தழுவியதாக இருக்கின்றது.

அடுத்த விடயம் பிறர்என்பதன் கருத்து பற்றியது. இதனை மூன்று வகையில் நோக்கலாம் என நினைக்கிறோம். பிறர் என்பதன் முதலாவது கருத்து அது தனக்காக அல்ல என்பதாகும். அல்குர்ஆனில் நபிமார்கள் சொல்லும் செய்தியாக அல்லாஹ்தஆலா ஒரு விடயத்தை பல இடங்களில் கூறுகின்றான்.

நான் உங்களிடத்தில் எந்தக் கூலியையும் எதிர்பார்க்கவில்லை. எனக்குரிய கூலி நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கிறது. (ஷுஅரா - 109)

இந்த வசனத்தின்படி நபிமார்கள் தாம் மேற்கொள்ளும் பணி ஊடாக பிறரது நலனையே நோக்கமாகக் கொள்கிறார்கள். அடுத்தவர்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களேயன்றி தமக்கு அதனால் ஒரு பயன் கிடைக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இல்லை.

அதாவது உலகில் தான் எதனையும் பெற்றுக் கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. உலகில் தமக்கு எதுவும் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அல்லாஹ்விடத்தில் தமக்கு கூலி கிடைத்தால் போதுமானது என்றுதான் எதிர்பார்த்தார்கள். எனவே, “பிறர்என்பது தனக்குப் பயனளித்தல்என்பது நோக்கமாக இல்லாமல் பிறர்க்குப் பயனளித்தல்என்பது நோக்கமாகக் காணப்படுவதுடன், தனது அந்த செயலுக்காகவும் மனநிலைக்காகவும் கூலியை அல்லாஹ்விடம் மாத்திரம் எதிர்பார்த்தலாகும்.

அடுத்து பிறர் என்பதன் இரண்டாவது கருத்து அது தான் அல்லாத பிற அனைத்தும்என்பதாகும். இந்த விடயம் இஸ்லாமிய ஷரீஅத்தில் மிகத் தெளிவான ஒரு உண்மையாகும். முழு மனித இனத்தையும் ஆதமுடைய சந்ததிகள் என்று கூறுவதன் மூலம் மனித சகோதரத்துவத்தை அடையாளப்படுத்திக் காட்டுகிறது. மனித நடத்தைக்கும் பௌதீக உலகத்திற்குமிடையிலான தொடர்பை இனம் காட்டுவதன் மூலம் ஒரு நாகரீகத்தை அடையாளம் காட்டுகிறது.

இதனால்தான் பிறர்க்குப் பயனளிப்பது தொடர்பான அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் அதிகமாக பொதுப்படையான அமைப்பில் பிரயோகிக்கப்பட்டுள்ளமை யைக் காணலாம். நாம் ஏற்கனவே கூறிய அல்குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் அனைத்தும் இந்தக் கருத்தைச் சொல்ல போதுமானவையே. இருப்பினும் முக்கியமான ஓரிரு விடயங்களைத் தொட்டுச் செல்கிறோம்.

ஸுறதுல் கஸஸில் மூஸா (அலை) அவர்கள் மத்யன் நகரின் நீர் நிலையில் எந்தவிதமான பிரதி உபகாரத்தையும் எதிர்பாராமல் இரண்டு பெண்களுக்கு உதவி செய்த சம்பவத்தை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இங்கு சிரமப்படுகின்றவர்கள் என்ற அடிப்படையில் இருந்துதான் உதவி செய்தல் நடைபெற்றிருக்கிறது.

நபியவர்கள் தூதுவராக அனுப்பப்பட முன்னர் அவரது பண்பாடுகள் எவ்வாறு காணப்பட்டிருக்கின்றன என்று கதீஜா (றழி) அவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேளுங்கள். அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். ஏனெனில், நீங்கள் உறவுகளை இணைந்து நடக்கிறீர்கள். சிரமப்படுகின்றவர்களைத் தாங்குகிறீர்கள்வசதியற்றவர் களுக்கு உழைத்துக் கொடுக்கிறீர்கள். விருந்தினர்களை கௌரவிக்கிறீர்கள். மனிதர்களது துயரச் சம்பவங்களில் அவர்களுக்கு உதவுகிறீர்கள் என்றார்கள்.

நபியவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களைக் கண்டு பயந்தபோது, கூறப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் இவை. ஜிப்ரீல் (அலை) ஒரு தீய சக்தியல்ல. ஒரு நல்ல சக்தி. அல்லாஹ் நிச்சயமாக ஒரு தீய சக்தியை அனுப்பி உங்களை இழிவுபடுத்த மாட்டான். ஏனெனில், நீங்கள் உயர்ந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பது தான் கதீஜா (றழி) அவர்களின் ஆறுதல். இங்கும் மனிதன்என்ற அடிப்படை மீதுதான் உதவி செய்தல் நிகழ்ந்துள்ளது.

பிறர்என்பதன் மூன்றாவது கருத்து, அது மனித நாகரீ உருவாக்கத்திற்கான முஸ்லிம்களின் கூட்டு ஒத்துழைப்பு என்பதாகும். அல்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைப்பவர்கள். அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள். தீமையைத் தடுக்கிறார்கள்” (பகரா)

இந்த வசனம் மிகத் தெளிவாக சில விடயங்களைப் பேசுகின்றது. முதலில் ஒரு கூட்டு ஒத்துழைப்பு பற்றிப் பேசுகின்றது. அது ஆண் பெண் என்ற இரு தரப்பும் இணைந்த ஒரு வடிவில் காணப்படுவதாகக் கூறுகிறது. அடுத்து இது எல்லா மனிதர்களையும் குறிக்கவில்லை. ஈமானுள்ள மனிதர்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றது. அடுத்து இவர்களது பணியைப் பற்றிப் பேசுகின்றது. அந்தப் பணி மனித நாகாPகத்தை கட்டி எழுப்புவதற்காக பயனுள்ளதை ஏவுதலும் பயனற்றதைத் தடை செய்தலுமாகும்.

எனவே, முஸ்லிகள் மத்தியில் தொழிற்படல் அது மனித நாகரீகத்தை கட்டியழுப்புவதற்கான கூட்டு ஒத்துழைப்பு என்பது நாபிஉன் லி கைரிஹிஎன்பதனால் நாம் புரிந்து கொள்ளும் ஒரு கருத்தாகும். அந்த முஸ்லிம்கள் மத்தியிலான கூட்டு ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாகவே முஸ்லிம்கள் மத்தியிலான ஈமானிய சகோதரத்துவம். பரஸ்பர உதவி, தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற பல விடயங்கள் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்தப்பட்டுள்ளமையைக் காணலாம்.

உதாரணமாக யார் ஒரு முஃமினுடைய உலகச் கஷ்டம் ஒன்றை நீக்குகின்றாரோ அவரது மறுமைக் கஷ்டம் ஒன்றை அல்லாஹ் நீக்கி விடுவான்என்று நபியவர்கள் கூறினார்கள் (புஹாரி).

இறுதியாக, “நாபிஉன் லி கைரிஹிஎன்ற பண்பு தனிமனித உருவாக்கத்தில் என்ன முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பது பற்றி சுருக்கமாக சில அவதானங்களைச் செலுத்துவோம்.

முதலில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல்,“நாபிஉன் லிகைரிஹிஎன்பது ஒரு ஷரீஅத் பெறுமானமாகும். ஒவ்வொரு தனிமனிதர்களிலும் காணப்பட வேண்டிய ஒரு உயர்ந்த பெறுமானம். எனவே, தனிமனித உருவாக்கத்தில் இதன் பங்கு அவசியமாகிறது.

அடுத்து, “அடுத்த மனிதனுக்குப் பயனளித்தல்என்பது ஒரு சிறந்த தஃவாவாக அமைகிறது. இஸ்லாத்தின் உயர்ந்த பண்பாடுகளையும், இலட்சியங்களையும் நாம் வார்த்தைகளாகப் பேசுவதை விடவும், அவற்றை நடைமுறைகளாகக் காட்டுவது பலரை இஸ்லாத்தின் பால் ஈர்ப்பதற்குக் காரணமாகிறது.

இங்கு ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு உதவி செய்தலை மார்க்கக் கடமையாக எந்தவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பாராமல் ஒரு கூட்டத்தினர் செய்கிறார்கள். எனின், அங்கு அந்த மனிதனின் மனது இவர்களின் மார்க்கம் என்ன என்று பார்க்க முற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அந்தவகையிலும் தனிமனித உருவாக்கத்தில் இந்தப் பண்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்து, நாம் வாழும் பல்லின சமூக சூழலில் சகவாழ்வுஎன்பது ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது. சகவாழ்வுஎன்ற இந்த சிந்தனை, பரஸ்பரம் பயனளித்தல் என்பதிலேயே தங்கியிருக்கிறது. அல்குர்ஆன் ஏனைய சமூகங்களுடன் நீதியாக நடந்து கொள்ளுமாறு கூறுகிறது.

அத்துடன், அவர்களுக்குப் பயனளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கூறுகிறது (மும்தஹினா - 08) இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள பிர்என்ற சொற்பிரயோகம் நன்மை பயக்கக்கூடிய எல்லாவிதமான நற்செயல்களையும் குறிக்கக்கூடிய ஒரு சொல்லாகும்.

அதன் பிரயோக வடிவங்களைத்தான் முஸ்லிமல்லாத அயலவருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது பற்றியும் முஸ்லிமல்லாத உறவினருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது பற்றியும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்த வகையில் இவை அனைத்தும் பயனளித்தல் எனும் கருத்தைப் பிரதிபளிப்பனவாகவே காணப்படுகின்றன. எனவே, சகவாழ்வு என்பது பயனளித்தல் என்ற வகையில் தனிமனித உருவாக்கத்தில் நாபிஉன் லி கைரிஹிஎன்பது முக்கியம் பெறுகிறது.