Sunday, December 28, 2014

நபியவர்களது வாழ்வை மூலாதாரமாகப் புரிந்து கொள்ளுதல்

நபியவர்களது வாழ்வைக் குறிக்கும் சுன்னா என்ற சொற்பிரயோகம் இமாம்களது பரிபாஷையில் மூன்று கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றன.

1.            சுன்னா என்பது மன்தூப் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. மன்தூப் என்பது ஷரீஅத் சட்ட முடிவு ஒன்றின் தராதரத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். அதாவது வாஜிப் என்றால் கட்டாயமானது என்று பொருள்படும். மன்தூப் என்றால் கட்டாயமானதல்ல. ஆனால் செய்தால் நன்மைகள் கிடைக்கும். செய்யாத போதும் குற்றிமில்லை. இது சுன்னா என்பதன் முதல் கருத்தாகும். இக்கருத்தில் புகஹாக்கள் எனப்படும் சட்டத்துறை அறிஞர்களே அதிகம் பயன்படுத்தினர்.

2.            சுன்னா என்பது சட்ட மூலாதாரம் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு செயற்பாட்டினதும் சட்டபூர்வத் தன்மையை உரசிப் பார்ப்பதற்குரிய ஒன்று என்பது மூலாதாரம் என்பதன் பொருளாகும். அல்குர்ஆன் முதலாவது சட்ட மூலாதாரம். சுன்னா இரண்டாவது சட்ட மூலாதாரம். சுன்னா என்ற பிரயோகத்தை இந்த இரண்டாவது கருத்தில் உஸுலிய்யூன் எனப்படும் சட்ட அடிப்படை சார் அறிஞர்களே அதிகம் பயன்படுத்தினர். இந்த இரண்டாவது கருத்தையே இன்றைய கட்டுரையில் நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

3.            சுன்னா என்பது ஷரீஆ என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பித்அத் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விடயம் ஷரீஅத்தில் அல்லது இஸ்லாத்தில் உள்ளது என்று கூறுவதற்கு சுன்னா என்றும் இஸ்லாத்தில் இல்லாதது என்று கூறுவதற்கு பித்அத் என்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரயோகம் அதிகமாக வுஃஆல்எனப்படும் உபதேசகர்கள், பொதுப் பேச்சாளர்களிடத்தில் காணப்பட்டது.

சுன்னா என்ற பதம் கையாளப்பட்ட மூன்று வேறுபட்ட பரிமாணங்களையே மேலே பேசப்பட்ட விடயங்கள் குறித்து நிற்கின்றன. சுன்னா பற்றிய இந்த வேறுபட்ட பரிமாணங்களைப் புரிந்து கொள்ளுதல் பல சமயங்களில் சமூகத்தில் மாறுபட்ட அபிப்பிராயங்களை சீரணித்துச் செல்வதற்கு உதவியாக அமைய முடியும்.

அத்துடன் இங்கு நபியவர்களது வாழ்வு என்ற கருத்து இரண்டாவது பரிமாணத்திலேயே பிரதிபளிக்கின்றது. முதலாவது பரிமாணம் குறித்த ஒரு சட்டத்தரத்தை மாத்திரம் பேசுகிறது. மூன்றாவது பரிமாணம் நபியவர்களது வாழ்வை மாத்திரமன்றி அல்குர்ஆனையும் உள்ளடக்கியிருக்கிறது.

இனி இந்த இரண்டாம் பரிமாணம் குறித்த விளக்கத்திற்கு வருவோம். நபியவர்களது வாழ்வு ஒரு சட்ட மூலாதாரம் என்பதில் பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அவரது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் சட்ட மூலாதாரமாகக் கொள்ளுதல் என்பதைப் பொறுத்தவரையில் வேறுபட்ட பார்வைகள் இருக்கின்றன.

இதில் இரண்டு விடயங்கள் குறித்து சற்று பார்வையைச் செலுத்துவது பொறுத்தம் என்று நினைக்கிறேன்.

1.            நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சட்டமாக அமையுமா? மாட்டாதா?

2.            நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நேரடியாக அந்த அம்சமே சட்டமாக அமையுமா? அல்லது அதன் நோக்கங்கள் காரணங்கள் போன்றனவும் சட்டமாக அமையுமா?

இதில் முதலாவது பகுதியை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு நபியவர்களது வாழ்வு என்பதன் மூலம் நாடப்படும் கருத்தையும் சற்று விளங்கிக் கொள்வது அவசியமாகும். 
அதனை மிக எளிமையாகக் கூறினால், நபியவர்களது வாழ்வு எனும் போது அவர்களது வார்த்தைகள், செயற்பாடுகள், அவர்கள் வழங்கிய அங்கீகாரங்கள் போன்றன மிகப் பிரதானமாக உள்ளடங்குகின்றன. நபியவர்களது வாழ்வில் ஸஹாபாக்களது நடவடிக்கைகள் உள்ளடங்குவதில்லை.

இன்று நாம் வாழும் சமூக வாழ்க்கைக்கான மூலாதாரமாக நபியவர்கள் எனும் தனிமனிதனின் வாழ்வை மாத்திரமே நாம் எடுத்துக் கொள்கிறோம். மாற்றமாக, ஸஹாபாக்களின் நடவடிக்கைகளையும் சேர்த்து நாம் சுன்னா என்ற கருத்தில் மூலாதாரமாகக் கருதுவதில்லை. ஸஹாபாக்களது வாழ்வு மூலாதாரமாகக் கருதப்படுமா? என்பது ஒரு தனியான விவாதம் அதனைப் பற்றி இங்கு நான்  பேசவில்லை, மாற்றமாக மூலாதாரம் என்ற கருத்தில் நபியவர்களது சுன்னாவில் ஸஹாபாக்களது நடவடிக்கைகள் உள்ளடங்க மாட்டாது என்பதையே குறித்துக் காட்ட விரும்புகிறேன்.

அந்தவகையில் ஒரு தனிமனிதனின் வாழ்வை சமூக வாழ்வொன்றில் நாம் எவ்வாறு பிரயோகிக்கப் போகின்றோம்? என்பதுவே இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு விடை காணும் முயற்சியை ஆரம்ப கால இமாம்கள் முதல் நவீன கால ஆய்வாளர்கள் வரையில் பலர் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் வகித்த சமூகப் பாத்திரங்கள் குறித்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இமாம் கராபி அவர்கள் தனது கிதாபுல் புரூக் எனும் நூலில் நபியவர்கள் முபல்லிக்எனும் அல்லாஹ்விடமிருந்து வஹியை அறிவிப்பவர் என்ற பாத்திரத்தை மாத்திரம் வகிக்கவில்லை. மாற்றமாக அவர்கள் இமாம்எனும் தேசத்தின் தலைவர் காழிஎனும் நீதிபதி,  ‘முப்திஎனும் பத்வா வழங்குனர் போன்ற பல்வேறு பாத்திரங்களை சமகாலத்தில் வகித்திருக்கிறார்கள். 

ஒரு சமூக வாழ்வில் காணப்பட முடியுமான எல்லா வகைப் பாத்திரங்களும் நபியவர்களுக்கு இருந்திருக்கிறது. மாத்திரமன்றி,  அந்த ஒவ்வொரு பாத்திரத்தினதும் உயர்ந்த தரத்தையே நபியவர்களது வாழ்வு பிரதிபளித்துமிருக்கின்றது என்று விளங்கப்படுத்தியிருக்கிறார்.
நபியவர்களது மேற்சொன்ன பாத்திரப் பரப்புகளில் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியை அறிவிப்பவர் என்ற வகையில் பேசிய வார்த்தைகள்,  மேற்கொண்ட நடவடிக்கைகள்,  வழங்கிய அங்கீகாரங்கள் என்பன எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது சட்டங்களாகக் காணப்படும். இவை பொதுவாக அல்குர்ஆனுக்கு நபியவர்கள் வழங்கிய விளக்கங்கள்,  நம்பிக்கைகள்,  வணக்க வழிபாடுகள்,  ஒழுக்கப் பண்பாடுகள்,  ஹலால்-ஹராம் தொடர்பானவை போன்ற பரப்புக்களை உள்ளடக்கியிருக்கும்.

இவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைபிடிப்பது கடமையாகும். மறுமை வரையில் அமுலில் இருக்கக்கூடிய பொது சட்டங்களாக இவை கருதப்படும். இவற்றை எவரேனும் தவிர்ந்து கொள்வதாக இருப்பின் இவை பற்றி வந்துள்ள ஹதீஸ்களின் நம்பகத்தன்மையில் ஒரு மாறுபடட கருத்து இருக்கின்ற போது மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும்.

அதுபோல் நபியவர்கள் ஆட்சித் தலைவர் என்ற வகையிலோ அல்லது நீதிபதி என்ற வகையிலோ பேசிய அல்லது செயற்பட்ட அல்லது அங்கீகாரம் வழங்கிய விடயங்களைப் பொறுத்தவரையில் அவை எல்லா மனிதர்களுக்குமான பொது சட்டங்களாகக் கருதப்பட மாட்டாது. மாற்றமாக அத்தகைய ஒரு சட்டத்தை ஒரு ஆட்சித் தலைவரோ அல்லது ஒரு நீதிபதியோ மாத்திரமே முன்வைக்க முடியும். உதாரணமாக ஒரு தடவை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் ஒரு தரிசு நிலத்தை எவர் பண்படுத்துகிறாரோ அந்த நிலம் அவருக்கே சொந்தமானதாகும்” (அபூதாவூத்).

நபியவர்களின் இந்த வார்தைகளை அவர் வஹி அறிவிப்பவர் என்ற அடிப்படையில் நின்று நோக்கினால் எந்தவொரு மனிதனும் பிறர்க்கு சொந்தமில்லாத ஒரு பொது நிலத்தைப் பயன்படுத்த முடியும். அப்போது அதன் உரிமையாளராக அவர் கருதப்படுவார். அரசாங்கமோ அல்லது வேறு எவரும் இதனைத் தடை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு செயற்பட முடியும் என்ற கருத்தையே பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த விளக்கம் நிச்சயமாக ஒரு சமூக ஒழுங்குக்குப் பொறுத்தமானதல்ல. அதனால் இமாம் அபூஹனீபா அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் போது,  நபியவர்கள் இக்கருத்தை பொதுச் சட்டமாக முன்வைக்கவில்லை. மாற்றமாக அவர் ஒரு ஆட்சித் தலைவர் என்ற அடிப்படையிலே இதனை முன்வைத்திருக்கிறார். எனவே,  இது போன்ற ஒரு முடிவை ஆட்சித் தலைவர் ஒருவர் மாத்திரமே பெற முடியும். அந்தவகையில் ஒரு தரிசு நிலம் எவ்வாறு கையாளப்பட வேண்டும்? என்பது பற்றிய சட்டத்தை அந்தந்த சூழலுக்கு ஏற்ப ஒரு அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே,  மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடியாக நாம் விளங்கிக் கொள்வது என்னவெனின்,  நபியவர்களது வாழ்வின் சில பகுதிகள் எல்லா மனிதர்களுக்குமான பொதுச் சட்டங்களாக அமையும், அதேவேளை மற்றும் சில பகுதிகள் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கான அல்லது சில சமூக அலகுகளுக்கான சட்டங்களாக மாத்திரம் அமைகின்றன. 

அந்தவகையில் நபியவர்களது வாழ்வை நாம் ஒரு சட்ட மூலாதாரமாக நோக்கும்போது,  அவர்களது வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் எல்லோருக்கும் உரியவை என்ற பொது நோக்கிலன்றி, நபியவர்கள் என்ற தனிமனிதன் வகித்த பல்வேறு சமூகப் பாத்திரங்களுக்கு ஏற்ப அந்தந்த பாத்திரப் பரப்புகளிலேயே எமது சமூக வாழ்வில் அவை மூலாதாரமாக மாறுகின்றன என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும். 

உண்மையில் இந்தப் பகுதி மிகவும் விரிவான ஓர் ஆய்வுப் பரப்பாகும்,  அதன் ஒரு சில துளிகளை தொட்டுக்காட்டுவது மாத்திரமே எனது முயற்சியாகும்.

இனி இரண்டாவது பகுதிக்கு வருவோம். நபியவர்களது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் அந்த நேரடி நிகழ்வுகளே,  எமக்கு சட்டங்களாக அமையுமா? அல்லது அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் எமக்கு சட்டங்களாக மாறுமா? என்ற இந்த விடயத்தைப் பொறுத்தவரை முதலாவது பேசிய கருத்துடனும் நெருங்கிய சம்பந்தம் உள்ள ஒரு பகுதியாகும்.

கீழ்வரும் ஹதீஸின் மூலம் இக்கருத்தை சற்று விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

நபியவர்கள் மதீனா வந்த பொழுது ஸஹாபாக்கள் பேரீத்தம் மரத்தில் மகரந்தச் சேர்க்கை செய்வதைப் பார்த்து அதனைத் தடை செய்தார்கள். அவ்வருடம் விளைச்சல் குறைந்தபோது மகரந்தச் சேர்க்கை தடை செய்யப்பட்டமையே காரணம் எனக் குறிப்பிட்டார்கள். அதற்கு நபியவர்கள் அது உங்களுக்குப் பயனளிக்கும் எனின் செய்யுங்கள் அவ்வாறு செய்வது நல்லதில்லை என்று நான் கருதினேன். அவ்வளவுதான்,  எனது எண்ணம் தவறாக இருக்கலாம். ஆனால் நான் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதனைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வைப் பற்றி நான் ஒரு போதும் பொய்யுரைக்க மாட்டேன். ஆனால் எனது சொந்தக் கருத்தைக் கூறியிருந்தால் (அதனைப் பின்பற்றுவது அவசியமில்லை) ஏனெனில்,  நானும் ஒரு மனிதன்தான்,  உங்களது உலக விவகாரங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்” (முஸ்லிம்)

இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற மிக முக்கிய விடயம் என்னவெனில் நபியவர்களது வாழ்வில் எமக்கு சட்டமாக அமைகின்ற ஒரு பகுதியும் இருக்கிறது. சட்டமாக அமையாத ஒரு பகுதியும் இருக்கிறது. நபியவர்களே அதனை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் பற்றியும் அவனிடமிருந்தும் நான் சொல்பவையே உங்களுக்கு ஷரீஅத்தாக அமையும். அவ்வாறன்றி நான் ஒரு மனிதன் என்ற நிலையில் முன்வைக்கும்,  எனது சொந்த அபிப்பிராயங்கள் உங்களுக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது என்கிறார்கள்.

மேற்சொன்ன வார்த்தைகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? உண்மையிலேயே நபியவர்களது வாழ்வில் எமக்கு ஷரீஅத்தாக அல்லது சுன்னாவாக அல்லது மூலாதாரமாக அமையாத ஒரு பகுதி இருக்கிறதா?

உண்மையில் ஏற்கனவே குறித்துக் காட்டியது போன்று, நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி அறிவிப்பவர் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள்,  செயற்பாடுகள், அங்கீகாரங்கள் அனைத்துமே நேரடியாக எமக்கு ஷரீஅத்தாக மாறுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நபியவர்கள் தொழுது காட்டியமையும்,  ஹஜ் செய்து காட்டியமையும்,  சாப்பிடும் போது பிஸ்மில் சொன்னமையும் வலது கையால் சாப்பிட்டமையும் அனைத்துமே நேரடியாக அதே செயல்கள் எமக்கு ஷரீஅத்தாக மாறுகின்றன.

ஆனால் நபியவர்கள் ஒரு மனிதர் என்ற வகையில் அவர்களிடமிருந்து புறப்படுகின்ற செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் நேரடியாக அந்த ஒவ்வொரு செயலும் எமக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. மாற்றமாக அந்த செயலை எந்த நோக்கத்திற்காக செய்தாரோ அந்த நோக்கமே எமக்கு ஷரீஅத்தாக மாறுகிறது. 

உதாரணமாக ஏற்கனவே கூறப்பட்ட பேரீத்தம் மரத்தின் மகரந்தச் சேர்க்கைத் தடை விவகாரத்தினை ஸஹாபாக்கள் கூட ஆரம்பத்தில் வஹியின் அடிப்படையிலான கட்டளையாக ஏற்று கைவிட்டார்கள். பின்னர் அதனை நபியவர்கள் அனுமதித்தார்கள். இந்த இடத்தில் மகரந்தச் சேர்க்கை செய்வதும் சரி அல்லது அதனைக் கைவிடுவதும் சரி. இரண்டுமே நேரடியாக எங்களுக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. ஆனால் விவசாய அபிவிருத்திக்காக அல்லது விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள முடியும் அல்லது கையாள வேண்டும் என்பது இங்கு ஷரீஅத்தாக மாறுகிறது. அதாவது புதிய தொழிநுட்பக் கையாள்கை என்பது இஸ்லாமியப் பாரம்பரியத்தில் வலியுறுத்தப்படும் ஒரு அம்சம் என்பதற்கான ஆதாரமாக இந்தச் சம்பவம் காணப்படுகிறது. இங்கு நேரடியாக குறித்த செயல் எமக்கு சட்டமாக அமையவில்லை. மாற்றமாக அந்த செயலின் நோக்கம் சட்டமாக அமைந்தது.

ஷெய்க் மஹ்மூத் ஷல்தூத் அவர்கள்,  நபியவர்கள் ஒரு மனிதர் என்ற ரீதியில் தொழிற்பட்ட நிலைகளை முக்கிய மூன்று பரப்புக்களில் குறிப்பிடுகிறார்கள்.

1.            நபியவர்கள் மனிதத் தேவைகளின் அடிப்படையில் தொழிற்பட்டமை உதாரணமாக சாப்பிடுதல்,  உறங்குதல் போன்றன. இதில் நபியவர்களது விருப்பு வெறுப்புக்களும் உள்ளடங்குகின்றன. உதாரணமாக,  நபியவர்கள் ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியை விரும்பிச் சாப்பிட்டார்கள்.

2.            சமூக வழக்காறு என்ற அடிப்படையில் நபியவர்கள் தொழிற்பட்டமை. உதாரணமாக,  அவர்களது ஆடைமுறைகள்,  அவர்களது மருத்துவம்,  விவசாய முறைகள் போன்றன.

3.            நபியவர்கள் மனித அனுபவத்தின் அடிப்படையில் தொழிற்பட்டமை. உதாரணமாக,  நபியவர்களது யுத்த தந்திரங்கள் போன்றன.

இந்த மூன்று பரப்புக்களையும் பொறுத்தவரையில் இவற்றின் நேரடி செயற்பாடுகள் எமக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது. மாற்றமாக அவற்றின் நோக்கங்களே எமக்கு ஷரீஅத்தாக அமையும். 

ஆனாலும் இந்தப் பரப்புகளுக்குள்ளேயும் சில சமயங்களில் சில நேரடி செயற்பாடுகளும் ஷரீஅத்தாக அமைகின்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவை குறிப்பாக வஹியின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற செய்திகளாகவே காணப்படும். அவ்வாறான செயற்பாடுகளை நபியவர்கள் தெளிவான கட்டளையாகவே குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார்கள். உதாரணமாக,  சாப்பிடும் போது பிஸ்மில் கூறுவது,  வலது கையால் சாப்பிடுவது,  உறங்கும் போது துஆ ஓதுவது போன்றன.

இறுதியாக,  இமாம் முகம்மத் தாஹிர் இப்னு ஆஷுர் அவர்கள் நபியவர்களது சுன்னாவை மிகச் சரியாக புரிந்து கொள்வதற்கு நபியவர்களது நடவடிக்கைகள் என்ன வகையான நோக்கங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது என்று வலியுறுத்துவதுடன்,  நபியவர்களது சுன்னா எழுகின்ற பன்னிரண்டு வகையான நோக்கங்களை விரிவாக விளக்குகிறார்கள். 

அந்த ஒவ்வொரு நோக்கத்தையும் விரிவாகப் பேசுவதற்குரிய இடம் இதுவல்ல என்றிருந்தாலும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை என்னவெனில்,  நபியவர்களது வாழ்வு என்பது இன்றைய எமது வளர்ச்சியடைந்த சமூக வாழ்வின் எல்லாப் பாகங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கையாகும். எமது சமூக வாழ்வு துறை வாரியாக வகைப்படுத்தப்பட்டு,  ஒவ்வொரு துறையும் சுயாதீனமாய்த் தொழிற்படுவது போன்ற ஒரு நிலைமையை நபியவர்கள் வாழ்வில் காண்பதரிது. அதனால் அவரது வாழ்வை எமது சமூக வாழ்வில் பிரயோகிக்கும் போது ஒரு விரிந்த பகுப்பாய்வுப் பார்வை எமக்கு அவசியப்படுகிறது. அப்பொழுதுதான் இன்றைய நாளில் சுன்னாவை மிகச் சரியாக அமுல்படுத்தியவர்களாக நாம் மாறுவோம்.


அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.