Friday, March 2, 2018

மகாஸித் தேடல்கள் (7)


மகாஸித் என்பது உலக நலன்களுடன் மாத்திரம் சுருங்கியதா?
- முவாபகாத் சிந்தனைகளிலிருந்து ஒரு துளி -



மகாஸித் என்பது உலக நலன்களுடன் மாத்திரம் சுருங்கியதா? என்ற கேள்விக்கான பதிலை ஒற்றை வார்த்தையில் அளித்தால்,  இல்லை,  அது மறுமை நலன்களையும் உள்ளடக்கியது,  என்று அழுத்தமாக சொல்ல முடியும். பதில் என்னவோ தெரிந்ததுதான். ஆனால் இந்தக் கேள்விதான் இங்கு முக்கியமானது. இந்தக் கேள்விக்கான நேரடியான பதிலை விடவும் இவ்வாறு ஒரு கேள்வி ஏன் தோன்றுகிறது என்ற பின்புலத்திற்கான பதிலை வழங்குவதுதான் முக்கியமான நோக்கம்.

மகாஸித் தேடல்கள் ஐந்தாம் பத்தியில்(1) மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் தேடும் பொழுது,  மகாஸித் என்பது அல்லாஹ்தஆலா ஷரீஆவை இறக்கியமைக்கான மனித நலன் சார்ந்த நோக்கங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இது கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனியின் வரைவிலக்கணத்தை மையப்படுத்திச் சொல்லப்பட்டது. மகாஸிதை மனித நலன் சார்ந்த நோக்கங்கள் என்று சொல்லும் போது,  மகாஸித் என்பது உலக வாழ்வுடன் மாத்திரம் மட்டுப்பட்ட நலன்கள்,  மறுமை வாழ்வுடன் அது சம்பந்தப்படவில்லை என்று புரிந்து கொள்ளும் இடம்பாடு இருக்கிறது. ஏனெனில் நலன் என்றவுடன் அது உலகம் சம்பந்தப்பட்டது என்ற புரிதல் இருக்கிறது. இது மகாஸித் கலை குறித்த எதிர்மறை நிலைப்பாடுகளுக்கு அல்லது அச்சங்களுக்கு ஒரு வகையில் காரணமாகியுள்ளது. அந்தவகையில் மகாஷிதுஷ் ஷரீஆ என்று பேசுவோர் இஸ்லாத்தின் இலக்குகளை உலகத்துடன் சுருக்கி விடுகின்றனர். மறுமை சிந்தனையை அந்நியமாக்கி விடுகின்றனர் என்ற அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த அச்சமும் கூட ஒரு வகையில் நியாயமானதுதான். ஏனெனில் இன்று சமூக வலைத்தளங்களில் கருத்தாடுவோர் பல சமயங்களில் மகாஸித் என்பது உலகத்துடன் சம்பந்தப்பட்டது மறுமை சம்பந்தப்பட்டது அல்ல என்ற ஒரு விம்பம் ஏற்படும் வகையில் கருத்துப் பரிமாறும் நிலை இருக்கிறது. குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களுடனான உறவுகள் குறித்த கருத்தாடல்களின் போது இதனை நன்கு அவதானிக்கலாம். இந்த இடத்தில் அவை குறித்து விளக்கமளிப்பது எனது நோக்கமல்ல. மாற்றமாக,  மகாஸித் என்ற சிந்தனையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? அதன் பிரயோகம் எந்தத் தளத்தில் அமைந்தாலும் அங்கு கடைபிடிக்கப்பட வேண்டிய வரையறை என்ன? என்பதை அடையாளப்படுத்துவதே எனது நோக்கம்.

அந்தவகையில்,  மகாஸித் என்பது உலக,  மறுமை நலன்களை உள்ளடக்கியது என்பதை இமாம் ஷாதிபியின் சிந்தனைகளிலிருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். இமாம் ஷாதிபியின் முவாபகாத் மீது,  அதிலும் குறிப்பாக கிதாபுல் மகாஸித் மீது ஒரு வாசிப்பை மேற்கொள்கின்ற போது,  அங்கு மூன்று அடிப்படைகள் மீது நின்று அவர் இக்கருத்தை விளக்குவதை அவதானிக்கலாம்.

முதலாவது அடிப்படை: ஷரீஆ இறக்கப்பட்டமையின் பிரதான மக்ஸத் என்ன என்று பேசுகின்ற பொழுது,  உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஒரு சேர மனித நலனை நிலை நாட்டுதல் என்கிறார்.(2) இந்த உண்மையை இமாம் ஷாதிபி இஸ்திக்ராஃ எனும் ஷரீஆவின் பெரும்பாலான கிளை அம்சங்களை ஆராய்வதன் மூலம்,  அவை ஒவ்வொன்றும் உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் மனித நலனை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்ற அடிப்படை மூலமே ஆதாரப்படுத்துகிறார். இந்த உண்மை எவரும் கருத்து வேறுபாடு கொள்ளாத ஒரு விடயம் என்பதையும் அழுத்தமாக முன்வைக்கிறார்.

இந்தத் தொடரில் மனித நலனின் வகைப்பாட்டை முன்வைக்கும்போது,  அதன் முதலாவது வகையாக அத்தியவசிய நலன்களைக் குறிப்பிடுகின்றார். அத்தியவசிய நலன்களை வரைவிலக்கணப்படுத்துகின்ற பொழுது உலக மறுமை வாழ்வானது,  எவற்றின் மீது எழுந்து நிற்கின்றனவோ அவைதான் அத்தியவசிய நலனாகும். அவை இழக்கப்படுகின்ற பொழுது,  உலகில் நலன்கள் நிலை நாட்டப்படாது வாழ்வே இழக்கப்படும் நிலை ஏற்படும். மறுமையில் விமோசனமும் சுவர்க்கமும் இழக்கப்படும். தெளிவான நஷ்டமே அங்கு மீதமிருக்கும் என்கிறார்.(3) அந்தவகையில் அத்தியவசிய நலன்களாக ஐந்து அம்சங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவை, மார்க்கத்தைப் பாதுகாத்தல்,  உயிரைப் பாதுகாத்தல்,  அறிவைப் பாதுகாத்தல்,  மனிதப் பரம்பரையைப் பாதுகாத்தல்,  செல்வத்தைப் பாதுகாத்தல் என்பனவாகும். இந்த இடத்திலும் மனித நலன் என்பதை தனித்து உலக வாழ்வுடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. மறுமை நலன்களும் இணைக்கப்பட்டே,  நலன் பற்றிய சிந்தனை முன்வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இதனடிப்படையில்,  மனித நலன் என்று சிந்திக்கின்ற பொழுது,  உலக மறுமை நலன்கள் இணைந்ததாகவே அந்த சிந்திப்பு காணப்படல் வேண்டும். அந்த வகையில் ஒரு விடயத்தின் மகாஸிதுகள் அடையாளம் காணப்படும் பொழுது,  உலக நலன்களை நிலைநாட்டக் கூடியன மாத்திரமன்றி மறுமை நலன்களை நிலைநாட்டக் கூடியனவும் மகாஸிதுகளாக அடையாளம் காணப்படல் வேண்டும். உதாரணமாக தஃவாவின் மகாஸிதுகள் எனும் கருத்தைப் பேசும் பொழுது,  கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள்(4) ‘மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால்  எல்லா மக்களுக்கும் இஸ்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது என்பதற்கு சாட்சியாக இருத்தல்,  அழைக்கப்படுபவனை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாத்தல்,  ஒரு தாஈ அல்லாஹ்வின் முன்னால் தனது கடமையை நிறைவேற்றியமைக்கான நியாயத்தைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். இவை ஒவ்வொன்றும் நேரடியாக மறுமையுடன் சம்பந்தப்பட்ட மகாஸிதுகள் மாத்திரமன்றி மனித நலன் சம்பந்தப்பட்டவையும் கூட.

இக்கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே அஹ்மத் ரைஸுனி அவர்கள் மறுமை நோக்கம் இல்லாத போது,  மனிதன் வெறுமனே அழிந்து செல்வதற்காகப் படைக்கப்பட்ட ஒருவனாக மாறிவிடுவான். உண்மையில் அடிப்படையான மகாஸிதுகள் மறுமை சம்பந்தப்பட்டனவேயாகும். இதனையே அல்குர்ஆன் மறுமைதான் நிரந்தரமான வாழ்வு…’ (அன்கபூத் - 64) என்று விளங்கப்படுத்துகிறது. சோதனை எனும் சிந்தனைதான் உலக வாழ்வையும் மறுமை வாழ்வையும் இணைக்கும் பாலமாக அமைகிறது என்கிறார்.(5)

இமாம் ஷாதிபி முன்வைக்கும் இரண்டாவது அடிப்படை : உலக நலன்கள் கலப்புத் தன்மையுள்ள நலன்கள் ஆனால் மறுமை நலன்கள் கலப்புத்தன்மையற்ற சுத்தமான நலன்கள்,  என்கிறார். அதாவது,  உலக நலன்களைப் பொறுத்தவரையில்,  தனித்து நலன்களை மாத்திரம் காண முடிவதில்லை. ஒவ்வொரு நலனுடனும் தீங்கும் கலந்துதான் காணப்படுகிறது. அதுபோல் தனித்துத் தீங்கையும் காண முடிவதில்லை. அதனுடன் சில நலன்களும் கலந்துதான் காணப்படுகிறது. இதுதான் படைப்பின் இறைநாட்டம் என்கிறார். அதேவேளை ஷரீஆவின் ஒரு விடயம் அனுமதிக்கப்படுவதும்,  தடுக்கப்படுவதும் அந்த விடயத்தில் உள்ள நலன் தீங்கைப் பொறுத்தே அமையும். அந்த வகையில் ஒரு விடயத்தின் நலன் மிகையாகக் காணப்படுகின்ற பொழுது அது அனுமதிக்கப்படுகிறது. தீங்கு மிகையாகக் காணப்படுகின்ற பொழுது அது தடுக்கப்படுகிறது.(6) 

அல்குர்ஆன் மதுவையும் சூதையும் தடை செய்தமையில் இந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். உங்களிடம் மதுவையும் சூதையும் பற்றிக் கேட்கின்றனர். அவற்றில் பெரிய தீங்கும் மக்களுக்குப் பயன்களும் இருக்கின்றன. அவற்றில் நலனை விடவும் தீங்கு மிகப் பெரியது என்று சொல்லுங்கள் (பகரா – 219) என்று அல்குர்ஆன் கூறியது. இங்கு தீங்கில் நலனும் கலந்திருப்பது அடையாளப்படுத்தப்படுவது போல் ஷரீஅத் தீர்ப்பு வழங்கப்படுவது அவற்றில் மிகையான பண்பு எது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இமாம் ஷாதிபி அவர்கள் உலக நலன்களும் தீங்குகளும் கலப்பு நிலையில் அமைக்கப்பட்டுள்ளமையின் நோக்கம் மனித வாழ்வின் சோதனைக்காக என்கிறார். இந்நிலையில்தான் உலகில் மனித வாழ்வு ஒரு சோதனை,  ஒரு பரீட்சை என்பதன் பொருளை மிகச் சரியாக நிறைவேற்ற முடியும். நபியவர்கள் சுவர்க்கம் வெறுப்புக்குரிய விடயங்களாலும் நரகம் விருப்புக்குரிய விடயங்களாலும் சூழப்பட்டிருக்கிறது (முஸ்லிம்) என்று கூறியமையும் இதனையே உணர்த்துகிறது.

மேற்சொன்ன சிந்தனைக்கு மறுதலையாக,  மறுமையைப் பொருத்தவரை நலன்களும் சரி,  தீங்குகளும் சரி கலப்பு நிலையிலன்றி தனித்து,  முழுமையான நலனாகவும் முழுமையான தீங்காகவுமே காணப்படுகின்றன. அல்குர்ஆனும் சுன்னாவும் இந்த உண்மையை மிகவும் தெளிவாக வலியுறுத்துவதாக இமாம் ஷாதிபி குறிப்பிடுகிறார். உதாரணமாக சுவர்க்கம் பற்றிக் குறிப்பிடும் பொழுது அதிலே அவர்கள் எந்தக் கலைப்பையும் உணர மாட்டார்கள். அதிலிருந்து ஒருபோதும் வெளியேறவும் மாட்டார்கள் (ஹிஜ்ர் – 45,  46). நரகம் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவர்களுக்கு அதில் எதுவும் இலேசாக்கப்படமாட்டாது. அவர்கள் அதிலிருந்து மீட்சி பெறவே மாட்டார்கள் (துக்ருப் - 75) என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இதுதான் மறுமையின் அடிப்படைப் பண்பு. ஆனாலும் விதிவிலக்காக நலனும் தீங்கும் கலந்த ஒரு நிலை காணப்பட முடியும் என்கிறார். அதுதான்,  அல்லாஹ் ஒருவன் என்று ஏற்றவர்கள் நரகம் நுழைகின்ற சந்தரப்பம். இதன்போது அவன் ஸுஜூது செய்யப் பயன்படுத்திய உறுப்புக்களை நரகம் தீண்டாது. அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகின்ற அதேவேளை அவனது நற்செயல்களுக்கான சலுகைகளும் இருக்கிறன. இந்நிலையை இமாம் ஷாதிபி நலனும் தீங்கும் கலந்த நிலை என்கிறார்.

மூன்றாவது அடிப்படை: உலக வாழ்வின் நலன்கள் ஏன் தேடப்பட வேண்டும்? மறுமை நலன்களை அடைந்து கொள்வதற்காகவே உலக வாழ்வின் நலன்கள் தேடப்படல் வேண்டும்,  என்கிறார். அதாவது ஷரீஅத் ரீதியில் ஒரு விடயம் நலன் என்று தீர்மானிக்கப்படுவதும்; சரி,  ஒரு விடயம் தீங்கு என்று தீர்மானிக்கப்படுவதும்; சரி,  அவை மறுமை வாழ்வை அடைந்து கொள்ளும் வகையில்,  உலக வாழ்வை நிலை நிறுத்தக் கூடியனவாகக் காணப்படல் வேண்டும். அன்றி மனித விருப்பு,  வெறுப்புகளின் அடிப்படையில் நின்று ஒரு விடயம் நலன் என்றோ அல்லது தீங்கு என்றோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஒரு விடயம் ஷரீஅத்தில் நலன் என்றோ தீங்கு என்றோ கருதப்படுவதற்கு அது மறுமை வாழ்வுக்கான உலக வாழ்வை நிலை நிறுத்தக் கூடியதாகக் காணப்படல் வேண்டும். மாற்றமாக மனித மனோ இச்சைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை.(7)

இந்த அடிப்படையை இமாம் ஷாதிபி பேசும் பின்புலம் என்னவெனின்,  மனித நலன் என்பது எவ்வாறு வரையறை செய்யப்படல் வேண்டும்? அது தனித்து மனித மனோ விருப்பங்கள்,  வெறுப்புகள் மீது நின்று மாத்திரம் வரையறுக்கப்படுவதில்லை. மாற்றமாக மனித நலன் என்பது உலக வாழ்வை நிலைநிறுத்துவதற்கான ஒன்றுதான். ஆனால் உலக வாழ்வை நிலைநிறுத்தக் கூடிய நலன் என்பது எது? அது எவ்வாறு வரையறை செய்யப்படும் எனின்,  உலகில் எந்த செயல் மூலம் மறுமை வாழ்வு நிலை பெறுகிறதோ அதுதான் உண்மையில் நலன். மறுமை நலனைப் பெற்றுத் தராத ஒன்று உலகில் நலனாகக் கருதப்பட முடியாது. இதுதான் இமாம் ஷாதிபி முன்வைத்த நலன் பற்றிய ஷரீஅத் பார்வை.

இந்தக் கருத்தைத் தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. மறுமையில் நரகிற்கு எடுத்துச் செல்லப்படும் ஒருவனின் கைசேதத்தைப் பற்றிப் பேசும் பொழுது,  அவன் சொல்கிறான் எனது இந்த வாழ்வுக்காக நான் முன்னரே வழங்கியிருக்கக் கூடாதா?” (பஜ்ர் 24). இந்த வசனத்திற்கு இமாம் தபரி அவர்கள் விளக்கமளிக்கும்போது(8) மறுமையில் ஒரு அடியான் தனது நிலையை நினைத்து கைசேதப்படும் ஒரு சந்தர்ப்பம் இது. உலக வாழ்வில் நல்லமல்கள் செய்திருக்கக் கூடாதா? அவ்வாறு செய்திருந்தால் மறுமையின் இந்த நிரந்தரமான வாழ்வுக்கு அது பிரயோசனமாக இருந்திருக்குமே என்று அவனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான் என்கிறார்கள்.

இங்கு மறுமையின் நலனை இழந்தமை,  உலகின் நலனை தவற விட்டமையால் விளைந்தது என்பதையே அல்குர்ஆன் கூறுகிறது.
இமாம் ஷாதிபி அவர்கள் தனது நலன் பற்றிய சிந்தனையை முன்வைக்கும் பொழுது,  நலன் என்பது உலக மறுமை வாழ்வை இணைத்தது என்ற கருத்தைத்தான் இந்த மூன்று அடிப்படைகளில் நின்றும் விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது ஷரீஆ இறக்கப்பட்டமை உலக மறுமை நலன்களை நிலை நாட்டுவதற்காக,  இரண்டாவது உலக நலன்கள் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்தவை,  மறுமை நலன்கள் தனித்து தூய்மையான நலன்கள். மூன்றாவது மறுமை நலனை அடைந்து கொள்ளக்கூடிய ஒன்றே உலகில் நலனாகக் கருதப்படும்.

இந்த மூன்று அடிப்படைகள் மூலம் நாம் விளங்கிக் கொள்ளும் முக்கிய உண்மை என்னவெனின்,  மகாஸிதுஷ் ஷரீஆவுக்கான முக்கியதொரு வரையறை இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது மகாஸிதுஷ் ஷரீஆ என்பது உலக,  மறுமை நலன்கள் சம்பந்தப்பட்ட இலக்குகளையே குறித்து நிற்கின்றது. தனித்து உலக நலன்கள் மாத்திரம் மகாஸித் என்பதன் மூலம் அடையாளப்படுத்தப்படவில்லை.
அல்லாஹ்வே போதுமானவன்.


(1)          பார்க்க : மீள்பார்வை இதழ் 381,  பக்கம் 12.

(2)          அபூ இஸ்ஹாக் அஷ்ஷாதிபி,  மகாஸிதுஷ்ஷரீஆ,  செம்மையாக்கல் : கலாநிதி அஸ்அத் அஸ்ஸஹ்மரானி (கிதாபுல் மகாஸித் மாத்திரம் தனித்துத் தொகுக்கப்பட்டது) பதிப்பகம் : தாருன் நபாஇஸ்,  பெய்ரூத்,  முதலாம் பதிப்பு 2015,  பக்கம் 11.

(3)          மேலது,  பக்கம் 15.

(4)          கலாநிதி ஜாஸிர் அவ்தா,  தஹ்கீக் மகாஸிதித் தஃவா பில் கர்ப் ஆயிகுல் இஸ்திப்தாத்,  இஃமாலுல் மகாஸித் பில் மஜாலித் தஅவி,  ஆய்வுகளின் தொகுப்பு, வெளியீடு: முஅஸ்ஸதுல் புர்கான் லித்துராஸ் அல்இஸ்லாமி,  மர்கஸுல் மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் 304,  305.

(5)          கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி,  அல்முவாபகாத் லிஷ்ஷாதிபி,  விரிவுரைத் தொடர்,  யூடியூப்,  உரை இல. 05.

(6)          பார்க்க : அல்முவாபகாத்,  இரண்டாம் பாகம்,  ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான மகாஸிதுகள்,  5ம் 6ம் மஸ்அலாக்கள்.

(7)          பார்க்க : அல்முவாபகாத்,  இரண்டாம் பாகம்,  ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான மகாஸிதுகள்,  8ம் மஸ்அலா.

(8)          இப்னு ஜரீர் அத்தபரி,  தப்ஸீர் தபரி,  பக்கம் 594.


No comments:

Post a Comment