Tuesday, July 29, 2014

சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பங்கேற்பு , உஸ்தாத் அப்துல் பத்தாஹ் மூரோ அவர்களின் சிந்தனையிலிருந்து என்ற ஆக்கம் தொடர்பான ஒரு பின்னூட்டல்.

முதலில் இந்தக் ஆக்கத்திற்காக சகோதரர் சகி பவுஸைப் பாராட்டியாக வேண்டும்,  அல்லாஹு யுபாரிக் பீஹி,  காரணம் இதன் அறபு மூலங்களைப் பார்வையிட்ட போது அங்கு பேசப்பட்டுள்ள சிந்தனைகளை மிகச் சரியாக உள்வாங்கி சிறந்த மொழிக்கையாள்கையுடன் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜஸாஹுல்லாஹு கைர்.

கட்டுரையில் பிரதானமாக மூன்று சிந்தனைகள் பேசப்பட்டுள்ளன.
1.            அரசியல் உளவியல் தஃவா உளவியலை விட்டும் வித்தியாசமானது, தஃவா உளவியல் பயிற்றுவிப்பு பொறுமை கட்டுப்பாடு நீண்ட இலக்குகள் போன்றவற்றை மையப்படுத்தியது ஆனால் அரசியல் உளவியல் உடனடி நலன்களை அடிப்படையாகக் கொண்டவை,  இந்த வேறுபாடு அரசியல் வேலைத்திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
2.            அரசியலில் உன்னத இலக்குகளை விடவும் நடைமுறைக்குப் பொறுத்தமான தீர்வுகளே முக்கியமானது.
3.            மக்களாதரவை விடவும் அரசை கொண்டு செல்வதற்கான சக்தி முக்கியமானது.

அந்தவகையில் தஃவா வேலைத்திட்டத்தை விட்டும் அரசியல் வேலைத் திட்டம் சுயாதீனமாக அமைய வேண்டும்.

இங்கு பேசப்பட்ட எந்த சிந்தனையும் மறுக்கப்படுவதற்கில்லை,  அரசியலில் இவை முக்கியமானவை, அதிலும் குறிப்பாக மூன்றாவது சிந்தனை அறபு வசந்தத்தின் பின்னர் இஸ்லாமிய இயக்கம் கற்றுக் கொண்ட முக்கிய ஒரு பாடம் என்பதை அவர்களே பல தடவைகள் முன்வைத்திருக்கிறார்கள். இவற்றுடன் சில பின்னூட்டல்களை மாத்திரம் இங்கு முன்வைக்கிறேன்,  இவை ஒரு மெருகூட்டலாகவும் முழுமைப்படுத்தலாகவும் அமையும் என நினைக்கிறேன்.

ஆரம்பமாக,  இங்கு கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளவை புதிய விடயங்கள் அல்ல,  மாற்றமாக கடந்த நாட்களில் சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தின் உள்தளங்களிலும் வெளித்தளங்களிலும் ஒரு வாதப் பொருளாக உள்வாங்கப்பட்டிருக்கும் ஒர் அம்சமாகும். அதிலும் குறிப்பாக அறபு வசந்தத்தின் பின்னர் இவ்விடயம் மிகவும் வலுவடைந்தது மாத்திரமன்றி பொதுத்தளத்திலும் பகிரங்கமான விவாதமாக மாறியுள்ளது.

கட்டுரையில் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது போல் அரசியல் பணி என்பது இஸ்லாமிய இயக்கத்தின் பரந்த வேலைப்பரப்புக்களில் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. இஸ்லாமிய இயக்கத்தின் ஏனைய பணிகளுடன் ஒப்பிடும் போது அரசியல் பணியின் வயது ஒப்பீட்டளவில் குறைவானதாகும். அந்த வகையில் அதன் நகர்வுகள் மூலோபாயங்கள் என்பன இன்னும் முதிர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஒரு நிலையிலேயே அமைந்திருக்கின்றன.

அறபு வசந்தத்தின் பின்னர் சர்வதேச இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுள் ஒருவர் இதுபற்றிக் கூறும் போது,  கடந்த காலங்களில் இஸ்லாமிய இயக்கம் சமூகத்திற்குத் தலைமை வழங்குவதில் நீண்ட அனுபங்களைக் கண்டிருக்கிறது,  ஒரு நாட்டிற்குத் தலைமை வழங்குவதற்கான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும்  வாய்ப்பு இப்பொழுதுதான் அமையப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

எனவே அரசியல் செயற்பாட்டின் இயல்புகள் உளவியல்களில் இன்னும் அனுபவப்பட வேண்டிய பல விடயங்கள் காணப்படமுடியும்,  இவை எல்லாம் வாதத்திற்குரியவை,  இவற்றில் சரி பிழைகளுக்கப்பால் நீண்ட கால திட்டமிட்ட அரசியல் புறக்கணிப்பக்குப் பின்னர் மெதுவாக எழுந்து நிற்கும் முயற்சி இது என்பதும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்,  எனவே ஏற்றங்களுடனும் இறக்கங்களுடனுமே இந்தப் பயணம் தொடரும். இங்கு எந்த விமர்சனமும் அல்லது ஆலோசணையும் மறுக்கப்படுவதற்குரியவை அல்ல,  அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு பயணமாகவே இது காணப்படும். சுறுக்கமாகக் கூறின் அரசியல் வேலைத்திட்டம் புதியது,  இங்கு கூறப்படும் கருத்துக்கள் ஏற்கனவே வாதப் பொருள்களாக உள்வாங்கப்பட்டவை.

அடுத்து,  ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பது ஒரு போதும் மறுக்கப்படுவதற்குரியது அல்ல. அந்த வகையில் அரசியல் செயற்பாட்டின் உளவியலும் இயல்புகளும் நிச்சயம் வேறுபட்டவைதான்,  அதன் காரணமாக தஃவா செயற்பாட்டுடன் தொடர்பற்ற வகையில் இரு தரப்பு தலையீடுகளும் இன்றி அது தனியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தற்கால மூலோபாயமாக அமைவதும் தவறானதல்ல. ஆனால் இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

ஒன்று அரசியல் உருவாக்கம்,  நேரடியான கட்சி அரசியல் செயற்பாட்டின் போது பல சமயங்களில் இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவதில்லை,   அரசியல் செயற்பாடு உடனடியான குறுகிய கால நலன்களை மையப்படுத்தி அமையலாம் ஆனால் ஒரு சமூகத்தின் அரசியல் திட்டம் நீண்ட கால இருப்பை இலக்காக் கொண்டதாகவும் அமைய வேண்டும். இல்லாத போது இன்று எத்தனையோ அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டிருப்பது போல் அதன்  ஆரம்ப நட்சத்திரங்களின் மறைவின் பின்னர், ஆளுமைகளற்ற வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட முடியும்.

எனவே இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் செயற்பாடு சுயாதீனமாய்க் காணப்படலாம்,  ஆனால் அரசியல் உருவாக்கம் இஸ்லாமிய இயக்கத்தின் பொறுப்பில் இருப்பதே பொறுத்தமானது. இவ்விடயம் குறித்து இரு தரப்பினர்க்கும் தெளிவான ஒருங்கிணைப்புப் பொறிமுறை ஒன்றும் அவசியம்.

அரசியல் உருவாக்கத்தை அந்த அரசியல் கட்சியே மேற்கொள்ளலாமே என்ற வாதத்தை ஒருவர் முன்வைக்கலாம்,  ஆனால் அப்போது எதற்காக வேறாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதோ அதே பிரச்சினையில் அந்தக் கட்சி அல்லது அந்த அரசியல் வேலைத்திட்டம் மீண்டும் விழுந்து விடும். மாத்திரமன்றி நடைமுறையில் அது சாத்தியமற்றதும் கூட, அதற்கான முன்னுதாரணங்களும் இருப்பதாய்த் தெரியவில்லை.

இரண்டாவது நேரடி அரசியலில் ஈடுபடும் ஆளுமைகளின் ஆன்மீக உறைவிடம் எவ்வாறிருக்க வேண்டும்? தெளிவாகக் கூறின் அவர்களுடைய தர்பிய்யத்துக்கான உத்தரவாதம் என்ன? ஏனெனில் தர்பிய்யத் என்பது குறிப்பிட்ட கட்டத்துடன் நிறைவுபெறும் ஒர் அம்சமல்ல,  எந்தத் தளத்தில் இயங்குகின்றவர்களும் அடிக்கடி தூசு தட்டப்பட்டு, கழுவி சுத்தப்படுத்தி,  இளைப்பாறி,  மனசை ஆசுவாசப்படுத்திச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் வேண்டும். அதிலும் அரசியல் தளத்தில் இதன் தேவை சற்று வலுவானதாகவே காணப்படுகிறது.

இந்தப் பணியையும் அதே அரசியல் கட்சி மேற்கொள்வது சிரமமானது,  இதற்கான தெளிவான ஒருங்கிணைப்பும் இஸ்லாமிய இயக்கத்துடன் காணப்பட வேண்டும்.

எனவே அரசியலை தஃவாவை விட்டு வேறுபிரித்தல் என்கின்ற பொழுது,  அது வரையறைகளற்ற ஒரு பொது சிந்தனையாக மாத்திரம் புரிந்து கொள்ளப்படக் கூடாது. கட்டமைப்பு,  தீர்மானம்,  செயற்பாடுகளில் சுயாதீனத்தன்மை காணப்பட்டாலும்,  இருப்பு,  ஆன்மா என்ற வகையில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலையே காணப்படுகிறது.

அடுத்து,  இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பரப்புகளில் ஒரு பரப்பில் ஏற்படும் பின்னடைவு முழு இஸ்லாமிய இயக்கத்தினதும் தோல்வியையோ அறிவீனத்தையோ அடையாளப்படுத்த மாட்டாது, அல்லது இஸ்லாமிய இயக்கத்தின் செல்லுபடியற்ற தன்மையையும் வலியுறுத்த மாட்டாது.

இந்த நியாயத்தை ஷெய்க் மூரோவின் கருத்து முன்வைப்பில் தெளிவாக அவதானிக்க முடிகிறது. அவர் மாற்றம் அவசியமான இடங்களை சுட்டிக் காட்டுவதில் கவனமாக இருந்தார். இயக்க செயற்பாட்டை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது அது பொறுத்தமற்றது என்று சொல்வதோ அவரது நோக்கமாக இருக்கவில்லை.

இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை,  ஒன்றைக் கட்டுவதை நோக்கமாக் கொண்டிருக்கிறது உடைப்பதை அல்ல. அந்தவகையில் ஒரிடத்தின் குறைபாடு முழு இயக்க செயற்பாட்டையும் மறுதலிப்பதாக அமைந்து விடக்கூடாது. ஆனால் இன்று சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் பின்னடைவுகளை சிலர் இயக்க செயற்பாட்டின் தோல்வியாகவும் அல்லது அதன் அவசியமற்ற தன்மைக்கான சான்றாகவும் சித்திரிக்க முயல்கின்றனர். ஏலவே குறிப்பிட்டது போல் விமர்சனங்களும் ஆலோசணைகளும் என்றும் ஏற்புடையவைதான்,  ஆனால் இவற்றை சிலர் தமது சந்தைக்கான விற்பனைப் பொருளாக பயன்படுத்த முனைவதுதான் மறுக்கப்பட வேண்டியது.

இறுதியாக,  சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் பின்னடைவு குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போது,  ஒரு விடயம் அடிக்கடி வலுவாகப் பேசப்படுகிறது. அதாவது பின்னடைவுக்குப் புறக்காரணிகளை நோக்கி நாம் விரலை நீட்டுவதை விடவும் அகக் காரணிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பது.

உண்மைதான் பிரச்சினை என்று ஒன்று இருந்தால் இரண்டு தரப்பிலும்  தவறுகள் இருக்கும்,  எனவே எமது தோல்வியை எதிரியின் சதி என்று அவன் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு எமது பலவீனங்களை மறந்து விடக் கூடாது. இஸ்லாமிய வரலாற்றில் உஸ்மானியக் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு புறச்சதி மாத்திரம் காரணமல்ல உள்ளார்ந்த பலவீனமும் ஒரு பிரதான காரணம்தான்.

இங்கு நியாயமாக ஒரு கேள்வி தோன்றுகிறது,  எகிப்தில் முர்ஸியும் டியூனிஷியாவில் நஹ்லாவும் பின்னடைந்தமைக்கு சதியும் பலவீனமும் இரண்டு காரணங்களும் இருக்கின்றன.

ஆனால் இவற்றில் எதனுடைய பங்கு அதிகம்?

விஞ்ஞான பூர்வமாக இந்த விடயத்தை நாம் அணுகியிருக்கிறோமா?

அதன் பெறுபேறுகளில் நின்று விமர்சனங்களும் ஆலோசணைகளும் முன்வைக்கப்படுகின்றனவா?

எகிப்திலும் சரி டியூனிஷியாவிலும் சரி இஸ்லாமிய இயக்கத்தின் அரசியலை உண்மையில் மக்கள் மறுதலித்தார்களா?

மக்களது தேவைகள் நிறைவேற்றப்படாமையினால்தான் அவர்கள் பின்னடைவை எதிர்கொண்டார்களா?

எகிப்திலும் டியூனிஷியாவிலும் முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று இஸ்லாமிய வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் விளைவு எவ்வாறு அமைந்திருக்கும்?


விமர்சனங்களுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது,  நியாயமாக இந்தக் கேள்விகளுக்கும் நாம் விடை தேட வேண்டும். அப்பொழுதுதான் குறைசொல்லல் பழி சொல்லல்களைத் தாண்டி நாம் நியாயமான ஒரு நிலைப்பாட்டிற்கு வரலாம்.

Monday, July 28, 2014

பெருநாளும் சமூக வாழ்வும்

இஸ்லாமிய பெருநாள் கொண்டாட்டங்கள் என்றும் தனிச்சிறப்பு மிக்கவை, இஸ்லாம் அதனையும் ஒரு வணக்கம் என்றே கூறியுள்ளது. ஆம்,  பெருநாள் ஒரு சமூக வணக்கம். அதனால் தான் பெருநாள் கொண்டாடுதல் பற்றிய தீர்மானத்தை சமூகத்தலைமையே பெறவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. பெருநாள் கொண்டாட்டத்திற்கு வணக்கம் என்ற பெறுமானத்தை வழங்குவதன் ஊடாக இஸ்லாம் ஒரு தனிச்சிறப்பு மிக்க சமூக வாழ்வை கட்டமைக்கிறது. அங்கு ஒற்றுமை,  சமாதானம், பரஸ்பர உதவி,  போன்ற சமூகப் பண்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

பெருநாள் தினம் குறித்த நபியவர்களது சுன்னாக்களை அவதானிக்கின்ற பொழுது இந்த உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோரையும் ஒன்றிணைக்கின்ற வகையில் பெருநாள் தொழுகை ஒரு பரந்த வெளியில் நடாத்தப்பட்டிருக்கிறது,  அன்றைய தினம் மாதவிடாய் உள்ள பெண்களையும் கலந்து கொள்ளுமாறு நபியவர்கள் வலியுறுத்தினார்கள். மழைபெய்த சந்தர்ப்பங்கள் தவிர பெருநாள் தொழுகை பள்ளிவாயலிலன்றி,  பரந்த வெளியிலேயே நடாத்தப்பட்டிருக்கிறது. பள்ளிவாயலுக்கு அனுமதிக்கப்படாத மாதவிடாய் பெண்களும் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்

 இந்த ஏற்பாட்டைப் பார்க்கின்ற பொழுது,  இது ஊரின் ஒரு பொதுக் கொண்டாட்டம்,  இதில் எல்லோரும் கலந்து கொள்ளவேண்டும், எல்லோருக்கும் பொதுவான ஓரிடத்தில் அது நடைபெறவேண்டும்,  எல்லோரையும் உள்ளடக்கக் கூடிய வகையில் அந்த இடமும் விசாலமானதாகக் காணப்பட வேண்டும்,  போன்ற விடயங்கள் இங்கு கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இது சமூக வாழ்வில் ஒற்றுமை எனும் உயர் பண்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஓர் அழகிய ஏற்பாடாகும்.

அடுத்து,  பெருநாள் தின வாழ்த்துப் பரிமாற்றம் ஒரு முக்கிய சுன்னா. அல்லாஹ்தஆலா உங்களையும் எங்களையும் அங்கீகரிக்கட்டும் என்ற துஆவாக அந்த வாழ்த்து அமைகிறது. சந்திக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இதனைப் பரிமாறிக் கொள்வது சிறந்த சுன்னா. இந்த துஆ முஸாபஹா எனும் கைலாகுடனும்,  முஆனகா எனும் ஆரத்தழுவிக் கொள்ளலுடனும் இணைந்து காணப்படுமாக இருப்பின் அது மிகவும் ஏற்றமானதாகும். 

அத்துடன் நபியவர்கள் வீட்டிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வது ஒரு வழியாகவும் திரும்பி வருவது வேறு ஒரு வழியாகவும் காணப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை அதிகமானவர்களைச் சந்திக்க வேண்டும்,  அதிகமானவர்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நடைமுறைகளை அவதானிக்கும் பொழுது உறவுகள் வளர்க்கப்பட வேண்டும்,  பகைமைகளும் கோபதாபங்களும் மறக்கப்படவும் மன்னிக்கப்படவும் வேண்டும்,  ஒரு சுமூகமான சமூக வாழ்கை தோன்ற வேண்டும் போன்ற விடயங்கள் நோக்கமாகக் கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம். இது இஸ்லாம் வலியுறுத்தும் சமாதானம் எனும் உயர் சமூகப் பண்பாடல்லவா?

மற்றது,  நோன்புப் பெருநாளைக்கேயுரிய ஒரு விஷேட வாஜிப் ஸகாதுல் பித்ர். பெருநாள் தேவைக்கு மேலதிகமாக வசதிகள் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் இது கடமையாகும். பெருநாள் தொழுகைக்கு முன்னரே இது செலுத்தப்பட வேண்டும். செலுத்தப்பட வேண்டிய தொகை சிறியது என்பதால் பெரும் தொகையானவர்கள் இதில் ஈடுபடுவதற்கு வாய்ப்பேற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் அன்றைய தினம் எல்லோரும் சந்தோசமாக பெருநாள் கொண்டாடுவதற்கான வழியேற்படவேண்டும். இமாம் அபூஹனிபா அவர்களுடைய அபிப்ராயப்படி இது பணமாகவும் செலுத்தப்பட முடியும். இது தனிப்பட்ட வடிவிலன்றி கூட்டாக நடைபெறுவது பயன்மிக்கது என்பதும் பல அறிஞர்களது கருத்தாகும். 

இவற்றை அவதானிக்கின்ற பொழுது ஸகாதுல் பித்ர் என்பது ஒரு நாளைக்குரிய பொருளாதார கூட்டுறவு முறைமை.  பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் ஒரு ஊரில் ஒரு நாளின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக இஸ்லாம் இதனை முன்வைத்துள்ளது. இது இஸ்லாம் முன்வைக்கும் சமூகக் கூட்டுறவு எனும் உயர் சமூகப் பெறுமானமாகும்.


ஒற்றுமையும் சமாதானமும் சமூகக் கூட்டுறவும் இன்று காலத்தின் தேவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். இவற்றை நோக்கி நாம் செயற்பட வேண்டும் என்பதை நோன்புப் பெருநாள் எங்களுக்கு ஞாபகமூட்டிச் செல்கிறது. இதனை இவ்வருட நோன்புப் பெருநாள் செய்தியாக உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.