Saturday, March 24, 2018

உங்கள் தெரிவை எங்கே மேற்கொள்ளப் போகிறீர்கள்?


திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு



திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் பதில் காண வேண்டிய கேள்விகளுள் நான்காவது எங்கே? என்ற கேள்வி. திருமண வாழ்வில் நுழைய முன்னர் இந்தக் கேள்வியும் மிகவும் முக்கியமானது. எங்கே என்ற கேள்வி தொடுக்கப்படுவதன் முக்கியத்துவம்,  எமது தெரிவின் போது,  இலட்சியவாதக் கோட்பாடுகளைத் தாண்டி,  அதிகம் பிரக்டிகலாக சிந்திக்க வேண்டும் என்ற புள்ளியிலேயே மறைந்திருக்கிறது. நான் பலரைப் பார்த்திருக்கிறேன்,  தமது தெரிவுக்கு சில பொலிஸிகளை வைத்திருப்பார்கள். உறவுக்குள் முடிக்க மாட்டேன்,  ஊருக்குள் முடிக்க மாட்டேன் என்று இருப்பார்கள். சில சமயங்களில் அவர்களது பொலிஸிகள் காரணமாகவே வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. திருமண வாழ்வில் பொலிஸிகள் இருக்க வேண்டும்தான் மறுப்பதற்கில்லை,  அதே நேரம் நாம் பிரக்டிகலாகவும் இருத்தல் வேண்டும். மிகவும் இறுக்கமாகவும் இருந்துவிடக் கூடாது. நலனை மையமாகக் கொண்ட விட்டுக் கொடுத்தல் என்பதே இங்கு முக்கியமான சமநிலையாகும்.

எங்கே என்ற கேள்விக்கு எவ்வாறு விடை காண வேண்டும் என்பது பற்றி இன்றைய அமர்வில் சகோதரர்களை மையப்படுத்தி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நினைக்கிறேன். இதனை கீழ்வரும் சில தலைப்புகளில் பேசலாம் என்றிருக்கிறேன்.

1.உறவுகள்: திருமணத்தின் தெரிவை எங்கே மேற் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கான பதில்களுள் உறவுகள் என்பதும் ஒன்றாக அமைய முடியும். கடந்த பத்தியொன்றில் யார்? என்ற கேள்விக்குப் பதில் தரும் போது,  நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் சாதக பாதகங்கள் அலசப்பட்டன. உறவுக்குள்ளே திருமணம் செய்வது பொருத்தமா? இல்லையா என்பது ஷரீஅத் ரீதியாகவும் சரி,  விஞ்ஞான ரீதியாகவும் சரி விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு. அந்தவகையில் அதனை பொருத்தம் அல்லது பொருத்தமில்லை என்று ஏதேனும் ஒரு விதியில் மாத்திரம் நின்று நோக்காமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதில் நலனிருக்கிறது என்ற அடிப்படையில் தெரிவை மேற்கொள்வதே சிறந்தது.

உறவுகளுக்குள்ளே தெரிவை மேற்கொள்வதன் நலன் பற்றி,  அனுபவப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு விடயங்களை இங்கு பரிமாறிக் கொள்கிறேன். முதலாவது,  பொருத்தப்பாட்டுக் காரணிகள்,  குணநலன்கள்,  ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து பெரிய தேடுதல் எதுவும் அவசியமற்றது. ஒரே உறவுவட்டம் என்ற வகையில் இவையணைத்தும் நன்கு அறிமுகமான நிலையிலேய காணப்படும். அந்தவகையில் நம்பிக்கையோடு அடுத்த கட்ட முடிவை நோக்கிச் செல்வது இலகுவாக இருக்கும். இரண்டாவது,  பொருளாதார உத்தரவாதம்,  அதிலும் குறிப்பாக திருமணத்தின் பின்னர் தம்பதிகளின் பொருளாதார வாழ்வின் மேம்பாடு என்பது தனித்து அவர்கள் இருவரது கைகளில் மாத்திரம் தங்கியிருக்கின்ற ஒரு விடயமாக இருக்க மாட்டாது. கணவன் மனைவி இரண்டு தரப்பினரும் ஓரே உறவுவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் பொருளாதார ரீதியாக பரஸ்பரம் உதவி செய்யும் நிலை அல்லது குறைந்த பட்சம் தனித்து விடப்படாத ஒரு நிலை காணப்படும்.
2.அறிமுக வட்டம்: தெரிவு எங்கே? என்பதற்கான இரண்டாவது பதில் இது. அறிமுக வட்டம் என்பது உறவு அல்லாத ஆனால் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்களைக் குறிக்கும். பெற்றோர்கள்,  உறவினர்கள்,  சகோதர சகோதரிகளின் நட்பு வட்டங்கள் இதில் உள்ளடங்கும். அது தொழில் முறை நட்பு அல்லது தஃவா முறை நட்பு என எந்த வடிவத்திலும் அமையலாம்.

எமது தெரிவு இந்த அறிமுக வட்டத்தில் அமைவதும் தவறில்லை. ஆனால் அறிமுக வட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தெரிவு இடம் பெற்றுவிடக் கூடாது. மாற்றமாக இருதரப்பு நலன்களை வைத்தே தெரிவு இடம் பெறுதல் வேண்டும். அறிமுக வட்டத்தில் தெரிவு நடைபெறுவதன் நலன்கள் குறித்து அனுபவப்பட்டவர்கள் சொல்லும் ஒரு விடயத்தை இங்கு பரிமாறிக் கொள்கிறேன். இங்கு இருதரப்பினரையும் நன்கு அறிந்த ஒருவரோ அல்லது ஒரு தரப்பினரோ கண்டிப்பாக இருப்பார். அவ்வாறு இருப்பதன் காரணமாக இரு தரப்பினரதும் நல்ல பக்கங்களையும் பாதகமான பக்கங்களையும் மிகச் சரியாக பரிசீலிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் தெரிவை மிகச் சரியாக மேற்கொள்வதற்கு இது துணை செய்யும். மாத்திரமன்றி  இருதரப்பினரையும் அறிந்தவர்கள் என்றவகையில் இங்கு ஏமாற்றுவதற்கான இடம்பாடும்; மிகவும் அரிதானது. அத்துடன் திருமணத்தின் பின்னர் கூட ஏற்பட முடியுமான பிணக்குகளின் போது,  இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்கு அதே தரப்பின் உதவி பெற்றுக் கொள்ளப்படவும் முடியும். மிக முக்கியமாக இந்த இடத்திலும் நம்பிக்கையுடன் முன்னோக்கிய தீரமானத்தை எடுப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.

3.ஒரே பணியில் இருப்போர்: தெரிவு எங்கே? என்ற கேள்விக்கான மற்றோர் பதில் இது. இங்கு ஒரே பணி என்பதன் மூலம் குறிப்பாக தொழில் ரீதியாக ஒரே இடத்தில் மற்றும் ஒரே பணியில் இருத்தல் அல்லது ஒரே இடத்தில் கல்வி கற்றல் போன்ற வடிவங்களே நாடப்படுகின்றன. பல திருமணங்களில் இந்த அடிப்படையில் தேர்வு நடைபெற்றமையை மறுப்பதற்கில்லை. இங்கு ஒரு தரப்பு அடுத்த தரப்பை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதனால் பல தேர்வுகள் இதனை அடிப்படையாக வைத்து நிகழ்கின்றன. இது தவறானதல்ல,  ஆனால் அந்தத் தேர்வு,  அடிக்கடி காண்பதனால் ஏற்படும் ஒருவித ஈர்ப்பினால் மாத்திரம் நிகழ்ந்ததாக அமைந்து விடக் கூடாது. அதனைத் தாண்டி இது இருதரப்பிற்கும் எவ்வாறு நலனாக அமைகிறது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படல் வேண்டும்.

இந்த அடிப்படையில் தெரிவு அமைவதன் நலன் குறித்து அனுபவப்பட்டவர்கள் சொல்லும் முக்கிய கருத்து என்னவெனின்,  திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதை நிறையவே இலகுபடுத்துகிறது என்பதாகும். திருமணத்தின் பின்னர் தொடர்ந்து கற்பதாக இருந்தாலும்,  தொழில் செய்வதாக இருந்தாலும் சமையல்,  போக்குவரத்து,  பிள்ளைப் பராமறிப்பு,  போன்ற பல விடயங்களில் இலகுவாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும். மாத்திரமன்றி பணியில் கூட பரஸ்பர ஒத்துழைப்புகளை வழங்கிக் கொள்ள முடிகிறது,  என்பர். இந்த நலன்கள் நியாயமானவைதான் மறுப்பதற்கில்லை. அதே நேரம் இங்கு ஒரு எதிர்மறையான பக்கம் இருப்பதையும் மறந்து விடக் கூடாது. அதாவது,  ஒரே பணியில் இருப்பவர்கள் என்ற வகையில் பணிரீதியான முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதே போன்று திருமணத்திற்கு முன்னர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படவும் முடியும். இந்த எதிர்மறைகள் குறித்தும் தெரிவின் போது நாம் கவனமாக உள்ள போதுதான் இவற்றைக் கடந்து செல்வது எவ்வாறு என்பது குறித்து சிந்திக்கத் தலைப்படுவோம். இதுவும் அனுபவப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதுதான்.

4.ஒரே இயக்கத்தின் உள்ளே தெரிவு இடம் பெறுதல்: தெரிவு எங்கே? என்பதற்கு மற்றொரு முக்கியமான பதில் இது. என்னைத் தெரிந்தவர்கள் பலர் என்னிடத்தில் ஆலோசணை கேட்கும் பரப்புக்களில் இதுவும் ஒன்று . இயக்கத்தின் உள்ளே முடிப்பது சிறந்ததா? வெளியே முடிப்பது சிறந்ததா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முன்னர் ஒரு விடயத்தை நினைவுபடுத்தி விட்டுச் செல்வது நல்லது.

இன்று இஸ்லாமிய தஃவா இயக்கங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றை நோக்கிய விமர்சனங்கள் எவ்வாறு எழுந்தாலும் அவற்றின் வட்டம் விரிவடைந்து கொண்டுதான் செல்கின்றன. புதிய இளைஞர் பரம்பரை ஒன்று அவற்றில் இணைந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் அங்கிருப்பவர்களிடம் இந்தக் கேள்வி நியாயமாகவே எழுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட அறிமுக வட்டம் என்ற பரப்பிற்குள் இயக்கத்தையும் உள்ளடக்க முடியும் என்றிருந்தாலும்,  இன்று தனித்துப் பார்க்கப்படும் அளவுக்கு அது சார்ந்த கேள்விகள் அதிகரித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். மற்றோர் புறத்தில் இயக்க நலனைக் கருத்தில் கொண்டு இயக்கத்தில் திருமணம் முடிப்பது மட்டும்தான் மிகச் சரியான தஃவா தெரிவு என்ற மனநிலைகளும் இயக்கங்களுக்குள் இல்லாமலில்லை. எனவே இளைஞர்கள் மத்தியில் உண்மையில் இது கட்டாயமானதுதானா? என்றதொரு கேள்வி எழுகிறது. அதனாலும் இதனை தனித்து நோக்க வேண்டியிருக்கிறது.

முதலில் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்திலும் ஏற்கனவே சொல்லப்பட்டது போல்,  கோட்பாட்டு ரீதியான விடயங்களை முன்னிறுத்தியன்றி பிரக்டிகலாக தீர்மானம் எடுப்பதே முக்கியமானது. ஏனெனில் இயக்க நலன் என்று வருகின்ற பொழுது,  இயக்க அங்கத்தவர்களிடத்தில் அதற்கு ஒரு புனித உணர்விருக்கிறது. எனவே பிரக்டிகலாகவன்றி கோட்பாட்டு உண்மைகளில் நின்று மாத்திரம் தீர்மானம் எடுப்பதற்கான வாய்ப்பு இங்கு அதிகம் காணப்படுகிறது. கோட்பாட்டு உண்மைகளுக்காக பலர் தமது நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொண்டமையையும் மறுப்பதற்கில்லை.
இயக்கத்திற்கு உள்ளே தெரிவு அமைகின்ற போது,  மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் பொருத்தப்பாட்டுக் காரணிகளாகும். இயக்க நலன் என்ற காரணத்தால் பொருத்தப்பாடு என்ற விடயம் மறைந்து போய் விடக் கூடாது. ஏனெனில் பொருத்தப்பாடு என்பது நீடித்த குடும்ப வாழ்விற்கு முக்கியமானது. இவ்விடயம் மறக்கப்படுகின்ற பொழுது,  எந்த நலனுக்காக திருமணம் நடைபெற்றதோ அந்த நலனே அடையப் பெறாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைய சமூக வாழ்வில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்ற பொருளாதாரம்,  சமூக அந்தஸ்த்து போன்ற விடயங்கள் மிகவும் முக்கியமானவை.
இயக்கத் தெரிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் இருக்கின்றது. அதாவது,  பல சமயங்களில் துடிப்பாக, முன்வந்து செயற்படும் இளைஞர்களுக்கு அதே போன்று துடிப்பாக,  முன்வந்து செயற்படும் யுவதிகள் திருமணம் பேசப்படுகின்றனர். இந்த தெரிவில் நலன்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல் தஃவா ரீதியான பல நலன்கள் இதில் இருக்கின்றன. ஆனால் இதில் இருக்கின்ற எதிர்மறையான ஒரு பக்கமும் அவதானத்திற்குரியது. பல சமயங்களில் இருவரும் சமதரத்திலான பொறுப்புக்களை சுமந்து செயற்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அங்கு சமூக தஃவா பயனடைகிறது,  ஆனால் அவர்களது குடும்ப வாழ்வில் குறிப்பாக பிள்ளைப் பராமறிப்புக்கான நேர ஒதுக்கீட்டில்  பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் எனது தனிப்பட்ட ஆலோசணை,  சமகாலத்தில் இருவரும் பெரிய பொறுப்புக்களை சுமக்காதிருப்பது நல்லது,  மாத்திரமன்றி தெரிவின் போதே ஒரேவகையான திறமைசாலிகளாகவன்றி,  தனது இடைவெளியை நிரப்பும் வகையில் அமைத்துக் கொள்வதும் நல்லது என நினைக்கிறேன். இயக்க தஃவா அனுபவத்தில் பலரும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். சமூக தஃவாவின் உச்சத்தில் இருக்கின்ற பலரது வாழ்க்கையைப் பார்க்கின்ற பொழுது,  சாதாரண ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு,  அவர்களது மனைவிமார்கள் இவர்களது தஃவா உச்சத்திற்கு எந்தளவு துணை நின்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு மறுதலையாக சாதாரண ஒரு இயக்க அங்கத்தவனாக இருந்து கொண்டு,  தமது மனைவிமாரின் தஃவா தலைமைத்துவத்திற்கு ஆணிவேராக இருக்கும் எத்தனையோ கணவன்மாரையும் நானறிவேன். ஒருவகையில் இது ஒரு நல்ல சமநிலை என்று தோன்றுகிறது. இங்கு புரிந்துணர்வும் மதிப்பளித்தலும்தான் மிகவும் முக்கியமானவை,  திறமைகள் சமாந்தரமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

இயக்க ரீதியான தெரிவின் போது,  இயக்க ரீதியான அல்லது தஃவா ரீதியான பொது நலன்கள் பல இருக்கின்றன என்பது உண்மை. அவை பற்றி குறிப்பாக இங்கு நான் பேச நினைக்கவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் இதில் உள்ள நலன் என்ன? என்பது சற்று புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இங்கு முக்கியமாக இரண்டு விடயங்களை மாத்திரம் அடையாளப்படுத்துகிறேன்.

முதலாவது,  குடும்ப வாழ்வு புரிந்துணர்வுடன் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. குறிப்பாக தஃவா ரீதியான கடமைகளின் போது,  வீட்டுக் கடமைகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் போதாமைகள் சகித்துக் கொள்ளப்படுகின்றன. முக்கியமாக இவற்றை மையப்படுத்தி பிணக்குகள் ஏற்படுவது குறைகின்றன.

இரண்டாவது,  குடும்பச் சூழலில் இஸ்லாமிய விழுமியங்களைக் கட்டியெழுப்புவது இலகுவாகின்றது. இதுவும் தஃவாவில் ஒரு இலக்காக அமைவதால் இருவருக்கும் சமகாலத்தில் இதற்கான தூண்டுதல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த சூழ்நிலையை சிறந்த முறையில் பயன்படுத்திய எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன என்பது மறுக்கப்பட முடியாதது.

அடுத்து,   நாம் முக்கியமாக மனம் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. அதுதான் இயக்கத்தினுள் தெரிவை மேற்கொள்வதா? இல்லையா? என்பது ஏற்கனவே கூறப்பட்டது போல் நலன் சார்ந்த ஒரு விடயமே அன்றி,  மார்க்கக் கடமை சார்ந்த ஒரு விடயம் அல்ல. மாத்திரமன்றி பொதுவாக,  இயக்க தஃவா பாரம்பரியத்திலும் கூட இது கட்டாயமாக வலியுறுத்தப்படும் ஒரு சட்டமும் அல்ல,  எனவே இயக்க அங்கத்தவர் ஒருவர் இயக்கத்தினுள் தெரிவை மேற்கொள்ளவில்லை என்பது,  மார்க்க ரீதியாகவும் சரி,  தஃவா ரீதியாகவும் சரி குற்றமிழைத்ததாக ஒரு போதும் கருதப்பட மாட்டாது. இந்த இடத்தில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் முன்வைத்த நிலைப்பாடுதான் மிகவும் சமநிலையானது என்று நினைக்கிறேன். அதாவது,  தனது துணை,  தனது சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் மதிப்பளிப்பவராக இருப்பது மாத்திரம் போதுமானது என்கிறார்கள். இன்றைய தஃவா இளைஞர்களுக்கு நான் சொல்லும் உபதேசமும் இதுதான். உங்கள் தஃவாவை மதிக்கின்ற,  புரிந்து கொள்கின்ற துணையைத் தெரிவு செய்யுங்கள். இயக்கத்தின் உள்ளேயே பொருத்தமான தெரிவு அமையும் எனின் மிகவும் சிறந்தது. அதனை முற்படுத்தலாம். ஆனால் அதனை மாத்திரம் நிபந்தனை ஆக்காதீர்கள். மிகவும் முக்கியமாக திருமணத்தின் பின்னர் உங்கள் துணையும் உங்கள் வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்காதீர்கள். ஏனெனில் துணைத் தெரிவைப் போன்றே தஃவாத் தெரிவும் மிகவும் சுதந்திரமானது. தஃவாக் கடமை திணிக்கப்பட முடியாதது. அது இயல்பாய் இரத்தத்தில் கலக்க வேண்டும். உங்களது துணையாய்த்தான் இருந்தாலும் அவர்களாய் உணர்ந்துதான் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயக்கம் சம்பந்தப்பட்ட துணைத் தெரிவை இந்த அர்த்தத்தில் புரிந்து கொள்கின்ற பொழுது,  ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர் பிறிதோர் இயக்கத்தில் துணைத் தெரிவை மேற்கொள்வதும் தவறானதாக அமைய மாட்டாது. இதுவும் சாத்தியமானதுதான். இதற்கான உதாரணங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் தனிப்பட்ட வகையில் நான் இதனை எவர்க்கும் பரிந்துரை செய்வதில்லை. நடைமுறையில் அங்கு பல சிரமங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உண்மையில் இதற்குப் பொதுவிதி ஒன்று சொல்வதை விடவும் ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்வுகளை வைத்தே நலன்களின் அடிப்படையில் தீர்வு சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

5.தனது ஊரில் தெரிவு செய்தல்: தெரிவு எங்கே என்ற கேள்விக்கு இதனையும் ஒரு பதிலாய்த் தர முடியும். தனது ஊரில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதை பொலிஸியாக வைத்திருக்கும் எத்தனையோ இளைஞர்களைச் சந்தித்திருக்கிறேன். அடிப்படையில் இந்தப் பொலிஸியில் தவறுகள் இல்லை. ஊரோடு வாழுதல் நல்லதுதான். குடும்ப வாழ்வு அவசரமாய் ஒரு ஸ்திரத்தன்மைக்கு வந்து விடும். தாய் வீடு என்றும்,  மாமி வீடு என்றும்,  அல்லது வாடகை வீடு என்றும் அடிக்கடி மாறி மாறி வாழும் வாழ்க்கையை விடவும் சொந்த ஊரில் நிலையாய் வாழ்வது பலவகையிலும் குடும்ப வாழ்வை மேம்படுத்தும். திட்டமிட்ட முன்னேற்றங்களை நோக்கி நகரவும் முடியும். இவைபோன்ற குடும்ப வாழ்வு சம்பந்தப்பட்ட பல நலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இந்தப் பொலிஸி எல்லோருக்கும் பொருந்தவும் மாட்டாது என்ற உண்மையையும் நாம் ஏற்றாக வேண்டும். இந்தப் பொலிஸியைக் கடுமையாய்க் கடைபிடித்த பலரது குடும்ப வாழ்வு,  வார இறுதிக் குடும்ப வாழ்வாக மாத்திரம் அமைந்து விட்ட அவலத்தையும் பார்த்திருக்கிறேன். ஆம்,  தான் தொழில் பார்க்கும் இடத்திற்கு தனது குடும்பத்தை நகர்த்திக் கொள்வதற்கு தனது பொருளாதாரம் இடம் தரவில்லை. எனவே வார நாட்களில் தனியாகவும் வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்துடனும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமை பல எதிர்மறைகளைக் கொண்டு வருகிறது என்பது நிதர்சனமானது. சந்தோசமான கணவன் மனைவி உறவை அது பாதிக்கிறது. பிள்ளை வளர்ப்பை அது பாதிக்கிறது. ஏன்? குறித்த ஆணுடைய தனிப்பட்ட முன்னேற்றத்தைக் கூட அது பாதிக்கிறது. தினமும் தனது மனைவியுடன் வாழ்பவன்தான்,  சமூக வாழ்வில் மிகச் சரியான தீர்மானம் எடுக்க முடியும் என்பது,  உளவியல் மாத்திரமல்ல ஷரீஅத்தும் சொல்லும் உண்மையாகும். இடைக்கிடை சில பிரிவுகள் அவசியம் என்பதை இங்கு குறிக்கவில்லை. மாற்றமாக தொடரான,  குறித்த வடிவிலான பிரிவுகள் வாழ்வில் பல எதிர்மறைகளை ஏற்படுத்தக் கூடியனவாகும்.

இந்த இடத்தில் இளைஞர்களுக்கு ஒரு ஆலோசணை சொல்ல விரும்புகிறேன். தெரிவின் போது,  உங்கள் எதிர்கால தொழில் வாழ்க்கை எவ்வாறு அமையப் போகிறது என்பதை பிரதானமாகக் கவனத்தில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப எந்த ஊரில் திருமணம் செய்வது என்பது குறித்து தீர்மானிப்பது மிகவும் நல்லது என்று நினைக்கிறேன். தொழில் வாழ்க்கை பற்றிய தீர்மானம் இன்றைய இளைஞர்களிடத்தில் மிகவும் சிரமமான தீர்மானங்களில் ஒன்று. நான் யார்? எனக்கு என்ன இயலும்? எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன்? என்பன பற்றிய முடிவுகள் இன்று தீர்க்கமாகவன்றி அலைகளில் அடிபட்டுச் செல்லும் நிலைதான் காணப்படுகின்றன. இந்தப் பொறியில் இருந்து இளைஞர்கள் வெளியில் வரவேண்டும். ஆரம்பம் முதலே எதிர்காலம் பற்றிய அதிலும் குறிப்பாக தொழில் வாழ்க்கை பற்றிய தெளிவான முடிவுகளுக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் குடும்ப வாழ்க்கையையும் ஸ்திரமானதாய் அமைக்க முடியும்.

தொழில் வாழ்க்கை ஊரில் அமைந்தால் ஊரிலேயே தெரிவை அமைத்துக் கொள்வதில் தவறில்லை. அல்லது தொழில் வாழ்க்கைக்கு ஏதுவாக அமையும் வண்ணம் தொழில் இடத்திற்கு அண்மைய இடங்களில் தெரிவை அமைத்துக் கொள்வது நல்லது. அல்லது தொழில் இடத்திற்கே உங்கள் குடும்பத்தையும் எடுத்துச் செல்வது,  இதற்கு உங்கள் பொருளாதாரம் இடம் தரவேண்டும். உங்கள் தெரிவு எங்கே அமையப் போகிறது என்பது பற்றி சிந்தியுங்கள்.

இறுதியாக ஒரு விடயத்தை நினைவு படுத்துகிறேன். அனைத்து உலகியல் அளவு கோள்களையும் தாண்டி எங்களுக்கு உதவ முடியுமானது பிரார்த்தனை ஒன்றுதான். எப்பொழுதும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கத் தவறாதீர்கள். கலாநிதி அக்ரம் ரழா அவர்கள் தனது துணை தேடும் படலத்தின் போது,  ஒருவர் தனக்கு செய்த உபதேசம் ஒன்றை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார். உன்னைத்  தெரிந்த,  உன்னை நேசிக்கின்ற அனைவரிடமும் உனக்குப் பொருத்தமான ஒருவரை அடையாளம் காட்டுமாறு சொல்லி வை,  அடுத்தது, ஒவ்வொரு சுஜுதிலும் யா அல்லாஹ் எனக்குப்  பொருத்தமான துணையைக் காட்டிவிடு என்ற பிரார்த்தனையை மறந்து விடாதே என்றார்கள். இதே உபதேசத்தை நானும் உங்களுக்குச் சொல்கின்றேன். கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் தனது பிரார்த்தனையின் பலனை விரைவிலேயே கண்டு கொண்டதாகக் குறிப்பிடுகிறார். நிச்சயமாக நீங்களும் கண்டு கொள்வீர்கள்.

பிரார்த்தனையின் பலனை மூஸா (அலை) அவர்கள் கண்டு கொண்டமை குறித்து அல் குர்ஆன் கூறிக் காட்டுகிறது. எனது இரட்சகனே,  எனக்கு நீ இறக்கிய நல்ல விடயங்கள் எனக்குத்  தேவையாக இருக்கின்றன (கஸஸ் - 24). மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னிடமிருந்து மத்யன் பிரதேசத்திற்கு தப்பி ஓடி வந்து,  இரண்டு யுவதிகளுக்கு உதவி செய்த பின்னர்,  களைப்புடன் கேட்ட துஆ இது. அடுத்த இரண்டு வசனங்களின் பின்னர் எனது இரண்டு பெண் பிள்ளைகளில் ஒருவரை உனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்…” (கஸஸ் - 26) என்று சுஹைப் (அலை) அவர்கள் கூறும் வார்த்தைகள் வருகின்றன.

துஆ என்றும் பயனளிக்கும். அதனை மறந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் தெரிவை சிறந்ததாக அமைக்கட்டும்.

அல்லாஹ்வே போதுமானவன்.


Friday, March 2, 2018

மகாஸித் தேடல்கள் (7)


மகாஸித் என்பது உலக நலன்களுடன் மாத்திரம் சுருங்கியதா?
- முவாபகாத் சிந்தனைகளிலிருந்து ஒரு துளி -



மகாஸித் என்பது உலக நலன்களுடன் மாத்திரம் சுருங்கியதா? என்ற கேள்விக்கான பதிலை ஒற்றை வார்த்தையில் அளித்தால்,  இல்லை,  அது மறுமை நலன்களையும் உள்ளடக்கியது,  என்று அழுத்தமாக சொல்ல முடியும். பதில் என்னவோ தெரிந்ததுதான். ஆனால் இந்தக் கேள்விதான் இங்கு முக்கியமானது. இந்தக் கேள்விக்கான நேரடியான பதிலை விடவும் இவ்வாறு ஒரு கேள்வி ஏன் தோன்றுகிறது என்ற பின்புலத்திற்கான பதிலை வழங்குவதுதான் முக்கியமான நோக்கம்.

மகாஸித் தேடல்கள் ஐந்தாம் பத்தியில்(1) மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் தேடும் பொழுது,  மகாஸித் என்பது அல்லாஹ்தஆலா ஷரீஆவை இறக்கியமைக்கான மனித நலன் சார்ந்த நோக்கங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இது கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனியின் வரைவிலக்கணத்தை மையப்படுத்திச் சொல்லப்பட்டது. மகாஸிதை மனித நலன் சார்ந்த நோக்கங்கள் என்று சொல்லும் போது,  மகாஸித் என்பது உலக வாழ்வுடன் மாத்திரம் மட்டுப்பட்ட நலன்கள்,  மறுமை வாழ்வுடன் அது சம்பந்தப்படவில்லை என்று புரிந்து கொள்ளும் இடம்பாடு இருக்கிறது. ஏனெனில் நலன் என்றவுடன் அது உலகம் சம்பந்தப்பட்டது என்ற புரிதல் இருக்கிறது. இது மகாஸித் கலை குறித்த எதிர்மறை நிலைப்பாடுகளுக்கு அல்லது அச்சங்களுக்கு ஒரு வகையில் காரணமாகியுள்ளது. அந்தவகையில் மகாஷிதுஷ் ஷரீஆ என்று பேசுவோர் இஸ்லாத்தின் இலக்குகளை உலகத்துடன் சுருக்கி விடுகின்றனர். மறுமை சிந்தனையை அந்நியமாக்கி விடுகின்றனர் என்ற அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த அச்சமும் கூட ஒரு வகையில் நியாயமானதுதான். ஏனெனில் இன்று சமூக வலைத்தளங்களில் கருத்தாடுவோர் பல சமயங்களில் மகாஸித் என்பது உலகத்துடன் சம்பந்தப்பட்டது மறுமை சம்பந்தப்பட்டது அல்ல என்ற ஒரு விம்பம் ஏற்படும் வகையில் கருத்துப் பரிமாறும் நிலை இருக்கிறது. குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களுடனான உறவுகள் குறித்த கருத்தாடல்களின் போது இதனை நன்கு அவதானிக்கலாம். இந்த இடத்தில் அவை குறித்து விளக்கமளிப்பது எனது நோக்கமல்ல. மாற்றமாக,  மகாஸித் என்ற சிந்தனையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? அதன் பிரயோகம் எந்தத் தளத்தில் அமைந்தாலும் அங்கு கடைபிடிக்கப்பட வேண்டிய வரையறை என்ன? என்பதை அடையாளப்படுத்துவதே எனது நோக்கம்.

அந்தவகையில்,  மகாஸித் என்பது உலக,  மறுமை நலன்களை உள்ளடக்கியது என்பதை இமாம் ஷாதிபியின் சிந்தனைகளிலிருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். இமாம் ஷாதிபியின் முவாபகாத் மீது,  அதிலும் குறிப்பாக கிதாபுல் மகாஸித் மீது ஒரு வாசிப்பை மேற்கொள்கின்ற போது,  அங்கு மூன்று அடிப்படைகள் மீது நின்று அவர் இக்கருத்தை விளக்குவதை அவதானிக்கலாம்.

முதலாவது அடிப்படை: ஷரீஆ இறக்கப்பட்டமையின் பிரதான மக்ஸத் என்ன என்று பேசுகின்ற பொழுது,  உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஒரு சேர மனித நலனை நிலை நாட்டுதல் என்கிறார்.(2) இந்த உண்மையை இமாம் ஷாதிபி இஸ்திக்ராஃ எனும் ஷரீஆவின் பெரும்பாலான கிளை அம்சங்களை ஆராய்வதன் மூலம்,  அவை ஒவ்வொன்றும் உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் மனித நலனை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்ற அடிப்படை மூலமே ஆதாரப்படுத்துகிறார். இந்த உண்மை எவரும் கருத்து வேறுபாடு கொள்ளாத ஒரு விடயம் என்பதையும் அழுத்தமாக முன்வைக்கிறார்.

இந்தத் தொடரில் மனித நலனின் வகைப்பாட்டை முன்வைக்கும்போது,  அதன் முதலாவது வகையாக அத்தியவசிய நலன்களைக் குறிப்பிடுகின்றார். அத்தியவசிய நலன்களை வரைவிலக்கணப்படுத்துகின்ற பொழுது உலக மறுமை வாழ்வானது,  எவற்றின் மீது எழுந்து நிற்கின்றனவோ அவைதான் அத்தியவசிய நலனாகும். அவை இழக்கப்படுகின்ற பொழுது,  உலகில் நலன்கள் நிலை நாட்டப்படாது வாழ்வே இழக்கப்படும் நிலை ஏற்படும். மறுமையில் விமோசனமும் சுவர்க்கமும் இழக்கப்படும். தெளிவான நஷ்டமே அங்கு மீதமிருக்கும் என்கிறார்.(3) அந்தவகையில் அத்தியவசிய நலன்களாக ஐந்து அம்சங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவை, மார்க்கத்தைப் பாதுகாத்தல்,  உயிரைப் பாதுகாத்தல்,  அறிவைப் பாதுகாத்தல்,  மனிதப் பரம்பரையைப் பாதுகாத்தல்,  செல்வத்தைப் பாதுகாத்தல் என்பனவாகும். இந்த இடத்திலும் மனித நலன் என்பதை தனித்து உலக வாழ்வுடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. மறுமை நலன்களும் இணைக்கப்பட்டே,  நலன் பற்றிய சிந்தனை முன்வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இதனடிப்படையில்,  மனித நலன் என்று சிந்திக்கின்ற பொழுது,  உலக மறுமை நலன்கள் இணைந்ததாகவே அந்த சிந்திப்பு காணப்படல் வேண்டும். அந்த வகையில் ஒரு விடயத்தின் மகாஸிதுகள் அடையாளம் காணப்படும் பொழுது,  உலக நலன்களை நிலைநாட்டக் கூடியன மாத்திரமன்றி மறுமை நலன்களை நிலைநாட்டக் கூடியனவும் மகாஸிதுகளாக அடையாளம் காணப்படல் வேண்டும். உதாரணமாக தஃவாவின் மகாஸிதுகள் எனும் கருத்தைப் பேசும் பொழுது,  கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள்(4) ‘மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால்  எல்லா மக்களுக்கும் இஸ்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது என்பதற்கு சாட்சியாக இருத்தல்,  அழைக்கப்படுபவனை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாத்தல்,  ஒரு தாஈ அல்லாஹ்வின் முன்னால் தனது கடமையை நிறைவேற்றியமைக்கான நியாயத்தைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். இவை ஒவ்வொன்றும் நேரடியாக மறுமையுடன் சம்பந்தப்பட்ட மகாஸிதுகள் மாத்திரமன்றி மனித நலன் சம்பந்தப்பட்டவையும் கூட.

இக்கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே அஹ்மத் ரைஸுனி அவர்கள் மறுமை நோக்கம் இல்லாத போது,  மனிதன் வெறுமனே அழிந்து செல்வதற்காகப் படைக்கப்பட்ட ஒருவனாக மாறிவிடுவான். உண்மையில் அடிப்படையான மகாஸிதுகள் மறுமை சம்பந்தப்பட்டனவேயாகும். இதனையே அல்குர்ஆன் மறுமைதான் நிரந்தரமான வாழ்வு…’ (அன்கபூத் - 64) என்று விளங்கப்படுத்துகிறது. சோதனை எனும் சிந்தனைதான் உலக வாழ்வையும் மறுமை வாழ்வையும் இணைக்கும் பாலமாக அமைகிறது என்கிறார்.(5)

இமாம் ஷாதிபி முன்வைக்கும் இரண்டாவது அடிப்படை : உலக நலன்கள் கலப்புத் தன்மையுள்ள நலன்கள் ஆனால் மறுமை நலன்கள் கலப்புத்தன்மையற்ற சுத்தமான நலன்கள்,  என்கிறார். அதாவது,  உலக நலன்களைப் பொறுத்தவரையில்,  தனித்து நலன்களை மாத்திரம் காண முடிவதில்லை. ஒவ்வொரு நலனுடனும் தீங்கும் கலந்துதான் காணப்படுகிறது. அதுபோல் தனித்துத் தீங்கையும் காண முடிவதில்லை. அதனுடன் சில நலன்களும் கலந்துதான் காணப்படுகிறது. இதுதான் படைப்பின் இறைநாட்டம் என்கிறார். அதேவேளை ஷரீஆவின் ஒரு விடயம் அனுமதிக்கப்படுவதும்,  தடுக்கப்படுவதும் அந்த விடயத்தில் உள்ள நலன் தீங்கைப் பொறுத்தே அமையும். அந்த வகையில் ஒரு விடயத்தின் நலன் மிகையாகக் காணப்படுகின்ற பொழுது அது அனுமதிக்கப்படுகிறது. தீங்கு மிகையாகக் காணப்படுகின்ற பொழுது அது தடுக்கப்படுகிறது.(6) 

அல்குர்ஆன் மதுவையும் சூதையும் தடை செய்தமையில் இந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். உங்களிடம் மதுவையும் சூதையும் பற்றிக் கேட்கின்றனர். அவற்றில் பெரிய தீங்கும் மக்களுக்குப் பயன்களும் இருக்கின்றன. அவற்றில் நலனை விடவும் தீங்கு மிகப் பெரியது என்று சொல்லுங்கள் (பகரா – 219) என்று அல்குர்ஆன் கூறியது. இங்கு தீங்கில் நலனும் கலந்திருப்பது அடையாளப்படுத்தப்படுவது போல் ஷரீஅத் தீர்ப்பு வழங்கப்படுவது அவற்றில் மிகையான பண்பு எது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இமாம் ஷாதிபி அவர்கள் உலக நலன்களும் தீங்குகளும் கலப்பு நிலையில் அமைக்கப்பட்டுள்ளமையின் நோக்கம் மனித வாழ்வின் சோதனைக்காக என்கிறார். இந்நிலையில்தான் உலகில் மனித வாழ்வு ஒரு சோதனை,  ஒரு பரீட்சை என்பதன் பொருளை மிகச் சரியாக நிறைவேற்ற முடியும். நபியவர்கள் சுவர்க்கம் வெறுப்புக்குரிய விடயங்களாலும் நரகம் விருப்புக்குரிய விடயங்களாலும் சூழப்பட்டிருக்கிறது (முஸ்லிம்) என்று கூறியமையும் இதனையே உணர்த்துகிறது.

மேற்சொன்ன சிந்தனைக்கு மறுதலையாக,  மறுமையைப் பொருத்தவரை நலன்களும் சரி,  தீங்குகளும் சரி கலப்பு நிலையிலன்றி தனித்து,  முழுமையான நலனாகவும் முழுமையான தீங்காகவுமே காணப்படுகின்றன. அல்குர்ஆனும் சுன்னாவும் இந்த உண்மையை மிகவும் தெளிவாக வலியுறுத்துவதாக இமாம் ஷாதிபி குறிப்பிடுகிறார். உதாரணமாக சுவர்க்கம் பற்றிக் குறிப்பிடும் பொழுது அதிலே அவர்கள் எந்தக் கலைப்பையும் உணர மாட்டார்கள். அதிலிருந்து ஒருபோதும் வெளியேறவும் மாட்டார்கள் (ஹிஜ்ர் – 45,  46). நரகம் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவர்களுக்கு அதில் எதுவும் இலேசாக்கப்படமாட்டாது. அவர்கள் அதிலிருந்து மீட்சி பெறவே மாட்டார்கள் (துக்ருப் - 75) என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இதுதான் மறுமையின் அடிப்படைப் பண்பு. ஆனாலும் விதிவிலக்காக நலனும் தீங்கும் கலந்த ஒரு நிலை காணப்பட முடியும் என்கிறார். அதுதான்,  அல்லாஹ் ஒருவன் என்று ஏற்றவர்கள் நரகம் நுழைகின்ற சந்தரப்பம். இதன்போது அவன் ஸுஜூது செய்யப் பயன்படுத்திய உறுப்புக்களை நரகம் தீண்டாது. அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகின்ற அதேவேளை அவனது நற்செயல்களுக்கான சலுகைகளும் இருக்கிறன. இந்நிலையை இமாம் ஷாதிபி நலனும் தீங்கும் கலந்த நிலை என்கிறார்.

மூன்றாவது அடிப்படை: உலக வாழ்வின் நலன்கள் ஏன் தேடப்பட வேண்டும்? மறுமை நலன்களை அடைந்து கொள்வதற்காகவே உலக வாழ்வின் நலன்கள் தேடப்படல் வேண்டும்,  என்கிறார். அதாவது ஷரீஅத் ரீதியில் ஒரு விடயம் நலன் என்று தீர்மானிக்கப்படுவதும்; சரி,  ஒரு விடயம் தீங்கு என்று தீர்மானிக்கப்படுவதும்; சரி,  அவை மறுமை வாழ்வை அடைந்து கொள்ளும் வகையில்,  உலக வாழ்வை நிலை நிறுத்தக் கூடியனவாகக் காணப்படல் வேண்டும். அன்றி மனித விருப்பு,  வெறுப்புகளின் அடிப்படையில் நின்று ஒரு விடயம் நலன் என்றோ அல்லது தீங்கு என்றோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஒரு விடயம் ஷரீஅத்தில் நலன் என்றோ தீங்கு என்றோ கருதப்படுவதற்கு அது மறுமை வாழ்வுக்கான உலக வாழ்வை நிலை நிறுத்தக் கூடியதாகக் காணப்படல் வேண்டும். மாற்றமாக மனித மனோ இச்சைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை.(7)

இந்த அடிப்படையை இமாம் ஷாதிபி பேசும் பின்புலம் என்னவெனின்,  மனித நலன் என்பது எவ்வாறு வரையறை செய்யப்படல் வேண்டும்? அது தனித்து மனித மனோ விருப்பங்கள்,  வெறுப்புகள் மீது நின்று மாத்திரம் வரையறுக்கப்படுவதில்லை. மாற்றமாக மனித நலன் என்பது உலக வாழ்வை நிலைநிறுத்துவதற்கான ஒன்றுதான். ஆனால் உலக வாழ்வை நிலைநிறுத்தக் கூடிய நலன் என்பது எது? அது எவ்வாறு வரையறை செய்யப்படும் எனின்,  உலகில் எந்த செயல் மூலம் மறுமை வாழ்வு நிலை பெறுகிறதோ அதுதான் உண்மையில் நலன். மறுமை நலனைப் பெற்றுத் தராத ஒன்று உலகில் நலனாகக் கருதப்பட முடியாது. இதுதான் இமாம் ஷாதிபி முன்வைத்த நலன் பற்றிய ஷரீஅத் பார்வை.

இந்தக் கருத்தைத் தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. மறுமையில் நரகிற்கு எடுத்துச் செல்லப்படும் ஒருவனின் கைசேதத்தைப் பற்றிப் பேசும் பொழுது,  அவன் சொல்கிறான் எனது இந்த வாழ்வுக்காக நான் முன்னரே வழங்கியிருக்கக் கூடாதா?” (பஜ்ர் 24). இந்த வசனத்திற்கு இமாம் தபரி அவர்கள் விளக்கமளிக்கும்போது(8) மறுமையில் ஒரு அடியான் தனது நிலையை நினைத்து கைசேதப்படும் ஒரு சந்தர்ப்பம் இது. உலக வாழ்வில் நல்லமல்கள் செய்திருக்கக் கூடாதா? அவ்வாறு செய்திருந்தால் மறுமையின் இந்த நிரந்தரமான வாழ்வுக்கு அது பிரயோசனமாக இருந்திருக்குமே என்று அவனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான் என்கிறார்கள்.

இங்கு மறுமையின் நலனை இழந்தமை,  உலகின் நலனை தவற விட்டமையால் விளைந்தது என்பதையே அல்குர்ஆன் கூறுகிறது.
இமாம் ஷாதிபி அவர்கள் தனது நலன் பற்றிய சிந்தனையை முன்வைக்கும் பொழுது,  நலன் என்பது உலக மறுமை வாழ்வை இணைத்தது என்ற கருத்தைத்தான் இந்த மூன்று அடிப்படைகளில் நின்றும் விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது ஷரீஆ இறக்கப்பட்டமை உலக மறுமை நலன்களை நிலை நாட்டுவதற்காக,  இரண்டாவது உலக நலன்கள் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்தவை,  மறுமை நலன்கள் தனித்து தூய்மையான நலன்கள். மூன்றாவது மறுமை நலனை அடைந்து கொள்ளக்கூடிய ஒன்றே உலகில் நலனாகக் கருதப்படும்.

இந்த மூன்று அடிப்படைகள் மூலம் நாம் விளங்கிக் கொள்ளும் முக்கிய உண்மை என்னவெனின்,  மகாஸிதுஷ் ஷரீஆவுக்கான முக்கியதொரு வரையறை இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது மகாஸிதுஷ் ஷரீஆ என்பது உலக,  மறுமை நலன்கள் சம்பந்தப்பட்ட இலக்குகளையே குறித்து நிற்கின்றது. தனித்து உலக நலன்கள் மாத்திரம் மகாஸித் என்பதன் மூலம் அடையாளப்படுத்தப்படவில்லை.
அல்லாஹ்வே போதுமானவன்.


(1)          பார்க்க : மீள்பார்வை இதழ் 381,  பக்கம் 12.

(2)          அபூ இஸ்ஹாக் அஷ்ஷாதிபி,  மகாஸிதுஷ்ஷரீஆ,  செம்மையாக்கல் : கலாநிதி அஸ்அத் அஸ்ஸஹ்மரானி (கிதாபுல் மகாஸித் மாத்திரம் தனித்துத் தொகுக்கப்பட்டது) பதிப்பகம் : தாருன் நபாஇஸ்,  பெய்ரூத்,  முதலாம் பதிப்பு 2015,  பக்கம் 11.

(3)          மேலது,  பக்கம் 15.

(4)          கலாநிதி ஜாஸிர் அவ்தா,  தஹ்கீக் மகாஸிதித் தஃவா பில் கர்ப் ஆயிகுல் இஸ்திப்தாத்,  இஃமாலுல் மகாஸித் பில் மஜாலித் தஅவி,  ஆய்வுகளின் தொகுப்பு, வெளியீடு: முஅஸ்ஸதுல் புர்கான் லித்துராஸ் அல்இஸ்லாமி,  மர்கஸுல் மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் 304,  305.

(5)          கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி,  அல்முவாபகாத் லிஷ்ஷாதிபி,  விரிவுரைத் தொடர்,  யூடியூப்,  உரை இல. 05.

(6)          பார்க்க : அல்முவாபகாத்,  இரண்டாம் பாகம்,  ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான மகாஸிதுகள்,  5ம் 6ம் மஸ்அலாக்கள்.

(7)          பார்க்க : அல்முவாபகாத்,  இரண்டாம் பாகம்,  ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான மகாஸிதுகள்,  8ம் மஸ்அலா.

(8)          இப்னு ஜரீர் அத்தபரி,  தப்ஸீர் தபரி,  பக்கம் 594.