Saturday, June 29, 2013

சோதனைகளின் போது...


இன்று இலங்கை முஸ்லிம்களைக் குறி வைத்து சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில எதிர் செயற்பாடுகள் குறித்து ஒரு சாதகமான பார்வை இங்கு முன்வைக்கப்படுகின்றது.

சோதனை என்ற கருத்தியல் பற்றி அல்குர்ஆன் என்ன சொல்கிறது?

சோதனை என்பது மனித வாழ்வின் மாறாத ஒரு விதி, ஈமான் கொண்ட ஒவ்வொரு மனிதனும், அந்த ஈமானுக்கான சோதனையை கண்டிப்பாக எதிர்கொள்ளவே வேண்டும்.
அல்குர்ஆன் கூறுகிறது தாம் ஈமான் கொள்வதனோடு மாத்திரம், எவ்விதமான சோதனைக்கும் உற்படுத்தப்படாமல் விடப்படுவோம் என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களையும் நாங்கள் சோதனைக்கு உற்படுத்தியிருக்கிறோம்.  - அன்கபூத்  2, 3 -

சோதனை என்றவுடன் எமது சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் தோன்றும் முதல் விடயம், அது தீங்கானது, பாதகமானது என்பதாகும். ஆனால் அல்குர்ஆன் சோதனையை அவ்வாறு விவரிக்கவில்லை. மாற்றமாக அது நன்மையானது பயனுள்ளது என்பதாகவே சொல்கிறது. அல்குர்ஆன் கூறுகிறது

அவன்தான் வாழ்வையும் மரணத்தையும் படைத்தான். உங்களில் மிகச் சிறந்த முறையில் செயற்படுபவர் யார் என்பதை சோதிப்பதற்காக, அவன் கண்ணியமானவன், மன்னிப்பவன் - முல்க் 02-

இந்த வசனம் வாழ்வையும் மரணத்தையும் படைத்த நோக்கம் சோதனை என்கிறது. அந்த சோதனை எங்களை எதனை நோக்கி வழி நடாத்த வேண்டும் எனின், மிகச் சிறந்த செயலை நோக்கி வழிநடாத்த வேண்டும் என்கிறது. ஒரு சோதனை மனிதனுக்கு ஏற்படுத்தப்படுகிறது என்றால் அடுத்த கட்டமாக அவனுடைய வாழ்வு மிகச் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பு. இங்கு சோதனையால் மனித வாழ்வு செம்மைப்படுத்தப்படுகிறது. அது ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. இதுதான் சோதனையின் நன்மை.

இலங்கை முஸ்லிம்களின் அடுத்த கட்ட வாழ்வொழுங்கு எவ்வாறு கட்டமைக்கப்படல் வேண்டும் என்பதை அல்லாஹ்தஆலா தீர்மானித்துவிட்டான். அதனை நோக்கி முஸ்லிம்களை நகர்த்துவதற்கான ஏற்பாடாகவே இந்த சோதனை தரப்பட்டிருக்கிறது. அதனால்தான் இன்றைய நிகழ்வுகளின் காரணமாக தவிர்க்க முடியாத சில நல்ல விளைவுகள் தோன்றியிருக்கின்றன.

சோதனையின் முதலாவது நன்மை, இன்று பொதுத்தளத்தின் பிரதான பேசுபொருளாக இஸ்லாம் மாறியிருக்கிறது. நிச்சயமாக இது நன்மையானது, தீங்கானது அல்ல. இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இஸ்லாம் என்ற ஒரு மார்க்கமும், முஸ்லிம்கள் என்ற ஒரு சமூகமும் இலங்கையில் இருப்பதனால் இந்த நாடு என்ன பயனை அடையப் போகிறது என்பதனை ஒரு கருத்தாக சொல்வதற்கு மாத்திரமல்ல செயல் வடிவில் கொண்டு வருவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இஸ்லாம் என்பது உண்மை. இஸ்லாம் என்பது நீதி, இஸ்லாம் என்பது அபிவிருத்தி, மாற்றமாக இஸ்லாம் என்பது பிற்போக்கல்ல. இஸ்லாம் என்பது தீவிரவாதம் அல்ல. இஸ்லாம் என்பது காட்டுமிராண்டித்தனம் அல்ல என்பவை வார்த்தைகளினால் மட்டுமன்றி செயல்வடிவத்திலும் இடம்பெறல் வேண்டும்.

சோதனையின் இரண்டாவது நன்மை, ஒருமைப்பாடு, இலங்கையில் இஸ்லாத்திற்காக செயற்படுகின்ற எல்லா நிறுவனங்களையும், தனிமனிதர்களையும், வித்தியாசமான எல்லா சிந்தனைப் பாரம்பரியங்களையும் ஒரே தளத்தில் இது இணைத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கான பொதுத்தலைமை பற்றி அவர்களைச் சிந்திக்கத் துண்டியிருக்கிறது. சுனாமியில் நிகழாதது, மூதூர் விவகாரத்தில் நிகழாதது இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது.

இதுபோன்ற ஒரு சமூக ஒற்றுமை குறித்து கடந்த காலங்களில் எவ்வளவு பேசப்பட்டிருக்கிறது, எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது, எத்தனை பேருடைய நீண்ட நாள் கனவாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தின் அனைத்து முயற்சிகளதும் பயன் இன்று ஒரு சோதனையால் ஒரேயடியாக கிட்டியிருக்கிறது. இந்த வெற்றி இழக்கப்பட்டுவிடக்கூடாது. இது பாதுகாக்கப்படல் வேண்டும். ஒரே தலைமையாக இருந்து செயற்படுவது, ஒரு மார்க்கக் கடமை. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் இது.

 சோதனையின் மூன்றாவது நன்மை, வஸதியா என்னும் நடுநிலைத் தன்மையின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணரத் தொடங்கி விட்டார்கள். பிளவுதான் அடிப்படை என்றும், ஒன்றில் கருப்பு அல்லது வெள்ளை மாத்திரம்மே, கருப்பும் வெள்ளையும் என்பது சாத்தியமற்றது என்றும் பேசிய கருத்துக்கள் எல்லாம் இப்பொழுது மாற்றமடையத் தொடங்கிவிட்டன. பல நிலைப்பாடுகளை அங்கீகரித்தல், அவற்றிற்கு மத்தியில் ஒற்றுமையைப் பேணல் எல்லோரையும் அரவணைத்தல் என்ற கருத்துக்கள் இப்பொழுது மேலெழத் தொடங்கிவிட்டன. உண்மையில் இதுதான், இந்த நடுநிலைமை தான் இஸ்லாத்தின் அதி உன்னதமான ஒரு சிறப்பம்சம்.

இவ்வாறுதான் நாம் உங்களை ஒரு நடுநிலையான சமூகமாக ஆக்கினோம் என்று அல்லாஹ்தஆலாவே இந்த உம்மத்தை சிலாகித்துப் பேசினான். காலத்தால் மத்திமம், இடத்தால் மத்திமம் மட்டுமல்ல மிக முக்கியமாக இந்த உம்மத் அதன் சிந்தனையில் மத்திமமானது. அதனால்தான் இதற்கு எல்லா சமூகங்களையும், எல்லா சூழலையும் எல்லா இடங்களையும் அரவணைக்க முடிகிறது. இஸ்லாத்தின் இந்த உன்னதமான பண்பு மேலெழத் தொடங்கிவிட்டது. எல்லோருடைய நாவுகளிலும் இந்த சொல் உச்சரிக்கப்படுகிறது. இந்த அதிசய மாற்றம் சோதனையால் விளைந்த நன்மையே.

சோதனையின் நான்காவது நன்மை, இது சோதனையின் மீது எழுந்த மற்றொரு சோதனையால் விளையும் நன்மை. முஸ்லிம் நிறுவனங்கள், அமைப்புகள் என்ன செய்கின்றன? அவற்றின் செயற்பாடுகள் சட்டத்திற்குற்பட்டவனவா? நிதி நடவடிக்கைள் முறையாகப் பேணப்படுகின்றனவா? அவற்றின் தொடர்புகள் எத்தகைய? போன்ற கேள்விகள் அரசாங்கத்தால் எழுப்பப்படத் தொடங்கிவிட்டன, விசாரணைகளும் தேடல்களும் ஆரம்பித்து விட்டன. இந்த சூழ்நிலை அபாயமாகப் பார்க்கப்படுதலுக்கப்பால் இதில் ஒரு பெரிய நன்மை இருப்பதை நாம் பல சமயம் மறந்து போகிறோம்.

பொதுவாக முஸ்லிம் நிறுவனங்களிடம் ஒரு பலவீனம் இருக்கிறது. கசப்பாக இருந்தாலும் இது உண்மை. அவர்களது நிறுவன செயற்பாடுகளில் தொழிலாண்மையைக் காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது. சட்டரீதியான பதிவுகள், நிதி ஒழுங்குகள், அறிக்கைப்படுத்தல்கள் என்பன மிகவும் பலவீனமான செயற்பக்கமாகவே காணப்படுகின்றன. பொதுவாக இஸ்லாமிய தஃவா என்றாலேயே அது பரக்கத்தில் நிகழ்கின்ற ஒரு செயலாகவே பார்க்கப்படுவதன்றி தொழிலாண்மையுடன் நடக்க வேண்டிய ஒரு செயலாகப் பார்க்கப்படுவது குறைவு. அதில் ஈடுபடுவோரிடமும் திட்டமிடலும், நேர முகாமையும், தீர்மானம் எடுத்தலும் பல சமயங்களில் அசௌகரியமான சொற்களாகவே காணப்படுகின்றன.

இதன் காரணமாக இந்த நாட்டினுள்ளே சட்ட ரீதியான நிறுவனத் தொழிற்பாட்டை உரிய ஒழுங்குகளுடன் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது ஒழுங்குகளைப் பூரணப்படுத்தாமல் குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குறைபாடுகள்தான் பல சமங்களில் அவர்களை வீணாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுகின்றன.

எனவே, அரசாங்கத்தின் இந்தத் தேடலும் விசாரணையும், நிர்ப்பந்தமாக அவர்களை இந்த சட்டரீதியான செயற்பாடுகளை நோக்கித் தள்ளுகின்றன. அவற்றைப் பூரணப்படுத்த வைக்கின்றன. உண்மையில் நிறுவனங்களின் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் இந்த சட்டரீதியான செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் கவனக் குறைவாக இருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது கவனம் எடுக்கிறார்கள் எனின், இது நன்மையானதல்லவா?

மாத்திரமல்ல, தொழிலாண்மை என்பது சட்டரீதியான நிறுவனத் தொழிற்பாடு என்பது மாத்திரமன்றி ஒரு உயர்ந்த இஸ்லாமியப் பெறுமானமும் ஆகும். அந்தப் பெறுமானங்களை ஞாபகப்படுத்தி இஸ்லாமியவாதிகளிடம் அவற்றை மீளக் கொண்டு வந்த பெருமை இந்த சோதனையையே சாரும்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

Thursday, June 27, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு - சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் -

எப்போது…?
என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் அங்கு பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அவற்றில் ஒன்றான திருமண வயது பற்றிய ஆலோசனைகள் குறித்துத்தான் கடந்த அமர்வில் நோக்கினோம்.
இன்றைய அமர்வு தொழில் பற்றியதாக அமையப் போகிறது. தொழில் என்றவுடனேயே சகோதரிகள் நினைத்து விடுவார்கள் , இது ஆண்களுக்குரியது எங்களுக்கல்ல என்று, நிச்சயமாக அவ்வாறல்ல,  இது உங்களுக்குமுரியதுதான். பெண்களில் தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதற்காகவல்ல, மாற்றமாக,  ஆண்களின் தொழில் பிரச்சினைகளுடன் அவர்கள் இணையப் போவது உங்களுடன்தான், அதன் பின்னர் அந்தப் பிரச்சினைகளில் ஒரு முக்கிய பங்குதாரராக நீங்களும் மாறுகிறீர்கள். எனவே,  ஆணின் பிரச்சினையை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவும், பின்னர் பேசவுள்ள மற்ற ஒரு காரணத்திற்காகவும் சகோதரிகளும் இந்தப் பத்தியை கட்டாயமாக கூர்ந்து வாசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் எப்போது திருமணம்? என்ற கேள்வியைக் கேட்டபோது, ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. கொஞ்ச நேர மௌனம். பின்னர் சொன்னார்,  அதைப் பற்றியெல்லாம் இன்னும் யோசிக்கவில்லை என்றார். ஒரு வித சலிப்பும், விரக்தியும் அவரது வார்த்தைகளில் தொனித்தது.அது, திருமணம் தள்ளிப் போகிறதே என்ற கவலையல்ல,  இத்தனை வயதாகியும் இன்னும் ஒரு போதுமான வருமானம் இல்லையே என்பதாகவே வெளிப்பட்டது. இது, எனது நண்பருடைய பிரச்சினை மட்டுமல்ல,  எத்தனையோ இளைஞர்களுடைய பிரச்சினை.
திருமணம் முடித்து, ஒரு குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு பொருளாதாரம் ஒரு முக்கிய தேவைதான். இந்த விடயத்தைத்தான் இஸ்லாமிய ஷரீஅத் அல் பாஅத்  என்ற சொல்லினூடாக வலியுறுத்தியது.
நபியவர்கள் கூறினார்கள்
யார் குடும்பப் பொறுப்பை சுமக்கின்ற இயலுமையைப் பெறுகின்றாரோ அவர் திருமணம் செய்யட்டும்,  இல்லாதபோது அவர் நோன்பு நோற்கட்டும். அது அவர்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடியதாகும்,  என்றார்கள். – புஹாரி-
இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல் பாஅத்  என்ற சொல்லின் பொருள் குறித்து சற்று தேடிப் பார்த்த பொழுது, இமாம்கள் இரு பிரதான கருத்துக்களைப் பேசியிருக்கிறார்கள். ஒன்று ஒரு குடும்பத்தை சுமக்கக்கூடிய பொருளாதாரப் பலம், மற்றையது தாம்பத்யத்தில் ஈடுபடத் தகுந்த உடல் பலம். இவை இரண்டுமே குடும்ப வாழ்க்கைக்கு அவசியமானவை என்றிருந்தாலும், ஹதீஸின் பொதுவான போக்கில் நோக்கும் போது முதலாம் அபிப்பிராயமே மிகவும் பொறுத்தமானதாகத் தோன்றுகிறது. ஏனெனில், ஹதீஸ் சொல்வது போல் இந்த அல்-பாஅத்தைப் பெற்றுக்கொள்ளாத ஒருவருக்குச் சொன்ன உபதேசம்தான் நோன்பு நோற்றல். எனவே, உடல் வலிமையைப் பெறாதவனுக்கு நோன்பும் அவசியமற்றதாகவே இருக்கும். அந்தவகையில் ஒரு குடும்பத்தைச் சுமக்கக் கூடிய பொருளாதார பலத்தைப் பெறும் நிலை குடும்ப வாழ்வை ஆரம்பம் செய்வதற்கு மிகவும் அவசியமானது என்பது இந்த ஹதீஸ் வலியுறுத்தும் ஒரு உண்மையாகும்.
இந்த உண்மை சாதாரணமான மனித அறிவு வலியுறுத்தக்கூடிய உண்மைதான். குடும்பம் என்பது ஒரு பொறுப்பு. குடும்பம் என்பது கடமைகள். குடும்பம் என்பது செலவுகள். எனவே,பொருளாதார பலம் குடும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்கு அவசியமானது . ந்தப் பின்புலத்தில் தான் அல்-குர்ஆன் ஆண்கள் பெண்கள் மீது அதிகாரமுள்ளவர்கள் என்பதைச் சொல்லி, அதற்கான நியாயத்தைக் கூறும்போது, அவர்கள்தான் குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சுமப்பவர்கள் என்கிறது.
அல்லாஹ் சிலரை மற்றும் சிலரை விட சிறப்புக்குரியவர்களாக அமைத்திருப்பதனாலும், ஆண்கள் தமது செல்வத்திலிருந்து செலவு செய்யக் கடமைப்பட்டிருப்பதாலும், பெண்கள் மீது ஆண்கள் அதிகாரம் பெறுகிறார்கள் - நிஸா – 34
சகோதரர்களே, மேற்கண்ட முன்னுரையுடன் உங்களுக்கு சில முக்கியமான உபதேசங்களை சொல்ல நினைக்கிறேன், கேளுங்கள்.
1.         உழைத்தல், சம்பாதித்தல், செல்வ விருத்தியில் ஈடுபடல் என்பன, இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய மிக உயர்ந்த பெறுமானங்களாகும். மிக முக்கியமான கடமைகளாகும். அல்குர்ஆன் செல்வத்தை  பழ்லுள்ளாஹ்  அல்லாஹ்வின் சிறப்புக்குரிய ஒரு பொருள் என்றுதான் குறிப்பிடுகின்றது.
 நீங்கள் தொழுகையை நிறைவேற்றி விட்டால், பூமியில் பரந்து செல்லுங்கள், அல்லாஹ் தரும் சிறப்புக்குரிய பொருளை ஆர்வத்துடன் தேடுங்கள்  (ஜும்ஆ 10) என்கிறது.
இந்த அல்குர்ஆன் வசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சொற்களைச் சற்று கவனியுங்கள். பூமியின் எல்லா இடங்களிலும் அல்லாஹ்வின் செல்வம் இருக்கின்றது. நாம் எங்கு சென்றும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எல்லோரும் ஒரே இடத்தில் குவிந்து விட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில்,  செல்வம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதாக நிச்சயமாக இல்லை. அடுத்து செல்வம் என்பது அல்லாஹ்வினுயைடது. அதனைப் பெற்றுக் கொள்வதற்கு மனிதன் அனைத்து உரிமைகளையும் பெறுகிறான். -இது காபிருடைய பணம் எங்களுக்கு வேண்டாம்- என்ற மனோநிலைகள் அவசியமற்றவை. அலி (றழி) அவர்கள் ஒரு யூதனிடம் கூலி வேலை செய்து, தனது குடும்பத்தைப் பராமரித்திருக்கிறார்கள். அடுத்து செல்வத்திற்கு சிறப்புப் பொருள் என்றுதான் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அதனை அற்பப் பொருள் என ஒதுக்கிவிட முடியாது. பூமியில் அது ஒரு சிறப்புப் பொருள்தான். அடுத்து ஆர்வத்துடன் பொருள் தேடுமாறுதான் அல்குர்ஆன் கூறுகிறது. இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் வப்தகூஎன்பதாகும். இந்த சொல் வெறுமனே தேடுங்கள் என்ற கருத்தை மட்டும் குறிக்க மாட்டாது. மாற்றமாக,  விருப்பத்துடன் தேடுங்கள் என்ற கருத்தையே குறிக்கின்றது. அந்தவகையில் பொருள் தேடுதல் மார்க்கத்தில் வெறுப்புக்குரிய விடயமல்ல. விருப்பத்திற்குரிய விடயம்.
இதன் முக்கியத்துவம் கருதியே, அல்குர்ஆன் மற்றோர் இடத்தில் செல்வம் பற்றி இவ்வாறு கூறுகிறது.
உங்கள் வாழ்க்கையின் அத்திவாரமாக அல்லாஹ் அமைத்து வைத்துள்ள, உங்கள் செல்வங்களை பலவீனர்களின் கைகளில் ஒப்படைத்து விடாதீர்கள்  (நிஸா – 05) இங்கு செல்வம் வாழ்வு எழுகின்ற அத்திவாரம் என்கிறது அல்குர்ஆன்.
நபியவர்கள் கூறியுள்ள சில வார்த்தைகளைப் பாருங்கள்.
உற்பத்தியில் ஈடுபடும் முஃமினை அல்லாஹ் விரும்புகிறான் -  தபரானி
நபியவர்களிடம் சிறந்த சம்பாத்தியம் எது எனக் கேட்கப்பட்டபோது, ஒருவன் சுயமாக உற்பத்தியில் ஈடுபடலும்,  ஆகுமான எல்லா உழைப்புகளும் என்றார்கள் -  தபரானி
ஒருவன் சுயதொழிலில் ஈடுபட்டு மாலையில் களைத்துப் போய் வீடு திரும்பும்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டவனாகக் காணப்படுவான் -  தபரானி
விளக்கம் அவசியமில்லை எனும் அளவுக்கு மிகத் தெளிவான வார்த்தைகள். இவையனைத்தும் இஸ்லாத்தில் உழைப்பின் பெறுமானத்தை எமக்குச் சொல்கின்றன.
2.         நீங்கள் பேசிக் கொள்வது கேட்கிறது. உழைப்பு வாழ்க்கைக்கு முக்கியம் தான், இஸ்லாத்தில் அது ஒரு கடமைதான். ஆனால் எனது படிப்புக்கு ஏற்ற தொழில் கிடைப்பதில்லையே. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாகி விட்டது. எங்களது படிப்பை யார் மதிக்கிறார்கள்? உண்மைதான் உங்கள் கவலை புரிகிறது. ஆனாலும் ஒரு விடயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். படித்த படிப்புக்கு சம்பந்தமுள்ள, அதற்குத் தகுந்த தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்தால், இந்த உலகில் முக்கால் வாசிப்பேருக்குத் தொழிலே அமையாது. இந்த யதார்த்தத்தில் நின்று கொஞ்சம் நாம்; சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். படிப்புக்குப் பல நோக்கங்கள் இருக்கின்றன. படிப்பு என்பது தொழிலுக்கான வழிமுறை மட்டுமல்ல, தொழில் என்பது படிப்பால் மாத்திரம் அடையக் கூடியதுமல்ல.

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உலகில் எந்தத் தொழிலும் இழுக்கானது அல்ல. கையேந்தி நிற்பதுதான் இழுக்கானது. எந்தத் தொழிலின் மூலமும் உயர் வருமானத்தை ஈட்ட முடியும். அது எங்கள் கைகளில் தங்கியுள்ள விடயம். உங்களுக்குத் தெரியுமா? தொழிலடிப்படையில், ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சர். தாவூத் (அலை) அவர்கள் ஒரு கொல்லர். முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஒரு இடையர். பின்னர் ஒரு வியாபாரி. அதிலும் தனது சொந்த முதலீடு எதுவுமின்றி பிறருடைய முதலீட்டில் தனது உழைப்பை மட்டும் முதலீடாகப் பயன்படுத்தி செய்த வியாபாரி. அபூபக்ர் (றழி) அவர்கள் ஒரு பிடவை வியாபாரி. இமாம் அபூஹனீபாவும் ஒரு பிடவை வியாபாரி. அலி (றழி) அவர்கள் ஒரு கூலி வேலைக்காரன்.

இந்த மனிதர்களைப் பாருங்கள். இவர்கள் இஸ்லாத்தில் மட்டுமல்ல, மனித வர்க்கத்திலேயே உயர்ந்த மனிதர்கள். இவர்களது தொழிலைப் பாருங்கள். இன்றைய நாளில் எங்களது பரிபாஷையில் தாழ்ந்த தொழில்கள். தவறு எங்கே இருக்கிறது என்று புரிந்திருக்கும். செய்யும் தொழிலிலல்ல, எங்களது மனோ நிலைகளில்.

சகோதரர்களே, எந்தத் தொழிலையும் அற்பமாகப் பார்க்காதீர்கள். எல்லாவற்றிலும் பரகத் இருக்கிறது. எல்லாமே அல்லாஹ் தந்த சிறப்புக்குரிய பொருள்தான். எந்தத் தொழில் மூலமும் இலாபமீட்டல் என்பது உங்கள் தேர்ச்சியிலும் நிபுணத்துவத்திலும் தங்கியிருக்கிறது.

3.         சகோதரர்களே, எனது மூன்றாவது உபதேசம் மிகவும் முக்கியமானது. தொழில் செய்வதற்கு படிப்பு முடியும் வரையில் காத்திருக்காதீர்கள்  இந்த வசனத்தைச் சொல்லும்போது பலருடைய முகத்தில் ஒரு புண்முறுவலைப் பார்க்கலாம். இந்தப் புண்முறுவல் என்ன சொல்கிறது தெரியுமா? இது நல்ல விடயம்தான். ஆனால் எத்தனை இடங்களில் இது பிரச்சினைகளைக் கொண்டு வரப் போகிறதோ தெரியாது என்பதைத்தான் சொல்கிறது.

ஏன் தெரியுமா? நாம் பாரம்பரியமாக நம்பிக் கொண்டிருப்பதும், செய்து கொண்டிருப்பதும், படிப்பு வேறு,  தொழில் வேறு என்ற அடிப்படையில்தான். படிப்பு தொழிலுக்குத் தடை. தொழில் படிப்புக்குத் தடை. இதனால்தான் படிப்பவர்கள் தொழில் செய்யாமல் இருக்கிறார்கள். தொழில் செய்பவர்கள் படிக்காமல் இருக்கிறார்கள்.

இன்றைய கல்வி முறையிலேயே குறையிருக்கிறது என்று சொன்னால்,  பலருக்கு அது வலியை ஏற்படுத்தும் என்பது தெரியும். ஆனால், ஒரு முக்கிய உண்மையை நாம் மறந்து விடுகின்றோம். பதினைந்து வயதிற்கும் இருபத்தி ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட ஒரு பெரும் சக்தியை படிப்பு என்ற காரணத்தை முன்னிருத்தி நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். வாலிபத்தின் வீரியம் மிகுந்த ஒரு பருவத்தில் அவர்கள் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுடன் மட்டுமே அவர்களது அனுபவங்களும் மட்டுப்படுத்தப்படுகின்றன.

சகோதரர்களே, உங்களுக்குச் சொல்கிறேன் படிப்பு வாழ்க்கைக்கு அவசியம்தான். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் தான். ஆனால் இது படிக்கும் காலம் என்று இருபது வருடங்களை ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமல்ல. அந்த இருபது வருடங்களில் படிப்புடன் உழைப்பையும் மேற்கொள்ளுங்கள். மாலை நேரங்கள், இரவு நேரங்கள், அதிகாலை நேரங்கள்,  வார இறுதி நாட்கள்,  விடுமுறை நாட்கள் இவற்றை உழைப்பிற்காகப் பயன்படுத்தலாம். பகுதி நேர உழைப்பு பற்றி சிந்தியுங்கள். சிறு உற்பத்திகளைப் பற்றி சிந்தியுங்கள். வாங்குதல் விற்றல் பற்றி சிந்தியுங்கள். இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இருபது வருடங்களில் ஒரு உயர் கல்விச் சான்றிதழுடன் மட்டுமன்றி, ஒரு பெரிய தொழிலதிபராகவும் நீங்கள் இருப்பீர்கள்.

4.         சகோதரர்களே, எனது நான்காவது உபதேசம் எனது பார்வையில் மூன்றாவதைவிட முக்கியமானது, ஒரு வகையில் அது மூன்றாவதுடன் சம்பந்தமுள்ளதும் கூட. உழைப்பிற்கு வயதில்லை,  முடிந்தவரை சிறுவயதிலேயே உழைப்பைத் தொடங்குங்கள்.

இது என்ன இது? என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோபப்படுவது தெரிகிறது. பலபேரை ஜெயிலுக்கு அனுப்பும் வேலையல்லவா இது? என்று பேசிக் கொள்கிறார்கள். நான் ஜெயிலுக்கு அனுப்புவது பற்றிப் பேசவில்லை. வாழ்க்கையில் வெற்றி பெறுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.

எனது ஆரம்பப் பத்திகளில் திருமண வயது குறித்துப் பேசும் போது,  இஸ்லாம் கால தாமதமின்றி திருமணம் செய்தலை வழியுறுத்துகிறது என்று கூறியிருந்தேன். அதேபோல், திருமணத்திற்கு ஒரு முதிர்ச்சி அவசியம் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு மனிதனுக்கு இந்த முதிர்ச்சியை உழைப்பு பெற்றுத் தருகிறது. வாழ்க்கை அனுபவத்தை அவனுக்குக் கொடுக்கிறது. எனவே, உழைப்பு அனுபவம் சிறு வயதிலிருந்தே அவசியப்படுகிறது. இஸ்லாமும் இதனைத்தான் வலியுறுத்துகிறது. நபியவர்கள் சிறிய வயதிலேயே ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்பில் ஒரு பகுதியை அந்த வயதில் அவர்கள் சுமந்திருக்கிறார்கள். அவருடைய பாட்டன் அப்துல் முத்தலிப் தனது வியாபார பயணங்களில் நபியவர்களையும் அழைத்துச் சென்ற வரலாற்றை நாம் படித்திருக்கின்றோம்.

இமாம் அபூஹனீபா அவர்கள் சிறுவயதில் ஒரு திறமையான வியாபாரியாக இருப்பதைப் பார்த்துத்தான் அவரது ஆசிரியர்,  இவர் கல்விப் பகுதியில் ஈடுபட்டால் ஒரு பெரிய அறிஞராக வர முடியும் என்று, அவரை கல்வித் துறையிலும் ஈடுபடுத்தினார். இமாம் அபூஹனீபா இரண்டிலுமே வெற்றி கண்டார்கள் என்பதுதான் வரலாறு.

அறிஞர்களின் அரசன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இமாம் இஸ் இப்னு அப்துஸ் ஸலாம்,  சிறுவயது முதல் செய்த தொழில் என்ன தெரியுமா? பள்ளிவாயலில் பாதணிகளுக்குக் காவல் இருத்தல். இந்த வருமானத்தில்தான் அவர் கல்வி கற்றார்,  சாப்பிட்டார்.

ஒரு தடவை பிள்ளைகளுக்குரிய பாடசாலைச் சாமான்கள் வாங்குவதற்காக ஒரு கடைக்குப் போயிருந்தேன். அது ஒரு குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் கடை. அது மாலை நேரம். கடையில் சுமார் பத்து வயது, பன்னிரண்டு வயது கொண்ட ஒரு சிறுவனும் சிறுமியும்தான் இருந்தார்கள். சிறுவன் பலருக்கு போட்டோ கொபி அடித்து வழங்கிக் கொண்டிருந்தான். சிறுமி,  வேறு பொருட்களை வழங்குவதுடன், பணம் பெறுகின்ற வேலையையும் செய்து கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் அவர்களை அவதானித்தேன். எந்தத் தடுமாற்றமும் இன்றி கச்சிதமாக அவர்களது வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நான் உள்ளுரப் பூரித்துப் போய் நின்றேன். அவர்கள் கல்வியையும் கற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையையும் கற்றுக் கொள்கிறார்கள்.

நான் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது,  என்னுடன் சாதாரண தரம் வரையில் கல்வி கற்ற ஒரு பழைய நண்பனைச் சந்தித்தேன். என்னைக் கண்டவுடன், அவன் கேட்டான் எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். உனக்கு எப்போது திருமணம்? என்றான். நான் பதில் சொல்லவில்லை சிரித்தேன். ஆனால், மனதிற்குள் ஒரு விடயத்தைக் கூறிக் கொண்டேன். இவர்கள் பிள்ளைகளையும் சுமக்கத் தொடங்கி விட்டார்கள். நான் இன்னும் பழைய குறிப்புப் புத்தகங்களையல்லவா சுமந்து கொண்டிருக்கிறேன்.

இதில் விஷேடம் என்றவென்றால், சுமார் அரை மணி நேரம் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவன் என்னவோ எல்லாம் சொன்னான். பல ஊர்களைப் பற்றிச் சொன்னான். பல மனிதர்களைப் பற்றிச் சொன்னான். பல பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னான். குறிப்பாக,  பணத்தில் ஆயிரங்களையும் இலட்சங்களையும் பேசினான். ஆனால் அப்போது நான் பத்துகளையும் நூறுகளையும் தான் பேசிக் கொண்டிருந்தேன். உண்மையில் அவன் பேசிய பல விடயங்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஏனெனில்,  அவனுடைய அனுபவம் எனக்கில்லை. ஆனால் ஒரு மரியாதைக்காக மட்டும் எல்லாம் புரிவது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு விடயம் மட்டும் நன்கு புரிந்தது. நான் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறேன். இவன் வாழ்க்கையில் பல ஆழங்களைக் கண்டு,  நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறான். இவனுடைய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள எனக்கு இன்னும் எத்தனை வருடங்கள் தேவைப்படுமோ…?

சகோதரர்களே,  நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். திருமண வயதைத் தாமதப்படுத்தக் கூடாது. ஆனால் திருமணத்திற்கு முதிர்ச்சியும் வேண்டும். பொருளாதாரமும் வேண்டும். எனவே, இந்த இரண்டையும் தரும் உழைப்பையும் தள்ளிப் போடாதீர்கள். ஆரம்பம் முதலே ஈடுபடுங்கள். கல்வியோடு சேர்த்தே உழைப்பிலும் ஈடுபடுங்கள். இரண்டிலும் வெற்றி பெறுங்கள்.

5.         கற்றலும் உழைப்பும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டியவை என்று சொல்லும் போது, இங்கு வலியுறுத்த வேண்டிய மற்றொரு உபதேசமும் காணப்படுகிறது. அதாவது முடிந்தவரை உங்கள் உழைப்பில் இருந்தே உங்களுக்குச் செலவு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். பிறரில் தங்கி நிற்காமல் சுதந்திரமாய் சொந்தக் காலில் நிற்பது எப்பொழுதும் கௌரவமானது. உங்களுக்குத் தெரியுமா? மேற்கு நாடுகளில் ஒரு வீட்டில் ஒரு பிள்ளைக்குப் பதினெட்டு வயதானால் அவரது சாப்பாட்டுக்கு அவர்தான் பொறுப்பு. வீட்டில் சாப்பிட வேண்டும் என்றால், அவர் உழைத்து விட்டுச் செலவில் பங்கு எடுக்க வேண்டும். இது ஒரு நல்ல தர்பிய்யத்.

6.         அடுத்தது,  சேமிப்பு. உழைக்கும் பணத்தை முழுமையாக செலவு செய்து விடாதீர்கள். அதில் மூன்றில் ஒரு பகுதியை சேமிப்பாக அமைத்துக் கொள்வது சிறந்தது. படிப்படியாக சேமிக்கும் தொகையை அதிகரிக்க முடியும் எனின்,  இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பின் போது இரண்டு விடயங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். சேமிப்பை உங்கள் கைகளுக்கு எட்டிய தொலைவில் வைக்காதீர்கள். சேமிப்பில் வட்டி கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

7.         வீணான செலவுகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். இன்று உழைப்பே இல்லாமல் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்காகவும், உயர்தர உணவுச் சாலைகளிலும் பெரும் தொகையை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஸுரதுல் இஸ்ராவில் அல்லாஹ் கூறுவதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.
வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்வோர் ஷெய்தானின் சகோதரர்களாவர்  - இஸ்ரா – 27

8.         அதிகம் ஸதகா செய்யுங்கள். உங்கள் பெற்றோர் குடும்பத்தினரின் தேவைகளையும் மறந்து விடாதீர்கள். நபியவர்கள் கூறினார்கள்
ஸதகா ஒரு போதும் செல்வத்தைக் குறைத்துவிட மாட்டாது (அஹ்மத்) ஆம், ஸதகா ஒரு முதலீடு, நீங்கள் கொடுப்பது பல மடங்காக உங்களுக்குத் திரும்பி வரும்.

9.         குடும்ப வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பௌதீகத் தேவைகளை கொஞ்சம் கொஞ்சமாக பூரணப்படுத்திக் கொள்ள முயலுங்கள். நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் என்பன பற்றி கூட ஆரம்பம் முதலே சிந்தித்தல் தவறில்லை.

10.        என்னுடைய பத்தாவது உபதேசம் மிகவும் முக்கியமானது. இது சகோதரர்களுக்கு மட்டுமன்றி,  சகோதரிகளுக்கும் உரியதாகும். அதைவிட ஒரு படி மேலே சென்றால் எல்லா பெற்றோர்களுக்கும் எல்லா மனிதர்களுக்குமுரியது.

திருமணம் என்பது பரகத் நிறைந்தது. திருமணம் செய்வதே ஒரு மனிதனது வாழ்வை வளப்படுத்தப் போதுமானதாகும். சிலர் நினைக்கிறார்கள்,  திருமணத்திற்குப் பொருளாதாரப் பலம் முக்கியமானது. எனவே, எல்லா அடிப்படை வசதிகளையும் முழுமையாகப் பெற்றுக் கொண்டதன் பின்னர்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க முடியும். குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது இன்றி திருமணம் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் தவறானது. கீழே உள்ள அல்குர்ஆன் வசனத்தை வாசித்துப் பாருங்கள்
உங்களில் திருமணம் செய்யாமல் இருக்கின்றவர்களுக்கும்,  ஸாலிஹான அடிமை ஆண்கள்,  பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் திருமணம் செய்து வாழ்வதற்குரிய போதிய வசதியற்றவர்களாக இருந்தால் அல்லாஹுத்தஆலா தனது செல்வத்திலிருந்து அவர்களுக்குப் போதுமானளவு வழங்குவான். அவன் விசாலமானவன்,  அறிந்தவன் -  நூர் – 32

இந்த வசனத்தை அவதானித்துப் பாருங்கள். ஆரம்பமாக திருமணம் செய்யாமல் இருப்போர், அப்படியே விட்டு வைக்கப்படக் கூடாது. அது ஒரு சமூகப் பொறுப்பு. சமூகத் தலைமைகள் அதனைப் பார்த்து செய்து வைத்தல் வேண்டும் என்கிறது. இந்தக் கடமையை சொன்னவுடன் அடுத்து தோன்ற முடியுமான கேள்விதான் திருமணம் செய்து வைப்பது பெரிய விடயமல்ல. ஆனால் அவர்கள் தொடர்ந்து குடும்பம் நடாத்துவது எப்படி? அதற்குரிய பொருளாதார வசதி எப்படி? உடனே அல்லாஹுத்தஆலா ஒரு வாக்குறுதியைத் தருகிறான். எனது செல்வம் விசாலமானது. அதிலிருந்து வழங்குவேன். போதுமானளவு வழங்குவேன் என்கிறான். எனவே,  பொருளாதாரப் பலத்தில் முழுமை கண்ட பின்னர்தான் திருமணம் செய்வேன் என்று எவரும் நினைக்கத் தேவையில்லை. திருமணம் செய்வதே எனக்குப் போதிய பொருளாதார பலத்தைத் தரக் கூடியது. நபியவர்கள் கூறினார்கள்
 மூன்று பேருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும். விடுதலைக்காக முயற்சி செய்யும் அடிமை, தனது கற்பை காத்துக் கொள்வதற்காக திருமணம் செய்ய நினைப்பவன், அல்லாஹ்வின் பாதையில் போராடுபவன் -  திர்மிதி

அல்லாஹ்வுக்கு எவரும் கடமைகளை விதிக்க முடியாது. அவனே தனக்கு விதித்துக் கொண்ட கடமை இந்த மூவருக்கும் உதவி செய்தல் என்பது. இதில் ஒருவன் திருமணம் செய்ய முற்படுபவன். அதிலும் தனது கற்பைக் காத்துக் கொள்வதற்கான முயற்சி. இவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் உதவி செய்வதாகக் கூறுகிறான்.

இமாம் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்
 திருமணம் செய்யுமாறு அல்லாஹ் இட்ட கட்டளைக்குக் கட்டுப்படுங்கள், அவன் வாக்களித்தவாறு செல்வத்தை உங்களுக்குத் தருவான். என்றார்கள்.

எனக்குத் தெரிந்த பலர் இருக்கிறார்கள் குறைந்த பொருளாதார வசதிகளுடன் ஆரம்ப வயதுகளிலேயே திருமணம் செய்திருக்கிறார்கள். அதுபோல், நல்ல பொருளாதாரப் பலத்தைப் பெற்ற பின்புதான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்து,  முப்பதுகளையும் தாண்டி திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்,  இந்த இரண்டு வகையானவர்களினதும் தற்போதைய பொருளாதார நிலையில் பெரிய வித்தியாசமில்லை. அநேகமாக சமமாகவே காணப்படுகின்றனர். ஆனால் வாழ்க்கையில் பெரிய வேறுபாடு இருக்கின்றது. முதலாமவர்,  கடந்த காலங்களில் குடும்ப வாழ்வின் அமைதியை அனுபவித்தார். இரண்டாமவர்க்கு அது கிடைக்கவில்லை. முதலாமவர் நீண்டகாலம் குடும்பம் நடாத்திய நன்மைகளைச் சம்பாதித்துக் கொண்டார். இரண்டாமவர்க்கு அது கிடைக்கவில்லை. முதலாமவரின் பிள்ளைகள் வளர்ந்தவர்களாகி விட்டார்கள். இரண்டாமவர் இப்போதுதான் முதலாவது கைக்குழந்தையுடன் காணப்படுகிறார். வாழ்வில் எவ்வளவு வேறுபாடு…!

ஆகவே, சகோதரர்களே, திருமணத்திற்குப் பொருளாதார பலம் அவசியம்தான். ஆனால் அதில் முழுமையை எதிர்பார்க்காதீர்கள். குறைந்த பொருளாதாரமும் திருமணத்திற்குப் போதுமானதே, மீதமுள்ளதை அல்லாஹ் பார்த்துக் கொள்வான். நம்பிக்கையுடன் முன்வாருங்கள்.

இறுதியாக,  சகோதரிகளுக்கு ஒரு விடயத்தைச் சொல்கிறேன். இந்தக் கட்டுரை சகோதரிகளுக்காகவும்தான் என்பதற்கு இது இரண்டாம் காரணம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், வசதிகள் குறைந்த ஒரு வீட்டில் திருமணம் செய்ய முன்வந்தார். மணப்பெண் படிப்பில் கெட்டிக்காரி. உயர்தரப் பரீட்சை எழுதி, பல்கலைக்கழகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாள். அவசரமாய் ஒரு திருமணம செய்யும் வசதி,  அந்தப் பெண் வீட்டாருக்கு இருக்கவில்லை. ஒரு தடவை அந்தப் பெண் எனது நண்பரிடம் இப்படிக் கூறியிருக்கிறாள். நாங்கள் திருமணத்தை பேசி வைப்போம். இப்போதே திருமணம் செய்யத் தேவையில்லை. எனது படிப்பு முடிந்து, தொழில் செய்து, சம்பாதித்துக் கொண்டு, திருமணம் செய்தால் நன்றாக இருக்கும். இப்போது அவசரமில்லைதானே என்றிருக்கிறாள். எனது நண்பருக்கு எப்படி இருந்திருக்கும்…!?.

காரணம் கேட்டபோது,  எங்களுக்கு சாப்பிட தருவதற்கும்,  படிக்க வைக்கவும் வாப்பா எவ்வளவோ கஷ்டப்படுகிறார். திருமணமும் செய்து வைக்கச் சொன்னால் அவர் என்ன கஷ்டப்படுவாரோ தெரியாது…? என்ற கவலைதான். அவரைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் அந்த ஆலோசனை.

வாப்பா மீதான அந்த சகோதரியின் பாசம் நியாயமானதுதான். அதற்காக திருமணத்தை இந்தளவு சுமையாகப் பார்க்க வேண்டியதில்லை.

இப்படியும் சிந்திக்கின்ற சகோதரிகள் இருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பத்தியை சகோதரிகளும் வாசிக்க வேண்டும் என்றேன்.


இன்ஷா அல்லாஹ் எப்போது என்ற கேள்வியின் இன்னொரு பக்கத்தை அடுத்த அமர்வில் அலசுவோம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.