Monday, June 3, 2013

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல் தொடர்பாக...


சி
றுபான்மையினா்க்கான ஃபிக்ஹ் ‘ஃபிக்ஹுல் அகல்லிய்யாத்’ என்பது பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு சிந்தனை, அதன் ஆழ அகல நுணுக்கங்களைப் பார்க்கும்போது உண்மையில் அது பேசவரும் சிந்தனை ஒரு தனியான புதிய பிக்ஹ் பற்றியதல்ல, மாற்றமாக அடிப்படையில் இஸ்லாமிய ஃபிக்ஹ் கொண்டிருக்கின்ற விரிவான நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையின் பிரயோகங்களில் ஒன்றாகவே அது காணப்படுகிறது.

அந்த வகையில் அந்த சிந்தனையின் ஊற்று நியாயமானதே. ஆனால், சிறுபான்மை என்ற சொற்பிரயோகம் பல சமயங்களில் எங்களிடத்தில் ஏற்படுத்துகின்ற மனநிலை சற்று எதிர்மறையானதாகவே காணப்படுகிறது. பல சமயங்களில் அது எம்மை ஒரு கட்டுக்குள் சுருங்கச் சொல்வதுபோல் இருக்கிறது. நாம் பலவீனர்கள் என்று எமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்வது போலவும் இருக்கிறது. 

மாற்றம் பற்றி சிந்திப்பதைவிட்டு எம்மைச் சற்று தூரமாக்குவது போலவும் இருக்கிறது. எனவே, அந்தச் சொல் குறித்தும் அதன் கருதுகோள் குறித்தும் கொஞ்சம் மீள்பார்வை ஒன்று தேவை என்று நினைக்கிறேன்.

இஸ்லாம் என்பது, கால இடசூழ்நிலை பரிமாணங்களைக் கருத்தில் கொள்கிறது. அவற்றின் வேறுபாட்டிற்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் அளவுக்குத் தாராளமான விசாலம் அதில் இருக்கிறது. அந்த வகையில், முஸ்லிமல்லாத ஒரு சூழலில் வாழும் முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகள், சட்டங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தப்படுவது எவ்வாறு என்பது இஸ்லாமிய ஃபிக்ஹின் விசாலத்தன்மையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது என நினைக்கிறேன்.

அத்துடன் முஸ்லிமல்லாத ஒரு சூழலில் வாழ்தல் என்பது, வெறுமனே தான் வாழும் சூழலுடன் இயைந்து, அதற்கேற்ப இஸ்லாத்தில் நெழிவு சுழிவுடன் வாழ்ந்துவிட்டுச் செல்லல் என்று மட்டும் ஒருவர் பொருள் கொள்வாரெனில், அது தவறானது. தான் முஸ்லிமாக இருக்கிறேன், தன்னிடம் ஈமான் இருக்கிறது எனின் அதன் தாக்கம் அந்தச் சமூகச் சூழலில் ஏதோ ஒரு வடிவில் பிரதிபலிக்க வேண்டும். இங்குதான், இஸ்லாம் கூறும் மாற்றம் பற்றிய சிந்தனையும் மாற்றம் பற்றிய கடமையும் வருகிறது. மாற்றம் என்பது கடமை. ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. மாற்றத்தின் வடிவம் குறித்து நான் இங்கு பேசவில்லை. அது எந்த வடிவத்தை வேண்டுமானாலும் எடுக்கலாம். அது மனித இஜ்திஹாதுக்கு ஏற்ப வேறுபட முடியுமானது. ஆனால், மாற்றம் கடமை.

எனவே, மாற்றம் பற்றிய எந்த பிரக்ஞையும் அற்ற ஒரு வாழ்க்கையை நாம் இஸ்லாமிய வாழ்க்கை என்று சொல்வது கடினமானது. இஸ்லாமிய ஃபிக்ஹிலும் அதன் நெகிழ்வுத் தன்மை மாற்றத்தை இலக்கு வைத்துத்தான் அமைந்திருக்கிறதே அன்றி வாழாவிருக்கும் ஒரு நிலைக்கு வழங்கும் அங்கீகாரமாக அது இல்லை.

இலங்கையில் இஸ்லாமிய வாழ்வைப் பேசும்போது நாம் மறந்துவிடாதிருக்க வேண்டிய ஓர் உண்மை இது.

பிற மதத்தவர்களின் பெருநாள் தினங்களில் வாழ்த்து தெரிவித்தல் தொடர்பிலான இஸ்லாமிய நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை. இது தொடர்பிலான ஃபத்வாக்களை வாசிக்கின்றபொழுது இரண்டு வகையான கருத்துக்களை காண முடிகிறது.

1.        வாழ்த்துத் தெரிவித்தல் ஹராமானது என்று கூறும் ஒரு கருத்து. இதனை முன்வைப்பவர்கள் மிகப் பெரும்பாலும் இது பற்றிய இமாம் இப்னுல் கையிம் (ரஹ்), இமாம் இப்னு தைமியா (ரஹ்) போன்றோரின் ஃபத்வாக்களை மையப்படுத்தியே இக்கருத்தை வலியுறுத்துகின்றனர். இதற்கான மிகப் பிரதானமான நியாயமாக, பெருநாள்கள் அவா்களது வணக்கமாகும். எனவே அவற்றுக்கு வாழ்த்து தெரிவிப்பது அவற்றை நாம் அங்கீகரிப்பது போன்றதாகும் என்று சொல்கிறார்கள்.
2.        வாழ்த்துத் தெரிவித்தல் அனுமதிக்கப்பட்டது என்பது இரண்டாவது அபிப்ராயம். நவீன அறிஞர்களில் பெரும்பான்மையானவர்களுடைய நிலைப்பாடு இதுதான். நிறுவன ரீதியாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் ஆய்வுக்கும் ஃபத்வாவிற்குமான ஐரோப்பிய சபை போன்ற மிக விரிவாக “அனுமதிக்கப்பட்டதுஎன்ற ஃபத்வாவை தெளிவுபடுத்தியுள்ளன.

இரண்டாம் கருத்தைப் பேசுகின்றவர்கள் தமது கருத்துக்கு நியாயமாக சில விடயங்களை முன்வைக்கின்றனர். குறிப்பாக, பிற சமூகங்களுடன் கலந்து வாழ்கின்றவா்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக உறவு, தொழில், பக்கத்து வீடு, படிப்பு போன்ற அடிப்படைகளில் தொடர்புள்ளவர்களைப் பொறுத்த வரையில் இந்த வாழ்த்துத் தெரிவித்தல் தவிர்க்க முடியாதது. சமூக வாழ்வில் இந்தப் பண்பாடு அவசியமானது என்பார்கள். இத்தகைய ஒரு சுமூகமான சமூக வாழ்வைத்தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது என்கிறார்கள்.

  لَّا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ 

أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

 إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُم مِّن دِيَارِكُمْ وَظَاهَرُوا 

عَلَىٰ إِخْرَاجِكُمْ أَن تَوَلَّوْهُمْ
 ۚ وَمَن يَتَوَلَّهُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் இந்த விடயத்தை மிகத் தெளிவாகப் பேசுகிறது: இங்கு முஸ்லிம்களுடன் சமாதானமாக வாழும் மக்களுடன் நடந்துகொள்ள வேண்டிய முறைமை பற்றிப் பேசுகின்றபொழுது, ‘பிர், ‘கிஸ்த் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘கிஸ்த்என்பது நீதி, அதாவது பிறர்க்கு வழங்கப்பட வேண்டியவற்றை குறைவின்றி வழங்குதல் என்பது இதன் பொருளாகும். ‘பிர்என்பதன் கருத்து, தனது உரிமைகளில் விட்டுக் கொடுப்பு செய்து பிறா்க்கு நன்மையளித்தல் என்பதாகும். அந்த வகையில் பெருநாள் தினங்களில் வாழ்த்துத் தெரிவித்தல் என்பது, இந்த ‘பிர்’ ‘கிஸ்த்என்ற சொற்களின் பிரயோகங்களில் ஒன்றுதான் என்று கூறுவார்கள்.

மேற்கண்ட இரண்டு நிலைப்பாடுகளிலும் நாம் வாழும் நாட்டிற்கு இரண்டாவது நிலைப்பாடே மிகவும் பொறுத்தமானது என்பதை நிச்சயமாக எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

இமாம்களான இப்னு தைமியா (ரஹ்), இப்னுல் கையிம் (ரஹ்) போன்றோர், இஸ்லாத்தில் மிக உயர்ந்த கண்ணியத்திற்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அவர்களது இந்த ஃபத்வா அவர்கள் வாழ்ந்த அந்தச் சூழலில் வழங்கப்பட்டதாகும்.

கலாநிதி யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் கூறுவது போல், இன்றைய உலகமாற்றம் நாம் அவர்களது ஃபத்வாவில் தங்கியிருக்காது வேறு வகையில் சிந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவா்களது பெருநாட்கள் அவர்களுக்கு வேண்டுமானால் வணக்கமாக இருக்கலாம். ஆனால், அது சந்தோசங்களைப் பரிமாறிக் கொள்வதற்குத் தடையானதல்ல. ஏனெனில், சந்தோஷங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்பது ஓர் உயர்ந்த பண்பாடு.

ஒரு சம்பூரணமான முஃமின் சிறந்த பண்பாட்டாளனாவான் என்பது ஹதீஸ். அது போல் நபியவா்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம் உயாந்த பண்பாடுகளைப் பூரணப்படுத்துவதற்காகவே என்பதும் நபியவா்கள் வாக்காகும்.


அடுத்து இலங்கைச் சூழலில் இவ்விடயம் குறித்த சிந்தனை அகீதா சம்பந்தப்பட்டதாக நோக்கப்படுவதை விடவும், அதாவது அவா்களது வணக்கத்திற்கு நாம் துணை போகிறோம் என்று பார்ப்பதை விடவும் இலங்கையின் சுமூகமான சமூக வாழ்க்கைக்கு எது நன்மையானது என்று சிந்திப்பதுதான் மிகவும் பொறுத்தமானது. மட்டுமல்ல, இஸ்லாம் பற்றிய நல்ல அபிப்பிராயம் அதனை நோக்கிய ஈர்ப்பு என்பன இந்த கலந்த வாழ்வினூடாகவே சாத்தியப்படுகிறது.

No comments:

Post a Comment