Wednesday, April 25, 2018

தஃவாவின் மகாஸிதுகள்


இலங்கை சூழலிலிருந்து ஒரு பார்வை



ஆய்வுச் சுருக்கம்

இஸ்லாமிய தஃவா என்பது ஒரு நாகரீக வேலைத்திட்டம் என்றவகையில் அதன் மகாஸிதுகளைப் புரிந்து கொள்வது என்பது,  குறித்த சூழலில் ஒரு சமூகத்தின் பணியைப் புரிந்து கொள்வதற்குத் துணைசெய்யக் கூடியது. இலங்கைச் சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பணியைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. 

அந்தவகையில் இலங்கைச் சூழலின் பிரதான இயல்பை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதும்,  தஃவாவின் மகாஸிதுகள் என்பது எவ்வாறு வரையறை செய்யப்படல் வேண்டும் என்பதும் இங்கு பிரதானமாக ஆராயப்படுகிறது. இலங்கை முஸ்லிம் சமூகம் தூதுத்துவம் வழங்கப்பட்ட சமூகம் என்றவகையில்,  அவர்கள் ஏன் இந்த தஃவாவை செய்ய வேண்டும்? இலங்கை சமூகத்தில்,  குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலும் பொதுவாக இலங்கை சமூகத்திலும் எவற்றை அடைந்து கொள்ள வேண்டும்?  அதற்காக கைக்கொள்ள வேண்டிய மூலோபாயங்கள் எவை? போன்ற விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படுகிறது. இது களவாய்வாகவன்றி சிந்தனை உருவாக்கம் ஒன்றாகவே பேசப்படுகிறது.

முன்னுரை

தஃவாவின் மகாஸிதுகள் என்ற கருத்தைப் பேச முன்னர் மூன்று முன்னுரைகள் அவசியப்படுகின்றன.

முதலாவது முன்னுரை,  தஃவா என்ற செயற்பாடே இஸ்லாத்தின் மகாஸிதுகளில் ஒன்று.(1) ஏனெனில் இஸ்லாத்தில் நீண்டு நிலைத்திருக்கக் கூடிய ஒரு பண்பையே மகாஸித் என்பது குறித்து நிற்கின்றது.  தஃவா என்பதும் அதுபோன்றதுதான்,  இவ்வுலகில் நீண்டு நிலைத்திருக்க வேண்டிய ஒரு பணி. எந்த நிலையிலும் இடை நிறுத்திக் கொள்ளப்படவோ அல்லது போதும் என்று கருதப்படுவதற்கோ உரிய ஒரு பணியல்ல. தஃவா எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் மனித சமூகத்தின் அழிவு ஆரம்பிக்கிறது. 

ஒரு தடவை நபியவர்கள் சமூகத்தின் அழிவு நெருங்கி வருவது பற்றி பேசிய பொழுது ஆயிஷா (றழி) அவர்கள்,  எமக்கு மத்தியில் ஸாலிஹான மனிதர்கள் வாழ்கின்ற போதிலும் அழிவு ஏற்படுமா? எனக் கேட்ட போது,  நபியவர்கள் ஆம் தீமைகள் அதிகரிக்கின்ற போது என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்) ஒரு சமூகத்தில் தீமைகள் அதிகரித்திருக்கின்றன என்பதன் பொருள் அங்கு தஃவா நடைபெறவில்லை அல்லது பலவீனப்பட்டிருக்கிறது,  என்பதாகும். அதாவது நன்மைகள் ஏவப்படுவதும் தீமைகள் தடுக்கப்படுவதும் அங்கு நடைபெறவில்லை. அதுவே ஒரு சமூகம் அழிக்கப்படுவதற்குக் காரணமாகிறது.

அதேவேளை அல்குர்ஆனும் சுன்னாவும் தஃவாவின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள அளவையும் வடிவத்தையும் பார்க்கின்ற பொழுது,  தஃவா என்ற பணி தனித்து இஸ்லாத்தின் மகாஸித்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தஃவா எனும் செயற்பாடும் இஸ்லாத்தின் மகாஸித்களில் ஒன்று என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய முதலாவது உண்மை.

இரண்டாவது முன்னுரை,  தஃவாவின் மகாஸிதுகள் எவ்வாறு வரையறை செய்யப்படல் வேண்டும் என்பது பற்றியது,  அதாவது,  தஃவாவின் மகாஸிதுகள் எனும் போது, அது ஒரு இலக்கு நிலையை மாத்திரம் குறிக்க மாட்டாது. மாற்றமாக அது இலக்காகவும் காணப்பட முடியும்,  மூலோபாயமாகவும் அமைய முடியும்,  அணுகுமுறையாகவும் இருக்க முடியும். இதனை மற்றொரு வகையில் கூறினால் மகாஸிதுத் தஃவா என்பது எவ்வாறு வரையறை செய்யப்படும் எனின்,  பின்வரும் மூன்று வினாக்களுக்கான விடைகளாகவே அவை அமையும்.

1.            தஃவா ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்?
2.            தஃவாவின் மூலம் நாம் என்ன விளைவை அடைந்து கொள்ளப் போகிறோம்?
3.            தஃவா எந்தக் காரணிகள் மீது எழுந்து நிற்கின்றது?

இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகளும் நிச்சயமாக ஒரே வடிவில் அமையப் போவதில்லை. ஆனால் இவற்றிற்கான அனைத்துப் பதில்களும் மகாஸித் என்ற வட்டத்தில் உள்ளடங்குபவையாகும்.(2) இது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய இரண்டாவது உண்மை.

மூன்றாவது முன்னுரை,  இலங்கைச் சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பாத்திரம் எத்தகையது என்பது பற்றியது. இது குறித்து ஷரீஆ பின்புலத்தில் நின்று பார்க்கின்ற பொழுது,  நாம் இரண்டு உண்மைகளின் மீது நின்று முஸ்லிம்களின் பாத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

1.            முஸ்லிம் சமூகம் என்பது,  தூதுத்துவம் கிடைக்கப் பெற்ற சமூகம். அந்தத் தூதுத்துவம் எல்லா மக்களுக்குமானது. அதன் போதனைகள் மனித நலனுக்கானவை. இதனைத்தான் அல்குர்ஆன் உலகத்தாருக்கு அருள் என்று அடையாளப்படுத்தியது. எனவே இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடையாளப்படுத்தும் பொழுது,  இந்தப் பண்பைத் தவிர்த்து அதனை அடையாளப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தப் பண்பின் அடிப்படையில்தான் அது தஃவா சமூகமாக மாறுகிறது. முஸ்லிம் சமூகம் எங்கு வாழ்ந்தாலும் அதனை விட்டும் பிரிக்க முடியாத ஒரு அடிப்படைப் பணி இது.

2.            இந்தப் பூமி முழுவதும் அல்லாஹ்வினுடையது. அது முழுமையாக மனிதப் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒரு முஸ்லிம் இந்தப் பூமியில் எந்த இடத்திலும் வாழலாம். எந்த சமூகத்திற்கு மத்தியிலும் வாழலாம். அவன் தான் பூமியை உங்களுக்கு வசமானதாக அமைத்துத் தந்துள்ளான். அதன் எந்தத் திசையிலும் நீங்கள் பரந்து சென்று அவனது அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்…” (முல்க் - 15) என்று அல்குர்ஆன் இந்த உண்மையைக் கூறியது. அந்தவகையில் இலங்கை என்பதும் மனிதனின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள அல்லாஹ்வின் பூமியின் ஒரு பகுதிதான். இங்கு வாழும் ஒரு முஸ்லிமின் வாழ்வும் அடிப்படையான இஸ்லாமிய வாழ்வுதான்.

மேற்கூறப்பட்ட இரு உண்மைகளின் ஊடாகவும் நாம் ஒரு செய்தியைப் புரிந்து கொள்கிறோம். அந்தச் செய்தி இதுதான். முஸ்லிம் சமூகத்தின் பணி ஒரு மைய நிலைப் பணி. அது முஸ்லிம் சமூகத்தினுள் மாத்திரம் சுறுங்கியதல்ல. எல்லா சமூகங்களையும் மையப்படுத்தியது. முஸ்லிம் சமூகம் ஒதுங்கிய சமூகமல்ல. அது மைய நிலைச் சமூகம். எல்லாச் சமூகங்களுடனும் கலந்து பங்காற்றும் சமூகம். இலங்கையில் முஸ்லிம்கள் எண்ணிக்கையின் அடிப்படையில்,  சிறுபான்மைச் சமூகம்தான். ஆனால் சிறுபான்மை என்பது பலவீனம் அல்ல. சிறுபான்மை வாழ்வு என்பது ஒதுங்கிய வாழ்வு அல்ல. ஏனெனில் இலங்கை முஸ்லிம்கள் பிறிதொரு இடத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த சமூகமல்ல. இலங்கை மண்ணில் பிறந்து உருவாகிய சுதேசிகள்.

 ஆசிய சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் ஐரோப்பிய சிறுபான்மை முஸ்லிம்களுக்குமிடையிலான முக்கியமானதொரு வேறுபாடாக இதனை அடையாளப்படுத்தலாம். ஐரோப்பிய சிறுபான்மை முஸ்லிம்களில் அதிகமானோர் இடம்பெயர்ந்து வாழும் மூல அறபுக் குடிகள். அந்தவகையில் பிக்ஹுல் அகல்லிய்யா எனும் சிறுபான்மைச் சிந்தனை ஐரோப்பிய சூழலை மையப்படுத்தியே தோற்றம் பெற்றது. அந்தவகையில் ஒரு தற்காலிக அல்லது விதிவிலக்கான சூழலை எதிர்கொள்வதற்கான பொறிமுறையாகவே அந்த சிந்தனை பேசப்பட்டது. ஏனெனில் அவர்களது சுதேச பூமி வேறு,  இடம்பெயர்ந்து வாழும் பூமி வேறு. ஆனால் ஆசிய முஸ்லிம் சிறுபான்மையினரது நிலைமை அவ்வாறல்ல. அவர்கள் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இஸ்லாத்தை தமது மதமாக பெற்றவர்கள். எண்ணிக்கை அடிப்படையிலேயே அவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். எனவே,  இந்த மக்களின் இஸ்லாமிய வாழ்வு என்பது,  தற்காலிக சூழலுக்கான பொறிமுறையாகவன்றி,  இந்த சூழலின் இயல்பான,  பல்லின வாழ்வொழுங்குக்கான இஸ்லாமியத் தீர்வாகவே அமைய வேண்டும். இது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய மூன்றாவது உண்மை.

அந்தவகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் என்பது மனித நலனுக்கான தூதை சுமந்து கொண்டு இலங்கை நிலத்தில் வாழும் ஒரு சமூகம். இந்த சமூகம் தனது தூதை எத்தி வைக்கும் பொழுது அடையப் பெற வேண்டிய மகாஸிதுகள் என்ன என்பது குறித்துத்தான் முக்கியமாக இந்தப் பத்தியில் பேசப்படவுள்ளது.

தஃவா ஏன் மேற்கொள்ளப்படல் வேண்டும்?

ஒரு குறித்த தலைப்பின் மகாஸிதுகள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான முதல் கேள்வி இது. மிகப் பெரும்பாலும் இந்தக் கேள்விக்கான பதில் கால,  இட,  சூழல் பரிமாணங்களுக்குக் கட்டுப்பட்டதாகவன்றி,  பொதுப்படையானதாகவே அமைகிறது. அந்தவகையில் இஸ்லாமிய தஃவா ஏன்? என்ற கேள்விக்கான பதில்களும் மிகவும் பொதுவானதகாவே காணப்படுகின்றன. இவை எல்லா சூழல்களுக்கும் உரியன. இவ்வகை மகாஸிதுகள் குறித்து அறிஞர்கள் பலவகையில் அணுகியிருந்த போதிலும் இங்கு மிக முக்கியம் என்று கருதப்படக் கூடிய மூன்று மகாஸிதுகள் மாத்திரம் 

அடையாளப்படுத்தப்படுகின்றன.(3) இவற்றில் இரண்டு உலக வாழ்வுடன் சம்பந்தப்பட்டவை. மற்றையது மறுமை வாழ்வுடன் சம்பந்தப்பட்டது.

1.            முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய வாழ்வை விருத்தி செய்தல் : தஃவா ஏன் எப்பொழுதும் இடைவிடாது நடைபெறல் வேண்டும்? என்ற கேள்விக்கான முதல் பதில் இது. முஸ்லிம்களது இஸ்லாமிய வாழ்வு எப்பொழுதும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் இதுதான் ஈமானின் இயல்பு. அது கூடிக் குறையும் பண்பு கொண்டது. நபியவர்கள் கூறினார்கள் ஈமான் எழுபது பிரிவுகளைக் கொண்டது. அதில் ஆகக் குறைந்த படித்தரம் பாதையிலிருந்து ஒரு தீங்கை அகற்றுவது. அதியுயர்ந்த படித்தரம் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என மொழிவது என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்,  திர்மிதி) ஈமான் பல படித்தரங்களில் அமைய முடியும். எனவே அங்கு தொடர் தேர்ச்சியான புதுப்பித்தல் நடவடிக்கை ஒன்று அவசியப்படுகிறது. இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது. ஞாபகப்படுத்துங்கள். அந்த ஞாபகப்படுத்தல் முஃமின்களுக்குப் பயனளிக்கும் (தாரியாத் - 55) இஸ்லாத்தை வாழ்வாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது,  இஸ்லாமிய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் வரும். தொய்வுகள் ஏற்படும். கால,  சூழல் மாற்றங்கள் ஏற்படும். இப்பொழுது இஸ்லாம் பற்றிய புரிதல் மற்றும் நடைமுறை அனைத்தும் மீளவும் தூக்கி நிறுத்தப்படல் வேண்டும். இந்த செயற்பாடு நிரந்தரமானது. முற்றுப் பெறுகின்ற ஒரு செயலல்ல. தொடர்ந்து நடைபெற வேண்டியது. அதனாலேயே இது ஒரு மக்ஸதாகிறது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தவரையில்,  அவர்களது மார்க்க உணர்வும்,  மார்க்க நடத்தையும் என்றும்  உயிர்ப்புடன் பேணப்படல் வேண்டும். இது அவர்களது மறுமை வெற்றிக்கானது மாத்திரமன்றி,  இலங்கையில் அவர்களுக்கான தார்மீகப் பொறுப்பை சுமப்பதற்கான தயார்படுத்தலுமாகும். அந்தவகையில் அவர்களது ஈமானை வளர்த்தல்,  நடத்தைகளைச் சீரமைத்தல்,  பாவங்களில் இருந்து பாதுகாத்தல், பத்வாக்களை வழங்குதல்,  சிந்தனையை சீரமைத்தல்,  ஒற்றுமையைப் பேணுதல் போன்ற பல்வகை வேலைத்திட்டங்களாக அவை பரிணாமம் அடைய முடியும்.

இவற்றிற்கப்பால்,  இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வி,  பொருளாதாரம்,  அரசியல் என அனைத்துப் பரப்புக்களிலும் ஒரு முன்மாதிரி சமூகமாக எழுந்து நிற்கவேண்டிய கடப்பாடும் இருக்கின்றது. இதுவும் இஸ்லாமிய வாழ்வை விருத்தி செய்தல் என்ற பரப்பினுள் உள்ளடங்கக் கூடியதுதான். ஏனெனில் முஸ்லிம் சமூகத்தின் தூதுத்துவப் பணியின் சாத்தியம்,  அவர்கள் தம்மை ஒரு முன்மாதிரி சமூகமாக வடிவமைப்பதிலும் தங்கியிருக்கிறது.

2.            முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் தூதை எத்தி வைத்தல் : தஃவா என்ற செயன்முறை மூலம் அல்குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்திய அடிப்படைக் கருத்து இதுதான். இஸ்லாத்தின் தூதை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத ஒரு நிலைமை இந்த உலகில் எவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது. நாளை மறுமை நாளில் எந்த ஒரு மனிதனும் எனக்கு இஸ்லாத்தின் தூது கிடைக்கவில்லை என்ற ஒரு நியாயத்தை முன்வைக்கும் நிலை காணப்படக்கூடாது. கால,  இட,  சூழல் வேறுபாடின்றி நடைபெற வேண்டிய ஒரு அடிப்படைப் பணி இது. அல்குர்ஆன் இதனை இவ்வாறு கூறுகிறது அல்லாஹ்வின் தூதை எத்திவைக்கின்றவர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் பயப்பட மாட்டார்கள். அல்லாஹ்வே அவர்களுக்குப் போதுமானவன்.” (அஹ்ஸாப் - 39) எந்த சூழ்நிலையிலும் இஸ்லாத்தின் தூது மறைக்கப்பட முடியாதது. அதனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு காணப்பட வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.

எத்திவைத்தல் என்ற கருத்தைக் குறிக்க அல்குர்ஆன் பயன்படுத்திய சொல் பலாக் என்பதாகும். இது சென்றடைதல் என்ற கருத்தை மொழியில் தருகிறது. அதாவது இஸ்லாத்தின் தூது வெறுமனே பரப்பப்பட வேண்டும் என்பது மாத்திரமல்ல,  மாற்றமாக உரிய தாக்கங்களுடன் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களது சிந்தனையையும் உள்ளத்தையும் எட்டும் வகையில் முன்வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அங்கு ஒரு சிந்தனை உரையாடல் தோன்றும். விளைவாக அதனை ஏற்றல் அல்லது மறுத்தல் என்ற ஏதேனும் ஒரு முடிவு ஏற்பட முடியும்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் தூதை எத்தி வைத்தல் என்பதன் பொருள்,  அவர்களை இஸ்லாத்தை ஏற்கச் செய்தல் என்பதுவல்ல. மாற்றமாக நேர்வழி எது என்பதை இனம் காட்டிக் கொடுத்தலே இங்கு நடைபெறுகிறது. அல்குர்ஆன் நபியவர்களைப் பார்த்துக் கூறுகிறது அவர்களுக்கு நேர்வழியை வழங்குவது உங்களால் முடியாதது. மாற்றமாக அல்லாஹ்வே தான் விரும்பியவர்களுக்கு நேர்வழியை வழங்குகின்றான்…” (பகரா – 272). ஆனால் இஸ்லாத்தின் தூது அறிவுபூர்வமாய் உலகில் முன்வைக்கப்படல் வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் இது நடைபெற வேண்டும். இதனைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்கின்ற ஒருவரும் இருந்துவிடக் கூடாது. அப்பொழுதுதான் அல்குர்ஆன் கூறும் பின்வரும் நிலைமை சாத்தியமாகும். உமது இரட்சகனிடமிருந்து வந்த சத்தியத்தைச் சொல்லுங்கள். விரும்பியவர் அதனை ஈமான் கொள்ளட்டும். விரும்பியவர் அதனை நிராகரிக்கட்டும்…” (கஹ்ப் - 29).

இஸ்லாத்தின் தூதை எத்திவைத்தல் எனும் பொழுது,  இன்றைய சூழலில் குறிப்பாக என்ன விடயங்கள் ஹைலைட் பண்ணப்படல் வேண்டும் என்பதை கலாநிதி இப்றாகீம் அல்பயூமி கானிம் மற்றும் கலாநிதி ஹிபா ரஊப் இஸ்ஸத் போன்றோர் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.(4)

அவை எல்லாவற்றையும் அன்றி சில விடயங்கள் மட்டும் மேலோட்டமாக இங்கு அடையாளம் காட்டப்படுகின்றன.

ஐ.   தௌஹீத் எனும் ஏகத்துவ சிந்தனை.

ஐஐ.  மறுமை நாள் பற்றிய சிந்தனை அதாவது மனித செயல்களுக்கான விளைவு பிரிதொரு சந்தர்ப்பத்தில் கிடைக்கப் பெறுகிறது. அது நிச்சயமானது என்ற சிந்தனை.

ஐஐஐ.     மனிதத் தெரிவுக்கும்,  சிந்தனைக்கும் உள்ள சுதந்திரம்.
ஐஏ.  பன்முகத்தன்மையும் சகவாழ்வும்.

ஏ.    சமாதானமும் ஒத்துழைப்புமே சமூகங்களுக்கிடையிலான உறவின் அடிப்படை,  யுத்தம் என்பது விதிவிலக்கு.

ஏஐ.  இஸ்லாத்தின் சமூக நலன் பற்றிய சிந்தனை.

இவை ஒவ்வொன்றும் விரிந்து விளக்கப்பட வேண்டிய சிந்தனைகள் என்றிருப்பினும்,  இது அதற்கான சந்தர்ப்பம் அல்ல என்ற வகையில் தவிர்க்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட சிந்தனைகள்,  இலங்கை மாத்திரமன்றி எந்த சூழலிலும் அவசியமானவை,  அறிவுபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டியவை. அவற்றிற்கான பொறிமுறைகள் குறித்துத்தான் முஸ்லிம் சமூகம் கவனமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

3.            அமானிதத்தை நிறைவேற்றியமைக்காக மறுமையில் கிடைக்கும் வெற்றி : தஃவா ஒரு அமானிதம். வானங்களும் பூமியும் சுமக்க மறுத்த ஆனால் மனிதன் சுமந்த அமானிதம். அல்குர்ஆன் கூறுகிறது அமானிதத்தை நாம் வானங்கள்,  பூமி,  மலைகள் மீது எடுத்துக் காட்டினோம். அதனை சுமக்க அவை மறுத்துப் பின்வாங்கின. மனிதன் அதனைச் சுமந்தான்…” (அஹ்ஸாப் - 72). இந்த அமானிதத்தை நிறைவேற்றியமைக்கான சாட்சியாளர்களாகத்தான் நாளை மறுமையில் முஸ்லிம் உம்மத் ஏனைய சமூகங்களுக்கு முன்னால் நிற்கப் போகின்றது.

 அல்குர்ஆன் கூறுகிறது அவ்வாறே நாம் உங்களை மத்திம சமூகமாக அமைத்தோம்,  நீங்கள் மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக…” (பகரா 143). இங்கு சாட்சியாளர் என்பதன் பொருள் இந்தத் தூது ஏனைய சமூகங்களுக்கு எத்தி வைக்கப்பட்டது என்பதற்கு முஸ்லிம் உம்மத் சாட்சியாக இருப்பர் என்பதாகும் என தப்ஸீர் ஆசிரியர்கள் விளக்கமளித்துள்ளனர். அந்தவகையில் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த அமானிதம் குறித்து அல்லாஹ்வுக்கு முன்னால் வகை சொல்வதற்குக் கடமைப்பாடு உடையவனாக மாறுகிறான். இந்தப் பின்புலத்தில்தான் சில இமாம்கள் தஃவாவை ஒவ்வொருவர் மீதும் கடமையான பர்ளு ஐன் என்பார்கள். ஒரு விடயம் பர்ளு ஐன் ஆக இருப்பதன் முக்கியத்துவம் என்னவெனின்,  அந்த விடயம் ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் மிகவும் இன்றியமையாதது. அவனது உலக,  மறுமை வெற்றிக்கு அது அத்தியவசியமானது என்பதாகும்.
அமானிதம் ஒன்றை சுமந்தால்,  அது இடைநடுவில் கைவிட்டுச் செல்ல முடியாதது. அதற்கான வகைகூறல் கட்டாயமானது. மறுமையில் இந்த வகைகூறலை வெற்றிகரமாக எதிர்கொள்வதும் தஃவா ஏன் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதற்கான மகாஸித்களில் ஒன்று.

மேற்கூறப்பட்ட மூன்று மகாஸிதுகளும் மிகவும் பொதுவானவை. எல்லா சூழலுக்கும் உரியவை. தஃவா ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்ற கேள்வியின் போது தோன்றக் கூடிய பதில்கள் இவை.
தஃவாவின் மூலம் நாம் என்ன விளைவை அடைந்து கொள்ளப் போகின்றோம்?
ஏன்? என்ற கேள்வியை விடவும் இந்தக் கேள்வி சற்று வித்தியாசமானது. தஃவாவின் மூலம் குறிப்பாக என்ன சாதிக்கப் போகிறோம்? என்ன அடைவுகளை எமது களத்தில் பெற்றுக் கொள்ளப் போகிறோம்? என்பது இங்கு வினவப்படுகிறது. இந்தக் கேள்விக்கான விடை நிச்சயம் கால,  இட,  சூழல்களுக்கு ஏற்ப வேறுபட்டு அமைய முடியும். அந்தவகையில்,  இன்றைய சூழலில்,   இலங்கை மண்ணில்,  இஸ்லாமிய தஃவாவின் மூலம் நாம் எதனை அடைந்து கொள்ளப் போகிறோம்? என்ன விளைவுகளைக் கொண்டுவர வேண்டும்? என்ற கேள்விகளுக்கான பதில்களும் இலங்கைச் சூழலுக்கான தஃவாவின் மகாஸிதுகளாகக் காணப்படும். இங்கு  பரிமாறப்படும் கருத்துக்கள் ஒரு இஜ்திஹாத் மாத்திரமே. இன்னும் விருத்தி செய்யப்படுவதற்கான இடம்பாடு தாராளமாக இருக்கிறது.

1.            சுதந்திரமும் ஜனநாயக சூழலும் : இது அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் மிகுந்து வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு மக்ஸத். ஷெய்க் முஹம்மத் தாஹிர் இப்னு ஆஷுர் அவர்கள்,  சுதந்திரம் என்பது,  இஸ்லாமிய ஷரீஆவின் போதனைகள் எங்கும் பரவிக் காணப்படுகின்ற பொதுவான மகாஸிதுகளில் ஒன்று. சுதந்திரம் அடிப்படை மனித இயல்பு சார்ந்தது என்கிறார். (இப்னு ஆஷுர்,  மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  பக்கம் - 390-400)  இதனைத்தான் உமரவர்களுடைய பின்வரும் வார்த்தைகள் தெளிவாக உணர்த்துகின்றன. மக்களை நீங்கள் எவ்வாறு அடிமைப்படுத்துவீர்கள்? அவர்களை அவர்களது தாய்மார்கள் சுதந்திரவான்களாகவே பெற்றெடுத்துள்ளனர் என்றார்கள்,  (முன்தகப் கன்ஸில் உம்மால் பீ சுனனனில் அக்வால் வல் அப்ஆல்). 

இஸ்லாம் சொல்லும் சுதந்திர சிந்தனை ஒரு முக்கிய அடிப்படை மீது எழுகிறது. அதுதான் உபூதிய்யா எனும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடிமையாக வாழுதல் ஒருவன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிமையாக வாழும்போது மாத்திரமே சுதந்திரம் என்பதை சுத்தமாக உணர முடியும். கலாநிதி இப்றாகீம் அல்பயூமி கானிம் அவர்கள் சொல்வது போல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிமைப்படுகின்ற பொழுது, அங்கு இழிவு இல்லை,  அவமானம் இல்லை,  அடக்குமுறையில் இருந்து வெளியே வருகிறான்,  அறியாமை தக்லீதிலிருந்து மீளுகிறான்,  வறுமை பஞ்சம் பிணியிலிருந்து காப்பாற்றப்படுகிறான். பாவங்கள் மனோ இச்சைகளிலிருந்து உயர்ந்து நிற்கின்றான். இவை அனைத்திலிருந்தும் மொத்தமாய் வெளிவருவதே உண்மையான சுதந்திரம். இந்த சுதந்திரத்தை ஒவ்வொருவரும் உணரச் செய்வது தஃவாவின் ஒரு முக்கிய மக்ஸத் என்கிறார்.(கானிம்,  இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி,  பக்கம் - 26).

சுதந்திரத்தின் நடைமுறை வடிவம்தான் ஜனநாயகம். கலாநிதி ஸலீம் அல் அவ்வா அவர்கள் ஷெய்க் அபூஸஹ்ரா அவர்களை மேற்கோள் காட்டி,  கவாரிஜ்கள் மூலம் வெளிக் கொண்டு வரப்பட்ட அடிப்படையான ஒரு ஜனநாயக சிந்தனையை இவ்வாறு முன்வைக்கிறார். தலைமைத்துவம் என்பது முஸ்லிம்கள் மத்தியில் சுதந்திரமான சூறாவின் மூலம் தெரிவு செய்யப்படல் வேண்டும். தலைமைத்துவத்திற்கு நேர்மையான,  பாவங்கள், ஏமாற்று போன்றவற்றை விட்டும் தூரமான,  ஷரீஆவை நிலைநாட்டக்கூடிய எவரும் தகுதி பெறுவர்(அல் அவ்வா,  முகம்மத் ஸலீம்,  அல்மதாரிஸ் அல்பிக்ரிய்யா அல் இஸ்லாமிய்யா,  பக்கம்- 55). இது கவாரிஜ்களது சிந்தனைகளில் ஒன்றாகத்தான் இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் வலம் வந்தது. கவாரிஜ்களது பல்வேறு வழிபிறழ்வுகள் இருந்த போதிலும்,  இந்தக் கருத்து மிகவும் நேர்த்தியான ஒரு சிந்தனை என இமாம் அபூ ஸஹ்ராவை மேற்கோள் காட்டி ஸலீம் அல் அவா குறிப்பிடுகிறார்.

இன்றைய அரசியல் சூழலாக இருக்கட்டும்,  நிறுவன சூழலாக இருக்கட்டும் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய மக்ஸதாக இதனை நாம் அடையாளப்படுத்தலாம். இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தவரையில் அவர்கள் தூதுத்துவத்தை சுமந்த சமூகம் என்றவகையில்,  தாம் வாழுகின்ற இந்த சூழலுக்கு அவர்கள் ஆற்றுகின்ற மிக முக்கிய பணிகளுள் ஒன்று இது. முஸ்லிம்களுக்கு இது ஒரு அரசியல் விழுமியம் என்பதையும் விட இது ஒரு மார்க்கப் பெறுமானம். எனவே தமது மார்க்கத்தை நிலைநிறுத்துதல் அல்லது பரப்புரை செய்தல் என்பது இங்கு ஒரு மனித நலப்பெறுமானத்தை விதைப்பதாகவே அமைகிறது. சுதந்திரமும் ஜனநாயக சூழலும் உருவாக்கப்படும் அளவுக்கு ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் அபிவிருத்தியும் உத்தரவாதப்படுத்தப்படுகிறது.

2.            பகுத்தறிவுச் சூழலை ஏற்படுத்தல் : இஸ்லாமிய தஃவாவின் மூலம் அடையப் பெற வேண்டிய மிக முக்கிய மகாஸித்களில் இது ஒன்று. இஸ்லாத்தின் தூது இந்த உலகில் ஏற்கப்படும் நிலை பகுத்தறிவுச் சூழல் பரவலாக்கப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இஸ்லாத்தின் தூது என்பது அல்லாஹ்வின் அறிவு. எனவே முதிர்ச்சியடைந்த மனித அறிவு கட்டாயமாக இஸ்லாத்தின் தூதை சரி காணக் கூடியதாகவே இருக்கிறது. பகுத்தறிவுச் சூழலை ஏற்படுத்துவதற்கு நாம் ஒரு போதும் பயப்படவோ பின்னிற்கவோ அவசியமில்லை. பகுத்தறிவு வளர்ச்சியடைய வளர்ச்சியடைய இஸ்லாத்தின் தூது ஏற்கப்படும் நிலையே அதிகரிக்கும். மூட நம்பிக்கை ஒன்று மட்டும்தான் இஸ்லாத்தின் தூது ஏற்கப்படும் நிலைக்குத் தடையானது. இதனால்தான் அல்லாஹ்வை மிகவும் அஞ்சி நடப்பவர்கள் அறிஞர்களே (பாதிர் - 28) என அல்குர்ஆன் கூறியது.

அறிவு,  சிந்தனை,  வாசிப்பு,  தேடல் என்பன அல்குர்ஆனும் சுன்னாவும் அடிப்படையில் வலியுறுத்தும் ஒரு மக்ஸத். இவை தடுக்கப்படுவதையும்,  மறுக்கப்படுவதையும் அல்குர்ஆன் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. அல்குர்ஆனில் அறிவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அக்ல் என்ற சொல் நாற்பத்தி ஒன்பது (49) தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் நாற்பத்தி எட்டு (48) தடவைகள் நிகழ்கால வினை வடிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் தத்துவம் என்ன? வாழ்விருக்கும் வரை தொடர்ந்தேர்ச்சியாக இந்த அறிவின் பிரயோகம் காணப்படல் வேண்டும். அது தடைப்படக் கூடாது என்பதே அது உணர்த்தும் கருத்து.

அல்குர்ஆனில் அறிவின் பிரயோகம் இரண்டு வடிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். ஒன்று,  நேர்வழியைக் கண்டு கொள்ளும் நோக்கில் அறிவைப் பிரயோகித்தல். மற்றையது,  மனித வாழ்வை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அறிவைப் பிரயோகித்தல். இந்த நோக்கங்களை மையப்படுத்திப் பார்க்கின்ற பொழுது,  பகுத்தறிவுச் சூழல் ஒன்றை ஏற்படுத்துவது எவ்வளவு இன்றியமையாத ஒரு மக்ஸத் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.(5) அது உலகம் மற்றும் மறுமை இரண்டு வாழ்வுக்கும் பயன்தரக் கூடியது என்பதும் தெளிவானது. இலங்கை போன்ற பல்லின சமூகவாழ்வில் மதங்களுக்கிடையிலான உரையாடல் என்ற கருத்தையும் தாண்டி நாம் சிந்திக்க முடியுமான ஒரு பரப்பு இருக்கிறது. அதுதான் இந்த பகுத்தறிவுக் கலந்துரையாடல். அதன் மூலமே சத்தியத்தை,  உண்மையை அடைந்து கொள்ள முடியும்.

3.            பல்லினச் சமூக வாழ்வு அல்லது சகவாழ்வுச் சிந்தனை : இன்றைய நடைமுறையில் சகவாழ்வு என்பது,  முரண்பாடுகள் கொண்ட குழுக்கள்,  இனங்களிடையே பிரச்சினைகளற்ற ஒரு சமாதான வாழ்வைப் பேணுவதைக் குறித்து நிற்கிறது. இதனை ஒரு அரசியல் பிரயோகமாகவே கருத முடிகிறது.

ஆனால் இஸ்லாம் சகவாழ்வுச் சிந்தனையை இவ்வாறு நோக்கவில்லை. மாற்றமாக ஒரு அடிப்படையான சமூக வாழ்வு முறையாகவே அதனை விளங்கப்படுத்துகிறது. இஸ்லாம் சொல்லும் சகவாழ்வுச் சிந்தனை மூன்று முக்கிய அடிப்படைகள் மீது எழுகிறது.

1)            ஒரே மனித மூலமும் மனித சகோதரத்துவமும் : நபியவர்கள் கூறினார்கள் மனிதர்கள் அனைவரும் ஆதமின் சந்ததிகள். அல்லாஹ் அதனை மண்ணிலிருந்து படைத்தான் (திர்மிதி) எனவே மனிதர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகள்,  வேறுபாடுகள் இல்லை.

2)            பன்முகத்தன்மையை ஏற்றல் : மத,  இன,  மொழி,  சமூக வேறுபாடுகளை அங்கீகரித்து வாழல் என்பது இஸ்லாம் வலியுறுத்தும் ஒரு முக்கிய சிந்தனை. அந்த வகையில் எந்த ஒரு அடையாளமும் மறுக்கப்படுவதோ அதன் மீது அத்துமீறுவதோ தடுக்கப்படுகிறது. ஏனெனில் வேறுபாடு என்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று.

3)            பூமி அல்லாஹ்வினுடையது : அதாவது பூமி முழுவதும் அல்லாஹ்விற்குச் சொந்தமானது. எனவே ஒரு மனிதன் எந்த இடத்திலும் வாழலாம். இஸ்லாத்தின் போதனைகள் அவன் வாழும் இடத்திற்கு உரிய வகையில் அமுல்படுக்கக்கூடிய வகையில் நெகிழ்ச்சித் தன்மை கொண்டனவாகவே காணப்படுகின்றன.

இந்த மூன்று அடிப்படைகளையும் பார்க்கின்ற பொழுது,  சகவாழ்வு என்பது முரண்பாடுகள் உள்ள சூழ்நிலைக்குச் சொல்லப்பட்ட தீர்வு அல்ல. அல்லாஹுத்தஆலா இயல்பாகவே மனித வாழ்வை பல்லினங்கள் கலந்து வாழும் ஒழுங்கிலேயே வடிவமைத்துள்ளான். பல்வேறு சமூகங்களும் வேறுபாடுகளை அங்கீகரித்து,  தனித்துவங்களைப் பேணி வாழும்,  ஒரு வாழ்வு முறையே சகவாழ்வு எனப்படும்.

அந்த வகையில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழும் ஒரு சூழலில்,  தஃவாவின் மிக முக்கிய மகாஸித்களில் ஒன்றாக நாம் இதனைக் குறிப்பிட முடியும். இலங்கை மண்ணில் ஒரு முஸ்லிமுடைய வாழ்வு,  இலங்கைச் சமூகம் என்ற பொது இலக்கில் இணைந்த தொழிற்பாடாகவே அமையும். இது கரைந்து விடுவதும் அல்ல,  தனித்துவங்களை இழப்பதும் அல்ல. பல்லின சகவாழ்வின் செயற்பாட்டு வடிவங்கள் நீண்ட ஆய்வுகளை வேண்டி நிற்பவை.

நீதியை நிலைநாட்டுதல்(6) : நீதி,  அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று. ஒவ்வொன்றுக்கும் உரிய இடத்தை வழங்குதல் என்பதே நீதி என்பதன் பொருள். ஒரு மனிதனைப் பார்த்து நீதியாளன் என்றால் அது அவனது சீரான உளநிலையைக் குறிக்கும். அந்த வகையில் அவனது பேச்சு,  தீர்ப்பு,  சாட்சியம் என்பன சார்ப்பு நிலையில் காணப்படும்.

நடைமுறை உலகில்,  ஒவ்வொன்றும் தனக்குரிய பெறுமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதா? எனக் கேட்டால் இல்லை என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது. அநீதியும் அராஜகமும் ஆளும் ஒரு உலகுதான் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்லின சமூக வாழ்வில் பலமான சமூகம் அல்லது எண்ணிக்கையில் கூடிய சமூகம்,  பலம் குறைந்தவர்களை அல்லது  எண்ணிக்கையில் குறைந்தவர்களை நீதியாக நடாத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் சிரமமானதுதான். இங்குதான் நீதி எனும் பெறுமானம் எல்லா மட்டங்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு பெறுமானமாக மாற்றப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. மொழி,  இனம்,  மதம் போன்ற பேதங்கள் இன்றி அனைவரும் அங்கீகரிக்கக்கூடிய ஒரு பெறுமானம் நீதி. எனவே,  இலங்கை போன்ற பல்லின சூழலில் தஃவாவின் மகாஸிதுகளில் ஒன்றாக நீதியை நிலைநாட்டுதல் என்ற விடயம் அமைவது முக்கியமாகிறது.

இங்கு வெறுமனே நீதி பற்றிய கருத்தியலைப் பரப்புதல்,  மக்களுக்கு அறிவூட்டுதல் போன்ற எல்லைகளைத் தாண்டி,  நீதி நிலைநாட்டப்படுவதற்கான ஒரு சமூக வேலைத்திட்டம்; அவசியப்படுகிறது. ஈமானின் உயர்ந்த நிலையாக,  உள்ளத்தின் வெறுப்பை விடவும், கருத்து முன்வைப்பை விடவும் நேரடியான வேலைத்திட்டத்தையே இஸ்லாம் குறிப்பிடுகிறது. நபியவர்கள் கூறினார்கள் ஒரு தீமையைக் கண்டால் கையினால் தடுங்கள். முடியாத போது நாவினால் தடுங்கள். முடியாத போது உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள் இது தான் ஈமானின் பலவீனமான நிலையாகும் என்றார்கள். (புஹாரி) இங்கு கையினால் தடுத்தல் என்பது நேரடியான வேலைத்திட்டத்தைக் குறிக்கிறது.  

அந்த வகையில்,  நீதியைப் பேணுவதை ஒரு பண்பாக சுமந்த பரம்பரை உருவாக்கப்படுவதற்கான செயற்றிட்டம் தேவை,  வாழ்வின் ஒவ்வொரு இடத்திலும் நீதி நிலைநாட்டப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகளும் முறைமைகளும் தேவை. நீதியான மனிதர்களும்,  நீதியான சட்ட ஒழுங்குகளும் இருக்கின்ற பொழுதே நீதி நிலைநாட்டப்படுவது உத்தரவாதப்படுத்தப்படுகின்றது.

4.            பொருளாதார அபிவிருத்தி(7) : இலங்கை போன்ற ஒரு சூழலில் தஃவாவின் மூலம் அடையப் பெற வேண்டிய முக்கிய மகாஸிதுகளில் இதுவும் ஒன்று. அல்குர்ஆன் கூறுகிறது இந்த வீட்டின் இரட்சகனை அவர்கள் வணங்கட்டும். அவன் அவர்களுக்குப் பசியின்போது உணவளித்தான். பயத்தின் போது பாதுகாப்பளித்தான்.” (குறைஷ் 3, 4). இந்த அல்குர்ஆன் வசனம் அல்லாஹ் வணங்கப்படுவதற்கு புற,  பௌதீக சூழலின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துகிறது. பசி,  வறுமை காணப்படுகின்ற போது,  இறை நினைவை ஏற்படுத்துவது சிரமமானது. 

அச்சம் நிறைந்த ஒரு சூழலும் இதற்குத் தடையாக இருக்கும். எனவே,  இஸ்லாத்தின் தூதை பிற சமூகங்கள் காது கொடுக்கும் நிலை எப்போது தோன்றும் எனின்,  அந்த சமூகங்களின் பொருளாதார மட்டம் சிறந்ததாக இருக்கின்ற பொழுது,  வாழ்வு அச்சங்கள் அற்று அமைதியாக இருக்கின்ற பொழுதுதான். எனவே,  பொருளாதார அபிவிருத்தியை அடைதல் என்பது,  தனித்து பொருளாதார நலன்கள் சார்ந்தது மாத்திரமன்றி ஆன்மீக நலன்கள் கொண்டதாகவும் இருக்கிறது.

தஃவா எந்தக் காரணிகள் மீது எழுந்து நிற்கின்றது?

தஃவா எழுந்து நிற்கும் காரணிகள் எவை? என்ற தேடலும்,  தஃவாவின் மகாஸிதுகள் குறித்த தேடல்தான். உண்மையில் ஒரு குறித்த விடயம் எழுந்து நிற்கும் காரணிகள் வெளிப்படையில் மூலோபாயங்களாகவோ அல்லது அணுகுமுறைகளாகவோதான் நோக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையின் இரண்டாவது முன்னுரையில் குறிப்பிடப்பட்டது போல்,  மகாஸித் என்பது,  இலக்கு நிலையொன்றை மாத்திரம் குறித்து நிற்க மாட்டாது. மாற்றமாக அது மூலோபாய அணுகுமுறை நிலைகளையும் குறித்து நிற்கின்றது. ஏனெனில் நீண்டு நிலைத்திருக்கக்கூடிய ஒரு காரணியே மகாஸித் எனப்படுகிறது. அந்தவகையில் தஃவாவின் மகாஸிதுகளில் மூலோபாய வகைகளும் உள்ளடங்குகின்றன.

அவ்வகை மகாஸிதுகளைப் பேசுவதற்கு முன்னர்,  தஃவா தொடர்பான ஒரு கருத்தை விளங்கிக் கொண்டு செல்வது பொருத்தமானது. அது உண்மையில் இந்த மூலோபாய வகைகளும் மகாஸிதாக அமைவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள துணை செய்யும். அதாவது தஃவா என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? அதனை அவ்வப்போது நடைபெறுகின்ற ஒரு செயற்பாடாக புரிந்து கொள்கிறோமா? அல்லது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாகப் புரிந்து கொள்கிறோமா? மற்றொரு வகையில் கூறினால் எனக்குத் தெரிந்த ஒன்றை பிறர்க்கு எத்திவைத்தல்,  என்னால் முடிந்த ஒரு பணியைச் செய்தல்,  எனக்கு முன்னே நடக்கும் ஒரு தீங்கைத் தடுத்தல் என்ற இந்தப் பரிமாணத்தில் மாத்திரம் புரிந்து கொள்கிறோமா? அல்லது இந்த உலகில் நடைபெற வேண்டிய ஒரு நாகரீக மாற்றமாகப் புரிந்து கொள்கிறோமா?

இஸ்லாமிய தஃவா என்பது ஒரு நாகரீக வேலைத்திட்டம். இஸ்லாமிய வாழ்வை உலகில் நிலைநிறுத்துவதற்கான ஒரு மூலோபாய நகர்வு. ஆற்றல்களும்,  முயற்சிகளும்,  செல்வங்களும் கைகோர்க்க வேண்டிய ஒரு உம்மத்தின் பயணம்.(8) வெறுமனே சிதறிய வடிவிலான ஒரு சில செயற்பாடுகளுடன் மாத்திரம் சுருங்கி விடுவதல்ல. இங்கு எந்த முயற்சியும் மறுதலிக்கப்படுவதில்லை. மாற்றமாக முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இலக்கு நோக்கி நகர்த்தப்படுவது மிகவும் அவசியமானது.

தஃவாவை ஒரு நீண்டகால வேலைத்திட்டமாகப் புரிந்து கொள்கின்ற போது, அந்த வேலைத்திட்டத்தின் நீண்டகால இருப்பையும் வினைத்திறனையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய காரணிகளும் மகாஸித் என்ற வட்டத்தினுள் உள்ளடங்குகின்றன. அவ்வகையான மூன்று முக்கியமான காரணிகள் அல்லது மகாஸிதுகள் குறித்து அடுத்து கருத்துப் பரிமாறப்படுகிறது.

1. உருவாக்க அணுகுமுறையைக் கைக் கொள்ளல் :
இங்கு உருவாக்க அணுகுமுறை என்பது,  மனித உருவாக்கத்தை மாத்திரம் குறிக்கவில்லை. - அது மிகவும் முக்கியமானது என்றிருந்த போதிலும் - மாற்றமாக ஒரு வேலைத்திட்ட உருவாக்கத்தையும் சேர்த்தே குறிக்கின்றது. அதுபோல் உருவாக்க அணுகுமுறை என்பது ஒரு விடயத்தை ஆரம்பித்து வைத்தல் என்பது மாத்திரமல்ல,  மாற்றமாக மிக முக்கியமாக ஒரு விடயத்தை நீண்ட காலத்தில் கட்டி வளர்த்தல் என்ற விடயமே மிகவும் முக்கியமானதாகும். அதுபோல் உருவாக்க அணுகுமுறை என்பது,  இன்றைய நிகழ்வுகளில் மூழ்கி விடுவது அல்ல,   மாற்றமாக நாளைய இருப்புக்காக இன்றைய தயார்படுத்தல்களைக் குறிக்கின்றது. அதுபோல்,  உருவாக்க அணுகுமுறை என்பது,  ஒரு விடயத்தை அவசர அவசரமாகக் கடந்து செல்வது அல்ல,  மாற்றமாக நின்று நிதானித்து மேற்கொள்ளும் ஒரு தவம் அது.

இந்த உருவாக்கச் சிந்தனையையே அல்குர்ஆன் பயிர் செய்கைக்கு ஒப்பிட்டு விளங்கப்படுத்துகிறது. ஸஹாபாக்கள் குறித்த இன்ஜீலின் உதாரணத்தை இவ்வாறு சொல்கிறது இன்ஜீலில் அவர்களுக்கான உதாரணம்,  ஒரு பயிர் தனது கன்றை ஈன்றெடுக்கிறது,  அதனைப் பலப்படுத்துகிறது,  அது வலுவடைந்து தனது சொந்தக் காலில் நிற்கின்ற போது,  பயிர் செய்தவனுக்கு அது சந்தோசத்தைத் தருகிறது…” (பத்ஹ் - 29). ஒரு பயிர் எவ்வாறு பல பயிர்களாக மாறுகின்றன என்பதும்,  புதிய பயிர் சுயமாய் நிற்கும் நிலைக்கு வரும் வரை அது தாய்ப் பயிர் மூலம் எவ்வாறு உரமூட்டப்படுகிறது என்பதும் இங்கு விளக்கப்படுகிறது. இது ஸஹாபாக்களுக்கான உதாரணம்,  அவர்கள் ஒருவர் பலராக எவ்வாறு மாறினார்கள்? ஒவ்வொருவரும் தனிப்பெரும் ஆளுமைகளாக எவ்வாறு வடிவமைக்கப்பட்டார்கள்? இதுதான் நபியவர்களது நிதானமான உருவாக்கச் செயற்பாடு. அந்த அமைதியான உருவாக்கம்தான் ஒரு பெரிய வெற்றி. அதுதான் அவருக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது. இதுபோன்ற உருவாக்க அணுகுமுறைதான் நாளைய இருப்பையும்,  இலக்குகள் அடையப் பெறுவதையும் உத்தரவாதப்படுத்துகிறது. அந்தவகையில் இந்த உருவாக்க அணுகுமுறை மனித உருவாக்கத்தில் கடைபிடிக்கப்படல் வேண்டும். முறைமை உருவாக்கத்தில் பின்பற்றப்படல் வேண்டும். வேலைத்திட்ட உருவாக்கத்தில் காணப்படல் வேண்டும். எந்த விடயத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒரு நிலையான அணுகுமுறை இது. 
அந்தவகையில் இது ஒரு மக்ஸதாகிறது.(9)

2. தனிமனிதப் பங்களிப்புகள் அன்றி நிறுவனமயப்பட்ட கூட்டு அணுகுமுறையைக் கைக்கொள்ளல் :
இஸ்லாமிய தஃவா என்பது,  தனித்து ஒவ்வொருவர் மீதும் கடமையான பணி. ஆனால் அதனை மேற்கொள்வது எவ்வாறு? என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் தனித்த தொழிற்பாட்டை விடவும்,  கூட்டுத் தொழிற்பாட்டையே அல்குர்ஆனும் சுன்னாவும் பரிந்துரை செய்கிறது. அதுவே நீண்டகால,  நிலையான விளைவைக் கொண்டு வரக்கூடியது. அல்குர்ஆன் கூறுகிறது காபிர்கள் தமக்கு மத்தியில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கிக் கொள்கின்றனர். நீங்களும் அது போல் நடந்து கொள்ளாவிட்டால்,  உலகில் குழப்பமும் மிகப் பெரிய அழிவுமே ஏற்படும் (அன்பால்-73). இந்த வசனம் இவ்வுலகில் குப்ர் நிலைநாட்டப்படுவது கூட,  ஒரு கூட்டு முயற்சியின் காரணமாகவே நடைபெறுகிறது. எனவே இஸ்லாம் நிலைநாட்டப்படுவதும் ஒரு கூட்டு முயற்சியில்,  பரஸ்பர ஒத்துழைப்பில் நடைபெற வேண்டியதே. இல்லாத போது,  இஸ்லாம் விரும்பாத, ஆனால் குப்ர் எதிர்பார்க்கும் இலக்குகளே உலகில் அடையப் பெறப் போகின்றன,  என்கிறது.

இஸ்லாமிய தஃவா என்பது,  ஒரு நாகரீக எழுச்சித் திட்டம். அது வெறுமனே சிதறிய வடிவிலான தனிமனித முயற்சிகளால் அல்லது பங்களிப்புகளால் மாத்திரம் அடையப் பெறும் ஒரு இலக்கல்ல. ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுப் பொறிமுறை ஒன்று அவசியம் என்பதையே நபியவர்களது சுன்னாவும் உணர்த்துகிறது. அகபா உடன்படிக்கையின்போது மதீனாவிலிருந்து வந்தவர்கள் பன்னிரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு,  ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டமையும்,  அவர்களுக்குப் பொறுப்பாக முஸ்அப் இப்னு உமைர் நியமிக்கப்பட்டமையும் நபியவர்கள் தனது தஃவாவை ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுப் பொறிமுறையமைப்பிலேயே செய்திருக்கிறார்கள், சிதறிய முயற்சிகளாக அது காணப்படவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இலங்கை தஃவாக் களத்தில் காணப்படும் ஒரு முக்கிய இடைவெளியாக இந்தப் பண்பை அடையாளப்படுத்த முடியும். தனிப்பட்ட அல்லது சிதறிய பங்களிப்புகளாகவே தஃவா முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை ஒருங்கிணைக்கப்படுவது இன்றைய அத்தியவசியங்களில் ஒன்று. தூதைசுமந்த,  ஒரு சிறுபான்மை சமூகமாக இலங்கை மண்ணுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணி மிகவும் பாரியது. அது வெறுமனே உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல்,  தனித்துவங்களைக் காத்தல் என்ற எல்லைகளுடன் மட்டுப்பட்டதல்ல. அதனைத் தாண்டிய நாகரீகப் பங்களிப்பு ஒன்று எங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பிரதான உத்தியாக நாம் கைக்கொள்ள வேண்டியது ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுப் பொறிமுறையாகும்.

இங்கு எல்லா அமைப்புகளும் ஒன்றாக மாற வேண்டும் என்று நாம் பரிந்துரைக்கவில்லை. மாற்றமாக ஒருங்கிணைந்த இலக்குகள் அவசியம்,  ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம். முயற்சிகள் சரியான திசையை நோக்கி வழிப்படுத்தப்படல் வேண்டும். நான்கு பேர் நான்கு திசையை நோக்கி இழுத்துச் செல்லும் நிலை காணப்படக் கூடாது.
3. விருப்பங்களுக்கேற்ப,  அவ்வப்போதைய அணுகுமுறையன்றி திட்டமிட்ட,  ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையைக் கடைபிடித்தல்.

விளைவு மையப்பட்ட சிந்திப்பைத்தான் நாம் மகாஸிதிய சிந்திப்பு என்கிறோம். எந்தவொரு செற்பாட்டிலும் இந்த வகை சிந்திப்பு முக்கியமானது. ஒவ்வொரு நிறுவனமும் தமது பணி என்ன? நாம் எதனை அடையப் போகிறோம்? அதற்காக என்ன செய்ய வேண்டும்? எப்படிச்செய்ய வேண்டும்? போன்ற விடயங்களில் தெளிவுடன் காணப்படல் வேண்டும். பல சமயங்களில் என்ன அடையப் பெற வேண்டும் என்ற தெளிவு இல்லாமலேயே ஏதேதோ சில செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. நாம் நிகழ்ச்சிகளைத் திட்டமிடுகின்றோம்,  இலக்குகளைத் திட்டமிடவில்லை. இது, குறித்த நேரத்தின் அலைக்காக மட்டுமே செயற்படுவதாய் அமையும்,  நீண்ட கால இலக்குகளுக்காக அல்ல.

இலக்கை மையப்படுத்திய திட்டமிட்ட அணுகுமுறை எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் முக்கியமானது. இந்த அணுகுமுறை இஸ்லாத்தின் பார்வையில் ஒரு மக்ஸத். ஏனெனில் இந்த அணுகுமுறையின்றி உலகில் ஒரு பணி நிலைக்க மாட்டாது. இலக்குகளை அடைய மாட்டாது. நபியவர்களது சுன்னாவும் எங்களுக்குக் கற்றுத் தருகின்ற பாடம் இதுதான்.

இறுதியாக முடிப்பதற்கு முன்னர்,  தஃவாவின் மகாஸிதுகள் எனும் தலைப்பை பல்வேறு கோணங்களில் அணுக முடியும். இன்னும் பல வேறுபட்ட மகாஸித்கள் பேசப்பட முடியும். அந்த எல்லா இடம்பாடுகளுக்கம் இடம் வைத்துதான் இங்கே சில சிந்தனைகள் பரிமாறப்பட்டுள்ளன. இலங்கைச் சூழலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என எனது இஜ்திஹாதுகளில் சிக்கியவை இவை. இதன் பயன் எல்லோருக்கும் உரியதாக வேண்டும்.
அல்லாஹ்வே போதுமானவன்.

அடிக்குறிப்புக்கள்
(1)          மேலதிக தெளிவுகளுக்காகப் பார்க்க : தஹ்கீக் மகாஸிதுத் தஃவா பில் கர்ப் ஆயிகுல் இப்திப்தாத்,  கலாநிதி ஜாஸிர் அவ்தா,  இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி,  ஆய்வுத் தொகுப்பு,  செம்மையாக்கல் : கலாநிதி இஷாம் பஷீர், இஸ்லாமிய முதுசங்களுக்கான அல் புர்கான் நிறுவனம்,  மகாஸிதுஷ் ஷரீஆ கற்கைகளுக்கான மையம்,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் : 204.

(2)          மேலதிக தெளிவுகளுக்காகப் பார்க்க : மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன? ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத், shaikakramnaleemiblogspot, 2017.

(3)          மேலதிக தெளிவுகளுக்காகப் பார்க்க : அவ்லவிய்யாத்துத் தஃவா பில் கர்பப் பீ லௌஇ மகாஸிதிஷ் ஷரீஆ,  கலாநிதி வனீஸ் மப்ரூக்,  இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி,  ஆய்வுத் தொகுப்பு,  செம்மையாக்கல் : கலாநிதி இஷாம் பஷீர்,  இஸ்லாமிய முதுசங்களுக்கான அல் புர்கான் நிறுவனம், மகாஸிதுஷ் ஷரீஆ கற்கைகளுக்கான மையம்,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் 249-277

(4)          மேலதிக தெளிவுகளுக்காகப் பார்க்க : மகாஸிதுத் தஃவா அல் காஸ்ஸா வத்தஃவா அல் ஆம்மா அல்ஹுகூல் அத்திலாவிய்யா வல் மயாதீன் அத்தத்பீகிய்யா,  இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி,  ஆய்வுத் தொகுப்பு,  செம்மையாக்கல் : கலாநிதி இஷாம் பஷீர்,  இஸ்லாமிய முதுசங்களுக்கான அல் புர்கான் நிறுவனம்,  மகாஸிதுஷ் ஷரீஆ கற்கைகளுக்கான மையம்,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் 21-52.

(5)          அறிவை ஒரு மக்ஸதாகப் புரிந்து கொள்வதற்கு பார்க்க : கலாநிதி யூசுப் அல் கர்ளாவி,  அல் அக்ல் வல் இல்ம் பில் குர்ஆனில் கரீம்,  பதிப்பகம் : மக்தபது வஹ்பா. முதல் பதிப்பு 1996.

(6)          நீதி ஒரு மக்ஸத் என்ற கருத்து பற்றிய மேலதிக தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள பார்க்க : அல்குர்ஆனில் நீதி எனும் மக்ஸத். இஸ்லாமிய சிந்தனை,  மலர்: 39,  இதழ்: 02,  2017.

(7)          மேலதிகத் தெளிவுகளுக்காகப் பார்க்க : ஒதுங்கியிருக்கும் மனநிலையைத் தவிர்த்து வழிகாட்டும் மனநிலைக்கு நாம் வரவேண்டும். மீள்பார்வை இதழ் 322,  ஜுன்,  2015. ஜமாஅதுஸ் ஸலாமாவின் ஆறாவது மாநாட்டில் உஸ்தாத் அனீஸ் மத்தா அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

(8)          மேலதிக தெளிவுகளுக்காகப் பார்க்க : முகத்திமாத் ஹெளல மகாஸிதுத் தௌரா,  கலாநிதி இஷாம் பஷீர்,  இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி, ஆய்வுத் தொகுப்பு,  செம்மையாக்கல் : கலாநிதி இஷாம் பஷீர்,  இஸ்லாமிய முதுசங்களுக்கான அல் புர்கான் நிறுவனம்,  மகாஸிதுஷ் ஷரீஆ கற்கைகளுக்கான மையம்,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் 11-20.

(9)          மேலதிகத் தெளிவுகளுக்காக பயணம் சஞ்சிகையின் தனிமனித உருவாக்கம் தொடர்பான தொடர் கட்டுரையைப் பார்க்கலாம். (இதழ் 05 முதல்).

உசாத்துணைகள்
1.            அல் பஷீர்,  இஷாம் அஹ்மத். (2016). இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி,  மஜ்மூஅது புஹுஸ். லண்டன் : முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸ் அல்இஸ்லாமி,  மர்கஸுல் மகாஸித் அஷ்ஷரீஆ அல் இஸ்லாமிய்யா.

2.            அல்அவ்வா,  முகம்மத் ஸலீம். (2016). அல்மதாரிஸ் அல் பிக்ரிய்யா அல் இஸ்லாமிய்யா மினல் காவாரிஜ் இலல் இஃவானில் முஸ்லிமீன். பெய்ருத் : அஷ்ஷபகா அல்அரபிய்யா லில் அப்ஹாஸ் வந்நஷர்.

3.            அல்கர்ளாவி,  யூசுப் அப்துல்லாஹ். (1996). அல் அக்ல் வல் இல்ம் பில் குர்ஆனில் கரீம். கெய்ரோ : மக்தபது வஹ்பா.