Wednesday, June 26, 2013

ஷஃபான் + றமழான் = வருடத்திட்டம்


ஒரு தடவை ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு பற்றி வந்துள்ள ஹதீஸ்களை இமாம் முன்திரீ அவர்கள் தொகுத்துள்ள  _அத்தர்கீப் வத்தர்ஹீப்_  எனும் நூலில் வாசித்துக் கொண்டிருந்தேன். அது மாலை நேரம். அமைதியான நேரம். சந்தடிகளின் கவனக் கலைப்பு இன்றி வாசிப்பதற்கு பொருத்தமான நேரமாக இருந்தது. குறித்த தலைப்பின் முதல் ஹதீஸை வாசிக்கும் போதே பொறிதட்டியது. ஏதோ ஒரு புதிய விடயம் விளங்குவது போலிருந்தது.

உஸாமா பின் ஸைத் (றழி) அவர்கள் நபியவர்களைப் பார்த்து கேட்கிறார்கள். நீங்கள் ஷஃபான் மாதத்தைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நபியவர்கள் கூறினார்கள்: அது றஜபுக்கும் றமழானிற்கும் மத்தியில் மக்கள் கவனக் குறைவாக இருந்துவிடுகின்ற மாதம். இந்த மாதத்தில்தான் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படுகின்றன. எனது செயல்கள் உயர்த்தப்படுகின்ற போது நான் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்கள்  (நஸாஈ)

இந்த ஹதீஸில் இந்த மாதத்தில்தான் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகின்ற  என்ற வசனம்தான் என்னை சற்று சிந்திக்க வைத்தது. உலகத்தார் அனைவரினதும் இரட்சகனான அல்லாஹ்விடம் செயல்கள் உயர்த்தப்படுகின்றன என்றால் எதற்காக? ஒரு விடயம் புரிகிறது ;  அல்லாஹ்தஆலா செயல்களின் மதிப்பீட்டுக்கு ஒரு முறைமையை வைத்திருக்கிறான். அதாவது மனிதர்களின் செயல்கள் பற்றிய பதிவுகளை ஷஃபான் மாதத்தில்தான் அல்லாஹ் பார்வையிடுகின்றான். 

இந்த நிகழ்வைப் பார்க்கின்ற போது  இன்றைய நாட்களில் நிறுவனங்களும் அமைப்புக்களும் ஏன் அரசுகளும் கூட வருட இறுதிகளில் தமது செயற்திட்டங்கள் குறித்த ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்கின்ற நிகழ்வைப் போல் தென்படுகின்றது. இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துவது போல் ஷஃபான் மாதத்தின் 15ம் இரவு பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் அமைந்துள்ளன.

நபியவர்கள் கூறியதாக முஆத் பின் ஜபல் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹுத்தஆலா ஷஃபான் மாதத்தின் 15ம் இரவில் தனது அனைத்துப் படைப்பினங்களையும் பார்வையிடுகின்றான். அவற்றில் ஷிர்க் வைப்பவனையும் சமூகத்தில் பிளவைத் தோற்றுவிப்பவனையும் தவிர  ஏனைய அனைவருடைய பாவங்களையும் மன்னிக்கின்றான் _ தபரானீ   இப்னு ஹிப்பான்_

ஷஃபான் மாதத்தின் 15ம் இரவு குறித்து அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன. அது பற்றி வந்துள்ள ஹதீஸ்களிலும் சில விமர்சனங்கள் உள்ளன. ஆனால் ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸகீரா  எனும் நூலில் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் இதுபற்றி வந்துள்ள ஹதீஸ்களை சரி காண்கின்றார். அவற்றை வாசித்தபோது ஏற்கனவே எனக்குள் தோன்றியிருந்த கருத்து இன்னும் வலுப்பெற்றது.

மேற்கூறிய ஹதீஸில் அல்லாஹுத்தஆலா மனிதர்களின் செயல்களைப் பார்வையிடுகின்றான், என்பதும் மதிப்பீடு செய்கின்றான்  என்பதும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது, இங்கு பார்வையிடுதல் என்பதற்கு இத்தலஅ  எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இச்சொல் மேலோட்டமான பார்வையன்றி நுணுகிப் பார்த்தலையே குறித்து நிற்கின்றது. அடுத்து, அந்த நுண்ணிய பகுப்பாய்வுப் பார்வையின் காரணமாகத்தான் அல்லாஹுதஆலா அடுத்த கட்டமாக யாருக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். யாருக்கு வழங்கப்படக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வருகின்றான். எனவே,  ஷஃபான் மாதத்தில் மனிதர்களது செயல்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதாவது,  அல்லாஹுத்தஆலாவின் ஒரு வருடத்திட்டம் ஷஃபான் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

ஷஃபான் மாதத்துடன் ஒரு வருடத்திட்டம் பூர்த்தியாகிறது என்றால் அடுத்த வருடத்திட்டம் நிச்சயம் றமழானில் ஆரம்பமாக வேண்டும். எனவே, இது பற்றி நபியவர்கள் ஏதாவது சொல்லியிருக்கிறார்களா?அல்குர்ஆன் ஏதாவது பேசியிருக்கின்றதா?

கொஞ்சம் தேடிப்பார்க்கத் தொடங்கினேன். எனது தேடலுக்கு அல்குர்ஆன் பதில் தந்தது. ஸுறதுத் துகானின் 3-6 வரையான வசனங்களை ஓதிப்பார்த்தபோது,  உடல் புல்லரித்துச் சென்றது. எனக்குத் தோன்றிய கருத்தைத்தான் அந்த வசனங்கள் பேசுவது போல் தெரிந்தது. தப்ஸீர்களைப் புரட்டினேன். ஃபீ ழிலாலில் குர்ஆனைப் பார்த்தேன். இப்னு கஸீரைப் பார்த்தேன். சற்று ஏமாற்றமடைந்தது போன்ற ஓர் உணர்வு தோன்றியது. எனக்குத் தோன்றிய கருத்து அங்கு பேசப்பட்டிருக்கவில்லை. இருந்த போதிலும் நம்பிக்கையை விடவில்லை. இமாம் ஹஸனுல் பன்னாவிடம் சிறந்த தப்ஸீர் எது எனக் கேட்கப்பட்டபோது, உனது உள்ளம்  என்று குறிப்பிட்டார்களே, எனவே எனது உள்ளம் பொய் சொல்வதாய்த் தோன்றவில்லை. தொடர்ந்து தேடினேன்.

அல்லாஹுத்தஆலாவின் உதவி ஒரு புதிய தப்ஸீரின் வடிவத்தில் வந்தது. தப்ஸீருல் வாழிஹ் அல் முயஸ்ஸர் எனும் தப்ஸீர், ஷெய்க் முஹம்மத் அலி அஸ்ஸாபூனீ அவர்களால் எழுதப்பட்டது. இவர் உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் முன்னால் பேராசிரியர். குறித்த வசனங்களுக்கு அவர் கூறும் விளக்கத்தைக் கேளுங்கள்.

அதற்கு முன்னர் அந்த வசனத்தைப் பார்ப்போம்.

அல்குர்ஆனை நாம் பரகத் செய்யப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நாம் அதனூடாக எச்சரித்தோம். அந்த இரவிலேதான் ஒவ்வொரு அறிவு பூர்வமான விடயமும் பகுத்து நிர்ணயிக்கப்படும். எமது கட்டளைப்படியே அது நிகழ்கிறது. நிர்ணயிக்கப்பட்டவற்றை நாம் இறக்கி வைக்கின்றோம். அது உமது இரட்சகனின் அருளாகும். அவன் செவிமடுப்பவனும் அறிவுள்ளவனுமாவான்.   ஸுறதுத் துகான் 3-6

அந்த இரவிலேதான் ஒவ்வொரு அறிவுபூர்வமான விடயமும் பகுத்து நிர்ணயிக்கப்படும்  என்ற பகுதிக்கு அவர் விளக்கம் கூறும்போது இப்படிச் சொல்கின்றார்:

லைலதுல் கத்ர் இரவிலே லௌஹுல் மஹ்பூலில் இருந்து ஒரு வருடத்திற்குரிய அனைத்து விடயங்களும் தனியாக எடுக்கப்படும். அனைத்து விடயங்களும் என்பது ஆயுள்கள், வசதிகள்,  செயல்கள் என அனைத்தையும் உள்ளடக்குகிறது. இவை அல்லாஹுத்தஆலாவின் திட்டப்படி மலக்குமார்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பக்கம்: 1246

இந்த விளக்கத்தை வாசித்தவுடன், கண்களில் நீர் நிறைந்து விட்டது. உள்ளத்தில் இனம் புரியாத ஒரு சந்தோஷம். யாரிடமாவது இதனை சொல்ல வேண்டுமென்று மனம் துடித்தது.

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு எவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லியிருக்கின்றான். திட்டமிடுமாறு மனிதனுக்கு கட்டளையிட்ட அல்லாஹுத்தஆலா ஒரு அருமையான திட்டத்தை மனிதனுக்கு செய்து காட்டுகின்றான். இந்த பிரபஞ்சத்தின் முழு ஆயுள் காலத்திற்குமான திட்டம்தான் லௌஹுல் மஹ்பூழில் எழுதப்பட்டுள்ளவை. அவற்றிலிருந்து ஒரு வருடத்திற்குரிய விடயங்களை பெற்று லைலதுல் கத்ர் இரவில் அல்லாஹுத்தஆலா மலக்குமார்களிடம் ஒப்படைக்கின்றான். இந்த பூமியில் வாழும் மனிதர்களுக்கான அடுத்த ஷஃபான் வரையான வேலைத்திட்டம் இதுதான். இத்திட்டம் சரியாக நடைபெறுகின்றதா என்பதை சரியான முறையில் மேற்பார்வை செய்து, உரிய பதிவுகளை மேற்கொண்டு, அடுத்த வருடம் ஷஃபானில் இறுதி மதிப்பீட்டுக்காக அல்லாஹுத்தஆலாவிடம் எடுத்துச் செல்வது மலக்குமார்களது பொறுப்பு. இறுதி மதீப்பீட்டில் அல்லாஹுத்தஆலா அகற்ற வேண்டியவற்றை அகற்றுகின்றான். சேர்க்க வேண்டியவற்றை சேர்க்கின்றான். ஏனெனில் ஒரு புதிய தூய்மையான மனிதனாய் அடுத்த வருடத்தை அவன் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக.

இது உண்மையிலேயே அல்லாஹுத்தஆலாவின் அருள். எங்கள் மீது கொண்ட இரக்கம். எனவேதான் மனிதனது பாவங்கள், பிழைகள் குவிந்து மறுமையில் பெரும் பாவப்பட்டியலுடன் அல்லாஹுத்தஆலாவைச் சந்திக்காமல் வருடாவருடம் மனிதனை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்து வைத்திருக்கின்றான். மேற்கூறிய வசனம் அல்லாஹுத்தஆலாவின் இந்த அருளையும், அன்பையும் பற்றிப் பேசுகிறது.

அடுத்து மதிப்பீட்டுக் காலத்திற்கும் புதிய திட்டம் வழங்கப்படும் காலத்திற்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி காணப்படுகிறது. அந்த இடைவெளிதான் ரமழான் மாதம். ரமழானின் பிரதான நோக்கமே மனிதனை கழுவிச் சுத்தப்படுத்துவதுதான்.

அல்குர்ஆன் நீங்கள் தக்வாவுள்ளவர்களாக மாற வேண்டும் (அல்பகரா: 183) என்பதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்று கூறுவது இந்த சுத்தப்படுத்தலைத்தான்.

எனவே, றமழானின் செறிவான இபாதத்களுக்குள்ளே அல்லாஹ் மனிதனை உட்படுத்தி அவனைக் கழுவி தூய்மைப்படுத்தி லைலதுல் கத்ர் இரவுடன் ஒரு புதிய மனிதனாய் புதிய வருடத்தை ஆரம்பிக்க வைக்கின்றான். இதுதான் அல்லாஹ்த்தஆலாவின் அருள். இதுதான் அவனது ஏற்பாடு. எனவே, அல்லாஹுத்தஆலாவின் இந்தத் திட்டமிடல் மனிதனைப் பார்த்துச் சொல்லும் செய்தி.

 மனிதன் திட்டமிட வேண்டுமென்பதுதான். அதிலும் குறிப்பாக தனது மறுமை வாழ்வுக்காக திட்டமிட வேண்டும். ரமழானுடன் தனது புதிய வாழ்வை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.

இந்தக் கருத்தைச் சொல்லி  முடித்தவுடன் உள்ளத்தில் ஒரு பெரும் பூரிப்பு. இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) அவர்கள் உலகில் மிகச் சிறந்த தப்ஸீர் உனது உள்ளம்தான் என்று சொன்னது எவ்வளவு பெரிய உண்மை..!

2 comments:

  1. masha allah ithai paditha udan romba santhoshamaha irukirathu ..... allahu akbar allahu akbar kabeera...

    ReplyDelete
  2. asslamualikum shake ullam poorithuvittdu alhamdulillah yapperpattavaipu insah allah anivarukkum solwom yallorukum pakiyamundakattum zasakumullah

    ReplyDelete