Friday, September 20, 2013

ஹுதைபியா உடன்படிக்கையும் கொள்கை வெற்றியும்


நாம் துல்கஃதா மாதத்தை அடைந்திருக்கிறோம், நபியவர்கள் நான்கு தடவைகள் உம்ரா செய்திருக்கிறார்கள், அவற்றில் மூன்று துல்கஃதா மாதத்திலேயே நடைபெற்றுள்ளன. இந்தப் பின்புலத்தில் சில இமாம்கள் துல்கஃதா மாதத்தில் உம்ரா செய்வது சிறப்புக்குரியது என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ஹுதைபியா உடன்படிக்கை. இது நபியவர்கள் உம்ரா செய்யும் நோக்கத்தில் சென்ற போது இடையில் நடைபெற்ற ஒரு நிகழ்வாகும். ஹிஜ்ரி 06 ல் இது நடைபெற்றது, நபியவர்கள் உம்ரா செய்யச்செல்வது போல் கனவு கண்டதையடுத்து, சுமார் ஆயிரத்து நானூறு ஸஹாபாக்களுடன் இந்தப் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள், அப்போது ஹுதைபியா என்ற இடத்தில் அவரது ஒட்டகை களைப்படைந்து அமர்ந்து விடவே, நபியவர்கள் புரிந்து கொள்கிறார்கள், அல்லாஹ்தஆலா ஏதோ ஒரு திட்டத்தை வைத்திருக்கிறான், எனவே குறைஷியர் இன்றைய நாளில் என்ன வகையான உடன்பாட்டுக்கு வருவதாக இருப்பினும் அதற்கு, தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.

பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன, இறுதியில் குறைஷிகள் தரப்பில் ஸுஹைல் இப்னு அமர் என்பவரது வருகையுடன் பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வந்தன. இருதரப்பினரும் சில நிபந்தனைகளில் உடன்பட்டனர்.

1.   இவ்வருடம் உம்ரா செய்ய முடியாது, அடுத்த வருடம் செய்யலாம், மூன்று நாட்கள் மாத்திரமே தங்கியிருக்க முடியும் உடைவாளைத் தவிர வேறு ஆயுதங்கள் எடுத்துவர முடியாது, குறைஷிகள் உம்ரா செய்வோருக்கு தடையாக இருக்க மாட்டார்கள்.

2.   இரண்டு தரப்பினரிடையே பத்து வருடங்களுக்கு யுத்தங்கள் நிகழமாட்டாது.

3.   ஒவ்வொரு தரப்பினரும் தாம் விரும்பியவர்களுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடலாம், அப்போது அவர்கள் குறித்த தரப்பினரைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர்.

4.   மக்காவில் குறைஷிகளது கட்டுப்பாட்டிலிருந்து ஒருவர் நபியவர்களிடம் வந்தால் அவர் திருப்பியனுப்பப் படவேண்டும், அதேவேளை மதீனாவில் நபியவர்களது கட்டுப்பாட்டிலிருந்து ஒருவர் குறைஷிகளிடம் வந்தால் அவர் திருப்பியனுப்பப் படமாட்டார்.

பொதுவான பார்வையில் இந்த நிபந்தனைகள் முஸ்லிம்களுக்குப் பாதகமானவையாகவே இருந்தன, அன்று ஸஹாபாக்களும் உடனே இவற்றை அங்கீகரிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. உமர் (ரழி) அவர்கள் நேரடியாகவே தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தினார்கள். ஆனாலும் நபியவர்கள் இந்த உடன்படிக்கையை எழுதிமுடிப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

உடன்படிக்கை எழுதிமுடிக்கப்பட்டது, இவ்வருடம் உம்ரா செய்யும் கனவு நிறைவேறவில்லை, ஸஹாபாக்கள் கனமான இதயத்துடன் திரும்பிச் செல்கிறார்கள், நாம் சத்தியத்தில் இருந்த போதும் தோல்வி கண்டு விட்டோமே என்ற வருத்தம் அவர்களுக்கிருந்தது. பயணத்தின் நடுவில் அல்லாஹ்தஆலா வஹி மூலம் ஒரு சுபசெய்தியைச் சொல்கிறான். ” நாம் உங்களுக்கு மிகத் தெளிவான வெற்றியைத் தந்தோம் ” (பத்ஹ் – 01). முஸ்லிம்கள் தாம் தோல்வி கண்டு விட்டோம் என்ற மனநிலையில் இருக்கின்ற பொழுது, அதற்கு மாற்றமாக அல்லாஹ்தஆலா ஹுதைபியா நிகழ்வை வெற்றி என்கிறான்.

இங்கு அல்லாஹ்தஆலா ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தருகிறான், வெற்றி தோல்வி என்பன தீர்மானிக்கப்படுவது  குறித்த ஒரு சந்தர்ப்பத்தின் அல்லது நிகழ்வின் சாதனையைக் கொண்டோ அல்லது இழப்பைக் கொண்டோ அல்ல, மாற்றமாக ஒரு கொள்கையின் வெற்றியே உண்மையான வெற்றியாகும், அதுபோல் தோல்வி என்பதும் ஒரு கொள்கையின் தோல்வியே உண்மையான தோல்வி.

 ஒரு நிகழ்வின் தோல்வியால் முஸ்லிம்கள் துவண்டு போய்விடக் கூடாது, ஏனெனில் அது கொள்கையின் தோல்வி அல்ல, உண்மையில் அந்த நிகழ்வு கொள்கைக்கு ஒரு பெரிய வெற்றியையே கொண்டுவந்து சேர்த்தது. அதற்கான பொது அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது, பெரும்தொகையான மக்கள் அதற்கு ஆதரவளிக்கத் தொடங்கினார்கள், அதனது அங்கத்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது, நடுநிலையாக சிந்திப்பவர்கள் அதனை நியாயம் காணத்தலைப் பட்டார்கள். இந்த அனைத்து உண்மைகளையும் ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னரான நிகழ்வுகளில் தெளிவாகக் காணலாம். அதன் நிதர்சன வடிவத்தை அடுத்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற மக்கா வெற்றியின் போது சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டமையில் காணக் கிடைத்தது.

இன்று எகிப்திய நிகழ்வுகளைப் பார்க்கின்ற பொழுதும் ஹுதைபியா கற்றுத் தந்த பாடங்கள்தான் நினைவில் வருகின்றன. ஆயிரக் கணக்கான உயிர்ச் சேதங்களும் பொருள் சேதங்களும், பெரும் தொகையானவர்கள் காயப்பட்டு எதுவும் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையும், முக்கிய தலைவர்கள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் நிலையும், இந்த எல்லா இழப்புக்களும் ஒரு தோல்வியாக ஒரு பின்னடைவாக சில சமயங்களில் பார்க்கப்பட முடியும், ஆம் இவை சில நிகழ்வுகளின் தோல்விகள் மாத்திரமே, இழப்புக்களையும் சேதங்களையும் மாத்திரம் வைத்து ஒரு கொள்கையின் தோல்வி அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாற்றமாக இங்கும் ஹுதைபியாவைப் போன்றே கொள்கை வீறுகொண்டெழுந்திருப்பதையே காணமுடிகிறது.
உலகளவில் அந்தக் கொள்கைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது, உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் மக்கள் அந்தக் கொள்கையின் பெயரை உச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள், எதிர் தரப்பில் இருந்தவர்கள் பலர் தாம் தவறான வழியில் இருந்து விட்டோம் என்று பகிரங்கமாய்ச் சொல்லி விட்டு அந்தக் கொள்கையுடன் தம்மை இணைத்துக் கொள்கிறார்கள், நடுநிலை பேசிய பலர் கொள்கைக்குச் சார்பானவர்களாக மாறிவிட்டார்கள். அல்லாஹ்வே போதுமானவன், இதுதான் கொள்கைக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. இனி அதனை எந்த சக்தியாலும் அழித்து விட முடியாது, அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி அல்லாஹ்தஆலா அதனை அழைத்துச் செல்லத்தான் போகிறான். இன்ஷா அல்லாஹ், ஹுதைபியா சொல்லும் பேருண்மை இதுதான். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

.