Saturday, July 14, 2018

மறுமை வெற்றி


தனிமனித உருவாக்கம் - நோக்கங்கள் - 05



மறுமை வெற்றி என்பது தனிமனித உருவாக்கத்தின் முக்கியதொரு நோக்கம். இதனை இரண்டு உண்மைகளின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். ஒன்று தனிமனித உருவாக்கப் பணி ஒரு மார்க்கக் கடமை. இரண்டு தனிமனித சீர்மை மறுமை வெற்றியின் முக்கிய நிபந்தனை.

தனிமனித உருவாக்கச் செயற்பாடு இஸ்லாமிய தஃவா மரபில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இது நாம் எல்லோரும் ஒத்துக் கொள்கின்ற ஒரு அடிப்படையான உண்மை. ஆனால் சில சமயங்களில் தனிமனித உருவாக்கச் செயற்பாட்டை தனித்து,  தஃவாவின் ஒரு மூலோபாயமாக மாத்திரம் புரிந்த கொள்கின்ற நிலை காணப்படுகின்றது. உண்மையில் இது தவறானது. தனி மனித உருவாக்கம் என்பது ஒரு இஸ்லாமியப் பெறுமானம் என்பதும் நாம் மனம் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை. அதாவது தனிமனித உருவாக்கம் என்பது முக்கியமானது கட்டாயம் தேவை என்பது ஒத்துக் கொள்ளப்பட்டாலும்,  அது தனித்து ஒரு உலகியல் மூலோபாயம் மாத்திரமே. அதற்கு மார்க்க ரீதியான பெறுமானம் ஒன்று கிடையாது என்று சிலர் நினைக்கின்றனர். 

உண்மையில் தனிமனித உருவாக்கம் என்பது ஒரு உலகியல் மூலோபாயம் என்பதுடன்,  ஒரு மார்க்க பெறுமானம்,  ஆன்மீக விழுமியம்,  அல்குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்திய ஒரு உண்மை என்பதும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும். அந்தவகையில் உலகில் அந்தச் செயற்பாட்டில் ஈடுபடுவது ஒரு மார்க்கக் கடமை. எனவே இந்த மார்க்கக் கடமை ஒருவரது மறுமை வெற்றிக்குக் காரணமாகிறது.
அத்துடன் ஒரு தனிமனிதன் தன்னை சீர்திருத்துவது அவசியமானது,  அவனது சீர்மையின் ஊடாகவே அவன் மறுமையில் வெற்றி பெற முடியும். இது அல்குர்ஆன் வலியுறுத்தும் ஒரு சிந்தனை. தனிமனித உருவாக்கம் என்பது ஒரு தனிமனிதனை சீர்திருத்தும் ஒரு முயற்சி,  அவனிடத்தில் இஸ்லாமிய விழுமியங்களை கொண்டுவருவதற்கான ஒரு ஏற்பாடு. அதன் மூலமும் மறுமை வெற்றி நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. 

முன்பொரு தடவை ஒரு இஸ்லாமிய செயற்பாட்டாளரிடம் ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் செயற்படும் இஸ்லாமிய இயக்கம் வெற்றி பெறும் என்று நம்புகிறீர்களா? அதாவது அந்த இயக்கம் தனது இலக்குகளாகத் தீர்மானித்துள்ளவற்றை அடைந்து கொள்ளுமா? என்று கேட்டேன். அதற்கவர் சொன்னார் இந்த இயக்கம் வெற்றி பெற்றாலும் சரி வெற்றி பெறாவிட்டாலும் சரி,  இந்த இயக்கத்தில் இருந்து செயற்படுவதால் நான் மறுமையில் வெற்றி பெறுவேன் என்பதை மட்டும் நன்குணர்கின்றேன் என்றார். நான் ஒரு ஸாலிஹான மனிதனாக வாழுவதற்கான பயிற்சியும் சூழலும் இங்கு எனக்கு அமைகிறது,  மட்டுமன்றி இயக்கம் தவறான ஒரு பாதையில் இல்லை என்பதையும் உணர்கிறேன் என்றார். என்னை மிகவும் பாதித்த வார்த்தைகள் அவை. இந்த உண்மையைத்தான் கலாநிதி முனீர் ஷபீக் அவர்கள்,  குகைவாசிகளை அந்தக் குகை எவ்வாறு பாவசூழலில் இருந்து பாதுகாத்ததோ அதுபோல் இன்றைய ஜாஹிலிய்ய சூழலிருந்து மக்களைப் பாதுகாப்பனதான் இஸ்லாமிய இயக்கங்கள் என்றார்கள்.

மேற்கூறப்பட்ட இரு உண்மைகளையும் ஆதாரம் சொல்லி நிரூபிக்க வேண்டிய பெரிய அவசியம் இல்லாவிட்டாலும்,  அவற்றை ஆதாரப்படுத்தும் வகையில் சில சிந்தனைகளை இங்கு பரிமாறிக் கொள்கிறோம்.

தனிமனித உருவாக்கம் குறித்த அடிப்படையான சில சிந்தனைகளை அல்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்துகிறது. அல்குர்ஆன் கூறுகிறது எழுத வாசிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில்,  அவர்களில் இருந்தே ஒரு தூதுவரை அவன்தான் அனுப்பி வைத்தான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வின ஆயத்களை ஓதிக் காண்பிக்கின்றார். அவர்களை தூய்மைப்படுத்துகின்றார். அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கின்றார். அவர்கள் இதற்கு முன்னர் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். இவர்களுடன் இன்னும் இணையாத இன்னும் பலருக்கும் இதே பணி நடைபெறல் வேண்டும். அவன் கண்ணியமானவன்,  ஞானமுள்ளவன். இது அல்லாஹ் தாம் விரும்புகின்றவர்களுக்கு வழங்குகின்ற ஒரு சிறப்பருள். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன். தௌராத் வழங்கப்பட்டோருக்கான உதாரணம்,  அவர்கள் உண்மையில் தௌராத்தை சுமக்கவில்லை. அவர்கள் புத்தகம் சுமந்த கழுதைகள் போன்றவர்கள். இதுதான் அல்லாஹ்வின் ஆயத்களை பொய்ப்படுத்திய சமூகத்திற்கான மோசமான உதாரணம். அல்லாஹ் அநியாயக் காரர்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான் (ஜும்ஆ 2-5)

இந்த அல்குர்ஆன் வசனங்கள் தனிமனித உருவாக்கம் தொடர்பில் சில முக்கிய சிந்தனைகளைச் சொல்கின்றன. முதலாவது,  தனிமனித உருவாக்கம் என்பது ஒரு தூதுத்துவப் பணி,  நபிமார்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு பணி,  இங்கு எழுத்தறிவு, ஆளுமை விருத்தி,  அல்குர்ஆன் சுன்னா பற்றிய அறிவு ஆகிய மூன்றையும் தூதுவர் தனது சமூகத்திற்கு வழங்குகிறார். அந்த சமூகம் எழுத்தறிவற்ற சமூகம். எனவே, அந்த நிலையில் இருந்த சமூகத்தை தகுதிபடுத்தும்; பணிக்காகத்தான் தூதுவர் அனுப்பப்பட்டதாக இந்த வசனம் சொல்கிறது. இது ஒரு மனித உருவாக்கம். அது தூதுவரின் பணி என்பதும் குறித்துக் காட்டப்படுகிறது.

இரண்டாவது,  இங்கு குறித்த சமூகம் பற்றி இரண்டு வகையில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அது எழுத்தறிவற்ற சமூகம். இரண்டு வழிகேட்டில் இருந்த சமூகம். எனவே,  அவர்களை நோக்கிய உருவாக்கம் இரண்டு அடைவுகளை இலக்காகக் கொண்டது. ஒன்று அவர்களை அறிவு ரீதியாகத் தகுதிப்படுத்துதல் இரண்டு அவர்களுக்கு சத்தியத்தை உணரச் செய்தல். அந்தவகையில் மனிதஉருவாக்கத்தின் இரண்டு பரப்புக்கள் இங்கு அடையாளம் காட்டப்படுகிறது. ஒன்று ஸாலிஹான முஸ்லிமாக ஒரு தனிமனிதன் உருவாக்கப்படல். இதுதான் சத்தியத்தை உணரும் நிலை. இரண்டு உலகை வெற்றிகொள்ளும் அறிவாளுமையாக ஒரு தனிமனிதன் தயார் செய்யப்படல். ஒரு தனிமனிதனில் இந்த இரண்டு அடைவுகளும் இணைந்துதான் அவனை மறுமை வெற்றிக்குரியவனாக மாற்றுகிறது.

மூன்றாவது,  இந்த உருவாக்கப் பணி நபிமார்களுடன் முற்றுப்பெறும் ஒரு பணியல்ல. மறுமை வரையில் எல்லா சமூகங்களிலும் நடைபெற வேண்டியது. இதனைத்தான் இன்னும் இணையாத பலர் என்பதன் மூலம் அல்குர்ஆன் உணர்த்துகிறது. இமாம் முஜாஹித் அவர்கள் இது ஏனைய சமூகங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார். அந்தவகையில் உருவாக்கம் எனும் பணி எல்லா சமூகங்களுக்கும் அவசியமான நிலையான ஒரு பணி என்பது விளங்கப்படுகிறது. மாத்திரமன்றி நபிமார்களது அந்தப்பணியை தொடரும் கடமை மறுமை வரையில் தொடர்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்திற்கும் காணப்படுகிறது.

நான்காவது,  உருவாக்கம் எனும் பணி,  அது உருவாக்கப்படுதலாக இருந்தாலும் உருவாக்குதலாக இருந்தாலும்,  அல்லாஹ்வின் ஒரு அருள். அவன் வழங்கும் ஒரு சிறப்பு. அதனை அவன் விரும்புகின்றவர்களுக்கு வழங்குவான். ஏனெனில் அது வெறுமனே உலகை வெற்றி கொள்வதற்கான பொறிமுறை மாத்திரமன்றி மறுமையை வெற்றி கொள்வதற்குமான பொறிமுறையாகும்.

ஐந்தாவது,  உருவாக்கப் பணியை மேற்கொள்ளாமை என்பது,  புத்தகம் சுமந்த கழுதைக்கு நிகரானது என்கிறது அல்குர்ஆன். யூத சமூகத்திற்கு தெளிவான தூதுத்துவ வழிகாட்டல் கிடைக்கப் பெற்றதன் பின்னரும் அவர்கள் அந்த உருவாக்கப் பணியை தொடர்ந்தும் மேற்கொள்ளாமை வெறுமனே ஏட்டை மட்டும் சுமந்து செல்லும் கழுதைக்கு ஒப்பானது. அதாவது,  வேதத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மனிதர்கள் தயார்படுத்தப்படுவது என்பது மிகவும் முக்கியமானது. அப்பொழுது மாத்திரமே அந்த வேதம் இவ்வுலகில் வாழும். அதனை சுமந்தவர்கள் மறுமையில் வெற்றி பெறுவார்கள். வேதத்தின் அடிப்படையில் உருவாக்கம் நடைபெறாமல் வேதத்தை தூக்கி வைத்துக் கொண்டு பெருமை பாராட்டுவதில் மாத்திரம் எந்த அர்த்தமும் இல்லை. இதனைத்தான் புத்தகம் சுமந்த கழுதையும் செய்கிறது. தான் சுமந்திருக்கும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை கழுதை ஒருபோதும் தெரிந்து கொள்ளப் போவதில்லை. உருவாக்கம் நடைபெறாமையின் பாரதூரத்தை விளக்குவதற்கு இதனை விடவும் வேறு உதாரணம் கிடையாது. உருவாக்கத்தை மேற்கொள்ளாமலிருத்தல் ஒரு மோசமான செயல் மாத்திரமன்றி,  ஒரு பெரும் அநியாயம் என்பதையும் இந்த வசனங்கள் சொல்கின்றன.

அடுத்து,  நபியவர்கள் ஒரு தடவை தனது பணி குறித்துக் கூறிய ஒரு உதாரணத்தைப் பாருங்கள். உங்களுக்கும் எனக்குமான உதாரணம்,  ஒரு மனிதன் ஒரு தீயை மூட்டுகிறான். விட்டில்களும்,  பூச்சிகளும்,  அவன் எவ்வளவு தடுத்தும்,  அந்தத் தீயில் வந்து விழுகின்றன. நான் நரகை விட்டும் உங்களை இறுகப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் என்னை உதறிவிட்டு நரகில் போய் விழப் பார்க்கிறீர்கள் என்றார்கள் (முஸ்லிம்). மனித சமூகத்தை ஒரு பேராபத்திலிருந்து காப்பாற்றும் பணியைத்தான் தூதுத்துவம் செய்வதாக இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது. அந்தப் பேராபத்து வெறுமனே உலகம் சம்பந்தப்பட்டது மாத்திரமன்று,  மாற்றமாக முக்கியமாக மறுமை சம்பந்தப்பட்டது. அந்தவகையில் தூதுத்துவப் பணியின் மனித உருவாக்கச் செயற்பாடு வெறுமனே உலகை வெற்றி கொள்வதற்கான மூலோபாயம் ஒன்று மாத்திரமன்றி மறுமையில் ஒவ்வொரு தனிமனிதனும் வெற்றி பெறுவதற்கான அடிப்படையாகவுமே வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து,  தூதுத்துவத்தின் உருவாக்கப்பணி தொடர்பில் அல்குர்ஆன் முன்வைத்த ஒரு உதாரணத்தைப் பாருங்கள். “… இன்ஜீலில் அவர்களுக்கான உதாரணம் ஒரு பயிர் தனது கன்றை ஈன்றெடுக்கிறது, அதனைப் பலப்படுத்துகிறது,  கன்று பலமடைந்து தனது சொந்தக் காலில் நிற்கிறது,  இது பயிர்செய்தவர்களை சந்தோசப்படுத்தும்,  அவர்களைப் பார்த்து காபிர்கள் கோபம் கொள்வார்கள்,  அவர்களில் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்வோருக்கு அல்;லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான் – (பத்ஹ் 29).

இந்த அல்குர்ஆன் வசனமும் உருவாக்கம் குறித்து சில உண்மைகளைச் சொல்கின்றது. 

முதலாவது,  உருவாக்கம் என்பது, அமைதியான ஆரவாரமில்லாத நீண்டகால வேலைத்திட்டம்,  அது இங்கே பயிர்செய்கையுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. பயிர்செய்கை அமைதியான ஆரவாரமில்லாத நீண்ட கால வேலைத்திட்டம். இஸ்லாத்தின் பரவல் என்பது இது போன்றதொரு உருவாக்கத்தின் மூலமே நிகழவேண்டும். அப்பொழுதுதான் அது நிலையானதாகக் காணப்படும்.

இரண்டாவது,  உருவாக்கம் என்பது  சங்கிலித்தொடராக நடைபெற வேண்டிய ஒரு பொறிமுறை. ஒரு மனிதர் மாத்திரம் இருந்து கொண்டு மேற்கொள்ளும் ஒரு பணியல்ல. ஒவ்வொரு பயிரும் தனது கன்றை ஈன்டெடுத்து  அதனை வளர்த்து விடுகிறது,  பின்னர் அது வாழையடி வாழையாகத் தொடர்கிறது. உருவாக்கப்பணியை நபியவர்கள் மாத்திரம் நேரடியாக மேற்கொள்ளவில்லை,  ஸஹாபாக்களும் இணைந்துதான் மேற்கொண்டனர். அல்குர்ஆன் பயிர்செய்தவர்களைச் சந்தோசப்படுத்தும் என்று பன்மையில் குறிப்பிட்டமை இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

முன்றாவது,  உருவாக்கத்திற்கு உற்படுவோர் அந்த உருவாக்கத்தைச் சிறந்த முறையில் பிரயோகிக்கின்ற பொழுதுதான் அவர்கள் மறுமையில் வெற்றியடைகிறார்கள். அந்தவகையில் உருவாக்கம் என்பது வெற்றிக்காகவும் நிகழ்கின்ற ஒரு தொழிற்பாடு என்பதைப் புரியலாம்.
அடுத்து,  மற்றோர் அல்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,  அல்குர்ஆன் கூறுகிறது யார் அல்லாஹ்வை ஈமான் கொண்டு,  ஸாலிஹான அமல்களில் ஈடுபடுகிறாரோ,  அவை அவரது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்கப்படும். அவர் ஆறுகள் ஓடும் சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார். அதில் நிரந்தரமாக அவர் வாழுவார். இதுதான் மிகப் பெரிய வெற்றியாகும்.” (தகாபுன் - 09). உலகில் ஒரு மனிதனது சீர்மைதான் மறுமையில் அவனது இடத்தைத் தீர்மானிக்கிறது. அவனது ஈமானினதும் செயற்பாடுகளினதும் பரிமாணத்திற்கு ஏற்ப தான் அவனது மறுமை வாழ்வின் அந்தஸ்த்து தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்த வசனம் பேசுகிறது.

இந்த உண்மையின் பின்புலத்தில் நின்றுதான்,  தஃவா மரபில் தனிமனித உருவாக்கத்திற்கு பிரதானமாக மூன்று இலக்குகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. முதலாவது ஒரு ஸாலிஹான முஸ்லிமை உருவாக்குதல்,  இரண்டாவது ஒரு தாஇயை உருவாக்குதல்,  மூன்றாவது துறைசார் தலைமையை உருவாக்குதல். இந்த மூன்று பரப்புகளும் உலக மறுமை நலன்கள் அனைத்தையும் உள்ளடக்கி இருந்தாலும்,  குறிப்பாக ஒரு மனிதன் ஸாலிஹான முஸ்லிமாக உருவாக்கப்படுவதன் முக்கியத்துவம் என்ன என்பதில் மறுமை வெற்றி பிரதானமான இடத்தைப் பெறுகிறது. ஏனெனில் ஒரு முஸ்லிம் உருவாக்கம் என்பது அவனது நம்பிக்கை,  சிந்தனை,  நடத்தைகள் அனைத்தும் சீரமைக்கப்படுவதைக் குறிக்கின்றது. இந்தச் சீராக்கம்தான் அவனது மறுமை வெற்றியை உத்தரவாதப்படுத்துகிறது.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.