Saturday, October 15, 2016

நிகாப் விவகாரம் சில அவதானங்களும் ஆலோசணைகளும்

       ஒரு மகாஸிதியப் பார்வை 

இங்கு நான் நிகாப் குறித்து ஒரு பத்வாவை முன்வைக்கவில்லை, அல்லது அதன் சட்டநிலை குறித்த ஒரு ஆய்வை மேற்கொள்ளவுமில்லை,  அல்லது அழகை மறைத்தலின் மகாஸிதுகளைப் பேச நினைக்கவுமில்லை,  இவையனைத்தையும் தாண்டி நிகாப் விவகாரத்தின் அண்மைய சூடான வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்த நாள் முதல் எனது மனதில் ஓடிக்கொண்டிருந்த சில உண்மைகளையே இங்கு உங்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவது,  கலாநிதி அப்துல்லாஹ் தர்ராஸ் அவர்கள் இஜ்திஹாதைப் பேசும் போது,  அதில் இரண்டு முக்கிய பரப்புக்ளைக் குறித்துக்காட்டுகிறார். ஒன்று இஜ்திஹாத் இஸ்தின்பாதிமற்றையது இஜ்திஹாத் தத்பீகி”,  முதலாவது சட்டவசனங்களில் இருந்து சட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஆய்வைக் குறிக்கும்,  மற்றையது ஒரு சட்டத்தை அமுல் படுத்துவதுவது எவ்வாறு என்பதற்கான  ஆய்வைக் குறிக்கும். இந்த இரண்டும் இணைந்ததுதான் இஜ்திஹாத் என்பார். இதே உண்மையை முன்னைய பல அறிஞர்களும் பேசியிருக்கிறார்கள்,  அதில் முதன்மையானவர் இமாம் ஷாதிபி,  அவர் இஜ்திஹாத் தத்பீகியை தஹ்கீகுல் மனாத் அல்காஸ்என்ற பதப்பிரயோகத்தின் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறார். 

அதாவது ஒரு சட்டமுடிவு அமுல்படுத்தப்படும் போது,  அந்த சட்டமுடிவு அமுல்படுத்தப்படும் சூழல்,  அமுல்படுத்தப்படும் நபர்,  சட்டமுடிவின் தன்மை போன்ற பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவை கருத்தில் எடுக்கப்படாத போது அந்த சட்டத்தின் மகாஸிதை அடைந்துகொள்வது சாத்தியமற்றுச் செல்லலாம். அதுபோல் மேற்குறித்த விடயங்களின் ஆய்வின் அடிப்படையில் அந்த சட்டம் ஒரேயடியாகவன்றி படிப்படியாகவோ அல்லது முழுமையாகவன்றி பகுதியாகவோ அல்லது சில நிபந்தனைகளுக்கு உற்பட்ட நிலையிலோ அமுலாக முடியும். உமர் (றழி) அவர்களது காலத்தில் திருட்டுக் குற்றத்திற்கு கைவெட்டும் சட்டம் இடைநிறுத்தப்பட்டமை இஜ்திஹாத் தத்பீகி வகைசார்ந்ததாகும்.

மேற்சொன்ன கோட்பாட்டு உண்மையின் அடியாக நிகாப் விவகாரம் பார்க்கப்படும் போது,  இன்றைய கலந்துரையாடல்,  இஜ்திஹாத் இஸ்தின்பாதி பரப்பில்தான் அதிக கவனத்தைக் குவித்திருப்பதைக் காணலாம். அது அவசியம்தான்,  அங்கு ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்படுகின்ற ஒரு கருத்து எந்தளவு நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு,  அதாவது இஜ்திஹாத் தத்பீகி என்ற பகுதிக்கு எந்தளவு கவனம் கொடுக்கப்படுகிறது என்பது என்னுள் ஒரு கேள்வியாக இருக்கிறது.

 இது குறித்து அவ்வப்போது சில கருத்துக்களும் அவதானங்களும் சிலர் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள போதிலும்,  அவை போதுமான ஆய்வுத்தரம் கொண்டவையாக இல்லை என்பதே உண்மை,  அல்லது பாரம்பரியமாக பேசப்பட்டு வரும் பித்னாவைத் தவிர்ப்பதற்குஎன்ற நியாயம் மீண்டும் மீண்டும் ஏக நியாயமாக முன்வைக்கப்படும் நிலையே காணப்படுகிறது. இங்கு பேசப்படும் நியாயங்கள் உண்மையில் கால வலுவுள்ளனவா? அவை பாரிய சமூக,  உளவியல் தாக்கங்களைக் கொண்டுவருகின்றனவா? போன்ற விடயங்கள் இன்னும் தெளிவான ஆய்வுக்கு உற்படுத்தப்பட வேண்டும்

 அந்தவகையில் இலங்கைச் சூழலிற்கான அமுலாக்க வடிவம் எது என்பது குறித்து தெளிவான இஜ்திஹாத்கள் தோற்றம் பெறுவது அவசியம் என நினைக்கிறேன்,  இந்த அறிவியல் பணி கண்டிப்பாக ஒரு தனிமனித எல்லையைத் தாண்டி நிறுவன வடிங்களைப் பெறவேண்டியதாகும். ஜம்இய்யதுல் உலமா போன்ற நிறுவனங்களின் கவனத்தை இந்த விடயம் பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.

இரண்டாவது,  நிகாப் தொடர்பான சூடான விவாதங்களை அவதானிக்கும் போது,  ஒரு விடயம் எனது கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது,  அதுதான் நிகாபை வாஜிப் என்போரும் சரி,  அது வாஜிப் அல்ல என்போரும் சரி,  பெரும்பாலான இமாம்கள் தமது கருத்திலேயே இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இதில் ஒரு படி இன்னும் உள்ளே சென்று,  ஷாபி மத்ஹபின் நிலைப்பாடு இதுதான் என இரு தரப்பினரும் தமது கருத்தை ஷாபி மத்ஹபின் நிலைப்பாடாக முன்வைக்கின்றனர். 

இங்குதான் ஒரு முக்கியமான கேள்வி தோன்றுகிறது. பெரும்பான்மை என்பது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? அதற்கான விஞ்ஞானபூர்வமான முறைமை என்ன? இஸ்லாமிய சட்டப்பாரம்பரியத்திற்குள் மிகத் தெளிவாக வரையறை செய்யப்படாத ஒரு பகுதி இது. ஜும்ஹுர் என்ற ஒரு சொற்பிரயோகம் சட்டப் பாரம்பரியத்தில் மிகவும் பிரபல்யமானது,  இது மிகப்பெரும்பாலும் நான்கு இமாம்களில் பெரும்பான்மை எந்தப் பக்கம் இருக்கிறது என்பதை வைத்தே அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஜும்ஹுரினுடைய நிலைப்பாடு என்று அடையாளப்படுத்தப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் அது பெரும்பான்மையை உண்மையில் பிரதிபளித்ததா? என்பதும் கேள்விக்குள்ளாக்கப்படும் ஒரு விடயமாகும்.

அதேபோல்,  ஷாபி மத்ஹபின் நிலைப்பாடு என்பது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? இதற்கான பொறிமுறையும் தெளிவற்றது. ஏனெனில் ஷாபி மத்ஹப் என்பது பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட ஒரு பாரம்பரியம். அதற்கு உள்ளேயும் ஒரே விவகாரத்தில் பல்வேறு நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஒரு மத்ஹப் எல்லைக்குள் இருந்து செயற்படும் இமாம்கள் அனைவரும் ஒரேவகையான ஒரே தரத்திலான பங்களிப்பை வழங்கவில்லை,  அவர்களில் தமது மத்ஹப் இமாமுடைய அடிப்படைகளைப் பேணி புதிதாக இஜ்திஹாத் செய்தவர்களும் இருந்தார்கள்,  பலசமயங்களில் இமாமுடைய கருத்துக்கு மாற்றமான இஜ்திஹாதுகளும் செய்யப்பட்டிருக்கின்றன,  இன்னும் சிலர் புதிதாக இஜ்திஹாத் செய்யாது ஏற்கனவே சொல்லப்பட்ட முடிவுகளில் மிகப் பொருத்தமானதைச் தெரிவு செய்பவர்களாக இருந்தார்கள். எனவே ஒரே மதஹ்புக்குள்ளேயே பல்வேறு நிலைப்பாடுகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. 

காலமாற்றமும் அங்கே கருத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இமாம் ஷாபியிடத்திலேயே பழைய கருத்து புதிய கருத்து என்ற இரு நிலைப்பாடுகள் இருந்தமை மிகவும் பிரபல்யமானது. 

ஒரு மத்ஹபினுடைய கருத்து எது என்பதை மிகப் பெரும்பாலும் அந்த மத்ஹபின் ஜாம்பவான்கள் அதன் சட்டவிளக்கங்களைத் தொகுத்த நூல்கள் மூலமாகவே அறிய முடிகிறது. இது போன்ற நூல்களைத் தொகுத்த ஒவ்வொரு இமாமும் தனது ஆய்வுப் பரப்புக்குற்பட்டே இறுதி முடிவுகளை முன்வைத்துள்ளனர். அவற்றைக் குறிக்கும் வகையில் ஸஹீஹ்சரியானது,  “முஃதமத்ஏற்றுக் கொள்ளப்பட்டது,  “முக்தார்தெரிவு செய்யப்பட்டது,  “அஷ்ஹர்பிரபல்யமானது,  “அழ்ஹர்வெளிப்படையானது,  போன்ற சொற்களைப் பயன்படுத்தி தனது ஆய்வுக்கு ஏற்ப மத்ஹபில் தனது தெரிவை விளக்குவார். இது குறித்த இமாமின் தெரிவேயன்றி அதுதான் மத்ஹபின் முழுமொத்த முடிவு என்று கருதப்பட மாட்டாது.

எனவே நிகாப் விவகாரத்தில் குறிப்பாகவும் ஏனைய பல்வேறு நிலைப்பாடுகளுக்கு இடம்பாடான இன்னும் பல விவகாரங்களிலும்,  பொதுவான சட்டப்பாரம்பரியத்திலும் சரி,  ஷாபி சட்டப்பாரம்பரியத்திலும் சரி பெரும்பான்மை சிறுபான்மை என்ற ஒரு வரையறைக்கு வருவது சிரமமானது,  அந்த வகையில் எமக்கு முன்னால் இருக்கின்ற பல்வேறு நிலைப்பாடுகளில் எமது நாட்டுச் சூழலுக்குப் பொறுத்தமான ஒன்றை, ஏற்கனவே கூறப்பட்ட இஜ்திஹாத் தத்பீகி முறைமையில் தெரிவு செய்வதற்கான முயற்சியே விளைதிறன் கொண்டது என்று நினைக்கிறேன்.

மூன்றாவது,  நான் ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொண்ட ஒரு விடயம்,  பத்வா சொல்வதற்கான முறையியல் தொடர்பானது. நிகாப் விவகாரத்தில் மாத்திரமன்றி பவ்வேறு சட்டவிவகாரங்களில் அகன்ற கருத்து வேறுபாடுகளுக்கு,  பத்வா சொல்வதற்கான முறையியல் தொடர்பான வேறுபட்ட பார்வையும் ஒரு முக்கிய காரணம். 

நான் அறிந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவுக்கான முறையியலின் பிதான கூறு,  ஷாபி மத்ஹபுக்கு உற்பட்டுக் காணப்படல் வேண்டும் என்பது,  அதுபோல் குறித்த ஒரு தலைப்பில் ஆரம்ப கால இமாம்கள் ஏதேனும் ஒரு பத்வாவை வழங்கியிருந்தால் அதனையொட்டியே தமது பத்வாவையும் அமைத்துக் கொள்வர்,  இன்னும் சில விடயங்கள் இருந்த போதிலும் இவை பிரதானமானவை. (இது பத்வா சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலாகும்). 

இலங்கையில் இருக்கும் எல்லாத்தரப்பு அறிஞர்களும் பத்வா முறையியல் தொடர்பான மேற்குறித்த நிலைப்பாட்டில் இல்லை என்பது மிகவும் வெளிப்படையான உண்மை. எனவே பத்வா சொல்வதற்கான சகல தரப்பினரது கருத்துக்களையும் உள்வாங்கிய பொது முறைமை ஒன்றிற்கு வருவது மிகவும் பொறுத்தமானது என நினைக்கிறேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எல்லாத்தரப்பினரையும் இணைத்த ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நிறுவனமாக இருப்பதால் அவர்கள் இந்த விடயத்தை மேற்கொள்ள முன்வருவது மிகவும் சிறப்பானதும் கட்டாயமானதுமாகும். 

இங்கு நான் கருத்து வேறுபாடுகள் இல்லாது போக வேண்டும் என்று சொல்லவில்லை,  அது சாத்தியமும் இல்லை,  பத்வாவுக்கான வேறுபட்ட முறைமைகள் இருப்பது தவறு என்று சொல்லவும் இல்லை,  ஆனால் இடைவெளி அதிகரித்த முறைமைகளன்றி முடிந்தவரை நெருக்கமான,  அடுத்த தரப்பினரை அணுசரித்த முறைமைகளாக இருப்பது மிகவும் பொறுத்தமானது என்கின்றேன்.

நான்காவது,  கலாநிதி யூசுப் அல்கர்ளாவி அவர்கள் சொல்வது போல்,  சட்டவிவகாரங்களில் ஒரே விவகாரத்தில் பல சரிகள் காணப்பட முடியும். தஅத்துதுஸ் ஸவாப்என்று அவர் இச்சிந்தனையை விளங்கப்படுத்துவார். அதாவது சத்தியம் அசத்தியம்,  சரி பிழை என்ற இரு விடயங்களையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். சத்தியம் அசத்தியம் என்பது மார்க்கத்தின் அடிப்படை விவகாரங்களில் பிரயோகிக்கப்படும் ஒரு விதி,  ஆனால் சரி பிழை என்பது கிளை விவகாரங்களில் பிரயோகிக்கப்படும் ஒரு விதியாகும். உலகில் சத்தியம் ஒன்றுதான் அது இரண்டாகவோ பலதாகவோ இருக்க முடியாது. ஆனால் சரிகள் அவ்வாறானதல்ல,  அவை ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையல்ல,  இரண்டாகவோ ஏன் பலதாகவோ காணப்படலாம். இந்த விடயம் இஸ்லாத்தில் கருத்துவேறுபாட்டுச் சிந்தனையைக் கையாள்வதற்கான சிறப்பான விதிகளில் ஒன்று.

சட்டக் கருத்து வேறுபாடுகள் என்பது,  சத்திய அசத்திய வேறுபாடுகளாக பார்க்கபடுவதற்குரியன அல்ல. அந்தவகையில் அவற்றை முரண்பாட்டுக் காரணிகளாகவோ பிளவுக் காரணிகளாகவோ நோக்க வேண்டிய அவசியமில்லை. இவற்றைக் காரணமாக வைத்து,  இரண்டு தரப்பினர் தமக்கு மத்தியில் எந்த சந்திப்பையும் உறவையும் தவிர்ப்பது பொறுத்தமற்றது. ஏனெனில் இந்த சட்டக் கருத்து வேறுபாடுகள் இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தின் செழுமையையும் அரவணைப்புச் சக்தியையும் கால இட சூழமைப் பொறுத்தப்பாட்டையும் பறைசாட்டக் கூடியனவாகும்.

இந்தப் பின்புலத்தில் நின்றுதான் ஷெய்க் முகம்மத் அத்தாஹிர் இப்னு ஆஷுர் அவர்கள் சட்டக் கருத்து வேறுபாடுகளின் மகாஸித் குறித்துப் பேசுகிறார். வரலாற்று நெடுகிலும் சட்டக் கருத்து வேறுபாடுகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. இத்தகைய ஒரு ஏற்பாட்டை அல்லாஹ் ஏன் வைத்திருக்கிறான் என்ற கேள்விக்குத்தான் இப்னு ஆஷுர் அவர்கள் பதில் தருகிறார்கள். அவர் இரண்டு பிரதான மகாஸித்களை இது குறித்து முன்வைக்கிறார். ஒன்று தய்ஸீர்எனும் இலகுபடுத்தல்,  மற்றது ஆலமிய்யதுஷ் ஷரீஆஎனும் ஷரீஆவின் சர்வதேசத் தன்மை.

இலகுபடுத்தல் என்பது இஸ்லாமிய ஷரீஆவின் சிறப்புக்குரிய அடையாளங்களில் ஒன்று,  அது மனிதனை ஒரு போதும் சிரமங்களுக்கு உள்ளாக்குவதை விரும்புவதில்லை,  மனித நலனே அதன் எதிர்பார்ப்பு. அந்தவகையில் ஒரு சட்டவிவகாரத்தில் ஒரு தீர்வு மாத்திரம் காணப்படுகின்ற நிலை,  மனிதனை பல சமயங்களில் சிரமத்தில் தள்ளிவிட முடியும். ஆனால் இலக்கை அடைவதற்கான பல வழிகள் காணப்படுகின்ற போது அது என்றும் மனித வாழ்வை இலகுபடுத்தக் கூடியதாகும். இதுதான் சட்டக் கருத்துவேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை என்பதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சரிகள் காணப்பட முடியும் என்பதற்குமான முதலாவது நியாயம்.

இரண்டாவது நியாயம்,  ஷரீஆவின் சர்வதேசத் தன்மை,  இஸ்லாம் குறித்ததொரு நிலப்பிரதேசத்திற்கோ மனிதக் குழுமத்திற்கோ கலாச்சாரப் பின்புலத்திற்கோ உரியதல்ல. அது உலகின் அனைத்து சூழலிலும் பிரயோகிக்கப்படுவதற்குரியது. எனவே சட்டவிவகாரங்களில் ஒற்றைத் தீர்வுகள் மாத்திரம் இந்தச் சூழலை எதிர் கொள்ளப் போதுமானதல்ல. ஆசியச் சூழலுக்குப் பொருந்தக் கூடிய ஒரு பத்வா பல சமயங்களில் ஜரோப்பிய சூழலுக்குப் பொருந்தமாட்டாது. ஒரு கன்னிப் பெண்ணின் திருமணத்திற்கு வலி அவசியமா? என்ற கருத்து வேறுபாட்டை இப்னு ஆஷுர் அவர்கள் இந்தப் பின்புலத்திலேயே அணுகுகின்றார். எனவே ஷரீஆவின் சர்வதேசத் தன்மைக்கு இயைந்து கொடுக்கும் இலக்குடனேயே சட்டங்களின் பன்முகத்தன்மை அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் மேலே சொல்லப்பட்ட இஜ்திஹாத் தத்பீகி வகையையும் பிரதிபளிக்கிறது.

மேற்கூறப்பட்ட சட்டக்கருத்து வேறுபாட்டுச் சிந்தனையையும் அதன் மகாஸிதுகளையும் முழுமையாக,  நிகாப் விவகாரத்தில் பொருத்திப் பார்க்க முடியும் என்று நான்  கருதுகிறேன். நிகாப் விவகாரம் சத்தியம் அசத்தியம் என்ற தரத்தைச் சேர்ந்த ஒரு விவகாரமல்ல,  தெளிவாக சட்டக்கருத்து வேறுபாட்டு வகைக்குற்பட்டது. எனவே இங்கு சரிகளும் பிழைகளும்தான் இருக்க முடியும். பிழையாக இருந்தாலும் அது நன்மை தரக்கூடியது என்பதுதான் நபியவர்களின் வழிகாட்டல். இதனைத் தாண்டி நிகாப் விவகாரத்தில் இரண்டு நிலைப்பாடுகளும் சரியாக இருப்பதற்கான வாய்ப்பைத்தான் நான் இங்கு குறித்துக் காட்ட விரும்புகிறேன்.

நிகாப் விவகாரத்தின் சட்டக் கருத்து வேறுபாட்டு எல்லைகளுக்குள் நுழைந்து பார்க்கின்ற பொழுது,  ஒற்றை முடிவொன்றை நோக்கிச் செல்வதற்கு மிகவும் சிரமமான வகையில் விரிவான வாதப்பிரதிவாதங்களை அங்கு காணலாம். ஸஹாபாக்கள் முதல் இன்றைய நாள் அறிஞர்கள் வரையில் இருவேறுபட்ட புரிதல்களையும் அதற்கான நியாயங்களையும் தொடர்ச்சியாகக் காணலாம். எந்தக் காலப்பகுதியிலும் எந்தத் தரப்பினரும் அடுத்த தரப்பினரது நியாயங்களை முழுமையாக மறுதலித்து வெற்றி கண்டதாக வரலாறு இல்லை. அந்தவகையில் ஒரு தரப்பினர் அடுத்த கருத்துக்கான பலமான திட்டவட்டமான எந்த ஆதாரமும் கிடையாது என்ற வடிவிலான பிரஸ்தாபங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. இந்த அணுகுமுறை நிகாப் விவகாரத்தில் தவிர்க்கப்பட வேண்டும்,  இதற்கப்பால் எல்லை மீறிய சாடல்கள் எந்தவகையிலும் பொறுத்தமற்றவை.

அடுத்து,  நிகாப் விவகாரத்தில் பல்சரி நிலை காணப்படுவதும்,  அந்நிலையின் மகாஸிதுகளாக இலகுபடுத்தலும் ஷரீஆவின் சர்வதேசத் தன்மையைப் பறைசாட்டலும் அமைந்திருப்பதை நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். அதாவது,  ஆடை என்பது அடிப்படையில் தனிமனித சுதந்திரம் சார்ந்தது. மனித உடம்பில் கட்டாயம் மறைக்கப்பட வேண்டியது என்று திட்டவட்டமாக நிறுவப்பட்டு,  அனைவரும் உடன்பட்ட எல்லையைப் பொறுத்தவரை அதனை விடவும் ஆடைக்குறைப்பு செய்வதற்குச் சுதந்திரமில்லை,  அதற்கப்பால் ஒருவர் தனது வாழ்சூழல்,  விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஒரு ஆடை முறையைத் தெரிவு செய்வதில் தவறில்லை,  நிறம்,  வகை போன்ற விடயங்கள் எதுவும் தனிமனித சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. 

அந்த வகையில் நிகாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் அடிப்படையில் தனிமனித சுதந்திரம் சார்ந்தது,  அதனை எவரும் நிர்ப்பந்திக்கவும் முடியாது,  தடை செய்யவும் முடியாது. சட்டத்தில் இருக்கின்ற பல்சரி நிலை,  எமது வாழ்வில் இந்த வடிவில்தான் பிரதிபளிக்கிறது என்று நினைக்கிறேன். இங்கு ஒருவர் ஷரீஅத்தைப் பின்பற்றியவராகவும் மற்றவர் ஷரீஅத்தைப் பின்பற்றாதவராகவும் கருதப்பட மாட்டார்கள். மாற்றமாக இருவரும் ஷரீஅத்தைப் பின்பற்றிவர்களாகவே கருதப்படுவர்,  இங்கு நிகாப் விடயம் தனிமனித சுதந்திரத்திற்கு விடப்படுதலே ஷரீஅத் ஆகும்.

இந்த இடத்தில் இஜ்திஹாத் தத்பீகியின் பின்புலத்திலிருந்து சிலர் எழுப்பும் ஒரு வாதமிருக்கிறது.  இலங்கையில் முஸ்லிம்களின் ஆடைக் கலாச்சாரம் சகோதர இனங்களிடையே பலத்ததொரு சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. இலங்கையை அறேபிய மயப்படுத்தும் வேலையை முஸ்லிம்கள் இரகசியமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தை மறைத்தல் இந்த விடயத்தில் மிகுந்த சர்ச்சையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்களது சந்தேகத்தை இல்லாமல் செய்வதும் சுமூகமான சகவாழ்வுக்கு வழி செய்வதும் மிகவும் முக்கியமானது,  என்பர். அதுபோல், முகத்தை மறைத்தல் கல்வி,  மருத்துவம்,  கொடுக்கல் வாங்கல் போன்ற பல்வேறு சமூக வாழ்வின் அம்சங்களில் சங்கடங்களைத் தோற்றுவிக்கின்றன. அதனைத் தாண்டி பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு நிகாபை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே இலங்கைச் சூழலுக்கு நாம் முகத்தை மறைக்காதிருப்பதே சிறந்தது,  என்பர்.

மேற்குறித்த இரண்டு வாதங்களிலும் சில உண்மைகள் இருந்தாலும்,  நாம் மேலே பேசிய மகாஸிதுகளின் பின்புலத்தில் நின்று பார்க்கின்ற பொழுது,  நாம் ஆடையொழுங்கை மாற்றுவதோ அல்லது நிகாபை கைவிடுவதோ மேற்குறித்த சூழ்நிலைகளுக்கான தீர்வாக அமைந்து விடமாட்டாது என்பதே எனது பார்வை. ஏனெனில் அதன் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்கள் மிகவும் சிக்கல் மிகுந்தவை,  அவை பற்றி இங்கு நான் பேசவிரும்பவில்லை.

அதற்கப்பால் நாம் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் என்ற வகையில்,  இலங்கை மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி என்ன? ஆடை விடயத்தில் இஸ்லாத்தின் பார்வையில் இருக்கின்ற பன்முகத்தன்மையை,  அதன் செழுமையை,  அதனால் மதிக்கப்படும் தனிமனித சுதந்திரத்தை நாம் தெளிவுபடுத்த வேண்டும். மறுபுறத்தில் இன்று உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட நிலையில்,  ஆடை உணவு போன்ற விடயங்களில் தேச,  கலாச்சார வரையறைகள் வெகுவாகக் குறைந்து போயுள்ளன. அந்த வகையில் நாட்டுக்குள்ளே நுழைந்திருப்பது அறேபிய ஆடைகள் மாத்திரமா? இன்னும் எத்தனையோ விடயங்கள் நுழைந்திருக்கின்றன. முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம்தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? நிச்சயமாக இல்லை,  எல்லா சமூகங்களிலும் ஏதேனும் ஒரு கலாச்சாரத் தாக்கம் அவர்களது ஆடைகளிலும் உணவிலும் பழக்கவழங்களிலும் தாக்கம் விளைவித்துதான் இருக்கின்றன. 

இந்நிலையில் ஏதோ ஒன்று மாத்திரம் எமது கலாச்சாரத்திற்கு முரண் என்ற ஒரு கருத்து கட்டமைக்கப்படுவது எந்தளவுக்கு நியாயமானது? என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். அதன் அடிப்படையில் சமூகங்களுக்கிடையில் கலச்சார வேறுபாட்டை அங்கீகரிப்பதே ஒரு நாட்டுச் சூழலில் சகவாழ்வுக்கான பிரதான காரணி என்பது மாத்திரமன்றி நாட்டின் அபிவிருத்திப் பாதையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்ற செய்திகள்தான் நாம் இந்த நாட்டுக்கு வழங்க வேண்டியவை. இந்த விரிந்த பார்வையை இஸ்லாம் எங்களுக்குத் தாராளமாகவே கற்றுத் தந்திருக்கிறது. இந்த நாட்டுக்கான எமது சிந்தனைப் பங்களிப்பின் ஒரு பிரதான அம்சமாக இதனைக் கருத முடியும் என்று நான் நினைக்கிறேன்.

அடுத்து,  நிகாப் சமூக வாழ்வில் சங்கடங்களை ஏற்படுத்துகின்றது,  என்ற விடயத்தைப் பொறுத்தவரையில்,  நிகாபை வாஜிப் என்போர் கூட தேவையான சந்தர்ப்பங்களில் நிகாபை அகற்றுவது ஆகுமானது என்கிறார்கள். எனது மாணவிகளில் சிலரை நான் அறிவேன் வகுப்பறையில் முகத்தை திறந்தே இருப்பார்கள். ஆனால் விடுமுறையில் வீடு செல்லும் போது நிகாப் அணிந்து கொள்வார்கள். எனவே எந்தக் காரணத்தாலும் நிகாப் அணிவதற்கும் அணியாமல் இருப்பதற்குமான சுதந்திரம் மறுக்கப்படக் கூடாது என்பதே முக்கியமானது.

இனி ஜந்தாவதும் இறுதியுமான விடயத்திற்கு வருவோம்,  அது பத்வாவின் இயல்பு தொடர்பானது. நிகாப் பற்றிய ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா தொடர்பில் எழுந்துள்ள அதிகரித்த வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் போது,  ஒருவகையில் எனக்கு ஆச்சரியமாக உள்ளது,  ஏன் இவ்வளவு சர்ச்சைப்பட்டுக் கொள்ள வேண்டும்? ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா என்பது முழு முஸ்லிம் சமூகமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு அம்சம் என்று நினைக்கிறார்களா

உண்மையில் பத்வா என்பது யாரையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு அம்சமல்ல,  கேள்வி கேட்டவர் கூட வழங்கப்படும் பத்வாவைத்தான் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை, பத்வாவுக்கும் (மார்க்கத் தீர்ப்பு) கழாவுக்கும் (நீதிமன்றத் தீர்ப்பு) இடையிலான அடிப்படையான வேறுபாடாக இமாம்கள் இந்த கட்டாயத்தன்மை வேறுபாட்டைக் குறிப்பிடுவார்கள். அதாவது நீதிமன்றத் தீர்ப்பை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் ஆனால் பத்வா அவ்வாறானதல்ல. ஒரு தடவை கலாநிதி அஹ்மத் ரைஸுனியிடம் மஜ்மஉல் பிக்ஹில் இஸ்லாமியின் பத்வாக்களைப் பற்றி வினவிய சமயத்தில் அவரது பதிலும் இவ்வாறே அமைந்திருந்தது. அதன் பத்வாக்கள் எந்த ஒரு நாட்டையும் எந்த ஒரு தனிமனிதனையும் கட்டுப்படுத்த மாட்டாது என்றார்.

இந்த இடத்தில் பிறைவிவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதும்,  நிகாப் பத்வாவில் கட்டுப்படுவது கட்டாயமில்லை என்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே என்று சிலர் யோசிக்கலாம். ஏற்கனவே கூறியது போல் பிறை கண்டதாகத் தீர்மானித்தல் என்பது இஸ்லாத்தில் கழா நீதிமன்றத் தீர்ப்பாகவே கருதப்படும்,  ஆனால் பத்வா என்பது மார்க்கம் தொடர்பான தெளிவை வழங்குவதாகும்,  அந்த வகையில் முதலாவது கட்டாயமானது இரண்டாவது கட்டாயமானதல்ல.

ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா மக்களைக் கட்டுப்படுத்தாது என்பது,  ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைத்துவத்தை கேள்விக்கு உற்படுத்தக் கூடிய ஒரு விடயமா? நிச்சயமாக இல்லை,  பல்வேறு நிலைப்பாடுகளுக்கு இடம்பாடான தனிமனித சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு போதும் தலைமை ஒற்றை நிலைப்பாடு ஒன்றின் மூலம் தனிமனித வாழ்வில் தலையிட மாட்டாது. 

ஆனால் சமூகப் பொது விவகாரமொன்றில்,  ஏதேனும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டிய அவசியம் உள்ள போது,  சமூக நலன் கருதி தலைமை ஏதேனும் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும்,  உதாரணம் சர்வதேசப் பிறையா? உள்நாட்டுப் பிறையா? என்ற விவகாரம் போன்றது. இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தலைமை எடுக்கும் தீர்மானத்திற்கு அனைவரும் கட்டுப்படுவது வாஜிபாகும்.

அடுத்து,  பத்வா யாரையும் கட்டுப்படுத்தாது,  கேள்வி கேட்டவரைக் கூட அது கட்டுப்படுத்தாது என்றிருந்தால் பத்வா சொல்வதன் அர்த்தம் என்ன? என்றொரு கேள்வி தோன்றலாம். இங்கு இரண்டு விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் முதலாவது கட்டுப்படுத்தாது என்பதன் பொருள் அதே பத்வாவைத்தான் அவர் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை,  அவர் திருப்தி காண்கின்ற வேறு பத்வாக்களையும் பின்பற்றலாம் என்பதாகும். மாற்றமாக பத்வாவை ஒரு புறம் தள்ளிவைத்தது விட்டு தான் விரும்பியவாறு செயற்படலாம் என்பது இதன் பொருள் அல்ல.

 இரண்டாவது,  பத்வா என்பது கட்டளை பிறப்பிக்கும் செயற்பாடு அல்ல,  மாற்றமாக அறிவூட்டல் செயற்பாடு,  அங்கு தெளிவைக் கொடுத்தலும் அந்தத் தெளிவில் திருப்தியை ஏற்படுத்தலும் பின்பற்றும் ஆர்வத்தை விதைத்தலும் அனைத்தும் இணைந்து நடக்கின்ற ஒரு தொழிற்பாடு அது. மாற்றமாக அதிகாரத்தில் இருப்பவர் வழங்கும் ஒரு கட்டளை அல்ல.

இறுதியாக,  இங்கு பேசப்பட்ட கருத்துக்களுக்கு உள்ளே வலுவாய் இழையோடியிருக்கும் எண்ணம்,   கருத்தொற்றுமை என்பது ஒற்றைக் கருத்துக்கு சமூகத்தைக் கொண்டுவருவது அல்ல,  மாற்றமாக வேறுபட்ட நிலைப்பாடுகளுக்கு இடமளித்து,  முடிந்தவரையில் அகன்ற இடைவெளிகளைக் குறைத்து,  அதிகூடிய நெருக்கத்தை ஏற்படுத்தலாகும். அதற்கான ஆலோசணைகளாகவே சட்டசிந்தனைப் பின்புலுத்திலிருந்து இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது.


அல்லாஹ்வே போதுமானவன்.

Friday, July 15, 2016

மகாஸிதியப் பெண்மணி - ஜமீலா திலூத்


மொரோக்கோவின் மகாஸிதியப் பாரம்பரியத்தில் ஆண்களின் பங்களிப்பைப் போன்றே அதனுடன் போட்டி போடுகின்ற வகையில் பெண்களின் பங்களிப்பும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நான் கலந்து கொண்ட மகாஸிதுல் குர்ஆன் 2 என்ற கருத்தரங்கில் சுமார் பாதிக்கு மேல் பெண்கள் கலந்து கொண்டமையும், அவர்களது தரமான பின்னூட்டல்களும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவர்களில் சகோதரி ஜமீலா திலூத் முன்னணியில் இருக்கும் குறிப்பிடத்தக்க மகாஸித் ஆய்வாளர்களில் ஒருவர், மொரோக்கோவின் கஸப் லங்கா எனப்படும் தாருல்பைழாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர், ஆரம்பத்தில் பொருளியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டாலும், அடுத்து தனது துறையை மாற்றி இஸ்லாமியத் துறையில் கற்கையை மேற்கொண்டிருக்கிறார்.




ஒரு தடவை, ஆய்வரங்கு ஒன்றில் தனது ஆய்வனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சமயத்தில், இமாம் ஷாதிபியின் பார்வையில் சட்டமியற்றப்படாமல் விடப்பட்ட பகுதிஎன்ற தனது ஆய்வுக்கட்டுரை குறித்துப் பேசும் போது, தான் எப்பொழுதும் உடன்வைத்திருக்கின்ற ஒரு நூலாக இமாம் ஷாதிபியின் முவாபகாத் என்ற நூல் இருந்திருக்கிறது. மாத்திரமன்றி அதனை நான் பல தடவை பூரணமாக வாசித்து முடித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் மீண்டும் புதிதாய் வாசிக்கின்ற உணர்வே என்னில் மேலிட்டிருக்கிறது, ஒவ்வொரு தடவையும் கடந்த வாசிப்பில் கிடைக்காத ஒரு புதிய விடயம் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மகாஸித் துறையில் ஈடுபடுகின்ற எல்லோரும் இமாம் ஷாதிபியின் முவாபகாத்தை ஒரு தடவையேனும் வாசிப்பதே மிகவும் அரிதான ஒன்று, அப்படி இருக்கையில் பல தடவைகள் வாசித்திருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான், அந்த சபை அதற்காக அவருக்கு எழுந்து நின்று கைதட்டியது.

சகோதரி ஜமீலா திலூத்தை வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு முக்கிய விடயம் என்னவெனில் அவரது பல்துறை ஈடுபாடாகும். அவரே அது பற்றிக் குறிப்பிடும் பொழுது, உஸுலுல் பிக்ஹ், மகாஸிதுஷ் ஷரீஆ, இஸ்லாமியக் குடும்பவியல், அரசியல்தத்துவம், மானுடசமூகவியல் விவகாரங்கள், நவீன இஸ்லாமிய சிந்தனை என பல பரப்புக்களில் தனது ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாத்திரமன்றி இந்த எல்லா பரப்புக்களிலும் தனது புலமைத்துவப் பங்களிப்பை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் (2016) துருக்கியில் நடைபெற்ற குடும்பம் பற்றிய சர்வதேச இஸ்லாமிய சாசனத்திற்கான மாநாட்டிலும், பரம்பரையைப் பாதுகாத்தல் எனும் மக்ஸதும் அதன் சமூக உளவியல் தாக்கங்களும்என்ற ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருந்தார். குடும்பவியல் துறையில் இவரது முன்னோடியான பங்களிப்பாக குடும்பம் பற்றிய அல்குர்ஆனின் சிந்தனைஎனும் நூலைக் குறிப்பிடலாம். இவரது கலாநிதிக் கற்கைக்கான ஆய்வு மத ஒப்பீட்டாய்வும் நாகரீக உரையாடலும்என்ற தலைப்பில் அமையப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்தில் இந்த ஆய்வை நிறைவுசெய்து கலாநிதிக் கற்கையை நிறைவு செய்யவுள்ளார். கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்களால் வழிநடாத்தப்படும் மொரோக்கோவில் அமைந்துள்ள மர்கஸுல் மகாஸித் நிறுவனத்திலும் ஒரு அங்கத்தவராகத் தொழிற்படுகிறார்.

இவரது ஆய்வுகளில் எனக்கு சற்று வித்தியாசமாய்த் தோன்றிய இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று குடும்பவியல், பெண்கள் பற்றிய அவரது ஆய்வுகள், என்னுடைய வாசிப்பில் இந்த இரு தலைப்புக்களிலும் ஆண்களால் எழுதப்பட்ட ஆக்கங்களையே அதிகம் வாசித்திருக்கிறேன், ஆனால் இவை பற்றி ஒரு பெண் எழுதினால் அந்தப் பார்வைக் கோணம் எவ்வாறு இருக்கும், அதிலும் மகாஸித் பின்புலத்தில் நின்று எழுதினால் எவ்வாறு இருக்கும் என்பது உண்மையில் ஒரு புது அனுபவம். ஆண்களை நோக்கிய செய்திகள் அங்கு நிறையவே இருப்பதை அவதானித்தேன்.

இரண்டாவது மகாஸித், உஸுல் பிக்ஹ் பற்றிய அவரது ஆய்வுகள், அவரது ஆய்வுத் தலைப்புக்களில் அதிக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டவை இவைதான். இந்தப் பரப்பில் அவர் முன்வைக்கும் ஒரு கருத்து அவதானத்திற்குரியது. அதாவது, மகாஸித் தனித்த கலையா? உஸுல் பிக்ஹின் ஒரு பகுதியா? என்பதில் இந்த விவாதத்தைத் தாண்டி இவற்றின் விளைவு என்ன என்ற அடிப்படையில் எமது சிந்தனை அமைவதே பொருத்தம் என்கிறார். மகாஸித் தனித்த கலை என்று நாம் வைத்துக் கொண்டாலும் அது ஒரு கோட்பாட்டு உண்மை மாத்திரம்தான், சட்டவாக்கத்திலோ, சிந்தனையாக்கத்திலோ அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டாது. உஸுல் பிக்ஹுடன் இணைத்துப் பயன்படுத்துகின்ற போதே அது மிகச் சரியான விளைவைத் தரமுடியும், மாத்திரமன்றி சிந்தனைப் பிறழ்வுகளிலிருந்தும் பாதுகாக்கும், ஏனெனில் மகாஸிதின் தனித்த பிரயோகம் வரையறையற்றது, அங்கு நிறையவே அபாயங்கள் இருக்கின்றன, என்கிறார்.


எதிர்கால புலமைத்துவ செயற்தளத்தில் சகோதரி ஜமீலா திலூத்திற்கு ஒரு தனியிடம் இருக்கப் போகிறது, அதற்கு நிகழ்காலம் சாட்சி. இந்த ஒரு ஜமீலா மாத்திரமன்றி இவர் போன்ற ஆயிரம் ஜமீலாக்கள் தோற்றம் பெறுவதற்கான புற ஏற்பாடு அந்த நாடுகளில் காணப்படுகின்றன, எங்களிடத்திலும் திறமையான ஜமீலாக்கள் இருக்கிறார்கள், நாம் செய்ய வேண்டியது அவர்களுக்கான புற அக ஏற்பாடுகளைச் தயார் செய்து கொடுப்பதுதான்.

Monday, June 6, 2016

நோன்பு உங்கள் மீது கடமையாகிறது - ஒரு மகாஸிதியப் பார்வை


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ   -- البقرة 183

டியூனிஸிய இஸ்லாமிய அறிஞரான கலாநிதி நூருத்தீன் காதிமி அவர்கள் கூறுவது போல்,  இந்த அல்குர்ஆன் வசனம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது ஈமானியப் பகுதி,  இரண்டாவது சட்டப்பகுதி, மூன்றாவது மகாஸிதியப் பகுதி. ஈமான் கொண்டவர்களேஎன்ற அழைப்புடன் ஆரம்பிக்கும் வசனம் இரண்டாவதாக நோன்பு உங்களுக்குக் கடமையாகிறது என்ற சட்டத்தை முன்வைக்கிறது,  மூன்றாவதாக நோன்பு ஏன் கடமையாகிறது என்பதற்கான நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறது.

ஈமான் கொண்டவர்களே,  என்ற அழைப்பின் தத்துவம் என்ன? அது வெறுமனே ஒரு விழிப்புக் குறி மாத்திரமா?  எங்கள் கவனங்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி மாத்திரமா?  நிச்சயமாக இல்லை. அதனைத் தாண்டிய ஒரு தத்துவம் அதன் பின்னால் மறைந்திருக்கிறது. அதுதான்,  “ஒரு நம்பிக்கைப் பின்புலத்திலிருந்தே ஒரு செயல் தோற்றம் பெறுகிறதுஎன்ற தத்துவம். இங்கு குறித்ததொரு நம்பிக்கையுடன் இருப்பவர்களைப் பார்த்துதான் அல்குர்ஆன் இந்த சட்டத்தைப் பேசுகிறது. ஏனெனில் ஒரு சட்டம் அல்லது செயல் ஒரு மனிதனிடத்தில் அவன் ஆழ்ந்து நம்புகின்ற ஒரு கருத்தியலின் அடிப்படையிலேயே தோற்றம் பெற முடியும்.

இங்கு மனிதன் ஆழ்ந்து நம்புகின்ற விடயம் என்ன? அல்லது எதனை மனிதன் ஈமான் கொண்டிருக்கிறான்?  அதற்கும் நோன்பு என்ற சட்டத்திற்குமிடையிலான் தொடர்பு என்ன?

மிகவும் எளிமையாகச் சொன்னால் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பின்னால் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை,  இந்த உலக வாழ்வுக்குப் பின்னால் அதன் விளைவைக் காண்பதற்கான மறுமை வாழ்வு ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை,  அந்தப் படைப்பாளன் உலகில் தான் தெரிவு செய்யும் தூதுவர்கள் மூலம் வேதங்களை அனுப்பி மனித சமூகத்தை வழிநடாத்துகிறான் என்ற நம்பிக்கை. இதுதான் இஸ்லாம் பேசும் அடிப்படையான ஈமானியத் தத்துவம். 

இந்த நம்பிக்கை உலகில் மனித வாழ்வுக்கான மிகச் சரியான பெறுமானத்தைக் கொடுக்கிறது. உண்மையில் இது ஒரு நம்பிக்கை என்பதை விடவும் இதுதான் உலகின் நிஜம்,  உண்மை. இந்த உண்மையைத்தான் அல்குர்ஆன் உரத்துச் சொல்கிறது. இந்த உண்மைக்கு ஏற்ப வாழ்வு அமைவதே மனிதவாழ்வின் மிகப் பெரிய நலன். மனிதனின் நிம்மதி சந்தோசம் சுபிட்சம் அனைத்தும் இந்த உண்மைக்கு ஏற்ற வாழ்விலேயே தங்கியிருக்கிறது. இதுதான் மனிதனுக்கு நன்மையானது.
எனவே நம்பிக்கை என்பது அல்லாஹ்வும் மறுமையும் தூதுத்துவமும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளுதல் மாத்திரமல்ல,  மாற்றமாக அவை இருப்பது எனக்காக,  எனது நன்மைக்காக என்ற மனநிலையும் இணைந்ததுவே நம்பிக்கையாகும்.

இப்பொழுது அந்த நம்பிக்கையின் செயல் வடிவமாகவே நோன்பு என்ற சட்டம் அல்லது செயல் இங்கு சொல்லப்படுகிறது. நோன்பு என்ற செயலின் சட்ட நிலைப்பாடு அது வாஜிப் என்பதாகும். அதாவது ஒவ்வொரு தனிநபர் மீதும் அது கடமையாகிறது. 

இந்தக் கருத்தை அல்குர்ஆன் முன்வைக்கும் விதம் சற்று வித்தியாசமானது,  சிந்தனையைத் தூண்டக் கூடியது. நோன்பு உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்படுகிறது”. இந்த வசனம் நோன்பு என்பது மனிதவரலாற்றில் எல்லா சமூகங்களுக்குமான பொதுக்கட்டளையாகக் காணப்பட்டிருக்கிறது என்ற கருத்தைத் தருகிறது. அதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன? நோன்பு என்ற செயல் மனிதவாழ்வில் அவனுக்குரிய நலனை நிலைநிறுத்துவதற்கான ஒரு அடிப்படையான மனித நடத்தை,  இந்த நடத்தை மனிதவாழ்வில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்,  அது இல்லாமல் போகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது. ஏனெனில் இந்த நடத்தைதான் மனிதவாழ்வுக்கு என்றும் நன்மையானது. அதனால்தான் அல்லாஹ்தஆலா அது உங்களுக்குக் கடமை என்று மாத்திரம் சொல்லாது,  உங்களுக்கு முன்புவாழ்ந்த எல்லா சமூகத்தவர்களிடமும் காணப்பட்ட ஒரு பொது நடத்தை என்ற நியாயத்தையும் இணைத்துச் சொல்கிறான்.

இதனை மற்றொரு வகையில் கூறினால் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் கூறுவது போல்,  நோன்பு என்ற நடத்தையும் ஒரு வகையில் மகாஸித்களில் ஒன்றுதான். ஏனெனில் மனிதவாழ்வில் அழியாது நிலைத்து இருக்க வேண்டிய ஒரு பண்பாகவே நோன்பு இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து நோன்பின் நோக்கம் என்ன? என்பதை அல்குர்ஆன் கூறுகிறது.  நீங்கள் தக்வா உடையவர்களாக மாறலாம்” . நோன்பின் தனிமனித சமூக விளைவுதான் தக்வா. தக்வாவின் பொருள் என்ன? நாம் பொதுவாகவே தக்வா எனும் போது தவிர்ந்து கொள்ளுதல், ஒதுங்கியிருத்தல் போன்ற எதிர்மறைப் பொருள் ஒன்றையே அதற்கு வழங்குவோம். 

ஆனால் கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் கூறுவது போல்,  தக்வா என்பது தாதிய்யாஎனும் சுயமாய் செயற்படுதல் என்பதே அதன் உள்ளார்ந்த பொருளாகும். நோன்பு ஒரு மனிதனில் பயிற்றுவிக்க விரும்புகின்ற அடிப்படையான பண்பு,  அவன் எந்த சூழலிலும் எந்த இடத்திலும் எந்த நிகழ்வுக்கு முன்னாலும் கட்டளைக்கு மாத்திரம் செயற்படுபவனாக இருக்க மாட்டான். உள்ளார்ந்த தூண்டுதலின் அடிப்படையில் அவனாகவே முன்வந்து செயற்படுவான். அதுபோல் ஒரு நன்மையான விடயத்தை செய்வதாக இருப்பினும் தீய விடயம் ஒன்றினை தவிர்ந்து கொள்வதாக இருப்பினும் அவனது சுயதூண்டுதல்,  சுயகட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே பெரிதும் தொழிற்படுகின்றவனாக இருப்பான். இதனைத்தான் நாம் தக்வா என்போம். 

ஒரு மனிதனில் இந்தப் பண்பை பயிற்றுவிக்கும் பணியை நோன்பு செய்கிறது. நோன்பின் புறசெயற்பாடுகள் எவ்வாறு காணப்பட்டாலும் அவை அனைத்தின் மூலமும் பிரதானமாக உள்ளத்தைப் பயிற்றுவிக்கின்ற ஒரு பணியே முக்கியமாக நடைபெறுகிறது. அதன் மூலம் மனிதனின் சுயசெயற்பாட்டுக்கான தயார்நிலை அவனில் வளர்க்கப்படுகிறது.

இந்த வசனத்தில் நீங்கள் தக்வா உடையவர்களாக மாறலாம்என்று பன்மை வடிவத்தையே அல்குர்ஆன் பிரயோகித்திருக்கிறது. அதன் மூலம் தக்வா என்பது அல்லது சுயசெயற்பாடு என்பது,  சமூகப் பொதுப்பண்பாகக் காணப்படல் வேண்டும். இது வெறுமனே ஒரு தனிமனித அடைவல்ல,  மாற்றமாக ஒரு சமூக அடைவு. எனவே சமூக வடிவில் அதனை சாத்தியப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களும் பொறிமுறைகளும் காணப்படல் வேண்டும். நோன்பு அதிலும் குறிப்பாக ரமழான் மாத வாஜிபான நோன்பு,  ஒரு சமூகக் கடமை.

உண்மையில் சுயசெயற்பாடு என்ற உன்னதமான சமூகப்பண்பு,  சமூகத்திற்கு ஒரு பொறுப்புணர்வை வழங்குகிறது. உண்மையில் பொறுப்புணர்வு என்பதும் கூட,  யாரும் முடுக்கிவிடும் வரை எதிர்பார்த்திராமல் அல்லது கோரிக்கைகளோ,  விமர்சனங்களோ,  எதிர்குரல்களோ எழுவதற்கு முன்னர்,  சுயமாய் செயலாற்றுதலையே குறிக்கிறது. சமூகத்தில் நன்மைகளை விதைப்பதாக இருக்கலாம்,  தீமைகளை அகற்றுவதாக இருக்கலாம்,  ஏன் ஒரு அரசின் பொறுப்பை விசாரிப்பதாகவும் இருக்கலாம்,  இந்த அனைத்திற்கும் அவசியமானது சமூகப் பொறுப்புணர்வு. இதனை தக்வா வழங்குகிறது.

மொத்தத்தில் இஸ்லாத்தின் மூலம் மனித நலன் நிலைநாட்டப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு வசனம் மட்டுமே போதுமான சாட்சி.

இறுதியாக இந்த மூன்று  பரப்புக்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது மற்றொரு விடயம் தெளிவாகிறது. அதாவது,  ஒரு செயலின் வெற்றிகரமான அமுலாக்கம் தங்கிநிற்கும் காரணிகள் என்ன? என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது. ஒன்று,  சாதகமான மனப்பாங்கு பொசிடிவ்வான பார்வை,  இரண்டு,  செயலின் முக்கியத்துவம் அவசியம் குறித்த அறிவு, மூன்று,  செயலின் நோக்கங்கள் பயன்கள் குறித்த தெளிவு. இதனைத்தான் ஈமான், முன்னைய சமூகங்களில் நோன்பு கடமையாக இருந்தமை,  தக்வா போன்ற அம்சங்கள் ஊடாக அல்லாஹ்  விளங்கப்படுத்துகிறான்.


இவ்வருட ரமழானில் நோன்பை விளைவை உணர்ந்து நோற்பதற்கு அல்லாஹ்தஆலா எம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.

Monday, April 4, 2016

திருமணத்தில் தெரிவும் பொறுத்தப்பாடும்

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடை தேட வேண்டிய கேள்விகளுள் யார்என்ற கேள்வி குறித்தே கடந்த பத்திகளில் கலந்துரையாடி வருகின்றோம். இன்று அந்தக் கேள்வியின் மற்றொரு பதிலான பொறுத்தப்பாடு என்ற காரணி குறித்து சற்று உரையாடலாம் என்றிருக்கிறோம்.

குடும்பவியல் அறிஞர் அக்ரம் ரிழா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு தடவை என்னிடம் வந்த ஒருவர், ‘தான் திருமணம் செய்யும் போது,  என்னை விடவும் தரத்தில் குறைந்த ஒரு பெண்ணையையே தெரிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவளை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்என்றார். அவரது வார்த்தைகள் எனக்கு சிரிப்பை வரவழைத்தன.

 பொறுத்தப்பாட்டுப் பண்புகளில் ஆண் மேலே இருக்க வேண்டுமா? பெண் மேலே இருக்க வேண்டுமா? என்ற விவாதத்தைத் தாண்டி,  திருமணம் என்பதை ஒரு ஆணும் பெண்ணும் இணைதல் என்ற எல்லையுடன் மாத்திரமே அவர் பார்க்கிறார். அவரைப் பார்த்து நான் திருமணத்தில் நீங்கள் ஒரு பெண்ணை மாத்திரம் தெரிவு செய்யவில்லை,  மாற்றமாக அவளது வேர்களையும் சேர்த்தே தெரிவு செய்கிறீர்கள்என்றேன்,  அதற்கவர் வேர்களைத் தெரிவு செய்தல் என்றால்…?’ என வினவ,  ‘வேர்கள் என்பது அவளது குடும்பம்,  உறவுகள்என்றேன். 

நபியவர்களது ஒரு ஹதீஸை நான் அவருக்கு விளங்கப்படுத்தினேன். ஒரு நீண்ட ஹதீஸின் தொடரில் நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்,  “யார் தனது பார்வையைத் தாழ்த்தவும்,  கற்பைப் பாதுகாக்கவும்,  குடும்பத்தினரை இணைந்து நடக்கவும் திருமணம் செய்கிறாரோ அல்லாஹ் அவரது வாழ்வில் பரகத்தை ஏற்படுத்துவான்என்றார்கள்.

இங்கு குடும்பத்தினரை இணைந்து நடத்தலை திருமணத்தின் நோக்கங்களில் ஒன்றாக நபியவர்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் திருமணம் என்பது தனித்து ஒரு ஆணும் பெண்ணும் இணைவது மாத்திரமல்ல மாற்றமாக இரண்டு குடும்பங்கள் இணைகின்ற ஒரு விடயம். எனவே நீங்கள் ஒரு பெண்ணைத் தெரிவு செய்கிறீர் எனின்,  அதன் பொருள் உங்கள் பிள்ளைகளுக்கான தாயைத்  தெரிவு செய்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கான பாட்டன்,  பாட்டி,  மாமா,  சாச்சி போன்ற உறவுகளை எல்லாம் தெரிவு செய்கிறீர்கள் என்றுதான் பொருள். எனவே,  அங்கு மார்க்கம்,  கல்வி,  சமூக அந்தஸ்த்து,  பொருளாதார மட்டம்,  உயர் பண்பாடுகள், கலாச்சாரப் பண்புகள் போன்ற பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்ற பொழுதே குடும்ப வாழ்வு சிறக்கிறது என்று அவருக்கு விளக்கமளித்தேன்என்றார்கள்.

கலாநிதி அக்ரம் ரிழா அவர்களுடைய வார்த்தைகளில் பொறுத்தப்பாடு எனும் விடயம் தனித்து ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல,  அது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதும் கூட என்பதை வலியுறுத்துகிறார்கள். பல சமயங்களில் காதல் திருமண முன்மொழிவுகளின் போது,  குடும்பங்களின் உடன்பாடின்மை இந்தப் புள்ளியில்தான் காணப்படுகிறது. எமது குடும்பத்திற்கு இது ஒத்துவராதுஎன்பார்கள். சம்பந்தப்பட்ட ஆணோ பெண்ணோ இந்த ஒத்துவராதுஎன்பதன் பொருள் தெரியாமல்,  திமிரிக் கொண்டு செல்ல முற்படுவார்கள். எல்லாக் கட்டுப்பாடுகளையும் வழக்காறுகளையும் உடைத்தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். இங்குதான் பொறுத்தப்பாட்டுப் பெறுமானங்களைப் புரியாத அவர்களது சிறுபிள்ளைத்தனம் வெளிப்படுகிறது அல்லது பொருத்தம் என்பதை தனித்து விருப்பம் அல்லது உள்ளங்கள் ஒத்துப்போதல் என்பதுடன் மாத்திரம் சுருக்கி ஒரு வித சினிமாத்தனமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். விருப்பத்தைத் தாண்டி,  சமூகப்பொறுத்தப்பாட்டுப் பண்புகள் மிகவும் முக்கியமானவை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

அந்தவகையில் தெரிவின்போது மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய பொறுத்தப்பாட்டுப் பண்புகள் குறித்து சற்று கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் பண்புகளை அடையாளப்படுத்துவதற்கு முதலில் ஒரு விடயத்தை நாம் விளங்கியிருத்தல் அவசியமாகிறது.

அதாவது,  திருமண வாழ்வில் மிகவும் முக்கியமான விடயம் புரிந்துணர்வு என்ற அம்சமாகும். பொறுத்தப்பாடு கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் இவற்றைத் தாண்டி குடும்ப வாழ்வில் சந்தோசம் நிலைக்கக் காரணமாக இருப்பது புரிந்துணர்வுதான். எனவே பொறுத்தப்பாட்டுப் பண்புகளின் அவசியம் குறித்துப் பேசுகின்ற பொழுது,  அவற்றின் மூலம் மாத்திரமே குடும்ப வாழ்வின் ஸ்திரத்தன்மை பேணப்படுகிறது என்பதல்ல,  எவ்வளவு பொறுத்தம் இருந்தாலும் அல்லது கொஞ்சம் பொறுத்தமின்மைகள் இருந்தாலும் புரிந்துணர்வு என்ற காரணி மிகவும் முக்கியமானது. அதன் மூலமே குடும்ப வாழ்வின் சந்தோசமும்,  ஸ்திரத்தன்மையும் பேணப்படுகிறது.

அடுத்து,  ஆண்,  பெண் என்ற எல்லையிலும் சரி,  குடும்பம் என்ற எல்லையிலும் சரி பேண வேண்டிய சில பொறுத்தப்பாட்டு பண்புகள் குறித்து நோக்குவோம்.

1.       மார்க்க ரீதியான பொறுத்தப்பாடு

இதன்மூலம் இரண்டு விடயங்கள் நாடப்படுகின்றன. முதலாவது ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது போல்,  ஆணும் சரி,  பெண்ணும் சரி,  தனது துணையைத் தெரிவு செய்யும் போது,  மார்க்கம் (தீன்) என்ற காரணி முக்கியமானது. அதாவது அவர்களது வாழ்வில் மார்க்கம் எந்தளவு கடைபிடிக்கப்படுகிறது அதனை நம்பிக்கையாகவும்,  நடைமுறையாகவும் எந்தளவு ஏற்று செயற்படுகிறார்கள் என்பது. இந்தப் பொறுத்தப்பாடு தெரிவில் முக்கியமானது. இல்லாதபோது வாழ்வே சீரழிந்து செல்வதற்குக் காரணமாகலாம் என்பது ஹதீஸ்கள் வலியுறுத்தும் உண்மையாகும்.

இரண்டாவது விடயம்,  இன்று நடைமுறையில் காண்கின்ற இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதிலும்,  தஃவா செய்வதிலும் இருக்கின்ற பல்வேறு சிந்தனைப் பாரம்பரிய வேறுபாடுகள். தெரிவின்போது இந்த வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்படுவதும் ஒருவிதத்தில் முக்கியமானது. இதன் மூலம் வித்தியாசமான சிந்தனைப் பாரம்பரியங்கள் திருமண பந்தத்தில் இணையக் கூடாது என்றோ அந்த வாழ்வு வெற்றியளிக்காது என்றோ சொல்ல வரவில்லை. சிந்தனை வேறுபாட்டை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு,  மதிப்பளித்து,  சுதந்திரமளித்து செயற்படக் கற்றுக் கொண்டால் இந்த வேறுபாட்டிற்கு மத்தியிலும் சந்தோசம் இருக்கும். ஆனால் யதார்த்த வாழ்வின் அனுபவத்தில் காணும்  உண்மை என்னவெனின்,  கணவன் எவ்வழி மனைவியும் அவ்வழி செல்வதே பொறுத்தமானது என்பதாகும். எனவே முடிந்தவரை இந்த யதார்த்தம் பேணப்படுவது குடும்ப வாழ்வின் சந்தோசத்தை உத்தரவாதப்படுத்தும்.

2.       கல்வி ரீதியான பொறுத்தப்பாடு

அல்லாஹ்தஆலா கூறுகிறான் நபியே நீங்கள் கூறுங்கள் அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (ஸுமர் 9). இந்த வசனம் அறிவு,  கல்வி வேறுபாடு என்பது இந்த உலக யதார்த்தங்களில் ஒன்று என்பதைக் கூறுகிறது. அந்தவகையில் தெரிவின்போது கல்வி ரீதியான பொறுத்தப்பாடு கருத்தில் கொள்ளப்படுவது நியாயமானது.

 கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் இதுபற்றிக் கூறும்போது,  ஆண் பெண் இருவரும் கல்விச் சான்றிதழில் சமானமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் ஆண் தரத்தில் குறைந்திருப்பது வரவேற்கத்தக்கதல்ல என்கிறார். இந்தக் கருத்தில் உள்ள சமூக யதார்த்தம் மறுக்கப்படுவதற்குரியது அல்ல என்றிருந்த போதிலும்,  இன்று மற்றொரு யதார்த்தமும் மெல்ல அதிகரித்துச் செல்வதைக் காணலாம். அதாவது நன்கு படித்த பெண்கள் சாதாரண கல்வித்தரம் கொண்ட ஆண்களை திருமணம் செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி வளர்ச்சியும் ஆண்களின் கல்வி வீழ்ச்சியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் புதிய சூழ்நிலை திருமண வாழ்வில் எத்தகைய தாக்கங்களை உண்டு பண்ணக் கூடியது என்பது ஆய்வை வேண்டி நிற்கும் ஒரு விடயமாகும். ஆனாலும் புரிந்துணர்வின் ஊடாக பல விடயங்களைத் தாண்டிச் செல்ல முடியும் என்ற உண்மையும் இங்கு மறுக்கப்படுவதற்கில்லை.

3.       சமூக அந்தஸ்துப் பொறுத்தப்பாடு

இது, குறித்த ஆணையும் பெண்ணையும் விடவும் இரு குடும்பங்களுடனும் சம்பந்தப்பட்டதாகும். இங்கு சமூக அந்தஸ்து என்பது,  பெற்றோர்களது சமூக மதிப்பு,  சமூக உறவுகள்,  சமூகப் பங்களிப்பு போன்ற பல விடயங்களைக் குறித்து நிற்கின்றது. இந்த விடயம் தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படுதல் என்பது இஸ்லாமியப் போதனைகளுடன் முரண்படுகின்ற ஒரு விடயமல்ல. 

உமர் (ரழி) அவர்களது பிரபல்யமான ஒரு கூற்று இதனை உறுதிப்படுத்துகிறது. சமூக அந்தஸ்துள்ள பெண்களை அதற்குத் தகுதியாளர்கள் அல்லாதார் திருமணம் செய்வதை நான் தடை செய்கின்றேன்என்றார்கள். இந்த நுண்ணிய உணர்வின் காரணமாகத்தான் கைபர் யுத்தத்தில் ஸபிய்யா (றழி) அவர்கள் கைதியாகப் பிடிபட்ட போது, அவர் யூதத் தலைவனின் மனைவி,  மற்றொரு யூதத் தலைவனின் மகள். இத்தகைய அந்தஸ்து கொண்ட பெண் நபியவர்களுக்கு மனைவியாக அமைவதே பொறுத்தம் என உமர் (றழி) அவர்கள் ஆலோசனை வழங்கியது மாத்திரமன்றி,  மதீனாவுக்குத் திரும்பிச் செல்லுமுன் இடை நடுவில் திருமணத்தை நடாத்தவும் செய்தார்கள்.

சமூக அந்தஸ்த்து என்பது சம்பந்தப்பட்ட ஆண்,  பெண் என்ற மட்டத்திலும் பார்க்கப்பட முடியும் என்பதை புரைரா என்ற அடிமைப் பெண்,  தான் சுதந்திரம் அடைந்ததும்,  மகீத் என்ற தனது அடிமைக் கணவனை விட்டுப் பிரிந்தமையையும்,  மகீத்துக்காக நபியவர்கள் பரிந்து பேசிய போதும் புரைரா உடன்படாமையையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். இங்கு நபியவர்கள் புரைராவை நிர்ப்பந்திக்கவில்லை அவளது நியாயத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

4.       வயதுப் பொறுத்தப்பாடு

வயதுப் பொறுத்தப்பாடு குறித்தும் இஸ்லாத்தில் குறிப்பான வரையறைகள் எதுவும் சொல்லப்படவில்லை. இஸ்லாமிய வரையறைகளைப் பார்க்கின்ற பொழுது,  பெண்ணை விட ஆண் வயது அதிகமாக இருத்தலும் சரி, குறைவாக இருத்தலும் சரி,  ஏன் சம வயதினராக இருத்தலும் சரி. இவற்றில் எதுவும் இஸ்லாத்தில் மறுக்கப்படவில்லை. நபியவர்களது வாழ்வு இதற்குச் சான்று. ஏலவே குறிப்பிடப்பட்டது போல் புரிந்துணர்வு எனும் காரணி மிகச் சரியாக செயற்படும் போது

 மேற்குறிப்பிடப்பட்டவற்றில் எந்த நிலையிலும் குடும்ப வாழ்வு வெற்றி காண முடியும்.

நான் அறிந்த அறபுலக இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர் தனது ஐம்பதாவது வயதைத் தாண்டிய நிலையில் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக முடித்தார். அவரிடம் இதன் இரகசியம் என்ன என்று நான் கேட்டேன். அதற்கவர் தான் இளைஞராக இருந்த போதே இது பற்றிய ஒரு திட்டத்துடன் காணப்பட்டதாகவும்,  முதல் மனைவியாக தன்னை விட வயதில் கூடிய ஒருவரை திருமணம் செய்ததாகவும் தற்போது அவள் வாழ்வை அனுபவித்து முடிந்து விட்டாள். அதனால் அவளே முன்வந்து எனக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தாள் என்றார். இங்கு அவர் தன்னை விட வயதில் கூடிய,  வயதில் குறைந்த இருவருடனும் வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்தியிருப்பதை காணலாம்.

உளவியலாளர்களின் அபிப்பிராயப்படி,  பெண்ணை விடவும் ஆண் வயதில் அதிகமாக இருத்தலும்,  அதிலும் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை இடைவெளி இருப்பதுவும் சிறந்தது எனக் கருதுவர். குடும்ப வாழ்வில் சிறந்த புரிந்துணர்விற்கும் பிரச்சினைகள் குறைந்த வாழ்விற்கும் இந்த இடைவெளி மிகவும் பொறுத்தமானது என்பர். இக்கருத்தை வலுப்படுத்துவது போல் உமர் (றழி) அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் காணப்படுகிறது.

ஒரு இளம் பெண்ணை வயோதிபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அந்த வாழ்விலிருந்து விடுதலை பெறும் நோக்கில் அந்தப் பெண் தனது கணவனைக் கொலை செய்து விட்டாள். வழக்கை விசாரித்த உமர் (றழி) அவர்கள் மக்களைப் பார்த்து,  “மக்களே,  அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆணும் தன் வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்யட்டும். ஒவ்வொரு பெண்ணும் தன் வயதுக்கு ஏற்ற ஆணை திருமணம் செய்யட்டும்என்றார்கள். வயதுப் பொறுத்தப்பாடு தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதையே உமரவர்களின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.

5.       பொருளாதார நிலைப் பொறுத்தப்பாடு

பொருளாதாரம் மனித வாழ்வின் அஸ்திவாரம் என்பது அல்குர்ஆனின் பார்வை,  அதேபோல் ஒவ்வொருவரும் தனது வசதிக்க ஏற்ப தனது மனைவிக்கு செலவு செய்யட்டும்” ( தலாக் 07   ) என்றும் அல்குர்ஆன் கூறுகிறது.

அந்தவகையில் பொருளாதாரக் காரணிகள் குடும்ப வாழ்வில் பெரிதும் தாக்கம் செலுத்தக் கூடியவை. எனவே தெரிவின்போது ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற பொருளாதார மட்டத்தில் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்தல் மிகவும் சிறந்தது. பல சமயங்களில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மிகவும் வசதியான வீடுகளில் வாழ்க்கைப்படும் போது,  மிகுந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அந்த வீட்டின் பல உபகரணங்களை அப்பெண் வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்திராத நிலையும் இருக்க முடியும். அதேபோல் வசதி குறைந்த ஒரு ஆண் வசதி கூடிய பெண் தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்ற நிலையையும் நிறையவே அவதானிக்க முடிகிறது. இந்த யதார்த்தங்கள் தெரிவின் போது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதே இங்கு எதிர்பார்ப்பு.

6.       பழக்கவழக்கங்கள் சம்பந்தப்பட்ட பொறுத்தப்பாடு

பழக்க வழக்கங்களின் வேறுபாடும் சில சமயங்களில் குடும்ப வாழ்வின் நிம்மதியைக் குழைத்துவிட முடியும். ஏனைய காரணிகளுடன் ஒப்பிடும்போது இந்தக் காரணி மிகவும் வலிமை குறைந்தது என்றிருப்பினும்,  இதற்கும் ஒரு பெறுமானம் இருப்பதை மறுக்க முடியாது.

 உதாரணமாக நகர்ப்புற பழக்க வழக்கங்களும் கிராமிய பழக்க வழக்கங்களும் சில சமயங்களில் பொறுந்தி வராத நிலையும் காணப்படுகின்றது. கொழும்பு மேட்டுக் குடி நண்பர் ஒருவர் ஒரு கிராமியப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஒரு வருடத்திலேயே அவருக்கு வாழ்க்கை கசந்து விட்டது. காரணம் கேட்டபோது,  அதிகாலையிலேயே மாங்காய்ப் பிஞ்சு போன்ற கிராமத்துக் காய்களை சாப்பிடுமாறு நிர்ப்பந்திக்கிறாள். அவளுக்கு எப்போது எதனை சாப்பிட வேண்டும்,  எப்போது தூங்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லைஎன்று வருத்தப்பட்டார். 

அப்போது எனது மனதில் ஒரு விடயம் தோன்றியது. பீட்சா,  பேர்கர் கலாச்சாரத்திற்கும் பலாக்கொட்டை,  கஜுகொட்டை கலாச்சாரத்திற்கும் இடையிலான வேறுபாடு கூட தெரிவின்போது பார்க்கப்பட வேண்டியிருக்கிறது போலிருக்கிறது”.

இன்றைய இளைஞர் யுவதிகளில் இது போன்ற வேறுபாடுகளை புதிய அனுபவமாகப் பார்க்கின்றவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. எனினும் இந்தப் பகுதியையும் தெரிவின்போது முற்று முழுதாக நாம் மறந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். 

பல சமயங்களில் எமது தஃவா கலாச்சாரத்திற்குள்ளே,  மார்க்கம்,  தஃவா என்ற பண்புகள் அதீதமாகப் பார்க்கப்பட்டு ஏனைய காரணிகள் கருத்தில் கொள்ளப்படாமல் போகின்ற நிலை அவ்வப்போது ஏற்படுகின்றது. மார்க்கமும் தஃவாவும் உயர் பெறுமானங்கள் என்றிருப்பினும் தெரிவில் சமூக யதார்த்தங்களையும் மறந்து விடவும் கூடாது. ஸைத் பின் ஹாரிஸாவினதும் ஸைனபினதும் (றழியல்லாஹு அன்ஹுமா) வாழ்வு இடைநடுவில் கலைந்து விடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என அறிஞர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.

இறுதியாக ஒரு விடயம் எமது கவனத்திற்குரியது. பொறுத்தப்பாடு என்று சொல்லும்போது,  இரு தரப்பினரும் எல்லா விடயங்களிலும் சமமானவர்களாகக் காணப்படல் வேண்டும் என்பது பொருளல்ல. பல சமயங்களில் சமானப் பண்பு சாத்தியமானதாகவும் அமைய மாட்டாது. முடிந்தவரை பொறுந்தி வரக்கூடிய வகையில் தேடலும் தெரிவும் காணப்படல் வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து,  மற்றொரு முக்கிய விடயம் இருக்கிறது. அதாவது பொறுத்தப்பாடு என்று சொல்லும்போது,  இயல்பு,  உணர்வுகள், விருப்பங்கள் போன்ற விடயங்களும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். இவற்றில் ஒருமைப்பாடு இருப்பதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு அமைவதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதாகும். மாத்திரமன்றி இவை வேறுபட்டு அமைவது,  குடும்ப வாழ்வில் எதிர்மறைவான தாக்கத்தை ஏற்படுத்துமா? என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் வேறுபட்ட இயல்பும் உணர்வும் விருப்பமும் அல்லாஹ்வின் படைப்பியல் விதி. அந்தவகையில் மனிதனிடம் எதிர்பார்க்கப்படுவது அந்த வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு,  விட்டுக் கொடுத்து ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதேயாகும். அல்குர்ஆன் கூறுகிறது நாம் உங்களை ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். உங்களை சமூகங்களாகவும்,  கோத்திரங்களாகவும் பிரித்தமைத்தது நீங்கள் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே” (ஹுஜராத் - 13)


அல்லாஹ்வே போதுமானவன்.